அங்கம்மாவும், மங்கம்மாவும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 22,464 
 

முன்னொரு காலத்தில் “சந்திரபுரி’ என்று ஓர் அழகிய கிராமம் இருந்தது. அங்கு செல்வந்தர் ஒருவர் மிகப்பெரிய பண்ணை வீடு அமைத்து அதில் பசு, காளை, நாய், குதிரை, ஆடு, கோழி எனப் பல வீட்டு விலங்குகளை வளர்த்து வந்தார்.

அப்பண்ணையில் இருந்த விலங்குகள் யாவும் ஒரே குடும்பம் போல் பழகி வந்தன. இந்நிலையில் அச் செல்வந்தர் பொதி சுமக்க இருபது கழுதைகளைப் பக்கத்து ஊரிலிருந்து வாங்கி வந்தார்.

அங்கம்மாவும்இதுவரை கழுதைகளையே பார்த்திராத அவ்விலங்குகள் அவற்றிடம் பேச விரும்பவில்லை. கழுதைகள் தாமாக முன்வந்து “எங்களையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுங்கள்! எங்களுடன் பேசுங்கள்!’ என்று கூறின. ஆனால் பிற விலங்குகள் அவற்றை அலட்சியப்படுத்தின.

“நான் மனிதர்களுக்குப் பால் கொடுக்கிறேன். நான் உயர்ந்தவன்!’ என்றது பசு.

கழுதைகளை அருகிலேயே வரவிடாமல் நாய்கள் குரைத்தன.

“நீங்கள் எங்களைப் போல இருந்தாலும் எங்களைவிட உயரம் கம்மி! உங்கள் பின்னங்கால்கள் வளைந்திருப்பதால் எங்களைப் போல் வேகமாக ஓட முடியாது!’ என்று குதிரைகள் பேச மறுத்தன.

பிற விலங்குகள் அவற்றின் தோற்றத்தைக் கண்டு கேலி செய்தபடியே இருந்தன.

அக் கழுதைக் கூட்டத்தில் “அங்கம்மா’, “மங்கம்மா’ என இரு பெண் கழுதைகள் இருந்தன. “நாம் பிற வீட்டு விலங்குகளுடன் ஓட்டி உறவாட முடியவில்லை! காட்டிற்குத் தப்பிச் சென்றாலும் அங்கு வாழும் விலங்குகள் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டா! இந்தப் பிரச்னைக்கு என்னதான் வழி?’ என்று அங்கம்மாவும், மங்கம்மாவும் தங்களுக்குள் கவலைப்பட்டுக் கொண்டன!

கழுதைகள் சந்தோஷமாக இருந்தாலோ, துன்பப்படும் சமயத்திலோ பாடத் தொடங்கி விடும். “மங்கம்மா! நாம் பாடுவோமா?’ என்று கேட்டது அங்கம்மா. ஆனால் அதற்குள் அந்த வீட்டு வேலைக்காரன் பொதி சுமக்க அவற்றை ஓட்டிச் சென்றான்.

பாடமுடியவில்லையே?! என்ற கவலையில் அவை சோர்ந்து இருந்தன. இதைக் கண்ட குதிரைக் குட்டி ஒன்று “ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?’ என்று கேட்டது.

“நாங்கள் அனைவரும் நன்றாகப் பாடுவோம்! எங்களுக்குப் பாடும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை!’ என்று கூறின.

இதைக் கேட்ட குதிரைக் குட்டி, “அக்கா, கவலைப்படாதீர்கள்! உங்களுக்குக் கூடிய விரைவிலேயே பாடும் வாய்ப்பு கிடைக்கும்!’ என்று கூறியது.

÷இதைக் கேட்ட அந்தக் கழுதைகள் “தம்பி உனக்கு மிக்க நன்றி! மற்ற விலங்குகள் எதுவும் பேசாத நிலையில் நீ மட்டுமாவது எங்களை மதித்துப் பேசுவது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று கூறின.

குதிரைக் குட்டியைப் பிற விலங்குகள் “ஏன் அவற்றிடம் பேசினாய்?’ என கண்டித்தன.

÷இப்படி இருக்கையில் செல்வந்தர் தமது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியூரில் சில நாட்கள் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் தனது வேலை ஆட்களிடம் விலங்குகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றார்.

இதைத் தெரிந்து கொண்ட கள்வர் கூட்டம் ஒன்று அன்று இரவு பண்ணைக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, கோழி போன்றவற்றையும், குதிரை, மாடு போன்ற விலங்குகளையும் கொள்ளையடித்துச் செல்ல பண்ணைக்குள்

நுழைந்தனர்.

முதலில் பண்ணையில் இருந்த நாய்களை அடித்து விரட்டினர். வேலையாட்களைத் தாக்கியதில் அவர்கள் மயக்கமடைந்து விழுந்தனர். பிறகு விலங்குகளைக் கவர்ந்து கொண்டு

சென்றனர்.

ஆனால் அங்கிருந்த குதிரைக் குட்டி மட்டும் எப்படியோ தப்பி விட்டது. அதுவரை ஆற்றங்கரையில் மேய்ந்து கொண்டிருந்த கழுதைகள் பண்ணைக்குத் திரும்பி வந்தன.

பண்ணையில் விலங்குகள் எதுவும் இல்லை. வேலையாட்கள் மயக்கமடைந்து இருப்பதையும், அலங்கோலமான சூழலையும் கண்டன. குதிரைக் குட்டி அழுது கொண்டு ஒரு ஓரத்தில் நின்றிருந்தது.

அதனிடம் சென்று நடந்தவை யாவற்றையும் அறிந்து கொண்டன கழுதைகள். அங்கம்மாவும், மங்கம்மாவும் தமது இனத்தாரிடம், “இங்கிருக்கும் காட்டில்தான் அவர்கள் இன்றிரவு தங்குவர். அங்கு சென்று நமது நண்பர்களை எப்படியாவது மீட்டு வருவோம்!’ என்று கூறின.

அவை யாவும் குதிரைக் குட்டியையும் அழைத்துக் கொண்டு காட்டின் எல்லைப் பகுதிக்குச் சென்று மரங்களின் ஊடே மறைந்து நின்று பார்த்தன.

கொள்ளையர்கள் காட்டின் மையத்தில் திடல் போன்று இருந்த பகுதியில் விருந்து சமைத்து சாப்பிட்டனர். தாம் கவர்ந்து வந்த மாடு, குதிரை போன்ற விலங்குகளை மரத்தில் கட்டி வைத்திருந்தனர். கூண்டு போன்ற பட்டி அமைத்து அதில் ஆடுகளையும், கோழிகளையும் அடைத்து வைத்திருந்தனர்.

குதிரைக் குட்டிக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அது உடனே கழுதைகளை நோக்கி, “நண்பர்களே! நமது நண்பர்களை மீட்க ஒரு சிறந்த வழி உள்ளது! நீங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பெருங்குரலெடுத்துப் பாட வேண்டும்!’ என்று கூறியது.

இதைக் கேட்ட கழுதைகள் மிக்க மகிழ்ச்சி அடைந்தன. ஒரே நேரத்தில் இருபது கழுதைகளும் தமது வாயைத் திறந்து பெருங்குரலெடுத்துப் பாடத் தொடங்கின.

அமைதியான அந்த இரவு நேரத்தில் திடீரென்று பெருத்த ஒலியைக் கேட்ட, கொள்ளையர்கள் அலறி அடித்துக் கொண்டு திசைக்கு ஒருவராக ஓடத் தொடங்கினர். தம்மைப் பிடிக்கப் படைவீரர்கள்தான் ஒலி எழுப்பிக் கொண்டு வருவதாக எண்ணினர்.

அதுவரை மயங்கிக் கிடந்த பண்ணையாட்கள் மயக்கம் தெளிந்து எழுந்து கழுதைகளை மட்டுமாவது காப்பாற்றலாம் என நினைத்து அவற்றைத் தேடிக் கொண்டிருந்தனர். காட்டின் அருகே அவற்றின் குரல் கேட்கவும் அங்கு சென்று பார்த்தனர்.

அங்கு கொள்ளையர்களால் விலங்குகள் கட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவற்றை மீட்டனர். விலங்குகள் யாவும் கழுதைகளிடம் சென்று “எங்களை மன்னியுங்கள்! உங்கள் தோற்றத்தைக் கண்டு குறைவாக மதிப்பிட்டு விட்டோம்! இனி நாம் அனைவரும் ஒரே குடும்பமாக வாழலாம்! நமக்குள் வேற்றுமை இல்லை!’ என்று கூறின.

இதைக் கேட்டு அங்கம்மாவும், மங்கம்மாவும் தக்க சமயத்தில் யோசனை கூறிய குதிரைக் குட்டிக்கு நன்றி கூறின.

ஆம்! உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!

– ந.லெட்சுமி (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *