கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 5,025 
 

 (1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருத்து 16-18 | குருத்து 19-21 | குருத்து 22-23

குருத்து பத்தொன்பது 

“அடுத்தாற்போல் எங்கே போகலாம்?” என்று கேட்டாள் பாரதி. 

“சொர்க்கத்துக்கு…” என்றான் ராஜா. 

“அந்த ‘ரூட்’டுக்கு நம்ம வண்டிக்கு பர்மிட் இல்லீங்க! ……” என்றான் டாக்ஸி டிரைவர் சிரித்துக்கொண்டே. 

ராஜாவும் பாரதியும் சிரித்து விட்டனர். 

“டிரைவர்! நீங்க ரொம்பத் தமாஷாகப் பேசறீங்களே! சில டாக்ஸி டிரைவருங்க மூஞ்சியை ‘உம்’மென்று வைத்துக் கிட்டிருப்பாங்க. அவங்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது…” என்றான் ராஜா. 

“எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணுங்க. எந்த நேரமும் கவலைப் பட்டுக்கிட்டு இறக்கிறவங்களை வாழத் தெரியாதவங்கன்னுதான் சொல்லணும்…” என்றான் டிரைவர். 

“பலே, பலே! நீ என் கட்சி!’ என்றான் ராஜா. 

“எந்தப் பக்கம் போகணுங்க?…” டிரைவர் கேட்டான்.

“மவுன்ட் ரோடு பக்கம் தான்.” 

“ஆறரை மணிக்குத்தானே சினிமா? இன்னும் ரொம்ப நேரம் இருக்குதே!” என்றாள் பாரதி. 

“அத்தை லைப்ரரியிலிருந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லியிருக்காங்க. அங்கே அரை மணி நேரம். அப்புறம் ஓட்டல்லே முக்கால் மணி நேரம்… ஆமாம்; நீ அத்தை கிட்டே சினிமாவுக்குப் போறதாச் சொல்லிட்டு வந்தாயா?..” 

“ம்…”

“அத்தை என்ன சொன்னாங்க?…” 

”யாரோடு சினிமாவுக்குப் போகப் போகிறாய் என்று கேட்டாங்க… சிநேகிதிகளோடு போகப் போறதாச் சொன்னேன். ‘சரி’ன்னுட்டாங்க…” 

“நான் சொல்லலையா? இன்றைக்கு அத்தை நல்ல ‘மூட்’லே இருக்காங்க. நீ போய்க் கேளு. உடனே பர்மிஷன் கொடுத்துடுவாங்கன்னு…” 

“ஆமாம்; நீங்க இன்றைக்கு லேட்டாக வீட்டுக்கு வந்தால் பிரின்ஸிபால், எங்கே போயிருந்தேன்னு கேட்பாங்களே!…?” 

“கேட்கட்டுமே…” 

“நீங்க என்ன பதில் சொல்லுவீங்க?” 

“எங்க கல்லூரியிலே இன்றைக்கு ஆண்டு விழான்னு ஒரு ‘டூப்’ அடிச்சுடறேன்…” 

“என்னை மட்டும் சினிமாவுக்குப் போறதாக நிஜம் சொல்லச் சொல்லிவிட்டு நீங்க பொய் பேசலாமா?” என்று கேட்டாள் பாரதி. 

“இது பொய் இல்லை, பாரதி!” 

“பின் என்னவாம்? 

“புளுகு!”

“புளுகுக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம்!” 

“புளுகிலே பிறத்தியாருக்குத் தீங்கு கிடையாது..பொய்யிலே அது உண்டு…” 

“அப்படின்னா நான் சிநேகிதிகளோடு சினிமாவுக்குப் போறதாச் சொன்னது பொய்தானே?” 

“இல்லை; புளுகு!…” 

“எனக்கென்னவோ பயமா யிருக்குது… நாம் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டுச் சினிமாவுக்குப் போயிருக்கோம்னு பிரின்ஸிபாலுக்குத் தெரிஞ்சுதானா?…” 

“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீதான் பர்மிஷன் வாங்கியிருக்கியே!” 

“நீங்க வாங்கலையே!” 

“நான் சினிமாவுக்குப் போகலையே. கல்லூரி ஆண்டு விழாவில் இருந்தல்லவா வர்றேன். அதனாலே லேட்!” 

“சுத்தப் பொய்!” 

“மறுபடியும் பார்த்தாயா! புளுகுன்னு சொல்லு!”

“எல்பின்ஸ்டனுக்குப் போறீங்களா?” டிரைவர் கேட்டான். 

“முதல்லே லைப்ரரிக்குப் போ. அதோ தெரியுது பார்! அந்தக் கட்டடத்துக்கு முன்னாலே நிறுத்து…” என்றான் ராஜா. 

டாக்ஸி அங்கேபோய் நின்றதும் ராஜாவும் பாரதியும் இறங்கி லைப்ரரிக்குள் சென்றனர். 

“என்னை அனுப்பிடுங்க ஸார்! வெயிட்டிங்லே போடாதீங்க. சம்பாதிக்கிற நேரம்” என்றான் டிரைவர். 

“அதுவும் சரிதான்!” என்று கூறிய ராஜா, அவனுக்கு மீட்டருக்கு மேல் அதிகப்படியாகவே ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினான். 

“ரொம்ப சந்தோஷங்க” என்று கூறிச் சென்றான் டிரைவர். 

அரை மணி நேரம் கழித்து ராஜாவும் பாரதியும் வெளியே வந்து டாக்ஸிக்காகக் காத்திருந்தபோது அதே டாக்ஸி அருகில் வந்து நின்றதும் பாரதிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. 

“நீயே வந்து விட்டாயா?” என்றான் ராஜா. 

“ஆமாங்க. இதுக்குள்ளே மாம்பலத்துக்கு ஒரு சவாரி கிடைச்சுது. போயிட்டு வந்தேன். ஏறிக்குங்க. ஓட்டலுக்குத்தானே?”

“ஆமாம்…” 

“எந்த ஓட்டலுக்கு?” என்று கேட்டான் டாக்ஸி டிரைவர். 

“முன்னொரு நாள் திறந்த வெளி மாடியில் சாப்பிட்டோமே… அந்த ஓட்டலுக்கே போகலாம்.” என்றாள் பாரதி. 

டாக்ஸியை அந்த ஓட்டலுக்கு விடச் சொன்னான் ராஜா. 

“பக்கத்திலேதான் சினிமா. நாங்கள் நடந்தே போய் விடுகிறோம். நீ காத்திருக்க வேண்டாம்” என்று கூறிய ராஜா, டிரைவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பினான். 

பிறகு இருவரும் அந்த ஓட்டலுக்குச் சென்று திறந்த வெளி மாடிக்குப் போய் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த வட்ட மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டனர். 

“என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஸர்வர். 

அவனிடம் இரண்டு மசாலா தோசைக்கு ஆர்டர் கொடுத்தான் ராஜா. 

“எனக்கு மசாலா தோசை பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கேட்டாள் பாரதி. 

“எனக்குத் தெரியாது; மசாலா தோசைக்குச் சொன்னால் அது வருகிற வரைக்கும் கொஞ்சம் பொழுது போகுமே என்பதற்காகச் சொன்னேன்…” என்றான் ராஜா. 

பாரதி சிரித்துக்கொண்டே அந்த லைப்ரரி புத்தகத்தை எடுத்துப் புரட்டினாள். 

“மசாலா தோசை வருவதற்குள் நீ இதைப் படித்தே முடித்துவிடலாம்” என்றான் ராஜா. 

“ரொம்ப ட்ரை ஸப்ஜெக்ட்! பிலாஸபி! இதைப் போய் வாங்கி வந்தீர்களே!” என்றாள் பாரதி. 

“இது உனக்கல்ல; அத்தைக்கு. இந்த மாதிரி ட்ரை ஸப்ஜெக்ட்தான் அவங்களுக்குப் பிடிக்கும்..” 

சற்று நேரத்துக்கெல்லாம் மசாலா தோசை இரண்டைக் கொண்டு வந்து வைத்தான் ஸர்வர். பாரதி தோசையின் முறுகலான பாகங்களை மட்டும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள். 

“மசாலா தோசையைக் கண்டுபிடித்தானே அவனுக்கு ஒரு சிலை கட்டி வைக்க வேண்டும்…” என்றான் ராஜா. 

“ஐஸ்க்ரீம் கண்டுபிடுத்தவனுக்கும் தான்” என்றாள் பாரதி. 

“இப்போது ஐஸ்க்ரீம் வேணும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாயா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் ராஜா. 

“இல்லை, இல்லை” என்றாள் பாரதி, 

ஸர்வரைக கூப்பிடுவதற்காக ராஜா திரும்பிப் பார்த்த போது வேறொரு மூலையில் அவனுடைய காலேஜ் பிரின்ஸிபால் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அவன் ‘திருதிரு’வென்று விழிப்பதைக் கண்ட பாரதி, “ஏன் ராஜா! ஏன் இப்படி இஞ்சி தின்ற மாதிரி விழிக்கிறீங்க…?’ என்று கேட்டாள். 

“நிஜமாகவே இந்த மசாலாவிலே இருந்த ஓர் இஞ்சித் துண்டைத் தின்னு விட்டேன். அதுதான்…” என்று கூறி மழுப்பினான் ராஜா. 

“பொய், பொய்! எதையோ என்னிடம் சொல்லாமல் மறைக்கப் பார்க்கிறீங்க…” 

“எங்க பிரின்ஸிபால் வந்திருக்காரு. நாம ரெண்டு பேரும் அவர் பாக்கறதுக்கு முந்தி எழுந்து போயிடணும்…” 

“அவர் சினிமாவுக்கும் வந்து சேர்ந்தால்?…” 

“வர மாட்டார். சினிமான்னா அவருக்குப் பிடிக்காது…” அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டனர். 

”இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். காலையிலும் மாலையிலும் சற்று நேரம் தோட்டத்துக்குள் உலாவும் நேரம் தவிர, வெளியில் எங்குமே செல்லக்கூடாது” என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தாள் டாக்டரம்மாள். 

அறைக்குள்ளாகவே கட்டுப்பட்டுக் கிடக்கும் கொடுமையைப் பார்வதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கல்லூரிக்குப் போகாமல், கல்லூரியைக் காணாமல், கல்லூரி மாணவிகளுடன் பேசாமல், கல்லூரியில் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றாமல் இருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. 

அந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே உத்தியோகத்தில் அமர்ந்து, அங்கேயே புரொபஸராகி, கடைசியில் அந்தக் கல்லூரிக்கே பிரின்ஸிபாலும் ஆகிவிட்டாள் அவள். படித்த காலத்தில் கூரை வேய்ந்த சிறு சிறு ஷெட்டுகளே வகுப்பறைகளாக இருந்தன. இப்போது அந்தப் பழைய தோற்றமே அடியோடு மாறிப் புதிய புதிய கட்டடங்களாக உயர்ந்து நிற்கின்றன. அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு செங்கல்லும், அவளுடைய முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஊக்கத்துக்கும் சான்று கூறிக் கொண்டிருக்கின்றன. 

புறத் தோற்றத்தில் மட்டும் அந்தக் கல்லூரிக்குக் கவர்ச்சி தேடித் தரவில்லை அவள். அங்கே படித்துத் தேறிய மாணவிகளில் பெரும்பாலோர் இன்று பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கி வருகின்றனர். பண்புக்கும், ஒழக்கத்துக்கும் உறைவிடமாகத் திகழும் அந்தக் கல்லூரியை அவள் ஒரு தெய்வத் திருக்கோயிலாகவே போற்றி நடத்தி வருகிறாள். மற்ற கல்லூரித் தலைவர்கள் பார்வதியிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் கொண்டு ஒருவித அச்சத்துடனேயே பழகி வந்தனர். 

பார்வதியின் உடல் நிலையைப்பற்றி விசாரித்துவிட்டுப் போக இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தினமும் பலபேர் வந்து போய்க்கொண்டிருந்தனர். கல்வித்துறையில் புகழ்பெற்ற நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேதாந்திகள், டாக்டர் பட்டம் பெற்ற அறிவாளிகள், பழைய மாணவர்கள், இதரக் கல்லூரித் தலைவர்கள் எல்லோருமே வந்தனர். 

நம் நாட்டுக்கேற்ற வகையில் கல்வித் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப் பார்வதி அவர்களிடம் விவாதித்தாள். அவளுடைய பேச்சைக் கேட்ட பிறகு, அவர்களுக்குப் பார்வதியிடமிருந்த மதிப்புப் பன்மடங்காக உயர்ந்தது. 

அன்று, கார்னேஷன் கல்லூரி பிரின்ஸிபால் வேதாந்தம் வந்திருந்தார். தூய தமிழிலேயே அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த பார்வதி, அவர் புறப்படும் நேரத்தில் ஞாபகமாக, “மீனா – கோபாலன் நட்பு இப்போது எந்த மட்டில் இருக்கிறது?” என்று கேட்டாள். 

வேதாந்தம் சிரித்துக் கொண்டே, “நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தாங்கள் கூட மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தீர்களாம். அவளுடைய தந்தை என்னைக் காண வந்திருந்தபோது கூறினார். கோபாலனைப்பற்றி எல்லா விவரங்களையும் விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனையும் நேரில் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார். அநேகமாகத் திருமணத்துக்கு ஏற்பாடானாலும் வியப்பதற்கில்லை’ என்றார். 

“அவர்கள் இருவருக்கும் என் மனப்பூர்வமான ஆசிகள்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள் பார்வதி. 

இரவு மணி ஒன்பதரை இருக்கலாம். பார்வதி கண்களை மூடியபடியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ‘ஒருவேளை சேதுபதியாயிருக்குமோ?’ என்று யோசித்தாள். 

ஞானத்தை அழைத்து “வாசலில் கார் சத்தம் கேட்டதே, யார் வருகிறார்கள் என்று பார்” என்றாள். 

“பாரதி…” என்றாள் ஞானம். 

“ராஜா இன்னும் வரவில்லையா? பார்வதி கேட்டாள். “இன்னும் இல்லை…” 

“சரி; சாப்பிட்டு முடிந்ததும் பாரதியை இங்கே வரச் சொல்!” என்று கூறி அனுப்பினாள் பார்வதி. 

முதலில் பாரதியை டாக்ஸியில் கொண்டுவந்து விட்ட ராஜா பத்து நிமிடம் கழித்து அதே டாக்ஸியில் வந்து இறங்கினான். 

அவன் வந்து இறங்கியபோதும் கார் சத்தம் கேட்கவே, “ராஜாவாகத்தான் இருக்கவேண்டும்” என்பதைப் பார்வதி எளிதில் ஊகித்துக்கொண்டாள். 

பாரதி சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹார்லிக்ஸுடன் பரம சாதுவாக மாடிக்குச் சென்றாள். பாரதியைக் கண்ட பிரின்ஸிபால் “என்ன பாரதி! சினிமா நன்றாயிருந்ததா? என்ன படம் யாரெல்லாம் போயிருந்தீங்க?” என்று அன்போடு விசாரித்தாள். 

“இங்கிலீஷ் பிக்சர் மேடம்! அன்னா கரீனா!” என்றாள் பாரதி. 

“டால்ஸ்டாய் எழுதினது. ரொம்ப நல்ல கதையாச்சே! லவ் ஸ்டோரிதான்…ஆமாம்… ராஜா வந்து விட்டானா?” 

“இப்பத்தான் வந்திருக்கிறார்…” 

“அவனைக் கூப்பிடு இங்கே… “

“கூப்பிட்டீங்களா அத்தை!” என்று இறைந்து சத்த மிட்டபடியே மாடிப்படிகள் அதிர ஏறி வந்தான் ராஜா. 

தான் எதுவுமே தவறு செய்யாதவன் போல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே அவசியமின்றி உரத்துச் சத்தமிட்டுக் கொண்டு வந்தான் அவன். 

“ஏண்டா இவ்வளவு நேரம் உனக்கு?” 

“இன்றைக்கு எங்க காலேஜிலே ஆண்டு விழா…அதனாலே லேட்” என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான். 

“ஓகோ!ஆண்டு விழாவா? ரொம்ப ஜோராக நடந்திருக்குமே! டீ பார்ட்டி உண்டா? பிரின்ஸிபால் என்ன பேசினார்?” 

“ஆமாம்; ரொம்ப கிராண்ட்! பிரின்ஸிபால் ரொம்ப நல்லாப் பேசினாரு…” என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான். 

“அப்புறம் டீ பார்ட்டியிலே என்னடா ஐட்டம்?”

“…ம்…மசாலா தோசை!” 

“என்னடா உளறுகிறாய்?… டீ பார்ட்டியிலே மசாலா தோசையா?” 

“ஆமாம், அத்தை! மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கேட்டுக் கொண்டோம், மசாலாதோசை வேண்டும் என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

“சரி; லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வரச் சொன்னே, வாங்கி வந்தாயா?” 

“ஓ!” என்று கூறிய ராஜா, லைப்ரரிப் புத்தகங்களை எடுத்து அத்தையிடம் கொடுக்க வந்தான். அப்போது அந்தப் புத்தகம் ஒன்றிலிருந்து இரண்டு சினிமா டிக்கெட்டுகள் கீழே உதிர்ந்தன. 

“இதென்னடா சினிமா டிக்கெட்?” 

“யாரோ இதுக்கு முன்னாலே இந்தப் புத்தகத்தை லைப்ரரியிலிருந்து வாங்கிக் கொண்டு போனவங்க சினிமாவுக்குப் போயிருப்பாங்க. அவங்க இந்தப் புத்தகத்திலே அந்த டிக்கெட்டுகளை வைத்திருப்பாங்க” என்றான் ராஜா. 

பார்வதிக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவள் புன்முறுவலோடு அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அந்தப் பார்வையிலும் சிரிப்பிலும் “ஏன் பொய் சொல்கிறாய்?” என்ற கேள்வி பொதிந்து கிடந்தது. 

“ராஜா! உங்க கல்லூரிப் பிரின்ஸிபாலுக்குத் துளிக்கூட கடமையுணர்ச்சி என்பதை கிடையாது?” 

“ஏன் அத்தை அப்படிச் சொல்றீங்க. அவர் எதிலேயும் ரொம்ப கரெக்ட் ஆச்சே!”

“இல்லே…கல்லூரியிலே ஆண்டு விழா நடக்கிறபோது அங்கே இல்லாமல், என்னைப் பார்க்க வந்து விட்டாரே. இன்று மாலை இங்கே வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாரே!” என்றாள் பார்வதி. 

‘அடப்பாவி மனுஷா! இங்கேயும் வந்து விட்டாரா?’ என்று எண்ணிக்கொண்ட ராஜா, இஞ்சி தின்ற மாதிரித் திருதிருவென விழித்தான். 

குருத்து இருபது 

பார்வதி எதிரில் அசடு வழிய நின்று கொண்டிருந்த ராஜா, ‘தான் கூறிய பொய்களையெல்லாம் அத்தை புரிந்து கொண்டு விட்டாளே! இனிமேல் ஒருவேளை என்னையும், பாரதியையும் வெளியே செல்ல அனுமதிக்கவே மாட்டாளோ?’ என்று எண்ணமிட்டான். 

“போடா! போய்ச் சாப்பிடு; மணி பத்தரை ஆகப் போகிறது. பாவம்! உனக்காக ஞானமும், காமாட்சி அம்மாளும் எத்தனை நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள், பார்! இனிமேல் சினிமாவுக்குப் போவதாயிருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும், தெரிந்ததா? சினிமாவே பார்க்கக்கூடாது என்கிற கட்சியைச் சேர்ந்தவளல்ல நான். 

மக்களின் உள்ளத்தில் ஒழுக்கத்தையும், பண்பையும் வளர்ப்பதற்குப் பயன்படுத்த வேண்டிய அந்தச் சாதனம், பெரும்பாலும் நேர்மாறான முறையிலேயே உபயோகப் படுத்தப்படுகிறது. அதனால்தான் சினிமாவை நான் வெறுக் கிறேன். நல்ல படங்கள் பார்ப்பதை நான் எப்போதுமே ஆட்சேபித்ததில்லை. ராஜா!…எனக்கு இரண்டே இரண்டு கண்கள்தான் உண்டு. அவை என்ன தெரியுமா? ஒன்று சாரதாமணிக் கல்லூரி; இன்னொன்று நீ! என்னுடைய கண்களில் ஒன்று என் கண்ணெதிரிலேயே கெட்டுப் போவதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? நீ சிறு குழந்தையாயிருந்தபோதே உன் தாயார் உன்னைப் பிரிந்து சென்று விட்டாள். அன்று முதல் உன்னை ஆசையோடு, பாசத்தோடு வளர்த்து வருகிறேன். வருங்காலத்தில் நீ எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருக்கிறேன்.” 

“ஏன் அத்தை வருத்தப்படறீங்க? நான் இப்ப என்ன செய்துட்டேன்?… சினிமாவுக்குப் போகக் கூடாதுங்கறீங்க. அவ்வளவுதானே! இனிமே போகல்லே! அப்படிப் போனாலும் உங்ககிட்ட பர்மிஷன் வாங்காமல் போவதில்லை. சரி தானே!” 

“ரொம்ப சரி; சாப்பிடு போ…”

“எனக்குப் பசியே இல்லை அத்தை!’ 

“எப்படிப் பசிக்கும்? டீ பார்ட்டியிலே மசாலாதோசை சாப்பிட்டிருக்கியே!” என்று சிரித்தாள் பார்வதி. 

“கேலி செய்யாதீங்க அத்தை!…” என்று கூறிக் கொண்டே ராஜா கீழே இறங்கிச் சென்றான். ‘ஒரு மட்டில் அத்தையிடம் தப்பினோம்’ என்ற உற்சாகத்தில் போகும் போதே சினிமாப் பாட்டு ஒன்றை நீட்டி முழக்கிச் சீட்டியடித்துக் கொண்டு போனான்! 

“பாரதி ! நீ சாப்பிட்டாயிற்று அல்லவா? இப்படி என் பக்கத்திலேயே படுத்துக்கொள்…” என்று பிரின்ஸிபால் கூறியதும் பாரதி, அதிக வெளிச்சமின்றிக் குளுமையாக ஒளி வீசும் நீலவிளக்கைத் தவிர, மற்ற விளக்குகளை அணைத்து விட்டுப் படுத்துக்கொண்டாள். 

மணி பதினொன்றுக்கு மேல் ஆகியும் பார்வதிக்குத் தூக்கமே வரவில்லை சந்தடிகள் குறையக் குறைய, ஊர் அடங்கி உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தது. எங்கோ தொலைவில் செல்லும் கார்களின் ஹாரன் ஒலி மட்டும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தன. அவளுக்கு. 

“அவர் இப்போதெல்லாம் முன்போல் இங்கே வருவதில்லையே, ஏன்? ஒரு வேளை அவர் கொண்டுவந்த மாதுளம் பழங்களை நான் ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலோ? இருக்காது; அவர் தம்முடைய கையால் எடுத்துக் கொடுத்ததை நான் என் கை நீட்டி வாங்கிச் சாப்பிட்டேனே! அவருக்கு எத்தனையோ அலுவல்கள்! எவ்வளவோ காரியங்கள். அவற்றுக்கிடையில் என்னை வந்து காண அவகாசம் சிறிதாவது வேண்டாமா?…ஒரு வேளை உண்மையிலேயே என்மீது அவருக்கு அன்பேதான் இல்லையோ? சே! ஒரு நாளும் அப்படி இருக்காது. என்மீது அவருக்கு அன்பு இல்லையென்றால் தம்முடைய தங்கை காமாட்சி அம்மாள், மகள் பாரதி இரண்டு பேரையும் இங்கே கொண்டுவந்து விட்டிருப்பாரா? காமாட்சி கூட அடிக்கடி சொல்லுவாளே, ‘உங்களைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டிருப் பார்’ என்று…அன்பும் அக்கறையும் இல்லையென்றால் அப்படி ஓயாமல் பேசுவாரா? டாக்டரம்மாளிடம் என் தேக நிலைபற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறாராமே! எனக்கு உடல் நலம் சரியில்லை என்பதற்காகத் தம்முடைய வெளியூர்ப் பயணங்களை யெல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறாராமே! இங்கே வராமலிருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் அவர் கூற முடியாமலிருக்கலாம். 

பார்வதி புரண்டு படுத்துக் கொண்டாள். 

‘சேதுபதியை மறந்து விடுவதற்கு, என் உள்ளத்தில் புகுந்து வேரூன்றிவிட்ட அந்த எண்ணத்தை அப்புறப் படுத்துவதற்கு வழியே கிடையாதா? இப்படியே, மனத்திற் குள்ளாகவே மறைத்து வைத்து அவர் நினைவாகவே அவர் கவலையாகவே, படுத்த படுக்கையாகவே இருந்து, ஒரு நாள் மறைந்துபோக வேண்டியதுதானா? இந்த எண்ணம் என்னுள் ளேயே அழிந்து போக வேண்டியது தானா? நான் ஏன் அழிய வேண்டும்? என்னை அணு அணுவாக அரித்துக் கொண்டிருக் கும் இந்த எண்ணத்தை, நான் அழியாமலேயே அழித்து விடுகிறேன். அவருடைய உள்ளத்தில் அந்த எண்ணமிருந்தாலும் நாளையோடு அழித்து விடுகிறேன். அப்புறம் நானும் அவரும் நிம்மதியாக வாழலாம். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் ” பார்வதியின் உள்ளத்தில் ஒரு திடமான முடிவு ஏற்பட்டுவிட்டது. நீண்ட காலமாக அரித்துக் கொண்டிருந்த வேதனை அந்த விநாடியோடு தீர்ந்துபோயிற்று. மிகுந்த நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டாள் அவள். 

கடிகாரத்தில் மணி பதினொன்றரை அடித்தது. 

“இப்போது அமைதியாகத் தூங்கப் போகிறேன்” என்று தனக்குத்தானே எண்ணிக் கொண்டவளாய்க் கண்களை மூடித் தூங்குவதற்குப் பிரயத்தனப்பட்டாள். என்றுமில்லாத நிம்மதி காரணமாக, உள்ளத்தில் வியாபித்திருந்த மகிழ்ச்சி காரணமாக உணர்ச்சி பரவசமாகியிருந்த பார்வதிக்குத் தூக்கமே வரவில்லை. 

திடீரென்று, கீழே, காமாட்சி யாருடனோ மெல்லிய குரலில் இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பது பார்வதியின் காதில் விழுந்தது. 

இன்னொரு குரல் யாருடையது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அவள் உற்றுக் கவனித்தாள். அவள் ஊகித்தபடி அது சேதுபதியின் குரலேதான்! அவளுக்கு வியப்புத் தாங்கவில்லை. 

மாடிப் படிகளில் யாரோ ஏறி வரும் ஓசை கேட்கவே, பார்வதி கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல் படுத்திருந்தாள். 

அறைக்கு வெளியே வந்து நின்ற சேதுபதியும் காமாட்சியும் ஜன்னலினூடே நிழலுருவமாகத் தெரிந்தனர். நீல விளக்கின் லேசான ஒளியில் தெரிந்த பார்வதியின் முகத்தையே சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுபதி. 

“எழுப்பட்டுமா, அண்ணா?….” காமாட்சி கேட்டாள்.

“வேண்டாம்; நான் இங்கு வந்து போவதே அவருக்குத் தெரியக்கூடாது. அதற்காகவேதான் நான் இங்கு இவ்வளவு நேரம் கழித்து வருகிறேன். நான் காரில் வந்தால் அந்தச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டுவிடப் போகிறாரே என்பதற்காகவே நடந்து வருகிறேன்.” 

“டாக்டர் என்ன சொல்கிறார் அண்ணா?” காமாட்சி கேட்டாள். 

“அதிர்ச்சியாலும் கவலையாலும் அடிக்கடி மயக்கம் வருகிறதாம். ஆகையால் இன்னும் கொஞ்ச காலத்துக்குப் படுக்கையிலேயே இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார். இந்த நிலையில் அவரை நான் தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகவே தினமும் இந்த நேரத்தில் வந்து பார்த்து விட்டுப் போகிறேன்…”

“இன்று கூட உன்னைப்பற்றி விசாரித்தார். எங்காவது வெளியூர் போயிருக்கிறாரா என்ன? இங்கே வருவதே இல்லையே என்று கேட்டார்.” 

“நீ என்ன பதில் கூறினாய்?” 

“ஊரில்தான் இருக்கிறார். டெலிபோனில் அடிக்கடி விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்றேன். நீ இப்போது இங்கு வந்திருப்பது தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா அண்ணா? எழுப்பட்டுமா?…” என்று கேட்டாள் காமாட்சி. 

“வேண்டாம், வேண்டாம்…அதோ அந்தப் பக்கம் படுத்துக்கொண்டிருப்பது யார்? பாரதியா?,..” என்று கேட்டார் சேதுபதி. 

“ஆமாம்; பாரதியை எப்போதும் தம் பக்கத்திலேயே தான் படுக்கவைத்துக் கொள்கிறார். பாரதியிடம் எவ்வளவு அன்பு தெரியுமா அண்ணா அவருக்கு?…” 

“ஓ!…சரி காமாட்சி! நான் போய் வருகிறேன். பார்வதியின் உடம்பை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள். அதற்காகத்தான் உன்னையும், பாரதியையும் இங்கேயே இருக்கச் சொல்லியிருக்கிறேன்…” சேதுபதியும் காமாட்சி யும் பேசியபடியே மாடிப்படிகளில் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்கிறது. 

தன் கண்களில் படர்ந்த நீர்த்துளிகளைத் துடைத்துக் கொள்கிறாள் பார்வதி. 

பொழுது விடிந்தது. காமாட்சி ஹார்லிக்ஸுடன் பார்வதியின் அறைக்குள் வரும்போதே, “இன்றைக்கு எனக்கு இட்லி சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. சாயந்தரம் அஞ்சு மணிக்கு எனக்கு இரண்டு இட்லியும் கொஞ்சம் காரமாகத் தக்காளிப் பச்சடியும் செய்யச் சொல்லி ஞானத்திடம் சொல்லி விடுங்கள்” என்றாள் பார்வதி. 

“அதெல்லாம் சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமா?…”

“பேஷாக ஆகும். எனக்கென்ன ஜூரமா என்ன? ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்குக்கூட இட்லி கொடுக்கிறார்களே!” என்றாள் பார்வதி, 

“இட்லி என்றால் என் அண்ணாவுக்கு ரொம்பப் பிடிக்கும் ” என்றாள் காமாட்சி. 

“முன்னொரு நாள் கூடச் சொல்லி யிருக்கீங்க. இன்றைக்குச் சாயந்தரம் உங்க அண்ணாவை இங்கே வரச் சொல்லப் போகிறேன். அவர் ஊரில் இருக்கிறாரா?”” என்று கேட்டாள் பார்வதி. 

“இருக்கிறார்; நான் போன்லே பேசி, அவரை வரச் சொல்லட்டுமா?” என்று கேட்டாள் காமாட்சி. 

“வேணாம். அது மரியாதை இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்திலே நானே அவரைப் போனில் கூப்பிட்டுப் பேசுகிறேன், அதுதான் மரியாதை!” என்றாள் பார்வதி. 

பார்வதி அவருக்குப் போன் செய்தபோது அவருடன் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரம் கழித்துப் பார்வதி மீண்டும் டெலிபோன் செய்தபோது சேதுபதியின் குரல் கேட்டது. 

“ஓ! நீங்களா? வணக்கம், உங்கள் உடல்நிலை பற்றித் தான் இத்தனை நேரம் டாக்டரம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். தங்களுக்குத் துளிக்கூட கவலையே இருக்கக் கூடாதாம். மனத்துக்கு நிம்மதியும் உடலுக்கு ஓய்வும் இருந்தால் ஆறே மாதத்தில் குணமாகிவிடும் என்கிறார்” என்றார் சேதுபதி. 

“அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. எனக்குக்கூட அப்படித் தான் தோன்றுகிறது. இப்போது தங்களை நான் போனில் அழைத்ததுகூட அதற்காகத்தான். உங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேசவேண்டும். தயவுசெய்து இன்று மாலை ஐந்து மணிக்கு இங்கே வந்து போகமுடியுமா? உங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்கவேண்டும்.” பணிவோடும் கனிவோடும் ஒலித்தது பார்வதியின் குரல். 

“ஓ! வருகிறேனே..இதென்ன சிரமம்? நானும் உங்களைப் பார்த்து வெகு நாளாயிற்று. அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வருவதில்லை. மாலையில் அவசியம் வருகிறேன்”. 

“ரொம்ப சந்தோஷம்…” என்று கூறி ரிஸீவரை வைத்த பார்வதிக்கு மகிழ்ச்சி தாங்கலில்லை. 

“ராஜா! இன்று மாலை பாரதியின் அப்பா இங்கே வரப் போகிறார், டிபனுக்கு இட்லியும் காரமாகத் தக்காளிச் சட்னி வும் போடச் சொல்லியிருக்கிறேன். நம் வீட்டு வாசல் தோட்டத்திலேயே காற்றாட உட்கார்ந்து பேசுகிறோம். ஐந்து மணிக்கு அங்கே இரண்டு நாற்காலிகள் போட்டு வைக்கச் சொல்லு…” என்றாள். 

“ஆகட்டும் அத்தை!” என்றான் ராஜா. 

மாலையில் சேதுபதியைச் சந்திக்கும்போது அவரை எவ்வாறு வரவேற்க வேண்டும்? எப்படி உபசரிக்க வேண்டும்? எவ்வாறு பேச்சைத் தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்தித்துத் திட்டமிட்டு வைத்துக் கொண்டாள் அவள். 

மணி ஐந்தடிக்கும்போதே சேதுபதியின் கார் உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்ட பார்வதி, என்றுமில்லாத குதூகலத்துடன் அவரை வரவேற்க எழுந்து நின்றாள். 

தன்னை வரவேற்கத் தோட்டத்திலேயே காத்துக் கொண்டிருந்த பார்வதியைப் பார்த்து, “நீங்கள் ஏன் கீழே இறங்கி வந்தீர்கள்? நானே மாடிக்கு வந்திருப்பேனே!” என்றார் சேதுபதி. 

“நான் தினமும் கீழே இறங்கித் தோட்டத்துக்குள் கொஞ்ச நேரம் நடக்க வேண்டும் என்று டாக்டர் கூறியிருக்கிறார். ஆகையால் இன்று தங்களுடன் பேசிக் கொண்டே சற்று நேரம் நடக்கலாம் என்று எண்ணினேன்”. 

“அப்படியா? ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லுங்கள்” என்றார் சேதுபதி சிரித்துக்கொண்டே. 

“இப்படி உட்கார்ந்து பேசுவோமா?” என்று கேட்டாள் பார்வதி. 

“இந்த இடம் ரொம்ப அமைதியாகவும் அழகாயுமிருக்கிறது…” என்றார் சேதுபதி ஆசனத்தில் அமர்ந்தபடியே. 

பாரதி சுடச்சுட இட்லியும், தக்காளிச் சட்னியும் கொண்டு வந்து வைத்தாள். 

“பேஷ்! எனக்குப் பிடித்த டிபன்!” என்றார் சேதுபதி. “எனக்கும்தான்” என்று கூறினாள் பார்வதி. 

“தக்காளிச் சட்னி ரொம்பக் காரமாயிருக்குமே! நீங்கள் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாது” என்றார் சேதுபதி. 

“எனக்கு ஜுரம் ஒன்றுமில்லை. எது பிடிக்கிறதோ அது சாப்பிடலாம் என டாக்டரே கூறியிருக்கிறார்…” என்றாள் பார்வதி. 

“இளம் வயதில் கல்லையும் ஜீரணம் செய்து கொள்ளலாம். ஐம்பதைத் தாண்டிவிட்டால் ஆகாரம் சாதுவாயிருக்கவேண்டும். ஆவியில் வெந்த இட்லி எளிதில் ஜீரணமாகி விடக்கூடியது. வாய்க்கு ருசியாகவும் இருக்கிறது. ஆமாம்; எனக்கு இட்லி பிடிக்கும் என்று உங்களுக்கு யார் சொன்னது?’ என்று கேட்டார் சேதுபதி. 

“யாரும் சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே செய்யச் சொன்னேன். இது உங்களுக்கும் பிடித்த பண்டமாக அமைந்துவிட்டது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்” என்றாள் பார்வதி. 

“இந்த இட்லியும், தக்காளிச் சட்னியும் ரொம்பப் பொருத்தமாக அமைந்து விட்டன. நல்ல காம்பினேஷன்” என்றார் சேதுபதி. 

“மண வாழ்க்கையும் இப்படி அமைந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?” என்றாள் பார்வதி. 

சேதுபதி அவளை ஏறிட்டுப் பார்த்தார்; அந்தப் பார்வையில் ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்ற கேள்வி தொக்கி நின்றது. 

“தங்களிடம் இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். நான் கூறப்போவதைத் தாங்கள் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்ற பீடிகையுடன் பேச்சைத்தொடங்கினாள் பார்வதி. 

“என்ன விஷயம் அது?” என்று நிதானமாகக் கேட்டார் சேதுபதி. “திருமண விஷயம்தான்” என்று கூறிவிட்டுப் பார்வதி, சேதுபதியின் முகத்தையே கண்கொட்டாமல் கவனித்தாள். அவர் முகத்தில் எவ்வித வியப்புக் குறியும் தோன்றவில்லை. சலனமற்ற அவர் முகம் எப்போதும் போல் அமைதியாகவே இருந்தது.

குருத்து இருபத்தொன்று 

‘திருமண விஷயம்’ என்று தான் கூறியதும், அந்த விஷயத்தை அறிந்துகொள்ள சேதுபதி மிகுந்த ஆர்வம் காட்டுவார் என்று பார்வதி எதிர்பார்த்தாள். ஆனால், விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் நிதானமிழந்து பரபரப்புக் காட்டுவது அவருடைய சுபாவ மல்லவே! 

சேதுபதி கூறப்போகும் பதிலை எதிர்பார்த்தவளாய், அவர் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பார்வதி. 

சற்று நேரம் புன்முறுவலோடு மௌனமாகவே அமர்ந்திருந்த சேதுபதி, “எனக்கு இதில் துளியும் ஆடசேபணை இல்லை…ஆனால்…” என்று பாதியில் பேச்சை நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டார். 

‘தேவி! இவர் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டிருக் கிறார். ஒரு வேளை நான் கூறுவதை விபரீதமாகப் புரிந்து கொண்டு விட்டாரோ?’ பார்வதியின் உள்ளத்தில் திக் கென்றது. 

”ராஜா, பாரதியின் சம்மதம்தான் இதில் முக்கியம். திருமணம் செய்துகொள்ளப் போகிறவர்கள் அவர்கள் தானே” என்று பேச்சை முடித்தார் சேதுபதி. 

நிதானம், உறுதி, மன ஆழம் இம்மூன்றையும் மீறி நின்றது அவருடைய அறிவுக் கூர்மை! 

‘திருமண விஷயம் என்றதும், அது ராஜா-பாரதி திருமணம் பற்றியதுதான் என்பதை எவ்வளவு எளிதில் ஊகித்து விட்டார்! ஊகித்ததோடு மட்டுமின்றி, தம் யூகத்தில் சந்தேகமே இல்லாதவர் போல் தீர்மானமாக ‘அவர்கள் இரண்டு பேர் சம்மதம்தானே இதில் முக்கியம்?’ என்றல்லவா கூறுகிறார்? ராஜா – பாரதி திருமணம்பற்றித் தான் நான் பேசுவேன் என்பதை அவர் எவ்வாறு அறிந்து கொண்டார்? ஒருவேளை என் உள்ளத்தில் மறைந்துகிடக்கும் ரகசியங்களை யெல்லாம்கூடத் தெரிந்துகொண்டு தெரியாதவர் போல் நடித்துக் கொண்டிருப்பாரோ?’ 

அவருடைய அறிவை, ஆற்றலை, நெஞ்சத்தின் ஆழத்தை அளக்கும் சக்தி பார்வதிக்கு இல்லை. வியப்புக் காரணமாகச் சிறிது நேரம் பேசவே இயலாமல் கிடந்த பார்வதி, கடைசியாகக் கேட்டாள்: 

“ராஜா- பாரதி திருமணம்பற்றித்தான் நான் பேசப் போகிறேன் என்பதைத் தாங்கள் எப்படி ஊகித்தீர்கள்? என்னால் உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை…! “

உணர்ச்சி வசப்பட்டிருந்த பார்வதியின் குரலில் வியப்பும் தடுமாற்றமும் கலந்திருந்தன. 

“எனக்குத் தெரியும்; பாரதியைத் தாங்கள் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருவதை நான் அறிவேன். அவள் ராஜாவுடன் நெருங்கிப் பழகத் தாங்கள் இடமளித்திருப்பதும் தெரியும். பாரதியிடம் தாங்கள் கொண்டுள்ள அன்பு உள்ளத்தோடு ஒட்டியது. எவ்வளவோ தொந்தரவுகளுக்கும் கவலைகளுக்குமிடையில் பாரதியின் எதிர்காலத்தைப்பற்றி மிகுந்த அக்கறை காட்டி வருகிறீர்கள். ஒரு கல்லூரியின் பிரின்ஸிபாலாக இருந்தும், அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க முன்வந்தீர்கள்.இப்போது உடல் நிலை சரியில்லாத போதும் அவளைத் தங்களுடனேயே வைத்துக்கொண்டு, தங்களுக்குப் பக்கத்திலேயே படுக்கச் சொல்லி அன்பு பாராட்டி வருகிறீர்கள். இதுக்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும்? தங்களுடைய அந்தரங்கத்தைப் புரிந்து கொண்டுதான் பாரதியும் ராஜாவும் நெருங்கிப் பழகுவதை நான் ஆட்சேபிக்கவில்லை..”

“அப்படியானால் தங்களுக்கு இத்திருமணத்தில் பூரண சம்மதம் என்று சொல்லுங்கள்…” 

“அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதால் நம் எதிர்கால வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். என்றே நினைக்கிறேன்…” 

‘ஐயோ! என் உள்ளத்தில் இருக்கும் ரகசியத்தை இவர் ஞான திருஷ்டியால் அறிந்தது போலல்லவா சொல்கிறார்?’ பார்வதிக்கு வியப்புத் தாங்கவில்லை. 

உண்மையில் அவள் எண்ணிக் கொண்டிருந்ததும் அது தானே? ‘ராஜாவை, அவனுடைய குழந்தைப் பருவம் முதல் சொந்தத் தாயைப்போல் அன்புடன் சீராட்டி வளர்த்து வருகிறேன். ராஜாவுக்கு அவன் தாய் தந்தை இருவரையுமே தெரியாது. அவனை என் மடியிலே போட்டு அமுதூட்டி வளர்த்திருக்கிறேன். அவன் நோயுற்ற காலங்களில் தோளிலே சுமந்து சென்று சிகிச்சைசெய்து வந்திருக்கிறேன். ராஜா இன்று பெரியவனாக வளர்ந்து, படித்து, பாஸ் செய்து திருமணம் செய்து கொள்ளும் பருவத்தை அடைந்துவிட்டான். ராஜாவின் திருமணமும் நடந்துவிட்டால் என் வாழ்க்கையின் லட்சியம் பூர்த்தியாகிவிடும். ஆனால் இந்த நேரத்தில், காலம் கடந்த காலத்தில், பருவமற்ற பருவத்தில் என் உள்ளத்தில் வீண் சபலத்துக்கு இடமளித்து விட்டேன். திருவாளர் சேதுபதியைச் சந்தித்தபோது என் இதயத்தில் தோன்றிவிட்ட உணர்வு, காலம் கடந்த உணர்வு தான். அந்த வித்து முளைவிட்டு, இலைவிட்டுச்செடியாகி இப்போது பெரிய மரமாகவே வளர்ந்துவிட்டது. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய செடியை மரமானபின் வாள் கொண்டு அறுக்க முற்பட்டிருக்கிறேன்.’ 

‘சோடாபுட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணாடிக் கோலியைப்போல் அந்த உணர்வு என் உள்ளத்தில் புகுந்து அலைத்துக் கொண்டிருக்கிறது. இதை என்னால் விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பவோ முடியவில்லை.இப்படி எத்தனைக் காலத்துக்கு அந்த உணர்வை என்னுள்ளேயே வைத்து மறுக்குவேன்? இதற்கு முடிவே கிடையாதா?’ 

‘என் அந்தரங்கத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்தச் சேதியை அவரிடம் வெளிப்படையாக எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்று நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்துவிட்டேன். ஆனால் அதற்குரிய தைரியம் எனக்கு வரவேயில்லை. அவரை நேரில் காணும்போது என் தைரியமெல்லாம் பறந்துபோய் விடுகிறது. உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் ஆற்றலையே இழந்து விடுகிறேன். அவர் நினைவாகவே, அந்த நினைவின் பயனாக ஏற்பட்ட கவலையின் விளைவாகவே உள்ளம் திடம் குலைந்து, உடல் பலவீனமுற்று மயக்கமாகக் கீழே சாய்ந்து விட்டேன்’. 

‘அன்று முதல் படுத்த படுக்கையாகவே கிடக்கிறேன். இந்த நிலையிலும் என் நெஞ்சம் அவருடைய நேசத்தை மறக்க மறுக்கிறது. அவரும் என்னை மறந்துவிடுவார் என்று தோன்றவில்லை. அவர் மன ஆழத்தை என்னால் காணவே முடியவில்லைதான். ஆனாலும் அவர் உள்ளம் எனக்குப் புரி கிறது. அவர் அன்பு உள்ளத்தில் எனக்கு இடமளித்திருக் கிறார் என்பதை நான் அறிவேன். இருவருமே ஒருவரை யொருவர் நேசிக்கிறோம். அந்த நேசத்தை வாய்விட்டுக் கூற முடியாத நிலையில் பழகி வருகிறோம். இந்தநிலை இனியும் நீடிக்கக் கூடாது. அதற்குள்ள ஒரே வழி ராஜா-பாரதியின் திருமணம்தான். பாரதி அவருடைய சொந்த மகள். ராஜா என்னுடைய சொந்த மகனைப்போல் வளர்ந்தவன். அதாவது ராஜாவுக்கு நான் தாய். பாரதிக்கு அவர் தந்தை. பாரதிக்கும் ராஜாவுக்கும் திருமணத்தை நடத்தி விட்டால் எங்களிருவருக்குமிடையே உள்ள உறவு மாறிவிடும். அவர் எனக்குச் சம்பந்தியாகி விடுவார். அப்புறம்? அவர் மகளுக்கும் என் மகனுக்கும் கலியாணம் செய்து வைத்துவிட்ட பிறகு, எங்களிருவருக்குமிடையே வளர்ந்து வரும் அந்த உணர்வுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா? ராஜா திருமணத்தின் மூலமாகத்தான் என் உள்ளப் போராட்டத்துக்கு முடிவு காண முடியும்? அப்புறம்தான் நானும் அவரும் அமைதியாக வாழ முடியும். சஞ்சலமின்றிப் பழக முடியும்’. 

இதுதான் பார்வதியின் திட்டம். நீண்ட சிந்தனைக்குப் பிறகு ஏற்பட்ட முடிவு. இப்போது சேதுபதியிடம் விஷயத்தைச் சொல்லியும் விட்டாள். ராஜா- பாரதி திருமணத்தின் அடிப்படையில், பார்வதியின் அந்தரங்கமான திட்டம் மறைந்து கிடப்பதை சேதுபதி அறிவாரா? அவர் சர்வ சாதாரணமாக, பாரதி-ராஜா திருமணத்தால் ஏற்படப் போகிற உறவை எண்ணிப் பாராமலேயே, ஒப்புக்கொண்டு விட்டாரா? 

‘பார்வதியும் அவரும் வெகு தூரத்துக்கு வெகுதூரம் மீண்டும் நெருங்க முடியாத அளவுக்குப் பிரிந்து போய்விடப் போகிற சூழ்ச்சியை அறியாமல்தான் இந்தச் சம்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டரா? அல்லது அறிந்துதான் ஒப்புக்கொண்டாரா?’ 

சலனமற்ற அவர் முகத்திலிருந்து, அமைதியான பதிலிலிருந்து, பார்வதியினால் எதையுமே விளக்கிக் கொள்ள முடியவில்லை. 

அவர் பச்சைக் குழந்தை போல் கள்ளம் கபடமின்றிச் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். 

பார்வதியைப் பொறுத்தவரை பெரும்பாரம், நீண்ட நாட்களாகச் சுமந்து கொண்டிருந்த இதயச் சுமை அந்தக் கணமே கீழே இறங்கிவிட்டத்தைப் போல் தோன்றியது. 

“அடுத்த வாரத்திற்குள்ளாகவே திருமணத்துக்கு முகூர்த்தம் வைத்து விடுகிறேன்.. எனக்கும்கூடப் பாரதியின் திருமணத்தைச் சீக்கிரமே முடித்துவிட வேண்டுமென்ற ஆசைதான். ராஜா. என்ஜினியரிங் படித்திருக்கிறான். என்னுடைய தொழிற்சாலையின் முழுப்பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு நான் வெளிநாடுகளுக்குச் சென்று வரப் போகிறேன். நாளைக்கே திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன். கலியாணத்தைக் கூட இந்த வீட்டிலேயே நடத்திவிடலாம். தங்களுக்கு உடல் நலம் சரியில்லாததால் தாங்கள் இங்குமங்கும் அலையக் கூடாது. தாங்கள் இருக்குமிடத்திலேயே திருமணத்தை நடத்துவதுதான் நல்லது…” 

“பாரதியும் காமாட்சியும் இந்த வீட்டுக்கு வந்த வேளை நல்ல வேளை தான்…” என்றாள் பார்வதி உற்சாகத்தோடு. 

“ஆமாம்; தங்களுக்கும் உடம்பு குணமாகி விட்டால் அப்புறம் எல்லாம் சந்தோஷமாக முடிந்துவிடும். நேரமாகிறது…நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன். தாங்கள் இரவு நிம்மதியாகத் தூங்குங்கள் – “என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி. 

சேதுபதி காரில் ஏறிச் செல்லும்வரை அவரையே கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் பார்வதி 

அவளுடைய மனவேதனையும் நெஞ்சத்தின் நீங்காத நிழலும் அகன்று உள்ளம் லேசாகிவிட்ட உணர்வு, சேதுபதியின் மீது தோன்றிய இரக்க உணர்வு, ராஜா பாரதிக்குத் திருமணம் என்கிற மன நிறைவு, இவ்வளவும் கதம்பமாக அவளைக் குழப்பி உணர்ச்சி வசமாக்கிவிட்டன. 

கார் மறைந்ததும், அவள் மெதுவாகத் திரும்பி நடந்தாள். உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றித் தோன்றி அவளைச் சஞ்சலத்தில் ஆழ்த்தின. அவள் மெதுவாக அடிமேல் அடி வைத்து நடந்தாள். கால்கள் தள்ளாடின. கண்களில் லேசாக இருள் கவிந்து மின்மினிப் பூச்சிகள் பரக்கத் தொடங்கின. பார்வதிக்கு எதுவுமே தெரியவில்லை. மாப்படிகள் வரை சென்று படிகளைக் கடந்து மேலேயும் போய் விட்டாள். தாழ்வாரத்தை நெருங்கியபோது ஒரேயடியாக இருட்டிக் கொண்டு வந்தது. தாழ்வாரத்துச் சுவர், படிகள் அனைத்தும் சுழன்று சுழன்று வந்தன. 

“ராஜா!” என்று சத்தமிட்டுக் கூப்பிட எத்தனித்தாள். நாக்குத் தடுமாறி, நெஞ்சு உலர்ந்து வார்த்தைகள் வெளி வர மறுத்துவிட்டன. அடுத்த கணமே, தான் கீழே விழுந்துவிடப் போகிறோம் என்கிற உணர்வு தோன்றவே, மாடிப் படிகளின் கைப்பிடியை ஆதாரமாகப் பிடித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தபோதே அவள் மயக்க மூற்றுச் சாய்ந்து விட்டாள். 

“அத்தை! அத்தை” என்று அலறிக்கொண்டே ஓடி வந்த ராஜா, பார்வதியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். 

அதே சமயம் பாரதி, காமாட்சி, ஞானம் மூவரும் பரபரப்புடன் ஓடிவந்து பார்வதியைக் கட்டிலுக்குத் தூக்கிச் சென்றனர். அடுத்தகணமே டாக்டருக்கும், சேதுபதிக்கும் தகவல் கொடுக்க போனுக்கு ஓடினான் ராஜா.

– தொடரும்…

– விசிறி வாழை, 12வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *