எங்கேயும் கேட்காத குரல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: அமானுஷம் குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 76,161 
 

அவர்களுக்கு அது ஐந்தாவது விசிட்.. ஐந்து திக் ப்ரண்ட்ஸ்.. ஐடில ரொம்ப பிஸி லைப் வாழ்றவங்க… அப்பப்ப இந்த மர்ம மலைக்காட்டுக்கு ட்ரக்கிங் வருவாங்க.. விஜி, மிதுன், சோபன், ரித்தி அப்பறம் ரமேஷ்.. வேறு வேறு மாநில ஆளுங்கலா இருந்தாலும் எல்லோருடைய தாட்ஸ்ஸும் ஒரே நேர்க்கோட்டுல இருக்கறதால எப்பவுமே ஒரே ஜாலி, கும்மாளமாவே இருக்கும் இவங்க மீட்டீங்ஸ்..ட்ரக்கிங்ஸ்… இவங்க எல்லாத்துக்கும் ஒரே ஒரு விஷயம் ரொம்ப பிடிக்கும்.. அது மர்மம்.. எங்கேயாவது ஏதாவது பேய்வீடு இருக்கு.. ஆளுங்க போக பயப்படற‌ பேய் பங்களா இருக்கு.. ஒரு குறி சொல்ற கொடூரமான‌ மந்தரவாதி இருக்கான்… அந்த குடுகுடுப்பைக்காரன் ராத்திரி பூரா சுடுகாட்டுல உட்காந்து ஏதேதோ பூஜையெல்லாம் பண்றான்.. இப்படி ஏதாவது கேள்விப்பட்டாங்கன்னா.. அடுத்த வீக் என்ட் அங்கத்தான் போய் நிப்பாங்க..ஒரு த்ரிலிங்கோட அந்த ஹாலிடேஸ என்ஜாய் பண்ணிட்டு, ஒரு திருப்திகரமான பீலீங்கோட அடுத்த டார்கெட்ட அச்சீவ் பண்ணப் போயிடுவாங்க..

இப்படித்தான் ரெண்டு மாசத்துக்கு முந்தி, இந்த மர்மக்காட்டுக்கு ஒரு விஷயம் கேள்விப்பட்டு டிரெக்கிங் வந்தாங்க… அதாவது காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கும் போது, எப்பவாவது சில நேரம் ஒரு வித்தியாசமான குரல் கேட்குதாம்.. அது இதுவரைக்கு உலகத்துல யாருமே கேட்காத குரலாம்…அது எப்படி இருக்குனு யாருக்குமே விளக்கம் சொல்ல முடியலனு.. ஒரு பத்திரிக்கைல வந்த கட்டச்செய்திய பாத்திட்டு, உடனே ப்ளான் பண்ணி அந்த மலைகாட்டுக்கு டிரக்கிங் வந்தாங்க.. ஆனா கடந்த நாலு டிரிப்பா.. அப்படி எந்த ஒரு சத்தமும் அவங்க காத அடையல.. எப்படியாவது இன்னும் ஒரு டிரிப் வருவோம்.. டிரை பண்ணுவோம்.. இப்ப முடியலேனா.. இனி இந்த டிரிப் வேண்டாம்.. வேற எங்கேயாவது போவோம்.. ஒகே.. என்று கூடிப்பேசி முடிவெடுத்திருந்தனர்…

அவங்க படித்திருந்த பேப்பர் கட்டிங்கில் மேலே எழுதப்பட்டிருந்த “ஒவ்வொரு அமாவாசையிலும்” என்ற செய்தி மட்டும், அவர்கள் கண்ணில் படாமல் எப்போதோ கிழிந்து போயிருந்தது…

அன்று காலை ஆரம்பித்து, அடுத்த நாள் காலை வரை டிரக்கிங்.. நடுநடுவே உணவு இடைவேளை… அப்பறம் இரவில் தூங்க டென்ட் என்று எல்லாம் எடுத்துக்கொண்டு அவர்களது டிரெக்கிங்.. மலைக்காட்டின் ஒரு பகுதியில் தொடங்கியது…

மிகுந்த அடர்ந்த மரங்கள் நிரம்பிய காடு.. என்பதால் டிரக்கிங்குற்கு எந்த பர்மிஷனும் இல்லை தான்.. இவர்களை யார் யாரையோ பார்த்து, ஏதோதோ கொடுத்து.. டிரக்கிங்கிற்கு வந்திருந்தனர்…

இதில் முன்னே மிதுன், சோபன் நடக்க நடுவில் விஜியும், ரித்தியும் நடக்க, பின்னே ரமேஷ் நடப்பது என ப்ளான் போட்டு அவர்களது டிரக்கிங் மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கியது..

அதனை முதன்முறையாக ஓராயிரம் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை…

ஒரு அரை மணி நேரம் ஆகியிருக்கும்.. முன்னமே காடு சூரியன் பட்டும் படாமல் அவ்வளவு இருட்டாயிருக்கும்.. அப்போது சட்டென இன்னும் இருள் சூழ்வதாய் உணரப் பட்டது.

விஜி, “என்ன.. ரித்தி.. திடீர்னு இருட்டாயிடுச்சு..”

“அதான் மிதுன்ட்ட பவர்புள் டார்ச் இருக்குள்ள… அப்பறம் என்ன?”

“அதுக்கில்ல.. எப்பவுமே பகல்ல இப்படி இருட்டாகாதே.. அதான்”

“ஏதாவது மேகம்.. .சூரியன மறைச்சிருக்கும்.. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு…. எல்லாம் சரியாயிடும் பாரு”

ஆனா.. அடுத்த அரை மணி நேரத்திற்கும் எந்த மாறுதலும் இல்லை… அதே கும்மிருட்டு….

அப்போது தான் அந்த சத்தம் கேட்டது….. பத்து கால்களும் சட்டென நின்றன.. பத்து காதுகளும் அச்சத்தம் வந்த திசையில், கூர்மை படுத்திக்கொண்டு கேட்க முயற்சித்தன…

குரல் மனிதனுடையதாகப் படவில்லை.. பறவை, விலங்கு குரல் போலில்லை… மெல்ல மெல்ல குரல் வரும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தனர்… மிதுன் முன்னெச்சரிக்கையாக டார்ச்சை அணைத்து வைத்தான்.. ஐவரும் கைகளைப் பிடித்தபடி முன்னேறிச் சென்றனர்..

மெல்லிய ஒரு வெளிச்சம் அங்கே தொலைவில் தென்பட்டது… என்னவா இருக்கும்.. செய்கைகளிலேயே பேசியபடி முன்னேறிச் சென்றனர்..

அங்கே ஆயிரம் கிளைகளுடைய பிரமாண்டமான ஆலமரம் ஒன்று கண்ணில்பட்டது.. போன நாலுமுறையும் இது எப்படி கண்னுல படாமப் போச்சு என்பதே அவர்கள் மனதில் உதித்த முதல் கேள்வி..

அங்கே ஆலமரத்து அடிவாரத்தில் இருந்த ஒரு பிரமாண்ட கல்லில் அவர்கள் கண்ட காட்சி, ஐந்து பேரையும் அப்படியே உறைய வைத்தது….

அது.. அது…

கருகிய நிலையில் ஐந்து பேரும் அங்கே உட்கார்ந்திருந்தனர்…அவர்களது வாய் எதையோ முணுமுணுத்தபடி இருந்தது…

அது காப்பாத்துங்க.. காப்பாத்துங்க… என்ற அவர்களது குரல்…

அப்ப போனவாரம் டிரக்கிங் வந்த நம்ம யாருமே இன்னும் திரும்பிப்போகலையா.. என யோசித்த வேளையில் காடு ஒரு துண்டுச்சிட்டாய் மாறி இருந்தது.. அதில் இருந்த செய்தி..

“மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற ஐடி கம்பெனியைச் சேர்ந்த ஐந்து பேரும்… திடீரென ஏற்பட்ட எதிர்பாராத காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டனர்”

– 2017 ஏப்ரல் “பாவையர் மலர்” இதழில் வெளியான கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *