செயல்வினை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 6,106 
 

இன்று டிசம்பர் 31, காலை.

கடந்த வருடம் இந்த நேரம் எல்லாம் அப்பாவிடம் திட்டு வாங்கியபடி டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தது ஞாபகம் வந்தது, கேசவனுக்கு.

பாவம் அவரும் என்னத்தான் செய்வார்? பிடிச்ச வேலையை சொந்தமா செய்வோம் இல்லைன்னா சும்மா இருப்போம் அப்படிங்கறது என் கொள்கை,

அது அப்பாவிற்குப் பிடிக்காத ஒன்று, நான் பணமெல்லாம் தரமாட்டேன், கஷ்டப்பட்டு பொறியியல் படிச்சிட்டு கிடைச்ச வேலையை ரசித்து செய்யனுங்கிறது அப்போவோட ஆசை.பெரும்பாலும் எல்லா அப்பாக்களின் ஆசையும் அதுதான்.

ஆனா, எனக்கு இதெல்லாம் கேட்டு கேட்டு அலுத்து விட்டதாலே, நான் பாட்டுக்கு சாப்பிட்டு விட்டு இரண்டு நேர்முகத்தேர்வு கடமைக்கு முடித்து, இரவு பத்து மணி இருக்கும் கடற்கரையோரம் காந்தி சிலையருகே என் எதிர்காலக் கேள்விக்குறியோடு அமர்ந்திருந்த போது நடந்த சம்பவம்,

இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. நாட்கள் எவ்வளவு வேகமாக நகர்ந்துள்ளன என ஆச்சரியமாக இருந்தது,

வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டு ஓடும் நாட்கள் கனமான பொருளை வைத்த எடை இயந்தியரத்தின் முள்போல் ஓடும். அப்படித்தான் இந்த வருடம் ஓடியது எனக்கு.

கீரீச்…..கீரீச்…..என சறுக்கியபடி ஒரு இரு சக்ரவாகனம் ஒன்று நிலை தடுமாறி ஒரு நபரும் வண்டியும் என்னைத்தாண்டி தரையில் தேய்த்தபடி ஓட , ஓரு சிறிய அளவு கைப்பை ஒன்று என் காலடியில் வந்து விழுந்தது.

கைப்பையை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி ஓடினேன், அதற்குள் வாகனத்தில் வந்த இருவரும் சேர்ந்து அவனையும் வாகனத்தையும் சோதனையிட்டனர்.

ஏதும் இல்லைடா, வா வா போயிடலாம் எனக்கூறி நிமிடத்தில் அவர்கள் வந்த வாகனத்தில் பறந்தனர்.

நான் அவரை நெருங்கிப் பார்த்தபோது அவர் என்னையும், கைப்பையையம் பார்த்து கையமர்த்தியது போல் உணர்ந்தேன். பேச்சுக்கொடுத்தபடி அருகே அமர்ந்தபோது அவர் உயிர் அவரிடம் இல்லை. அதற்குள் கூட்டம் சேரவே, நான் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தபடி இருந்துவிட்டு கிளம்ப எண்ணி , கைப்பையை லேசாக திறந்து பார்த்த போது இரண்டு இரண்டாயிரம் ரூபாய் கட்டுகள் இருந்தது. அவரிடம் இருந்து அடித்துப் பிடுங்கத்தான் இவ்வளவும் நடந்து இருக்கும் என புரிந்தது எனக்கு. அதோட வீடு திரும்பிவிட்டேன்.

அந்த மாதமே கிடைத்த பணத்தை வைத்து ஒரு பழைய இரும்புகளை மற்றும் தேவைநற்ற மின்சாதனப்பொருள்களைக் கொள்முதல் செய்யும்
‘கேசவன் டிரேடிங்’ என்ற நிறுவனம் ஒன்றைத் துவக்கினேன்.

வாங்கிய பழைய இரும்பு உள்ளிட்ட உலோகத்தை தரம் பிரித்து மறு சுழற்சி செய்தும், பழைய காகிதங்களை வாங்கி கூழுக்குப் போடாமல் அதைக்கொண்டு காகிதப்பை தயாரிக்கத் தொடங்கினேன், சிறிதாக தொடங்கிய அத் தொழில் நெகிழிக்கு மாற்றாக நல்ல வரவேற்பைப் பெற்றது, சிறிய முதலீட்டில் நான் துவங்கிய இந்த நிறுவனம், ஓர் ஆண்டில் பத்து நபர்களுக்கு சம்பளம் கெடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

அந்த நிகழ்ச்சிக்குப் பின் என் மனது அவ்வப்போது தவறு இழைத்துவிட்டாய்! என்றும், அப்பணம் இறைவனால் நம்மிடம் சேர்க்கப்பட்டது, என இரு வேறு மனநிலையில் தடுமாறி பின் நிதானித்து யாரோடையதோ? நாம் இந்த ஒரு வருடத்தில் நன்றாக வளர்ந்து விட்டோம், அதே போல் இயலாதவர்களுக்கு நாமும் செய்வோம் இத்தொழில் இறைவனுடையது நான் ஊழியம்தான் செய்கிறேன் என்ற நினைப்பில்தான் இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.

இன்று அதே டிசம்பர் 31 ..

அந்த நிகழ்வின் நினைப்பு வரவே கடற்கரைக்குச் சென்று அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்திவிட்டு சிறிது நேரம் உட்காரலாம் என் நினைத்து அமர்ந்து இருந்தபோது,

அங்கே வந்த ஒரு அம்மாவும்,ஒரு இளம் பெண்ணும் பூக்கள், பால் கொண்டு அந்த இடத்திலே அஞ்சலி் செலுத்தி அழுததைக் கண்டு அவர்களை நெருங்கி, என்னங்க!
அம்மா ஏன்? என்னாச்சு?எனக் கேட்க,

தம்பி, இங்கதான், இங்கதான் என் ஒரே மகனை போன வருடம் இழந்தேன்,என தேம்பி அழுதாள்.

அம்மா,எது? ஒரு வருடம் முன்னே வண்டியிலே வந்து விழுந்தாரே, அவங்களா? என்றான்.

ஆமாம்பா, அவன் என் மகன்தான், அன்றையோட எங்க வாழ்க்கையே மாறி்போச்சு, இவ கல்யாணத்திற்கான பணத்தை வேலை செஞ்சு இடத்திலே கடன் வாங்கிக் கொண்டு வரும் போது, விபத்து நடக்க , இவ கல்யாணம் நின்னு போயி, அதிலிருந்து நாங்க இன்னும் மீளவே இல்லை, எல்லாம் எங்கள் தலைவிதி, என புலம்பினாள்

அய்யோ ,நான் எத்தனை கொடுமைகளைச் செய்துள்ளேன், ஒரு திருட்டு, ஒரு பெண்ணின் வாழ்க்கை என இரு பெரிய தப்பு செய்துவிட்டோமே என வருந்தியபடி சிலையருகே போய் அமர்ந்து விட்டான்.

அதற்குள் அவர்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டிருந்தார்கள்,

ஓடிச்சென்று அவர்கள் விலாசம் வற்புறுத்தி கேட்டு வாங்கிக்கொண்டான்.

ஒரு பெண்ணின் திருமணவாழ்க்கை நமது திருட்டால் நின்று போனதே,என வருந்தினான், நீ திருடலையடா,அது உனக்கு கிடைத்தது என சமாதானப் படுத்தினர், ஆனாலும் அதை திரும்ப கொடுக்காமல் பதுக்கியது திருட்டுக்குச் சமம் தானே என்று புலம்பினான்.

பெற்றோருடன் நேரில் சென்று உண்மையைக் கூறி மகனை இழந்த தாய்க்கு மகனாகவும் ,பெண்ணைப் பெற்ற தாய்க்கு மருமகனாகவும் இருக்க விருப்பம் தெரிவித்தான் கேசவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *