திருடர்களின் க்ளாஸிக் காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,139 
 

முத்தானை கீழே தள்ளி அம்மினியம்மாள் அமுக்கியபோது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. இது நடந்தது ஆலாம்பாளையத்தில். இப்பொழுது யாராவது ஆலாம்பாளையம் எங்கிருக்கிறது என்று கேட்டால் பவானிசாகருக்கு பக்கத்தில் என்று சொல்லிவிடலாம். ஆனால் அம்மினியம்மாள் காலத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டிருக்கவில்லை. அதனால் ஆலாம்பாளையம் ஆலாம்பாளையத்தில்தான் இருந்தது.

முத்தானுக்கு களவாடுவதுவதுதான் குலத் தொழில். பந்தம்பாளையத்துக்காரன். பந்தம்பாளையத்தில் களவாணி வீடு எது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு எந்த வீட்டை வேண்டுமானாலும் கைகாட்டலாம். வீட்டுக்கு வீடு ஒருத்தனாவது ராத்திரியானால் கிளம்பிவிடுவார்கள். அந்த ஊர்க்காரர்கள் கன்னம் போடும் அளவிற்கு கில்லாடிகள் இல்லை என்றாலும் முற்றத்தில் காயப்போட்டிருக்கும் தானியங்களை அள்ளி வருவது, ஈரத்துணியை போட்டு கோழி பிடிப்பது, வெள்ளாட்டுக்குட்டிகளை அலுங்காமல் தூக்குவது போன்ற சில்லரைத் திருட்டுக்களைச் செய்வார்கள்.

களவு கொடுத்தவர்கள் வெற்றிலையில் மை தடவிப் பார்த்தாலும் சரி கருப்பராயன் கோயிலில் காசுகளை இரண்டாக வெட்டிப்போட்டாலும் பந்தம்பாளையத்துக்காரங்களுக்கு எதுவும் ஆகாது என்பது ஐதீகம். அந்த தைரியத்தில்தான் பல தலைமுறைகளாக ராத்திரிப் பறவைகளாகத் திரிகிறார்கள். ஒரேயொரு முறை மாட்டிக் கொண்டாலும் அதன் பிறகு திருடப் போக மாட்டேன் என்று குலதெய்வம் ராக்காயி அம்மன் கோயிலில் சத்தியம் செய்துவிட்டுத்தான் முதல் திருட்டையே தொடங்குவார்களாம். மாட்டிக் கொள்வது என்றால் தண்டனை பெற்றிருக்க வேண்டும். ஒரு அடி வாங்கிவிட்டாலும் கூட அது தண்டனைதான் என்பது கணக்கு. அதே சமயம் அடியோ அல்லது தண்டனையோ பெறாமல் தப்பித்துவிட்டால் தடை அமலுக்கு வராது.

அம்மினியம்மாளைக் கட்டின மவராசன் மூணாம் வருஷமே வாயைப்பிளந்துவிட்டார். பிளக்கமாட்டாரா பின்ன? அவருக்கு அறுபதைக் கடந்த போதுதான் பதினேழு வயது அம்மிணியம்மாளை மூன்றாம்தாரமாகக் கட்டினார். முதல் இரண்டு தாரங்களுக்கு வாரிசும் இல்லை ஆயுசும் இல்லை. அம்மினியம்மாளை விட்டு அவர் போய்ச் சேர்ந்துவிட்டாலும் சேர்த்து வைத்திருந்த சொத்து நாலு தலைமுறைக்குத் தாட்டும். அத்தனையும் அம்மினியம்மாள் ராஜ்ஜியம்தான்.

அது சித்திரை மாசம். பதினேழு மொடா சோளத்தை களத்து மேட்டில் காயப்போட்டிருந்ததை மோப்பம் பிடித்த முத்தான் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் ஏரி மேட்டில் ஒளிந்து கொண்டான். சாயங்காலம் வரைக்கும் அக்னி வெயிலில் பண்ணையத்து ஆட்களோடு களத்தில் திரிந்த அம்மினியம்மாள் கம்பஞ்சோற்றை குடித்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் கால் நீட்டிய போது அயற்சியில் அவளையுமறியாமல் தூங்கிவிட்டாள். அம்மினியம்மாள் தூங்கினால் குறட்டை சத்தத்தில் ஆலமரத்து கிளிகளே கூட பயந்து நடுங்கும் என்பார்கள். இது அவள் கல்யாணம் செய்து வந்த புதிதில்தான். பிறகு கிளிகளுக்கு பழகிவிட்டதாம். அம்மினியம்மாளின் குறட்டையை அவை சட்டை செய்வதில்லை.

அம்மினியம்மாளின் குறட்டைதான் முத்தானுக்கு சிக்னலாக இருந்திருக்கிறது. களத்தில் கிடந்த சோளத்தை கூட்டி வழித்துக் கொண்டிருக்கும் போது அம்மினியம்மாள் விழித்துவிட்டாள். எவனோ திருடுகிறான் என்பதை தெரிந்து கொண்டாள் ஆனால் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பதை நேசர் பார்ப்பதற்காக அசையாமல் படுத்துதிருந்தாள். முத்தானைத்தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் மொத்தமாக வழிக்கட்டும் என்று காத்திருந்தாள். முத்தான் மூட்டையைத் தூக்கி தோளில் வைக்கும் வரை காத்திருந்தவள் அடுத்த வினாடி மான் மீது பாயும் புலியைப் போல பாய்ந்து அமுக்கினாள். அம்மினியம்மாள் எழுபது கிலோவுக்கும் சற்றும் குறைவில்லாத ஆறடி உயரமுடையவள். அவளின் எடையும் மூட்டையோடு சேர்ந்து அமுக்க வேறு வழியில்லாமல் முத்தான் சரண்டர் ஆகிவிட்டான்.

அவனை நகரவிடாமல் அழுத்திய அம்மினியம்மாளின் சத்தம் கேட்டு பக்கத்துத்தோட்டத்துக்காரர்கள் கண்களில் தூக்கக் கலக்கமும் பீளையுமாக கூடிவிட்டார்கள். இன்னும் பொழுது விடிய வெகு நேரம் இருந்தது. முத்தானிடம் ஆளாளுக்கு கேள்வி கேட்டார்கள். அவன் வாய் பேசத்தெரியாததைப் போல சைகை காட்டினான். ஊமை போலிருக்கிறது என்று முடிவு செய்தவர்கள் விடியும் வரைக்கும் கிணற்று மேட்டு வேப்பமரத்தில் கட்டி வைத்து கூடவே அம்மினியம்மாளிடம் பண்ணையத்தில் இருக்கும் கடுவானை காவலுக்கு வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். விடிந்தவுடன் பஞ்சாயத்தில் நிறுத்தி தண்டனை தந்துவிடலாம் என்பது பேச்சு.

ஆலாம்பாளையத்து பஞ்சாயத்தில் தண்டனை ஒன்றும் பெரிதாக இருக்காது. மீறிப்போனால் ஒன்ணேகால் ரூபாய் தண்டனைப்பணமாக கட்ட வேண்டும் அல்லது ஒரு நாள் அம்மினியம்மாளின் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும். முத்தான் தண்டனைக்கு பயப்படவில்லை. ஆனால் தண்டனை பெற்றுவிட்டால் தனது பிழைப்பு கெட்டுவிடுமே என்றுதான் பயந்தான். பனைமரத்தில் கட்டிவைத்திருந்தால் தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கும். நேக்காக கையை அசைத்தால் கட்டி வைத்திருக்கும் கயிற்றை மரத்தின் கூரிய பட்டைகள் அறுத்துவிடும். ஆனால் முத்தானைக் கட்டி வைத்திருந்த வேப்பமரத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை போலிருந்தது.

அப்படியும் இப்படியுமாக நெளிந்து கொண்டேயிருந்தான். ஒன்றும் ஆவதாக இல்லை. பொழுதுவிடிந்தால் தப்பிக்க முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் கடுவானை பக்கத்தில் வருமாறு சைகை காட்டினான். அவன் வந்தவுடன் முத்தான் ஏதோ பேச வாய் எடுக்க முத்தான் ஊமை இல்லை என்பதை அறிந்த கடுவான் அதிர்ச்சியாகிவிட்டான். தான் ஊமை இல்லையென்றும் தப்பிப்பதற்காக நடித்ததாகவும் சொன்ன முத்தான் தன்னை அவிழ்த்துவிட்டால் சுடுகாட்டுக்கு பக்கமாக வேறு ஒரு தோட்டத்தில் திருடி வைத்திருக்கும் ஒரு கூடை மிளகாயையும், ஒரு மொடா அரிசியையும் கடுவானுக்கு தந்துவிடுவதாகச் சொன்னான்.

கடுவானுக்கு முடிவு எடுப்பது சிரமமாகத்தான் இருந்தது. அம்மினியம்மாளுக்கு துரோகம் செய்வதா என்று மனசுக்குள் குத்தியது. ஆனால் நெல்லஞ்சோறு தின்று நான்கைந்து வருடங்கள் ஆகியிருந்தது. கம்பும் சோளமும் சலித்துப்போயிருந்த கடுவானின் நாக்கும் இதயம் சண்டை போட்டுக் கொண்டன. கடைசியில் அவனது நாக்கு வென்றுவிட்டது. அவிழ்த்துவிட்டவன் ஒரு மொடா அரிசியை வீட்டில் வைத்திருந்தால் ஊர்க்காரர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என ஒரு வல்லம் மட்டும் வாங்கிக் கொண்டான். முத்தான் தப்பித்த பிறகு அரிசியை தனது வீட்டில் பதுக்கி வைத்துவிட்டு அதே வேப்பமரத்திற்கடியில் வந்து அமர்ந்து கொண்டான்.

வெள்ளி முளைத்திருந்தது. யாரோ ஒருவர் செம்பை தூக்கிக் கொண்டு சலவாதிக்கு போவது தெரிந்தது. யாராவது கண்ணில் படமாட்டார்களா என காத்திருந்த கடுவான் “ஓடுறான் புடிங்க ஓடுறான் புடிங்க” என்று கத்தினான். செம்புக்காரருக்கு திருடனைப்பிடிப்பதை விடவும் தோதான இடத்தை தேடுவதுதான் அப்போதைய தேவையாக இருந்தது. அவர் புதருக்குள் மறைந்து கொண்டார். ஆனால் ஊர்க்காரர்கள் ஓடி வந்துவிட்டார்கள். ”தெக்கால இட்டாரி வழியா சர்ர்ர்ருன்னு ஓடுறானுங்க” என்றான். அம்மினியம்மாள் “எப்படி ஓடுறான்” என்றாள். “சர்ர்ர்ர்ன்னு ஓடுறானுங்க” என்றான்.

கடுப்பான அம்மினியம்மாள் கடுவான் மீதும் முத்தான் மீதும் சில வசவுச் சொற்களை உதிர்த்தாள். ”ஒண்ணும் களவு போகலைல வுடு புள்ள” என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்தார்கள். அம்மினியம்மாள் அடங்குவதாக இல்லை. பார்க்கும்வரை பார்த்துவிட்டு ஆளாளுக்கு செம்பை எடுக்கக் கிளம்பினார்கள். எல்லோரும் போய்விட்ட பிறகு தனியாகக் கத்திக் கொண்டிருந்தவளையும் வெகு சீக்கிரமாக செம்பு அழைக்கத் துவங்கியது.

– ஜூலை 24, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *