வாழ்க்கையின் இடைவேளைகள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 1,246 
 
 

‘வாட்டர் வாட்டர் எவெரி வேர்…… நாட் அ டிராப் டு ட்ரிங்க்!’ இது கொந்தளிக்கும் கடலில் பணி புரியும் மாலுமிகளின் சொல் வழக்கு. சுற்றிலும் தண்ணீர் …. தண்ணீர் – ஆனால் குடிக்க மட்டும் முடியாது.

எதை வைத்துக் கடலில் செல்ல முயலும் மாலுமி உப்பு நீரைக் குடிக்க முடியாது என்று சொல்கின்றானோ, அதே போல நம் ராஜீவ் வாயில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது ஒரு வங்கியின் கேஷ் கவுன்டரின் பின்னால். ‘கரென்ஸீ கரென்ஸீ எவ்ரி வேர். நாட் அ காயின் இன் பர்ஸ்’

ஈஸிபி வங்கியின் மன்னார்குடி கிளையில் அவன் பொறுப்பான கேஷ் அதிகாரி. வருடக் கடைசி என்பதால் அதிக பட்சமான வரவு செலவுகள் காகிதக் குப்பையாகக் காட்சி தந்த அந்த கேஷ் கவுன்டரின் உள்ளே.

நாம் கண்டது காகிதத் தீவு! சுற்றிலும் மக்கள் வெள்ளம்!

கணக்கில் சேர்க்கப் படும் பணம் அதன் நிறத்தையோ அல்லது அதன் முதலாளியின் இனத்தையோ,ரகத்தையோ, தரத்தையோ துலாக்கோலாக செயல் படுத்தாது. எல்லாமே எண்ணிக்கைக் குவியல்கள்.

பிசியான ஒரு பகல் வேளையில்…..

மேடம்! லாக்கர் ஆபரேஷன் ஆளு வந்தாச்சு- இப்ப வரலாமா. ராஜீவ் கஸ்டமரின் சார்பில், மீனாவிடம் கோரிக்கை வைத்தான். கஸ்டமர் மீனாவைப் பார்த்து சிரிப்பு அனுப்ப முயன்றாள். மீனாவின் அமுக்கலான ‘ஹ்ம்ம்’ அந்த சிரிப்பைத் திருப்பி அனுப்பிவிட்டது.

மீனாதான் அந்த வங்கிக் கிளையில் துணை மானேஜர். ராஜீவ் கேஷ் அதிகாரி.

மொதல்ல அவுங்க புது அக்ரீமென்ட் போட்டு சைன் பண்ணாங்களான்னு பாருடா! நான் ரெடி.’ என்று உரிமையுடன் சொன்னாள் மீனா என்ற மீனலோசனி.

மார்கெட்டிங்-தெய்வசிகாமணி இன்னொரு பாயின்டையும் வைத்தார் ராஜீவிடம். “டேய். லாக்கர் ரென்ட் அரியர்ஸ் இருக்கான்னும் பாத்துடு. என்ன?

ராஜீவ் மீனாவைக் கடைக்கண்ணில் பார்த்து சிமிட்டினான். அவளுக்குப் புரிந்தது. அவனுக்கும் புரிந்தது.

வேறு ஒருவரும் இந்த சிமிட்டலைப் பார்க்கவில்லை என்று இருவரும் எண்ணியிருப்பார்களோ?

இந்த மாதிரியான வங்கி, அலுவலில் சூடு பிடிக்கும்போது, அலுவலர்களுக்குக் கொஞ்சம் இடைவேளை மாதிரி சில நிஜக் கதைகள் கண் முன் வந்து நிற்கும். ஒருவர் இருவர் அதில் பயனாளிகளாகவும், பாக்கி அனைவரும், கஸ்டமர் உட்பட, பார்வையாளர்களாகவும் பயணிக்க வாய்ப்புக்கள் உண்டு. மானேஜர் கண்டும் காணாமல் ஏற்படும் நிகழ்வுகளும் உண்டு. சில நிகழ்ச்சிகள் அனைவருடைய ஆசிகளுடனும் நடக்கும் திருவிழாக்களாகவும் பதிவு பெற வாய்ப்புண்டு.சில வேளைகளில், மானேஜர் கதா நாயகனாகவும் வாய்ப்பு உண்டு.

என்னதான் ஒரே மாதிரியான வேலை ஆனாலும், ராஜீவுக்கு இன்னிக்கு மட்டும் கொஞ்சம் நெருடியது-மனசை.

மீனாவின் டிரான்ஸ்பர் வந்திருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே! அதுவும் பதவி உயர்வில்- இன்ப ரேகைதான்!

நம்ம ராஜீவுக்கு மட்டும் ஏன் துன்ப ரேகை படர வேண்டும்?

மீனாவுக்கும் அது வருத்தமான இமொஜிதான். அவளுக்குள் ஏற்பட்ட உளைச்சலை வெளிக் காட்டாவிட்டாலும், ராஜீவ் வெளியில் காட்டிக் கொண்டு புலம்பினான்.

இந்த மூன்று நாட்கள் அவனுக்கு சொல்லொணாத் துயரத்தை ஏற்றி விட்டது. இந்த வாரக் கடைசி! அவள் பறந்து போவாளே! என்று. இனிமேல் என் கதி என்ன என்று அவன் மனம் அரற்றியது.

ராஜீவ் மல்டி டாலன்ட், பைக் ரேசர், பாடி பில்டர், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் இவற்றில் சிறந்த வார்த்தை ஜாலகன். திருமணமாகி இரண்டு குழந்தைகளை, வலுக் கட்டாயமாக அந்த சீமாவிடம் விட்டு விட வேண்டியாயிற்று. இதைத் தவிர, சீமாவுக்கு மாதம் பணமும் அனுப்ப வேண்டிவந்தது. எல்லாம் நடந்து முடிந்த வேளை! வாழ்க்கையின் விளிம்பிற்கே வந்த நேரம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அங்கே வந்து சேர்ந்தாள் மீனா.

நெருப்புடா அவ!

பெண்களே அவளிடம் முன்வந்து பேச முயற்சி செய்வதில்லை. ஆனால் அலுவலக நடைமுறைகளில் அவள் சூப்பர்ஸ்டார். அப்பழுக்கு கிடையாது. துணை மானேஜர் என்ற ஒரு கௌரவம் வேறு.

மீனாவின் கணவன் வேறு ஒரு வங்கியில் பெரிய பதவியில் இருந்தான். அவனுக்கு வேற்று மாநிலத்தில் வேலை. குழந்தைகள் கிடையாது. தீபாவளி, வெடிங்க் டே, பர்த் டே எல்லாம் அவன் இங்கே வந்துவிட மீனாவுக்கு அவன் நல்ல கணவன்- ஆனால் தூரத்துப் பச்சை!

ராஜீவ் தான் கண்ணிற்குக் குளிர்ச்சி!

மீனா ராஜீவிற்குத் தென்றலானாள்.

இப்படியாக நிழலில் படர்ந்தது காதல் கொடி! மீனாவும் ராஜீவும் கிடைத்த சந்தர்ப்பங்களை விடாமல், விடா முயற்சியுடன், காதலை வளர்த்தார்கள்- யாருக்கும் சந்தேகம் வந்து விடாமல்.

மீனாவின் கணவனுக்கும் ராஜீவின் அறிமுகம் உண்டு. அநுதாபமும் உண்டு.

இந்த நேரத்தில் வந்தது மீனாவின் பதவி உயர்வும் மாற்றலும். அவளுக்கு அவளுடைய கணவன் இருக்கும் இடத்திலேயே மாற்றல் கொடுத்து கௌரவித்தார்கள் ஈஸிபி வங்கியினர்!

இறுதி நேரமும் வந்தது! பிரிவுபசார விழாவில் கண்ணீர் சிந்தி அழுதவர்களில் ராஜீவ்தான் முதன்மை வகித்தான். தனக்குத் தனிப்பட்ட முறையில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி வருந்தினான்.

மீனா அழுதாள். மனத்தின் அழுகை வெளியில் கொட்டாமல் பார்த்துக் கொண்டாள்.

இது விதியா அல்லது விபத்தா என்று இருவரும் ஆலோசனை செய்ய முயன்றனர். மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆராய்ச்சியில் சேரும் அளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்- இது குறித்து.

இறுதியில்…..

மீனா சென்று விட்டாள்- மன்னார்குடியை விட்டு.

ராஜீவ் நடைபிணமானான். அவனுக்கு வங்கியில் வேலை செய்வது என்பது துன்பமயமானது. நாட்கள் நகர மறுத்தன. உடல் ஓய்ந்துவிட்டது.

வாட்ஸ் அப், ஜூம், வீடியோ கால் எல்லாம் நடந்தாலும் சிறக்க வில்லை. சிறகடிக்க முடியவில்லை.

இப்போத்தான் ஒரு சின்ன நிகழ்வு நடந்தது.

புதுசா வந்து சேர்ந்தாள்- ரேணு.

கேஷ் பிரிவில், ராஜீவின் நேரடி கவனிப்பில் பயிற்சிக்காக அவள் பவனி வந்தாள். அவள் எம்.பி.ஏ. பைனான்ஸ் படித்து நல்ல திட்டங்களோடு அங்கே கலந்தாள். சிறந்தாள். மயக்கினாள்.

மயங்கியும் போனாள்- ராஜீவிடம்.

முதலில், ராஜீவிற்கு கவனமே இந்த நட்பில் செல்லவில்லை எனலாம். ரேணு விடாப்பிடியாக ராஜீவின் அந்தரங்கத்தில் தலையிட்டு, அவனை வாழ்க்கை முறை என்ன என்பதை உணர வைத்தாள். நட்பு, பதவி, காதல், காமம் இவற்றைக் கலந்து பருகியது “வாட்டர் வாட்டர் எவ்ரி வேர்…. “ போலத்தான். உப்பு நீரைக் குடித்த உமட்டல் ஏற்பட்டது அவனுக்கு.

இப்போதெல்லாம், ராஜீவிற்கு ரேணு சொன்னால் தான் எடுபடும்.

ரேணு, ராஜீவ் திருமணமும், டெஸ்டினேஷன் வெட்டிங் முறையில் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் மீனா செய்து வருவதாகக் கேள்விப் பட்டேன். இப்போது அவள் ஈஸீபீ வங்கியில் ஜெய்பூரில் முதன்மை மேலாளராக இருப்பதாகக் கேள்வி.

என் மனசில் ஒரு உறுத்தல். காதல் எப்படி நட்பாகி விடுகிறது? நட்பு எப்படி காதலாகி விடுகிறது? எப்படி எல்லாரும் மாறுதல்களை ஏற்றுக் கொள்கின்றனர்? பாடங்கள் படிக்கப் பட்டனவா? அல்லது பாடங்கள் இயற்றப் பட்டனவா?

ஒரு விஷயம்!

மனித மனம் பெரிசு!

காலப் போக்கில் மாறுதல்களை ஏற்க முடிந்தவர்கள்,

ஒன்று அவர்கள் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர்.

இரண்டு, அடுத்தவர்களுக்குப் பாடமாக அமைகின்றனர்.

மொத்தத்தில், மாறத்தானே ஏற்பட்டவை மரபுகள்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *