கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 14,616 
 

கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாகக் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.ஐ. சுந்தரம். இந்த வருடம் காலையிலிருந்தே கூட்டம் கட்டுக்கடங்கவில்லை.

கடைசித் தேருக்கு எப்போதுமே கூட்டம் அதிகம் வரும். அதிலும் ஞாயிற்றுக்கிழமை கடைசித் தேர் வந்தால் சொல்லவே தேவையில்லை.

பின் கட்டுவள்ளிமலையின் மேற்கில் பெருமாள்குப்பம் மூலையில் மூன்றாம் நாளான நேற்றிரவு நிறுத்தப்பட்ட தேர் இன்று காலை நகரத் தொடங்கியபோதே எஸ்.ஐ.சுந்தரத்துக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது.

வண்ண வண்ண தோரணங்களும், வாய் விரிந்த ஆளிகளும், கால்களைத் தாவிப் பறக்கும் குதிரைகளும், வாயைப் பிளந்தபடி நிமிர்ந்து நிற்கும் சிங்கங்களுமாய் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில் முருகன் வள்ளி, தெய்வானையோடு வீற்றிருக்க, அதன் மீதிருந்து ஆலய ஊழியர் கோவிந்தசாமி வெள்ளைக் கொடியை அசைக்க அசைக்க… “அரோகரா அரோகரா’ என முழங்கியபடி வடம் பிடித்து இழுக்கும் சனக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அவ்வளவு கூட்டத்தையும் சுந்தரத்தின் கண்கள் மட்டும், எக்ஸ்ரேவைப் போல ஊடுருவிக் கொண்டிருந்தது.

தேர் பாட்டையில் மண்ணை “கரகர’ என அரைத்தபடி சக்கரங்கள் உருள, அந்த இரண்டு ஆள் உயர பிரம்மாண்ட சக்கரங்கள் பாதையிலிருந்து விலகாமல் சக்கைக் கட்டைகளை வைத்து ஆச்சாரிகள் திருப்பி விட, நிற்கும் தேரைத் தள்ள பின்புறம் அடிதண்டா போட்டபடி மூங்கில்களோடு பின் தொடர்ந்தனர் தொண்டர்கள்.

மலை மீதும், மலையடிவாரத்திலும், தேரைச் சுற்றியும், தேர்ப் பாதை முழுவதும் ஒரே சனக்கூட்டம். வண்ண வண்ண உடைகளுக்கு மேல் கறுப்பும், வெளுப்புமாய் தலைகள், தலைகள், தலைகள். எள்ளை இறைத்தாலும் கீழே இறங்காத அளவு கூட்டம்.

தேருக்கு மேல் நின்று இமைக்காமல் தேரின் அழகையே பார்த்துக்கொண்டிருந்த சூரியன் மனசேயில்லாமல் சற்றுத்தள்ளி மேற்கு நோக்கி நகர, வெய்யிலின் உக்கிரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைய… தேர் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. எங்கும் “அரோகரா… அரோகரா’ என்ற கோஷங்களும், ஐஸ் வண்டிகளின் “பீம் பீம்’ ஒலிகளும், குல்பி வண்டிகளின் “கிளிங் கிளிங்’ மணி ஓசைகளும் கலவையாய் எழுந்தன. முகப்பரு நீங்க வேண்டிக் கொண்டவர்கள் உப்பு, மிளகுப் பொட்டலங்களை தேரின் மீது வீசிவிட்டு கைகூப்பி வணங்கினர். உப்பு வீசக்கூடாது என காவலர்கள் தடுத்தும், நாலாபுறமும் சாரல் மழையைப்போல உப்பு பறந்தது.

கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்க்கப் பார்க்க எஸ்.ஐ. சுந்தரத்துக்குக் கவலையாய் இருந்தது. நான்கு நாட்களாய் அவருக்கு தேரடியில் தான் டூட்டி. கோயில் அலுவலகம் அருகே இருக்கிற காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாக்கிடாக்கியிலும், கைபேசியிலும் மாறி மாறி கட்டளைகள் வந்து கொண்டே இருந்தன. கூட்டம் அதிகமானால் அசம்பாவிதங்களும் அதிகமாகும் எனப் பயந்தது காவல்துறை.

வள்ளிமலை தேர்த் திருவிழா என்றால் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், பெங்களுர், சித்தூர் என பல ஊர்களிலிருந்தும் திருடர்கள் வந்து விடுகிறார்கள். பல ஊர்களிலிருந்து வந்து குவியும் சனக்கூட்டத்தில் அவர்களுக்கு நல்ல வேட்டை கிடைக்கும். உள்ளூர் ஜேப்படி திருடர்கள், வழிப்பறித் திருடர்கள், வீடு புகுந்து திருடுபவர்கள் என எல்லாரின் முகங்களும் சுந்தரத்துக்கு அத்துப்படி. ஆனால் இங்கே கூட்டத்தோடு கலந்துவிடும் வெளியூர் திருடர்களையும், வெளிமாநிலத் திருடர்களையும் எப்படிக் கண்டு பிடிப்பது என்பது தான் அவரது கவலை.

“பக்தர்கள் தங்கள் நகைகளையும், உடமைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். விழிப்புடன் இருக்கவும்’ என்று ஒலிபெருக்கிகள் முழங்கிக் கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு முறையும் திருவிழா முடிவதற்குள் பல திருட்டுகள் நடந்தே விடுகின்றன.

எப்படிப்பட்ட திருடனையும் ஒரு முறை பார்த்தால் போதும். அதன் பிறகு சுந்தரத்தின் பார்வையிலிருந்து அவன் தப்பமுடியாது. அதற்காகவே கூட்டமும், பரபரப்பும் மிகுந்த தேரடியில் அவருக்கு டூட்டி போட்டுக் கொள்வார்.

திருவிழாவில் மட்டுமில்லாமல், பாரா டூட்டியில் கூட ஒரு திருடனும் அவரிடமிருந்து தப்ப முடியாது. பல திருடர்களைப் பிடித்து ஸ்டேஷ னில் ஒப்படைத்து பல ரொக்கப் பரிசுகள் வாங்கியவர் அவர்.

அப்படியும் அவருக்கே விளங்காத புதிர் ஒன்று அவர் சர்வீசில் ஒரு முறை நடந்துவிட்டது. அப்போது அவர் ஏட்டாக இருந்தார். அன்று அவருக்கு டவுன் பாரா டூட்டி. அவரோடு சேர்ந்து இன்னொரு ஏட்டுவுக்கும் டூட்டி.

சில வெளிச்சப் பொத்தல்களோடு மிகப்பெரிய இருட்டுப் போர்வையைப் போர்த்தியபடி நகரமே உறங்கிக் கொண்டிருந்த நடு இரவில் இருவரும் லத்தியை வீசியபடி தெருத்தெருவாய் வலம் வந்தனர். ஒரு குறுக்குச் சந்தில் மங்கலான இருட்டில் நிழலுருவமாய் எதுவோ அசைய, உஷாரான சுந்தரம் பூனையைப் போல பதுங்கிப் பதுங்கிப் போய் எட்டிப் பிடித்தார்.

அது பார்த்த முகம்தான். வீடு புகுந்து திருடுபவன் அவன். ஸ்டேஷன் பட்டியலில் உள்ளவன்தான். இன்று நல்ல வேட்டை தான் என்று நினைத்தவர், சந்தோசத்தோடு அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டார்.

பொதுவாகவே குண்டாக, தளதளவென இருக்கும் திருடர்களை அவர் அடிக்கமாட்டார் . எவ்வளவு அடித்தாலும் அவர்களுக்கு வலிக்கவே வலிக்காது. அடிப்பவர்களுக்குத்தான் வலிக்கும். ஒல்லியாக, எலும்பும் தோலுமாய் இருப்பவர்களை எலும்பில் அடிக்க வேண்டும். அப்போதுதான் வலியால் துடிப்பார்கள்.

அவனது சட்டையைக் கழற்றி, கைகளை முதுகுப்புறம் திருப்பி, சட்டையாலேயே இறுக்கிக் கட்டினார்.

“”ஏட்டய்யா… இவன ஸ்டேஷனுக்கு தள்ளிகினு போங்க. இவன் தனியா வந்திருக்க மாட்டாங். இங்கக் கேட்டாலும் கூட வந்தவங்களப் பத்தி இவஞ் சொல்ல மாட்டாங். நானு ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வர்றேங்” என்றவர், அவர்களை அனுப்பிவிட்டு, வேட்டைக்குப் போகும் புலியைப் போல, கண்களையும், காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு மெதுவாக நடந்தார். நகரம் முழுவதும் சுற்றியும் எவரும் தென்படவில்லை.

கிடைத்தவனை விசாரிக்கிறபடி விசாரித்தால் அவர்களின் திட்டம் தெரிந்துவிடும் என்று ஸ்டேசனுக்குத் திரும்பியவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அந்த ஏட்டு மட்டும் தான் அங்கே இருந்தார்.

“”ஏட்டய்யா… அந்தத் திருட்டு நாயி என்ன ஏமாத்திட்டு ஓடிப்போயிடுச்சி” என்றார் பதைபதைப்போடு.

“”யோவ்… ஓடினா இன்னா… தொரத்திப் பிடிக்கறது” என்றார் கோபமாக.

“”முடிஞ்ச வரைக்கும் ஓடிப்பார்த்தேங்… அவங் வேகத்துக்கு என்னால ஓட முடியல ஏட்டய்யா” என்றார்.

“”பின்னால கையக் கட்டின பின்னால் எப்டியா வேகமா ஓடுவான்?” என்றார் கோபமாக. கையைப் பின்னால் கட்டுவதே அவர்கள் தப்பித்தாலும் வேகமாக ஓடக்கூடாது என்பதற்காகத் தானே.

“”கட்னத அவுத்துக்கினு ஓடிட்டாங் ஏட்டய்யா” என்றார் அந்த ஏட்டு.

அவரால் அதை நம்ப முடியவில்லை. அவர் கட்டுப்போட்டால் எந்தத் திருடனாலும் அவிழ்க்க முடியாது. அவருடைய கட்டு அப்படி. அவர் கட்டை அவிழ்த்துக் கொள்கிற அளவுக்கு எந்தத் திருடனுக்குத் திறமையிருக்கிறது?

அது நெடுநாள் புதிராகவே இருந்து அவருக்கு. பல இரவுகளில் அவரின் தூக்கத்தைக் கெடுத்தது அந்தக் கேள்வி.

அது நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி, அங்கே பாரா போன ஓர் இரவில் அதே போன்ற ஓர் இருட்டுச் சந்தில் அவனைப் பிடித்தார்.

அடையாளம் தெரிந்ததும் கோபத்தில் நான்கு அறை விட்டார். அவனும் இவரை அடையாளம் தெரிந்து கொண்டதும் “தொபீர்’ என அவர் காலில் விழுந்தான்.

அதன் பிறகு அவனை அடிக்காமல், அவனிடம் நைசாகப் பேசி, அவரைத் துளைத்துக் கொண்டிருந்த அந்தச் சந்தேகத்தைக் கேட்டார்.

“”அவராலயும் கட்ட அவுக்க முடியாம… அந்த ஏட்டய்யாவே துணிய பிளேடால கிழிச்சிவுட்டு ஓடுடான்னு உட்டுட்டாரு” என்றான்.

“”அவுரு ஏன்டா உன்ன ஓட உட்டாரு” என்றார் புரியாமல்.

“”இன்னைக்கு நாந்தாங் பாரா வருவேங்… நீ தைரியமா போயி உங் வேலயப்பாரு… வேல முடிஞ்சதும் கரிக்டா பங்க குடுத்துடுன்னு முன்னாடியே சொன்னாரு. அப்பாலதாங் நீங்க அவரு கூட பாரா வர்றது அவருக்கே தெரிஞ்சதாம்” என்றான்.

உண்மை தெரிந்ததும் மீசையை நீவி விட்டுக்கொண்டார். “அதானே அவர் போட்டக் கட்டயாவது அவுத்துகினு ஓட்றதாவது’.

அந்த நினைவு இப்போது வந்ததும் பெருமிதத்தோடு ஒரு முறை மீசையை நீவியவாறே சுற்றும் முற்றும் பார்த்தார் சுந்தரம். தேர் அசைந்து அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது.

அப்போது கழுத்தில் பட்டையாய் மாங்காய் நெக்லசும், விரல் கனத்தில் தாலிச்சரடும் அணிந்த ஒரு இளம்பெண் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு தன் தாயுடன் தேரை நோக்கி வந்தாள். அதைப் பார்த்ததும் பதைபதைத்தார் சுந்தரம்.

“அடப்பாவமே… நாலு நாளா பட்டினியா அலையறவம் முன்னால ஒரு அண்டா நெறைய்ய பிரியாணிய எறக்கி வெச்சமாதிரி இந்தப் பொண்ணு இப்டி நகயப் போட்டுகினு பளிச்பளிச்னு காட்டிகினு வருதே. உடுவானுங்களா கேடிப் பசங்க’ என்று நினைத்தப்படி வேகவேகமாக அவளை நெருங்கினார்.

“”இந்தாம்மா பாப்பா… இன்னா இந்தக் கூட்டத்துல இவ்ளோ நகையப் போட்டுகினு வந்துகீற? நகய ஊட்ல வெச்சிட்டு வரக்கூடாதா?” என்றார் கோபமாக.

“”ம்… ஊட்ல வெக்கிறதுக்கா நகய வாங்கறோம்?” என்றாள் அலட்சியமாக.

“”செரி செரி… போட்டுகினு வந்தாக் கூட புடவ முந்தானய மேலச்சுத்தி மறைச்சிகினு வரக்கூடாதா?” என்றார்.

“”அய்யே… இன்னா சார் நீங்க… நாலு பேரு பாக்கறதுக்குதான நகையே போடறோங்… மூடிகினு வந்தா அதப்போட்டா இன்னா? போடாட்டி இன்னா?” என்றாள் கிண்டலாக.

“”அப்டியா… செரி செரி… நீ போம்மா” என்றார். அவருக்குள் ஆத்திரம் பொங்கியது. தேரைப்பார்த்து “முருகா’ என்று ஒரு கும்பிடுபோட்டுவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.

அவர் நினைத்தது சரியாகி விட்டது. வேலூரில் பலமுறை இவரிடம் அடிவாங்கிய ஜேப்படி திருடன் தோட்டப்பாளையம் ரவி கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடி அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது தெற்கு நோக்கித் திரும்பிய தேர் சரிவில் வேகமாய் நகரத் தொடங்கியது. ராகுகாலம் கடந்த பின் இன்னும் வேகமெடுத்தது தேரோட்டம். தாய் வீட்டுக்கு வரும் பெண்ணைப்போல குதூகலத்தோடு ஓடிய தேர் தன் இருப்பிடத்தை அடைந்தபோது எங்கும் “அரோகரா… அரோகரா…’ கோஷம் காதைப் பிளந்தது.

நான்கு நாட்களாய் விரதமிருந்து தேரோடு மலையைச் சுற்றிய இளம்பெண்களும், ஆண்களும், முதியவர்களும் ஏரிக்கரை மீதும், திருமண மண்டபங்களின் மாடிகளிலும், சாலையோரங்களிலும், மலையடிவாரத்திலும் படையல் போட்டு, சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து மனமுருகி முருகனில் கரைய… கற்பூரப் புகைமண்டலமும், விபூதி மணமும் எங்கும் பரவ… பக்திப் பரவசத்தில் திளைத்தது சனங்களின் மனம்.

கடமையை முடித்த திருப்தியோடு தொப்பியைக் கையில் பிடித்தபடி கோயில் அலுவலகத்தின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தார் சுந்தரம். நாள் பூராவும் சுற்றியது காலெல்லாம் பயங்கர வலி. கால் முட்டிகளை லேசாக அழுத்திக் கொண்டார்.

கூட்டத்தில் தொலைந்து போன குழந்தைகளைப் பற்றிய அறிவிப்புகள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து கொண்டே இருந்தன. பெற்றோரைப் பிரிந்த குழந்தைகள் மிரண்டு மிரண்டு அழ, குழந்தைகளைத் தவற விட்ட பெற்றோர் பித்துப் பிடித்துக் கதறிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வாயிலும் வயிற்றிலும் “லபோதிபோ’வென அடித்துக்கொண்டு ஓடிவந்தாள் அந்த இளம்பெண்.

“”அய்யோ போச்சே… என் நக போச்சே… நக போச்சே” என்று அலறினாள். கூடவே அவளது தாயும் கத்திக்கொண்டு ஓடி வந்தாள்.

“”ஏய் இன்னா ஆச்சி… எதுக்கு இப்டி கத்தற?” என்றார் சுந்தரம் எரிச்சலாக.

“”சார் பதினஞ்சி சவரம் நெக்லச யாரோ அறுத்துகினு போய்ட்டாங்க சார்” என்று கத்தினாள்.

“”போனா போவட்டும் போம்மா… உசாரா இருன்னு உனக்கு அப்பவே சொல்லல நானு, நீதான காமிக்கிறதுக்குதான நகன்னு சொன்ன?” என்றார் கடுப்பாக.

“”அய்யோ தப்புதாங்க சார். எப்டினா கண்டுபிடிச்சிகுடுங்க சார்… அந்த நகயில்லன்னா ஊட்ல என்ன வெட்டியேப் போட்ருவாங்க சார்” என்று கதறினாள். அதற்குள் அங்கே கூட்டம் கூடி விட்டது.

“”செரி செரி… புகார் எழுதிக் குடுத்துட்டுப் போ… நக கெடச்சா சொல்லி அனுப்பறோம்” என்றார் கோபமாக.

“”அய்யோ சார்… நகயில்லாம நானு ஊட்டுக்கே போவ முடியாது சார்.. உங்க கால்ல கூட விழறேங் சார்… எப்டினா கண்டுபுடிச்சி குடுங்க சார்” என்று கதறினாள்.

“”ஏம்மா இதுதாங் சின்னப் பொண்ணு… அதுக்குதாங் ஒண்ணுந் தெரில. உனக்குக் கூடவா தெரியாது? நீயாவது புத்தி சொல்லக் கூடாதாம்மா? இப்போ இவ்ளோ கூட்டத்துல எவனப் போயி புடிக்கறது?” என்றார் அவளின் தாயிடம். அவளும் கை கூப்பியபடி அழுதாள்.

“”சரி… அந்த ஆபிசுல போயி உக்காருங்க” என்று சொன்ன சுந்தரம் கண்களைக் காட்ட, சுற்றியிருந்த கூட்டத்தை விரட்டினார்கள் காவலர்கள். நீரில் மிதக்கும் பாசியைப்போல கைகளால் விலக்கியதும் விலகிவிட்டு, மீண்டும் வேகமாய் சேர்ந்து கொள்வதைப்போல விலகிய கூட்டம் மீண்டும் சேர்ந்து கொண்டது.

சுந்தரம் எழுந்து அலுவலகத்துக்குள் போனார். பலி ஆடுகளைப் போல வெளிறிப்போன முகங்களோடு நின்றிருந்தனர் அந்தப் பெண்கள். அவர் உள்ளே நுழைந்ததும், சட்டைத் துணியால் பின்புறம் கைகள் கட்டப்பட்டுக் குந்தியிருந்த தோட்டப்பாளையம் ரவி அவரைப் பார்த்ததும் பயத்தோடு எழுந்து நின்றான்.

கான்ஸ்டபிளைப் பார்த்து சுந்தரம் தலையை அசைக்க, அவனிடமிருந்து பிடுங்கி ஒரு துணியில் சுற்றி வைத்திருந்ததை எடுத்து வந்து சுந்தரத்திடம் நீட்டினார் அந்த கான்ஸ்டபிள். அதை வாங்கிப் பிரித்தார். உள்ளே மாங்காய் நெக்லஸ்.

அதைப் பார்த்ததும் கண்கள் விரிய “பொத் பொத்’தென எஸ்.ஐ. காலில் விழுந்தனர் அந்தப் பெண்கள் .

“”முருகரு புண்ணியத்துலதாங் போன நக கெடைச்சிருக்குது… இனிமேனா உசாரா இருங்க” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் நகையைக் கொடுத்தார்.

அவரையும் கோயில் கோபுரத்தையும் மாறிமாறிக் கும்பிட்டபடி கண்களைத் துடைத்துக் கொண்டு அவர்கள் வெளியே போனார்கள்.

எதையோ சாதித்துவிட்ட திருப்தி சுந்தரத்தின் மனசுக்குள். இனி ஜென்மத்துக்கும் அவர்கள் கண்காட்சி போல நகையைப் போட்டுக் கொண்டு அலைய மாட்டார்கள் என நினைத்துக்கொண்டார்.

“”சார்… என்ன உட்ருங்க சார்” என்றான் தோட்டப்பாளையம் ரவி.

“”எதுக்குடா உடணும்?” என்றார் சுந்தரம்.

“”நீங்க கண்ண காட்னதாலதான சார் நானு நெக்லச அடிச்சேங். அதாங் நெக்லச குடுத்துட்டனே… அப்பறமும் எதுக்கு சார் என்னக் கையக் கட்டி உக்கார வெச்சிகீறிங்க?” என்றான் புரியாமல்.

“”அந்த நெக்லச அடிச்சதுக்கு உங்கையக் கட்டலடா… வேற எந்த நகையும் நீ அடிக்கக் கூடாதுனுதாங் கட்டி வெச்சிருக்கோம்… போனாப் போவுதுனு இப்போ அவுத்து உடறங்… ஒழுங்கா பஸ்úஸரி ஊட்டுக்குப் போவணும். எங்கனா கைய நீட்ன… மவனே கைய ஒடச்சி அடுப்புல வெச்சிடுவெங்” என்று அவரே அவனது பின் கட்டை அவிழ்த்துவிட்டு மீசையை நீவிக்கொண்டார்.

அவர் போட்டக் கட்டை அவரைத் தவிர வேறுயாரால் அவிழ்க்க முடியும்?

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *