பாம்புக் கோவில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 1, 2024
பார்வையிட்டோர்: 1,499 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“நமஸ்காரம், சுவாமிகளே! சௌக்கியமா? எப்பொழுது வந்தீர்கள்? கப்பல் பிராயாணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா?” என்று என் இல்லத்திற்கு வந்த சுவாமி நிர்மலானக் தாவை வரவேற்றேன். 

“எல்லாம் குருமகராஜின் அனுக்கிரகத்தால் சௌகரியம்தான். தாங்கள் சௌக்கியந் தானே ?” என்றார் சுவாமிஜி. 

“எனக்கென்ன சுவாமிஜி ? நான் தான் யுத்தத்தில் சிக்காமல் சௌகரியமாக இங்கு வந்து விட்டேனே! தாங்கள் தானே யுத்தத்தின் மத்தியில் அகப்பட்டுக் கொண்டு விட்டீர்கள் ? தாங்கள் பிழைத்து வந்ததே என் பாக்கியம் தான்!” என்றேன். 

உடனே சுவாமிஜி ஒரு கடிதத்தை என் கையில் கொடுத்தார். அதை அவசரம் அவசரமாக வாங்கிப் படித்தேன். மேற்படி கடிதம் அழ கான தமிழில் மணி மணியாக எழுதப் பட்டிருந்தது. ஒவ்வொரு வரியாகப் படிக்கும் போது என் அடி வயிற்றிலிருந்து துக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டே வந்தது, கடைசியில் “வான் மியாங்” என்ற கையெழுத்தைப் படித்ததும் கண்களுக்கு வந்து கண்ணீராகப் “பொல பொல வென்று வெளியே உதிர்ந்தது. 


சுவாமி நிர்மலானந்தா, மலாய் தேசத்திலுள்ள பினாங்கு நகரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் மடத்தின் தலைவர். தமிழ் நாட்டுக் காரர்தான். அவருடைய சொந்த ஊர் கவந்தப் பாடி என்னும் கிராமம். சுவாமிக்குப் பூர்வா சிரமத்தில் முத்துசாமி என்பது நாமதேயம். சென்னையில் பீ.ஏ. படித்து விட்டுச் சேவா உணர்ச்சியின் காரணமாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தவர். நல்ல அறிவாளி; குணசாலி : இங்கிதமான பாஷையில் நளினமாகப் பேசக் கூடியவர். வயது நாற்பது இருக்கலாம். படிப் படியாக தம் உயர்ந்த ஒழுக்கத்தால் மேலான பதவிக்கு வந்தவர். 

சுவாமிஜிக்கு ஆங்கிலம், சீனம், மலாய், ஹிந் துஸ்தானி, தமிழ், சமஸ்கிருதம் முதலிய பாஷை களில் அபார பாண்டித்தியம் உண்டு. 

சீனர்கள் சுவாமிஜியை அடிக்கடி புத்தர் கோவில்களுக்கு வந்து உபதேசம் செய்யும்படி வேண்டிக் கொள்ளுவார்கள். இப்படி அவர் அடிக்கடி விஜயம் செய்யும் இடங்களில் “பாம்புக் கோவில் ” என்னும் பிரசித்தி பெற்ற புத்த ஸ்தலமும் ஒன்று. 

அப்பொழுது தொழிலின் நிமித்தம் நான் பினாங்கில் வசித்து வந்தேன். பொது வேலைகளில் உள்ள ஆர்வத்தினால் தொழிலில் ஈடுபடுவதைக் காட்டிலும் என் மனம் சேவை செய்வதிலேயே நாட்டம் கொண்டது. ஆகவே சுவாமிஜி எனக்கு நெருங்கிய நண்பரானார். 

ஒரு நாள், “இன்று பாம்புக் கோவிலில் பிரசங்கம், போய் வருவோம், வருகிறீர்களா?” என்று சுவாமிஜி என்னைக் கேட்டார். நானும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டேன். 

பாம்புக் கோவில் மிகவும் அதிசயம் நிறைந்தது என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். ஆசையால் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை விடாமல் சுவாமிஜியுடன் மிக்க ஆர்வத்துடன் சென்றேன். வழி நெடுக ரஸ்தாவைத் தவிர மற்ற இடங்களெல்லாம் ஒரே பச்சைப் பசே லென்ற தோற்றமாக பூத்துக் குலுங்கும் மரங்கள், காய்த்துத் தொங்கும் கனிகள் எல்லாம் எந்த மனிதனின் துன்பத்தையும் போக்கிவிடக் கூடியவையா யிருந்தன. மலாயா பூராவிலுமே இத்தைகைய இன்பக் காட்சிகளைச் காணலாம். மேற்படி காட்சிகளை ரஸித்துக் கொண்டே நானும் சுவாமிஜியும் பாம்பு கோவிலை அடைந்தோம். 

கோவில் ஒரு பெரிய திட்டின்மீது அமைந் திருந்தது. ரஸ்தாவிலிருந்து சுமார் முப்பத் திரண்டு படிகள் ஏறியவுடன் பரந்த புல் வெளி தென்பட்டது. அதன் ஓரத்தில் கோவில் அமைக்கப்பட்டிருந்தது. புல் வெளிக்கு வந்த வுடன், கொஞ்சம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்கள்; இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே சுவாமிஜி தூரத்தில் தெரிந்த ஒரு வீட்டை நோக்கி நடந்தார். நானும் கோவிலை நோக்கி மெதுவாக நடந்தேன். அச்சமயம் ஏதோ “சரசர வென்று என் வேஷ்டியில் உராய்ந்தது. சட் டென்று திகிலுடன் பார்தேன். அம்மாடி! ஒரு பெரிய பாம்பு என்மீது ஏற முயன்று கொண்டிருந்தது. உடனே ஒரு குதி குதித்துக் காலை உதிறினேன். பாம்பு கீழே விழுந்ததும் தன் தலையைத் தூக்கிச் சீறி எழுந்தது. நான் என் காலைத் தூக்கினேன். அதே சமயத்தில் எனக்குச் சற்றுத் தூரத்திலிருந்த ஒரு சீனப் பெண் சத்தம் போட்டுக் கொண்டு ஓடி வந்தாள். நானோ பயத்தினால் என்னை அறியாமல் என் பாதரட்சையினால் அச் சர்ப்பத்தின் தலையை மிதித்து நசுக்கி விட்டேன். பாம்பு ரத்தத்தைக் கக்கிக் கொண்டு இறந்துவிட்டது. பாம்பு அடிபட்டு இறந்து கிடைப்பதைக் கண்டதும் அந்தச் சீனப் பெண் ஸ்தம்பித்து விட்டாள். இறந்த சர்ப்பமே மறுபடியும் உயிர்பெற்றுக் கோபத்துடன் சீறுகிறதோ என்னும்படி அவள் தோன்றினாள். திடீரென்று நான் சற்றும் எதிர்பாராத விதமாய்ப் ‘படீ’ ரென்று ஓங்கி என் கன்னத்தில் அறைந்து விட்டு, என்னைப் பிடித்து அப்பால் தள்ளினாள். நான் தூரப் போய் விழுந்தேன். எனக்கோ ஒன்றும் புரிய வில்லை. என் கன்னத்தில் அவளுடைய நான்கு விரல்களும் பதிந்து விட்டன. எரிச்சல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவளோ நசுங்கிய பாம்பைக் கையில் எடுத்துத் தடவிக் கொடுத்துக் கொண்டே விம்மி விம்மி அழுதாள். பின்னர் சீன பாஷையில் கூவிக் கூவித் தன் தகப்பனை அழைத்தாள். எங்கிருந்தோ அவளுடைய தகப்பன் பரபரப்புடன் ஓடி வந்தான், அவன் பின்னால் சுவாமிஜியும் ஓடி வந்தார். அந்தச் சீனப் பெண்ணின் தகப்பன் நசுங்கிய பாம்பைப் பார்த்து விட்டுச் சற்றுத் திகைப்படைந்து நின்றான். பிறகு, “யார் இதைக் கொன்றது?” என்று பயங்கரத்வனியில் அதிகாரமாகக் கேட்டான். அந்த இளம் பெண் அழுது கொண்டே என்னைச் சுட்டிக் காண்பித்தாள். ஐயோ ! அவனுடைய நெருப்பைக் கக்கும் கண்களைப் பார்க்க எனக்கு மிகவும் பயமா யிருந்தது. தகப்பனையும் மகளையும் சுவாமிஜி தேற்றினார். பின்னர் அவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பெண் இறந்து போன பாம்பைக் கையில் எடுத்துக்கொண்டு போனாள்; நானும் அவர்கள் பின்னால் நடந்து சென்றேன். 

ஆலயத்துக்குள் பிரவேசித்ததும் என்னையும் அறியாமல் மேலே நோக்கினேன். ஒரு பெரிய பாம்பு தொங்கிக் கொண்டிருந்தது. கீழே பல பாம்புகள் அங்கு மிங்கும் ஓடிக் கொண் டிருந்தன. தூண்களில், கதவுகளில், புத்தர் சிலையில், விளக்குகளில் எங்கே பார்த்தாலும் பாம்பு மயமாகவே இருந்தது. அவைகளில் சில அப் பெண் மீதும் அவள் தகப்பன் மீதும் ஊர்ந்து விளையாடின. எனக்கு ஒரு பக்கம் பயமும், இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது. கடைசியாகப் புத்தர் சிலையை அடைந்தோம். இறந்த சர்ப்பத்தை அந்தச் சிலையின் முன்னால் வைக்கும்படி சுவாமிஜி அப் பெண்ணுக்குக் கட்டளை யிட்டார். அவளும் அப்படியே வைத்தாள். பின்னர் மூவரும் சீன முறைப்படி கும்பிட்டார்கள். என்னை அறி யாமல் நானும் கும்பிட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் சுவாமிஜி என்னைக் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு போய் எல்லோரும் மௌன மாக ஓர் இடத்தில் உட்கார்ந்தோம். 

“ஏன், அந்தப் பாம்பைக் கொன்றீர்கள் ?” என்று சுவாமிஜி திடீரென்று மௌனத்தைக் கலைத்து ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார். 

“கொத்த வரும் பாம்பைக் கொல்லுவது குற்றமா, சுவாமிஜி?” என்று இரக்கத்துடன் கேட்டேன். 

“வாஸ்தவம்தான் ; ஆனால் இங்குள்ள பாம்புகள் கொத்தாது என்பது உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியாதே, சுவாமிஜி ! கொத்தாத பாம்பும் உலகத்தில் உண்டோ?” 

“தங்களுக்கு இக் கோவிலைப் பற்றிய அதிசய விஷயங்கள் தெரியாது போலிருக்கிறது. சொல்லுகிறேன் கேளுங்கள் :- 

“இந்தப் பெண்ணின் பெயர் வான்மியாங் கியூ. இவர் இவளுடைய தகப்பனார். பெயர் ஹோக் ஹின் கியான். இந்தக் கோவில் உண்டாகும் காலத்தில் இவர்கள் வம்சத்தின் முதல்வரும் ஒரு பாம்பும் உண்டானதாக ஐதீகம். அந்தப் பரம்பரைதான் இவர்களும், இங்குள்ள பாம்புகளும். பாம்புக் குலத்தில் தோன்றிய இந்த வம்சம் பரம்பரையாகப் பாம்பையே குல தெய்வமாக வழிபட்டு வருகிறது. பாம்பு களுக்கு ஏதேனும் கெடுதல் நேர்ந்தால் இவர்கள் வம்சத்துக்கும், நாட்டுக்கும் தீங்கு நேரிடும் என்பதாக இவர்களிடையே ஓர் ஐதீகம் இருந்து வருகிறது. ஆகையால்தான் இங்குள்ள பாம்புகளை மிக ஜாக்கிரதையாகக் கவனித்துப் பரிபாலித்து வருகின்றனர். இவர்களுடைய வம்சத்தில் இதுவரை நடை பெறாத துர்ச் சம்பவம் இன்று நடைபெற்றதைக் கண்டதும் இந்த மலாய் நாட்டுக்கே ஒரு பெரிய அனர்த்தம் உண்டாகப் போவதின் அறிகுறிதான் இது என்றும், கடவுள் எந்த விதமாகத் தங்களைத் தண்டிப்பாரோ என்றும் அவர்கள் பயந்து கவலைப்படுகிறார்கள்!” என்று சொல்லி முடித்தார். 

என் நெஞ்சம் வருத்தத்தால் துடித்தது. “சுவாமிஜி, இதற்கு நீங்கள் தான் ஒரு வழி செய்ய வேண்டும். நானாக மனமறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லை” என்று துக்கத்துடன் கூறினேன். 

சுவாமிஜி ஹோக்கின் கியானையும், வான்மியாங் கியூவையும் நோக்கினார். அவர்களுக்குப் பல விதமான நீதிகளைப் போதித்தார். உயர்ந்த உபதேசங்களைச் செய்தார். ஏதாவது பரி காரம் செய்து விட்டால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்” என்று சமாதானம் கூறினார். 

“வாரத்துக் கொரு தடவை பாம்புக் கோவி லுக்கு வந்து அங்குள்ள பாம்புகளுக் கெல்லாம் பால் ஊற்றி விட்டுக் கடவுளிடம் மன்னிப்புக் கோரவேண்டும்” என்று வான்மியாங் கியூ சொன்ன பரிகார யோசனையை நாங்கள் எல் லோரும் அங்கீகரித்தோம். எதிர்பாராத துர்ச் சம்பவம் காரணமாக சுவாமிஜியின் அன்றையப் பிரசங்கம் தடைபட்டுப் போயிற்று. 

எனவே சுவாமிஜியும் நானும் பிரசங்கத்தை ஒத்தி வைத்து விட்டு புறப்பட்டோம். 


வாரா வாரம் பால் ஊற்றுவதன் மூலம் கடவுளிடம் மன்னிப்புப் பெற்று விடலாம் என்பதை நான் நம்பவில்லையென்றாலும், இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பால் வார்க்கும் சாக்கில் அந்த அழகி வான்மியாங் கியூவையும் பார்த்துவிட்டு வரலாமல்லவா? ஆகையால் அவளிடம் ஒப்புக் கொண்டபடி பாலுடன் மறு வெள்ளிக்கிழமையே பாம்புக் கோவிலுக்குப் புறப்பட்டேன். கோவிலை அடைந்தவுடன் வெகு ஜாக்கிரதையாகக் காலைக் கீழே ஊன்றிக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே நடந்தேன். 

எனக்கு எதிரே வந்த வான்மியாங் கியூ, “என்ன சங்கதி ? என்ன பார்க்கிறாய்? என்று மலாய் பாஷையில் கேட்டாள். 

“ஒன்றுமில்லை; போன வாரம் நடந்தது போல் ஏதாவது நடந்துவிட்டால் என்னுடைய கன்னத் தின் கதி என்ன ஆவது என்று அஞ்சுகிறேன் !” என்றேன். 

அவள் உடனே கல கல வென்று சிரித்து விட்டு, லூ மாஞ்ஞா பூசோ” (நீ ரொம்பப் போக்கிரி) என்றாள். 

பிறகு, புத்த விஹாரத்திற்கு எதிரில் போய் மண்டியிட்டு உட்கார்த்தேன். அவளும் என் அருகில் உட்கார்ந்தாள். கையில் ஊதுவத் தியை எடுத்துக்கொண்டு இருவரும் கையை ஆட்டி ஆட்டிக் கும்பிட்டோம். அப்போது புத்த பகவானுடைய சாந்தம் தவழும் முகத் தின் மீது ஒரு பெரிய மலைப் பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது. நான் அதை அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் அதைத் தடுத்து என் கைகளைப் பிடித்து மறுபடியும் கும்பிடும்படி செய்தாள். என் கைகளை அவள் பிடித்தவுடன் எனக்கு ஒரு புதிய உணர்ச்சி உண்டாயிற்று. ஆகையால் மற்றுமொரு தடவை அவள் என் கைகளைப் பிடிக்க வேண்டு மென்பதற்காக நான் மறுபடியும் வேடிக்கை பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தேன். ஆனால் “சரி, நீ கும்பிட்டதுபோதும், வா!” என்று அவள் என் கையைப் பிடித்துப் ‘பரபர வென்று இழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டாள்! 


ஒரு வெள்ளிக்கிழமை வந்துவிட்டுப் போய் விட்டால், மறு வெள்ளிக்கிழமை வரை அவளைச் சந்திக்காமலிருப்பது எனக்குப் பெரிய வேதனையாகப் போய்விட்டது. ஆகவே, அவளைத் தினமும் சந்திப்பதற்காக நானாகவே வான்மியாங் கியூவுக்கு வலுவில் தமிழ் சொல் லிக் கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டேன். அதற்கு அவளும் சந்தோஷமாக ஒப்புக்கொண் டாள். மறுதினமே பாடம் தொடங்கினேன். 

இப்படியாகத் தினமும் அவளைச் சந்திப்பதும், அவளும் நானும் பக்கத்திலுள்ள அருவிகளுக்கு மாலை வேளைகளில் சென்று குதூகலமாகப் பொழுதைப் போக்குவதும், விளையாட்டு மூலம் தமிழ் மொழியின் இனிமையை அவளுக்குக் கற்றுக்கொடுப்பதுமாக நாட்கள் சந்தோஷமாக ஓடிக்கொண்டிருந்தன. 

ஒரு நாள், நாளைக்குச் சிங்கப்பூர் போக வேண்டிய வேலை ஒன்றிருக்கிறது; போய்விட்டு வருகிறேன்; உனக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வரட்டுமா?” என்று நான் வான் மியாங் கியூவைக் கேட்டேன். 

“சாமான் வாங்குவது இருக்கட்டும், எப்பொழுது திரும்பி வருவீர்கள்?” என்று பதிலுக்குக் கேட்டாள் அவள். 

“ஒருவாரத்தில் திரும்பி விடுவேன்.” 

“அப்படியானால் ஒரு வாரம் வரையில் என் ஞாபகமே உங்களுக்கு இருக்காதல்லவா ?” என்றாள் அவள் கண்களைச் சிமிட்டிக் கொண்டே. 

“இனி நான் எப்படி உன்னை மறக்க முடியும்?” என்றேன். 

“நான் தினந்தோறும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன் !” என்று கூறிவிட்டு, “சந்தோஷமாகப் போய் வாருங்கள்” என்று அவள் என் தலை மறையும் வரை நின்று பார்த்துக்கொண்டே இருந்தாள். 


துரதிர்ஷ்ட வசமாக, நான் சிங்கப்பூர் வந்து சேர்ந்த இரண்டாவது நாளே திடீரென்று ஜப்பான் தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது. இதனால் சிங்கப்பூருக்கும் மற்ற பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது. இந்தியாவைச் சேர்ந்தவர்களில் பலர் அகப்பட்ட கப்பல்களில் ஏறிக் கொண்டு ‘குய்யோ முறையோ’ என்ற ஓலத்துடன் பயணப்பட்டார்கள். என்னைச் சேர்ந்தவர்களிலும் பலர் புறப்பட்டு விட்டனர். நான் மட்டும் வான்மியாங் கியூவை விட்டுப் பிரிய மனமின்றித் தவித்துக்கொண்டிருந்தேன். 

இந்தச் சமயத்தில் அன்று மாலை ஒரு கப்பல் இந்தியாவுக்குப் புறப்படத் தயாராக இருந்தது. நண்பர் ஒருவர் தன்னை வழியனுப்பும் பொருட்டு என்னைக் கப்பல் வரை வரும்படி பலவந்தப் படுத்தினார். நானும் தட்ட முடியாமல் அவருடன் கப்பலுக்குச் சென்றேன். இருவரும் அவருடைய அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். திடீரென்று கப்பல் சங்கு ஊதும் சத்தம் கேட்டது. பின்னோடு திடீர் திடீர் என்று குண்டு விழும் சத்தமும் கேட்டது. மேலே ‘விர் விர்’ என்று ஆகாய விமானங்கள் வட்டமிட்டன. நான் பரபரப்புடன் கப்பலை விட்டுக் கரைக்கு இறங்கப் படிக்கட்டுக்குச் சென்றேன். ஆனால் என்னைப் போக விடாமல் கப்பல் அதிகாரிகள் தடுத்து விட்டனர். கப்பலும் புறப்பட்டுவிட்டது.

ஐயோ! எத்தனையோ குண்டுகளை ஜப்பானியர்கள் சமுத்திரத்திலே வீணாகப் போடுகிறார்களே! என் தலையிலே ஒரு குண்டையாவது போடக்கூடாதா? 

அந்தத் தலை போகிற சந்தர்ப்பத்தில் கப்பல் அதிகாரிகளிடம் நான் என்ன சொன்னாலும் பயனில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே, நானும் எல்லோருடனும் மணல் மூட்டைகளுக்கு அடியில் படுத்துக் கொண்டேன். 


கப்பல் ஊரை அடைந்ததும், “அப்பா, மகனே! இந்த மட்டிலும் வந்து சேர்ந்தாயே!” என்று என் தாய் தந்தையர் என்னை ஆனந்தத்துடன் வரவேற்றார்கள். என் மனதிலுள்ள துக்கத்தை அவர்கள் எப்படி அறியமுடியும்? 

ஒரு நாள், “பினாங்குக்கு அடுத்த பாம்புக் கோவிலில் குண்டு விழுந்து கோவில் கொஞ்சம் சேதப்பட்டது. உயிர்ச் சேதமும் சொற்பம் என்று தெரிகிறது” என்ற செய்தியை ரேடியோ மூலம் கேட்டேன். 

“ஐயோ பாவம்! வான்மியாங் என்ன கதி ஆனாளோ? பாம்புக் கோவிலில் வேறு யார் இருக்கப் போகிறார்கள்? அவளும் அவளுடைய தகப்பனும்தானே? ஆகவே, அங்கே உயிர்ச்சேதம் என்றால் அவர்கள் இருவரும் தான் இறந்து போயிருப்பார்கள்!” என்று எண்ணிக் கொண்டேன். 

எப்படியோ வருஷம் ஆறு ஓடிவிட்டது. அணு குண்டின் தயவினால் உலக மகா யுத்தத்துக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. யுத்தம் முடிந்த ஒரு மாதத்துக்குப் பிறகு, சுவாமி நிர்மலானந்தா என் இல்லத்திற்கு வந்து மேலே குறிப்பிட்ட கடிதத்தை என்னிடம் கொடுத்தார். 

என் உள்ளத்தை உருக்கிய அந்தக் கடிதம் வருமாறு:- 

அன்பு மிக்க பாபுஜி ! 

தங்கள் பாத தூளியை வணங்குகிறேன். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை இன்றுவரை அறியேன். சிங்கப்பூர் சென்ற தாங்கள் என்ன கதியானீர்கள் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. இவ்வளவு வருஷமாகத் தங்களைப்பற்றி எங்கெல்லாமோ விசாரித்தாகிவிட்டது. ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இக்கடிதம்கூட உங்கள் கையில் கிடைக்குமோ என்னவோ? தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று என் நெஞ்சம் துடித்துக் கொண்டே இருக்கிறது. நிச்சயம் தாங்கள் உயிருடன் சௌக்கியமாக இருப்பீர்கள் என்று திடமான நம்பிக்கை மாத்திரம் எனக்கு இருந்தது வருகிறது. தாங்கள் என்னை விட்டுப் பிரிந்த இரண்டாம் நாள் சிங்கப்பூரில் குண்டு விழுந்ததை அறிந்து துடிதுடித்துப் போனேன். தாங்கள் சௌகரியமாக என்னிடம் வந்து சேரவேண்டுமே! என்று புத்த பகவானைப் பிரார்த்தனை செய்யாத நாளே கிடையாது. என் தகப்பனார் இங்கிருந்து சுமார் ஒரு பர்லாங்கு தூரத்தில் விழுந்த குண்டு ஓன்றின் அதிர்ச்சியின் காரணமாக இறந்து விட்டார். நான் தன்னந் தனியளாகி விட்டேன். திடீரென்று இப்படி அனாதையாகி விடுவேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அதன் பின்னர் சுவாமிஜியைத் தேடிச் சென்றேன். அதிர்ஷ்டவசமாக அவர் பினாங்கு மடத்தில் அகப்பட்டார். அவர் என்னை மிகவும் பரிவோடு உபசரித்து ஆறுதல் சொன்னார். எனக்காக அவர் பெரும் பிரயத்தனம் எடுத்துத் தங்களை மலாயா பூராவும் விசாரித்தார். தங்களைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்க வில்லை. நான் அவருடைய மடத்திலேயே வாழ்ந்து வருகிறேன். தாங்கள் பாம்பைக் கொன்றதினாலே யுத்தம் வந்ததாக இருந்தாலும், அதனால் என் தந்தை இறந்ததாக இருந்தாலும் நானும் அதே காரணத் தினாலே செத்துப் போவதாக இருந்தாலும் கூட எனக்குக் கவலை யில்லை. தங்களை மறுபடியும் இந்த ஜன்மத்தில் ஒரு முறையாவது பார்த்து விட்டால் அதுவே போதுமானது. 

தங்களைக் காண என் கண்கள் துடிக்கின்றன. இதயம் பொங்கி நிற்கிறது. 

தங்கள் அடியாள்,
வான்மியாங் கியூ. 

ஆகா! எத்தகைய அன்பு! எவ்வளவு தூய்மையான உள்ளம்! அவளுடைய தமிழ்க் கடிதத்தைக் கண்டதும் என் உள்ளம் குதூகலம் அடைந்தது. எங்கள் அன்புக்கு மத்தியில் பாஷை, மதம், நிறம் ஒன்றும் தடை செய்யவில்லை. 

அடுத்த கப்பலிலேயே சுவாமிஜியும் நானும் மலாயாவுக்குப் புறப்பட ஆயத்தமானோம்.

– சீனத்துச் சிங்காரி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 1950, தமிழ்ப் பண்ணை லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *