கண்டு கொண்டேன் காதலை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 6,007 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம்-9

சாருபாலாவுடைய நண்பன் தினேஷ் கூறிய யோசனைகள் எல்லாம், மிகவும் தப்பானவை, நம்பிக்கை மோசடி, பொய், களவு எனக் கூடிய பெரிய குற்றங்கள் ஆகும் என்று தங்கைக்குப் புரிய வைக்கச் சாருமதி எவ்வளவோ முயன்று பார்த்தாள். 

“ஒன்றை ஒத்துக்கொண்டு விட்டுக் காரியம் ஆனதும், மாறி நடப்பது, நம்பிக்கைத் துரோகம், அந்தத் துரோகம் தன்னால் செய்ய முடியாது அதேபோல, வளையலைக் கழற்றிக் கொடுத்துவிட்டுத் தொலைத்ததாகச் சொல்வதும் திருட்டுக் குற்றமே!” 

முயற்சி தோல்வியடைந்தது என்பது ஒரு புறமிருக்க, தமக்கையிடம் இருந்து இப்போது பைசாப் பெயராது என்று புரிந்ததும், பாலா அழுது ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டாள். 

“என்னை விட, உனக்கு இந்த நகைதானே பெரிதாகிவிட்டது?. நம் அம்மா மட்டும் இருந்திருந்தால், என்னை இப்படிக் கஷ்டப்பட விடுவார்களா?” 

“என் பேரைச் சொல்லிக் கல்யாணம் செய்தவள், காரியம் முடிந்ததும், என்னை கழற்றி விட்டுவிட்டாய்!” 

“புதுக்கார்! நம்பர் பிளேட் கூட மட்டவில்லை! அதிலே உல்லாசமாக வருகிறாய்! பத்து லட்ச ரூபாய்க் காரை வாங்க முடிகிறது. எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவுக்குக் கொடுக்க, உன்க்கு மனம் வரவில்லையே. அம்மா இருந்திருந்தால், இப்படி என்னை அலட்சியப்படுத்தும் தைரியம், உனக்கு வருமா?” 

“ஐயோ..! அம்மா! அம்மா! அப்பா! எனக்கு வாழவே பிடிக்கவில்லையே! என்னையும் கூட்டிப் போய் விடுங்களேன்” என்று பாலா கத்தி அழ, ஓரிருவர் அறைக்குள் எட்டிப் பார்க்க, சாருமதிக்கு மிகவும் அவமானமாகிப் போயிற்று.

எட்டிப் பார்த்தவர்கள். சாருமதிக்கு அறிமுகம் ஆனவர்களே. 

“என்ன சாருமதி, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டவர்கள். தொடர்ந்து “பாலாவுக்கு, இங்கே தனியே இருக்கப் பிடிக்கவில்லை போல! பேசாமல் கூட்டிப் போய், உன்னுடனேயே வைத்துக் கொள்ளேன்” என்று இலவச ஆலோசனையும் வழங்கி, அவளை இன்னமும் நோகடித்து விட்டுப் போனார்கள்.

தங்கை விடுவாளா? 

“பார், பார்! உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிகிறது. உடன் பிறந்த உனக்கு மட்டும் மனம் வரவில்லை! ஐயோ, அம்மா, அம்மாt உங்கள் அருமைச் சின்ன மகளை அனாதையாக்கி அழ வைத்து விட்டீர்களே! ” என்று மறுபடியும் அழுதாள். 

ஒருவாறு, அவளைச் சமாதானம் செய்து முடிக்குமுன், சாருமதி ரொம்பவே நொந்து போனாள், 

அப்போதும், “அவரிடம் இது பற்றிக் கட்டாயம் பேசுகிறேன்” என்று அவள் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல், சத்தியம் செய்யச் சொன்னாள் சின்னவள். 

கூடவே, “நீ நினைத்தால், கட்டாயம் முடியும் அக்கா, ஒரு மனைவியால் முடியாத காரியமே கிடையாது என்று தினு கூடச் சொன்னான், தெரியுமா? அதனால், காசுக் கணக்கையே நினைத்துக் கொண்டு இராமல், கொஞ்சம் பாசத்தையும் மனதில் வைத்துக்கொண்டு அத்தானிடம் பேசு!” என்று தப்பு செய்தவருக்கு புத்தி சொல்வது போலக் கூறவும், சாருமதிக்கு மனம் கொதித்தது. 

“எதற்கும், தினு சொன்னான். தினு சொன்னான் என்கிறாயே, அந்த மடையனுக்குத்தான், நியாய அனியாயம் யோசிக்கத் தெரியவில்லை. உளறுகிறான். அதைக் கேட்டுக் கொண்டு, நீயும் ஆட வேண்டுமா? தானாக எதையும் யோசித்துப் பேசும் அளவு, உனக்கே மூளை கிடையாதா?” என்று எரிந்து விழுந்தாள். 

கோபமும் வியப்புமாக வெறித்துப் பார்த்துவிட்டு, “தினு சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். உனக்காகப் பரிந்து பேசுகிறேனே என்று, என்மேல்தான் உன் அக்காவுக்கு கோபம் வரப் போகிறது, என்றானே. ரொம்பக் கரெக்ட்! அதேபோல, நிறையப் பணத்தைப் பார்த்ததும், உன் அக்கா, கஞ்சப் பிசுநாறி ஆகிவிட்டாள் என்றதும் சரியாகத்தான் இருக்கிறது! இல்லாவிட்டால் எனக்கு இப்படி நாலு பழத்தை மட்டும் வாங்கிக்கொண்டு நீ புத்தம் புதுக் காரில் வந்து இறங்குவாயா?” என்று சாருபாலா ஆத்திரப்பட, அவளுக்கு முன் பிறந்தவள் பேச்சிழந்து நின்றாள். 

நடந்தது எல்லாமே இவளுக்காக என்பது கூடவா, மறந்துவிடும்?

தப்பு, தப்பு! பெரிய தப்பு நேர்ந்துவிட்டது !

எண்ணிப் பார்த்தால், சரியாக இருபது நாட்கள்! 

மொத்தமாக இருபது நாட்கள் இவளை எட்டியே பாராமல் இருந்ததன் பலன்தான் இது. பெற்றோர், அவர்களது வளர்ப்பு, எதையும் நினைவுறுத்த ஆள் இல்லாது போனதன் விளைவு. இந்த உதவாக்கரை நண்பர்களின் போதனை பயங்கரமாக ஏறிவிட்டது! 

தங்கையை நினைத்து வருத்தப்பட்டால் போதுமா? அம்மா, அப்பா, குடும்பத்தை நினைவுறுத்த, அவளும் இங்கே வந்து, போயிருக்க வேண்டாமா? 

என்ன மாதிரித் தப்பு செய்துவிட்டேன் என்று கழிவிரக்கம் கொண்டு மறுக்கும்போதுதான், இந்தப் பிழையின் காரணம் தானல்ல என்பது, சாருமதிக்கு உறைத்தது. 

காரணம், முழுக்க முழுக்க அவளுடைய கணவன்! 

கார் இல்லாமல், காரோட்டி இல்லாமல் செய்து, அவள் நேரடியாகக் கேட்டபோதும், ஏதோ ஒரு காரணம் சொல்லி, அவளைத் தடுத்து நிறுத்தியவன் அவனேதான். 

நேரே கணவனிடம் போய், காச் மூச்சென்று கத்த வேண்டும் என்று வீட்டுக்கு வந்தால், அவன் அங்கே இல்லை. இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. 

எட்டரை மணிக்கு அன்றைய பில் போடுவதை நிறுத்திவிட்டாலும், குறைந்தது இரண்டு சூப்பர் மார்க்கெட்களின் கணக்குகளைச் சரிபார்த்து விட்டு, அதன்பிறகே வீடு திரும்புவது, மோகனசுந்தரத்தின் வழக்கம். கம்ப்யூட்டரில் மட்டுமாய் கணக்கைப் பார்த்தான் என்றால், ஒன்பது மணிக்குக் கூட வந்துவிடுவான். என்றேனும் நேரில் போனால். தூரத்தைப் பொறுத்துத் தாமதமாகும். 

அன்று, மோகனசுந்தரத்திடம் தன் கோபத்தைக் கொட்டித் தீர்ப்பதற்கு, சாருமதி, இரவு பத்து மணி வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 

அந்தக் காத்திருத்தலும் சேர்ந்து, அவளது கோபத்தைப் பன் மடங்கு வளர்த்தது. 

காரை அவனே ‘ஷெட்’டில் விட்டுவிட்டு வரும்போதே, மோகனன் களைத்திருப்பது நன்றாகத் தெரிந்தது. 

சண்டைக்குக் காத்திருந்த மனைவியின் முகத்தைப் பாராமல் “இன்று இன்னும் சாப்பிடவில்லை, சாருமதி. ஏதாவது இருக்கிறதா என்று பார், சமையல்காரம்மாவிடம், இட்டிலியோ, தோசையோ, இலகுவாகச் செய்கிற ஏதாவது செய்யச்சொல்லு. தொட்டுக் கொள்ள, சாஸ் போதும். நான், இதோ குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறியவாறே படியேறிச் சென்றான அவன்.

எப்போதும் மோகனன் இப்படித்தான். நான் பெரிய முதலாளி என் சுகம்தான் முக்கியம் என்று இருக்க மாட்டான்.

காரோட்டியைக் கூட தாமதம் ஆனதால், வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, அவனேதான் ஓட்டிக்கொண்டு வந்திருப்பான். 

அவளிடமும், தான் திரும்பி வருகிற நேரம், முன்னேப் பின்னே இருக்கும் என்பதால், நேரத்துக்குச் சாப்பிட்டுவிடச் சொல்லியிருந்தான். “எனக்குப் பசித்தால், நான் அங்கேயே ஏதாவது வாங்கி, உணவு வேலையை முடித்தாலும் முடிததுவிடுவேன். எனக்காகப் பசியோடு நீ காத்திருப்பது எல்லாம். வேலைக்காகாது” என்று திடமாகவே கூறியிருந்தான். 

இப்படி எல்லோரிடமும் மனித நேயம் காட்டுகிறவன், சாருபாலாவை மட்டும், எப்படி ஒதுக்கி வைத்தான்? வெறும், கவனக்குறைவு! அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? 

என்ன சொன்னாலும், இதை, ஒத்துக் கொள்ளவே முடியாது! கணவனுக்கு வேண்டியதை ஒரு தரம் எடுத்துக் கொடுத்துவிட்டு, சாருமதி மொட்டை மாடிக்குப் போய்விட்டாள். 

பக்கத்திலேயே நின்று,பார்த்துப் பார்த்துப் பரிமாறுவதும். அவனுக்குப் பிடிக்காது. “நீ என்ன ஹோட்டல் பரிசாரகனா, பக்கத்திலேயே நின்று ‘ஆர்டர்’ எடுத்துப் போவதற்கு? நானே எடுத்துச் சாப்பிட்டுக் கொள்வேன், நீ உட்கார்” என்பான். 

ஆனால் இன்று அருகிலேயே அமர்ந்து, இலகுவாகக் கதை பேசிக் கொண்டிருக்க அவளுக்கு மனமில்லை. 

இந்த மொட்டை மாடி, சாருமதிக்குப் பிடித்தமான புகலிடம், பழசையோ, தங்கையையோ நினைத்து மனம் சஞ்சலப்படும் வேளைகளில், இங்கே வந்து, அமர்ந்திருப்பாள். 

மூன்று தலைமுறையாகக் கையில் இருப்பதால், மா, பலா, சப்போட்டா என்று பழ மரங்கள் மிகவும் உயரமாக வளர்ந்து எப்போதும் நிழல் தந்தன. பெரிய மரங்கள் என்பதால், பறவைகளின் ஒலியும் கேட்டுக்கொண்டே இருக்கும். கிளிகளைக் கூடப் பார்த்திருக்கிறாள். 

இரவில் அந்தச் சத்தமெல்லாம் அடங்கிய பிறகு, அந்த அமைதி கூட, அவளுக்குப் பிடித்தமானதே. ஏதோ ஒரு பறவையின் சிறகடிப்பு, குஞ்சின் சிறு குரல்… கேட்டு ரசித்துக் கொண்டு அங்கே கார்ந்திருப்பாள். 

திருமணம் நிரந்தரம் அல்ல என்றானே! அப்படி ஒருநாள் வரும்போது, இதை விட்டு வெளியேற நேருமே என்று, வருத்தமும் பட்டிருக்கிறாள். 

ஆனால், இப்போது அவள் மனதில் கோபம், தவிர வேறு எந்த உணர்ச்சிக்கும் இடம் இருக்கவில்லை. 

உணவை முடித்துக்கொண்ட மோகனசுந்தரம், மனைவியைத் தேடி அங்கே வந்தான். 

“என்ன உன் பறவைகள் சரணாலயத்துக்கு வந்தாயிற்றா? இந்த இரவில் என்ன தெரியும்?” என்று கேட்டபடி, அவள் அருகில் வந்து நின்று, அவளது கூந்தலில் சூடியிருந்த ஜாதிப்பூவை வாசனை பிடித்தான். 

வீட்டுப்பூ. அவளுக்குமே அதன் மணம் பிடிக்கும் என்பதால், பறித்துத் தொடுத்து, சூடிக்கொள்வாள். சற்றுக் கட்டையாக வெட்டப்பட்டு, விரிந்து கிடக்கும் கூந்தல் சிடுக்காகி விடுகிறது என்று சாருபாலா என்றைக்குமே, பூ வைப்பது இல்லை. ஆனால் வீட்டுப்பூவை அவளுக்குக் காட்ட வேண்டும் என்றே, சாருமதி அவ்வளவு பூவையும் தலையில் வைத்துக் கொண்டு போனாள். 

ஆனால், பூவைப் பார்க்கவோ, ரசிக்கவோ, பாலாவுக்கு நேரம் எங்கே இருந்தது? அது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்கள் எல்லாம். இப்போது அவளுக்கு நினைவிருப்பதாகவே தெரியவில்லையே!

தவறான ஆசைகளைச் சொல்லவும், அவைகளை நிறைவேற்றவில்லை என்று தமக்கையைக் குறை கூறவுமே அவளுக்குப் பொழுது சரியாகிப் போயிற்றே! 

தங்கையை நினைத்ததும், அவள் நடந்துகொண்ட விதமும் அப்போது நடப்பது போல, மனதில் வந்தது.

கணவனின் அருகாமையில் நெகிழத் தொடங்கிய மனது கடினப்பட்டுவிட, சட்டென விலகி நின்று “இரவில் மட்டுமா, பட்டப் பகலில் நடப்பது கூடத்தான், எனக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை” என்று எரித்து விழுந்தாள்.

“ஹே, இதென்ன? என் மேல் என்ன கோபம்?” 

“என்ன… கோபமா? ரொம்பத்தான் நடிக்காதீர்கள்! இந்த இருபது நாட்களாகப் பாலாவைப் பார்க்க போக விடாமல், நீங்கள் சதி பண்ணவில்லை?”

“சதி என்பது பெரிய வார்த்தை, ஆனால், அது ஏன் என்றும் சொன்னேனேம்மா?”

“ஆமாம்!  பெரிய மேதாவி! ரொம்பத் தெரிந்துதாச் சொல்லியிருக்கிறீர்கள்! இப்போது, அவள் எப்படி ஆகிவிட்டாள் தெரியுமா? மூச்சுக்கு ஒரு தடவை, பணம் பணம் என்கிறாள். தொலைந்து போயிற்று என்று உங்களிடம் சொல்லிவிட்டு, ஒரு நகையைக் கொடுத்தால், விற்று எடுத்துச் செலவு செய்வாளாம்! என் தங்கையா, என்று இருக்கிறது. தப்பு சரி எல்லாம் மறந்துவிட்டது. தினு, தினு என்று அவன் சொல் பேச்சு, மந்திரம் மாதிரி தலைக்கேறிப் போய் இருக்கிறது! இதற்காகத்தானே, இப்படி ஏதாவது நடக்கட்டும் என்றுதானே, அவளைப் பார்க்க விடாமல், தடுத்தீர்கள்!” என்று கடுகாய்ப் பொரிந்தாள் சாருமதி.

“இப்போது என்னகெட்டுவிட்டது? அதுதான், காரையும் டிரைவரையும் முழுக்க உன் உபயோகத்துக்கே தந்துவிட்டேனே! அடிக்கடி போய், உள் அருமைத் தங்கையின் அழுக்கான ரத்தத்தை மாற்றி, நல்ல புத்தியை ஏற்ற வேண்டியதுதானே?” என்றான் அவன் பரிகாசமாக. 

“உங்களுக்குக் கிண்டலாக இருக்கிறதா? உங்களாலேயே ஏற்பட்ட துன்பம். அதைப்பார்த்து வருத்தப்படாவிட்டாலும், சும்மாவாவது இருக்கலாமில்லையா? இப்படிக் குத்திக் கிளறிப் பேச வேண்டுமா?” என்று ஆத்திரமாகக் கேட்டாள் சாருமதி. 

“நல்லதை நினைத்துச் செய்தது. அதை ஏற்றுக் கொள்ளத் தெரியாத குற்றம், அவளுடையது. செய்த குற்றம் நினைத்துத் தானாகத் திருந்தவும் அறிவில்லை. எவனோ, என்னவோ சொன்னான் என்று பேராசை பிடித்து அலைந்தால், அதற்கு நானா, பொறுப்பு? தப்பு செய்தவளை விட்டு, என்னைக் காய்வானேன்? வரும் நாளில், ஓர் உதவி செய், சாருமதி. உன் தங்கையைப் பார்க்கச் செல்லும் நாளை, முன் கூட்டியே தெரிவித்துவிடு. அன்றைக்கு வீட்டுப் பக்கமே வராமல் எங்காவது போய் நிம்மதியாக இருந்துவிட்டுக் காலையில் வருகிறேன்” என்றான் மோகனசுந்தரமும் கடுப்பாகவே. 

சீற்றத்துடன் “ஊர் மேய ஆசை வந்துவிட்டது என்று, உண்மையைச் சொல்ல வேண்டிதுதானே?” என்று சட்டென சொல்லிவிட்டு நாக்கைப் பற்களால் அழுத்தினாள் சாருமதி. ரொம்பவே அதிகப்படியான பேச்சு என்று அவளுக்கே புரிந்தது. 

ஒரு வினாடி அமைதியின் பின் “தங்கையின் பேச்சு எங்கிருந்து வந்திருக்கும் என்று, இப்போது புரிகிறது. எப்படியோ, இப்போது உன்னிடம் பேசித் தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ள, நான் தயாரில்லை!” என்று திரும்பி நடந்து, மோகனசுந்தரம் உள்ளே போய்விட்டான். 

திருமணத்துக்கு முன்னால் இப்படி அப்படி இருந்தவன்தான். ஆனால் மணமானபின், அவனுடைய எதிரிகளால் கூட, அந்தக் குற்றம், அவன் மேல் சுமத்த முடியாது. அதிலும் மனைவியாக இருந்து கொண்டு சொன்னது, ரொம்பவே அனியாயமான குற்றச்சாட்டுதான். 

பின்னோடு போய், மன்னிப்புக் கேட்டால் கூட குறைவில்லை… மன்னிப்புக் கேட்பதுதான் நியாயமே. 

ஆனால், பாலா விஷயத்தில் அவன் தப்புப் பண்ணவில்லையா? அதற்கு அவனும்தானே, மன்னிப்புக் கேட்க வேண்டும்? 

மன்னிப்புக் கேளாதது மட்டுமில்லை, கிண்டல் வேறு செய்தானே! அவளுக்கு மட்டும் கோபம், வருத்தம் ஒன்றுமே வரக்கூடாதா? யார் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் கணவன் மனைவி என்றால், இருவரும் சமம்தான். அவனுக்கு கோபம் வந்தால், அவளுக்கும் வரத்தான் செய்யும். 

அவளும் கோபமாக இருக்கிறாள் என்று மோகனசுந்தரம் புரிந்து கொள்ளட்டும்! 

மறுநாளும் கூட, சாருமதியாகப் போய், கணவனிடம் எதுவும் பேசவில்லை. 

அவனும் எந்நாளும் போலப் பத்திரிகை படித்தான், குளித்துச் சாப்பிட்டான், அலுவலைப் பார்க்க கிளம்பி, வெளியே சென்று விட்டான். செல்லுமுன், காரோட்டியை அழைத்து, “அம்மா எங்கேனும் போக வேண்டும் என்றால், காரை எடுத்துப் போ, பெட்ரோல் கார்டில் போட்டுக்கொள்” என்று சாருமதியின் காது கேட்கச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனான். 

பெரிய கார்! இது இல்லாவிட்டால், உலகில் வாழவே முடியாதாக்கும் என்று, சாருமதி சம்பந்தமற்று எண்ணிவிட்டு, என்ன மடத்தனம் என்று எரிச்சலோடு, அதை ஒதுக்கினாள். 

எப்படியும் காலையில் சற்று நேரம் கலகலப்பான பேச்சு இருக்கும். அவசரமாகக் கிளம்ப வேண்டி இருந்தால்கூட, அதையே கிண்டலாகப் பேசியவாறே, அவளோடு சேர்ந்து காஃபியேனும் அருந்திவிட்டுப் போவான். 

இன்று, அது இல்லாதது, சாருமதிக்கு ஒரு மாதிரி இருந்தது. ஆனால், என்ன செய்வது? தானாகப் போய் பேசவும், அதுவும் ஒரு மாதிரிதான் இருந்தது. 

இரண்டு பேரிடமும் தப்பு இருக்கும்போது, அவள் மட்டும். முந்திரிக்கொட்டை போல, முந்திக்கொண்டு போய், அவன் காலில் ஏன் விழ வேண்டும்? 

இருக்கட்டும். கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம். 

இந்த பாதிப்பு, கணவனுக்கும் இருக்கத்தானே செய்யும்? அதற்கு. அவன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம். 

இப்படியெல்லாம் எண்ணும்போதே, மனம் இன்னொரு திசையிலும் பாய்ந்தது. 

அவள் அளவு பாதிப்பு, அவனுக்கு எப்படி இருக்கும்?

திருமணத்தையே நிரந்தரம் கிடையாது என்றவன், பிரிவு பற்றி, சர்வ சாதாரணமாகப் பேசியவன். 

பின்னே, இதே பாதிப்பு, அவனுக்கு எப்படி ஏற்படும்? 

இன்னும் யோசித்தால், ‘காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி எறி’ என்பதுபோல, அவளை விலக்கிவிடக் கூட நினைக்கலாம்! கடவுளே! 

வீட்டிலும் தோட்டத்திலுமாக கால் கடுக்க அலைந்தாள். டீவி முன் அமர்ந்து அகல விழி விரித்துப் பார்த்தாள். எதிலும், ஒரு பயனும் இருக்கவில்லை. 

மனம் ஏதோ கற்பனைகளைச் செய்து, அவளைக் கலங்கடிப்பதை, நிறுத்த மறுத்தது. 

அத்தனை முயற்சிகளும் பலனின்றிப் போய்விட, மோகனசுந்தரம் கிண்டலாகக் குறிப்பிடும் அவளது மொட்டை மாடிப் பறவைகள் சரணாலயத்திலேயே, சாருமதி, தானும் சரணடைந்தாள். 

அங்கே, அவளது சொந்தப் பிரச்சினை அடியோடு மறந்துவிடும்படி, அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 

நியாயமற்று மனைவி பேசிய பேச்சில், மோகனசுந்தரம் மிகவும் எரிச்சலுற்று இருந்தாள். அதனாலேயே, காலை வேளை கலகலப் பேச்சை அவட்சியப்படுத்தி, அலுவலுக்குக் கிளம்பி வந்துவிட்டான்.

ஆனால், வந்த பிறகு மனம் அவனைக் குடையத் தொடங்கிவிட்டது. 

எல்லாம். அவளுடைய தங்கை, அந்தத் தங்கையுடைய நண்பர்களால் வந்தது, நண்பர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு, அந்தப் பெண் சாருபாலா அவன் மனைவி என்ன பாடு படுத்தினாளோ! 

ஆனால், சும்மாவே ஆடும் பேய், கொட்டுக் கண்டால் விடுமா என்று, அந்தப் பழமொழியைப் போல, சாருபாலா, ஏற்கனவே அப்படி ஒன்றும் தேவதை கிடையாது. கூடவே, அந்த சினேகிதப் பட்டாளமும் தூபம் போட, அனியாயமாகத் தனக்குப் பெரிய அவமானம் நேர்ந்துவிட்டது போல, அவளுடைய தங்கை நடிக்க, சாருமதியும் அதை நம்பித் தன் கணவனிடம் காய்ந்திருக்கிறாள். 

இதில், தங்கையை எவ்வளவுக்கு நம்பலாம் என்று தெரியாதுதான், சாருமதியின் பெரிய குற்றம்! 

தங்கை வறுத்தெடுத்ததை விடவும், அவள் நேர்மை இல்லாமல் பேசியதுதான், சாருமதிக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். 

தங்கை நேர்மை கெட்டு பேசியதன் காரணம், அக்காவான தன்னைப் பாராதது. அப்படிப் பார்க்க முடியாமல் போனதன் காரணம் கணவன், எனவே, அவன்தான் இந்தக் குற்றத்திற்கு முழுக் காரணம் என்று நினைத்து விட்டாள். 

என்ன நினைத்தாலுமே, சாருமதி அவனிடம் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக் கூடாதுதான். என்றாலும், மனம் கலங்கியிருந்த நிலையில், மனைவி செய்த குற்றம் மன்னிக்கக் கூடியதே என்று இப்போது மோகனுக்குத் தோன்றியது. 

அத்தோடு, தங்கையின் போக்கினால், சாருமதி சும்மாவே மிகவும் மனதில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள்! இப்போது அவனும் பேசாமலே வந்துவிட்டதால், இன்னும் எவ்வளவு வேதனையாக இருக்கிறதோ? பாவம்! 

இந்தத் துன்பம், மனைவி இன்னமும் படுவதா என்று தோன்றிவிட, மோகனசுந்தரம் வீட்டுக்குக் கிளம்பிவிட்டான். 

வீட்டுக்கு வந்து பார்த்தால், கீழே தோட்டத்தில் எங்கும் சாருமதி இல்லை. அவளது பறவைகளைப் பார்த்தால், ஆறுதல் கிடைக்கக்கூடும் என்று, மொட்டை மாடிக்குச் சென்றிருப்பாள் என்று ஊகித்து, மோகனனும் மாடிக்குச் சென்றான். 

அங்கே சென்று அவன் பார்த்த காட்சியில், அவனது இதயம் தொண்டைக்கு வந்து துடிக்கலாயிற்று.

ஏனெனில், மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவரின் மீது, அந்தப் பக்கம் குதிக்கத் தயாராக சாருமதி நின்று கொண்டிருந்தாள், குதித்து?

இந்த அளவுக்காக, அவளை நோகடித்துவிட்டான்? 

நில் என்று குரல் கொடுத்தால், அவன் வந்திருப்பது தெரிந்தால்கூட அவசரப்பட்டுக் குதித்துவிடுவாளோ என்ற பயத்தில், இறுகிப் போய் சிலையாக நின்றான், மோகனசுந்தரம்! 

அத்தியாயம்-10

இப்படிச் செய்கையற்று நிற்பது, மோகனசுத்தரத்துக்குப் புது அனுபவம். 

சும்மா இப்படி நின்றாலுமே, எப்போது வேண்டுமானாலும் ஏன், அடுத்த வினாடியே கூடச் சாருமதி அங்கிருந்து குதித்து விடலாம், என்பது திடுமென உறைக்க, பொன்னான ஒரு வினாடியைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்ற வேகத்தில், அவன் ஒரே தாவலில் அவளை அடைந்து, அவளது கையைப் பற்றி இழுத்துக் கீழே இறக்கினான். 

அதிகம் முரண்டு பிடிக்காமல், அவன் இழுத்த வேகத்திலேயே விழுந்துவிடாமல் சமாளித்து இறங்கியபோதும், சாருமதி, உடனேயே கைப்பிடிச் சுவரின்மேல், மறுபடியும் ஏறலானாள். 

மனைவியின் முயற்சியைத் தடுத்து, அவளை உட்புறமாக இழுத்தவாறே, “என்ன பைத்தியக்காரத்தனம்? ஏன் இந்த அசட்டு வேலை?” என்று அதட்டினான் கணவன். 

“ஷ்” என்று ஒற்றை விரலை அவன் உதட்டில் மேல் வைத்து, அவனது பேச்சை நிறுத்தியவள், மறு கரத்தால், மேலே சுட்டிக் காட்டினாள். 

அவள் காட்டிய திசையில் பார்த்தவனுக்கு உள்ளடக்கிய சிரிப்பில், உதட்டோரம் துடித்தது. 

மொட்டை மாடியின் ஓரம் வரை வந்திருந்த மாங்கிளையின் மெல்லிய முனையில், வெடவெடவென்று நடுங்கியவாறு, உயிரைக் கையில் பிடித்தபடி, ஓர் அணில் குட்டி ஒண்டிக் கொண்டிருந்தது. 

சாருமதியின் விரல், இன்னமும் உட்புறமாகக் காட்டிய இடத்தில், அதே மரக்கிளையின் தடித்த உட்பாகத்தில், ஒரு பெரிய பூனை, இந்த அணில் குட்டியைப் பிடித்து கபளிகரம் செய்வதற்காக காத்திருந்தது.

“பூனை கிட்டே வரும்முன் அணில் குட்டியைக் காப்பாற்றி விடலாம் என்று…” என்று மெல்லிய குரலில், கணவன் காதில் சாருமதி முணுமுணுத்தாள். 

“மதி பிரமாதமாகத்தான் வேலை செய்திருக்கிறாள்! ஆனால் நீ காப்பாற்ற வருகிறாயா, பிடிக்க முயற்சிக்கிறாயா என்று, அணிலுக்கு எப்படித் தெரியும்? உனக்குப் பயந்து, ஓடி அது பூனையின் பக்கமே ஓடி மாட்டிக் கொண்டால்?” 

“அதையும் யோசித்தேன். அதற்காகத்தான், சத்தமே இல்லாமல் மொல்ல ஏறினேன். அணில்குட்டி கவனிக்குமுன், அதைப் பிடித்து விடலாம் என்று நினைத்தேன்…” 

“நன்றாக நினைத்தாய். கொஞ்சம் கால் தவறினால், நீ என்ன ஆவாய் என்று அதை யோசிக்க வேண்டாம்?” 

“யோசித்தேன்ப்பா. அதனால்தான் ரொம்பக் கவனமாக ஏறினேன். எப்படியும் அணில் குட்டியைக் காப்பாற்றியாக வேண்டுமே!” 

“அதற்காக?” என்று அவன் கேட்கும்போதே, அணில் குட்டி கீச் கீச் சென்று சத்தமிட்டது. 

பார்த்தால், பூனை கவனமாக முன்னே வரத் தொடங்கியிருந்தது.

“ஐயோ! பாருங்கள்! இப்போது வேறே என்ன…” என்று அவன் பிடியிலிருந்து விலகி, மறுபடியும் கைப்பிடிச் சுவரை அணுக முயன்றாள் சாருமதி. 

“பொறு” என்று மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி ஒன்றின் மேற்புறமாக, அழகுக்காக போடபட்டிருந்த சிறு கூழாங்கற்களில் ஒன்றை எடுத்து. பூனை மீது வீசினான். 

குறிதவறாமல் பட்டுவிட, பூனை ஓடி மறைந்தது. 

“அப்பாடி!” என்று நிம்மதியாக மூச்சு விட்ட போதும், சாருமதியின் பார்வை அணில் குட்டியிடமே இருந்தது. “ரொம்பப் பயந்து போய் விட்டது போல, அசையாமல் கிடக்கிறதே! மெல்ல தூக்கிப் போய் ஏதாவது ஆகாரம் கொடுக்கலாமா?” என்று யோசித்தாள் அவள். என்று இரு கைகளையும் தட்டி ஒன்றும் வேண்டாம் ஒலியெழுப்பினான் மோகனன். 

திரும்பிப் பார்த்தால் அணில் குட்டி, கிளையில் ஏறி, ஓடிப் போயிற்று. 

“ஒன்றைக் காப்பாற்றுவது என்றால், அதற்கு இருக்கும் ஆபத்தை அகற்றினால் போதும். அதற்கு மேல், தன் பாட்டை அதுவேதான் பார்த்துக் கொள்ள வேண்டும். பாவம் என்று பாதுகாத்து, பராமரித்து, அதன் இயல்புத் திறனைக் கெடுக்கக்கூடாது!”

தலைசரித்துக் கணவனைப் பார்த்தாள் சாருமதி “இதில், எனக்கேதும் தனிப்பட்ட குறிப்பு இருக்கிறதோ?” 

லேசாகத் தோளைக் குலுக்கினான் கணவன் “விருப்பம் இருந்தால், பின்பற்றலாம்!” என்றான் முறுவலித்து. 

இதழ்களில் தொற்றிக்கொண்ட புன்னகையோடு “ம்ம்ம்… யோசித்து முடிவு செய்கிறேன்” என்றவாறு அவனைப் பார்த்தவளுக்கு. வேறு நினைவு ஒன்று தோன்றியது.

“அதிருக்கட்டும். சொல்லுங்கள், என்னை ஏன். அவ்வளவு முரட்டுத்தனமாக இழுத்து இறக்கி விட்டீர்கள்?” என்று அதன் விவரம் கேட்டாள் அவள்.

அவளை அருகே இழுத்து கைகளுக்குள் நிறுத்திக்கொண்டு அவன் பதில் சொன்னான் “கேட்க மாட்டாயா. பின்னே? நேற்றிரவுதான் நமக்குள் பெரிய சண்டை, காலையிலும் பேச்சு வார்த்தை இல்லை! அம்மணி எப்படி இருக்கிறாயோ என்று கவலையோடு வீட்டுக்கு வந்தால், இந்த மாதிரி, ஒரு ‘போஸ்’! என்ன நினைப்பதாம்?” என்று குறைப்பட்டான்.

“என்னது… ஹோ சேச்சே!” என்றவளுக்கு சிரிப்பு வந்தது. 

நெகிழ்வுற்று, அவன் தோளில் சலுகையாய்ச் சாய்ந்துகொண்டு, “நான் ஒன்றும் கோழை கிடையாதுப்பா. அம்மாவின் நோய் அவ்வப்போது அதிகரிக்கும்போதும், எப்போதும் தூணாய்த் துணையிருக்கும் அப்பாவையும் சேர்த்து இழந்து, உறவுகள் ஒதுங்கிக் கொள்ள அனாதைகளாகத் தனியே நின்ற அப்போதுமே, நான் நம்பிக்கை இழந்து, சோர்ந்து போனதில்லை, தெரியுமா?” எனறாள், அவள். 

தோளோடு சுற்றியிருந்த கை லேசாக இறுக, “பெற்றோரை இழந்து தவித்துக் கொண்டிருந்த இரு சின்னப் பெண்கள்! என்னவோ ஆகட்டும் என்று ஒதுங்கிப் போனார்களா? என்ன மனிதர்கள். இவர்கள்! ஆனால், திருமணத்தின்போது, சித்தி, அத்தை, மாமா என்று எல்லோருடனும் நீ சிரித்துச் சிரித்துப் பேசியதைப் பார்த்த நினைவு, எனக்கு இருக்கிறதே!” என்றான் மோகனன். 

“அது.. வயது வந்த இரு பெண்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, யாருக்குமே தயக்கமாகத்தானே இருக்கும்? அத்தோடு, ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’ என்று பழமொழியே இருக்கிறது. ஒரு தப்புக்காக, ஒருவரை அடியோடு ஒதுக்க என்னால் முடியாது. எனக்கு உறவுகள் வேண்டும்” என்றாள் மனைவி, தெளிவாக. 

“ஓஹோ!” என்றான் அவன். “இதில், எனக்கு ஏதும் தனிப்பட்ட குறிப்பு இருக்கிறதோ?” என்று, ஒரு குறு நகையுடன், அவளைப் போலவே, தலை சரித்து வினவினான். 

ஓரக் கண்ணால் பார்த்து “விருப்பம் இருந்தால் பின்பற்றலாம் ” என்று கணவனைப் போலவே சொல்லிக் கலீரென்று நகைத்தாள் மனைவி. 

“இதைப் பின்பற்றினால், தொழிலில் ஜெயிக்க முடியாது. ஆனாலும் சொந்த வாழ்க்கையில்… . யோசித்து முடிவு செய்கிறேனே” என்றவனின் அணைப்பு வேறு மாதிரி மாறலாயிற்று. 

வியந்து நோக்கி “ஹேய், என்ன இது, திடீரென்று ? அதுவும் இ…இந்த நேரத்தில்…. ” என்று, சாருமதி விலக முயன்றாள். 

அரைகுறையாகத்தான், அவளுக்குமே, அப்போது அவனது அருகாமையை விட்டு விலக மனம் வரவில்லை. 

அவனும் விடவில்லை “பாரதியார் ரசிகையா பேசுவது? எந்தன் கண்ணம்மாலே, நான் எந்த நேரமும் நின்தனைப் போற்றுவேனாக்கும்…” என்றான் குறும்பாகச் சிரித்து.

அன்று மதிய உணவின் பின்னர்தான், மோகனசுந்தரம் சூப்பர் மார்க்கெட்டுக்குக் கிளம்பிப் போனான். 

கிளம்பும்முன் கணவனும் மனைவியும் சற்று நேரம் பேசினார்கள். 

“கொஞ்சம் செல்லம் அதிகம் என்றாலும், பாலாவும் உன்னைப் போலத்தான், என்று பலமுறை சொல்லியிருக்கிறாய். அவளை அடிப்படையிலேயே மாற்றுகிற அளவு தப்பான போதனை ஏறியிருக்கிறது என்றால், போதித்தவர்களுக்கு தப்பு சரி என்பது, அடியோடு கிடையாது என்றுதானே. பொருள்? அவர்களே ஏன், அந்த ஒன்றரை லட்சத்தைத் திருடியிருக்கக் கூடாது என்று, இப்போது தோன்றுகிறது” என்றான் மோகனசுந்தரம். 

“நானும், இதே போல எண்ணிப் பார்த்திருக்கிறேன்ப்பா. சின்னப் பசங்கள், இந்த அளவு புத்தி ஓடாது என்று, விட்டுவிடுவேன். இப்போது பார்த்தால், ரொம்பவும் சந்தேகமாக இருக்கிறது. பழைய வேலை செய்யும்போது, சும்மாப் பார்க்கவே அழகாக இருப்பாய், உன் அக்காதானே மனைவி? அந்த வேலையைச் சீக்கிரமாகப் போட்டுத் தரச் சொல்லு, என்பதுபோல, அவளுக்கு ஏற்றி விட்டுக் கொண்டேதானே இருக்கிறார்கள்! அவளை வைத்துக்கொண்டே ஒரு தரம் திருடிப் பழகிவிட்டார்கள். ருசி கண்ட பூனையாக, அதை விட மனம் இல்லையோ என்றெல்லாம் தோன்றுகிறது. அவர்கள் கையில் பகடைக்காயாக, பாலா என்ன ஆவாளோ என்று. அது வேறு கவலை! எல்லாம் சேர்ந்துதான் உங்களிடம்…” என்று, குரல் சுரகரத்த மனைவியின் உதட்டில் விரல் வைத்துப் பேச்சைத் தடுத்தான் கணவன்.

“விடும்மா. சொல்லப்போனால், நீ நொந்து வந்திருப்பது உணராமல், நானும் பரிகசித்திருக்கக் கூடாது. போகட்டும். அதுதான், நேற்றே முடிந்துவிட்டதே. நல்…ல்ல விதமாகவே!” என்று கண் சிமிட்டி நினைவூட்டி மனைவியின் மன நிலையை மாற்றியவன், முதலில் தொடங்கியதை மீண்டும் தொடர்ந்தான்.

“பணம் தொலைந்தபோது, அது பற்றி அந்தத் தினேஷ் சொன்னதையும், அதை உண்மை என்று நம்பி அதற்கேற்ப பாலா கூறியதையும் வைத்தே. இதுவரை தேடினோம். ஒரு பலனும் கிடைக்கவில்லை… என்ன பார்க்கிறாய்? ஒரு குற்றம் நடந்தது என்றால், குற்றவாளியைப் பிடிப்பது ஒருபுறம் இருக்க, அது போன்ற குற்றம் மறுபடியும் நடக்காமல் தடுப்பதற்காகவேனும், தப்பு எப்படி நடந்தது என்று கண்டுபிடித்தாக வேண்டும் அல்லவா? அதனால், நம் துப்பறியும் நிறுவனத்தின் மூலம், அது பற்றி புலன் விசாரணை நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், சுயமாக ஒரு தெளிவற்று சற்றும் அசட்டு இளைஞர் கும்பலில் சிலர் என்று எண்ணி, பாலாவுடைய நண்பர்களை, அதிகம் ஆராயாமல் ஒதுக்கியது தவறு என்று இப்போது தோன்றுகிறது. அவர்களை இனம் காண வேண்டும், மதி. அத்தோடு பாலாவையும் காப்பாற்றியாக வேண்டும்” 

கணவனின் பேச்சில் இருந்த இதமான மாற்றம், சாருமதியை, மனம் குளிர வைத்தது. 

இதுவரை ‘உன் தங்கை’ என்றுதான், மோகனசுந்தரம் பாலாவை குறிப்பிடுவான். அவனுக்குச் சம்பந்தமே இல்லாத, யாரோ ஓர் அன்னியள் அவள் என்பதாக அப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் சொல்லாமலே விளங்கும்.

சாருமதிக்கு அது வருத்தமாகவே இருந்தாலும் பாலாவின் கவனக்குறைவு காரணமாக நேர்ந்த நஷ்டத்தை நினைத்து அப்படி இருக்கிறான் என்று எண்ணி, அந்த வருத்தத்தை வெளிக்காட்டாமல் விழுங்கிக் கொள்வாள். 

ஆனால் இப்போது ‘பாலா’ என்று குறிப்பிட்டு, அவளைக் காப்பது பற்றியும் மோகன் கூறவும், சாருமதி உள்ளம் நெகிழ்ந்து போனாள். 

அவளது பிற்காலம் எப்படி இருக்கப் போகிறதோ? இன்றைக்கு, மனைவி இடத்தில் இருக்கும் ஒருத்தியாக மட்டுமாக, அவன் அவளைப் பார்க்கவில்லை. முழு அன்பும், அக்கறையும் வைத்திருக்கும் வாழ்க்கைத் துணைவியாக நடத்துகிறான் என்ற உணர்வில், அவளுக்கு ஆனந்தமாக இருந்தது. 

வாழும் காலம் முழுமைக்கும், இது நிலைக்குமா, நிலைக்காதா என்று யோசிக்கக் கூட, சாருமதிக்கு பிடிக்கவில்லை. 

எனவே, பிடிவாதமாக அதிலிருந்து மனதைத் திருப்பி, பேசிக் கொண்டிருந்த பிரச்சினை பற்றி யோசித்தாள். 

யோசித்து, “நான் அடிக்கடி பாலாவைப் போய் பார்த்து வரலாம் என்று நினைக்கிறேன், சுந்தர். அப்படியே, அவளுடைய நண்பர்களையும் அவ்வப்போது சந்தித்துப் பழகி, அவர்களைப் பற்றி அறிய முயற்சிக்கிறேன்” என்றாள். 

கணவனுக்கும் அதே எண்ணம்தான் என்றாலும், கூடவே ஒரு தயக்கமும் இருந்தது. 

“உண்மை அறிவது, கூடவே பாலாவைக் காப்பாற்றுவது என்று யோசிக்கும்போது, நீ அவளை அடிக்கடிப் போய்ப் பார்ப்பது மட்டுமே. அதற்கான ஒரே வழி என்றுதான் தோன்றுகிறது. ஆனால், உழைக்காமல் இலகுவாகப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறவர்கள், எப்போது எப்படி மாறுவார்கள், எந்த அளவுக்குப் போவார்கள் என்று, யாராலும் சொல்ல முடியாது. பாலா பொறுப்பில் இருந்த பணத்தை எடுத்தது கூட, முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்ததாகத் தோன்றவில்லை என்றுதான் துப்பறியும் நிறுவன ஆள் கூறினார். பணம் கண்னில் பட்டு, எடுப்பதற்கு வாய்ப்பும் கிடைக்கவே, கூட்டத்தில் யாரோ தூக்கிவிட்டார்கள் என்பதுதான், அவரைப் போலவே, என் கருத்தும். தூக்கியது, பாலாவுடைய நண்பர் குழுவில் யாரோ என்பது, இப்போதைய சந்தேகம். எனவே, அது போன்ற வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள். போலி என்று தெளிவாகத் தெரியக் கூடிய நகைகளை மட்டும். அணிந்து போ… நான் சொல்வது புரிகிறது அல்லவா?” என்று கேட்டபோது, அவன் முகத்தில் இருந்த கவலை சாருமதிக்கு வியப்பளித்தது. 

“அப்படி என்னை அடித்துப் போட்டுவிட்டு பிடுங்குவார்கள் என்றா, எண்ணுகிறீர்கள்? பிறகு மாட்டிக் கொள்வோம் என்று தெரியாதா? அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல சுந்தர், நன்றாகப் படிக்கிறவர்கள்தான். பாதி நாள் மட்டம் போட்டாலும், நல்ல மதிப்பெண் வாங்கி விடுகிறார்கள்” என்றாள் சாருமதி. 

எழுந்து வந்து, அவள் அருகே அமர்ந்து, ஒரு கரத்தால் அவளது தோளைச் சுற்றிச் சற்று இறுக அணைத்து, சற்றுக் கனத்த குரலில், மோகனசுந்தரம் கூறினான் “இதைப் பற்றி என்னை ரொம்பக் கற்பனை செய்ய வைக்காதே. சாரு. பிறகு, இந்த முயற்சியையே நாம் விட்டுவிட நேரும்”.

சொன்னதை மனைவி உள்வாங்கச் சற்று அவகாசம் கொடுத்துவிட்டு “ஆனால், உன் தங்கை என்பதால், அடியோடு விடவும் முடியாது. எனவே, அவர்களை அந்த மாதிரித் தப்புக்குத் தூண்டி விட்டுவிடக் கூடாது என்பதில், மிகவும் கவனவமாக இரு. அதேசமயம், திருமணத்தின் போதான என் நிபந்தனைகளை வெளிப்படையாகப் பாலாவுக்கு நினைவுபடுத்தி, இங்கிருந்து பணம் பெயராது என்பதையும் தெளிவுபடுத்து”.

விஷயம் புரிந்துவிட, சாருமதியின் முகம் மலர்ந்தது. 

“ஓஹோ! பாலா மூலம் எந்த விதமான பணவரவுக்கும் வழியில்லை, என்று உறுதியாகத் தெரிந்துவிட்டால், அப்புறம் அவர்களாகவே, அவளை ஒதுக்கிவிட்டுப் போய்விடுவார்கள், என்கிறீர்கள் அதுதானே ஐடியா? இவர்களது நட்பு இவ்வளவுதான் என்று தெரிந்ததும், பாலாவும் திருந்திவிடுவாள்! அருமையான திட்டம்!” என்றாள் உற்சாகத்துடன்.

அவளை விடுவித்து எழுந்தவன், மனைவியின் கன்னத்தை லேசாக வருடிவிட்டு “இன்னொரு விளைவும் ஏற்படலாம் சாருமதி, ஒருவேளை பணம் திருடிய நபருக்குச் சாருபாலாவிடம் சிறிதேனும் அன்பு இருக்குமானால், அவளை ஒதுக்காமலே, திருட்டுப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக் கொண்டுவந்து, அவளுக்கும் சேர்த்து செலவு செய்தாலும் செய்யலாம். அந்த விரயமும், உன்னிப்பாகக் கவனிக்கப்படும். ஒருவேளை நட்பு, பாசம் எதுவுமே இல்லையென்றால்… எதுவானாலும் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், நீ மட்டும். நூறு சதவீத எச்சரிக்கையுடனேயே, எப்போதும் இருப்பதாக எனக்கு உறுதி தர வேண்டும். மற்றபடி, இந்த முயற்சியே தேவையில்லை!” என்றான் அவன், கண்டிப்பான குரலில்.

அவளது பாதுகாப்புக்காகவே மறுபடியும் வற்புறுத்துகிறான் என்று புரிய, அவளுக்கு மிகவும் சந்தோஷாமாக இருந்தது.! 

“நான் என்ன பச்சைக் குழந்தையா, சார்? என்னைப் பற்றி, எனக்கே அக்கறை இராதா? அதுவும், இப்போது, எனக்கு என் உயிர் வெல்லம், முதலாளி!” என்று அவள் சிரிக்க, அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு, அவன் கிளம்பினான். 

ஆனால் கள்வன் கெட்டிக்காரனா, காப்பான் கெட்டிக்காரனா என்றால், கள்வன்தான் கெட்டிக்காரன்., ஏனென்றால், எங்கே என்ன மாதிரி முயற்சி செய்யப் போகிறான் என்பது, அவனுக்கு மட்டுமே தெரியும். திருட்டு நடந்த பிறகுதான், இப்படித் திருடியிருக்கிறான் என்று காப்பான் கண்டுபிடிப்பது என்று சொல்வதுண்டு. 

அதேபோன்ற அனுபவம், மோகனசுந்தரம் தம்பதிக்கும், விரைவிலேயே நேர்ந்தது! 

சாருபாலாவின் வேலை நேரம், விடுப்பு நாள். ஓய்வு சமயம் என்று எதையுமே அவளுடைய நண்பர் குழாம், சட்டை செய்ததே இல்லை. 

பசையிட்டு ஒட்டியது போல, அவளுடைய நண்பர் கூட்டம், முன்பு, அவள் பக்கத்திலேயே சுற்றிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், இப்போது அவளது பணியின் தன்மை காரணமாக, சாருபாலாவுக்கு, அவர்களோடு நின்று கலகலப்பாக இரண்டு வார்த்தை பேச முடியாமல் போயிற்று. ஓடு ஓடு என்று வாடிக்கையாளர் பின்னே ஓடுவதோ வெறுப்பாக இருந்தது. 

எப்போதும் போல, நண்பர் கூட்டத்தில், யாராவது உனக்கு இதில்லையே, அதில்லையே என்று ஏதேனும் சொல்லி வைப்பார்கள். அதன் வேகம், வெப்பம் எல்லாவற்றையும் காட்டுவதற்கு ஆள் இல்லாமல், அப்படியே மூட்டை கட்டி வைத்திருப்பாள் சின்னவள். 

சமயம் பார்த்து, அங்கே போய், சாருமதி வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

தன் எரிச்சல், கோபம் எல்லாவற்றுக்கும், தமக்கை சாருமதியையே, பாலா வடிகாலாகப் பயன்படுத்தினாள். 

ஆனால், அவள் என்ன பேசினாலும், பெரியவள், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. சாவி கொடுத்த பொம்மை மாதிரி, யார் யாரோ ஏற்றி விடுவதை, இவள் ஒப்பிக்கிறாள் என்று அறிந்திருந்ததால், கோபப்படக்கூடாது, வருத்தப்படக் கூடாது என்று தனக்குத்தானே சொல்லி, தன்னையே அடக்கிக் கொள்வாள் அவள். 

ஆனால், முன் போன்ற தயக்கங்கள் ஏதுமின்றி, மோகனசுந்தரத்திடம் நடந்தவை அனைத்தையும் மறையாமல் சொல்லுவாள். 

அப்படி மனம் விட்டு, வாய்விட்டுச் சொல்லும்போதே தங்கையின் கூர் நாவு சுட்ட காயங்கள் எல்லாம் ஆறிவிட்டதைப் போல, அவளுக்குத் தோன்றும், அவனது பரிவான ஒரு வருடலில் தழும்புகூட மறைந்து போயிற்று! 

ஆனால், மோகனசுந்தரம் எதிர்பார்த்த மாற்றம் எதுவும், பாலாவுடைய நண்பர்களிடம், ஏற்படவில்லை. பாலாவால் பயனில்லை என்று, அவர்கள் அவளை வெட்டி விடவும் இல்லை. பாலாவுக்காக, யாரும் பணத்தை அள்ளி வழங்கவும் முன்வரவில்லை. எப்போதாவது வெளியே போய்ச் சுற்றும்போது ஓர் ஐஸ்க்ரீம். ஒரு பீட்சா. சூயிங்கம்… இதற்குமேல் அவளுக்காக, அவர்கள் பைசா நகட்டவில்லை! 

அப்படிக் கொடுத்ததுமே, அவளது சம்பளப் பணம் முழுதாகத் தீர்ந்துவிட்டது என்பதை அறிந்த பிறகே! கொடுக்குமுன், பாலாவுடன் பிறந்த தமக்கையின் பெரும் பணக்காரத்தனமான சொர்க்க போக வாழ்வோடு தங்கையின் வறுமையை ஒப்பிட்டு அக்காவின் கஞ்சத்தனம், சுயநலம் பற்றி ஆளாளுக்கு வர்ணித்த பிறகே, கொடுத்தார்கள்.. 

சாருபாலாவுடைய சகோதரி குரூரமே உருவானவளாக இருந்தாலும் அவளுடைய நண்பர்கள், அவளிடம் உண்மையான அன்பும், அக்கறையும் உடையவர்கள், என்று. பாலாவுக்குத் தெளிவுபடுத்தினார்கள். 

ஒரு மாதம் கழிந்த பிறகும், பணத் திருட்டு தொடர்பாக, ஒரு முன்னேற்றத்தையும், மோகனசுந்தரம் ஜோடியால் காண முடியவில்லை. 

ஆனால், இந்தத் திருட்டுக்கு தொடர்பே இல்லாத வேறு ஒரு நிகழ்ச்சி நடந்தது. 

ஒருநாள் அலுவலகத்தில் சோனா என்ற பெண் ஒருத்தி, மோகனசுந்தரத்தை தனிமையில சந்தித்துப்பேச வேண்டும் என்று கேட்டு, சீட்டுக் கொடுத்து அனுப்பினாள். 

அந்தப் பெயர் ஏதோ உறுத்த, வேறுபுறமாக வந்து, யார் என்று பார்த்த மோகனன், லேசாக அதிர்ந்தான். 

சாருபாலாவுடைய நண்பர் குழுவில் ஒருத்தி! 

சாருமதியோடு தொடர்பு கொண்டு, அவன் விவரத்தைச் சொன்னபோது, அவளுக்கும் காரணம் புரியவில்லை. 

திருடிய பணத்தை, அவ்வளவு எளிதாகத் திருப்பிக் கொடுத்து விடுவார்கள் என்று, இருவருமே எண்ணவில்லை. 

ஆனால், ஏதோ ஒரு வகையில் அந்த ஒன்றரை லட்சம் திருட்டோடு. அந்தப் பெண் சோனாவின் வரவுக்குத் தொடர்பு இருக்கிறது என்ற கருத்து மட்டும் இருவருக்குமே இருந்தது. 

ஒருவேளை தெரிந்தால் தமக்கை வருந்துவாளோ என்று, தன் கோழி மூலமாக மோகனசுந்தரத்துக்குப் பாலா எதையும் சொல்லி அனுப்பியிருக்கிறாளோ என்ற ஐயம் ஒன்று சாருமதிக்குத் தோன்றியது. என்னவென்று தெரிந்து கொள்வது நல்லதுதானே? 

அது போன்ற நாகரீகம், நாளுக்கு எதுவும் பாலாவிடம் கிடையாது என்பது, மோகனனின் அபிப்பிராயம், ஆனால் அதைச் சொல்லி மனைவியின் மனதை வருத்த மனமின்றி, அந்த சோனாவைத் தனியாகச் சந்திக்க அவன் ஒப்புக் கொண்டான். 

ஆனால், அந்தப் பெண்ணுக்கும், அவனுக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் பலன் விபரீதமாக இருந்தது. 

– தொடரும்…

– கண்டு கொண்டேன் காதலை (நாவல்), முதற் பதிப்பு: 2011, அழகிய மங்கையர் நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *