நான் தான் காரணம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2016
பார்வையிட்டோர்: 8,655 
 

அதிகாலை 4 மணி இருக்கும். அந்த மனிதர் நேற்று இரவு பத்து மணிக்கே தனக்கு கிடைத்த இருக்கையில் அமர்ந்து கொண்டும் தன்னை மீறி வந்த தூக்கத்தை அடக்கிக் கொண்டும் தூங்காமலும் பேச்சுத்துணைக்கு ஆளில்லாமலும் தான் வாங்கி வைத்திருந்த மளிகை சரக்குகளுக்கு காவல் புரிந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மனிதர் அவருக்கு அருகில் இருந்த கடையின் பூட்டை, தனது சட்டைப் பைக்குள் இருந்து எடுத்த சாவிக்கொத்து ஒன்றினைக் கொண்டு திறந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு சாவியாக விட்டுத் திறந்து கொண்டிருந்தாலும் பார்ப்பதற்கு திருடன் போல் ஒன்றும் தோன்றவில்லை. அவர் அந்த கடையின் முதலாளியாக இருக்க வேண்டும். அது மார்கழி மாதத்து அமாவாசையின் அதிகாலை. ஆதலால் அவருக்கு அந்த இருட்டிலும் குளிரின் நடுக்கத்திலும் இது தான் உரிய சாவி என்று புலப்படவில்லை. இருந்தாலும், அசல் சாவியை கண்டுபிடிக்க அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. கடையை திறந்துவிட்டார்.

இவை அனைத்தையும் இருக்கையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த மனிதருக்கு கடையைத் திறந்ததும் முதலில் அவர் கண்ணுக்குத் தென்பட்டது தேநீர் வைக்கும் பாய்லர் தான். இருக்காதா பின்னே. நேற்று இரவு ஊருக்குச் செல்லும் கடைசி வண்டியை தவறவிட்டதிலிருந்து இப்பொழுது வரை கண்விழித்துக் கொண்டிருப்பவர்க்கு குடிப்பதற்கு ஒரு டம்பளர் தேநீர் கூட கிடைக்க வேண்டாமா ?

” அண்ணே, ஒரு டீ கொடுங்க ”, சங்கரனின் குரல் கடைக்காரனைக் கேட்கத் தயங்கவில்லை.

” அட இருப்பா, இப்ப தான் கடையே திறந்திருக்கு “, சலித்துக்கொண்டே கடைக்காரனின் பதில். அவனது சலிப்பின் காரணம் என்னவோ ?

சங்கரன் கேட்ட தேநீர் வருவதற்கு பத்து நிமிடங்கள் பிடித்தாலும், அதை குடிப்பதற்கு அவனுக்கு ஒரு நிமிடம் கூட பிடிக்கவில்லை. உடம்பில் ஒரு புது உற்சாகம். யாருக்கு? வேறு யார், சங்கரனுக்குத் தான். எதற்காக, தேநீர் அருந்தியதனாலா ? அதற்காக மட்டும் இல்லை, தன் ஊருக்குச் செல்லும் முதல் சிற்றுந்து வருவதற்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளதால்.

மார்கழி மாதத்து பனியும் குளிரும் அவனை ரொம்ப வேதனைக்கு உள்ளாக்கியதால், நேரே வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மளிகைக் கடைக்கு லீவு விட்டுவிடலாம் என்றும் “வேண்டாம் வேண்டாம். லீவு விட்டால் வியாபாரம் பாதிக்கும், ஆகையால் காலை ஓய்வு எடுத்துவிட்டு மதிய வேளையில் கடைக்குச் செல்லலாம்” என்றும் எண்ணமிட்டுக்கொண்டிருந்தான் சங்கரன்.

ஊருக்குச் செல்லும் வண்டி வந்துவிட்டது. சென்ற வருடம் குடும்பத்துடன் வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதிக்கு சென்றிருந்ததை நினைவு கூர்ந்தான். வைகுண்ட ஏகாதசி என்றால் சும்மாவா, ஆயிரம் பதினாயிரமல்ல லட்சக்கணக்கில் மக்கள் ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்தனர். அப்பொழுது நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் நடந்து கொண்டு கை கால்களில் ஏற்பட்ட நீண்ட வலிகளையும் பொருட்படுத்தாது ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசிக்கும் போது ஏற்பட்டதே ஓர் பேரானந்தம் அதைக்காட்டிலும் ஒருபடி அதிகமாகவே ஏற்பட்டது தற்பொழுது.

வண்டி வந்து நின்றது தான் தாமதம். சங்கரன் தான் வாங்கி வைத்திருந்த மளிகைச் சரக்குகளை பஸ் கண்டக்டரின் உதவியை பெற்றுக்கொண்டும் கூடவே அவரது அர்த்தமற்ற வசைச் சொற்களைப் பெற்றுக்கொண்டும் ஒரு வழியாக வண்டியினுள் ஏற்றிவிட்டான். தானும் ஏறிவிட்டான். கண்டக்டரும் சாதாரண மனிதர் இல்லை. வண்டியினுள் சங்கரனையும் அவனது மளிகைச் சரக்குகளையும் தவிர யாரும் ஏறாததால் இனி இங்கு ஏற கிராக்கி யாரும் இல்லை என்று சுதாரித்துக் கொண்டு சங்கரனுக்கு வடவனம்பட்டிக்கு ஒரு டிக்கட்டும் அவனது மளிகைச் சரக்குகளுக்கு ஒரு டிக்கட்டும் கிழித்துக் கொடுத்தார். தனக்கு இரண்டு டிக்கட் கொடுத்ததற்காக கண்டக்டர் மீது சங்கரனுக்கு கோபம் இல்லை. நிம்மதியாய் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்று இருந்ததே அதற்கு காரணம்.

பொதுவாகவே சங்கரன் ஒன்றும் சாந்த குணம் உடையவன் இல்லை. அதே சமயம் கோபக்காரனும் இல்லை. எங்கேயாவது எப்போதாவது தவறு நடந்தால் அதை எங்கேயாவது கோபத்துடனும் எப்போதாவது அமைதியுடனும் தட்டிக்கேட்பார். வயது அதிகம் இராது. ஒரு முப்பது பிராயம் தான். மன உளைச்சல் அதிகம் இல்லாத அவ்விளைஞனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தன் தந்தையின் இழப்பும் அடுத்த வருடமே தனக்கு நடந்த திருமணமும் அதன் காரணமாய் கூடிய குடும்பச்சுமையும் சங்கரனுக்கு மட்டுமல்ல எந்தவொரு இளைஞனுக்கும் மன உளைச்சல் ஏற்படக் காரணமாய் அமையும்.

வடவனம்பட்டிக்கு வந்தாயிற்று. அவர்களிடம் சொல்லவே இல்லை. இருந்தாலும் சொல்லி வைத்தாற்போல் இருவரும் வந்த்விட்டார்கள். இருவரில் ஒருவர் அவனது கடையில் கணக்கப்பிள்ளையாக பணிபுரியும் அவனது ஒன்றுவிட்ட சித்தப்பா காந்திநாதன். மற்றொருவன், அவனது நிரந்தர வேலைக்காரன் செல்லப்பன். அவர்களிருவரும் தாங்கள் கொண்டுவந்திருந்த வண்டியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு மளிகைக் கடைக்குப் புறப்பட்டனர். சங்கரன் மட்டும் தன் வீடு அருகிலேயே இருப்பதனால் நடந்தே சென்றான்.

வீட்டிற்குச் சென்றதும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழியில் யாருடனும் பேச்சுக் கொடுக்காமலும் குனிந்த தலை நிமிராமலும் ரோட்டைப் பார்த்த வண்ணம் நடந்தான். இருப்பினும் சாலையில் நடந்து செல்லும்போது ஒருவனின் செய்கை அவனை ஈர்த்துவிட்டது. அறிமுகப்படுத்தும் அளவிற்கு அவன் பெரிய மனிதன் இல்லை. காசுக்கு போஸ்டர் ஒட்டுபவன் தான். சங்கரனை ஈர்த்ததும் அவன் இல்லை. அவன் ஒட்டிக்கொண்டிருந்த போஸ்டர் தான்.

அது என்ன போஸ்டர் என்பதை அறிந்துகொள்ள முற்பட்டு அவனது கால்கள் தனது வேகத்தை குறைத்தன. கூர்ந்து நோக்கிய அவன் கண்களுக்கு புலப்பட்டது போஸ்டரின் இருபுறத்திலும் இருசொட்டு கண்ணீரை விட்டுக்கொண்டு இரு கண்கள். ஆம், அது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தான். அப்படியானால் நடுவில் இருப்பது ? ஆம், அந்தப்பெண் சுந்தரி தான். அட நேற்று தானே வழியில் அவளைச் சந்தித்து அவள் மனம் தெளிவு பெறும்படி சில அறிவுரைகளை சொன்னேன். அதற்குள் என்னவாயிற்று அவளுக்கு ?

சுந்தரி பதினாறு பிராயத்துப் பெண். சங்கரன் வசித்து வந்த தெருவிற்கு பக்கத்துத் தெருவில் தான் அவளது வீடு. தாய் தந்தையுடனும் பாட்டியுடனும் வசித்து வந்தாள். பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படி என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். பொதுவாக பன்னிரண்டாம் தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் தான் வரும். ஆனால் அவள் அந்தத் தேர்வை அப்பொழுது எழுதவில்லை. அக்டோபர் மாத்ததில் தான் எழுதினாள். அதற்குக் காரணம் அவள் செய்த ஓர் நற்செயலே. அவள் செய்தது என்னவோ நல்ல செயல்தான் ஆனால் அவளுக்குக் கிடைத்தது என்னவோ சில திட்டுகளும் சில அறிவுரைகளும் தான்.

அன்று ஏப்ரல் மாதத்தில் ஓர்நாள் எல்லாத் தேர்வுகளையும் முடித்துவிட்டு கடைசி தேர்விற்கு (என்ன தேர்வு என்று தெரியவில்லை) பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தாள். சாலையின் ஓரமாய் நடந்து சென்று கொண்டிருந்த அவளிடம் ஒரு பெண் “ஏம்மா, இப்படி வர்ரீயா”.

அழைத்தது பிரசவவலியால் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண் என்று தெரிந்த்ததும் ஒரு நொடி தாமதிக்காமல் “என்ன அக்கா ?” என்ற பதில் அவள் நாவில் தொனித்தது.

“ரொம்ப மயக்கமா வருது, என்ன பக்கதுல இருக்கிற ஆஸ்பத்திரி வரைக்கும் கூட்டிக்கிட்டு போறியா ?”, ஏக்கத்துடன் கேட்டாள் அக்கர்ப்பிணி.

சுந்தரிக்கு சிறிது தயக்கம். இன்று கடைசி தேர்வு. தேர்விற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அருகில் வேறு துணைக்கு யாரும் இல்லை. ஒரு கணம் அவளிடம் ஏற்பட்ட அத்தயக்கத்தை “அம்மா……” என்ற அக்கர்ப்பவதியின் அலறல் சிதறடித்தது. மறுகணமே, ஆட்டோ ஒன்றை அழைத்தாள். தான் அக்கர்ப்பவதியுடன் ஆட்டோவில் ஏறி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறங்கினாள்.

மருத்துவமனையில் அக்கர்ப்பவதியை சேர்த்துவிட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் விவரத்தைச் சொல்லி அங்கிருந்து புறப்படுவதற்குள் மணி பத்து ஆகிவிட்டது. ஒன்பதரை மணிக்கெல்லாம் தேர்வு ஆரம்பித்து விடுவார்கள். இனி பள்ளிக்குச் சென்று ஒரு பயனும் இல்லை என்பதை அறிந்துகொண்டு பள்ளிக்குச் செல்லாமல் நேரே வீட்டிற்குச் சென்றாள்.

வீட்டிற்குச் சென்றது தான் தாமதம். தேர்வு எழுதிக்கொண்டிருக்க வேண்டிய மகள் வீட்டில் இருப்பதைக் கண்டு அதன் விவரத்தை அறிந்து கொண்டு போதுமானமட்டில் அவளை திட்டித்தீர்த்தனர் அவளது தாயும் தந்தையும். அவள் பாட்டி மட்டும் அவளை திட்டவில்லை. காலையில் தாயும் தந்தையும், மாலையில் தேர்வு முடிந்ததும் தோழியர்கள், மறுநாள் அக்கம்பக்கத்தினர் அடுத்தநாள் தெரிந்தவன் தெரியாதவன் என ஏகப்பட்ட பேர் அறிவுரை வழங்க வந்துவிட்டனர்.

“யார் எக்கேடு கெட்டுப்போனால் உனக்கு என்னடி”,

“நீ செய்தது நல்ல விஷயந்தான், இருந்தாலும் இப்படி பரீட்சைய கோட்டை விட்டுட்டியே”,

“இனிமேல் இப்படி பண்ணாதே”

“நீ உண்டு படிப்பு உண்டு பரீட்சை உண்டுனு இருக்க வேண்டியது தானே”,

“அடுத்து அக்டோபர் மாசம் பரீட்சையில எழுதிடனும், சரியா”

இப்படி பல அறிவுரைகள் திரும்பத் திரும்ப அவள் காதுகளில் விழுந்துகொண்டிருந்தது.

பரீட்சை எழுதாமல் வந்தபோது ஒன்றும் சொல்லாத சங்கரன், அவள் அக்டோபர் மாதம் எழுதிய பரீட்சைக்கு வந்த தேர்வு முடிவுகளைக் கேட்டதும் எண்ணிலடங்காத அறிவுரைகளை அள்ளி வீசினான்.

“பரவாயில்லயே, நல்ல மார்க் தான் வாங்கியிருக்கே. ஆனா பாரு அன்னிக்கு நீ செஞ்ச காரியத்துனால இப்ப ஒரு வருஷம் வீணா போச்சு. அன்னைக்கு நீ ஒரு கணம் யோசிச்சு இருந்திருந்தேனா, இப்ப இங்க நின்னு இப்படி நான் பேசிக்கிட்டிருக்கமாட்டேன். உன்னோட படிச்ச புள்ளைங்கல்லாம் இப்ப உன்னைவிட ஒரு வருஷம் முன்னாடி படிக்கிறாங்க. நீ செஞ்சது நல்ல காரியம் தான். ஆனா இடம் பொருள் ஏவல் அறிஞ்சு ஒரு காரியத்த செய்யனும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இனிமேலாவது எந்த ஒரு விஷயத்தையும் தெளிவா செய்யனும், சரியா”, என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு கடைசியாக ஒருமுறை அவளைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு மளிகைப் பொருட்கள் வாங்க சந்தைக்குச் சென்ற சங்கரன் தான் இப்பொழுது அந்த போஸ்டர் முன்பு நின்று கொண்டிருந்தான்.

தான் கடைசியாக அவளுக்கு அறிவுரை வழங்கியபோது அவளது முகம் சுருங்கியதையும் கண்களில் நீர்த்துளிகள் பெருகியதையும் சங்கரன் கவனிக்காமல் இருக்கவில்லை. சுந்தரி தற்கொலை தான் செய்துகொண்டாள் என்பதை அக்கம்பக்கத்தினர் பேசியதைக் கொண்டு அறிந்துகொண்டதும் அவளது தற்கொலைக்கு தான் தான் காரணம் “இல்லை இல்லை தன் அறிவுரை தான் காரணம்” என்ற குற்ற உணர்ச்சி அவனுள் எழுந்தது.

இந்த உலக வாழ்க்கையே நிலையற்றது. அதையும் நிலைகொள்ள முடியாமல் பலர் தற்கொலைக்கு முயல்கின்றனர். எதற்கெல்லாமோ இவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பசி தாங்க முடியாமல் தற்கொலை பஞ்சத்தினால் தற்கொலை மாமியார் சண்டையில் மருமகள் தற்கொலை மனைவி சண்டையில் கணவன் தற்கொலை கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை என அடுக்கடுக்கான செய்திகள் நாளிதழ்களை புரட்டும் போது நம் கண்ணில் தென்படும். இதோ சுந்தரியின் தற்கொலையும் நாளை இது போன்று ஒரு நாளிதழில் வரத்தான் போகின்றது. “முறைப்படி மரணம் வரும்வரை அதை நீ விரும்பாதே” – தற்கொலைக்கு எதிரான வாசகம், ஏசுநாதர் அருளிச் சென்றது. இவ்வாசகம் மட்டும் அனைத்து மக்களையும் மனதளவில் அடைந்திருந்தால் தற்கொலை என்ற ஒன்றே இந்த பூமியில் இல்லாமல் போயிருக்கும். ஏசு பெருமான் இக்காலத்தில் இல்லாமல் போய்விட்டார். இல்லாவிடில் எல்லா மக்களும் இவ்வாசகத்தை அறிந்திருப்பார்கள்.

அதற்குமேல் அங்கே நிற்க மனம் இடங்கொடுக்கவில்லை. அதனால் சங்கரனின் கால்கள் நேரே அவனது வீட்டிற்குச் சென்றன. அங்கே அவனது மனைவி இழவு வீட்டிற்குச் சென்று வந்ததன் அடையாளமாக கண்களில் இருந்த இரண்டு சொட்டுக் கண்ணீரை துடைத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

தன்னால் தான் சுந்தரி இறந்தாள் என்ற குற்ற உணர்ச்சியில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சங்கரன் யாரிடமாவது இவ்விஷயத்தை சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது தன் மனைவி உள்ளே வந்ததைக் கண்டதும் இந்த உலகில் தன் தாய் தந்தையருக்குப் பிறகு தனக்கு இருந்த ஒரே ஆதரவாக தன் மனைவியை எண்ணினான். அவளிடம் ஒன்றுவிடாமல் மொத்த கதையையும் சொன்னான்.

அவன் மனைவி அவனது மனக்கஷ்டத்தை அவன் மூலம் தெரிந்துகொண்டு அவனிடம் “என்னங்க, நீங்க கவலைப்படாதீங்க. அவள் தற்கொலைக்கு நீங்களும் காரணம் இல்ல உங்க அறிவுரையும் காரணம் இல்ல”, என்று கூறியதும் சாபவிமோசனம் பெற்றுவிட்டதாய்க் கருதினான் சங்கரன். அவன் மனைவியோ இழவு வீட்டிற்கு சென்று வந்ததன் மூலம் தான் அறிந்த வரலாற்றை அவனிடம் கூறினாள்.

சுந்தரியின் தந்தை ஒன்றும் பெருங்குடிகாரர் இல்லை. எப்பொழுதாவது தான் குடிப்பார். ஆனால் குடித்துவிட்டால் அவர் செய்யும் ரகளைகளைத் தாங்கமுடியாது. அதனால் தான் என்னவோ அவருக்கு உள்ளூரில் யாரும் வேலை தரவில்லை. வெளியூரில் வேலை செய்ய விருப்பம் இல்லாததால் வீட்டிலேயே சும்மா இருக்கிறார். அவர் மனைவி தான் வேலைக்குச் சென்று குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கிறாள். வேலை முடிந்து அவர் மனைவி வரும்போது ஐம்பது கொடு நூறு கொடு என்று நச்சரிப்பார். அன்று அவர் மனைவி வருவதற்கு முன்பே யாரோ அவருக்கு காசு கொடுக்க, நேரே மதுக்கடைக்குச் சென்று கிடைத்த பணம் மொத்தத்திற்கும் மதுபாட்டில்களை வாங்கிக் குடித்துவிட்டார்.

மொத்த பணத்திற்கும் மது வாங்கிவிட்டதால் தொட்டுக்கொள்ள ஊறூகாயும் இல்லை அதை வாங்க காசு கூட இல்லை. கடையில் கடன் சொல்லி வாங்கலாம் என்று பார்த்தால் கடைக்காரனுக்கு அவர் மீது நம்பிக்கைகூட இல்லை.

தொன்று தொட்டு மனித நாகரிகம் தொடங்கிய காலத்தில் இருந்தே…… இல்லை, இல்லை, மது நாகரிகம் தொடங்கிய காலத்தில் இருந்தே மனிதன் சீரழிந்துகொண்டிருப்பதன் முக்கிய காரணம் குடி தான். “மது வேண்டாம், அது ஒரு ஆட்கொல்லி”, என்று எத்தனைப் போராட்டங்கள். இருந்தும் கடைசியில் வெல்வது மது தான். “கள் உண்ணாமை” என்னும் அதிகாரத்தில் தோன்றிய பத்து குறள்களும், கள்ளுக்கடை மறியல் நடத்திய பெரியாரின் போராட்டமும் அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த சினிமாக்காரர்களும் ஓயாமல் ஒவ்வொரு படத்திலும் “மது அருந்துதல் நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு” என்ற வாசகத்தை ஒளிபரப்புகின்றனர். இருந்தும் என்ன பயன். செவிடன் காதில் சங்கைக் கொண்டு ஊதினாற் போலத்தான்.

“ஊருகாய் வாங்க காசு இல்லை. மனைவி வர நேரம் ஆகும். அதுவரை பொருக்க முடியாது. யாரிடமாவது கேட்டே ஆக வேண்டும். யாரிடம் கேட்கலாம்? வேறு யாரிடம் தன் குடும்பத்தில் தன் மீது அக்கறை கொண்டுள்ள அடுத்த ஜீவன் தன் மகள் சுந்தரி தானே, அவளிடமே கேட்கலாம்”, என்ற முடிவுடன் வீட்டிற்கு வந்தார்.

சுந்தரிக்கு தன் அப்பாவை ரொம்பப் பிடிக்கும். அவர் குடிக்காமல் இருக்கும்பொழுது மட்டும். “அப்பா வந்து குடிக்க காசு கேட்டால் தரக்கூடாது”, என்ற அம்மாவின் கண்டிப்பான வார்த்தைகள் சுந்தரிக்கு நினைவு வந்தது தன் தந்தை தன்னிடம் பணம் கேட்கும்போது.

“அம்மாடி அதிகம் கேட்கல. ஒரு பத்து ரூபா கொடு. ஒரு மிச்சர் பொட்டலமும் ரெண்டு ஊருகா பாக்கெட்டும் வாங்கிக்கிறேன்”, என்று நேரடியாகவே தன் மகளிடம் கேட்க அவர் ஏற்கனவே சிறிது மது அருந்தியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டாள் சுந்தரி.

கோபம் அதிகமானதால் “முடியாது போய்த் தூங்குங்க அப்பா”, என்று அதிகாரத் தொனியில் சொன்னால் சுந்தரி.

பின் இருவருக்கும் நீண்ட வாக்குவாதம். திடீரென்று சுந்தரியின் தந்தை அவள் கையிலிருந்த மோதிரத்தைப் பிடுங்கிவிட்டார். மோதிரம் கிடைத்த சந்தோஷத்தில் கடைக்குச் செல்ல வாசற்படியை நோக்கி நடந்தார்.

ஏற்கனவே கோபத்தில் இருந்த சுந்தரிக்கு தன் தந்தையின் செய்கை எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது. கோபம் தலைக்கு ஏறியது. தான் என்ன செய்ய வேண்டும் என்று அறியாமல் இன்னது தான் செய்கிறோம் என்று தெரியாமல் அவள் அந்த காரியத்தைச் செய்துவிட்டாள். தனக்குப் பக்கத்தில் இருந்த கனத்த பித்தளைச் செம்பை எடுத்து தன் தந்தையின் மீது வீசினாள். குறி பார்க்காமல் தான் வீசினாள். ஆனால் அது குறி தவறி நேரே அவள் தந்தையின் தலையை பதம் பார்த்துவிட்டது. அவள் தந்தை உடனே சுருண்டு கீழே விழுந்துவிட்டார்.

அந்தப் பெண்ணின் பிஞ்சுக்கைகளில் அவ்வளவு பலமா? இல்லை இல்லை. சூரபத்மனின் மலையை அழிப்பதற்கு முருகப்பெருமான் தனது வேலை எறிந்தாரே அது போலவும் இல்லை குருக்ஷேத்திரப் போரில் கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் அம்பை எய்தினானே அது போலவும் இல்லை சுந்தரியின் செய்கை.

தான் செய்ததை எண்ணி அவள் ஒருகணம் பதட்டப்படவில்லை. பதட்டப்பட்டது என்னவோ அவள் பாட்டி தான். அதுவரை அங்கு நடந்தவற்றை ஓர் ஓரமாய் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அவள் பாட்டி தற்பொழுது கீழே விழுந்துகிடந்த தன் மருமகன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதைக் கண்டதும் பதறிவிட்டாள்.

“என்னம்மா இப்படி பண்ணீட்டியே, உங்கப்பனுக்கு நீயே எமனா வந்துட்டியே”, பாட்டியின் வாயிலிருந்து தெரிந்தே தவறி வந்தன இவ்வார்த்தைகள்.

சுந்தரிக்கு உலகமே ஒருகணம் இருட்டியதாய் தோன்றியது. “தந்தை இறந்துவிட்டார், நான் தான் கொன்றுவிட்டேன். ஐயோ, என் அம்மாவை நானே விதவையாக்கிவிட்டேனே”, அதிர்ச்சியில் பித்துப்பிடித்தவள் போல் உளறத்தொடங்கினாள் சுந்தரி.

இனி இந்த உலகில் வாழ்ந்தால் உலகமே தன்னைப் பழிக்கும். ஒவ்வொரு கணமும் கொலைகாரி என்ற பட்டத்துடன் இவ்வுயிரைச் சுமக்கவேண்டும். அதற்கு உயிர் துறப்பது எவ்வளவோ மேல். அருகில் சுற்றிப் பார்த்தால் ஒரு நாற்காலி, மேலே பார்த்தால் பரண்களுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த கடினமான நீண்ட தேக்குக்கட்டை, கட்டிலில் பார்த்தால் தன் பள்ளிச் சீருடையான நீலக்கலர் தாவணி. வேறு என்ன வேண்டும் இவ்வுலக வாழ்வை விட்டு வெளியேறுவதற்கு. பாட்டி தன் மருமகனைக் காப்பாற்ற உதவி கேட்க அக்கம்பக்கத்தினரிடம் வெளியே வந்தாள். அந்த நேரம் போதாதா?

வெப்பம் அதிகரித்தாலும் காற்றில் ஈரப்பதம் இல்லையென்றாலும் வேறுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையென்றாலும் செடியில் வளர்ந்த பூ வாடிவிடும். நாற்காலியும் தாவணிக்கயிறும் கிடைத்ததனால் சுந்தரி என்னும் மொட்டு வாடவில்லை, பூக்கும் முன்பே கொட்டிவிட்டது.

“ஐயையோ, சுந்தரி இப்படி பண்ணிட்டியேம்மா”, என்ற பாட்டியின் அலறல், மயங்கிக் கிடந்த தன் மருமகனையும் கூட எழச்செய்துவிட்டது.

மேற்படி வரலாற்றை தன் கணவனிடம் கூறியதும் அவர் ஒரு வழியாக மன நிம்மதி அடைவார் என்ற எண்ணத்தில் எழுந்து நேரே குளிக்கச் சென்றாள். வீட்டின் வாசற்புறத்தூணில் சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்த சங்கரனுக்கு மனம் ஒருவாறு நிம்மதி பெற்றிருக்குமா என்று பார்த்தால் “இல்லை”. அதுதான் சுந்தரியின் தற்கொலைக்குக் காரணம் தான் இல்லை முழுக்க முழுக்க அவள் தந்தையின் குடிவெறிதான் காரணம் என்று தெரிந்துவிட்டதே. “சரிதான், அவள் தந்தையின் குடிவெறிதான் காரணம். ஆனால், அன்றைய அந்த குடிவெறிக்கு யார் காரணம்? நான் தான். முழுக்க முழுக்க நான் தான் காரணம்”, என்று எண்ணிக்கொண்டான்.

“ஆம், சுந்தரிக்கு நேற்று கொடுத்த அறிவுரை போதாதென்று வழியில் குடிப்பதற்கு காசு கேட்டு நின்ற அவள் தந்தையிடம் முடியாது என்று கூறாமல் நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேனே, ஆகையால் நான் தான் காரணம்” என நினத்துக்கொண்டிருந்த சங்கரன் தன் மனைவி குளித்து முடித்ததைக் கண்டதும் தானும் ஒரு முழுக்குப்போட எண்ணி குளியலறை நோக்கி நடந்தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “நான் தான் காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *