அப்பாவின் அன்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2020
பார்வையிட்டோர்: 7,196 
 

அப்பா என்றாலே மகன்களுக்கு ஒத்துப்போவதில்லை, இங்கேயும் அப்படிதான்….

சந்திரன் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சுறுசுறுப்பாக தன் வேலைகளை செய்யத்துவங்கினான். ஒரு பக்கம் குக்கர் விசில் சத்தம் இன்னொரு பக்கம் மிக்சியில் அவன் தேங்காய் துருவலை போட்டு அரைக்கும் சத்தம் என வீட்டில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தான்.

அவனுக்கு ஒரே மகன் செல்வா வயது 7, நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். சந்திரனனின் மனைவி விமலா இறந்த தினம் இன்று …

ஆம் அவன் மனைவி போன வருடம் மர்மகாய்ச்சல் வந்து இறந்துவிட்டாள். விமலாவுக்கு அம்மா இல்லை அப்பா மட்டும் தான், அவரும் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். உடன் பிறந்தவர்கள் இல்லை, அதுபோல் சந்திரனுக்கும் பெற்றோர் இருவரும் இல்லை. எனவே தனியாக தன் மகனை வளர்த்துவருகிறான். செல்வாவுக்கு சாப்பாடு என்றாலே வெறுப்பு தான். அவனை சாப்பிட வைப்பதற்குள் சந்திரன் யுத்தமே நடத்தவேண்டும் பாவம். அவனை குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி அவனை பள்ளிக்கு அனுப்பிவைத்தபின் சந்திரன் அலுவலகத்துக்குக் கிளம்பவேண்டும். அவனுக்கு இது ஒன்னும் கஷ்டமான விஷயம் இல்லை. ஆனால் செல்வா தான் சொல்வதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு செயல் படுத்தவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான்.

செல்வாவுக்கு அம்மா இல்லை என்ற ஏக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் தான் என்னவோ அவன் அப்பாவின் பாசத்தை பிரிந்துகொள்ளவதேயில்லை.

சந்திரன் வேலைகளை முடித்துவிட்டு வந்தான். அப்பவே மணி 7 ஆகியிருந்தது.

‘செல்வா எழுந்திரு, மணி 7. நீ குளிச்சிட்டு அம்மாவ கும்பிடனும். வா சீக்கிரம்’.

‘அய்யோ இவர் வேற எழுந்திரு எழுந்திருனு உசிர வாங்குறாருப்பா… சே’

சலிப்புடன் எழுந்தான், ப்ர்ஷ் பண்ணி முடித்துவுடன் சந்திரன் பால் டம்ளரை எடுத்து நீட்டினான்.

‘அப்பா எனக்கு பால் வேண்டாம், பூஸ்ட் தான் வேண்டும். ப்ளீஸ்பா ..’

‘இல்லப்பா இன்று அம்மா நினைவுநாள் இல்லையா அதனால பால் தான் சாப்பிடனும், குடிச்சிட்டு நல்லபிள்ளையா குளிச்சிட்டு ஓடிவா’….

அவன் இஷ்டமில்லாமல் குடித்துவிட்டு குளித்துமுடித்து அம்மா போடோவை பார்த்து,

‘அம்மா, ஏன்மா இந்த அப்பாகிட்டபோய் என்னை விட்டுட்டு போய்டீங்க நான் வேண்டாம்னு சொன்னா அதை பண்ணச் சொல்றாரு. சாயங்காலம் வந்தா உடனே படி படினு சொல்றாரு. நைட் ஆயிடுச்சுனா சீக்கிரம் தூங்கு, காலையில சீக்கிரம் எழுந்துக்கனும்னு சொல்றாரு’ என தன் மனதில் உள்ளதை தன் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன் அம்மா இருந்தாலும் அதையேதான் சொல்லியிருப்பாள், செய்திருப்பாள் பாவம் அது அவனுக்கு தெரியவில்லை.

சந்திரனும் வந்தான் இருவரும் சாமி கும்பிட்டு சாப்பிட்டுக் கிளம்பினர். செல்வாவை பள்ளியில் விட்டுவிட்டு அவன் அலுவலகத்துக்குப் போனான்.

சந்திரன் அலுவலகத்திலும் அன்று பணி கொஞ்சம் அதிகமாக இருந்தது.

மாலை ஆனதும் செல்வா பள்ளியிலிருந்து வருவதற்கு ஆட்டோ ஏற்பாடு பண்ணியிருந்தான் சந்திரன். அவன் வந்ததும் பக்கத்து வீட்டு விஜயாக்காவிடம் கொஞ்ச நேரம் இருப்பான். சந்திரன் வந்ததும் அவனை தன் வீட்டுக்கு அழைத்து வருவான்.

சந்திரன் எது சொன்னாலும் செல்வாவுக்கு விருப்பம் இருக்காது ஆனாலும் அப்பாவுக்காக செய்வான்.

செல்வாவுக்கு இது செய்தால் நன்றாக இருக்கும் அது செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணினானே தவிர அதில் செல்வாவுக்கு சந்தோஷமா என்று அவன் ஒரு நாளும் யோசித்ததில்லை.

செல்வா நூடுல்ஸ் வேண்டுமென்றால் அது ஆரோக்கியமல்ல என்று சேமியா சமைத்துக்கொடுப்பது, அவன் சாக்லெட் விரும்பினால் பல்லுக்கு கெடுதி என்று விருப்பமில்லா ஒன்றை அவனுக்கு வாங்கி தருவது, இப்படியே அவன் வாழ்க்கை ஓடியது.

அவன் படிப்பிலும் சந்திரன் சொல்படியே ப்ரொபஷன் கோர்ஸ் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தான் செல்வா.

செல்வா ஒரு வேண்டுகோள் விடுத்தான், நான் நீங்க சொல்றபடி குரூப் எடுத்தால் வெளியூரில் (தூரமாக) இருந்து படிக்க அனுமதித்தால் மட்டுமே நீங்க சொல்லும் படிப்பை எடுத்து படிப்பேன்.

சந்திரனும் சரி என்று ஒப்புக்கொண்டு கல்லுரியில் சேர்த்துவிட்டு வந்தான்.

சந்திரன் இங்கிருந்து பணம் மட்டும் அனுப்பி வைப்பான் போனில் நலம் விசாரித்துக்கொண்டான். முதல் வருடம் முடிந்து லீவுக்கு நான் ஊருக்கு வரவில்லை இங்கே அருகே நண்பன் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறேன் என்று சொன்னான்.

சந்திரனுக்கு மனம் கேட்கவில்லை, தன் மகனை காணாமல் ஏங்கி போனான். அதனால் நாம் சென்று அவனை பார்த்துவிட்டு வருவோம் என்று கிளம்பினான். அவன் நண்பன் முகவரி ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் இப்போது அது உபயோகமாகிவிட்டது என்றெண்ணி கிளம்பினான்.

அங்கே…..

விஷ்வா : ‘டேய் அப்பா உன்னை தேடுவாருல்ல. நீ ஊருக்கு போகாம இங்க இருக்க முடிவு பண்ணிட்டடா.’

செல்வா : ‘இல்லடா அங்க போன ஓவரா பாசத்தை காண்பிக்கறேன் பேர்வழின்னு என்னை இம்சை படுத்துவாரு. அதான் நான் போகலை.’

‘எனக்கு விருப்பம் இருக்கா இல்லையானு பார்க்காம எதையாவது சொல்லிட்டு செஞ்சுட்டு இருப்பாரு. So நான் போகல. இங்க என் விருப்பம் போல ஜாலியா இருக்கப்போறேன். இனிமேல இப்படித்தான் நான் ஊரு பக்கம் போகப்போறதில்ல. அப்பா தொந்தரவு இல்லாம ஜாலியா இருக்கப்போறேன்.’

அவர்கள் பேசியதை கேட்ட சந்திரன் அப்படியே ஆடிப்போய்விட்டார். நாம செல்வாவுக்கு பிடிக்குமென செய்தது எல்லாம் இப்படி அவனுக்கு விருப்பமில்லாமல் போய்விட்டதே என்று மிகவும் வருந்தினார். இத்தனை நாட்களாக செல்வாவிற்கு பிடிக்காததை திணித்துக்கொண்டிருந்திருக்கிறேன். அவனை இனிமேல் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. அவனுக்கு நல்லது எது கெட்டது எது என தெரிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிட்டது. அவன் சந்தோஷமாக இருக்கட்டும் என எண்ணி அங்கிருந்து கிளம்பினான்.

மறுநாள் எப்பவும் போல வேலைக்கு கிளம்பினான் சந்திரன்…

ஆனால் வேலையில் அவனால் கவனம் செலுத்தமுடியவில்லை. வேலையில் பிழை வந்துகொண்டே இருந்தது. இதையே நினைத்துக்கொண்டு மெஷினை இயக்கும்போது கை தவறி மெஷினில் குடுத்துவிட்டான். உடனே மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார்கள், ஆனால் கையை இழக்கும் நிலை உருவாகியது. அவனை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள கூட ஆள் இல்லை, அவனது நண்பர்களும், விஜயாக்காவும் ஒத்தாசையாக இருந்து கவனித்துக்கொண்டார்கள். அவன் இதை தன் மகனுக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை. மேலும் அவனால் பணியில் தொடர்ந்து இருக்கமுடியவில்லை. எனவே தனது வேலையை விருப்ப ஓய்வு பெற்று வந்தான். இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் வாடகை பணமும், கம்பெனியில் இருந்து தந்த பணமும் வைத்து தனது மகன் கல்லூரி படிப்புக்கு பணம் அனுப்பிக்கொண்டிருந்தார்.

சந்திரன் தனியாக சின்ன ஒரு குடிசை வீட்டில் தனது காலத்தை கழித்துவந்தான். அந்த வீட்டை சுற்றி சின்னதாக தோட்டம் போட்டு அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, மனதில் உள்ள கவலையை போக்கிக்கொண்டிருந்தார். கல்லூரி முடியும் வரை தன் மகனுடன் தொடர்பில் இருந்தார். அதன்பிறகு அவர் அவனை தொடர்பு கொள்ளவில்லை. இருந்தபோதிலும் செல்வாவை அவர் மறக்கவில்லை.

அங்கே செல்வா…..

அவனுக்கு விருப்பமில்லா படிப்பு என்றாலும் ஒரளவுக்கு படித்து முடித்து அவனே வேலையும் தேடி வேலையில் இருந்தான். அவனுக்கு நாம அப்பா இல்லாமல் சந்தோஷமாக பிடித்த வேலையை செய்து கொண்டு, பிடித்த நேரத்தில் தூங்கி, பிடித்த நேரத்தில் எழுந்து, பிடித்ததை வாங்கி சாப்பிட்டு, அங்கே செல்வா செல்வாவாக இருந்தான். தன் அப்பாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என ஒரு நினைப்பு கூடவராமல் அவனது காலம் ஓடிக்கொண்டிருந்தது. அவன் அப்பாவை நினைக்கிறானோ இல்லையோ அம்மாவை நினைப்பான். அப்படி ஒரு நாள் அவன் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவனது கனவில் அவன் அம்மா வந்து ‘அப்பாவை போய் பாரு என்று சொல்வது போல் தோன்றியது’. உடனே எழுந்து அமர்ந்தான். ‘அப்பா எப்படி இருக்கிறாரோ தெரியவில்லை. அவரிடமிருந்து போன் வரவேயில்லையே, நானும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வருகிற வீக் எண்டு அப்பாவை போய் பார்த்துவிட்டு வருவோம்’ என எண்ணினான்.

அதே போல் அவன் ஊருக்கு கிளம்பினான் ….

அவன் வீட்டிற்கு போனால் அங்கே வேறு யாரோ இருந்தார்கள். அவர்களிடம் சென்று

‘’சந்திரனு ஒருத்தர் இருந்தாரே எங்கே.

அவர் அதோ அங்கே தெரியற ஒரு குடிசைவீட்டுல இருக்காருபா.

சரி தேங்க்ஸ்.’’

வெளியே வந்தவன், அங்கே வந்த விஜயாக்கவை பார்த்தான்.

‘’ஆண்டி எப்படி இருக்கீங்க. ஓ நம்ம செல்வா தம்பியா கண்ணு, நான் நல்ல இருக்கேன். நீ எப்படிபா இருக்க. என்ன இந்த பக்கம் வரவேயில்லை. இப்பதான் உனக்கு உங்க அப்பா நியாபகம் வந்துச்சா…’’

‘ஆமா வேலை கிடைச்சது அப்படியே பிஸியாயிட்டேன். சாரி ஆண்டி.’

‘உங்க அப்பா உன்னை நினைக்காத நேரமில்ல உனக்காக வாழ்ந்தவரு, நீ நல்லா இருக்கனும்னு பாடுபட்டவர். உனக்கு ஒன்னுனா துடிச்சு போய்டுவாரு, உன்னை உள்ளங்கையில தாங்கினவரு, இப்போ தனியா கெடக்குறாரு. சரி இப்பவாவது வந்தியே போ போய் பாரு. அப்பாவ இனிமே நீ தான் நல்லா பார்த்துக்கனும் டா தங்கம்.’

விஜயாக்கா சொன்னவுடனே தான் செய்த தவறை எண்ணி கல்லாகி கிடந்த மனது கொஞ்சம் லேசாக கனிய ஆரம்பித்தது. கண்ணில் கண்ணீர் வர……

அவன் வேகமாக வந்து அப்பா என்று கட்டிப்பிடித்தான். அவன் அப்பாவும் செல்வா வந்துட்டியா என்று தன் மகனைத் தழுவினான்.

அதன்பிறகு தான் செல்வா உணர்ந்தான் தன்னை ஒரு கரம் தான் தழுவியது, இன்னொரு கரம் தழுவவில்லை என்று. என்னப்பா இது என்னாச்சு, சந்திரன் தனக்கு நடந்ததை சொல்ல செல்வா ஓ’வென அழுதான்.

‘எனக்காக வாழ்ந்த என் அப்பாவை இந்த நிலைமையில் இருக்கும்போது நான் உதவக்கூட இல்லையே. உன்னைப்பற்றி தவறாக நினைத்துக்கொண்டு உன்னை தவிக்கவிட்டேனே. எனக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மன்னிப்பு கிடையாது.’

‘உன் அன்பை நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை, நீ என்னை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்கிறாய் என நினைத்துக்கொண்டு, நீ காட்டிய உண்மையான பாசத்தை, அன்பை நான் மதிக்க தவறிவிட்டேன். முதலிலிருந்தே அப்பா என்றால் கண்டிப்பு /கன்ட்ரோலர் என தவறாகவே புரிந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு அப்பா…’ என்று ஓ’வென கதறி அழுதான்.

‘’சரிவிடுப்பா அப்பா பிள்ளை உறவென்றால் இப்படித்தான், அழாதே’’ என்று கூலாக பதில் சொன்னார்.

‘அப்பா இனிமேல் உன்னைவிட்டு நான் போகமாட்டேன். நான் தான் உன்னை கவனித்துக்கொள்வேன். நீ இங்கிருந்து தனியாக கஷ்டபட வேண்டாம். நாம சேர்ந்தே இருப்போம்’ என்று தன்னுடன் கூட்டிச்செல்ல தயாரானான் செல்வா. இதுவரை அவர்கள் வாழா வாழ்வை வாழ போகிறார்கள். இருவர் மனதிலும் சந்தோஷம் பொங்க ஒருவரையொருவர் பாசத்தோடு தழுவினர்.

அம்மா தன் குழந்தையை பத்து மாதம் தான் சுமக்கிறாள். ஆனால் அப்பாவோ தன் வாழ்நாள் முழுவதும் சுமக்கிறான். எத்தனை செல்வா வந்தாலும் அப்பா என்ற உறவை புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும் தங்கள் பிரியத்தை, தங்கள் வாழ்நாளை தன் பிள்ளைகளுக்கு கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள். சந்திரன் மாதிரி அப்பாக்களுக்கு என் கதை சமர்ப்பணம்.

கடலில் குளிக்கும் போது அந்த தண்ணீர் நமக்கு பிடிக்காது, உப்பு கரிக்கும். ஆனால் அதே கடலை கரையில் இருந்து நாம் பார்க்கும் போது எவ்வளவு அழகானதாகத் தெரியும். அதுபோல் தான் கஷ்டத்தின் உள்ளேயிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தால் மேலும் மேலும் அது தொந்தரவாகத்தான் தெரியும். நாம் கொஞ்சம் வெளியே வந்து அதை ஆராய்ச்சி பண்ணவேண்டும். அப்பத்தான் தீர்வு கிடைக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *