ஒரு அதிகாலை மரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 45,781 
 

1

மிகவேகமாக அந்த திருப்பத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்.எதிரே வந்த கண்டெய்னர் லாரி கண்ணுக்கு தெரிந்து சுதாரிப்பதற்குள் ‘படார்’ என்று என் மீது இடித்து ஆறடிக்கும் குறையாமல் பறந்து மின்கம்பத்தில் மோதி…….

கண் விழித்து பார்த்தேன். உடல் முழுவதும் வேர்த்திருந்தது. கெட்ட கனவு. இருட்டில் கட்டிலை தடவி மொபைலை எடுத்து மணி பார்த்தேன். ஐந்து முப்பது. இனிமேலும் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. முழுவதும் கலைந்துவிட்டது. அறையை விட்டு வெளியே வந்தேன். மழை பெய்து கொண்டிருந்தது. மழை என்று சொல்ல முடியாது. சாரல். காற்றும் இதமாக உடலை ஒரு தடவை ஊடுருவி நடுக்கியது. இந்த குளிருக்கு ஒரு சிகரட்டாவது புகைக்கவேண்டும். இதுதான் கடைசி. பதினைந்தாவது சபதம். பால்கனியில் நாற்காலியை இழுத்து அமர்ந்தேன். சிகரட்டை பற்ற வைத்து ஆழமாக ஒரு பஃப். மறு நிமிடம் உடல் முழுவதும் இதமான ஒரு சூடு பரவி மூளையை உசுப்பியது. ஒரு கையில் சிகரட், கொஞ்சம் கொஞ்சமாக உயிரிழந்து கொண்டிருக்க மறு கையில் ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோவின் ‘தி மெலங்கோலி ஆப் ரெஸிஸ்டன்ஸ்’ நாவலுடன் உட்கார்ந்தேன். புத்தகத்தோடு புகையும் வெளியே மழையும் ஒரு ரம்மியமான சூழலை உருவாக்கி கொண்டிருந்தன. ‘He stopped in the half light, smiling in confusion and since Ezter was all too azquinted with his pathetic and overwrought’

மொபைல் அலறியது. காலையிலேயே யாராக இருக்கும்?

‘Duraisingam Calling’.

எஸ் ஐ துரைசிங்கம்.

‘சொல்லுங்க துரை’

‘சார். நைட் டூட்டில இருந்தேன். காலைலே ஒரு போனு. ஏதோ மர்டர் கேஸ் மாதிரி தெரியுது. நீங்க…’

சே. என்ன வேலை இது. அதிகாலையில் பிணத்தின் முகத்தில் விழித்துக்கொண்டு.

‘சரி. எந்த ஏரியால?’

‘ரஹ்மத் நகர்..நம்ம ஸ்டேஷன் கன்ட்ரோல்ல தான் வருது. விசாரிச்சு பாத்துட்டேன்.’

‘சரி ஒண்ணு பண்ணுங்க. வண்டி எடுத்துட்டு. நேரா என் வீட்டுக்கு வாங்க,.உடனே போயி பாத்துடலாம்.’

‘ஓகே சார்’

அவசர அவசரமாக மீதி பஃப் இழுத்தேன்.நிம்மதியாய் சிகரட் கூட பிடிக்க முடியவில்லை. போலீஸ் வேலையில் காலைக்கடனை கூட தவணை முறையில் தான் கழிக்க வேண்டியுள்ளது. இஸ்திரி போடாமல் இருந்த காக்கி உடையை எடுத்து அணிந்து கொண்டேன். பிஸ்டல். வேண்டாம். தேவையில்லை. வேகுவேகமாக கிளம்பி வெளியில் வரவும் துரைசிங்கம் காரில் வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

சாரல் விடவில்லை.

‘என்ன கேஸ் துரை?’

‘தெஃப்ட் அண்ட் மர்டர் சார். அந்த அம்மா தடுக்க முயற்சி பண்ணிருக்காங்க.’

‘பொண்ணா? சே. உயிர விட நகை பெரிசா போச்சுயா. எத்தன பவுனு?

‘அது விவரமா தேர்ல சார். புருஷங்காரன் போன் பண்ணிருந்தான்.’

‘ஓ. ஓகே.எஃப்.ஐ.ஆர். போட்டாச்சா?’

‘இன்னும் இல்ல சார்.போன்ல தகவல் வந்துச்சு’.

‘ஏன் திருப்பி திருப்பி அதே தப்ப பண்றீங்க. சரி. முத போனவுடனே ரிபோர்ட் எழுதி கைய்யெழுத்து வாங்குங்க.’

2

வண்டி ரஹ்மத் நகருக்குள் நுழைந்தது. ‘Western Hills’. பன்னிரெண்டு மாடி அபார்ட்மெண்ட். இரண்டு மூன்று கார்கள் வெளியே நின்றிருந்தன. எலைட் சொசைட்டி மக்கள்.

‘உங்களுக்கு போன் பண்ணவர் பேரு என்ன?’

‘ரகுராம்னு சொன்னார் சார்’

வீடு முதல் மாடியில் இருந்தது. மேலே ஏறினேன். வாசலில் இரண்டு பேர் இருந்தனர்.

‘ரகுராம்?’

‘எஸ்..’

முப்பது வயது மதிக்கலாம். ஆறடிக்கு குறையாமலிருந்தான். முகத்தில் இரண்டு நாள் தாடி படர்ந்திருந்தது. நூறு ரூபாய் கேட்டால் கூட எதுவும் கேட்காமல் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுப்பான் போலிருந்தான். திடீரென்ற ஒரு சோகம் ஒரு அதிர்ச்சி முகத்தில் ஒட்டியிருந்தது.கண்கள் சிவந்து வீங்கியிருந்தன.

‘இன்ஸ்பெக்டர், R3 ஸ்டேஷன், காலைல போன் பண்ணினது நீங்கதானா?
‘ஆமாம்’. குரல் கம்மியது.

‘இறந்த லேடி உங்களோட….’

‘எஸ். என்னோட மனைவி தான். கொன்னுட்டாங்க.

‘அதுக்குள்ள அந்த முடிவுக்கு எப்படி வந்தீங்க மிஸ்டர் ரகுராம். ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்ணலையா?’

கேவி ஆழ ஆரம்பிதிருந்தான். காத்திருந்தேன்.சில நிமிடத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தான்,

‘ஒரு தடவ நீங்களே பாத்தா இத கேக்க மாட்டீங்க சார். முழுசா கழுத்த வெட்டிருக்கான். பேச்சு மூச்சு இல்ல. சின்ன கீறல் பட்டா கூட தாங்கமாட்டா.’ மீண்டும் குலுங்கினான்.

‘உள்ளே போலாமா?

உள்ளே சென்றோம். வரவேற்பறையில் ரகுராம் கல்யாண கோலத்தில் நின்றிருந்தான். அருகில் மனைவி. சில சாமான்கள் சிதறி கிடக்க ரகுராம் முன்னே சென்றான். பெட்ரூம் மூடப்பட்டு கதவிடுக்கு வழியாக ரத்தம் கசிந்திருந்தது. ரகுராம் திறந்துவிட்டான்.

மிக கோரமான காட்சி. சற்று முன் மணக்கோலத்தில் போட்டோவில் பார்த்தவள் கண் திறந்து நாக்கு வெளியில் தள்ளி உடைகள் கலைந்து கழுத்தில் வெட்டபட்ட இடம் தெரியாமல் ரத்தத்தில் மூழ்கியிருந்தாள். உடலை சுற்றி முழுவதும் ரத்தம். ஒரு வட்டமாக அவளை உள்ளடக்கியிருந்தது. உறையவில்லை. அதிகமான சேதம். பெட்ரூம் முழுவதும் பொருட்கள் கலைந்திருந்தன. .ஓர் உயிர் போராட்டத்திற்கான அறிகுறிகள் அறை முழுவதும் இரைந்திருந்தன.

ஒரு உயிரின் விலை மிக சுலபமாக நிர்ணயிக்கபட்டிருக்கிறது. வெளியே ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.

‘துரை. உடனே சாக் மார்க் பண்ணிட்டு போட்டோஸ் கொஞ்சம் எடுத்திடுங்க. க்விக். மத்ததெல்லாம் ஸ்டேஷன்ல பாத்துக்கலாம்.பீரோ உடைந்திருந்ததை கவனித்தேன்.

‘எவ்ளோ மிஸ்ஸிங்?

‘ஒரு ஒன் லாக் காஷ்.இருபது பவுன் நகையும் காணோம்.’

இன்னும் சில கேள்விகள் கேட்க நினைத்து காலமும் சூழ்நிலையும் உகந்ததல்ல என்று அவதானித்த்து கிளம்பினேன்.

‘ரகு. இந்த நேரத்தில உங்கள நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பல. உங்க ஃபார்மலிடிஸ் முடிச்சிட்டு ஸ்டேஷன் வந்தீங்கண்ணா ப்ரோசீட் பண்ண ஈஸியா இருக்கும்.’

படிக்கட்டில் கீழிறங்கும்போது ஆம்புலன்ஸ் ஆசாமிகள் ஸ்ட்ரெச்சருடன் மேலேறிக்கொண்டிருந்தனர்..

3

ஸ்டேஷன். மதிய நேரம். சற்று கண் அசந்திருந்த நேரம் துரை உள்ளே வந்தார்.

‘வாங்க துரை. எல்லாம் முடிஞ்சுதா?’

‘துரை சின்சியர் ஆசாமி. இருபது வருடம் டிபார்ட்மண்டில் இருக்கிறார். நேர்மையான மனிதர். எள் என்றால் எண்ணையாக நிற்பவர். ஒரு காரியத்தை கன கச்சிதமாக முடிப்பவர்.

‘பாரென்ஸிக் தகவல் அனுப்பி அவங்க வந்து எல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்க. நாளைக்கு தகவல் கிடைச்சிடும். ஆஸ்பிட்டல்ல டெத் கண்பர்ம் பண்ணிட்டாங்க. அடாப்சி ரிப்போர்ட் சீக்கிரம் வந்துடும். நம்ம கிரிமினல்ஸ் டேட்டாபேஸ் மட்டும் எடுத்து பாக்கணும் சார்.’

‘ஆமா துரை. இது என்னமோ எனக்கு ஓபன் அண்ட் ஷட் கேசாத்தான் தோணுது. சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்.நம்ம டேட்டாபேஸ் செக் பண்ணியாச்சா?’

‘இன்னும் இல்ல சார்.பட் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நம்ம பைல்ல நகைக்காக கொலை பண்ணவங்க லிஸ்ட் இல்ல.திருட்டு, வழிப்பறி தான் இருக்கும். இந்த மாதிரி கேஸ் கொஞ்சம் ரேர் தான்.’

‘ஒருவேல இப்படியிருக்கலாமா துரை?’

‘நீங்க என்ன சொல்றீங்கணு புரியலயே சார்.’

‘யாராவது அவள அடைய ஆசபட்டு அவ ஒத்துழைக்காம கொலை பண்ணியிருக்கலாம். இல்ல கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு வட நாட்டு கூலி வேல செய்றவன் கொஞ்ச நாள் நோட்டம் விட்டுட்டு வந்து திருடிட்டு போயிருக்கலாம் இல்லையா?’

‘இருக்கலாம் சார்.எல்லா கோணத்திலேயும் யோசிச்சி பாக்க வேண்டிருக்குது.’

‘அதுக்கு முன்னாடி நம்ம லிஸ்ட்ல இருக்கிற கிரிமினல்ஸ் எத்தன பேர் இருக்காங்கணு கொஞ்சம் பாத்துடுங்க.

‘டன் சார். செக் பண்ணிட்டு உங்களுக்கு நாளைக்குள ரிப்போர்ட் ரெடி பண்ணிடுறேன்.’

4

அடுத்த நாள் காலையில் ரகுராம் அழைத்திருந்தான். மொபைலை எடுத்து மீண்டும் அவனுக்கு அழைத்தேன்.

‘சொல்லுங்க ரகு’.

‘என்னோட சில கடமைகள் முடிச்சிருக்கேன். இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்குது. அதுக்குள்ள உங்க விசாரணைக்கு என்னால ஆன உதவிய செய்யனும் சீக்கிரமா அவன கண்டுபிடிக்கணும் சார், தப்பிக்க விட்டுடாதீங்க.’

ஆவேசமாக பேசினான். .மூச்சு வாங்கியது.

‘பதட்டபட வேண்டாம் ரகுராம்.குற்றவாளிய எப்படியும் கண்டுபிடிச்சே தீருவோம். நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் எங்களுக்கு ரொம்ப முக்கியம், கொஞ்சம் ஸ்டேஷன் வர முடிஞ்சா உதவியா இருக்கும்.’

‘உடனே கிளம்பி வரேன்’ என்றான்.

அடுத்த அரை மணியில் அவன் ஸ்டேஷனுக்கு வரவும் சம்ப்ரதாய விசாரணை துவக்கினேன். களைப்பாயிருந்தான்.

‘வாங்க ரகுராம்.இந்த சந்தர்பத்துல உங்களுக்கு நான் தொல்லை கொடுக்க முடியாது. பட் நீங்க குடுக்கிற ஒவ்வொரு தகவலும் நாங்க குற்றவாளிய நோக்கி ஒவ்வோர் அடியா எடுத்துவைக்க உதவும்னு நீங்க புரிஞ்சிக்கணும். அதனால கொஞ்சம் யோசிச்சி நிதானமா பதில் சொல்லுங்க.’

ஆமோதிக்கும் விதமாக தலையை ஆட்டினான்.

‘‘சம்பவம் நடந்த போது நீங்க என்ன பண்ணிட்ருந்தீங்க?

‘வழக்கம் போல நான் ஜாகிங்க் போயிருந்தேன். எப்பவும் ஜாகிங்க் முடிச்சிட்டு ஷட்டில் விளையாடுறது என்னோட ஹாபிட். அப்போ ஜாகிங்க் முடிச்சிட்டு ஷட்டில் ஆட கோர்ட்டுக்கு கார்ல போய்ட்ருந்தேன்.அப்போதான் அகிலா எனக்கு போன் பண்ணினா.’

‘என்ன சொன்னாங்க?’

‘யாரோ உங்க பேர சொல்லிட்டு கதவ தட்ராங்க. இந்த நேரத்துல திறக்கலாமானு கேட்டா.’

‘மணி என்ன இருக்கும்?’

‘சரியா அஞ்சு முப்பது.’

‘நீங்க யாரையாவது வர சொல்லியிருந்தீங்களா?’

‘இல்ல சார். நான் யாரையும் கூப்டல. கதவ திறக்க வேண்டாம்னு சொன்னேன். But அதுக்குள்ள போன் கட் ஆய்டுச்சு.’

‘நீங்க அப்போ எங்க இருந்தீங்க?’

‘ஷட்டில் கோர்ட்டு வாசல்ல நின்னுட்ருந்தேன்.’

‘ஷட்டில் பிரக்டிஸ் எங்க பண்றீங்க?’

‘ஷெனாய் நகர்ல. ‘YMCA Club’.

‘இங்கிருந்து அவ்ளோ தூரமா? ஒரு பத்து கிலோமீட்டராவது இருக்குமே.?’

‘ஆமா. என்னோட ரெஸிடென்ஸ் முன்னாடி அங்க தான் இருந்தது. அதனால அங்கயே தொடர்ந்து போற மாதிரி ஆய்டுச்சு.’

‘நீங்க அதன் பிறகு என்ன செஞ்சீங்கனு சொல்ல முடியுமா?’

‘போன் கட்டானவுடனே திருப்பி ரெண்டு முறை போன் பண்னினேன். ஆன ரிங் போய்ட்டிருந்தது. அவ அட்டன் பண்ணல. சோ வீட்ல ஏதோ தவறு நடக்குதுனு உள் மனசுல தோணுச்சு. உடனே வண்டியெடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.’

‘அப்போ எத்தன மணியிருக்கும்?’

‘அங்கேந்து அரை மணிநேரம் ஆகும். சரியா ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துட்டேன்.’

‘என்ன பாத்தீங்கன்னு சொல்ல முடியுமா?’

‘நான் வீட்டுக்குள்ள நுழையும்போது எதுவும் வித்தியாசமா தெரியல. மேல வந்து பாக்கும்போது கதவு திறந்திருந்தது. அகிலா அகிலான்னு கூப்டுட்டே உள்ள போறேன். ஒரு சத்தமும் இல்ல, பெட்ரூம்ல வந்து பாக்கும்போது ரத்தத்துல…..’

அழ ஆரம்பித்திருந்தான். மனைவியை இழந்து ஒரே நாள் ஆகியிருக்கும் அவனிடம் இப்படி துருவி துருவி கேட்கும்பொழுது அழாமல் இருந்தால் மட்டுமே அதிசயம். சில நிமிடம் பொறுத்து,

‘உங்க அபார்ட்மண்ட் வாட்ச்மேன் யாரும் கிடையாதா?’

‘இருக்காங்க சார்.நான் உடனே கீழ இறங்கி போயி பார்த்தேன். வாட்ச்மேன் உக்காந்துட்டுருந்தான். அவன்ட்ட கேட்டப்போ யாரும் வரலனு சொன்னான். பேருக்காக மட்டுமே நாங்க அவன வாட்ச்மேனா வச்சிருக்கோம்.மத்தபடி அவன் உதவுறது இல்ல.’

‘இப்போ இருக்கிற எல்லா அபார்ட்மெண்டுலேயும் ஏறக்குறைய அப்டிதான் இருக்காங்க.’

‘பிசினஸ்ல ஏதாவது போட்டி, பிரச்சினைக்கள் ஏதாவது உண்டா?’

‘அந்த மாதிரி எனக்கு எதுவும் இல்லை சார்’.

‘ஒருவேல நீங்க யாரையாவது ஏமாத்தி காண்ட்ராக்ட் முடிச்சிருக்கலாம். இல்ல இது மாதிரி வேற ஏதாவது ஒரு குறுக்கு வழில… நீங்க இந்த விஷயத்துல உண்மைய சொல்றது நல்லது.’

‘பிஸினஸ்னா பிரச்சினை வருங்றதை ஒத்துகிறேன். ஆனா எனக்கு கவுரவம் ரொம்ப முக்கியம். நான் நஷ்டப்பட்டா கூட தாங்கிப்பேன். ஆனா என்னால அவமானத்த தாங்கிக்க முடியாது. அதனாலயே நான் எந்த குறுக்குவழிக்கும் போறதில்லை. சோ இந்த கோணத்துல இனிமே நீங்க கவனத்த செலுத்த வேண்டிய அவசியம் இருக்காதுனு தோணுது.’

‘ஓகே. உங்களோட தகவலுக்கு நன்றி. பட் அத நாங்க முடிவு பண்ணிக்றோம். நீங்க உங்க போன் நம்பர் கொடுத்துட்டு போங்க. அப்டியே உங்க மனைவியோடதயும் கொடுத்துடுங்க.’

‘ஓகே சார். உங்களுக்கு வேற ஏதாவது தகவல் வேணும்னா கூட கேளுங்க. ஒத்துழைப்பு தரேன். குற்றவாளி தப்பிக்கக்கூடாது.

அவன் போன வழியை பார்த்துக்கொண்டிருந்தேன்.

5

அன்று மாலையே துரை அடாப்சி ரிபோர்டுடன் வந்தார். ‘டெத் பை பிரோப்யுஸ் ப்ளீடிங்க் அண்ட் டிப்லீஷன் ஆப் ஆக்ஸிஜன் சப்ளை ……’ கத்தி அறுத்ததால் ரத்தம் அதிகம் இழந்து மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழப்பு. ரிப்போர்ட்டில் அதிக விஷயம் பேறும் என்று தோன்றவில்லை.

‘பாரென்ஸிக் ரிப்போர்ட் என்ன சொல்லுது?’

‘அது கொஞ்சம் வேடிக்கையாயிருக்குது சார். வீட்டுக்குள்ள கிடைச்ச ரேகைகள் எல்லாமே அகிலா மற்றும் ராம் கை ரேகைகளோட ஒத்து போகுது தவிர வேற ரேகைகள் எதுவும் தெளிவா கிடைக்கல. வந்தவன் கொஞ்சம் கவனமா இருந்திருக்கான்.இல்லேன்னா ஒரு தடயமும் கிடைக்காம கொலை செய்றது அவ்ளோ சுலபமா படலை.’

‘அது சரிதான் துரை.இப்போ நம்ம வேலை இன்னும் அதிகமாயிருக்கே. யாரு என்னணு எப்படி கண்டுபிடிக்றது?’

‘எனக்கும் அதுதான் புரியல சார்.’

‘ஒண்ணு பண்ணுங்க.ராம் அண்ட் அகிலாவோட போன் நம்பர் நம்மட்ட இரூக்குது. ரெண்டு நம்பரையும் எடுத்துக்கோங்க.உடனே அந்த மொபைல் ஆபீசுக்கு போயிட்டு இந்த ரெண்டு நம்பரையும் கொடுத்துடுங்க. தரவா செக் பண்ணி எந்த டைம்ல யாருக்கு கால் போய்ருக்கு, எப்போ என்னங்க்ற எல்லா விவரத்தோட வாங்க. ஒருவேள அது நமக்கு வேற க்ளூ கொடுக்றதுக்கு சான்ஸ் இருக்குது.’

‘ஒகே சார். உடனே அத செய்து முடிக்கிறேன்.’

துரை கிளம்பியவுடன் அந்த அபார்ட்மெண்டுக்கு ஒரு முறை சென்று விசாரித்து வரலாம் என்று தோன்றியது. மாலை நேரமாதலால் எல்லோரும் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்திருக்கலாம். அந்த அப்பர்ட்மெண்டிலுள்ள ஒவ்வொரு வீட்டில் விசாரித்தால் கூட எதேனும் ஒரு க்ளு கிடைக்க வாய்ப்புள்ளது. வண்டி எடுத்து கொண்டு நேராக அந்த அபார்ட்மெண்ட் கிளம்பினேன்.

ஒரு கொலை நடந்ததனால் ஏற்படும் அதிர்ச்சி அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தெரிந்தது. ஆள் இருந்தாலும் கூட மயான அமைதியில் காட்சியளித்தது. கீழே சென்று பார்த்தேன். மொத்தம் நாற்பது வீடுகள்.எல்லாருடைய பெயரும் பக்கத்தில் தபால் பெட்டியோடு. இரண்டு வீடுகள் காலியாயிருந்தன. மீதி முப்பெத்தெட்டு வீடுகள். அதில் ஒன்று ராமுடையது. ஆக பத்து மாடி ஏறி முப்பெத்தேழு வீடுகளில் விசாரணை செய்ய வேண்டும்.

கீழ் தளத்தில் கதவை தட்டினேன். ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவர் திறந்தார்.

‘மிஸ்டர் பூஷண்?’

‘யெஸ். சொல்லுங்கோ.’

‘இன்ஸ்பெக்டர்.அகிலாவோட கொலை விஷயமா விசாரிக்கணும்.’

‘ஆமா.கேள்விபட்டேன். அந்த நேரத்தில நாங்க ஊர்ல இல்லை. பரிதாபமான விஷயம் தான்.’

‘அகிலா வீட்டுக்கு யார் யாரெல்லாம் வருவாங்க? அவங்கள பத்தி உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்ல விரும்பினா சொல்லலாம்.’

‘அந்த பொண்ணு நல்ல பொண்ணு. நல்லா சிரிச்சு பேசும். மரியாதையா நடந்துக்கும்.. ராம் பத்தி எது தெரியல.அவர் காலைலேயே போய்டுவார். நைட்டு லேட்டத்தான் வருவார்.’

‘அவங்க வந்து எத்தன நாள் ஆச்சு?’

‘சுமாரா ஒரு வருஷம் ஆகிருக்கலாம்.’

‘சந்தேகிக்கற மாதிரி ஏதாவது சம்பவம்?’

‘அப்படி எதும் தெரியல சார். ஆனா அந்த பொண்ணுக்கு தனக்கு ஒரு குழந்தை இல்லைன்ற வருத்தம் இருந்துச்சு. அது சம்பந்தமா கோயில் குளம் ஆஸ்பத்திரினு சுத்தி வந்துச்சு.’

மேலும் சில கேள்விகளை முடித்து கொண்டு அடுத்தடுத்த பிளாட்டுக்களில் விசாரித்தேன். எவருக்கும் ராம் அகிலா அதிக பரிச்சயமில்லை என்றே கூறினர் தவிர வேறு ஒன்றும் உபயோகமாக தேறவில்லை. அசதி மேலிட விசாரணயை முடித்து கொண்டு கிளம்பினேன்.

6

ஸ்டேஷன் திரும்பிய மறுநாள் இந்த கொலை சம்பவத்தின் கோணமே முற்றிலும் மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. துரை செல்பேசி அலுவலகத்தில் திரட்டிய தகவல்களோடு வந்திருந்தார்.

‘இந்த ரிபோர்ட்ல உள்ள தகவல்கள் கொஞ்சம் விநோதமான எண்ணத்தை வரவழைக்குது சார்.’

‘என்ன விஷயம் துரை?’

‘இதுல எல்லாமே நார்மலா இருக்குது. ஒன்ன தவிர.’

‘சுத்தி வளைக்காம சொல்லுங்க’

‘அகிலா கடைசியா கால் பண்ணினது ராமுக்கு. அப்போ ராம் இருந்தது அண்ணா நகர்ல. அகிலா இருந்தது ரஹ்மத் நகர்ல. பட் ரெண்டு பேரோட காலும் ஒரே டவர்லேந்துதான் போயிருக்கு.’

‘புரியலயே’

‘அதாவது நாம ஒருத்தர கால் பண்ணினா முதல்ல நம்ம ஏரியா டவருக்கு தகவல் அனுப்பும். அங்கேருந்து நாம அழைக்கிற நபரோட ஏரியா டவருக்கு சமிக்ஞை போகும். அந்த டவர் மூலமாத்தான் அவருக்கு அழைப்பு வரும். ஆனா இங்க அகிலா ராமோட விஷயத்தில ரெண்டு பேரோட டவரும் ஒண்ணு. அல்லது அகிலாவும் ராமும் கால் வரப்ப ஒரே ஏரியாலத்தான் இருந்துருக்காங்க.’

‘அதாவது கொலை நடந்தப்போ ராம் அதே ஏரியாலத்தான் இருந்துருக்கார். நம்மகிட்ட பொய் சொல்லிருக்கார்.’

‘ஆமா சார். அது தான் எனக்கு சந்தேகமா இருக்குது.’

‘ரகு ராம் ஏன் நம்மகிட்ட பொய் சொல்லணும். ஒருவேள இந்த ரெண்டு ஏரியாவுக்கும் ஒரே டவர் இருக்கலாமில்லையா?’

‘அதையும் விசாரிச்சி பாத்துட்டேன் சார். சிட்டிக்குள ஒரோர் கிலோமீட்டருக்கும் ஒரு டவர் வச்சிருக்காங்க.அண்ணா நகர் பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்குது.’

‘நீங்க சொல்றத பாத்தா ராம் மேல சந்தேகப்படவேண்டிருக்கும் போலேயே?

‘ஆமா சார். என்னோட அபிப்ராயமும் அதான்..’

‘பட் அகிலாவோட கொலைல ராமுக்கு என்ன லாபம் கிடைக்க முடியும்? மோடிவ் ஏதாவது இருக்கணும் இல்லையா?’

‘மோடிவ் எண்ணங்கறத விசாரணை செஞ்சு பாத்தா தான் தெரியும்.’

‘அப்போ ஒண்ணு பண்ணுங்க துரை. இந்த கோணத்துல நம்ம அலசி பாக்கல. இதையும் ஒரு தடவ முயற்சி பண்ணி பாத்திடலாம். ராமுக்கு உடனே போன் போட்டு ஸ்டேஷனுக்கு வரவழைங்க. விசாரணைன்ற பேர்ல ஒரு ரெண்டு மணிநேரம் அவன இங்க உக்கார வைங்க. நான் அதுக்குள்ள அந்த பிளாட்டுக்கு போயிட்டு ஏதும் க்ளு கிடைக்குமானு பாத்துட்டு வரேன்.’

‘ஒகே சார். இப்பவே அவனுக்கு கால் பண்றேன்.’

7

கேஸ் ஸ்வாரஸ்யமாகிருந்தது. ஷண நேரத்தில் இவ்வளவு திருப்பம் அடையும் என்று அனுமானிக்கவில்லை. ராமை சந்தேக்கிக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட மனதில் தோன்றாதது ஆச்சர்யத்தை அளித்தது.

அபார்ட்மெண்ட் வாசலை அடைந்தேன்.துரைக்கு ஒரு முறை கால் செய்து ராம் ஸ்டேஷனில் இருக்கிறானா என்று உறுதி செய்தேன்.வீட்டை அலசுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். வீட்டின் வாசலில் நின்றிருந்தேன். கையோட கொண்ட வந்த மாஸ்டர் கீ உதவியுடன் ஐந்து நிமிடத்தில் கதவு க்ளிக் என்றது. போலீஸ்காரனும் சில நேரங்களில் திருடன் ஆக வேண்டியுள்ளது.

உள்ளே சென்றவுடன் ராம் மற்றும் அகிலாவின் திருமண போட்டோ கண்ணில் பட்டது. அகிலாவின் புன்னகையில் இன்னமும் உயிர் இருந்தது. அகிலா மட்டும் தனியாக இருந்த போட்டோவில் மாலை போட்டு பொட்டு வைக்கபட்டிருந்தது. ஊதுவத்தி கொளுத்தி வைத்த அடையாளம் சாம்பலாக பறைசாற்றியது.

அன்று உயிர் போராட்டத்தில் சிதிலமடைந்திருந்த வீடு இன்று ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தது. எடுத்தவை எடுத்த இடத்தில் ஒரு நேர்த்தி இருந்தது. என்னவென்று தேடுவது என்று புரியவில்லை. தேடாமல் ஏதும் கிடைப்பதில்லை. கேள்வி கேளாமல் பதில் இல்லை. பதில் இங்கே தான் இருக்கிறது.தேடும் விதத்தில் தேடினால் பதில் கிடைக்கும் என்று தோன்றியது.

மேஜையை முதலில் திறந்து பார்த்தேன்.சில ஹோட்டல் பில், வண்டி சாவி, சில ஆடியோ சிடிக்கள், சாக்ஸ், பிரஷ், பேனா, ரிப்பன், பொட்டு, சீப்பு இத்யாதி இத்யாதிகள். மற்றுமொரு மேஜையை திறந்து பார்த்தபொழுது ராமின் மெடிக்கல் ரிபோர்ட்ஸ். ஒரு ஃபைல் முழுக்க. கிடைத்தது. படித்து பார்த்ததில் ஏதும் புரியவில்லை. ஜி‌எச் பிரபாகரிடம் காட்டினால் தெரிந்துவிடும்.

மூன்று பீரோக்கள் கண்ணில் தென்பட்டன.கொண்டு வந்திருந்த கீ உதவியுடன் நோண்டியதில் சிறிது சிரமம் எடுத்து க்ளிக்கியது. மேல் தட்டில் புடவைகள். கீழ் தட்டில் சில வேஷ்டி சட்டைகள் மற்றும் கல்யாண ஆல்பம் காண கிடைத்தது. புரட்டி பார்த்தேன். வித்தியாசமாக ஒன்றும் தென்படவில்லை. அதே பள பள புடவைகள், பிளாஸ்டிக் மாலைகள், பிளாஸ்டிக் பூக்கள்,பிளாஸ்டிக் சிரிப்புகள். திரும்பி வைத்தேன்.

கீழ் தட்டின் அடியில் ஒரு லாக்கர் தென்பட்டது. சிறிய சிரமத்திற்கு பின் விடுவித்து கொள்ள ஒரு டைரி அகப்பட்டது. விலையுயர்ந்த டைரி.
‘அகிலா. அகிலாவுக்கு மட்டும். வேறு யாரேனும் திறந்தால் தலையில் கொம்பு முளைத்து நாய் போல் குறைத்து இறக்க நேரிடும்.’ அதன் கீழ் ஒரு பொம்மை சிரித்தது. பத்திரபடுத்திக்கொண்டேன்.

போன் சிணுங்கியது. துரை.

‘சார், ஆஃபிஸ்ல்ல அர்ஜெண்ட் மேட்டெர்னு ராம் கிளம்பி போய்ட்டான். அவன் நேர வீட்டுக்கு வந்தாலும் வர வாய்ப்பிருக்குது.’

‘கிளம்பி போயி எவ்ளோ நேரம் ஆச்சு?’

‘ஒரு ரெண்டு நிமிஷம் இருக்கும். உடனே உங்களுக்கு போன் பண்ணிட்டேன்.’

‘ஓகே. உடனே கிளம்பிடுறேன்.’

ராம் வருவதற்குள் கிளம்ப வேண்டும்.பூட்டியவை பூட்டியது போல் உள்ளதா என்று ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்தேன்.போலீஸ் சந்தேகப்படுகிறது என்பது எள்ளளவும் அவனுக்கு தெரியக்கூடாது என்பதில் அதிக கவனம் இருந்தது.. இல்லையெனில் சாட்சிகள் கலைக்க முற்படக்கூடும். கீழிறங்கி வண்டியெடுத்து கிளம்பும் வரை ராம் வரவில்லை.

8

நேராக டாக்டர் பிராபகர் வீட்டிற்கு சென்றேன். டாக்டர் வீட்டில் இல்லை. ராமுடைய ரிபோர்ட்ஸை அவர் மனைவி கையில் கொடுத்து விட்டு பிரபாகரிடம் போனில் தகவல் தெரிவித்து கிளம்பினேன்.

வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்த டைரியை படிக்க யத்தேனித்தேன். என் கேள்விக்கான பதில் அதில் கிடைக்கும் என்ற ஒரு உள்ளுணர்வு உணர்த்தியது. கையில் எடுத்தேன்.

‘அகிலா. அகிலாவுக்கு மட்டும். வேறு யாரேனும் திறந்தால் தலையில் கொம்பு……’

பக்கத்தை திருப்பினேன். முத்து முத்தான கையெழுத்துக்கள்.

20/06/2006
கல்லூரியில் முதல் நாள். என் வாழ்க்கையிலே அல்ஜிப்ராவும், பெர்முடெஷனும் திரும்பி வரக்கூடாது என்ற சபதம் எடுத்த எனக்கு பி எஸ்சி கணிதம். இது நியாயமா கடவுளே.?

25/06/2006
ஹாஸ்டல் உப்புமாவும், பிரெட்டும், சப்பாத்தி போன்ற பூரியும் என்ன சாப்பாடோ? வீட்டில் இருக்கும்போது அம்மாவின் சாப்பாட்டை திட்டியிருக்கிறேனே. ஸாரி அம்மா. ஐ மிஸ் யு சோ மச்.

02/12/2006
காலேஜ் ஆண்களின் பார்வை என் மேல் அதிகம் படர்வதை கவனிக்கிறேன். சில சமயம் நெருடலாகவும் சில சமயம் பெருமையாகவும் இருக்கிறது.அழகாய் இருக்கிறாய் அகிலா. இன்னும் இந்த புருவத்தை கொஞ்சம் திருத்தி கொள்ளாலாம்.எண்ணை குறைத்து கொள்.

10/05/2007
ஷீலா இன்னும் சில பேருடன் சிகரெட் எடுத்து கொண்டு மொட்டை மாடி சென்றோம். ஒரு முறையாவது புகைக்கலாம் என்று ஆசை. இல்லை ஒரு குறுகுறுப்பு. ஷீலா இதை எப்படி கடையில் கேட்டு வாங்கினால் என்று தெரியவில்லை. ‘மல்பேரோ’ என்று போட்டிருந்தது. வத்தி குச்சி ஒன்று எடுத்து….

கல்லூரி சமபந்தபட்டவை தவிர்த்து இன்னும் சில பக்கங்கள் தவ்வினேன்.

12/11/2007
அப்பா இன்று போன் செய்திருந்தார். படித்து முடித்த கையுடன் கல்யாணம் என்று. எனக்கு கல்யாணம் வேண்டாம். அது என் சுதந்திரத்தை முழுதுமாக அழிக்கும் நச்சு. உங்களிடம் இதை சொல்ல எனக்கு தைரியம் இல்லை அப்பா.

03/04/2008
இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். ராமோ சோமோ என்று ஒருத்தர். பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு விட்டு சொல்கிறோம் என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் படக்கென்று என்னை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். என் சம்மதத்திற்காக அவர்கள் வெய்ட்டிங்.அகிலா. நீ என்ன சொல்லப்போகிறாய்?

15/06/2008
இன்றிலிருந்து என் அடையாளம் மாறுகிறது. அகிலா கிருஷ்ணனாகிய நான் அகிலா ரகுராமாக மாறிய நாள். பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒரு ஆணின் பெயரை தன் பெயர் பின் சுமக்கும் மற்றுமொரு சராசரி பெண். என்னுடைய அடையாளம் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா?, அகிலா, உனக்கு தெரியுமா?

20/06/2008
ரகு, எதற்காக பயந்தேனோ, அதற்கு நீ அவசரபடவில்லை. உன் இஷ்டம், நான் காதிருக்கிறேன் என்கிறாய். யு ஆர் சோ ஸ்வீட். என்னை அன்பாக பார்த்துக்கொள்கிறாய்.கையில் வைத்து தாங்குகிறாய். ம் என்றாலும், க் என்றாலும் என்ன என்கிறாய். என் வரம் நீ.. உன் உயிர் நான்.

25/06/2008
கிங்ஃபிஷரில் முதன் முறையாக வானத்தில் மிதக்கிறேன் என் அன்பு கணவனோடு. பனி விழும் காஷ்மீர். ஆறு நாட்களும் குளிர் வாட்டிவிட்டது.

20/07/2008
இன்று சடகோபன் திருமணத்திற்கு சென்றோம். ரகுராமின் மைத்துனன். எனக்கு பிடித்த பாசந்தி. ம்‌ம்‌ம் ராம், என்னை எப்போது கட்டிக்கொள்வாய்.? எனக்கு பயம் போக்கு.

25/07/2008
நாளை நம் முதல் இரவு. முழுதாக நாற்பது நாள் கழித்து. முழுதாக என்னை எடுத்துக்கொள்.

26/07/2008
ஒகே ராம். உன் தலைவலி முன் என் சந்தோஷம் முக்கியம் இல்லை.

27/07/2008
இன்றும் தலைவலி.

30/07/2008
இன்று வரை இல்லை.

31/08/2008
நன்றாகத்தானே இருக்கிறாய் ராம்.நான் நெருங்கும்போது மட்டும் தலை வலியும் உடல் சரியில்லாமல் போவதும் ஏன்? நான் அழகில்லையா? பிடிக்கவில்லையா? ஒருவேளை…?

05/09/2008
ராம், ஆர் யு ஆல்ரைட்? ஏதாவது பிரச்சினை என்றால் என்னிடம் மனம் விட்டு பேசு. நான் உன் மனைவி

10/09/2008
ராம். டாக்டரை பார்க்கலாம்.

12/09/2008
முதல் முறையாக ராம் என் மேல் கோபப்பட்டார். உன்னிடம் உள்ள குறையை மறைக்க என்னிடம் கோபப்படுவது என்ன நியாயம்? ஐ வில் வெயிட் ஃபார் யு ராம்.

20/09/2008
நான் நெருங்கினாலே உனக்கு கோபம் வருகிறது. உன் குறையயை நான் பெரிதாக நினைக்கவில்லை ராம். ஒரு முறை டாக்டரை பார்க்கலாம்

05/11/2008
இன்று ஊர்ஜிதமாகியது. என் கணவன் ஆண்மையற்றவன். எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

12/11/2008
இப்போது என்ன செய்யப்போகிறாய் அகிலா? அப்பாவிடம் சொல்லலாமா? இல்லை பொருத்து பார்க்கிறேன்.

15/11/2008
ராமின் பார்வை முற்றிலும் மாறிவிட்டது. எந்நேரமும் கோபப்படுகிறார்.

16/12/2008
அவரோடு பேசி ஒரு மாதமாகிறது. இனிமேலும் என்னால் என் வாழ்க்கையை அழித்து கொள்ள முடியாது. நாளை உன்னிடம் கேட்கிறேன்.

17/12/2008
ராம் டைவர்ஸுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. டைவர்ஸ் செய்தால் ஊருக்கே தெரிந்துவிடும் என்று பயப்படுகிறான். யு ஆர் எ கவர்ட் ராம். உடலில் மட்டும் அல்ல. மனதாலும் நீ ஆண்மையற்றவன். உன் இயலாமையை மறைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணடித்திருக்கிறாய்.

18/12/2009
முதல் முறையாக கை நீட்டியிருக்கிறான் கயவன். உன்னை நான் சும்மா விடப்போவதில்லை.

19/12/2009
அப்பா, எனக்கு பயமாக இருக்கிறது. என்னை ரூமில் வைத்து பூட்டியுள்ளான். என்னிடம் மொபைல் கூட இல்லை.ஜன்னல் எல்லாம் சீலிடப்பட்டுள்ளன. சூரிய வெளிச்சம் கூட உள்ளே நுழைய முடியாது.அப்பா ப்ளீஸ் என்னை கூட்டி போங்கள்.

அதற்கடுத்த பக்கங்கள் காலியாகிருந்தன. டைரியை மூடி வைத்தேன். மொபைலில் அழைப்பு வந்தது.

‘ஹலோ சொல்லுங்க டாக்டர்.’

‘அந்த ரிபோர்ட்ஸ்ல என்ன தெரியணும் இன்ஸ்பெக்டர்?’

‘அது எல்லாமே ரகுராமொட ரிபோர்ட்ஸ். இவ்ளோ மெடிக்கல் ரிகார்ட்ஸ் எதுக்காகனு தெரிஞ்சிக்கணும்.’

‘ஜென்ரலா அத புரட்டி பாக்கிரப்ப, ரகுராம்ன்ற நபரோடா இம்போடன்சி பற்றி இருக்குது. அவர் அதற்கான ட்ரீட்மெண்ட் ரொம்ப காலமா எடுத்துட்டு வராருனும் தெரியவந்திருக்கு.’

‘ஓகே தேங்க் யு டாக்டர். வேற ஏதும் தேவைபட்டா உங்களுக்கு கால் பண்றேன்.’

ஆழ்ந்த யோசனையில் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

9

மறுநாள் துரை வந்து எழுப்பினார்.

‘சார் மணி எட்டாச்சு.. உடம்பு சரியில்லையா?’

‘அப்படி இல்லை துரை/ராத்திரி தூங்க நேரமாய்ட்டு. இந்த டைரியை ஒரு தடவ படிச்சு பாருங்க. நான் ஏதும் முடிவுக்கு வரதுக்கு முன்னாடி ஒரு செகண்ட் ஒபினியன் எடுத்துறது நல்லதுனு தோணுது.’

‘என்ன டைரி சார்’

‘நீங்களே படிச்சு பாருங்க’

துரை படிக்க ஆரம்பித்த பின் குளித்து கிளம்ப ஆயுத்துமானேன்.

மீண்டும் வந்து பார்த்த பொழுது துரை தலையில் கை வைத்து யோசித்து கொண்டிருந்தார்.

‘என்ன துரை?’

‘இந்த கோணத்துல நம்ம ஆரம்பத்திலயே சிந்திக்காம விட்டது தப்பு சார்.’

‘Truth is always disguised’ கேள்வி பட்டதில்லை.?

‘நான் எங்க சார் அதெல்லாம்? ‘எவ்ளோ அழகா பிளான் பண்ணிருக்கான் பாருங்க?’

‘ஆமா துரை. தன்னோட குறை வெளியுலகத்துக்கு தெரிய கூடாதுன்னு நினைச்சிருக்கான். பட் அப்டி நினைச்சவன் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?’

‘கல்யாணமே பண்ணாம இருந்த கூட இந்த சந்தேகேம் எல்லாருக்கும் தோணுமே?

‘மே பி.’

‘யாரோ வெளியாள் வந்து கொலை பண்ணின மாதிரி ஜோடிச்சிருக்கான்.’

‘எஸ். வீட்டுக்குள்ளேயே இருந்துட்டு அகிலாவோட கழுத்த அறுத்துருக்குறான். கோல்ட் பிளட் மர்டர். அப்புறம் இந்த போன்ல அலிபி கிரியேட் பண்ணிருக்கான். கதவ ஓடைச்சிட்டு கார எடுத்துட்டு வெளிலே போயிட்டு, ஷட்டல் ஆடிட்டு வர மாதிரி காமிச்சிருக்கிறான். கிளெவர்.ஆனா மன நிலை பாதிக்கபாட்டவனாத்தான் இருக்கணும்.’

‘அவன கையும் களவுமா பிடிச்சி விசாரிக்கணும் சார். அப்பத்தான் உண்மை தெரியும்.’

மொபைலை எடுத்து ராமின் நம்பரை அழைத்தேன்.

‘ஹலோ, சொல்லுங்க சார். கண்டுபிடிச்சிடீங்க்ளா?’

‘கிட்டதட்ட கண்டுபிடிச்ச மாதிரி தான். ஒரு சின்ன விசாரணை இருக்கு. நீங்க வரனுமே?’

‘என்ன விசாரணை சார்.எனக்கு தெரிஞ்ச எல்லா விஷயமும் சொல்லிட்டேனே?’

‘அது சரி. ஆனா ஒரு முக்கியமான எவிடன்ஸ் கிடைச்சிருக்கு’
‘என்னது சார்’

‘அகிலாவோட டைரி கிடைச்சிது.அதுல உங்கள ஆண்மையற்றவர்னு சொல்லிருக்காங்க. அது உண்மையா?.’

‘……..’

மறு பக்கம் மௌனம் சாதித்தது.

‘ஹலோ ராம்?’

‘…..’

மீண்டும் மௌனம்.

‘ஹலோ’

‘சொல்லுங்க.’

‘அது உண்மையா? அப்படி உண்மையா இருக்கும் பட்சத்தில் உங்கள நான் விசாரணை பண்றது இன்னும் அவசியமாகுது.’

‘’அது உண்மை இல்லை.உங்களால கொலை குற்றவாளிய பிடிக்க முடியாது’

‘டொக்க்’ மறு முனையில் மொபைல் துண்டிக்கபட்டது.

துரை, ‘சார் கொஞ்சம் அவசரபட்டுட்டோமொனு தோணுது’

‘உடனே வண்டியெடுங்க துரை. அவனோட ஃப்ளாட்டுக்கு போலாம்.

அடுத்த அரை மணியில் அவன் பிளாட்டில் வண்டி நிற்க, தட தடவென்று இறங்கி ஓடினேன். ராமுடைய கார் அங்கேயே நின்றிருந்தது. எங்கும் செல்லவில்லை. முதல் மடியில் அவன் பிளாட்டுக்கு சென்றேன்.கதவு திறந்திருந்தது.

‘ராம்.’

அரவம் இல்லை. உள்ளே சென்று பார்த்தேன். எல்லா அறைகளும் திறந்திருக்க யாரும் இல்லை. ராமுக்கு கால் செய்தேன். சோபாவில் இருந்த போன் அலறியது. ராம் இல்லை.

‘உங்களுக்கு யார் வேணும்?

‘ராம் வேணும். நீங்க?’

‘பக்கத்து பிளாட்.ராம் இப்போதான் மேலே போனத பாத்தேன்.’

லிஃப்டை நெருங்கி அழுத்தினேன். வேலை செய்யவில்லை. வேறு வழி இல்லை. பத்து மாடி ஏறத்தான் வேண்டும். மூச்சிறைக்க வேகமாக ஏறினேன். கதவை திறக்கவும் ராம் தெரிந்தான். என் சூழ்நிலை இக்கட்டாகியிருந்தது.ராம் பாரப்பட் சுவரில் ஏறி நின்று கொண்டிருந்தான்.

‘ராம் வேண்டாம்.இறங்கி …’

சொல்லி முடிப்பதற்க்குள் ராம் அங்கு இல்லை.

எட்டி பார்த்தேன். ஒரு நூற்றைம்பது அடி உயரம் இருக்கலாம். கை கால் படர்ந்து ஒருக்களித்து படுத்தது போல் தெரிந்தான்.
கீழிறங்கி கூட்டத்தை விலக்கினேன்.

உடலை சுற்றி முழுவதும் ரத்தம். ஒரு வட்டமாக அவனை உள்ளடக்கியிருந்தது. உறையவில்லை. அதிகமான சேதம ஏற்பட்டு அகிலாவை நியாபகபடுத்தினான்.

துரையை பார்த்தேன்.

‘இவனோட முடிவ பாக்கும்போது நாம அவசரபடலைனுதான் தோணுது துரை’.

ஆமோதிப்பது போல் தலையாட்டினார்.

திரும்பி ப்ளாட்டை பார்த்தேன்.ஜன்னல் வழியே அன்று பார்த்த போட்டோவில் அகிலா முகம் தெரிந்தது. மாலை ஊதுவத்தியுடன். அகிலா புன்னகைத்து கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *