உள்ளம் உன் வசமானதடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2023
பார்வையிட்டோர்: 4,248 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

முகிலனின் முகம் சிவந்து கறுத்து விட்டது. ”அம்மா! அதுக்காக அவளை ஏதாவது சொன்னீங்களா?” என்றவனின் குரவில் பெரும் சீற்றம் தெரிவதாய்!

”ஏன்… இந்த வீட்டில் நான் எதுவுமே பேசக்கூடாதுங்கறியா?”

”அப்படிச் சொல்லலைம்மா! இந்த விஷயத்தில் அவகிட்டப் பேசாதீங்க. எல்லாத்துக்கும் நான்தான் காரணம்! இப்பக் குழந்தை வேணாம். கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கலாம்னு நான்தான் தள்ளிப் போட்டிருக்கேன்”.

அவன் கூறியது படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த மிருணாவின் காதுகளில் ஸ்பஷ்டமாக விழுந்தது.

பனிச்சிற்பமாய் சிறிது நேரம் உறைந்து நின்றிருந்தவளை, அருகில் வந்திருந்த முகிலனின் குரல் கலைத்தது.

“வா.. சாப்பிட்டுட்டு டிரெஸ் மாத்திக்கிட்டுக் கிளம்பு. அம்மா பேசினதிலே மூட்-அவுட் ஆகியிருப்பே. நம்ம திராட்சைத் தோட்டத்தை நீ பார்த்ததே இல்லை தானே! போயிட்டு வரலாம்!“ என்றபடி அவளை அழைக்க, மௌனமாக அவனைப் பின் தொடர்ந்தாள் அவள்.

இருவரும் கிளம்பிச் சென்றதும், தன் மனைவியை அழைத்தார் சுந்தரபாண்டியன்,

“தமிழரசி! நானும் உன்னை கவனிச்சிட்டுத்தான் இருக்கேன், நீ, பணக்கார வீட்டிலிருந்து மருமக வரணுமனு ஆசைப்பட்டிருந்தேன்னா, அதை உறுதியா நின்னு சாதிச்சுக் காட்டியிருக்கணும், மகனுக்காகன்னு விட்டுக் கொடுத்து, அந்தப் பொண்ணை நாமளே பாத்து முடிச்சி வச்சிட்டு, இப்ப அவளை எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்றது நல்லால்லை!

“அன்னிக்கும் அப்படித்தான். ஒண்ணுமில்லாதவன்னு குத்திக் காட்டினே! நான் கேட்டுட்டுதான் இருந்தேன். அந்தப் பண விஷயத்திலேயும் தப்பா முடிவெடுத்துப் பேசிட்டே..இன்னிக்கு அந்தப் பொண்ணுக்கு ஏதோ அஜீரணம் போலிருக்கு, அதான் வாந்தி எடுத்திருக்கு. உடனே, அதையும் அவ மனசு நோகற மாதிரிப் பேசிட்டே!

“முகிலன் வருத்தப்பட மாட்டாளா? அவன் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சிக் கல்யாணம் செஞ்சு வச்சிட்டு. இப்ப நீ அந்தப் பொண்ணை வார்த்தைகளாலக் குத்திக் கிழிச்சேன்னா, அதோட காயமெல்லாம் உன் மகனோட மனசுலதான் ஆழமாய்ப் பதிஞ்சு பெரிய வடுவாயிடும்.

“இதுவே உன் பெண்ணா இருந்தா எப்படி நடந்துப்பே? யோசிச்சுப் பாரு! உன்னைக் குறை சொல்றதா நினைக்காதே. அதான் நான் ஆரம்பத்துல இருந்தே உன்னை எதுவும் கேக்காம பேசாம இருந்தேன். மருமக வந்தாலே, மகன் தன்னை மதிக்க மாட்டானோ… மனசளவுல விலகிப் பிரிஞ்சு போயிடுவானோன்னு எல்லா அம்மாக்களும் பயப்படறீங்க!

“ஆனா, நீங்களும் ஒரு காலத்துல மருமகதான்கிறதை ஏனோ மறந்துடறீங்க! யோசிச்சுப் பாரு. நான் சொல்றதுல இருக்கிற நியாயம் புரியும். நாம அவகிட்டப் பெத்தவங்க மாதிரி நடந்துக்கிட்டா, அவளும் நம்மகிட்டே மகளா நடந்துக்கப் போறாங்கிற உண்மை. பல பெண்களுக்குப் புரியறதில்லை” என்று கூறிவிட்டு அவர் வெளியில் கிளம்பிச் சென்றார். தமிழரசியின் மனதில் அவருடைய வார்த்தைகள் ஆழமாகப் பதிந்து, மனதில் சிறிதாய் ஒரு மாற்றம் வர ஆரம்பித்தது.


திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று, கொடிகள் நிறைந்த பந்தலுக்கடியில், தலையைத் தாழ்த்தியபடி முகிலனுடன் இணைந்து நடந்தபோது, விழிகளின் அருகினில் விரிந்த வானமாய் தெரிந்த பசுமையான திராட்சைப் பந்தல்கள் அவள் மனதை வருடி இதப்படுத்தின.

விழிச் சிரிப்பிற்குள் தெரிகின்ற கருப்பு முத்துக்களாய் தொங்கிய அந்த அழகான திராட்சைக் கொத்துக்கள் இதயத்தை அள்ளத் திரும்பினாள்.

யாருக்கும் தெரியாமல் ஓரவிழிகளால் ரகசியமாய் அவளை உரசிக் கொண்டிருந்த முகிலனின் பார்வையுடைய மன ஈர்ப்பு சக்தி, அவளை தடுமாறச் செய்வதாய்!

ஆனால். இன்றுதாள் புதிதாகப் பிறந்ததைப் போல் நெஞ்சுக்குள் ஒரு புத்துணர்வு!.

முகிலனின் மனத்திற்குள் இதுவரை நங்கூரம் பாய்ச்சியிருந்த வேதனை, சட்டென்று அவள் வார்த்தைகளால் விடுபட்டு வெளிச் சென்றது.

திடீரென்று, அவளைச் சுற்றிலும் கோடி மலர்கள் ஒரே சமயத்தில் மலர்ந்ததைப் போல் ஒரு உணர்வு.

அடுத்த நொடி. முகிலனின் கைகளுக்குள் இறுக்கமாக சிறைப்படுத்தப்பட்டிருந்தாள், மிருணாளினி!

”மிருணி….!”

நாபியிலிருந்து எழுந்த அழைப்புடன் அவளை முத்தமிட்டபோது, வெகு நாட்கள் காத்திருந்த தவிப்பும் வேகமும், அவனுடைய ஒவ்வொரு செயல்களிலும் தெரிவதாய்!

வெட்கத்தின் ரேகைகள் அவள் உடலெங்கும் விரவிப் பரவ, அங்கு இனிய உணர்வுகளின் சங்கமம்!

காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு மெல்லிய சிற்றோடையைத் தனதாக்கியதைப் போல்!

மெலிதாய் ஒலித்த கடிகாரத்தின் ஒலியும், சில் வண்டுகளின் சிங்காரமும், வெகு நேரம் கழித்தே. இருவரின் செவிகளிலும் பதிந்தன!.

“மிருணி… ரொம்ப முரட்டுத் தனமா நடத்துக்கிட்டேனா… சாரிடா!” அவள் காதோரம் முகிலன் முணுமுணுத்த போது, இமைக் கதவுகளை மூடியபடிப் படுத்திருந்தவளின் முகத்தில், புதுமணப் பெண்ணின் நாணமும்… மொழி புரியாத இடத்தில் மாட்டிக் கொண்டது போன்ற, புதிதான ஒரு தவிப்பு நிலையும்!

முகிலன், சீறலான ஒரு வேகத்துடன் பேச ஆரம்பித்தான்.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னே, ஒரு நாள் கோயில் திருவிழால உயிர்ச் சிற்பமா உன்னைப் பாத்தப்ப, ‘எனக்கு மனைவின்னு ஒருத்தி இந்த வீட்டுக்கு வர முடியும்னா அது நீதான்’னு நான் முடிவு பண்ணினேன் மிருணி…

“ஆனா, நீ ரொம்ப சின்னப் பொண்ணாச்சேன்னு ஒரு பயம் வந்தது. அப்படியும் ஒன்றரை வருஷம் காத்திருந்தேன். அதுக்கு மேல காத்திருக்க முடியாம, மனசுக்குள்ளே பெரும் தவிப்பு! அம்மா வேற கல்யாணத்துக்கு ரொம்ப நெருக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் தான் அப்பா அம்மா கிட்டே பேசி, நம்ம கல்யாணத்தை முடிவு பண்ணச் சொன்னேன்.

“நீ பக்குவப்படாத சின்னப் பொண்ணாச்சே… பயப்படறியே… கொஞ்சம் மெச்சூரிட்டி வரட்டும்னுதான் ஒதுங்கி இருந்தேனே தவிர… நீ என்னை விரும்பாமத் தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்னு சத்தியமா எனக்குத் தெரியாது.

“தெரிஞ்சிருந்தா, நான் இதை நிச்சயமாத் தவிர்த்திருப்பேன்…”

அவனுடைய உதடுகள், அவளின் வெண்பஞ்சு விரல்களால் மெதுவாக மூடப்பட்டன.

“ப்ளீஸ்….” அவள் குரலில் பெரும் பரிதவிப்பு!

ஒவ்வொரு விரல் நுனியையும் மென்மையாக முத்தமிட்டவன். “அன்னிக்கு உன் வீட்டுத் தோட்டத்து பூவாட்டம் நீ சிரிச்சப்ப… எனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டப்ப…கோவில்லே கத்தி வந்து என்னைப் பாத்தவுடனே மிரண்டு விழிச்சப்ப… இப்படி நிறைய நேரங்கள்லே நான் முதன் முதலா ஒரு பொண்ணுக்காக என்னையே தொலைச்சு நின்னிருக்கேன்.“ கிசுகிசுப்பான குரலில் கூறினான்.

உடனே எம்பி அவன் கன்னத்தில் அழுத்தமாய் தன் இதழ் பதித்தவள், “நானும்தான் முகில்… நீங்க என்னைப் புரிஞ்சு நடந்துக்கிட்ட விதம், என்னை ரொம்பத் தாக்கிடுச்சு நீங்க மேற்கோள் காட்டிய புத்தக வரிகள். உங்களை ஒரு உயர்ந்த சிந்தனையாளரா எனக்கு அடையாளம் காட்டுச்சு. ரொம்ப நல்லவரா நீங்க இருந்தது, என்னை முழுசா ஆக்கிரமிக்க ஆரம்பிக்க, எனக்காக என் குடும்பத்து மேல நீங்க காட்டின அக்கறை என்னை நெகிழ வச்சிது.

“எல்லாத்துக்கும் மேல என்னோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து என்னைக் காயம் படாம நீங்க பாத்துக் கிட்டது. உங்களுக்குள்ளே இருந்த மனித நேயம். ரசனைகள் எல்லாமே என்னைத் தலைகீழாப் புரட்டிப் போட்டுடுச்சி.

ஒரு ஆணுக்கு அழகே. அவனுடைய கம்பீரமும், நல்ல மனசும்தான்னு புரிஞ்சுக்கிட்டேன். “

அவளுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனுக்குள் மலையருவியின் சலசலப்பாய்.. சில்லென்ற பனிக்காற்றின் வருடலாய்… தேன் மலர்களின் தேவ நிசப்தமான மலர்வாய்… சிலிர்க்கச் செய்தன.

“இன்னும் பத்தே நாளிலே உனக்குப் பரீட்சை வருது. ஞாபகம் இருக்கா? ஆனா, வாழ்க்கைப் பாடத்துலேயே பாஸாயிட்டே… அதென்ன பெரிய கஷ்டமா?”

முகிலன் குறும்புடன் கேட்க, அவன் மார்பில் நாணத்துடன் முகம் புதைத்தாள் மிருணி!

ஒற்றை விரலால் அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தியவன், அவளின் பவள இதழ்களைத் தன் சீதனமாக எடுத்துக் கொண்டான்.

தூரத்தே தெரிந்த திராட்சைத் தோட்டத்தின் மடியில் இளைப்பாறிக் கொண்டிருந்த வண்டுகள், மதுவுண்டதால் மௌனமாகச் சோம்பி இருந்தன.

பூமிக்கு எழுதிய காதல் கடிதங்களை, மரங்கள் மலர்களாய் உதிர்த்துக் கொண்டிருந்தன.

(முற்றும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *