கண்டு கொண்டேன் காதலை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 5,461 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-11

சாருபாலாவுடைய நண்பர் கூட்டத்தில் இருந்த இன்னொரு பெண்ணான சோனா, பொதுவாகவே உடை விஷயத்தில் ஒரு மாதிரிதான். மறைப்பதை விட, உடலைக் காட்டுவதற்காகவே அணிவது போலத் தோன்றும். 

இன்று அது மிகவும் அதிகப்படியான அளவில் இருந்தது. 

தோளில் இருந்து, மிக இறுக்கமாக வெட்டப்பட்டிருந்த ஆடை, உடம்பின் மேல் பகுதியைக் கிட்டத்தட்ட திறந்து காட்டியது. தொடை வரை,இருந்த ‘ஸ்லிட்டோ, கீழேயும் எதையும் மறைக்கவில்லை. 

நடந்து வந்து உட்கார்ந்த விதமோ, வந்த நோக்கத்தை அவள் வாய்விட்டுச் சொல்லாமலே தெளிவாக்கியது. 

எதையும் கவனியாதவன் போல “உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய கூடும்? சொல்லுங்கள் ” என்று சாதாரண தொழில் முறைப்படி, மோகனசுந்தரம் வினவினான். 

“உதவியா?” என்று கிண்கிணியாகச் சிரித்தாள் சோனா.

மோகனசுந்தரம் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, சிரிப்பைச் சீக்கிரமே முடித்துக்கொண்டு, “இது சூப்பர் மார்க்கெட்! பெரிய வியாபாரம் நடக்கும் இடம். இங்கே உதவியாவது இனனொன்றாவது? இங்கே நமக்குள ஒரு வியாபார ஒப்பந்தம் செய்வோம், மோகன். என்னை நன்றாகப் பார்த்தீர்கள் அல்லவா? பே…ரழகி! ஒரு நாளைக்கு ஒரு லட்சம்! நீங்கள் பணம் தரும் நாளெல்லாம், உங்களோடு இருப்பேன்” என்றாள் அவள், ஒரு மயக்குப் பார்வையுடன். 

லேசாகப் புருவங்களை உயர்த்தினான் மோகனசுந்தரம். “ஏதோ தப்பான தகவலில் இங்கே வந்துவிட்டாய், என்று நினைக்கிறேன். நான் மணமானவன். அதுவும் உன் சினேகிதியான சாருபாலாவுடைய சகோதரியையே மணந்திருப்பவன், நான். என்னிடம் வந்து இந்தப் பேச்சு பேசுவது சரியில்லையே!” என்றான் அவன். 

“உத்தம புருஷன் போல, ரொம்ப அளக்க வேண்டாம், மோகன்! உங்கள் கதை, எல்லாமே எனக்குத் தெரியும், நீங்கள் எப்படிப்பட்டவர் என்றும் தெரியும், உங்கள் திருமணம் எப்படி நடந்தது என்றும், தெரியும், ஆனால் நான் அப்படி ஆள் அல்ல, நிபந்தனைக்காக மணந்தவளை, விட என்னால் அதிக சுகம் கிடைக்கும்” என்று தலைநிமிர்த்தி அறிவித்தாள் சோனா! 

“ஓ! அப்படியா விஷயம்?” என்று கேட்ட மோகனன், தன் பெரிய மேஜையின் பக்கவாட்டு இழுப்பறையைத் திறந்து, ஏதோ செய்தான். 

மறுபடியும் நிமிர்ந்து சோனாவைப் பார்த்துப் பேசினான். “பார் பெண்ணே, நீ என்ன கருதி இங்கே வந்தாய் என்று, எனக்குத் தெரியும். ஆனால், ஏதேனும் நாடகம் நடிப்பதாக எண்ணம் இருந்தால், இங்கு நடக்கும் எல்லாம், இப்போது ‘டேப்’பில் பதிவாகிக் கொண்டு இருக்கிறது என்று தெரிந்துகொள். எனவே, அசட்டு நாடகங்கள் எதையும் அரங்கேற்றாமல், நான் சொல்வதைக் கவனமாகக் கேள், நான் ஒரு காலத்தில் எப்படிப் பட்டவனாக இருந்திருந்தாலும், இப்போது எனக்கு, என் மனைவி போதும். வேறு எந்தப் பெண்ணும் எனக்கு தேவை இல்லை. சொல்வது தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது தவிர, வேறே எதுவும் சொல்ல வேண்டுமா? அல்லது உடனே கிளம்புகிறாயா ?” என்று அவன் கேட்டு முடிக்குமுன் சோனா விசுக்கௌ எழுந்துவிட்டாள். 

வெறுப்பும் கோபமுமாக, மோகனசுந்தரத்தை ஒருதரம் முறைத்துப் பார்த்துவிட்டு, அவளது ‘ஹைஹீல்’ செருப்புகள் அனுமதித்த அளவு வேகமாக நடந்து, அங்கியிருந்து வெளியேறினாள் சோனா. 

அவள் சென்ற பிறகு, மோகனசுந்தரம் சிறிது நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தான். கோபம் அடங்க அவனுக்கு அந்த அவகாசம் தேவைப்பட்டது. 

இவளெல்லாம், சாருபாலாவுக்கு நட்பு! 

இவள் உண்மையான தோழியாகவே இருந்தாலுமே, தமக்கையின் திருமணம் பற்றி, அவளிடம் எல்லா விவரங்களையும் இப்படிப் பறை சாற்ற வேண்டுமா? 

அதில்லாமல், ஒருத்தி, இந்த மாதிரி வந்து நிற்பாளா? 

கூடப் பிறந்தவளின் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதே பாலாவுக்கு இல்லையே! 

ஒரு பணக்காரனுடைய மைத்துனியாக, ஆடம்பரமான வாழ்வு பற்றி திட்டமிடத் தொடங்கிய தங்கையைக் கட்டுப்படுத்த வேண்டிய தங்கள் திருமணம் பற்றிய உண்மை விவரங்களை பாலாவிடம் சொல்ல நேர்ந்ததாகச் சாருமதி, அவனிடம் ஒருமுறை கூறியிருந்தாள். 

அது, தேவைக்காகச் செய்யப்பட்டது. 

ஆனால், யாருக்கு அவமானம் என்று யோசியாது, அதைச் சின்னவள் விளம்பரப்படுத்தியதுதான், மோகனசுந்தரத்துக்கு எரிச்சலூட்டியது. இந்தப் பெண் திருந்துவதற்கு, இன்னும் பெரிய பெரிய அதிர்ச்சிகள் தேவைப்படும் என்று எண்ணினான் அவன்.! 

அதற்குரிய முதல் கட்டமாகத்தானோ, என்னவோ சாருபாலா கடத்தப்பட்டாள்! 

பிணைக் கைதியாக அவளைப் பிடித்து வைத்திருப்பதாகவும், அவளை உயிருடன் பார்க்க வேண்டுமானால், அவன் சொல்வது போலச் செய்தாக வேண்டும் என்று, சற்றுக் கம்மலான ஆண் குரல் ஒன்று, அவளது செல்ஃபோனில் தொடர்பு கொண்டு கூறவும், சாருமதி சற்று திகைத்தாள். 

முதலில், அவளால் அதை நம்ப முடியவில்லை. 

ஏனெனில் சாருபாலாவுக்கு ஓய்வு நாள் என்று, சாருமதி அன்று காலையில்தான் தங்கையைப் பார்க்கச் சென்று, இரண்டு மணிநேரம் அவளோடு போராடிப் பார்த்துவிட்டுத் தோற்றுத் திரும்பி வந்திருந்தாள். 

கோபமும், வெறுப்புமாக பாலா கத்தியதையும், புலம்பியதையும் பொறுமையாகக் கேட்டதிலும், பலவாறு அவளுக்கு நல்ல புத்தி சொல்ல முயன்றதிலுமாக, அவள், மிகவும் களைத்துப் போயிருந்தாள். 

தமக்கை என்ன சொல்கிறாள் என்பதைக் காதிலேயே வாங்காமல் “அப்படியானால் எனக்கு ஒன்றுமே செய்ய மாட்டாயா?” “எனக்கு பணமே தரமாட்டாயா?” “உனக்கு இவ்வளவு வசதி இருந்தாலும், நானே கஷ்டப்பட்டு உழைத்துதான் பிழைக்க வேண்டுமா?” என்று திருப்பித் திருப்பி, பாலா அதையே கேட்ட விதத்தில், சாருமதிக்கு தலையும் வலிக்கத் தொடங்கியிருந்தது. 

கடைசியாக, பாலா ஒருபோதும் திருந்த மாட்டாள் என்ற முடிவுக்குத்தான் அவள் வர வேண்டியதாக இருந்தது. 

நம்பிக்கை இழந்து சோர்ந்த மனம், சாருமதியின் உடலையும் பாதித்தது. 

சற்று நேரம் படுத்துக் கிடந்தவளுக்கு, அப்படிச் சோம்பியிருக்கவும் பிடிக்கவில்லை. 

சரிதான் என்று, சில தானிய வகைகளை எடுத்துக்கொண்டு, மொட்டை மாடிக்குச் சென்றாள். இதற்குள் சில குருவிகள் அவள் கையிலிருந்தே தானியங்களைக் கொத்தி எடுக்கப் பழகியிருந்தன. அதிலும் அப்போதுதான் பறக்கத் தொடங்கியிருந்த குஞ்சுப் பறவைகள், ரொம்பத் தைரியமாக வந்து, தானிய மணிகளைக் கொத்தி எடுக்கும் இளம் கன்று பயமறியாது என்பது, இதைத்தானா என்று சாருமதி சந்தோஷமாக நினைப்பாள்.

ஆனால், மோகனசுந்தரத்துக்கு இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஒருதரம். ஒரு சிவப்புக் கொண்டைக் குருவி இடம் தவறிக் கொத்தியதில், அவளது கை கன்றிவிட்டது என்பதோடு, குருவிகளின் தானாகக் கொத்திக் கிளறி, இரைதேடும் இயல்பைக் கெடுக்கிறாய் என்பான். 

ஆனால், அவளுக்கு அதிலே மகிழ்ச்சி என்பதால், அவளைத் தடுக்கவும் மாட்டான். அவளது சந்தோஷத்தை ரசித்தபடி, எதையாவது பேசிக்கொண்டு, அவள் அருகிலேயே அமர்ந்திருப்பான். 

இப்போதும், பாலா விஷயமாக, மேலே என்ன செய்வது என்று, அவனே ஏதாவது வழி கண்டு பிடிப்பான்…  

யோசித்தபடியே அமர்ந்திருந்தவளுக்கு, அன்றும் சற்று நேரத்திலேயே, மனநிலை சரியாகிவிட்டது. 

கணவன் வந்து என்ன சொல்லக்கூடும் என்று, ஓர் இனிய கற்பனையில், சாருமதி ஆழ்ந்திருந்த போதுதான், அந்த மோனத்தைக் கம்மல் குரல்காரன் கெடுத்தான். 

“பொய்!” என்று வாய் சொல்லும்போதே, சாருமதியின் மனம் சில குறிப்புகளைப் பதிவு செய்தது. 

செல் திரையில் தெரிந்தது, அறிமுகம் அற்ற எண். பொது தொலைபேசி! பேசியவனின் கம்மல் குரல், இயல்பானது அல்ல. துணியால் டெலிஃபோன் கருவியை அல்லது வாயை மூடிக்கொண்டு பேசியதன் விளைவு. 

இந்த மாதிரியார்… என்று யோசனை ஓடும்போது, சட்டென அவளது நெஞ்சுக்குள் ஒரு குளிர் பரவியது. 

சே. பயப்படக்கூடாது. இருந்திருந்து, பாலாவைப் போய் யார் கடத்தப் போகிறார்கள்? 

அழகிதான். ஆனால், அழகுக்காக கடத்துகிறவன், அப்படியே கொண்டு போயிருப்பான். இப்படி, மிரட்டிக் கொண்டிருக்க மாட்டான். யாரோ, வேடிக்கைக்காக… 

யார் அவளிடம் வேடிக்கை செய்வார்.. கள்? 

சாருமதி யோசிக்கையிலேயே, “என்னது? பொய்யா? அப்படிச் சொல்லி, இலகுவாகத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாயா? அதெல்லாம் முடியாதும்மா! நான் கேட்கிற பணம் நீ கொடுத்துதான் ஆக வேண்டும்!” என்றான் அவன் கண்டிப்பாக! 

“ப…பணமா?”*; 

“ஆமாம்! பணமே தான். நான் கேட்கிற பணம், நான் சொல்லுகிற இடத்துக்கு வந்து சேர்ந்தே ஆக வேண்டும்! இல்லாவிட்டால், உன் தங்கையைச் சின்னா பின்னமாக்கிக் கொன்றுவிடுவோம்! ஜாக்கிரதை” 

இதற்குள், அச்சம், சாருமதியை வெகுவாக பீடித்து விட்டிருந்தது. ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “எல்லாம் பொய்! உனக்கு பணம் வேண்டுமானால், பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணை அல்லவா, கடத்துவாய்! அதைவிட்டு, நடுத்தர இனத்தைச் சேர்ந்த எங்கள் குடும்பத்துப் பெண்ணைப் போய் கடத்துவாயா? இதிலிருந்தே, எல்லாம் பொய் என்று தெரியவில்லையா?” என்று அமர்த்தலாகவே பேசினாள். 

ஆனால் “உன் தங்கை சாதாரண குடும்பம்தான், பெண்பிள்ளை! ஆனால் அவளுடைய அக்காக்காரி, நீ பணக்காரிதானே? உன் தங்கை, உனக்கு முழுதாகக் கிடைக்கணுமா? அல்லது, துண்டு துண்டாகவா? அதை நீ முடிவு பண்ணிக்கொள்!” என்றான் கம்மல் குரல். “ஆனால், அதற்கு முன்னே, சாருபாலா எங்கள்கிட்டே இருக்கிறாளா, இல்லையான்னு, தெளிவு பண்ணிக்கோ! ஏய், இந்தாடி, உன் அக்கா. கிட்டே பேசு! என்னது? பேச மாட்டியா? இதப் பாருடா, அவள் முதுகிலே, நல்லா நச்சென்று ஒன்று கொடு! ஓடி வந்து பேசுகிறாப்போல, மூச்சைப் பிடிச்சு ஒரு குத்து வை!” என்று அவன் முடிக்கவும், எங்கோ உடல் தசையில் கை முஷ்டி இறங்கும் ஓசை கேட்டது. 

“ஆ….! ஐயோ, அக்கா!” என்று பாலாவின் குரல் வலியில் துடிக்கும் குரல் கேட்கவும், சாருமதி கலங்கிக் போனாள். 

“ஏய், வேண்டாம். வேண்டாம். அவளைத் துன்புறுத்தாதே!” என்று பதறித் துடித்தாள். 

அம்மாவின் செல்லப் பெண். வீட்டில் யாரும் அவளை கடிந்து பேசியது கூடக் கிடையாது, யாரோ ஒரு ரெளடி, அவளை அடிப்பதா? எல்லோரையும் போல, ஐயோ அம்மா என்று அலறாமல், ‘அக்கா’ என்று அவளை அல்லவா ஒரே துணையாகக் கருதி அழைக்கிறாள்.!

டெலிஃபோன் கருவி யார் கையில் இருக்கிறதோ “பாலாவை அடிக்க வேண்டாம்” என்று தான் கதறுவது யார் காதிலாவது விழுகிறதா என்று தவித்தபடி, பாலாவை அடிக்க வேண்டம் என்று, சாருமதி மீண்டும் மீண்டும் கத்திக் கெஞ்சினாள்.

“ஏய் சும்மாக் கத்தாதே” என்று, முதலில் பேசிய கம்மல் குரல் மறுபடியும் கேட்டது. “உன் தங்கையைத் துன்புறுத்துவதும், சும்மா விடுவதும் இனிமேல் உன் கையில்தான் இருக்கிறது. சத்தமே இல்லாமல், காதும் காதும் வைத்தாற்போல, நாங்கள் கேட்கிற பணத்தை நாங்கள் சொல்லுகிற மாதிரி எங்களிடம் கொண்டு வந்து, கொடுத்து விட்டாய் என்று வை. எந்தப் பழுதும் இல்லாமல், உன் தங்கை வீடு வந்து சேருவாள். இல்லை… போலீஸ், கீலீஸ் என்று போனாய் என்றால், மவளே, அவளைக் கூறு கூறாகத்தான் தூக்கிப் போகும்படி இருக்கும். என்ன? எப்படி வசதி?” என்று மறு முனையில் பேசிய விதத்தில் சாருமதியின் உடல் நடுங்கியது.

பயத்தில் காட்டிக்கொள்ளக்கூடாது என்று, அவள் எவ்வளவு முயன்றபோதும் “எ… என்ன செய்ய்..ய வேண்டும். என்கிறாய்?” என்று கேட்கையில் அவளது குரலும் நடுங்கத்தான் செய்தது. 

“ஆங், அப்படி வா, வழிக்கு! பெரிசாக ஒன்றுமே இல்லை. ஓர் ஐந்து… ஊகூம் ஐந்தெல்லாம், இன்றைக்கு ஒன்றுமே இல்லை! அதனால் உடனே பத்து லட்சம் ரூபாயைத் தயார் பண்ணி வை. அதை, எங்கே எப்படித் தர வேண்டும் என்று அரை மணி நேரத்தில் சொல்லுகிறேன். ஆனால், நினைவு வைத்துக் கொள். வெளியே மூச்சு விடக்கூடாது! அப்புறம் சாருபாலா, உனக்கில்லை!” என்றான் கம்மல் குரல். 

சற்றுத் தள்ளியிருந்து “ஐய்யோக்கா, வேண்டாம்க்கா என் கதி எப்படியேனும் ஆகட்டும். எனக்காக, நீ அத்தானிடம் கையேந்தி அவமானப்பட வேண்டாம்… ஐயோ, ஐயோ,கையை முறுக்காதேயேன். வலிக்கிறதே, கடவுளே… ” என்று சாருபாலாவின் கண்ணீர் குரல் கதறிக் கொண்டிருக்கும்போதே, ஃபோன் தொடர்பு அறுந்து போயிற்று. 

கையை முறுக்காதேயா? இன்னும் எப்படியெப்படிப் பாலாவைச் சித்திரவதை செய்கிறார்களோ! 

காலையில்தான், பணத்துக்காக, அவ்வ…வளவு ‘ஞைஞை’ பண்ணியவள், இப்போது ஓர் ஆபத்தில் மாட்டியதும், தமக்கைக்காக எவ்வளவு யோசிக்கிறாள்! 

இதுதான் ரத்தபாசம் என்பது! 

தனக்காக, கணவரிடம் கையேந்தி, அக்கா கஷ்டப்படக் கூடாது என்று, என்ன மாதிரிச் சூழ்நிலையில் தங்கை கூறினாள் என்று  நினைக்கையில், சாருமதியின் நெஞ்சுக்குள் பிசைந்தது.

இவளை எப்படிக் காப்பாற்றுவது? 

இருப்பது, இன்னும் அரைமணி நேரம்! இல்லை, அதற்கும் சில நிமிஷங்கள் குறைவாகவே! 

கணவனிடம் சொன்னால், அவன் ஏதாவது செய்வான் என்று செல்லைக் கையில் எடுத்தவளுக்குத் தயக்கம் உண்டாயிற்று. 

மோகனசுந்தரம் சாருபாலாவுக்காகச் செய்ய மாட்டான் என்று இல்லை. செய்வான். ஆனால், அவன் எல்லோரையும் போன்றவன் அல்ல. செய்கையாளன்.ஆனால், தானே சிந்தித்துத் செயல்படுகிறவன். இப்போது, அவன் என்ன மாதிரி யோசிக்கக்கூடும்? 

அவன் தனியாகச் சென்று, அதிரடி வேலை எதுவும் செய்யக்கூடும், என்று, சாருமதிக்குத் தோன்றவில்லை. 

அதைவிட, காவல், அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனத்தாரைத்தான், அவன் முதலில் அணுகுவான். அவர்கள் துணையோடு பாலாவை மீட்க முயற்சிப்பான்! 

இதுதான் புத்திசாலித்தனமும் கூட! 

ஆனால், ஆள் கடத்தல்காரனுக்கு இது எப்படியோ தெரிந்து போனால், அப்புறம் பாலாவின் கதி என்ன ஆகும்? 

‘கூறுகூறாக’ என்று அந்த வில்லன் சொன்னது நினைவு வர, சாருமதியின் உடம்பு மறுபடியும் நடுங்கியது. 

இல்லை அது நடக்கக்கூடாது! 

மோகனசுந்தரத்துக்குத் துணை வருகிறவர்கள் கவனமாகத்தான் செயல்படுவார்கள் என்றாலும், பாலாவைக் கடத்தியிருப்பவன், கண்ணுக்குத் தெரியாத எதிரி! அவளுடைய ஆட்கள், எங்கெங்கே, என்ன மாதிரி இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாது. எனவே அது போன்ற மீட்பு முயற்சியே தவறாகி, பாலாவின் கழுத்துக்குக் கத்தியாகி விடக்கூடும். 

எனவே, இப்போதைக்கு கணவனுக்குத் தெரிவிப்பது கூடாது என்று, சாருமதி முடிவு செய்தாள். 

அந்தக் கடத்தல்காரன் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு.. என்று எண்ணமிடும்போதே, பத்து லட்ச ரூபாயைத் தயார் செய்து வைக்கும்படி, வில்லன் சொன்னது நினைவு வந்தது. 

அவ்வளவு பணம் வீட்டில் இருக்கிறதோ, என்னவோ? ஓடிப்போய், கணவனின் அலுவல் அறையைத் திறந்து, அவன் காட்டிய அலமாரியையும் திறந்து பார்த்தாள். தேவைக்கு மேலேயே பணம் இருந்தது. 

அந்தப் பணம் பற்றி, முதல் நாளில் மோகனசுந்தரம் கூறியது நினைவு வர, சாருமதியின் மனம் கூசியது. 

எவ்வளவு வைத்தாலும் பணம் குறையாது என்று, அன்று அவ்வளவு நம்பிக்கையோடு சொன்னானே! 

ஆனால், கணவன் நிலைமையைப் புரிந்துகொள்வான் என்ற நம்பிக்கையும் இருக்கவே, பத்து லட்சம் ரூபாயை மட்டுமாக எடுத்துத் தனியே கட்டி வைத்தாள். 

சற்று யோசித்து, பணம் எடுத்த, எடுக்க நேர்ந்த விவரம் பற்றி, ஒரு கடிதம் எழுதி, வேலை செய்யும் மேஜை மேல், சட்டெனத் தெரியுமாறு வைத்தாள். 

பணத்தை எடுத்துக்கொண்டு, வெளியே சென்று மறுபடியும் அலமாரியை மூடி. அறையையும் பூட்டி, உரிய இடத்தில் சாவியை வைத்தாள். 

பணத்தைப் பெரிய கைப்பையுள் பத்திரப்படுத்திவிட்டு, கம்மல் குரலானின் அழைப்புக்காக தவிப்புடன் காத்திருக்கலானாள். 

அவளுடைய அவசரம், அவனுக்கு! சொன்ன மாதிரியே, சரியாக அரைமணி நேரத்தில், பாலாவைக் கடத்தியவன், ஃபோன் செய்து விட்டான். 

ஆனால், இது வேறு எண். 

வேறு யாராகவும் இருக்கக்கூடுமோ என்று சாருமதி சற்றுத் தயங்கினாள். கடத்தல்காரன் ஃபோன் பண்ணும்போது, இவள் வேறு யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால், அவன் தப்பாக எண்ணி விடக் கூடாதே! 

சில வினாடித் தாமதத்தின் பின் அவள் செல்லை ‘ஆன்’ பண்ணினால், அவனேதான். அவளது தாமதத்தின் காரணத்தை ஊகித்து, அவன் தன் கெட்டிக்காரத்தனத்துக்காக தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டான். 

“என்னம்… இன்னாம்மே, வேறே யாரோன்னு நென்ச்சியா? நானேதான், நீ ஒருக்கா, போலீசு கைலே போட்டுக் கொடுத்திட்டேன்னு வை! ஒரே நம்பர்ன்னா, அவங்க எளி… வந்து, சுளுவாக் கண்டு பிட்சிருவாங்க, பாரு! அதான் வேறே நம்பரு! இன்னா? பணம் ரெடியா?” என்று வினவினான் அவன். 

கஷ்டப்பட்டு முயன்று, சென்னைத் தமிழில் பேசுகிறான் என்பது சாருமதிக்குப் புரிந்தது. பேச்சின் மூலமாக அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக, மாற்றி மாற்றிப் பேசுகிறான். அப்படியானால் அவளுக்குப் பழக்கமான ஆளோ? 

தீவிரமாக யோசித்தவாறே, “ஆமாம்” என்று அவனுக்கு உரிய பதிலைச் சொன்னாள் சாருமதி. 

யார்? யாராக இருக்கும்? 

“ஆஹ்ஹா… அட்ரா சக்கை! ஏ பணம் ரெடியாம்டா! எ…என்னது? சரி, சரி! ஓகே ஓகே” என்று உரக்கப் பேசி மகிழ்ந்தவன், மறுபடியும் சென்னைத் தமிழுக்கு மாறினான் “இதப்பாருமே, இது வரைக்கும் நீ சர்யாத்தான், நடந்துக்கீரே, இனிமேயும், இப்படியே நடந்துகினா, உன் தங்கச்சிக்கு ஒரு பிரச்சினையுமில்லே, மாத்தி, என்னமாச்சும் வெள்ளாட்டுக் காட்னே… அப்புறம், பாலாப் பொண்ணு பணால்தான். இன்னா? புரிஞ்சுக்கினியா?” 

“பு…புரிகிறது! நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன்” என்றாள் சாருமதி. 

“குட், குட்…டு, குட்ட்…டு ரொம்ப நல்லது! இதே போலக் கடச் வரைக்கும், நடந்துக்க! நீ என்ன ப… இன்னா பண்ற, முதல்ல, ஒரு. ஆட்டோ புடி, அதிலே ஏறி…” 

“கார்… காரிலேயே சீக்கிரம் வரலாமே!” 

இந்த கொடியவர்களிடம் இருந்து, பாலாவைச் சீக்கிரமாக மீட்கும் வேகம், அவளுக்கு. 

ஆனால், “உன்னிடம் கார் இருப்பது. எங்களுக்கும் தெரியும்டீ” என்று அந்தப் பக்கம் சீறினான் அவன். 

அவளிடம் கார் இருப்பதில் இவனுக்கு என்ன கோபம்? காரணத்தை அவனே சொன்னான் “மகாராணி காரிலே பணத்தைக் கொண்டு வருவாய். கார் நம்பரைக் கொண்டு, அங்கங்கே போலீசுக்குக் கண்காணிப்பது இலகுவாக இருக்கும். அப்புறமாய் நீ பணத்தைக் கொடுக்கும்போது அவர்கள் லபக்கென்று எங்களைப் பிடித்து விடுவார்கள்! அதுதானே உன் திட்டம்? இதிலே மாட்டிக்கொள்ள, எங்களை என்ன, இளிச்சவாய் என்று நினைத்தாயா?” என்று எகத்தாளமாகக் கேட்டான். 

இதேபோல, எத்தனையோ பேர் பேசலாம், குரலும் தெரிந்தால்…

ஆனால், குரல் விஷயத்தில் வில்லன் வெகு கவனமாக இருந்தான். அதற்குள் யாரோ எச்சரிக்கவே, கம்மல் குரல் மீண்டும் பேச்சுத் தமிழை மாற்றினான் “தோ பாரு! நான் சொன்னா, சொன்னபடி செய்யணும். குறுக்கே மறுக்கே கேள்வி கேக்கப்படாது! மொதல்ல. ஒரு ஆட்டோ பிடி. அதுலே ஏறி, கு… குந்திக்கினு, மாம்பலம் டேசனுக்குப் ஏறங்கி நில்லு. அல்லா எடத்துலேயும் ஒன்றைக் கவனிக்சுக்கினே. போரயில் டேசன்மா! அங்க, எலக்ட்டிக் ரயிலைப் புடி, பல்லாவரத்துல் இருப்பம். ஏதாச்சும் சிலுமிசம் பண்ணினேன்னா, ஒட்டு மொத்தமாக, அல்லாத்தையும் அழிச்சிடுவோம். அத்த மனசிலே வச்சுக்கிட்டு அங்கேயே நில்லு, நா மறுபடி கூப்டு, மேலே இன்னா செய்யோணுமின்னு தங்கச்சிப் புள்ளையக் கூட்டிட்டு நிம்முதியா, வூட்டுக்குப் போவே! அல்லாட்டி அவ்ளோதான். ஆட்டம் குளோஸ்” என்று ஃபோன் தொடர்பைத் துண்டித்தான் அவன். 

மறுபடியும், கணவனிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று. சாருமதிக்கு வெகுவாக தோன்றியது. ஆனால், முன்னிருந்த காரணமும், எந்தவித மாற்றமும் இல்லாமல், அப்படியே இருந்ததே! 

ஒரு பெருமூச்சுடன் கைப்பையை எடுத்துக்கொண்டு, சாருமதி கிளம்பினாள். 

வீட்டு வாயிலைத் தாண்டி. அவள் போர்டிகோவில் இறங்கவும், டிரைவர் ஓடி வந்தான் “பசங்க யாரும் சொல்லலியேம்மா, கொஞ்சம் நில்லுங்கம்மா. இதோ, ஒரே நிமிட்டிலே காரைக் கொண்டாரேன்மா” என்று கார் ஷெட்டை நோக்கி திரும்பினான். 

சாருமதி திகைத்து நின்றாள். இவனை என்ன சொல்லிச் சமாளித்து நிறுத்துவது? 

அத்தியாயம்-12

சாருமதிக்கான தனிக் கார். அதை ஓட்டுவதற்கு மட்டுமேயான காரோட்டி. 

இவனை என்ன சொல்லி நிறுத்துவது? 

அவளது “வேண்டாம், கந்தசாமி”யில் நின்றுவிட்டபோதும், கேள்வியாய். எஜமானி முகத்தைப் பார்த்தான் கந்தசாமி. இவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே. 

தலையைத் திருப்பிக் கொண்டு போய்விடலாம். யாரும் அவளைக் கேள்வி கேட்க முடியாது. 

ஆனால், விஷயம் உடனே மோகனசுந்தரத்துக்குப் போய்விடும். அது, இப்போது கூடாது. பாலாவைக் காப்பாற்றிக் கூட்டி வந்தபிறகு, அவளே சொல்லுவாள்! 

அதுவரை…. 

“கந்தசாமி இது…. இது கொஞ்சம் கஷ்டப்பட்ட இடம். அங்கே காரில் போய் இறங்கினால், நன்றாக இராது. நான் ஆட்டோவில் போய்க் கொள்வேன். நீ வீட்டிலேயே இரு” என்று இயன்றவரை கம்பீரமாக பணித்துவிட்டு, சாருமதி மேலே நடக்கத் தொடங்கினாள். 

ஆனால் “அம்மா… அம்மா!” என்று காரோட்டிப் பின்னாலேயே வரவும், எரிச்சலோடு திரும்பிப் பார்த்தாள். 

“என்ன” 

“அம்மா, காலிலே செருப்புப் போடலீங்கம்மா.. அதான் கூப்பிட்டேம்மா”

குனிந்து காலைப் பார்த்த சாருமதி, பிரமித்தாள், இந்த அளவுக்கா, அவள் கலங்கிப் போயிருக்கிறாள்? 

கலக்கம்தான். பாலாவை நல்லபடியாக மீட்டுவர வேண்டுமே என்று கலக்கம்! கணவனிடம் சொல்லாமல், இவ்வளவு பணத்தை எடுத்துப் போவதும் கலக்கமே! 

இன்னும் இந்தப் பணியாளனிடம் என்ன சொல்லிச் சமாளிப்பது என்று, அதுவும் கலக்கமே! 

அவசரமாக யோசித்து “ஓ! நேரத்துக்குப் போயாக வேண்டுமே என்ற அவசரத்தில், செருப்பையே மறந்துவிட்டேன் போல!” என்று உரக்க முணுமுணுத்தவாறே வீட்டினுள் சென்று, செருப்புகளை மாட்டிக்கொண்டு வேகமாக வெளியே வந்தால், சுற்று மதிலைக் கடந்து ஓர் ஆட்டோரிக்ஷா உள்ளே வந்து கொண்டிருந்தது. 

புரியாமல் பார்க்கையிலேயே, காரோட்டி கந்தசாமி, ஆட்டோவிலிருந்து இறங்கினான் “அவசரமாகப் போக வேணுமின்னு சொன்னீங்களேம்மா. அதான் நீங்க செருப்பு போடப் போகவும், நான ஓடிப்போய் ஆட்டோ பிடித்து வந்தேன், இல்லாட்டி, நீங்க தெரு முனை வரை நடக்கணுமே” என்று விளக்கம் கொடுத்தான். 

என்னவோ, கண்ணைக் கரித்தது, சாருமதிக்கு! 

“நன்றி கந்தசாமி” என்று நிமிராமல் கூறியவாறே, ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். 

“மாம்பலம்” என்று அவள் ஆட்டோ ஓட்டியிடம் சொன்னது, கந்தசாமியின் காதில் விழந்திருக்குமோ என்று ஒரு கணம் கலங்கினாலும், மாம்பலத்தில் எங்கே என்று கண்டான் என்று. உடனே தெளிந்தாள். 

ஆனால், தெளிவு அதில் மட்டும்தான். 

பாலா எப்படி இருக்கிறாளோ, என்னவோ என்று ஒரே கவலை!

பொதுவாகப் பாலாவுக்கு அவ்வளவாக நாவடக்கம் கிடையாது. இப்போது மாட்டிக் கொண்டிருக்கும் மன இறுக்கத்தில், துடுக்காய் பேசி, என்ன என்ன துன்பங்களை இழுத்துக் கொள்கிறாளோ! 

கணவன் இப்போது வீட்டுக்கு வந்திருப்பானா? இல்லை. இது அவன் வீட்டுக்கு வருகிற நேரம் இல்லை. எனவே அவள் எங்கே இருக்கிறாள்! என்ன மாதிரித் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்று, அவனுக்கு எதுவும் தெரியாது! 

அவளுக்குமே, எப்படி டிக்கெட் எடுத்து, சரியான ரயிலில் ஏறினாள். எப்படிப் பயணம் செய்து பல்லாவரத்தில் இறங்கினாள் என்று எதுவும் தெரியாது. 

உயிரே போலக் கைப்பையை வயிற்றோடு அணைத்து வைத்திருந்தது. மட்டும்தான் அவளுக்கு நினைவு இருந்தது. அவளுடைய தங்கையின் உயிர், அந்த உயிரைக் காக்கும் சக்தி, அந்தப் பையிலேதானே, இருந்தது! உயிர் போல என்ன? உயிருக்கும் மேலாகவே கருதிக் காக்க வேண்டியதுதான்! 

சாருமதி பல்லாவரம் ரயில் நிலையத்தில் இறங்கி, சில நிமிஷங்கள் சென்ற பிறகு அவளது செல் ஒலித்தது. 

பாலாவைக் கடத்தியிருப்பவன்தான்! 

செல்லை காதில் வைத்தபடியே, அவன் சொல்கிறபடி, அவளை நடக்கச் சொன்னான் அவன். 

இடது பக்கச் சந்து, வலது பக்கம் திரும்பு, நேராக நட.. அவன் சொல்லச் சொல்ல நடக்கையில், ஒரே இடத்தையே சுற்றுகிறோமோ என்ற சந்தேகம், சாருமதிக்கு உண்டாயிற்று. ஆனால், அதைச் சரி பார்த்துக் கொள்ளவோ, அவனிடமே விளக்கம் கேட்கவோ தைரியம் இல்லாமல், அவன் சொன்னபடியெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தாள் அவள். 

சுமார் அரை மணி நேரம் இப்படிச் சுற்றிய பிறகே, தான் செல்லும் இடத்திற்கெல்லாம், ஒரு தாடிக்காரன், தன்னைப் பின் தொடர்வதைச் சாருமதி கவனித்தாள். கறுப்புக் கண்ணாடி வேறு. 

இவன், கடத்தல் கும்பலைச் சேர்ந்தவனா? அல்லது, ஆளில்லாத இடத்தில் அவளது கைப்பையைப் பிடுங்கிக் கொண்டு ஓடத் திட்டமிடும், சாதாரணத் திருடனா? 

கால்கள் சோர்ந்தன, திருடன் விரட்டினால் ஓடக்கூட முடியாதோ என்று தோன்ற, தாடிக்காரனைப் பற்றி கம்மல் குரலானிடம் கூறினாள்.

“நம்ம ஆள்தான். நீ தனியாகத்தான் வந்தாயா என்று கவனிக்கிறான். இனிமேல் அவன் கூடவே, இங்கே வந்திடு” என்றான் அவன். 

சாருமதி எதிர்பார்த்தது போலப் பாழடைந்த எந்த வீட்டினுள்ளும், தாடிக்காரன் அவளை அழைத்துச் செல்லவில்லை. 

அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கட்டப்பட்டிருந்த வீடுகளில், மிகச் சாதாரணமான ஒன்று, ரொம்ப நாள் கவனிப்பின்றிக் காலியாகக் கிடந்தது போன்ற தோற்றம். 

அந்த வீட்டின் முன் தாடிக்காரன் நிற்கும்வரை, சாருமதியின் கண்ணில் பட்டது, இவ்வளவே. அந்த வீட்டின் முன் நின்று, ஏதோ சங்கேதம் போல, அவன் கையை இருமுறை தட்டவும், அவளது உடல் விறைத்துப் போயிற்று. 

இங்கேதான் பாலா இருக்கிறாள்! வருவது கூட்டாளிதான் என்று, உள்ளே இருப்பவர்களுக்கு, இவன் தெரிவிக்கிறான்! 

கடவுளே! பாலா உயிருடன் இருக்க வேண்டுமே! 

கால்கள் பின்ன, சாருமதி நடக்க முடியாமல் நடந்து தவிப்புடன். உள்ளே சென்றால், நல்லவேளையாகப் பாலா ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில், உட்கார்ந்து… உட்கார வைக்கப்பட்டிருந்தாள். 

பின்னே கத்தியோடு ஒருவன் நிற்க, உடலில் கட்டுக்களுடன் தங்கையைப் பார்த்த சாருமதிக்கு கண்ணை இருட்டிவிட்டது. உடல் வெலவெலத்து, நிற்க முடியாமல், தடுமாறி, கீழே விழப் போனவள், ஒருவாறு சமாளித்து, அப்படியே தரையில் கிடந்த விரிப்பில், பாதி விழுந்தாற்போல, தொப்பென அமர்ந்துவிட்டாள். 

“பாலாம்மா!” என்ற அழைப்பு காற்றாகத்தான் வெளி வந்தது “கண்ணூ.. உ… உனக்கு ஒன்றுமில்லையேடா?” 

திகைத்து விழித்த சாருபாலா “அ…அக்கா… ” என்று ஏதோ சொல்லத் தொடங்குமுன், “போதும், போதும் அக்கா, தங்கை கொஞ்சலை எல்லாம், அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள். பணம் கொண்டு வந்திருக்கிறாயா, இல்லையா? முதலில் அதைக் காட்டு!” என்று அதட்டினான் உள்ளே நின்ற மூவருள் ஒருவன். 

கலக்கத்துடன் நிமிர்ந்தாள் சாருமதி. இவன்தான் இந்தக் கூட்டத்தின் தலைவனா?ஃபோனில் கம்மல் குரலில் பேசியவன்?

கூட்டி வந்த தாடிக்காரனோடு சேர்த்து, மொத்தம் நாலுபேர் ஒரு நபர், பெண். தாடி தவிர மூன்று பேரும், முகமுடி அணிந்திருந்தனர். அப்படியானால், தாடியும் அடையாள மாற்றத்துக்கான ஒட்டுதான்!

இவர்களிடம் பாலா எப்படிச் சிக்கியிருப்பாள்? 

மேலே யோசிக்குமுன் “என்னம்மே, முழிக்கிறே? பணம் கொண்டு வந்தியா? இல்லியா? இல்லைனாக்க, முகமெல்லாம் கீசிருவம்! டே சூனா, அந்த தங்காச்சி மூஞ்சி மேலே ஒரு போடு போடு!” என்று சென்னை தமிழுக்கு மாறினான், தலைவன். எல்லாம் ஏமாற்று. 

“வேண்டாம். வேண்டாம். பணம் இதோ இருக்கிறது” என்று அவசரமாகக் கைப்பையைத் திறந்து, பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை எடுத்து, உட்கார்ந்திருந்த விரிப்பின் மேல் வைத்தாள். 

சில கணங்கள், அங்கே மூச்சு விடும் சத்தம் கூடக் கேளாது போயிற்று. 

பத்துக் கட்டுக்களையும் பரப்பி வைத்துவிட்டு “வேண்டுமானால், எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றவள், பதிலின்றிப் போகவும், திகைத்து நிமிர்ந்து பார்த்தாள். 

நின்று கொண்டிருந்த அத்தனை ஜோடிக் கண்களும், பணத்தின் மீதுதான் இருந்தன. 

தெறித்து விழுந்து விடும்போல விரிந்திருந்த கண்களின் பளபளப்பைப் பார்க்கையில், ஏனோ சாருமதியின் அடி வயிற்றில் ஒரு குளிர் பரவியது. 

திடுமெனப் பணம், நகையைக் கண்டதும். பெரிய குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைப் பற்றி கணவன் சொன்னது நினைவு வர, குளிர் அதிகமாயிற்று. 

இங்கே தாமதிப்பது தப்பு, பாலாவை அழைத்துக்கொண்டு, விரைவாகச் சென்றுவிட வேண்டும் என்று எண்ணித் தங்கையைப் பார்த்தவள், மறுபடியும் துணுக்குற்றாள். 

ஏனெனில் சாருபாலாவும் அந்தப் பணக் கட்டுக்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள், ஆசையாகவே! 

ஆனால், பாலா செலவாளி. எப்போதும் கொஞ்சம் பணத்தேவையும் அதனால் ஆசையும் அவளுக்கு உண்டுதான். மொத்தமாகப் பணத்தைப் பார்த்ததும், பரபரப்பு ஏற்பட்டிருக்கலாம். 

எப்படியும், இன்னும் இங்கே இருப்பது தப்பு! 

கையை ஊன்றி எழுந்து “நீங்கள் கேட்ட பணம். இதோ இருக்கிறது. நானும் பாலாவும் கிளம்புகிறோம்” என்று விட்டு “வா…பாலா” என்று தங்கையை அழைத்தாள்.

“ம்ம்ம்…” என்று இழுத்தபோதும், “சரிக்கா” என்று சாருபாலாவும் எழுந்தாள். 

கண்களில் நீர்த்திரையிட, “வாடாம்மா” என்று சாருமதி தங்கையின் கையைப் பற்றி, இருவருமாக வாயிற்புறமாகத் திரும்புகையில் “ஆகா, அவ்வளவு அவசரப்பட்டால் எப்படி?” என்று கட்டைக் குரலில் கூறியவாறு, குறுக்கே கையை நீட்டித் தடுத்தான், அவர்களில் தலைவன் என்று சாருமதி கருதியவன்!

அடி வயிற்றுக் குளிர் நெஞ்சை எட்ட “ஏன்? எண்ணிப் பார்க்க வேண்டுமா? பாங்க் கட்டு சரியாகத்தான் இருக்கும் ?” என்றாள் சாருமதி, பதட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றபடி.

“அது, எங்…களுக்கும் தெரி…யும்!” என்றான் தலைவன் அலட்சியமமாக. 

இரு பெண்களையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு “நீ அக்கா, நீதான் பணக்காரி!” என்றான் சாருமதியைப் பார்த்து. 

இவன் என்ன சொல்ல வருகிறான் என்று, இருவருக்குமே புரியவில்லை. 

அவனிடம் இருந்தே வரட்டும் என்று பெரியவள் காத்திருக்க “அதனால்தான், கேட்ட பணம் உடனே வந்திருக்கிறது!” என்று சின்னவள் பதில் கொடுத்தாள், “அப்புறம் என்ன?” என்று கேட்டாள். 

“அதைத்தானே சொல்லப் போகிறேன்!” என்று எல்லோரையும் ஒருதரம் எடுப்பாக நோக்கினான் அவன் “ஒன்றுமில்லாத உதிரி. இவளுக்கே பத்து லட்சம் என்றால், உண்மையான பணக்காரி, இவள் அக்காவுக்கு என்ன மதிப்புப் போடலாம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி?” 

கோடி என்ற வார்த்தையில், எல்லோர் கண்களிலும் ஆசை மின்னுவதைக் கண்ட சாருமதியின் தொண்டை வறண்டு போயிற்று. 

“இல்லை… பேச்சு மாறாதீர்கள்! நீங்கள் கேட்ட பணம் தந்தாயிற்று.” என்றவாறு, அவள் பின்னடைய “ஏய், இந்த அக்காக்காரியைப் பிடித்து, அவளது செல் ஃபோனைப் பிடுங்குங்கள். நாற்காலியோடு சேர்த்துக் கட்டுங்கள்! முன்னைப் போல இல்லாமல், இப்போது நன்றாக இறுக்கமாகக் கட்ட வேண்டும்” என்று உத்தரவிட்டான் தலைவன்.

கடத்தல் கும்பல் சாருமதியை நோக்கி விரைய, “நோ!கூடாது! பத்து லட்சத்துக்குத்தானே, நாம் திட்டம் போட்டோம். அதன்படி, ஆளுக்கு இரண்டு லட்சம் பிரித்துக் கொண்டு போய்விடலாம். அக்காவை ஒன்றும். செய்யாமல் விட்டுவிடுங்கள்! ” என்று தமக்கையின் அருகே வந்து நின்று சாருபாலா மற்றவர்களைத் தடுக்க, தங்கையின் பேச்சில், புரிபட்ட உண்மையிைல், பெரியவளுக்கு இப்போது மயக்கமே வந்தது! 

இவர்கள் ஆள் கடத்திகள் அல்ல. பாலாவுடைய நண்பர்கள். பணத்துக்காக, எல்லோருமாகச் சேர்ந்து போட்ட நாடகம்! பாலாவும் சேர்ந்து! 

“பன்றியுடன் சேர்ந்த கன்று’ என்று எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறான்!

“பாலா, நீயுமா?”என்றாள் ஈனசரத்தில், அவள்!

தமக்கையின் அடிபட்ட தோற்றம், தங்கையைத் தாக்கியதோ?

கூடவே, அவள் தடுப்பதை அலட்சியம் செய்து, சாருமதியை நண்பர்கள் இறுகக் கட்டியதும் ஆத்திரமூட்ட “ஏய் விடு! அக்காவை கட்டாதே என்கிறேனே, காதில் விழவில்லை? இப்படிக் கட்டினால், அவளுக்கு எவ்வளவு வலிக்கும்? ஒரே நிமிஷமக்கா. நான் கட்டை அவிழ்த்து விட்டுவிடுகி…” என்று குனிந்து கட்டை அவிழ்க்க முயன்றவள், முதுகில் விழுந்த பேயறையில், தலை, கீழே தரையில் முட்டிக்கொள்ள “ஆ!” என்று அலறினாள்! 

“ஐயோ! என்றதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாமல், சாகுமதி தவிக்க, ஒருவாறு சமாளித்து எழுந்து சாருபாலா திரும்பிப் பார்த்து, “தி.. தினு. என்… னையா… என்னை நீயா, அடித்தாய்?” என்று கன்றி வீங்கிய நெற்றியைப் பிடித்துக்கொண்டு, திகைப்பும் அதிர்ச்சியுமாக வினவினாள். 

“அடி மட்டுமா? கழுதை! பெயர் சொல்லி அழைத்து, என்னைக் காட்டிக் கொடுத்தற்கு, உன்னைச் சித்திரவதையே செய்ய வேண்டும். ஆனால், பத்து லட்சம் சம்பாதித்துத் தந்திருக்கிறாய், இன்னமும் சம்பாதித்துத் தரப் போகிறாய். என்பதால், இத்தோடு விடுகிறேன். அத்தோடு இடக்கு முடக்காய் உன் அத்தான் நாலு கேள்வி கேட்டால், எப்படியும் உளறிக் கொட்டத்தானே. போகிறாய்? உன் அக்கா முன்னிலையில், என் பெயர் சொன்னதில் புதிய பாதிப்பு எதுவும் இராது என்று, அதைச் சும்மா விடுகிறேன். ஆனால், மறுபடியும் அக்காவைக் கட்டவிழ்த்து விடுகிறேன், மண்ணாங்கட்டி என்று ஏதேனும் செய்தால், முதுகுத் தோலை உரித்து விடுவேன், முன்னைப் போல நடிப்பு அடி. அல்ல. நிஜமாகவே, தோல் உரிந்து விடும்! நம்பு” என்று மிரட்டினான் அந்த தினேஷ்!

ஒன்றும் விளங்காமல், மலங்க விழித்த தோற்றம் மெல்ல மாறி, பாலாவின் கண்களில் நீர் பெருகலாயிற்று. உச்சந் தலையில் அடித்தாற்போல உண்மை புரிந்து கொள்வது, இப்போது அவளது முறை போலும்! 

“தினேஷ், நீயா இப்படி பேசுகிறாய்? எனக்காக, எதுவும் செய்வேன் என்பாயே!” என்று வேதனையோடு வினவினாள். 

தங்கையை இவன் எப்படியெல்லாம் வளைக்க முயற்சித்திருக்கிறான் என்று, சாருமதியின் மனம் கொதித்தது.

வளைத்தே விட்டான் என்றல்லவா, தோன்றுகிறது! மற்றபடி, பணத்துக்காக, இந்தக் கடத்தல், நாடகம் எப்படி நடை பெற்றிருக்க முடியும்? 

ஆனால், தினேஷ் வேறு சொன்னான் “செய்திருப்பேன்தான்! ஆனால், நீதான் தொடக் கூட விடவில்லையே! அதனால், இத்தனை நாட்களை உனக்காக வீணாக்கியதற்கு, இப்படி ஓர் அறுவடை எடுத்துக் கொள்கிறேன்! ஏனென்றால், அந்த ஒன்றரை லட்சம் போல, இன்னொரு வாய்ப்புக்குத்தான், உன் அக்கா புருஷன் இடம் கொடுக்கவே மாட்டேன் என்கிறானே!” என்றான் எரிச்சலாக. 

அம்மா, அப்பாவுக்கு மகளாகத்தான் இருந்திருக்கிறாள் பாலா என்று, சாருமதியின்மனம் சற்றே ஆறுதல் அடைந்தது. 

அத்தோடு, மோகனசுந்தரம் சந்தேகப்பட்டது போல, அந்தத் திருட்டும், இவனதுதான். அந்தத் திருட்டில் பலன் கண்டதில், நோகாத பணத்துக்காக. அடுத்துத் திட்டமிட்டிருக்கிறான்! அதில் வந்த பணத்தைக் கண்டதும், இன்னும் அதிகத்துக்கு வழி தேடுகிறான். பணம் மட்டும் எவ்வளவு வந்தாலும், திருப்தியே இராது என்று, இப்போது அல்லவா தெரிகிறது! 

கணவனிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று, காலம் கடந்தி ஞானோதயம் அவளுக்கு இப்போது வந்தது. பயனற்ற ஞானம்! 

சாருமதிக்காவது, முதல் திருட்டுப் பற்றி, ஓரளவு ஊகம் இருந்தது. ஆனால் சின்னவளுக்குத்தான், இதில் ரொம்பப் பெரிய அதிர்ச்சி!

“நீ… நீயா தினேஷ், அந்தப் பணத்தைத் திருடியது? நீயே திருடிவிட்டு, வேறே யாரோ திருடிய மாதிரிப் பேசினாயே! கடைசியில், தண்டனை எனக்கு. பதவி இறக்கம்! எவ்வளவு அவமானமாக இருந்தது என்று, உனக்குத் தெரியும்தானே? பிறகும், நீ நிஜத்தைச் சொல்லவே இல்லையே!” என்று கண்களில் வலியோடு வினவினாள். 

“நீ அவமானப்பட்டதற்கு, நான் ஏண்டி, மாட்டிக்கொள்ள வேண்டும்? உண்மையைச் சொன்னால், பணத்தை வேறே, திருப்பிக் கொடுக்க நேருமே! அதை யோசியாமல், கேட்கிறது பார்! சரியான லூசு” 

நாலு நண்பர்களும் சேர்ந்து சிரித்தது, எப்படிப்பட்ட தீப்பிழம்பாய்த் தங்கையின் இதயத்தைச் சுட்டெரித்திருக்கும் என்று, சாருமதியால் ஊகிக்க முடிந்தது! ஆனால், இன்னொரு நட்பை ஏற்குமுன் யோசிப்பாள் அல்லவா? 

வளர்ச்சியின் வலி! விளைவு நல்லதாகவே இருக்கும். 

ஆனால், எந்தத் தைரியத்தில் இந்தத் தினேஷ் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கிறான்? 

இது, வெளியே தெரியும்போது, தனக்கே ஆபத்து என்று யோசிக்கவில்லையா? அல்லது, வெளியே சொல்ல ஆள் இல்லாமல், சகோதரிகள் இருவரையும் அழித்துவிடப் போகிறானா?

சாருமதியின் இதயம், ஒருதரம் நின்று துடித்தது! 

– தொடரும்…

– கண்டு கொண்டேன் காதலை (நாவல்), முதற் பதிப்பு: 2011, அழகிய மங்கையர் நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *