கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 7,183 
 

தாரிணி வீட்டை விட்டு ஓடிப் போன செய்தி வைரலானது.

ஊர் சிரித்தது.

“அடிச்சி வளக்காத முருங்கையும், ஒடிச்சி வளக்காத மவளும் வேற எப்படி இருக்கும்ங்கறேன்.”

“கடனோ உடனோ வாங்கி காலேஜ் படிக்க வெச்சா, காதல் பாடம் படிக்குதுங்க… வௌக்குமாத்தால அடிக்கணும்கறேன்”.

“வாலன்டின் டேங்கற காதலர் தினமெல்லாம் நம்ம கல்சரே கிடையாது. அந்நிய கல்சர் ஒவ்வொண்ணா உள்ளே வந்து தொலைக்குது. அதை மொதல்ல ஸ்டாப் பண்ணணும்…”

“பிள்ளைகளை தாயார்தான் கண்காணிச்சி வளக்கணும். தாயாரே இருபத்து நாலு மணி நேரமும் செல்லும் கையுமாத் திரியுது… பொண்ணு வேற எப்படி இருக்கும்…”

இப்படி அவரவர் மறைவில் ஊர்வம்பு பேசினார்கள்.

சிலர் போய் ஏற்கனெவே வெந்துபோயிருந்த பெற்றோர்களின் புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போலப் பேசினார்கள்.

ஆறுதலாய்ப் பேசுவதைப் போல வம்பு விசாரித்தார்கள்.

‘அந்த தாரிணி சைத்தானைப் பாக்கும்போது, நம்ம வளப்புத் தேவலை’ என்று தெருவில் இருந்த பதின்மப் பெண்களின் தாய்மார்கள் ஆறுதல் அடைந்தார்கள்.

“ஏண்டீ, அந்த தாரிணி மாதிரி எவன் கூடவோ ஓடறதுன்னா ஓடிரு. ஓடறதுக்கு முன்னால எங்களுக்குக் விஷம் கொடுத்துரு…” என்று சில பெற்றோர்கள் தங்கள் வாரிசுக்கு முன்னால் புலம்பினார்கள்.

குத்தாலத்திற்கு ஒன்று புரிந்தது.

தன் மனைவி தன் ஒரே மகளை கண்டிப்பும் கறாருமாய் பேசும்போதெல்லாம் மனசு கஷ்டப்படும்

‘அவ்வளவெல்லாம் நவிஷ்னியைப் பேசறியே.. மனசு கஷ்டப்பட மாட்டாளா?”

குத்தாலம் பல முறை கேட்டிருக்கிறார் மனைவியிடம்.

கொஞ்சம் செல்லம் கொஞ்சினா, தலைல ஏறிடும். அவளை எப்படி வளக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க கண்டுக்காமப் போங்க. நான் பாத்துக்கறேன்…!”

வாயடைத்துவிடுவாள் குத்தாலத்தின் மனைவி கற்பகம்.

கே ஜி படிப்பு முதல் இப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி ஜி படிப்பது வரை அம்மாவின் மைக்ரோ மேனேஜ்மெண்ட்டில்தான் இருந்தாள் நவிஷ்ணி.

கண்டிப்பு என்றால் அப்படி ஒரு கண்டிப்பு.

ஆர்மி ரெஜிமெண்ட்டாய் இருக்கும் வீடு.

ஆரம்பத்தில் சற்றே முரண்டு பிடித்தாள் நவிஷ்ணி.

அம்மாவிடம் பாச்சா பலிக்காது என்பதை நன்கு உணர்ந்தாள். ஒடுங்கிப் போனாள்.

நட்பு வட்டம் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது நவிஷ்ணிக்கு.

நிர்மலா என்ற ஒரே ஒருத்தியை மட்டும் நவிஷ்ணியின் நட்பு வட்டத்தில் அனுமதித்திருந்தாள் கற்பகம்.

அதுவும் கல்லூரிக்கு செல்ல முடியாத நாட்களில் நடைபெற்றப் பாடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், பாடத்தில் சந்தேகம் கேட்பதற்கும்தான் அவளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுவே கண்டிஷன்.

செல் ஃபோன், லேப்டாப் இரண்டையும் ஹால் ஷோபாவில் அமர்ந்துதான் உபயோகப்படுத்த வேண்டும் என்பாள் கற்பகம்.

இரவு படுக்கப் போகும் முன் சுவிட்ச் ஆஃப் செய்து, செல்போனையும், லேப் டாப்பையும் அவள் அம்மாவிடம் கொண்டு வந்து வைத்துவிட வேண்டும்.

காலையில் எழுந்ததும் கற்பகம் அவைகளை ஆன் செய்து இரவு ஏதாவது மெசேஜ், ஈ மெயில் ஏதாவது வந்துள்ளதா என்று சோதித்துவிட்டுத்தான் தருவாள்.

அக்கம் பக்கம் எல்லாம் நவிஷ்னியை கற்பகம் கண்டிப்புடன் வளப்பதைப் பற்றிப் பேசி பேசி வியப்பார்கள்.

இன்று தாரிணி ஓடிப்போன செய்தி அறித்ததும், கற்பகம் நவிஷ்ணியை வளர்க்கும் முறை பற்றி அதிகமாகவேப் பேசினார்கள்.

“என்னங்க..” கற்பகம் மெதுவாக அழைத்தாள்

“ம்…!”

“இன்னிக்கு ‘வாலண்டைன் டே’யும் அதுவுமா, நவிஷ்னியை யுனிவர்சிடிக்கு தனியாக அனுப்ப வேண்டாம்..”

“ம்…!”

“ஆபீசுக்கு லீவு போட்டுட்டு கார்ல அழைச்சிப் போயி அழைச்சு வாங்க…”

“ம்…!”

“நவிஷ்ணி.. எனக்கு சிதம்பரம் வர்ற வேலை இருக்கு. என்கூட வந்துடறியா?” இயல்பாகக் கேட்பதைப் போலக் கேட்டார் குத்தாலம்.

“ம்…!” என்றாள் நவிஷ்ணி

“ஹாய்…”

கையாட்டும் சிம்பலுடன் நவிஷ்ணியிடமிருந்து மெசேஜ் பறந்தது.

“ஹாய்…”

“ஐ ம் அலோன்..”

படத்துடன் வந்தது பதில்.

தனக்குள் சிரித்தாள் நவிஷ்ணி.

“புத்தூர்…” -மெசேஜ்

“ஓகே”- பதில் மெசேஜ்

“கொள்ளிடம்”

“ம்ம்ம்ம்…”

“தெற்கு வீதி திரும்பியாச்…”

கொச்சையான ஒரு மெசேஜ் வந்தது பதிலுக்கு.

ஒரு மாதிரி வெட்கினாள் நவிஷ்ணி.

மேல வீதில கார் பார்க் பண்ணியாச்.

இறங்கி உள்ளே வரேன்.”

“ஓ.கே’டா. ஐ ம் வெயிட்டிங்.”

“தரிசனத்துக்கு அரை மணி நேரம் ஆகும்னு செல்லியிருக்கேன்.”

“ம்… வடக்கு வீதில இனோவாவோட நிக்கறேன். இருபத்துஞ்சு நிமிஷத்துல திரும்பி அனுப்பிடறேன் ஓகேவா..”

முகமெல்லாம் ஹாட்டின் தெளித்தாற்போல் ஸ்மைலியை பதிலுக்கு மெசேஜ் செய்தாள் அவள்.

பதிலுக்கு வந்தது தம்ஸ் அப்.

வழக்கப்படி நவிஷ்ணி செல்போன் மெசேஜ் அனைத்தையும் டெலிட் செய்தாள்.

சந்நிதி மூடி கால்மணி நேரமாச்சு. குறைஞ்சது இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் சந்நதி திறக்க.. அதுக்குள்ள கடைத்தெரு வேலைய முடிச்சிண்டு வந்துடலாம்னா…!”

நவிஷ்னி இறங்கி கோபுரவாசல் கடக்கும் நேரத்தில் இப்படிப் பேசிக் கொண்டு சென்ற தம்பதியரைக் கண்டு உள்ளூரச் சிரித்துக் கொண்டார்.

மூடநம்பிக்கயாளர்களை ஏளனத்துடன் பார்த்தார்.

சாலைகளில் ஜோடி ஜோடியாகச் செல்லும் விடலைகளைப் பார்த்தார்.

கலாச்சாரச் சீரழிவுகுறித்து வருத்தப்பட்டார்.

தன் மனைவியின் கராறும் கண்டிப்பும் நினைத்து உள்ளுக்குள் உவகை கொண்டார்.

“ஹாய் டாட்..”

“தரிசனம் ஆச்சா?”

நக்கலாகக் கேட்டார் குத்தாலம்.

“திவ்ய தரிசனம்ப்பா..”

“சரி! கார் ஏறு..”

ஏறும் போது அவள் முகத்தில் மாறுதலை கவனித்தார்.

ஆண்களுக்கான கைக்குட்டை இருந்தது அவள் கையில்.

குத்தாலத்தின் கண்களை உறுத்தின.

‘உள்ளே ஏறி உட்கார்ந்தாள். கதவைச் சார்த்தினாள்.

குபீரென்று தாக்கியது வழக்கமில்லாத சென்ட் மணம் நாசியை உறுத்தியது.

“யுனிவர்சிடிக்கு நாளைக்குப் போயிக்கலாம்ப்பா…”

நவிஷ்னியின் ஹீனக் குரல் காதுகளை உறுத்தியது .

களைப்பின் உச்சத்தில் கண்களை மூடி சற்றே அயர்ந்தாள் நவிஷ்னி.

“சந்நதி திறக்க இன்னும் ஒரு மணி நேரமாகும்…” தம்பதியர் பேசிக்கொண்டு போனது குத்தாலத்தின் நினைவிற்கு வந்து மனசையும் உறுத்தியது.

– விகடன் 14.02.23

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *