உள்ளம் உன் வசமானதடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 17, 2023
பார்வையிட்டோர்: 4,549 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

தேம்பாவனியை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்த மிருணா லிங்கத்திடம் விபரங்களைக் கூற, ஓய்ந்து போனார் அவர்.

உடனே மீனாவிற்கு ஃபோன் செய்து அவளை வீட்டிற்கு வரும்படிக் கூறியவரில் முகத்தை வேதனைகளும் துயரங்களும் வெகுவாய் ஆக்ரமித்திருந்தன.

முகிலன் அவரிடம், “நீங்க மனசைத் தளர விட்டுடாதீங்க மாமா தைரியமா இருங்க! தங்கவேலு அண்ணன் என்ன சொல்றாருன்னு பாப்போம். நாங்க இங்கே இருந்தா அவங்களுக்கு தர்மசங்கடமா இருக்கும். நீங்களே மெதுவா அவங்களோட பேசுங்க. கலந்து பேசி முடிவெடுங்க! நாங்க இல்லத்துக்குப் போய் குழந்தையைப் பாத்துட்டு அப்புறமா ஃபோன் பண்றோம்” என்று எழுந்தான்.

உடனே எழுந்த மிருணாவும், அம்மா அப்பாவிடம் விடைபெற்றுக் கிளம்பினாள்.

நேரே கருணை இல்லத்திற்குச் சென்று ஃபாதர் மைக்கேலைப் பார்த்தபோது, சர்ச்சின் பின்புறமிருந்த கல்லறைக்கு எஸ்தரின் உடலை இப்போதுதான் எடுத்துச் சென்றதாகக் கூறி, அவர்களை அங்கு அழைத்துச் சென்றார்.

மனிதனின் இறுதித் துயிலிடம்!

சுற்றிலும் மனித இனத்து முதாதையரின் உறங்கலுக்கு சாட்சியாய், நிறையக் கல்லறைகள்!

இறந்த பின்னும் மண்ணுக்குள் புதைந்திருக்கும் மனித சாட்சியாய், கர்ப்ப மேடுகளாகப் புதைமேடுகள்!

அங்கு மழைக்காலச் சகதிகளோடு, சலனமின்றி சகலமும் நோக்கும் காகக் கூட்டம்.

‘நாளை, இம்மாதிரி ஒரு சுடலையே நான் துயில் கொள்ளப் போகும் இடமோ?’ என்று தோன்றும் போதே, சட்டென்று அவளுக்குள் ஒரு குளிர் பரவியது.

அங்கு எஸ்தரின் இறுதிச் சடங்குகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இறந்த பிறகும் விடாமல் தொடர்கின்ற சுமைகளாய், அந்தப் பெண்ணின் உடல்மேல், மலர் மாலைகள் தெரிந்தன.

பரிதாபத்துடன் அவளைப் பார்த்துவிட்டு, கருணை இல்லத்துக்குள் சென்று குழந்தையைப் பார்த்தனர்.

தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தை, தங்கவேலுவை சிறிதாய் செய்து வைத்தாற் போல் கைகால்களை அசைத்து, மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தது

உயிர்ப் பூக்களைப் பறிக்கின்ற காலனுடைய கரங்களின் வேகம் அதிகரித்தாலும், காலச் செடியில் மீண்டும் துளிர்த்துக் கொண்டே இருக்கும் ஜனனத் தளிர்களுக்கு எடுத்துக்காட்டாய், எஸ்தரும், அந்தக் குழந்தையும்!

சிறு குழந்தைகளைத் தூக்கிப் பழக்கமில்லாததால், இளஞ் சிவப்பு நிறத்திலிருந்த பிஞ்சு விரல்களை மெதுவாக வருடியபோது, அவளுக்கு மென்பஞ்சு மேகத்தைத் தீண்டியதைப் போல் ஒரு உணர்வு!

திடீரென்று குழந்தை அழ ஆரம்பித்ததும், மனதில் ஒருவித வெற்றிடம் வந்து வியாபித்தது..

ஆயாம்மா சிற பாட்டிலில் புகட்டிய பாலை பசியுடன் தடுமாறியபடி குழத்தை உறிஞ்சிக் குடித்தபோது, மீனாவின் குழந்தை ‘ஹம்சத்வனி’யே உயிர் பெற்று வந்ததைப் போல் ஒரு சிலிர்ப்பு வந்தது.

திரும்பி வரும்போது, இறுக்கமாயிருந்த மனதிற்குள் துன்ப வடுக்கள் அதிகம் தெரிந்தன.

அன்று மாலையில் வீட்டிற்கு ஃபோன் செய்து பேசிய போது, லிங்கம் ரிசீவரை மீனாவிடமே கொடுத்து விட்டார்.

“அக்கா! இப்பத்தான் நீ தைரியமா இருக்கணும். உனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். முக்கியமா, நீதான் இதிலே ஒரு நல்ல முடிவா எடுக்கணும்” – மிருணா தைரியமூட்டும் குரலில் கூறினாள்.

”மிருணா! எனக்கு உன் மாமாயோட கேரக்டர் முன்னாடியே தெரியும். உனக்குத் தெரியக்கூடாதுன்னு நான் நினைச்சிட்டிருந்தேன். நீ நேரிலேயே பாத்திருக்கே. எப்படித் துடிச்சிருந்திருப்பே! உன் கணவருக்குத்தான் நான் இப்ப நன்றி சொல்லணும். நீ போய் அந்தக் குழந்தையைப்ப பாத்தியா?”

மீனாவின் குரலிலேயே அவள் பெரிதும் ஓய்ந்திருப்பது தெரிந்தது.

“நான் பார்த்தேன்க்கா… அப்படியே மாமா மாதிரியே இருக்கு! எனக்கு அந்த நிமிஷம் என்ன தோனுச்சு தெரியுமா? நம்மளை விட்டுத் தொலைஞ்சு போன குழந்தை ஹம்சத்வனியே, நமக்குத் திரும்பக் கிடைச்சிட்ட மாதிரி இருந்தது. மாமாவோட கலந்து பேசி முடிவு பண்ணுக்கா. அவர் என்ன சொல்றாரு?”

“ம்… அவர் என்னிக்குத்தான் செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டடிருக்காரு? ‘இதுக்கு நான் காரணமில்லை’ன்னு அடிச்சிச் சொன்னாரு. அப்புறம் உங்க வீட்டுக்காரரைப் பத்தி அசிங்கமாப் பேசினாரு! எங்க எல்லாருக்கும் கோபம் வந்துடுச்சி. உடனே அப்பா. ‘குழந்தைக்கு டி.என்.ஏ. டெஸ்ட் பண்ணினா, உண்மை தெரிஞ்சுடும்’னு சொன்னாங்க. உடனே முகம் வெளிறிப் போய், ‘அந்தக் குழந்தையோட வரதா இருந்தா, நீ என் வீட்டுக்கு வராதேன்னு கோபமா கத்திட்டுப் போயிட்டாரு!” – என்றாள் ஒரு பெருமூச்சுடன்.

“நீ கவலைப்படாதேக்கா! நான் இவரை விட்டுப் பேசச் சொல்றேன். உனக்கு இந்த ‘அடாப்ஷன்’ல சம்மதமா…. அதை முதல்லே சொல்லு. இல்லைன்னா அந்தக் குழந்தையை வளர்க்கற செலவைத் தானே ஏத்துக்கறதா முகில் சொல்லிட்டாரு. அதான் கேக்கறேன். நல்லா யோசிச்சு அப்புறமா சொல்லுக்கா!”

“இதிலே யோசிக்கறதுக்கு எதுவுமே இல்லை. நான் தீர்மானம் பண்ணிட்டேன் மிருணா. நானும் ஒரு வேலைக்குப் போயிட்டு அந்தக் குழந்தையையும் வளர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அம்மா வீட்டோடயே தான் இருக்கப் போறேன்” சோர்வுடன் கூறினாள் மீனா.

“அக்கா! இப்போ அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு, அப்புறம் நீ வருத்தப்படக் கூடாது”

“அவர் பண்ணின தப்பு நான் பாவம் சுமக்காம். ஒரு குழந்தையை என் மடியில சுமக்கற பாக்கியத்தைக் கடவுள் எனக்குத் தந்திருக்காரேன்னு சந்தோஷப்படறேன். நான் டெலிவரிக்கு வந்தப்புறமா, புதுசா ஒரு டீச்சரோட தொடர்பு ஏற்படுத்திக்கிட்டு, இப்ப அவளோட குடித்தனமே பண்றதா அவர் கூசாமச் சொல்றாரு. அவர் இனிமே திருந்துவாருன்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எல்லாம் கானல் நீராப் போச்சு!” அவள் குரல் உடைந்தது.

பிறகு அவளுடன் பேசிய லிங்கமும், மீனா எடுத்த முடிவு தான் சரி என்று உறுதியாகக் கூறினார். மனம் முழுவதும் வேதனையும் கவலையும் நிறைந்து, இதயம் இரும்புக் குண்டை வைத்தாற்போல் கனத்தது.

அப்போது உள்ளே வந்த முகிலன், ”என்ன மிருணி! வீட்டுக்குப் பேசினியா? உங்க அக்காவும் மாமாவும் என்ன முடிவெடுத்திருக்காங்களாம்?” என்றான்.

எல்லா விஷயங்களையும் கூறியவள், “இப்போ என்ன முகில் செய்யறது? அக்கா ரொம்பத் தீர்மானமா இருக்கா!” என்றாள் மெல்லிய குரவில்!

யோசனையுடன் “சரி! நாளைக்கு நான் உன் மாமாவோடப் பேசிப் பாக்கறேன். ரெண்டு பேருமா சேர்த்து. குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தா ரொம்ப நல்லதுன்னு சொல்லிப் பாக்கறேன். பார்ப்போம், அவர் என்னதான் சொல்றாருன்னு? அப்புறம்… நாளைக்கு அப்பாவும் அம்மாவும் ஒரு கல்யாணத்துக்காக ஊருக்குப் போறாங்க.நீ வேணும்னா உங்க வீட்டுக்குப் போய் தங்கிட்டு வரியா?” என்றான்.

“இல்லைங்க! அப்புறம் உங்களை யார் கவனிச்சிப்பாங்க அப்புறமா அத்தை வந்தப்புறம், நான் போறேன்.”

முதன் முதலாகத் தனக்காகவென்று யோசித்து அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், அவனுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

மனதிற்குள் நேச மின்னல்கள் மின்ன, அவள் புறம் திரும்பியவளின் பார்வையில், சிநேகத்தையும் மீறிய ஏதோ ஒன்று தெரிவதைப் போல்!

அந்த நிமிடம், அவள் விழிகள் அவளுடைய நெஞ்சுக் கூட்டைத் துளைத்து இதயத்தைத் தீண்ட, மிருணாவின் மனதிற்குள் சுகமான நேச மழைச்சாரல்!

திடீரென்று எங்கிருந்தோ ஒலித்த அந்தப் பாடல், சூழ்நிலையை இன்னும் இதமாக்குவதாய்!

“தொட்டுத் தொட்டு என்னை, வெற்றுக் களிமண்ணை சிற்பமாக யார் செய்ததோ?”

தன்னைத் தொடாமலே, அவனுடைய செயல்களாலும், அன்பினாலும், தன் மனதைக் காதல் உளியால் செதுக்கி தனக்குள் அவன் உருவையே சிற்பமாக முகிலன் வடித்திருப்பது அவளுக்கு இன்று புரிவதாய்!

‘காதல் அழகை மட்டும் பார்ப்பதில்லை… அகத்தையும் பார்க்கிறது’ என்று உணர்த்தியவளிடம், மறுப்பாய் இதயக் கதவை மூடி வைத்த நிஜம் புரிந்து, மனதில் பெரும் வலி எழக் கண்களை இறுக முடினாள் அவள்.

“என்னாச்சு மிருணி? தலைவலிக்குதா… படுத்துக்க! இந்தா தைலம்… நீயே தடவிக்கறியா? நான் கொஞ்சம் கணக்குப் பாக்க வேண்டியிருக்கு! பக்கத்து ரூம்ல போய் பாக்கறேன்.”

மென்மையாகக் கூறியபடி அவன் எழுந்து செல்ல தவித்துப் போனாள் அவள்.

தன் நிழலாய்… துணையாய் கூடவே வந்து, இதயத்தில் புகுந்து, கனவுகளில் கலந்து. தன் நினைவையே மறக்கச் செய்தவன் இன்று உறக்கத்தையும் பறித்துக் கொண்ட மாயமும், அவன் நேசமும் புரிந்து, மனம் அலைபாய ஆரம்பித்தது.


ஒரு நாள் அவனுக்குப் பிடித்த மாதிரி கோழிக் குழம்பு வைத்திருப்பதாகக் கூறினார் சமையல்காரம்மா!

அவனுக்காகத் தானும் அசைவம் சாப்பிட ஆரம்பித்தாலென்ன என்று தோன்ற, ஒரு கரண்டியில் எடுத்து அதை மெதுவாகச் சுவைத்துப் பார்த்தபோது அடிவயிற்றிலிருந்து குமட்டிக் கொண்டு வர, ஓடிச் சென்று வாந்தியெடுத்தாள் மிருணா.

சப்தம் கேட்டு அங்கு வந்த தமிழரசி, உடனே ஓடிச் சென்று தன் மகனுக்குப் போன் செய்தார்.

“முகிலா?நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா.. ஒரு நல்ல சேதி இருக்கு. இப்பவே வரணும்!” என்று வைத்தார். ஒன்றும் புரியாமல் அவன் கிளம்பி வந்தபோது அவர் பெரும் கோபத்திலிருந்தார்;

“என்னம்மா… ஏன் அவசரமா வரச் சொன்னீங்க?” என்று கேட்டவனிடம், “உன் பொண்டாட்டியப் போய்க் கேளு! அவ திடீர்னு வாந்தியெடுத்தவுடனே, சந்தோஷமா ஃபோன் போட்டு உன்னை வரச் சொன்னா, அப்படி எதுவும் இல்லேங்கறா! எல்லாம் என் தலையெழுத்து, போய்ச் சேருறதுக்குள்ளே பேரக் குழந்தைகளைப் பாக்கற பாக்கியம் கிடைக்காது போலிருக்கு” என்றார் கோபத்துடன்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *