கல்லுளி மங்கி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 1,669 
 

டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலிருந்து சாமான்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த சித்ரா , ”ஆண்ட்டி எப்படி இருக்கீங்க?” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள். தன் மகள் ஸ்வாதியின் தோழி உமாதான் எதிரே நின்றிருந்தாள். தன் கையை அவளை நோக்கி அசைத்து, “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே. உன்னுடைய வேலையெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கிறது?” என்றாள் சித்ரா.

”சூப்பர். ஸ்வாதியின் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?”

அதிர்ச்சியடைந்த சித்ரா, ”என்ன சொல்றே, உமா? அவளுக்கு எப்ப கல்யாணம் நடந்தது. விளையாடறதுக்கு ஒரு எல்லையில்லையா?”

உமா நாக்கை கடித்துக் கொண்டு , ”சாரி ஆண்ட்டி, உங்களுக்கு ஸ்வாதி சொல்லி இருப்பாள். விஷயம் தெரிஞ்சுருக்கும் என நினைத்து கேட்டுட்டேன். மூணு மாசம் முன்பு அவளுக்கும் கல்லுரியில் அவளுடன் ஒண்ணா படித்த ராபர்ட்க்கும் கல்யாணம் நடந்துட்டுது. நாங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேர்த்து பதிவு திருமணம் பண்ணி வைத்தோம். ராபர்ட்டை உங்களுக்குத் தெரியுமே. ஸ்வாதி கூட கல்லூரியில் ஒன்றாக படித்தவன். நீங்க அவளைக் கேளுங்க. அவ எல்லாத்தையும் சொல்லுவாள். என்னைக்கு இருந்தாலும் ஒரு நாள் உண்மை வெளி வரணும் இல்லையா? நான் வரேன் ஆண்ட்டி” என்று தொட்டிலை ஆட்டி விட்டு அவள் கிளம்பி விட்டாள்.

சித்ராவுக்குத் பெரிய பாறாங்கல் தலையில் விழுந்தது போல் இருந்தது. ஒரே பெண் என்று செல்லம் கொடுத்து வளர்த்தது பேராபத்தில் அல்லவா முடிந்து உள்ளது. அவள் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவளுடைய அப்பா சாம்பசிவம் மருந்து கம்பெனியில் வேலை செய்து ஓய்வு பெற்றவர் பூசை, புனஸ்காரமென்று இருப்பவர். ஆசார குடும்பத்தில் பிறந்த தன் மகள் அவளுடைய நண்பனை அதுவும் கிருத்துவ மதத்தை சேர்ந்த ஒருவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு மூணு மாசம் ஆகியும் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். துர்வாச முனிவரான தன் கணவருக்குத் தெரிந்தால் அவர் அதிர்ச்சி அடைவார். என்ன செய்வார் என்று சொல்ல முடியாது. பெரிய ஓட்டலில் ஹ்வுஸ் கீப்பிங் டிபார்ட்மெண்டில் வேலை செய்யும் ஸ்வாதி அப்பாவுக்குக் கிட்னி பிராபளம் உள்ளது. வாரத்தில் இரண்டு நாள் டையாலிசஸ் செய்து கொண்டிருக்கும் அவரிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது? சித்ராவுக்குப் படபடப்பாக இருந்தது. எப்படியோ சென்னைக்கு அருகிலுள்ள மன்னிவாக்கத்தில் அவள் வசிக்கும் லஷ்மி அபார்ட்மெண்ட்ஸ் வந்து சேர்ந்தாள். ஆறு ஃபிளாட்கள் கொண்ட அந்த

அபார்ட்மெண்ட்டில் அவள் இரண்டாவது மாடியில் இருக்கிறாள். அவர்கள் ஆறு மாசத்துக்கு முன்புதான் அங்குக் குடி வந்திருக்கிறார்கள். அறுபது இலட்சம் கொடுத்து ஃபிளாட்டை தன் பெயரில் வாங்கியிருக்கிறாள் ஸ்வாதி. அவள் தான் வீட்டுக் கடனுக்கு மாசம் ரூபாய் நாற்பதாயிரம் கட்டுகிறாள். சித்ரா இல்லத்தரசி.. ஸ்வாதி அப்பாவுக்குச் சொற்ப சம்பளம். கைக்கு வருவது கொஞ்சம். எதையும் சேமிக்க முடியாது. ஸ்வாதியைக் கஷ்டப்பட்டு பொறியியல் கல்லூரியில் பி.ஈ படிக்க வைத்தார்கள். அவள் மைக்ரோ சாப்ட் கம்பெனியில் வேலைக்குப் போய் கை நிறையச் சம்பாதிக்க ஆரம்பித்து இரண்டு வருடம் ஆகிறது. ஸ்வாதி வேலைக்குப் போவதால் அவள் பெயரில் வீடு வாங்கி அவர்களால் சவுகரியமாக வாழ முடிகிறது.

தன் இரட்டை நாடி சரீரத்தை தூக்கிக் கொண்டு இரண்டாவது மாடிக்குப் போனாள். அவள் கணவர் பாபு வேலை முடிந்து . இன்னும் வீட்டுக்கு வந்து சேரவில்லை. அவளுக்கு அப்பாடா என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள். தன் தந்தையிடம் யோசனை கேட்க வேண்டுமென அவளுக்குத் தோன்றியது. உடனே அப்பா சாம்பசிவத்துக்கு போன் போட்டு உடனடியாக வீட்டுக்கு வரச் சொன்னாள். அவரும் உடனே இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வருகிறேன் என்றாள்.

சித்ராவின் மனதில் எண்ணங்கள் அலைபாய்ந்தன. கண் இருந்தும் குருடியாய் எதையும் கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று வருத்தப்பட்டாள். ஸ்வாதியைப் பற்றி எவ்வளவு மனக்கோட்டைகள் கட்டி இருந்தாள். எல்லாம் ஆகாசக் கோட்டையாய் அல்லவா போய் விட்டது.

எதுக்கு என்னை அவசரமாய் வரச் சொன்னாய்? என்று கேட்டுக்கொண்டே சித்ராவின் அப்பா வீட்டுக்குள் நுழைந்தார்,

சித்ரா அவரைப் பார்த்ததும், அப்பா, அ..ப்..பா, ஸ்வாதி அப்பா ஸ்வாதி நம்மை மோசம் பண்ணிட்டாப்பா” என்று விம்மி விம்மி அழுதாள். ”என்ன நடந்ததுன்னு அழாமே சொல்லு.” என்றார் சாம்பசிவம்.

”ஸ்வாதி நம்ம கிட்ட சொல்லாம அவ ப்ரண்ட் ராபர்டை கல்யாணம் பண்ணிண்டு இருக்கா. மூணு மாசம் ஆயிடுத்து. என் கிட்டே விஷயத்தை சொல்லாம மறைச்சிருக்கா. அவள் பிளான் என்னன்னு தெரியலை. அவ ஃப்ரண்டு உமாவை மார்கெட்டில் பார்த்தேன். அவதான் எனக்கு விஷயத்தை சொன்னாள். எனக்கு ஒரே கலவரமாகிவிட்டது. உங்க கிட்ட யோசனை கேட்கலாம்னு உங்களை வரச் சொன்னேன். பார்த்தீங்களா, ஸ்வாதி ஊமை கோட்டான் மாதிரி இருந்துண்டு கல்யாணத்தையே செஞ்சுண்டு இருக்கு, நம்மகிட்டே அழுத்தக்காரி.

போயும் போயும் இப்படி செஞ்சுட்டாளே. அப்படியே அவள் கழுத்தை நெருக்கி கொலை பண்ணிடுலாம்னு இருக்கு,”

அதைக் கேட்ட சாம்பசிவத்துக்க்குத் தூக்கி வாரிப் போட்டது. ”அவ ஏன் அப்படி செஞ்சா? நல்ல பெண்ணாச்சே. அவள் இப்படி உன் தலையிலே கல்லை துக்கிப் போட்டு விட்டாளே. அவ ஆபிஸிலிருந்து வந்துட்டாளா? அவ என்ன சொல்றான்னு அவ வாயாலே கேட்கலாம். நாமா ஏதாவது நினைக்கிறதை விட அவள் சொல்றதைக் கேட்டு முடிவு செய்யலாம்.”

”அவள் வரும் நேரம் தான். இப்போ நேரம் மாலை ஆறு மணி. இன்னும் அரை மணியில் வந்து விடுவாள்.”

”மாப்ளே எத்தனை மணிக்கு வருவார்?”

”அவர் இரவு ஏழரை மணியிலிருந்து எட்டு மணிக்குள் வருவார்.”

”நீ சொல்றதை பார்த்தா விஷயம் நம்ம கையை விட்டு போயிடுத்து போல இருக்கு. கல்யாணம் ஆயிடுத்து. இரண்டு பேரும் மேஜர். அதனாலே நாம் எதுவும் செய்ய முடியாது. அவர் ரொம்ப கோபக்காரர் ஆச்சே? இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பார்.”

”அது தான் எனக்குக் கவலையாய் இருக்கு. அவர் இந்தக் கல்யாணத்தை ஒப்புக் கொள்ள மாட்டார். நீ எனக்குப் பெண்ணே இல்லைன்னு அவள் பந்தத்தை அறுத்துக் கொண்டு விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது மத்திரமில்லை. நீ பெண்ணைச் சரியா கவனிக்கலைன்னு என்னைத் திட்டுவார்.”

”நீ டென்ஷன் ஆகாதே. இந்த விஷயத்தை பக்குவமா அவர் கிட்டே சொல்லு என்று சாம்பசிவம் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஹாய் தாத்தா எப்போ வந்தீங்க? என்று கேட்டுக் கொண்டே ஸ்வாதி உள்ளே வந்தாள்.

ஸவாதிக்கு வயசு இருபத்து ஆறு. கட்டழகி. வனப்புடன் கவர்ச்சியாகத் தங்கச் சிலை போல காட்சி அளித்தாள்.

”ஏண்டி ஆபிஸ் விட்டவுடன் நேராய் வீட்டுக்கு வராமல் யார் கூடவாது பேசிட்டு வர்றியா?”

”போம்மா, உனக்கு எப்பவும் விளையாட்டுத்தான்” என்று சிணுங்கினாள் ஸ்வாதி.

”ஏண்டி தாத்தா உனக்கு மாப்பிள்ளை பார்த்து வைச்சிருக்கார். உடனே கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உனக்குச் சம்மதமா?”

”எனக்குக் கல்யாணம் வேண்டாம்.”

”ஏன் உனக்குக் கல்யாணம் ஆயிடுத்தோ? இல்லைன்னு சொல்வாளோ என்னும் நப்பாசை அவளுக்கு.

ஸ்வாதி திடுக்கிட்டாள். அம்மாவைப் பார்த்துத் தயங்கிக் கொண்டே சொன்னாள்.

”நான் சமயம் பார்த்து சொல்லலாம்னு வைட் பண்ணிக் கொண்டிருந்தேன். உனக்கு யார் சொன்னா? ஆமாம் எனக்கு ராபார்ட்டுடன் மூணு மாசம் முன்னாலே கல்யாணம் ஆயிடுத்து.”

ஏண்டி என்னடி சொல்றே? சித்ரா கோபத்துடன் ஸ்வாதி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.

”சொல்லுடி கல்யாணம் ஆயிடுத்தா ? யார் கூட ?

ஸ்வாதி தன் கன்னத்தைத் தடவிக் கொண்டுக் கண்களில் நீர் வழியத் தழுதழுத்த குரலில் சொன்னாள்.

”என் ப்ரண்ட் ராபர்ட் கூட.”

”எனக்கு எல்லாம் தெரியுமடி. உன் ஃபிரண்ட் உமாவை இன்னைக்கு மார்கெட்டில் பார்த்தேன். அவதான் உனக்குக் கல்யாணம் ஆன ரகசியத்தை பகிர்ந்தாள். நாங்க உனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்க மாட்டோமா? அதுக்குள்ளே எதுக்கு அவசரம் ? உன்னுடைய தாத்தா கனபாடிகள். ஆனால் நீ ஒரு கிரிஸ்டியனை கல்யாணம் பண்ணிண்டு அவர் பெயருக்கு இழுக்கு வர்ற மாதிரி செஞ்சுட்டேயேடி. காதலாம் காதல். மண்ணாங்கட்டி. உன்னாலே நம்ம குடும்ப மானமே போயிடுத்தே. ஏண்டி என் தலையிலே இடி விழுந்த மாதிரி பண்ணிட்டியேடி. நீ செஞ்சது நியாயமா?” என்று கூறிக் கொண்டிருக்கும் போது சாம்பசிவம் இடையில் குறுக்கிட்டு,

”ஏம்மா ஸ்வாதி, உன் அம்மா உன்னிடம் ரொம்ப ஆசையாய் இருப்பாள். நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவாள். அவள் மனம் புண்படுகிற மாதிரி நடந்து கொண்டு விட்டாயே? இது நல்லா இருக்கா? உன் அப்பா உன் கல்யாணத்தை ஒத்துப்பார்னு நினைக்கிறயா?”

”அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. என் அப்பா, அம்மா, நீங்க யாரும் ஒத்துக்க மாட்டீங்கனு எனக்குத் தெரியும். அதனால்தான் யாருக்கும் சொல்லாமல் எனக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டேன். ராப்ர்ட் வீட்டில் என்னை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். எங்களுக்குள் முதல் இரவும் முடிந்து விட்டது. அவர்

என்னை விரும்புகிறார். நான் அவரை விரும்புகிறேன். அது மாத்திரமில்லை. ராபர்ட்க்கு பூனேவில் வேலை கிடைத்து விட்டது. அடுத்த வாரம் அவர் புது வேலையில் சேர்ந்து விடுவார். அவர் வீடு பார்த்ததும் நான் அங்கு போயிடுவேன்.”

சித்ரா திடுக்கிட்டாள். கோபத்துடன் மகளை முறைத்தாள்.

“ மூளை கெட்ட முண்டமே, என்னடி இப்படி ஒரு வெடி குண்டை தூக்கி தலையில் போடறே. நான் உங்க கல்யாணத்து ஒத்துக் கொள்ளலைனா என்ன செய்வாய்?”

”நான் என்னம்மா செய்வது. இது என் வீடு. நான் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பூனே போய் விடுவேன். நீங்கள் வாடகை வீட்டில் இருக்க வேண்டும். எங்களை ஏற்றுக் கொண்டால் இந்த வீட்டிலேயே நீங்கள் தங்கலாம். மாசம், மாசம் நான் மாத தவணையைக் கட்டி விடுவேன்.”

தன் வழுக்கைத் தலையில் கை விரல்களால் தேய்த்துக் கொண்டு இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சாம்பசிவம், ” ஸ்வாதி கண்ணு, பணம் வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கை அல்ல. சித்ராவுக்கு வீடா இல்லை. எங்க கூட சேர்ந்து வசிக்கலாம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள். நீ போய் விட்டால் என் பெண் நடுத் தெருவில் ஒன்றும் நிற்க மாட்டாள் தெரிஞ்சுக்கோ” என்றார்.”

”விளையாட்டுக்குச் சொன்னேன் தாத்தா” என்றாள் ஸ்வாதி சிரித்துக் கொண்டே.

”பண்ணறதையும் பண்ணிவிட்டு சாமர்த்தியமா பேசறே ஸ்வாதி. நீ ஏன் யார் கிட்டேயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கொண்டாய்.” என்றார் சாம்பசிவம்.

”நான் சொன்னால் எனக்கு சம்மதம் கிடைக்காது . அதனால் யாரிடமும் சொல்லாமல் ….. நடந்தது நடந்து விட்டது. இப்ப நீங்க ஒத்துக் கொண்டுதானே ஆகணும்.”

”நல்லாயிருக்கதடி, நீ பேசற நியாயம். நல்ல மாப்பிள்ளையா பார்த்து பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க்கிறது அப்பா, அம்மாவோட கடமையில்லையா . நீயே மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்து கொண்டால் பின்னால் நடக்கும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை. நான் உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டேன். நீ எதை கேட்டாலும் நா வாங்கி தருவேன். மாப்பிள்ளையை மட்டும் என்னைக் கேட்காமல் நீ தேர்வு செய்து விட்டாய். நீ எடுத்தது சரியான முடிவா அல்லது தவறான முடிவா

என்று தெரியலை. எங்களைக் கலந்தாலோசித்து விட்டு நீ முடிவு எடுத்திருக்கலாம். நீ செய்தது என் நெஞ்சை கசக்கி பிழியறது. நான் ஒத்துண்டாலும் அப்பா ஒத்துக்கணுமே. அவர் தானே வீட்டுக்குத் தலைவர். அவர் சொல்றதைத்தான் நான் கேட்பேன். இந்த விஷயத்தை அப்பாகிட்டே எப்படியடி சொல்வேன்” என்று கவலையுடன் கேட்டாள்.

சாம்பசிவம் தன் கை கடிகாரத்தைப் பார்த்து விட்டு , இப்போ மாப்பிள்ளை வர்ற நேரம். நானும் ஸ்வாதியும் அந்த அறையில் தங்கிக் கொள்கிறோம். நீ அவர்கிட்டே மெதுவாக விஷயத்தைச் சொல். யதார்த்தத்தை அவர் ஏற்றுக் கொள்வார் என்று எனக்கு தோணுகிறது. அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று பார்க்கலாம்.” என்றார்.

அப்போது வாசல் இரும்பு கேட் திறக்கும் சப்தம் கேட்டது. தாத்தாவும் பேத்தியும் ஹாலை ஒட்டி இருந்த அறைக்குள் சென்றார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த பாபு பாத்ரூம்க்குள் சென்று கால் கை அலம்பி வந்து சோபாவில் உட்கார்ந்தான்.

சித்ரா ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் பாதி தண்ணீர் அருந்தி விட்டு குவளையை டீ பாய் மேல் வைத்தான்.

”ஸ்வாதி அப்பா, ஒரு முக்யமான விஷயம். நீங்க டென்சன் ஆகக்கூடாது “ என்றாள் சித்ரா படபடப்புடன்.

என்ன விஷயம் சொல்லு.

”எனக்கு இன்னைக்கு மத்தியானம் தான் விஷயம் தெரிஞ்சது. நம்ம ஸ்வாதி அவள் ப்ரண்டு ராபார்டை கல்யாணம் செய்து கொண்டு விட்டாள். பத்திர பதிவு முடிந்து மூணு மாசம் ஆயிடுத்து. தாம்பத்திய வாழ்க்கையும் நமக்குத் தெரியாம தொடங்கிட்டாங்க. அவ கணவனுக்கு பூனேயில் வேலை கிடைச்சிருக்கு. அடுத்த வாரம் அவர் பூனேயில் புது வேலையில் சேரப்போகிறார். ஸ்வாதியும் சீக்கிரம் பூனே போயிடுவாள். “

”என்னடி நீ சொல்றது எல்லாம் உண்மையா? என்றான் கோபத்துடன்

”நான் ஸ்வாதியிடம் பேசி விட்டுத் தான் உங்களிடம் சொல்றேன். எனக்கு தலையில் இடி விழுந்த மாதிரி இருக்கு. நாம்ப நல்லா தான் பெண்ணை வளர்த்தோம். ஆனா அவ இப்படி பண்ணிட்டா. மன்னிச்சுடுங்கனு கெஞ்சறா”

”பேசுடி நல்லா பேசு. ஸ்வாதியை பாலுட்டி சீருட்டி வளர்த்தோம். நீ சரியா அவளை கவனிக்கலே. எல்லாம் உன் தப்புதான். என்ன தைர்யம் அவளுக்கு. நாம் சிறிது கூட எதிர் பார்க்காததை அவ செஞ்சுட்டா.

நம்ம உறவினர், ஊரார் முன்னே நாம் தலை குனிஞ்சு இருக்கும்படியான நிலைமையை ஏற்படுத்திட்டா. மொத்தத்திலே, அவ என்னை ஏமாத்திட்டா ! என்றான். அவன் கண்கள் கோவை பழம் போல் சிவந்திருந்தன. அவன் எழுந்து நின்று கோபத்துடன் பக்கத்திலிருந்த குவளையை எடுத்து வீசி விட்டெறிந்தான். அது கதவில் மோதி தரையில் விழுந்தது. பற்களை நறநறவென்று கடித்தான். அவனுக்கு பயங்கரமாக மூச்சு வாங்கியது. அவளை, அவளை …. என்று கூவிக் கொண்டே மயங்கி விழுந்தான்.

சித்ரா பதறி அடித்துக் கொண்டு அவன் அருகில் வந்தாள். ஸ்வாதி அப்பா, ஸ்வாதி அப்பா உங்களுக்கு என்ன ஆச்சு .ஐயோ அவர் மயங்கி விழுந்துட்டாரே. அப்பா எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடல….என்று கண்களில் கண்ணீர் பொங்க புலம்பினாள்.

ஹாலில் அவர்கள் பேசுவதை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாதியும் சாம்பசிவமும் விருட்டென்று அறையை விட்டு வெளியே வந்தனர்,

சாம்பசிவம் பாபுவின் முகத்தின் மீது தண்ணீர் தெளிக்க அவன் கண்கள் திறந்து மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். “

”ஸ்வாதி அப்பா, நார்மலா இருக்கீங்களா, என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றாள் சித்ரா

”அவ என்னை ஏமாத்திட்டா” என்று கூறி சிரித்தான்.

சித்ரா அதிர்ச்சியுடன் தன் தந்தையை நோக்கினாள்.

அவர் உடனே, ”மாப்பிள்ளை என்ன ஆச்சு உங்களுக்கு?” என்றார் சாம்பசிவம் .

”அவ என்னை ஏமாத்திட்டா” என்று கூறி சிரித்தான்.

ஸ்வாதி தந்தையின் இரு கைகளைப் பிடித்துக் கூறினாள்.

”டாக்டர் கிட்டே போகலாம்பா,”

அவ என்னை ஏமாத்திட்டா” என்று கூறி சிரித்தான் பாபு.

ஸ்வாதி ஸ்தம்பித்து நின்றாள்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை மாதிரி அதையே சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *