கதவின் வெளியே மற்றொரு காதல்

3
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 21,912 
 

”வேல்னு ஒரு பையன். பெரிய ஜர்னலிஸ்ட். அஞ்சு மாசம் முன்னே அறிமுகம். நாலு மாசமா நல்ல ஃப்ரெண்ட். இப்ப கொஞ்ச நாளா லவ்வர் மாதிரி தெரியிறான். ஆக்ச்சுவலா நான் அவனை லவ் பண்றேன்னு நினைக்கிறேன்டி!”

அதிர்ச்சி ப்ளஸ் குழப்பம் ப்ளஸ் ஆச்சர்யம் ப்ளஸ் இன்ன பிற சங்கதிகள் என்னை அதிரடித்தன. ஏற்கெனவே ஒரு காதலில் இருப்பவளிடம் இருந்து அந்த வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும், ‘எங்களது எ ட்ரூ லவ் ஸ்டோரி!’ என்று அவள் வாயால் நூறு தடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் காதலில் அவளுக்கு எதுவும் பிரச்னைகளோ, மனஸ்தாபங்களோ, ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் கூடக் கிடையாது என்பதும் எனக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது அவளுக்கு இன்னொரு காதல் என்றால்… எனக்கு ஓராயிரம் வாட்ஸ்!

‘ஏன், எதற்கு, எப்படி?’ இந்தக் காதலைப்பற்றி இந்த நிமிடத்தில் தோன்றிய கேள்விகள். ஒரே நேரத்தில் இரண்டு காதல்கள், இரண்டு காதலன்கள் என்கிற கான்செப்ட்டே எனக்கு அருவருப்பாக இருந்தது. அவளின் புதிய காதல் பற்றி, பழைய காதலின் உரிமையாளன் சரணுக்குத் தெரிந்தால் எப்படி ஏற்றுக்கொள்வான் என்பதும் கொஞ்சம் பயம் ப்ளஸ் பதற்றமாக இருந்தது. சரண் இந்த விஷயத்தில் என்ன செய்வான்? அழுது புலம்புவான், கெஞ்சுவான். அதிகபட்சமாகக் காலில் விழுவான். பின்பு? மற்றொரு பெண்ணைத் தேடி ஓடிவிடுவானோ?

இந்த டாப்பிக்கை மேலும் தொடர்வதற்குக்கூட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவள் என் ஆத்மார்த்தமான தோழி. அவளது மிகவும் அந்தரங்கமான விஷயத்தை என்னிடம் விவாதிக்கிறாள் என்பதற்காகப் பொறுத்துக்கொண்டேன்.

ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் அழகான ரிப்போர்ட்டர் அவள். தூர்தர்ஷனில் இருந்து தமிழக ஜனங்களைத் தன்பக்கம் திருப்பிய முதல் தனியார் சேனலின் சர்ச்சைக்குரிய விஷயங்களை ‘டாக் ஷோ’வாக்கும் தயாரிப்பாளர் நான். என் மன வருத்தங்களை அவளிடமும், அவளின் கசடுகளையும் அசடுகளையும் என்னிடமும் என்று மாற்றி மாற்றிக் கொட்டிக்கொண்டு இருந்தோம். இருவரும் இப்படி ஏதோ ஒரு அலைவரிசையில், குருவிகள் எதுவும் குறுக்கிடாமல் ஒலி-ஒளி பரப்பிக்கொண்டு இருந்தோம்.

இது சிட்டி சென்டர். காபி ஷாப் அழைத்து வந்து, அவளுக்கு மட்டும் பிடித்த கோல்ட் காபியை எனக்கும் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்தாள். சுற்றிலும் கண்ணாடிகள். காபியின் மணம். புரியாத பாஷை என்றாலும், அது சொல்ல வந்த விஷயம் புரியும் இசை. ஆங்காங்கே தொட்டுச் செல்லும் பர்ஃப்யூம்கள், சிரிப்பொலிகள், சின்னச் சண்டைகள், செல்லக் கோபங்கள் என்று அந்தச் சூழல், எந்தப் பெண்னையும் சிண்ட்ரெல்லாவாக எண்ணவைக்கும். எந்தப் பையனையும் சிண்ட்ரெல்லாவைத் தூக்கிச் செல்லும் இளவரச னாகவும்… என் எண்ணங்களை பிரேக் அடித்து நிறுத்திவிட்டு, மீண்டும் அதே இடத்துக்கு வந்து நின்றாள்.

”நான் அவனை லவ் பண்றேன்னு நினைக்கிறேன்டி. ஆனா, அது சரியா தப்பான்னு தெரியலை. கன்ஃப்யூஸிங்!” என்று ஸ்ட்ராவால் காபியைக் கலக்கினாள். ”வேல், பயங்கர இன்டெலிஜென்ட். சே குவேரால ஆரம்பிச்சு செம்புலிங்கம் வரைக்கும் அத்துப்படி. சில்வியா ப்ளாத்தோட இயற்கையும் பிரமிளோட யதார்த்தமும் அவன் கத்துக் கொடுத் தது. ஆத்மாநாம் மாதிரி நிறைஞ்ச மனசோட சீக்கிரம் செத்துப்போயிடணும்னு நினைக்கிறவன். நிறைய பேசுவான். எப்படிப் பேசுவான், என்ன பேசுவான்னு தெரியாது. ஆனா, அவன் எப்பவும் பேசணும்னு ஆசைப்படறேன். ஒரு பிரஸ்மீட்லதான் பார்த்தேன். பிடிச்சிருந்தது. இப்ப…” என்றபடியே நிறுத்தினாள். சில நொடிகள் சுழலாமல் சென்றன.

இருவரின் பார்வைகளும் நேர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வேறு பாதையில் பார்த்தேன். பக்கத்து டேபிளில் ஓர் அழகான பெண் சர்வ் செய்துகொண்டிருந்தாள். கல்லூரியில் படிப்பவளாக இருக்கும். அவள் முகத்தின் சந்தோஷமும், துறுதுறுப்பும்… இளமை மெதுமெதுவாக எங்களை விட்டு நழுவுகிறதோ என்று எண்ணவைத்தது. பெரிய பெரிய விஷயங்களை யோசித்து வாழ்க்கையின் சிறு சிறு தருணங்களைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம் என்ற வருத்தத்தையும் மீறி இயலாமை ஒன்றும் வந்தது.

மறுபடி தொடர்ந்தது காதல்.

”நத்திங். அவனோட விடிய விடிய பேசறேன். ஆபீஸ்ல உக்காந்து எஸ்.எம்.எஸ்ஸா அனுப்பித் தள்றேன். பதில் வரணும்னு அவசியம் கிடையாது. ஆனா, சொல்ல விரும்புறது அவனுக்கு போய்ச் சேரணும். லவ் டு தி கோர்!” என்றாள். வேலின் மீதான காதலும், ‘எ ட்ரூ லவ் ஸ்டோரி’தான் என்று எனக்குப் புரியவைத்துக் கொண்டு இருக்கிறாள்.

”டூ டேஸ் பேக். நைட் பத்து மணிக்கு மேல ஒரு பிரஸ்மீட் முடிச்சுட்டு ஒண்ணா வர்றோம். பீச் ரோட்ல வண்டியை நிறுத்திட்டு, ஒரு லாங் வாக். பேர் தெரியாத பூக்களோட வாசம்!” என்று நிறுத்தினாள். பூக்கள் வாசமே அலர்ஜி என்பவளுக்குப் பெயர் தெரியாத பூவின் வாசம் பிடித்திருந்தது.

”கண்ணகி சிலை தாண்டியதும் விலகி நடந்த என்னைப் பக்கத்துல இழுத்து அழகா ஒரு முத்தம் கொடுத்தான்!” என்றாள். ”கோபம், சந்தோஷம், பரவசம், துக்கம்னு எந்தவொரு ஃபீலும் அப்ப வரலை. ஆனா பிடிச்சிருந்தது!” என்றாள்.

முத்தம் தப்பென்று சொல்வதற்கு நாங்கள் 16-களில் இல்லை. ஆனால் 24-ஐக் கடந்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை.இதைத் தவிர வேறு கேட்க ஒன்றுமில்லை என்பதால், ”அப்ப சரணைக் கழட்டிவிடப் போறியா?” என்பதற்குள் அந்த வாக்கியத்தினுள் நுழைந்தாள்.

”இல்லையே. ஆனா, வேலையும் லவ் பண்றேன்!” என்றாள்.

சில கண மௌனங்களுக்குப் பின் ”இது என்ன ஃபெமினிசத்தின் அடுத்த ஃபேஷனா? பசங்களுக்குப் போட்டியா நீங்களும் ரெண்டு பேரை லவ் பண்றது?” என்றதும், ”சாம்பார் சாதம்… சாம்பார் சாதம்!” என்று திட்டினாள். ”ஃபெமினிசம்கிறது ஒரு பேத்தல். நான் சொல்றது எமோஷனல். எனக்குள் காதலைத் தூண்டிய ரெண்டு பேரைப்பத்தி பேசிட்டிருக்கேன், புரியலையா உனக்கு?”

”புரியுது!” என்ற பின் இருவருக்கும் இடையில் மௌனம் வந்து அமர்ந்துகொண்டது.

மெதுவாகக் கூறினாள். ”என் மனதுக்கு நெருக்கமான இரண்டு ஆண்களை நான் காதலிக்கிறேன். அது தப்போன்னு ஒரு ஃபீல் இருந்தது. ஆனா, நாம பேசிக் கிட்டது எனக்குச் சில விஷயங்களைப் புரியவெச்சிருக்கு. எல்லாருக்கும் இரண்டாவது காதல் எந்த நிமிடமும் நிகழும். ஏன் நான்காவது காதல்கூட வரும், வந்தே தீரும். வாழ்க்கை முழுவதும் காதல் நம்மைத் துரத்திக் கிட்டே இருக்கும். ஆனா, சிலர் ஏதோவொரு குற்ற உணர்ச்சியில் அதை ஒதுக்கிடுறாங்க. ஆனா, நான் என்னைத் துரத்தும் காதலை வரவேற்றுக் கொண்டாட முடிவு செய்திருக்கிறேன்!” என்று அவள் செய்த நீண்ட பிரசங்கத்தில் எனர்ஜி எல்லாம் இழந்த ஒரு நூல் கயிற்றைப் போல மாறியிருந்தேன். மணி பார்த்தேன். இரவு பதினொன்றரை!

”கிளம்பலாமா… உன் அம்மாவும் என் ஹாஸ்டல் வார்டனும் சில கத்திகளைக் கூர் தீட்டி வெச்சிருப்பாங்க!” என்று சிரித்தேன்… தாள்… தோம்!

அதன் பின் வந்த நாட்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் காலண்டர் கிழித்துத் துப்பின. வேல் மற்றும் சரண் ஆகியோருடன் தான் ஆழமான காதலில் இருப்பதாக காபி ஷாப் சந்திப்புகளின்போது அவள் பகிர்வது தொடர, ஆச்சர்யமாக இருந்தது! ஒரே ஒரு காதலையும் பராமரிக்கத் தெரியாமல், முனை திரும்பாத சாலையில் வழி தவறி வந்தவளாக மூச்சு திணறிக்கொண்டு இருப்பவள் நான். இவள் எப்படி இப்படி என்று வியப்பாக இருந்தது.

சீனு… இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சனிக்கிழமை. சூரியன் மெதுவாக முத்துக்குளிக்க தொடங்கிய மாலை நேரத்தில், தன்னுடைய காதலை எனக்குப் பரிசளித்தான். கண்ணீரும் திணறுலுமாக அதைப் பெற்றுக்கொண்ட சந்தோஷம் இப்போது லேசாகத் தகர்ந்துகொண்டு இருக்கிறது என்பது சின்ன நெருடல்தான். ஆனாலும், காதல் தொடர்கிறது ஓர் ஆழமான அன்பின் காரணமாக!

இப்படி என்னைச் சுற்றிச் சுழன்றுகொண்டு இருந்த காதலைக் கொஞ்சம் ஒதுக்குவதற்காக, வேலை என்னும் ஓட்டுக்குள் என்னை ஆமையாகச் சுருட்டிக் கொண்டேன். அலுவலகப் பணிகள் ‘கொயட் ஓ.கே’. வேறு ஏதாவது கமர்ஷியல் புரோகிராமில் நுழைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். டாக் ஷோ என்னைக் கிழவியாக எண்ணவைத்தது.

சேனலின் புதிய புரோகிராம் ஹெட் ஷேன் நேற்றுதான் பொறுப்பேற்றிருந்தார். கார்கோ கால், கம்ப்யூட்டர் கை, புகையும் இங்கிலீஷ் என்று 33 வயதில், அதைக் காட்டிலும் கூடுதலான பொறுப்பில் இருந்தார். தமிழ்த்தனங்கள் நிரம்பிய ஷேன் ‘அந்நியனாக’வே தெரிந்தார். அவரிடம் பேசுவதற்கே தயக்கமாக இருந்தபோது, வேறு புரோகிராமுக்கு மாற்றுங்கள் என்று எப்படிக் கேட்பது என்பது புரியவில்லை.

அந்த நாளின் கழியாத நிமிடங்களை பெருந்தேவியின் கவிதையும், கோணங்கியும் நிரப்பியிருந்தார்கள். கவிதைகளின் வாசத்தில் மூழ்கிய என்னை, முன்னாடிய நிழல் நிமிரவைத்தது. ஷேன்!

”இன்னிக்கு வொர்க் நோ! அதான்… ஸோ ச்சும்மா!” என்று திக்கித் திணறினேன். ‘இந்தாளுக்குத் தெரிஞ்ச தமிழுக்கு இது போதும்’ என்று மனதுக்குள் திட்டிய படியே!

எதுவும் பேசாமல் என் கையிலிருந்த புத்தகங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, ”நைஸ்!” என்ற ஷேன், ”பெருந் தேவியும் கோணங்கியும் என் மிக நெருங்கிய நண்பர்கள்” என்றார் அழகான தமிழில்!

‘அடப்பாவி! உனக்கு இவ்ளோ தமிழ் தெரியுமா? பிறகெதுக்குடா பீட்டர்லயே பொளந்து கட்டிட்டிருக்கே!’ என்று மனதுக்குள் நினைத்ததைக் கண்டுபிடித்தாரோ என்னவோ, ”நான் விருதுநகர்ல ஒரு கவர்ன் மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். அப்புறம் சென்னை, கனடா, ஆஸ்திரேலியானு வட்டம் சுத்தி இப்ப மீண்டும் சென்னை!” என்று ஜியாமெட்ரி போட்டுக் காண்பித்தபடியே சிரித்தார். பல் தெரியாத அவருடைய சிரிப்பு அழகாக இருந்தது.

”உங்க டாக் ஷோ சேனல் ரேட்டிங்ல நம்பர் டூ. தெரியும்தானே… கங்கிராட்ஸ்!” என்றார் ஆங்கிலத்துக்குத் தாவியபடியே. இந்த அறிமுகம் அன்றைய நாளின் இறுதி வரை எனக்கு ஒரு புன்னகையைப் பரிசாகத் தந்திருந்தது. மறுநாள் என் டேபிள் மேல் பிரமிளின் கவிதைப் புத்தகங்களும், அவரே வரைந்த பிரத்யேகமான சில படங்களும் இருந்தன. ‘காற்றில் மிதக்கும் சிறகு’ ஞாபகம் வந்தது. ‘யார் வைத்திருப்பார்கள்?’ என்ற கேள்விக்கு, புத்தகத்தின் முதல் பக்கம் பதில் சொன்னது. ‘அழக(றி)வான தோழிக்கு, வாழ்த்துக்களுடன் ஷேன்!’ பதிலுக்கு ஆர்கிட்ஸ், ட்யூலிப்ஸ் என்று கலந்து கட்டிய பொக்கே ஒன்றைப் பரிசாக அனுப்பிவைத்தேன்.

பின் சில காபி ஷாப் சந்திப்புகள்.

ஒரு மூன்றாம் பிறையின் குளிர் இரவில், ஐந்து நட்சத்திர ஓட்டலின் ‘ரூஃப் டாப்’பில் அமர்ந்து கதை பேசினோம். அவர் பீரும், நான் மோர் சாதமுமாகக் கழித்த பொழுதை லேசான தூறல் மேலும் அழகாக் கியது. நிறையப் பேசினோம்.

என்னைப் பற்றி, சீனு பற்றி, சீனு மீதான என் காதல் பற்றி, ஷேன் பற்றி, பெண்கள் நிறைந்த அவர் உலகம் பற்றி, புத்தகங்கள், கவிதைகள், சினிமா என்று நிறைய! பேச்சினூடே சண்முகத்தின் சுருக்கம்தான் ஷேன் என்று தெரிந்தபோது அந்தப் பெயர் மீது ஒரு கிரேஸ் வந்துவிட்டிருந்தது. அதன் பின் வந்த இரவுகள் முழுவதும் ஷேனின் போன் கால்களால் விடியத் தொடங்கியிருந்தது. இதற்காகவே சீனுவிடம் சீக்கிரம் ‘குட்நைட்’ சொல்லத் தொடங்கியிருந்தேன். ஷேன் உலகில் நானும் என் உலகில் ஷேனும் நுழைந்துவிட்டிருந்தோம் என்பது புரிந்தபோது, தவிர்க்க முடியாமல் புன்னகை தானாகவே அரும்பியது.

எதேச்சையாக காலண்டரில் கண்கள் பதிய, நாளை சனிக்கிழமை!

ஷிட்… எனக்கும் அவளுக்குமான சனிக்கிழமை சந்திப்புகள் எத்தனை தவறிப்போயிருக்கின்றன என்பது நிமிடத்தில் புரிந்தது. சட்டென்று மொபைல் எடுத்து போன் செய்தபோது வழக்கம் போல் பிஸி!

அரை மணி நேரத்துக்குப் பின் அவளே லைனில் வந்தாள். ”நாளைக்கு ஈவ்னிங் ப்ரீயா இருந்தா, கேக் வாக் வர்றியா?” என்றேன்.

இருட்டியும் இருட்டாமலும் இருந்த ஒரு நேரத்தில், இருவரும் ‘கேக் வாக்’கில் அமர்ந்திருந்தோம். எனக்குப் பிடித்த கேக்கை அவளுக்கும் ஆர்டர் செய்தேன்.

”ரொம்ப அழகாயிருக்கே!” என்றாள்.

”தேங்க்ஸ்” என்று வழிந்த அசடைச் சமாளித்தேன். சில நிமிடத் தயக்கங்களுக்குப் பின் நானே தொடங் கினேன். ”ஷேன்னு ஒருத்தர். எங்க சேனல்ல புது புரோகிராம் ஹெட். ஃப்ரெண்டாதான் இருக்கோம். ஆனா, நான் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்னு இப்பத் தோணுது!”

”அருவருப்பா இல்லையா. ஒரே நேரத்துல ரெண்டு காதல்… ம்?!’ என்றாள்

”நோ, நஹி, லேது, இல்லை!”

”அப்ப சீனுவைக் கழட்டிவிடப் போறியா?”

”சான்ஸே இல்லை. ஆனா, ஷேனையும் லவ் பண்றேன்!” என்று நான் சொல்லி முடித்த இரண்டாவது நொடியில், எங்கள் இருவரின் முகத்தில் அரும்பிய புன்னகை குறுஞ்சிரிப்பாக மாறி, அருவியாகப் பொங்கி, காட்டாறாகப் பிராவாகம் எடுத்து, கண் களிலும் வழிந்தது நீர்.

ஒரு நீண்ட மௌனம் நிலவியது எங்களுக்குஇடையில்.

ஒரு மழை, ஒரு தூறல், ஒரு சாரல், ஒரு தூவானம்… ஏதாவது பெய்தால் நன்றாக இருக்கும்!

Print Friendly, PDF & Email

3 thoughts on “கதவின் வெளியே மற்றொரு காதல்

  1. Anbalvaruvathu kathal . arrival varuvathu natpu.kathalium natpAium kuzapathinga. time pass agalina ungaluku thonrathi yellam kathinu sollathinga.orupennuku paiyan nanbanaga errukakudatha;avan kathalana mattumthan Erika
    Mudiuma. “Arokyamana sindanai” Ann; penn;
    Eruvarukullum vidika muyarchi seienga.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *