கருடனின் கைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 2,063 
 

சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய புவனேஷ்வரி உடலை எரிக்கும் வெப்பத்தை உணர்ந்தாள். விமான நிலைய நடையில் நடக்கும்போது கழுத்து காதுகளில் வெப்பமாக இருந்தது. கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால் இருட்டிலும் நகரம் மிகத் தெளிவாகத் தெரிவது போன்ற பிரம்மை. மைனஸ் பத்துவரை சென்ற குளிர் நகரத்தைப் பார்த்துவிட்டு வரும்போது இப்படி தோன்றுவது இயற்கைதான் என நினைத்தாள். கலிபோர்னியா சான் டியாகோவில் பாஸ்கருடன் சிவகாமி, தர்ஷினியை விட்டுவருவதுத் இது இரண்டாம் முறை. முதன்முறை தனியாக வந்தது அப்பாவின் மரணத்தின்போது. அவர்கள் இருவரும் பாஸ்கருடன் தனியாக இருந்து விடுகிறார்கள். அமெரிக்கப் பழக்கவழக்கங்களால் அம்மாவைத் தேடும் வழக்கம் இருப்பதில்லை அவர்களுக்கு. துவைக்க வாசிங் மெஷின், பாத்திரம் கழுவ டிஸ்வாஷர் இருக்கிறது, எளிய சமையலைச் செய்ய பாஸ்கருக்குத் தெரியும். போதாதற்கு பீட்ஸா ஆர்டர் செய்து கொள்வார்கள்.

அம்மா அப்படியில்லை, யாராவது ஊருக்கு போகிறார்கள் என்றால் அம்மா அழுது கண்ணீர் வடித்து முகம் வீங்கிக் கொள்வாள். பாஸ்கரும் அவளும் அமெரிக்காவிற்குப் ஃபிளைட் ஏறும்போது அண்ணனுடனும் அப்பாவுடனும் அடம்பிடித்துச் சென்னை விமான நிலையம்வரை அம்மா வந்தாள்.

“பத்திரமா இரும்மா, ஏதாவதுன்னா அம்மாவுக்குப் ஃபோன் பண்ணும்மா”, கண்களை கசக்கினாள்.

“ஆமாம், ஏதாவதுன்னா போயிட்டுதான் நீ மறுவேலை பாப்பே.”

“உனக்கு எப்பவும் கேலி தாண்டா” என்றாள் அண்ணனை பார்த்து.

“அவன் சொன்னதுல என்ன தப்பு, அவ சொன்னவுடனே நீ போப்போறியா” என்றார் அப்பா.

“ஒன்னும் கவலைப்படாதீங்க மாமி நா பாத்துக்கிறேன்” என்றார் பாஸ்கர். அம்மா குனிந்தபடி “சரி” என்றாள்.

அம்மாவிற்கு விருப்பமே இல்லை. வேலைக்கு என்று இவ்வளவு தூரம் போவார்கள் என்றால் கட்டிகொடுத்திருக்க மாட்டாள். சென்னை வருவதே அவளுக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது.

புவனா கால்டாக்சியைப் பிடித்துக் கும்பகோணம் கிளம்பினாள். டிரைவருக்கு இன்னும் விடியாத காலை வேளையில் தனியாக வரும் பெண்ணின்மீது வெறுப்பும் சந்தேகமிருப்பதும் அவர் கண்களில் தெரிந்தது. அவர் கண்கள் அவளைச் சந்திக்கப் பயந்தன. அவள் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்டும் டிசர்ட்டும் அணிந்திருப்பது அவரைச் சங்கடப்படுத்துகிறது. அமெரிக்க வாழ்வுக்குபின் தன்னுள் குடிகொண்டுவிட்ட அடிக்கடி உடைகளைத் திருத்தாத போக்கும் உடல் மீதான கவனமின்மையும் ஓட்டுனரைத் துணுக்குற வைத்திருக்கிறது என நினைத்தாள்.

மெல்லிய உறுமலுடன் கார் மெதுவாக ஊர்ந்து சென்றது. குளிர்சாதனக் காரில் இருந்து பார்க்கும்போது வெளியே ஊமையான அழகிய விடியல் காட்சிகள் புழுதியில் புரண்டபடி வந்துகொண்டிருந்தன. இதற்குமுன் இந்திய நிலத்தைப் பார்க்கும்போது ஏற்பட்ட பரவசங்கள் மாறி இப்போது கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டன. தன் அகம் இனி அமெரிக்க நிலத்தைத்தான் விரும்பும் எனத் தோன்றியது. இத்தனை வேகமாக மனம் ஏற்றுக்கொண்டுவிட்டதை நினைத்து அவளே ஆச்சரியம் கொண்டாள்.

புவனா தனியாக வருவது குறித்து அம்மாவிற்கு உள்ளூர பயம் இருந்தது. ஆனால் மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளும்போது பெருமையாகச் சொல்லி மகிழ்வாள். தன்னால் சுயசார்பாக செயல்பட முடியவில்லை என்கிற ஆதங்கத்துடன் சொல்வாள். அமெரிக்காவில் குழந்தைகளுக்கு முதலில் சொல்லித்தருவது சுயசார்புதான். நாலு வயதாகும் தர்ஷிணிக்கு இருக்கும் சுயசார்பும் முடிவெடுப்பதில் இருக்கும் தெளிவும் இங்கிருக்கும் குழந்தைகளுக்கு இல்லை, ஏன் அம்மாவிற்குக்கூட இல்லை.

“இவ்வளவு தூரமா இருக்கே, மாப்பிள்ளைக்கிட்ட சண்டையெல்லாம் போட்டுன்னுடாதே,” “எதுக்கும் மாப்பிள்ளைக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடு,” எல்லாவற்றிற்கும் பயந்து மற்றவர்களையும் பயப்பட வைத்துவிடுகிறாளோ எனத் தோன்றும்.

அமெரிக்கா சென்றுவிட்ட ஏழு ஆண்டுகளில் போன ஆண்டுதான் அம்மா பதறி அழுதாள் ஃபோனில். அப்பாவின் ரத்த அழுத்த உயர்வையும் மூச்சுத் திணறலையும் சொல்லி அழுதாள். புவனா விமானம் ஏறும்வரை ஃபோனில் அவள் குரல் விடாமல் அரட்டிக் கொண்டிருந்தது. அண்ணா அண்ணிகள் பக்கத்தில் இருந்தாலும் அம்மாவுக்கு மகள் அருகில் வேண்டும் என்கிற ஆதங்கம் அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

“நீ வந்ததும் பாரு உன் அம்மா முகத்துல சிரிப்பே வருது”, என்றாள் அத்தை.

அவள் அம்மாவைப் பார்த்தாள். வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அம்மாவின் கண்கள் கலங்கி இருந்தன. எதையோ சொல்ல நினைப்பது போன்ற முகம் புவனாவை நிலைகொள்ளவிடவில்லை. “அம்மா எதாவது சொல்லும்மா” என்றாள். ஐசியுவில் இருந்த அப்பாவைப் பார்ப்பதும் வெளியே வேடிக்கைப் பார்ப்பதுமாக இருந்தாள். கைகளில் சின்ன நடுக்கம் இருப்பதை அவளைத் தொடும்போதெல்லாம் உணர்ந்தாள். அம்மாவால் அப்பாவின் மரணத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அம்மாவைச் சமாதனப்படுத்த முயற்சிக்ககூடாது என நினைத்தாள். அவள் தன்னை வேகமாகச் சமாதனப்படுத்திக் கொள்ளமுடியும், தன் முயற்சிகள் எதுவும் அவளைத் தடைதான் படுத்தும் எனவும் நினைத்தாள்.

அப்பாவை அழைத்துச் சென்று கடைசியாகக் கொஞ்ச நேரம் பேசவேண்டும் என அம்மா ஆசை கொண்டிருந்தாள். அடுத்தநாள் உயிர் பிரிந்தது. வீட்டிற்கு வந்து சூழ அமர்ந்து அண்ணன்கள் அண்ணிகள், அத்தைகள், சித்தப்பா, சித்திகளுடன் அவள் அழுதபோது அம்மா மட்டும் கலங்கிய கண்களோடு அப்பாவைப் பார்த்தபடி இருந்தாள். மனச்சலனத்தை இழந்தபின் அடையும் வெறுமையை அம்மா கண்டுவிட்டாள் போலும். அப்பாவை எரித்து 16ஆம் நாள் காரியம் ஆகும்வரை அம்மா பொதுவாகப் பேசவேயில்லை. விமானம் நிலையம் செல்ல இங்கிருந்து கிளம்பும்போது அம்மா சற்று உருகிப் பேசினாள். அம்மாவிற்குத் தன் நிலை குறித்த பதற்றம் என்பதைவிடத் தனக்கான வாழ்க்கை இது என உணரும் தருணம். இனி தனியே எப்படி இருக்கப்போகிறேன் என்கிற கவலையும்தான். அவளாகச் சுயமாக எதையும் செய்ததில்லை. அப்படிச் செய்ய அவளுக்குப் பயமும் அதனால் மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் என்கிற பதட்டமும் இருந்தது. பெரிய ரயில் எஞ்சின் இழுத்துச் செல்லும் பெட்டிபோல தாத்தா, சின்ன தாத்தா, அப்பா என்று எல்லோரும் கூடவே இருந்திருக்கிறார்கள்.

ஓராண்டுகள் ஓடியது அவளுக்குப் பெரிய விஷயம்தான். அப்பாவின் இறந்த திதியைப் பொருத்து வருஷாப்திகம் தேதி அமையும். அம்மாவிற்கு அதற்குள் பொறுக்கவில்லை “சீக்கிரம் கிளம்பிவா நாலு நாள் முன்னாடியே இருந்துட்டு போயேன்” என்றாள்.

லேசாகத் தூறல் கண்ணாடியில் அடித்துக் கொண்டிருந்தது. சின்ன இடைவெளியில் வெய்யிலும் மழையும் என மாறிமாறித் தெரிந்தது. கும்பகோணம் வந்துவிட்டிருந்தது. பாஸ்கர் வீட்டில் இறங்கவேண்டும், அங்கே சென்றுவிட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லியிருந்தாள். ஆனால் அவள் மனம் நிலைகொள்ளவில்லை. அம்மாவைப் பார்ப்பதும் அவள் உடல் வாசனையை நுகர்வதும் என மனச்சித்திரம் அவள் மனதில் உருவாகியிருந்தது. நேராகத் தஞ்சாவூருக்குப் போகச் சொன்னாள். ஒட்டுநர் திரும்பிப் பார்த்து ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டு சலிப்புடன் வேகமெடுத்தான்.

வழியெல்லாம் அம்மாவின் நினைவுகள்தாம் வந்தபடியிருந்தன. எப்படியும் நான் வருவது அவளுக்குத் தெரிந்திருக்கும். வந்ததுமே கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து கண் கலங்குவாள்.

பல விஷயங்களை அம்மா மாற்றிக் கொள்வதேயில்லை. அதிலொன்று செலவுக் கணக்கு எழுதுவதை நாள் தவறாமல் இன்றளவிலும் விடாமல் எழுதிக்கொண்டிருப்பது. குண்டுக் கையெழுத்தில் எழுதப்பட்ட அவளது டைரிகள் வரிசையாக ஸ்டோர்ரூமில் இருக்கும். ஆனால் படிப்பவர்களுக்கு எதுவுமே புரியாது. அம்மா தீவிர முகத்துடன் “எனக்குப் புரியுதுல்ல” என்பாள். மற்றொன்று இன்றும் பசும்பாலை வாங்குவது, எவ்வளவோ தூய பால் பாக்கெட்டில் அடைத்து வந்தாலும் பக்கத்தில் இருக்கும் பண்ணையிலிருந்து தினம் அவளுக்குப் பால் வந்துவிடும்.

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் ஒருமுறை உங்க பிள்ளை நன்றாகப் படிக்கிறாங்க என்று சொன்னதற்கு அங்கேயே அம்மா அழுது கொண்டிருந்தாள். “மேடம் உங்க பொண்ணு பத்தி நல்லாதானேங்க சொல்லியிருக்கோம்” என்றாலும் அழுது கொண்டிருந்தாள். புவனா தன் வாயிலிருந்து வார்த்தைகளை வெளிவராமல் “அம்மா, ஏம்மா இப்படி அழுது மானத்த வாங்குற” என்றாள். சந்தோஷத்திலும் அழுகை, துக்கத்திலும் அழுகை அது அம்மாவின் வழக்கம்.

சிறு வயதிலிருந்தே அம்மாவின் பிள்ளையவள். தூங்கும்போது அம்மா அருகில் இருக்கவேண்டும், அவள் காதுகளைப் பிடித்தபடி தூங்குவாள், அவள் ஒரு காதை வருடியபடி தூங்கவேண்டும். அதனினும் மிக இளம்வயதில் அவள் தாலிக் கொடியைக் கையில் பிடித்துத் தூங்குவாள். வளர்ந்தபின் அம்மாதான் அப்படிச் செய்கிறாள் எனத் தோன்றியது.

வயல்களின் ஊடே கார் சென்றுகொண்டிருப்பது போன்றிருந்தது. காலை இளஞ்சூரிய ஒளி பயிர்களைத் தொட அதன் மஞ்சள் பழுப்பு நிறம் தெரிய ஆரம்பித்திருந்தது. பயிர்களின் நெருக்கம் அவள் நினைத்ததைவிட அதிகமாக இருந்தது.

அம்மா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள், தான் போகும்போது மதிய சமையலையும் முடித்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பாள், அல்லது பக்கத்துவீட்டுத் தோழியுடன் கதை பேசிக் கொண்டிருக்கலாம். வடவம், வற்றல் என்று முற்றத்தில் எதையாவது காயப்போட்டுக் கொண்டிருப்பாள். கார் சத்தம் கேட்டதும் மெட்டி தரையில் மோதும் ஒலியுடன் புடவை சரசரக்க நடையில் நடந்து வாசலுக்கு ஓடிவருவாள்.

ரயிலடிவரை வந்து ஆத்துபாலம் ஏறி இறங்கி பிறகு ஏற்றத்துடன் சென்ற சாலையில் வலப்பக்கம் திரும்பி அவள் கைகாட்டிய வீட்டின்முன் நின்றது கார். இறங்கிப் பைகளை எடுத்துக் கீழே வைத்துவிட்டுப் பணத்தைக் கொடுத்து அனுப்பினாள். அம்மா ஓடிவந்து கட்டிக் கொள்ளப்போகிறாள் என்று திரும்பி நின்றாள். எதிர்வீட்டு பெண்மணிதான் அழைத்தாள், “என்னம்மா இப்பவே வந்துட்டியா” என்றாள், அவளிடம் பேச்சு கொடுத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள், வீடு பூட்டியிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள்.

“அம்மா எங்க” என்றாள்.

அவளைக் கூர்ந்து பார்த்தாள் அந்தப் பெண்மணி, “ம்ம், உங்கம்மா, கருடசேவைய பார்க்கப் போயிருக்கு, என்னமோ போ, இப்படியும் நடக்குது உலகத்துல,” என்றாள்.

அவள் சொல்வதன் அர்த்தம் புரியவில்லை. அவள் தன் பைகளை அப்பெண்மணி வீட்டில் வைத்துவிட்டு, ஆட்டோவில் கிளம்பினாள். வழியில் அவளுக்குப் ஃபோன் செய்தாள். ஆனால் எடுக்கவில்லை. தெற்கு வீதி முன்பிருந்த சாலையில் இறங்கிக் கொண்டாள். கைகள் வெப்பத்தால் நசநசத்துக் கொண்டிருந்தன. திடீரென வேறு உலகத்திற்கு வந்துவிட்டது போன்றிருந்தது. தெற்கு வீதி முழுவதும் மனிதக் கூட்டம். கறுத்துப் பிசுபிசுத்த தலைகள் மட்டுமே தெரிந்தன.

இந்த கூட்டத்திலா அம்மா இருக்கிறாள், பேசாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாமா என யோசித்தாள். ஆனால் அம்மாவைக் காணும் அவசரம் அவளுக்க்ச் சற்று விநோதமாக இருந்தது.

பல முகங்கள் அவளுக்குத் தெரிந்த முகங்களாக இருந்தன. கூட்டத்தில் மற்றவர்களால் கண்டடையப்படுவது என்பது விளையாட்டுகளில் ஒளிந்திருக்கும் பிள்ளையைக் கண்டடையும் சிறுவர்களின் மனநிலை. அம்மாவின் அந்தரங்கத்தை அவள் அறியாமல் சந்திப்பது போன்றிருந்தது. வேகமாகக் கூட்டதினுள் நுழைந்தாள். சிவன் கோயில் தெருவில் இருக்கும் முத்துமீனாட்சி “என்ன புள்ள நீ ஊர்லேந்து எப்ப வந்த, உங்கம்மா முன்னமே வந்துடுச்சே” என்றாள். “எங்கம்மா எங்க இருக்காங்க தெரியுமா” என்றாள். “வீரராகவ ஸ்கூலுக்கு எயித்த கடைல போய்ப்பாரு அங்கதான் நிப்பாங்க” என்றாள்.

எல்லாத் தெருக்களிலும் மனிதர்கள் நிரம்பி வழிந்தார்கள். அப்போதுதான் கவனித்தாள் எல்லாக் கடைகளும் பூட்டியிருந்தன. வெய்யிலில் நிற்கும் மனிதர்களுக்கு நிழல்தரும் இடமாகப் பூட்டிய கடைகள். பள்ளிக்கு எதிர்ச்சாரியில் இருந்த கடையில் ஒவ்வொருவராகத் தேடினாள். அவளைக் கண்டடைய முடியவில்லை. இன்னும் நாலு கடை தள்ளி ஒரு கடையின் வாசலில் அம்மாவும் அவள் தோழியும் அமர்ந்து பொறிக்கடலையைத் தின்று கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி வேர்வை வழியும் மனிதர்கள் நின்றபடியும் அமர்ந்தபடியும் ஒரே கூச்சலாக இருந்தது.

“அம்மா என்னம்மா பண்றே” என்றாள் புவனா. அதிர்ந்து திரும்பினாள் அம்மா.

ஒரு வருடம் முன்பு அம்மாவைப் பார்த்தது, வெளுத்து தெளிவடைந்திருந்தது அவள் முகம், வெளுப்பினால் முகத்தில் வடுக்கள் தெரிய பெரிய முகமாக மாறியிருந்தது. “வாம்மா” என்று எழுந்து நின்றாள். உடல் சற்றுப் பெருத்தது போலிருந்தது. அவள் இடை முன்பைவிட அகன்று, புஜங்கள் பெருத்து அவளுடைய ஜாக்கெட் டைட்டாக இருந்தது.

ஆனால் அவள் பெரியதாக அதிர்ச்சி அடையவில்லை எனத் தோன்றியது. தயங்கும் பார்வையற்றுத் தீர்க்கமான கண்களுடன், “கும்மோணத்துலேந்தா வர்ற” என்றாள்.

“இல்லம்மா நேரா இங்கதான் வாரேன். வீட்டுக்கு வந்தா நீ இல்ல அதாம் இங்க வந்தேன்”.

“கொஞ்சம் முன்ன வந்துருக்கக் கூடாது? பத்து கருடசேவ ஒரே நேரத்துல வந்துது, இன்னும் இரண்டு மூணுதான் இருக்கும். வா உட்கார்றியா, சரி நிப்போம்.”

கடையில் ஓரமாக நின்றார்கள். அம்மாவின் தோழி லெஷ்மி, “இருவத்தி நாலு கருடசேவ, பாக்க ஒவ்வொன்னும் அவ்வளவு அழகு, பதினெட்டு வந்துடுச்சு” என்றாள்.

“எதாவது சாப்பிடறியா, புளிசாதம் இருக்கும், ஃபிரீதாம், அதோ அந்தத் தள்ளு வண்டியில வெச்சுக் கொடுக்கிறாங்க, வா போவோம்” என்றாள் அம்மா.

“இல்ல வேண்டாம்மா” என்றாள்.

“இத பார் இன்னோன்னு வந்துடுச்சு” என்றாள் அம்மா.

அவள் திரும்பிப் பார்த்தபோது அழகிய கருடமுக மனித உடல் ஒன்று மண்டியிட்டுக் கைகளை விரித்து நின்றிருக்க, மேலே ஒரு காலைக் கருடன் தலையிலும் ஒரு காலை அவர் தோளிலும் வைத்திருப்பது போன்றிருந்தது. கருடன் கண்களை விரித்திருந்தார். அதில் பயம் இருந்தது போன்றிருந்தது, அல்லது ஏதோ ஒரு பாவனை முகம், இறைஞ்சும் கண்கள்தாம் அந்த பாவனையைக் கொடுக்கமுடியும்.

பல்வேறு வேண்டுதல்களுடன் மிக நெருக்கமாக நின்று கைகூப்பி மனிதர்கள் வணங்கினார்கள். விபூதி குங்குமம் வாங்கப் பெரிய அலையே எழுந்துவந்தது. அது அவர்களைத் தாண்டிச் சென்றதும் சிறிது நேரத்தில் மற்றொன்று. அதில் கருடனின் இரு கரங்களிலும் இரு பாதங்களை வைத்து அமர்ந்திருந்தார் இறைவன். இருவரையும் சுற்றிச் சதுர வடிவில் மாலைகள் உள்ளிருந்து வெளிநோக்கிப் பரவச் சூழ்ந்திருந்தது. நன்றி செலுத்தும் கருடன் முழுமையாகத் தன்னை அர்பணித்திருந்தார்.

அக்கதைகளை புவனா முன்பே அம்மா சொல்ல கேட்டிருக்கிறாள். வைகுண்டத்தில் இருப்பது போலவே திருப்பதியிலும் இருக்க ஆசைப்படுகிறார் திருமால், அதை அறிந்த கருடன் வைகுண்டத்தில் இருப்பது போன்று ஏழு மலைகளைப் பெயர்த்து வந்து வைக்கிறார். மகிழ்ந்த திருமால் அவரை வாகனமாக்கிக் கொள்கிறார், அதற்கு நன்றிக்கடனாகச் சாமான்ய மக்கள் காணும்வகையில் திருமாலைத் தோளில் தூக்கிக் கைகளில் ஏந்தி வலம் வருகிறார்.

பெருமாள் கோயில்களில் கருடனைப் பார்த்திருக்கிறாள். இருண்ட அறையில் கம்பி வேலியின் நடுவில் ஒரு கால் மடித்துக் கைகள் உயர்த்திக் கண்களில் அதே இரக்க பாவத்துடன் நிற்பார். காக்கை அவர் தோளில் சில வேளைகளில் அமர்ந்திருக்கும். கருட முகம் கண்டு அது பயங்கொண்டதாகத் தெரியவில்லை. சில வேளைகளில் அவர் கைகளில் அழுக்குத் துணி தொங்கவிடப்பட்டிருக்கும். அங்கிருக்கும் குருக்களோ மற்றவரோ மாட்டியிருப்பார். கோயில் நடையில் செல்லும்போதெல்லாம் புவனா நின்று கவனிப்பாள். கால் மாற்றியோ, கைகளைத் தளர்த்தியோ நிற்கலாமே என நினைத்துக் கொள்வாள். பகவான் விரும்பாததைக் கருடன் செய்யப்போவதில்லை.

கடைசி கருட வாகனம் வந்து போனதும் கூட்டம் சட்டெனக் குறைந்தது. தார்ச் சாலையும் மண் பரவிய இடங்களும் தெளிவுற்றன. லெஷ்மி, “நாமளும் வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான் நேரமாச்சு” என்றாள்.

“இரு போலாம். நாம காபி பேலஸ்ல போயி கொஞ்சம் சாப்பிட்டுப் போவோம், வாம்மா” என்றாள்.

மூவரும் மேற்கு பக்கமாக நடந்து வலது பக்கத்தில் இருந்த சிறிய சாலையில் போய் ஒரு கடையில் அமர்ந்தார்கள்.

“இங்க தோசையும் காபியும் நல்லா இருக்கும். உனக்கு என்ன வேணும் சொல்லுமா, லெஷ்மி நீயும் சொல்லு, எனக்கு ஒரு தோசை ஒரு காபி மட்டும்” என்றாள்.

“உனக்கு எப்படிமா இதெல்லாம் தெரியும்?” அவள் கண்கள் அம்மாவின் கண்களைத் தொட்டுச் சென்றன. “அப்பா இங்கதான் வந்து அவரோட பிரண்சுங்ககூட சாப்பிடுவாங்க. ரொம்ப வருஷமா இருக்குற கடையில்ல.”

மூவருக்கும் தோசைகள் வந்தன. அவள் நீண்ட இடைவெளியில் பீட்ஸா இல்லாத புதியதாகஸ் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுகிறாள். அந்த சாம்பார் அவளுக்குப் பிடித்திருந்தது.

லெஷ்மி, “மாமி, இதுல பாசிப் பருப்பும், துவரம் பருப்பும் ஒன்னுக்கு ஒன்னுன்னு போட்டா இந்த டேஸ்ட் வருது” என்றாள்.

காபியைக் குடித்துவிட்டு வெளியே வந்தார்கள். கொஞ்ச தூரம் நடந்துவந்து டவுன் பஸ் பிடித்துத் தொம்பன் குடிசை வந்தபோதுதான் அவளுக்கு நினைவிற்கு வந்தது, எப்போதும் ஆட்டோவில் செல்லும் அம்மா லெஷ்மியுடன் சேர்ந்து இப்படி ஆகிவிட்டாளா எனத் தோன்றியது. அங்கிருந்து வீடு வர லெஷ்மி அவள் வீட்டிற்கு சென்றாள்.

வீட்டிற்கு வந்தபோது புதிய வீட்டிற்கு வந்துவிட்டேன் என்கிற எண்ணத்தை அடைந்தாள் புவனா. பழைய பாணி வீடு, திண்ணை, கூடம், முற்றம், நடை, அடுப்படி, அதன் பக்கத்தில் சிறுநடை, பின் கொல்லை என்றிருந்த வீடு, இப்போது எல்லாமே ஒரே அறை என்பது போல நேராக இருந்தது. எந்தப் பொருளும் அங்கில்லை என்பதை உணர்ந்தாள். அந்த வெறுமையே வீட்டிலிருந்து கண்களை விலக்க முடியவில்லை. முக்கியமாகக் கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று தலைமுறை மனிதர்களின் படங்கள் இல்லை.

“அம்மா, என்னம்மா எல்லா ஃபோட்டோவையும் எடுத்துட்ட?” சற்று அதிர்ந்து கேட்டுவிட்டாள். அம்மா மிகச் சாதாரணமாகத் திரும்பிப் பார்த்தாள். “போதும்மா எவ்வளவு நாளுதான் இவங்க மூஞ்சையே பார்க்குறது, நானும் லெட்சுமியும் சேர்ந்து எல்லாத்தையும் இறங்கி உள்ள வெச்சுட்டோம்.”

நடுவில் வெண்ணிறமாகவும் ஓரங்களில் பழுப்பு வெண்மையும் இருக்கும் சதுர அடையாளங்கள் வரிசையாக இருப்பது மனித எலும்புக்கூட்டை நினைவுபடுத்தியது. வெவ்வேறு காலகட்டத்து மனிதர்கள், மூன்று தலைமுறை நான்கு தலைமுறை அவர்களின் உறவு முறை மனிதர்கள் என்று நூறு புகைப்படங்களாவது இருக்கும். உறைந்து நின்றிருந்த மனிதர்கள், இன்று மறைந்து கைகளை மட்டும் அந்த செவ்வக வெளிச்சங்களிலிருந்து நீட்டுவது போன்ற பிரமை.

“சாப்பிடறியாம்மா, புளிசாதம் அங்கேந்து எடுத்து வந்தது, அப்புறம் நான் தயிர் சாதம் கிளறிவெச்சுட்டுப் போயிருக்கேன், அதுவும் இருக்கு.”

“எதுவும் வேண்டாம்மா.”

குளித்துவிட்டு, பையிலிருந்து சாதாரண உடையை அணிந்துகொண்டாள். அம்மாவின் செய்கைகள் அவள் தீவிரமாக ஏதோ ஒரு வேலையில் இருப்பது போன்றே இருந்தது.

இந்நேரம் சுண்டலோ அல்லது ஏதோ ஒன்றைப் பிரத்யேகமாகச் சமைத்திருப்பாள். நான் பசியில் இருக்கிறேன் என்கிற எண்ணம் அவளுக்குச் சரியாகப் புரியவில்லை என்று தோன்றியது. மதியம் தூங்கி எழுவதற்கு முன்பே சில கொறிக்கும் உணவுகளைச் சமைத்து வைத்திருப்பாள் என நினைத்துக்கொண்டாள். கீழே பாயை விரித்து அம்மாவின் அருகில் படுத்தாள். மொத்தமே இரு தலையணைகள் மட்டுமே இருந்தன, அதில் ஒன்று அவள் காலுக்காகப் பயன்படுத்துவதாக இருக்கும். அம்மாவின் வாசனை ஃபேன் காற்றில் அவள் நாசியின்மேல் அலைந்தது போலிருந்தது. அதீதமான வியர்வையின் நாற்றம் அடித் தொண்டையைக் கரித்தது. அசதியில் மெல்லத் தூக்கம் அவளைத் தள்ளிக் கொண்டிருந்தது. இருந்தாலும் அம்மாவிடம் பேசவேண்டும் போலிருந்தது. எதுவும் உடனே நினைவிற்கு வரவில்லை. “பெரியண்ணிக்குக் கர்ப்பப்பை பிரச்சனைன்னாங்களே இப்ப எப்படி இருக்குமா?”

“இப்ப பரவாயில்லமா, இன்னும் ஆபரேஷன் பண்ணிக்கல.”

முக்கியமான சில விஷயங்களைப் பற்றி உரையாட வேண்டும் என மனம் நினைத்தபோது அம்மாவின் குறட்டை அவள் நினைப்பையும் மீறி ஒலித்தது. அம்மா அதற்குள் தூங்கிவிட்டாளா அல்லது நடிக்கிறாளா? எப்படித் தூக்கம் வந்தது. அவற்றில் ஓர் அலட்சியம் இருப்பதாக நினைத்து நடுங்கிக்கொண்டிருந்தாள்.

அம்மாவிற்குப் பதினாறு வயதில் திருமணம் நடந்தது. நாற்பத்தி மூணு வயதில் பாட்டியும் ஆகிவிட்டாள். இந்த வீட்டிற்கு வரும்போது பெரிய கூட்டம் ஒன்று இருந்ததாகச் சொல்வாள். அப்பா, மூன்று கொழுந்தன்கள், இரு நாத்தனார்கள், கணவனை இழந்த ஓர் அத்தை அங்கிருந்தாள். அப்புறம் மாமா, மாமி, தாத்தா. வீடு எந்நேரமும் கல்யாணம், விருந்து, வளைகாப்பு, காதுகுத்து என்று ஒருபக்கமும் மரணம், கருமாதி என்றும் ஒருபக்கமாக நிகழ்ந்து கொண்டிருந்ததாகச் சொல்வாள். “எல்லோருக்கும் குளிச்சு முடிஞ்சு, சமைச்சுப் போட்டு, பாத்திரம் கழுவி, துணி துவைச்சுச் போட்டா நாள் முடிஞ்சிடும். ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை இருக்கும். ஒரு மாசத்துக்கு ஒன்னா மாத்திக்குவோம். ஆனா நா பெரிய மருமகங்கிறதால எல்லாம் நா சொல்றபடிதான். நீ என்ன அமெரிக்காவுல போய் வாழ்ற, நான் இங்க இருந்த இருப்புக்கு நீ புரிஞ்சுக்க இன்னோரு ஜென்மம்தான் உனக்கு வேணும்.”

அம்மாவிடம் தினம் கதை கேட்பாள், பழைய வாழ்க்கைக் கதைகளில் இருக்கும் சுவாரஸ்யம் அவளுக்குக் குறைந்ததேயில்லை. அம்மாவின் குரலில் மென்மையும் நடுக்கமும் இருக்கும், அந்த இரண்டுமே இல்லை இன்று.

தூக்கம் பிடிக்காமல் அவள் எழுந்துகொண்டாள். அமர்ந்தபடி அவளைக் கூர்ந்து கவனித்தாள். அவள் தூங்கிவிட்டாள் என்பதை ஏனோ நம்பமுடியவில்லை. ஓசை எழுப்பாமல் மெதுவாக நடந்து கொல்லையில் இருந்த கல்லில்போய் அமர்ந்துகொண்டாள்.

பக்கத்துவீடுகளின் சமையல் வாசனை மூக்கை முழுதும் ஆக்கிரமித்திருந்தது. பருப்பு சாம்பார் கூடவே ரசத்தின் வாசனை.

நாலரை மணிக்கு அம்மா மெதுவாக எழுந்து வந்தாள். தூக்கத்தில் எழுந்த வந்த அவளது முகம் ஒருபக்கம் வீங்கியதுபோல விகாரம் கொண்டிருந்தது.

“எதாவது சாப்பிடறியா புவனா?” என்றாள்.

உண்மையில் அவளுக்கு நல்ல பசி. ஆனால் அவள் எதையும் சொல்லவில்லை. எதைச் சொல்வதும் அவளுக்கு தன்மீதே நம்பிக்கையற்று இருந்தது. அம்மா, கணவன் செத்து வருஷாப்திகம் முடியாமல் விசேஷங்களுக்கு போககூடாதுதானே என்று அவள் கேட்க நினைத்தாள். ஆனால் அதற்கு என்ன பதில் சொல்வாள் எனத் தெரிந்திருந்தது. டீபோட அம்மா உள்ளே போய்விட்டாள்.

பாத்திரங்கள் எடுத்து அடுக்கும் ஓசைகள் கேட்டன. கேஸ் ஸ்டவ்வில் பாலை ஏற்றும் ஒலியும் கேட்டது.

“வருஷாப்திகம் முடியும் முன்னாடி எங்கேயும் போக்கூடாது, ஆனா முடியுதா? இங்கயிருக்குற தனிமைல எங்கேயாவது போவணும்னு தோணுது, அதுக்குத் தகுந்தாப்போல லெக்ஷ்மியும் வந்துட்டா, அப்படியே சும்மா போய்ட்டு வந்துடறது, ஊருக்கு வேற வேலையில்ல எதாவது சொல்லிக்கிட்டே இருக்கும்,” அவளே சொல்லிக்கொண்டிருந்தாள்.

“ஏம்மா தனியா இருக்கணும்? அண்ணா அண்ணிகூட சென்னையில இருந்துக்க.”

“தனியாதான் இருக்கு, தனிம புடிக்கலன்னு சொல்லமுடியாதும்மா, என்னதான் இருந்தாலும் மருமக, பொண்ணு ஆவாளா சொல்லு?”

அம்மா மனம் திறந்து எதாவது பேசினால் போதுமென்றிருந்தது.
“போரடிச்சா என்னம்மா, அமெரிக்கா வந்துடு,” புவனா எழுந்து பின்கட்டு வழியாக அடுப்படி வந்தாள். அம்மா பக்கத்தில் வந்து நின்றுகொண்டாள். டீத்தூளை ஸ்பூனில் இருந்து ஆட்காட்டிவிரலால் மெதுவாகத் தட்டிப் பாலைச் சுற்றி விழும்படி செய்தாள்.

“குழந்தைங்கள ஒரு குஜராத்தி பாட்டிதான் பாத்துகுறா, குழந்தைகளுக்குத் தமிழைத் தவிர குஜராத்தியும் இங்கிலீசும்தான் வருது. நானும் அவரும் காலைல போனா நைட்டுதான் வாரோம். உனக்கும் குழந்தைகளோடு நேரம் போகும். குளிர் காலத்துல மட்டும்தான் உனக்குக் கொஞ்சம் கஷ்டம், மத்தபடி ரொம்ப நல்லாவேயிருக்கும் ஊரும் கிளைமேட்டும்.”

திரும்பிப் புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்தாள் அம்மா. “நான்தான் வந்திருக்கேனே, வர்றத்துக்கு என்ன, அங்கேயே இருக்குறதுதான் கஷ்டம். இங்க அப்பா செஞ்சுகிட்டிருந்த சீட்டு புடிக்கிற வேலை இருக்கு, இன்னும் புது சீட்டு ரெண்டு போடணும்னு கேட்டுக்கிடே இருக்கிறாங்க, அதுக்கு கலெக்ஷனுக்கு போகணும், அதுக்கு ஆள் இருக்கு, ஆனா அத எழுதி வைக்கணும்ல, மாசம் ஒருமுறை ஏலம் வேற போடனும்ல.”

சீட்டு என்பதை இப்போது புதிதாகச் சொல்கிறாள் எனத் தோன்றியது. வேகமாகப் பேசியதில் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது அம்மாவிற்கு. பொதுவாகப் பேசும் பேச்சுகளில் இருந்த கலகலப்பு அதில் இல்லை எனத் தோன்றியது.

அம்மா எங்கோ தூரத்தில் நிற்கிறாள். அவள் நிற்கும் தூரம் அவள் விரும்பிய தூரம்தான். எல்லோரும் விளையாடும் விளையாட்டை அம்மா நிறுத்திவிட்டாள். அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணிகள், கணவன், அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இவர்களுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் விளையாட்டிலிருந்து அம்மா விலக்கிக் கொண்டிருக்கிறாள், இனி எந்த நிலையிலும் விளையாட்டில் இணையப் போவதில்லை எனத் தோன்றியது.

வருஷாப்திகம் நாள் வருவதற்குள் முக்கிய வேலை இருக்கிறது எனச் சொல்லிவிட்டு அமெரிக்கா கிளம்பினாள் புவனா.

– சொல்வனம், இதழ்-236, டிசம்பர் 12, 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *