எத்தனுக்கு எத்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,516 
 

அப்புவிளை என்ற ஊரில் சிவா என்ற இளைஞர் இருந்தார். அவர் ரொம்பவும் அமைதியானவர், புத்திசாலி. ஒரு நாள் அவர்கள் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் அப்பா, சின்னவயதில் அவர்களின் குடும்பம் பக்கத்து ஊரில் இருந்ததாகவும், அப்போ அந்த ஊரின் ஜமிந்தார் தன்னுடைய நண்பர் என்றும், தன்னை ஏமாற்றி அந்த ஜமிந்தார் அனைத்து சொத்துக்களையும், நகைகளையும் வாங்கிவிட்டதாகவும் சொன்னார்.

உடனே சிவா “ஏன் அப்பா, நீங்க ஏமாந்த சொத்துக்களை மீண்டும் வாங்க முயற்சிக்கவில்லையா?”

“ஜமிந்தார் பொல்லாதவர், மேலும் அவரிடம் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள், ஊர் மக்கள் அவர் என்ன சொன்னாலும் நம்புகிறார், அதான் ஏன் வீண்வம்பு என்று விட்டுவிட்டேன், இந்த ஊர் வந்து கஷ்டப்பட்டு சம்பாதித்து, இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்” என்றார்.

அதை கேட்டதும் சிவா ஒன்றும் சொல்லவில்லை, மனதில் ஏதோ கணக்கு போட்டார்.

கொஞ்ச நாளில் சிவா, மாறுவேடமிட்டு பக்கத்து ஊருக்கு சென்றார், செல்லும் முன்பு ஜமிந்தாரின் குடும்பம், மற்றும் அனைத்து விபரங்களையும் சேகரித்தார். ஜமிந்தார் கொடுமைக்காரர் என்றும், கடன் கொடுத்து அதிக வட்டி வாங்குவதும், வட்டி கட்ட முடியாதவர்களின் சொத்துக்களையும், நகைகளையும் பறிமுதல் செய்வதும், தன்னை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய தயங்காதவர் என்றும் மக்கள் பயத்தோடு சொன்னார்கள்.

ஜமிந்தாரின் வயதான தாயார் ஊரின் பண்ணை வீட்டில் தனியாக தங்கியிருந்தார், கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் ஜமிந்தாரின் தம்பி ஒருவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.

சிவா அந்த வயதான பாட்டியின் வீட்டின் கதவை தட்டினார். கதவை திறந்த பாட்டி “யாரப்பா நீ, ஏன் உன் உடை எல்லாம் ரத்தம் மாதிரி இருக்குது?

“ஆச்சி! நான் உங்க இளைய மகனின் நண்பன், நான் மேல் உலகத்திலிருந்து வருகிறேன், விபத்தில் இறந்த உங்க மகன் உங்களை பார்த்து விட்டு வரச் சொன்னார், நீங்க நம்புவதற்காக அவர் போட்டிருந்த உடையை போட்டு வந்திருக்கிறேன், ரத்தம் எல்லாம் விபத்தில் அடிபட்டதால் உண்டானது”

“அப்படியா அய்யா! என் மகன் அங்கே எப்படி இருக்கிறான், வசதிகள் எப்படி இருக்கின்றன?”

“பாட்டி! உங்க மகன் புதிதாக வந்ததால் அவருக்கு வசதியில் எதுவும் அங்கே இல்லை, ஆகையால் உங்களிடமிருந்து விலை உயர்ந்த ஆடைகள், நகைகள், பணம் எல்லாம் வாங்கி வரச் சொன்னார்”

“அய்யோ பாவம் என் மகன், இங்கே ராசா மாதிரி இருந்தான், அங்கே போய் இப்படி எல்லாம் கஷ்டப்படுகிறானா, இதோ என்னிடம் இருக்கும் அனைத்து நகைகள், பணம், உடைகள் எல்லாம் தருகிறேன், என் மகனிடம் சேர்த்து விடப்பா” என்றார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய மூட்டையாக கட்டி கொண்டு வந்து கொடுத்தார்.
http://1.bp.blogspot.com/_Ez77Rp9ey6…dingbyemom.jpg

சிவா கிளம்புவதாக சொன்னதும் “அய்யா! நானும் விரைவில் அவனை பார்க்க வருகிறேன், கடவுள் சீக்கிரம் என்னை அவனிடம் அனுப்புவார் என்று அவனிடம் சொல்” என்றார்.

சிவா மனதில் “கடவுள் ஏன், உங்க மகன் ஜமிந்தாரே அனுப்பி வைப்பார்” என்று சொல்லிக் கொண்டு, விரைவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

பின்னர் சிவா, நேராக ஜமிந்தாரின் வீட்டிற்கு முன்னால் போய் நின்றார். ஜமிந்தாரின் மனைவி மாடியில் வந்து வெளியே வேடிக்கை பார்க்க வந்த போது, சிவா அருகில் கட்டியிருந்த விலை உயர்ந்த பசுமாடுகளை ஏதோ பேசிக் கொண்டே கும்பிட்டார்.

அதை பார்த்த ஜமிந்தாரின் மனைவி கீழே இறங்கி வந்து சிவாவை பார்த்து “யாரப்பா நீ, ஏன் பசுக்களை கும்பிடுகிறாய், நீண்ட நேரம் என்ன பேசினாய்?”

“ஜமிந்தார் அம்மா, என் சகோதரிக்கு திருமணம், இந்த பசுக்களை திருமண விழாவுக்கு வரச் சொல்லி அழைக்கிறேன், அவர்கள் வந்தால் விலை உயர்ந்த இந்த தங்க நகைகளை பரிசாக கொடுக்கிறேன், ஆனால் இவை ஒன்றுமே சொல்லமாட்டேங்குது” என்று கூறி நகைகளை காட்டினார்.

ஆகா ஏதோ ஒரு ஏமாளி கிடைத்து விட்டான், தன்னுடைய பசுக்களை இவனுடன் அனுப்பி பரிசாக தங்க நகைகளையும் வாங்கி விடலாம் என்று நினைத்து, சிவாவைப் பார்த்து “தம்பி கவலை வேண்டாம், நான் என்னிடம் இருக்கும் 20 விலை உயர்ந்த பசுக்களையும் உன்னுடன் அனுப்பி வைக்கிறேன், நீ திருமணம் முடிந்ததும் நகைகளுடன் இங்கே கொண்டு வந்து விட்டு விடு” என்று கூறி 20 பசுக்களையும் சிவாவிடம் கொடுத்தார்.

உடனே சிவா ”ஜமிந்தார் அம்மா! இப்போ என்னிடம் இருக்கும் நகைகள், துணிகள் தூக்கிக் கொண்டு பசுக்களையும் ஓட்டிச் செல்வது கடினம், எனவே எனக்கு உங்களிடம் இருக்கும் அந்த சாரட்டு வண்டியையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்”

“பரவாயில்லை, குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியையும் எடுத்துக் கொள், திருமணம் முடிந்ததும், பசுக்கள், நகைகளுடன் வண்டியையும் கொண்டு வந்து விடு”

சிவா, உடனே அவை அனைத்தையும் பத்திரமாக ஊரின் எல்லையில் இருக்கும் மலையடிவாரத்தில் மறைவாக வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு வந்தார்.

கொஞ்ச நேரத்தில் தாயாரையும், மனைவியையும் ஏமாற்றிய விசயத்தை அறிந்த ஜமிந்தார், ஏமாற்றியவனை பிடிக்க தன்னுடைய விலையுயர்ந்த குதிரையில் காட்டு வழியாக வேகமாக வந்தார்.

காட்டின் நடுவில் ஒரு இளைஞர் ஒரு சின்ன கூடையை கவிழ்த்து வைத்து அருகில் அமர்ந்திருப்பதை கண்டார்.

“ஏம்பா! இங்கே ஒருவன் பசுக்களுடன் போனதை பார்த்தியா?”

“ஆமாம் அய்யா, ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒருவன் போவதை பார்த்தேன், ஏன் என்னாச்சு”

“அவன் என் தாயாரையும், மனைவியையும் ஏமாற்றி என் நகைகள், பணம், பசுக்களை எடுத்துக் கொண்டு போகிறான், அவனை பிடிக்க வேண்டும்”

“அப்படியா, என்ன அநியாயம், வேகமாக போனால் அவனை பிடிக்கலாம், ஆனால் உங்களால் அத்தனை வேகமாக போக முடியுமா? வேண்டும் என்றால் ஒன்று செய்யுங்கள், நீங்க உங்க குதிரையை கொடுங்க, நான் போய் பிடித்து வருகிறேன், ஆனால் நீங்க இந்த கூடையில் இருக்கும் கிளியை மட்டும் விட்டு விடாதீங்க, எங்க எஜமானன் என்னை கொன்றே விடுவார்”

உடனே ஜமிந்தார் தன்னுடைய குதிரையை சிவாவிடம் கொடுத்தார், பின்னர் சிவா “நான் போய் பிடிக்கிறேன், ஆனால் என்னை யாரும் நம்பமாட்டாங்க, எனவே நீங்க உங்க உடை, மற்றும் ஜமிந்தாருக்குரிய நகைகளை எனக்கு போட்டு விடுங்க, அப்போ தான் மத்தவங்களும் நம்புவாங்க, அவனையும் பிடிக்க வசதியாக இருக்கும்”

உடனே ஜமிந்தார் தன்னுடைய உடையை எல்லாம் கழட்டி கொடுத்து விட்டு, சிவாவின் உடையை உடுத்திக் கொண்டு, அந்த கூடையை பத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

சிவாவோ வேகவேகமாக மலையடிவாரம் வந்து அங்கே இருந்த பசுக்கள், சாரட்டு வண்டி எல்லாவற்றையும் ஓட்டிக் கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு போய் சேர்ந்தார்.

காட்டிலோ இரவு முழுவதும் சிவா ஏமாற்றியவனோடு வருவார் என்று காத்திருந்து கிழிந்த உடையோடு இருந்த ஜமிந்தார் கூடையை தூக்கி பார்த்தால், அதில் ஒன்றுமே இல்லை, மீண்டும் எத்தன் தன்னையும் ஏமாற்றி விட்டானே என்று புலம்பிக் கொண்டே நடந்து ஊருக்கு போய் சேர்ந்தார் ஜமிந்தார்.

சிவா, பசுக்கள், சாரட்டு வண்டி, மற்றும் குதிரையை விற்று பணமாக்கி, நகைகளுடன் வீடு போய் சேர்ந்தார்.

தன் தாய், தந்தையிடம் தங்களை கஷ்டப்படுத்திய ஜமிந்தாரை ஏமாற்றி இழந்த பணத்தை மீண்டும் சம்பாதித்ததை சொன்னார். எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டு என்பதை சிவா பொல்லாத ஜமிந்தாருக்கு உணர்த்தி விட்டார், தனக்கு கஷ்டம் வரும் போது ஊர் மக்கள் யாருமே கவலைப்பாடாததை கண்ட ஜமிந்தாரும் மனம் திருந்தி விட்டார். அனைவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *