ஒழுக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 7,854 
 

சாப்பிடுவோமா என்று கேட்டான் சுரேந்தர். இல்ல என்ன சீக்கிரம் ஹாஸ்டல்ல விடு என்று சிடுசிடுத்தாள் ஜெனி. ஏன் எப்பொழுதும் இப்படியே இருக்கிறாய் என்று கேட்க நினைத்து விழுங்கிக் கொண்டான். வயிறு பசியால் நிறைந்திருக்க விழுங்கிய எச்சில் பாரமாய் இருந்தது. எனக்கு பசிக்கு ப்பா திரும்பி வரதுக்குள்ள கடைய அடைச்சிருவாக என்றான். கடிகாரத்தை ஒரு முறை உற்றுப் பார்த்தாள். அப்படியே கண்களை எடுக்காமல் சரி போலாம் ஆனா எனக்கு வேண்டாம் என்றாள்.

ஏன்?

உனக்கு மறந்துட்டு ல்ல. நான் இப்போ லாம் நைட் வெறும் பழம் மட்டும் தான் சாப்பிடுறேன்னு சொன்னது?

நாக்கைக் கடித்துக் கொண்டான். இல்ல பசி மயக்கத்தில என்று இளித்தான்.

போய்த் தொல எதாவது சொன்னா காது கொடுத்துக் கேட்டா தான. ஒன்னு நீ பேசிட்டு இருப்ப இல்ல னா நாய் மாதிரி என்று இழுத்து நிறுத்திக் கொண்டாள்.

சிரித்தான். அது மட்டும் தான் முடிந்தது அந்த நேரத்தில்.

நேற்றிரவு இவன் அறையில் தங்குவதற்காக வந்தாள். திங்கள் கிழமையும் விடுமுறை ஆனதால் மூன்று நாட்களும் இவனோடு இருந்துவிட்டு நேரடியாக செவ்வாய் காலை அலுவலகம் செல்வது என்று திட்டமிட்டிருந்தாள். கூடலை உத்தேசித்தால் ஊடல் தான் எல்லா நேரமும் நிகழ்கிறது.

எல்லாவற்றிலும் இக்கு வைத்துப் பேசுமவளுக்கு அவ்வழகிய சொல்லில் மட்டும் “க்” வருவதேயில்லை. இரவு தீர்ந்ததும் எல்லாம் தீர்ந்து விட்டது அவனுக்கு. அவளுக்கும் கூட தான். பின் எங்கிருந்து தொடங்கியது இந்த சின்ன எரிச்சல் என்று புரியவில்லை. தனிமையில் இருக்க விரும்பினாள்.

டேய் நான் ஹாஸ்டலுக்குப் போகட்டுமா என்றாள். அவன் எந்த அதிர்வும் காட்டாமல் பக்கமாய்ச் சிரித்தான்.

என்ன டா சிரிக்கரே? எனக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கணும். எதோ மூச்சு முட்டுது.

நைட்டே சொன்னேன் திருப்பி ஏன் போட்டுக்கிட்ட. ஃப்ரீயா இரேன்டி யார் வேணாம்னா.

டி சொல்லாதனு எத்தன தடவ சொல்லிருக்கேன். நான் சொல்றது ஒனக்குப் புரியவே புரியாது ல்ல. எனக்கு ஹாஸ்டலுக்குப் போகணும். நீ வந்தா ஓகே இல்லனா ஊபர் போட்டுக்கிறேன்

சரி சரி வரேன்

மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. மழை இருக்கிறதா என்று வெதர்மேன் பக்கத்திற்குச் சென்று பார்த்தான். மழை மேகமேதும் இல்லாதது அவர் பக்கத்தின் வெறுமையில் தெரிந்தது. ச்சே என்று மீண்டும் அறைக்குள் நுழைந்தான். அவளது அடுக்கிலிருந்து துணிகளை எடுத்து மாற்றிக் கொண்டிருந்தாள். எல்லா வாரமும் இங்கே இருப்பதால் தனியாக ஒரு பகுதியை ஒதுக்கித் தந்திருந்தான். எல்லாமும் ஒரு ஜோடி வைத்திருந்தாள். நேப்கினும் கூட.

முட்டுக்குத் தான் இருக்கு இந்த பேண்ட். இத ஏன் போட்டுக்கிட்டு என்று சிரித்தான். அவள் ஏதும் பேசவில்லை. என்ன காரணம், என்ன கோபம் என்று புரியாமல் தவித்தான். ஆனால் முகத்தில் அதற்கான ரேகைகள் இல்லை. சுடிதாரின் மேலாடையை இழுத்துப் போட்டதும் துப்பட்டா என்று எடுத்து நீட்டினான். ம்ம் என்றாள். கொஞ்சம் இளகியிருக்கிறாள் என்று புரிந்தது.

என்ன பேஷன் இது. நெறய லேடீஸ் இப்படி பெர்முடாஸ் மாதிரி போட்டுட்டு இருக்காக என்று கேட்டான். கேட்டதும் சின்ன தலையசைப்பில் ஏதோ சொன்னாள். அவன் காதில் ஏறவில்லை. அவள் துப்பட்டாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். லேசாகச் சரிசெய்து போகலாமா டா என்றாள்.

நீ மட்டும் என்ன டா சொல்ற.

உனக்குப் பிடிக்கலனா சொல்லு இனி சார்னு கூப்பிடுறேன் இல்ல னா மிஸ்டர் சுரேந்தர் னு கூப்பிடட்டுமா?

ஒரு நக்கல் தெரிந்தது. வாய் மீண்டும் புண்ணாகுமென்று பேச்சை திசை திருப்பினான். இப்படித் தான் அன்னைக்கு ஏதோ பேண்ட் போட்ருந்த. காதல் வைபோகமே பாட்டுல வர சுதாகர் போட்ருக்கிற பேண்ட் மாதிரி. தூரத்தில இருந்து பாத்தா ஏதோ வேஷ்டி கெட்டிருக்கிற மாதிரி இருந்துச்சு. சிரித்தாள். சுதாகரின் முகம் நினைவுக்கு வந்தது. அது ப்லாசோ என்றாள். என்னமோ ஆனாலும் நல்லாத் தான் இருக்க எது போட்டாலும் என்று வெறித்தான். ஏன் டா எப்ப பாத்தாலும் கண்ணு அங்கேயே போகுது. காணாதத கண்டுக்கிற மாதிரி. வாயெல்லாம் பல்லாக இல்ல காணாம போய்டுமோனு காவலுக்காக என்றான். மூஞ்சி வண்டிய எடு போலாம். வண்டி புறப்பட்டது.

வண்டியை நிறுத்தினான். நீ சாப்டாட்டாலும் பரவாயில்ல கூடவாச்சும் வந்து உட்காரு அழைத்தான். ஒரு தோசை என்றான். தோசை வந்தது. அவள் தண்ணீர் குடித்தாள். சுவைத்துப் பார்க்கிறாயா என்பது போல் எடுத்து நீட்டினான். மறுத்தாள். அவன் உண்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சரியான தீனிப்பண்டாரம் அவன் என்று அவள் அடிக்கடி சொல்வது தான். அவன் தின்பதைப் பார்க்கவே பிடிக்கும் என்று சொன்ன ஒரு நாளில் ஏய் டபுள் மீனிங்கா என்று எள்ளினான்.

தோசையைப் பிட்டு மெதுவாய்ச் சாம்பாரில் ஒற்றி பின் தேங்காய்ச் சட்னியில் ஒற்றி வாயிலிட்டான். வாய் அரைத்துக் கொண்டிருந்ததை நா எப்படி ருசிக்கிறது என்பதை அவன் கண்கள் சொல்லிக் கொண்டிருந்தன. ஜெனி எச்சில் விழுங்கினாள். அவன் இரண்டாம் முறை பிட்டு ஒற்றி ஒற்றி எடுத்தான். அது அவள் கன்னங்களில் அவன் தன் இதழ்களால் ஒற்றி எடுப்பது போல் இருந்தது. தன்னையே தின்கிறானோ என்று மெலிதாய் நாணினாள். குழைந்த அவள் உடலைப் பார்த்தாலும் கவனிக்காதது போல் மூன்றாம் முறை தோசையைப் பிட்டான். சிறு பிள்கை போல் ஆ கேட்கலாம தன் கற்பு போய் விடுமோ என்று யோசிக்கையில் ஜெனி கற்புனா என்ன என்று கேட்டான். இவன் என் கண்களை ஊடுருவுகிறான் என்று அடிக்கடி சந்தேகிப்பாள். அதை உண்மையாக்கும் வகையில் அவன் கேட்டது அவளைத் திடுக்கிட வைத்தது.

டேய் சீக்கிரம் சாப்பிடு போலாம் நேரமாயிட்டு என்றாள். பதிலை எதிர்பார்க்கவில்லை அவன். பதில் அவனிடம் இருந்தது. அது அறிவினா தான். ஜெனி கற்பு என்பது ஒழுக்கம். அறம் தவறாத ஒரு ஒழுக்கம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு அறம் இருக்கும். அது யாருக்கும் தீங்கில்லாம இருந்தா போதும். என்ன பொறுத்த வரைக்கும் அதான் கற்பு அதான் ஒழுக்கம். இதை ஆண் பெண் உறவில் இணைத்து பஞ்சாங்கம் பேசுவது தவறு தான். இருந்தும் நீ அது தான் கற்புனு சொன்னால் நான் இனி உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.

டேய் லூசா நீ. நான் என்னைக்கும் அப்படி நெனச்சதில்ல. எனக்குத் தெரியாத உன்ன. சும்மா இப்போ ஏன் இப்படி பேசுற.

இல்ல சொல்றேன். கல்யாணம் பண்ணனும்னா பண்ணிக்கலாம். இல்ல என் கூட வந்து இருக்கணுமா இரு. உன் இஷ்டம் தான். நான் உன்ன எதுவும் சொல்லவும் இல்ல இனி சொல்லவும் மாட்டேன் என்று பெருவிரலில் வழிந்த சாம்பாரை நக்கியபடி எழுந்தான்.

அவள் பணத்தை நீட்டினாள். இருவரும் வெளியில் வந்தார்கள். வண்டி ஹாஸ்டலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது சீரான வேகத்தில்.

ஜெனி ஐ லவ் யூ என்றான். சிரித்தாள். கையைப் பற்றிக் கொண்டாள். இரவிங்கு தீவாய்ப் பாடல் ஒலித்தது. வெடித்துச் சிரித்தான். அவளும் சிரித்தாள்.

டேய் வீட்டுக்குப் போ. ஹாஸ்டல் வேணாம்

உன்ன புரிஞ்சுக்கவே முடியாது.

சரி சரி போ. சாயந்திரம் தனியா இருக்க தோனுச்சு. இப்போ உன் கூட இருக்கணும்னு தோனுது அவ்ளோ தான்.

மூட் ஸ்விங்க் என்றான்.

அதெல்லாம் ஒரு மயிரும் இல்ல. போக சொன்னா போயேன்.

இருள் முழுதாய் ஆக்கிரமித்திருந்தது வீட்டை. விளக்கை மறுத்தாள். இருளுக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்தன அவளுரித்த துகில்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *