மின்மினி தேசத்து சொந்தக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 23, 2019
பார்வையிட்டோர்: 11,766 
 

சாம்பல் பூத்த தீவைப் போல தான் இருந்தது அந்த ஊர்.

பனி விலக்கிக் கொண்டுதான் நகர வேண்டும் போல…. ஆதியின் சப்தம் நிறைந்திருந்த வழியெங்கும் யாருமே இல்லை. காணும் மரங்கள் எல்லாம் இலைகளற்று மொட்டையாய் நின்றன. காற்றுக்கு மூச்சு பேச்சு இல்லை என்றுதான் தோன்றியது. அடைத்து வைத்த சதுரமோ வட்டமோ நீளமோ ஆங்காங்கே வீடுகளாகி நிற்பது போன்ற காட்சி தனித்த கவலையை உருவாக்கியது.

அனல் வீசும் அற்புதத்தில் வீதியின் ஒரு முனை வாலாட்டிக் கொண்டு பார்ப்பது போல இருந்தது. இல்லாத சொற்களின் மௌனம் அங்கே நிரம்பிக் கிடந்தன. இருந்தும் நிறங்களின் பிறிதல்கள் அற்ற கனவோ என யாரும் சூடும் முகப் பூச்சுக்கள் முழுக்க சுருக்கம் கொண்ட கிழவி ஒருத்தி கால் நீட்டி அமர்ந்து கொண்டு பூனை போல நடந்து ஊருக்குள் வரும் என்னையே பார்த்தாள். கண்கள் சுருக்குகையில் சூனியக்காரியோ என்று கூட தொடரும் அது. திக்கென்று கனவை பிய்த்துக் கொண்டு கண்களை பிடுங்கும் வேகத்தோடு கழுத்தை நீட்டி உற்றுப் பார்த்துக் கொண்டே…. பட்டென்று வெடித்த பாதரச சொட்டுகளைப் போல வார்த்தைகளை கொட்டினாள்.

“அடேய் …. மாயவா…. இப்பதான் ஊருக்கு வழி தெரிஞ்சுதா… அதும் உன் நண்பன் செத்து போய்ட்டான்னு தெரிஞ்சு வந்திருக்க…. 20 வருசமாச்சுடா நீ ஊரை விட்டு போயி…. அப்டி என்ன பெரிய கோபம்… என்ன பாக்குற… என்னை தெரியல… நான்தான் வேம்பு…. உன் பாட்டியோட சினேகிதி…..”

………………………………………………………..

“என்ன நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்…. தலையாட்டிட்டு போயிட்டே இருக்க…. போ… போ…. இந்த மனுஷ பிறவியே இப்டிதான்டா……எல்லாமே தலையாட்டிட்டு போயிட்டேதான் இருக்கும்…”

“இந்தா……பாக்க பாக்க படக்குனு கண்ணா மூடிக்கிட்டான் உன் பிரெண்டு சாணக்கியன்…. நீயும் அவனும் இந்த ஊர்ல என்னல்லாம் கூத்து பண்ணுனீங்க…. இந்த ஊருக்கு மொத மொத நீ வந்தப்போ யாரை பார்த்தாலும் பயந்த மாதிரியேதான நீ பேசுவ.. சாணக்கியன்தான அவனாவே வந்து உங்கிட்ட பேசி உன்ன சகஜமாக்கி உன்ன பிரெண்டாக்கிக்கிட்டான். இன்னைக்கு பாரு அவன் காது கேக்காம படுத்திருக்கான்…. கண்ணு தெரியாம தூங்கிட்டு இருக்கான்… உடம்பு பாரம் தாங்கல போல… எந்திரிக்க முடியாம பொணம் மாதிரி கிடக்கறான்…”

வேம்பு தலை தலையாய் அடித்துக் கொண்டாள். அவள் கண்களில் அந்த வீதி முழுக்க மேலும் கீழும் ஆடிக் கொண்டே இருந்தது.

“டேய் மாயவா………. நான் சிற்பிடா……..ஓட்ட காதன் சிப்பிடா…… என்னடா இப்டி பாக்கற….! இங்க இருக்கறவனுங்கதான் மறந்துட்டானுங்கன்னா நீ கூடவா…..மறந்துட்ட…?”

அந்த வீதியில் என் கால் தடங்கள் தடங்கலானது போல ஒரு பரிதவிப்பு. நான் வலையை அறுத்துக் கொண்டு எட்டிப் பார்க்கும் எலியின் நுண்ணொலியை எனக்குள் கேட்டேன்.

“காலம் எவ்ளோ ஓடிருச்சு இல்ல….உனக்கு ஞாபகம் இருக்கா…….? காலைல 5 மணிக்கு எந்திரிச்சு பச்சை முட்டய குடிச்சிட்டு எஸ்சைஸ் பண்ணுவமே… ஒரே மாசத்துல உடம்ப ஏத்தறோம்……”அலாவுதீனும் அற்புத விளக்கும்” படம் பாக்கும் போது கண்ணுக்குள்ள மண்ணள்ளி போட்ட கோணப்புலிய பொளக்கறோம்னு பிளான் போட்டமே….. அப்புறம் கோழி திருட போய் அவனும் நம்ம கூட பிரென்ட் ஆனது வேற கதை…இல்லையா….? ஒரு தடவை சாந்திபாளையம் ஆத்துல தவறி விழுந்த உன்ன அவன்தான காப்பாத்தினான்……ம்ம்ம்…….எல்லாக் கதையும் சுத்தி சுத்திதான வரனும்……..இல்லையா…….! இப்ப பாரு……மாயா… நம்ம சாணக்கியன் இப்படி படக்குனு கண்ண மூடிட்டான்…..
எவனாவது இந்த காலத்துல டெங்குக்கெல்லாம் சாவானாடா……! முட்டாப்பைய…… இந்த டெக்னாலஜி காலத்துல டெங்குக்கு கூட மறந்து கண்டு பிடிக்கல பாரேன்… அவ்ளவும் அலட்சியன்டா…… இதுவரைக்கும் எந்த பணக்காரனுக்காவது டெங்கு வந்திருக்கா….வராது…. ஏழைக்கும் கோழைக்கும்தான் வரும். ஏன்னா நம்ம சிஸ்டம் அப்டி…”

நான் தலையாட்டிக் கொண்டே முன்னேறினேன்.

அந்த வீதி முழுக்க அடைத்து கிடந்தது போல தோன்றியது. ஊரில் யாருமே இல்லையோ என்று கூட நம்பத் தோன்றியது. எங்கு தேடினும் பெரும்பாலும் யாரையும் காணோம். அலைபேசியில் அமிழ்ந்து விட்டார்களோ…. வீட்டிலிருந்து வாட்சப்பில் சாவு விசாரிக்கிறார்களோ…. இல்லை…..டப்பிங் சீரியல் மிஸ் ஆகி விட கூடாது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ…. அல்லது மரண வீட்டில் இரண்டாவது மணியில் இருந்து என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதை விரும்பாமல் ஓய்வெடுக்க வீட்டில் அடைந்து கொண்டார்களோ…..? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நேரம் ஆக ஆக மரணம் பழகத் துவங்கி விடுகிறது. சாணக்கியன் செத்திருந்தாலும் நம்மோடு தான் இதோ முன்னால் படுத்திருக்கிறான்…என்று எல்லாரும் நம்பத் துவங்குகிறார்கள். பின் அது இயல்பாகி விடுகிறது. அடுத்த அரை நாளில்… நீண்ட வருடங்களுக்கு பின் சந்தித்து கொள்ளும் நண்பனுக்கு புன்னகை கூட தர முடிகிறது.

பெருந்தேவி நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொண்டு தலையை விரித்தபடி ஒரு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள். அவளின் உடல் வெற்றிடத்தை கொத்தி கூறு போட்டுக் கொண்டிருந்தது. பேரழுகை. மரணத்துக்கென்றே படைக்கப்பட்ட அழுகையை அவள் ஒரு போதும் கை விடுவதில்லை.

“அயோ…. வா மா…………………யா…. என் செல்லமே…. இத்தன நாளா இந்த கிளவிய பாக்கணும்னு உனக்கு தோணவே இல்லையா… எனக்கு எந்த நேரத்துல லெட்டர் எழுத கேட்டாலும் எழுதி குடுப்பியே … உன் கையெழுத்து முத்து முத்தா இருக்குமே…. உன் சிநேகிதன் இப்படி பொசுக்குனு காணாம போய்ட்டானே…. இனி எங்க போய் அவனை நீ பாப்ப. உன்ன பார்த்தா ஒரு வேலை எந்திரிச்சாலும் எந்திரிப்பான்…….போ ராசா………போ.. போய் அவன பாரு…. அவனை சத்திரியனா மாத்தி எழுப்பு… நீ சொன்னா அவன் கேப்பான்தான… அவனை விட்டுட்டு நீ முட்டை பரோட்டா திங்கவே மாட்டியே… எனக்கு தெரியுமே… ஒருதடவ அவன் இளநி திருடனதுக்கு நீ தண்டனை அனுபவிச்சியே….. மாயா… உரக்க கத்து. அவன் செவிகள் கிழிந்து உயிர் வழியட்டும். மாயா.. அவன் பாதங்களை சுரண்டு. கூச்சத்தில் பேய்யைப் போல சிரித்துக் கொண்டே அவன் எழுந்து அமரட்டும்…..”

எனக்கு பயமாக இருந்தது.

பெருந்தேவியின் குரல் அந்த ஊரையே காகத்தின் படபடப்புக்கு உள்ளாக்கியதை போல இருந்தது. அடித்துக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் நெஞ்செலும்பு ஒன்று உடைந்து நொறுங்கும் சப்தம் துள்ளி துள்ளி எனக்குள் நீண்ட இசையை தருவித்துக் கொண்டிருந்தது.

என்ன நடக்கிறது.. இங்கு….?

நான் கண்களை தேய்த்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கே சென்றார்கள் ஊர்மக்கள். இந்த ஊருக்கு என்னதான் ஆயிற்று…! ஆங்காங்கே சிலர் நின்றும் அமர்ந்தும்……அழுதும் கொண்டிருந்தார்களே தவிர மொத்த ஊரையும் காணவில்லை. 600 குடும்பங்கள் வாழ்ந்த ஊர் இது. இப்போது 50 பேரை தாண்டாது போலவே… நான் கண்களின் மூளையை தேய்த்து தேய்த்து காலத்தின் மூலையை விலக்கி பார்த்தேன். அப்போதும் அப்படித்தான் தெரிந்தது.

சாரதி… ஒரு பக்கமாக சாய்ந்து சாய்ந்து நடந்து வந்து என்னை ஆரத் தழுவிக் கொண்டான்.

“தம்பி… வாடா………….. வாடா வா…… நீ வரணும்னேதான் உன் பிரென்ட் செத்துருக்கான்டா …ரெண்டு பேரும் சேர்ந்து நாலு தியேட்டர்லயும் மாறி மாறி படம் பாப்பீங்களே…. மறக்க முடியுமா…..சைக்கிள்ல முன்னால உக்கார வைச்சுட்டு நீதான் அவனை கூட்டிட்டு போவ. ஆனா நைட்டு எவ்ளோ நேரம் ஆனாலும் உன்ன வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டுதான அவன் வீட்டுக்கு போவான். எனக்கே பொறாமையா இருக்கும் மாயா….. என்னடா இவனுங்க இவ்ளோ நெருக்கமா இருக்கானுங்கனு… உங்க நட்பு காலத்தை தாண்டினது மாயா… அவன் பண்ணுன தப்புக்குதான நீ தண்டன அனுபவிச்ச… என்ன பெரிய தப்பு.. சுண்டக்காய் தப்பு….. அவன் சொன்னான்னு எழுதி குடுத்த அந்த லெட்டரை அந்த கருவாச்சி அவ அப்பனுக்கு பயந்துகிட்டு பஞ்சாயத்துல குடுத்து நிக்க வெச்சுட்டா. ஆனா அவ குடுத்த லெட்டரை உன் பிரெண்டு எடுத்து குடுக்க போனப்போ நீ வேண்டான்னு சொல்லி தடுத்து அமைதியா நின்ன பாரு… நீ எம் ஜி ஆர் மாதிரிடா…. என்னமோ ஊரு உலகத்துல எவனும் செய்யாத குத்தத்தை செஞ்ச மாறி இந்த முட்டா பயலுகளும்.. தினுசா தினுசா கேள்வியெல்லாம் கேட்டு… உன்ன ஊர விட்டே துரத்திட்டானுங்க.. அத நினைச்சு சாணக்கியன் எத்தனை நாள் அழுத்திருப்பான் தெரியுமா… பாவன்டா அவன்……இடையில நீ வந்து ஒரு தடவ அவன பாத்திருக்கணும்…நீ எங்க இருந்தன்னே யாருக்கும் தெரியலையே…”

எனக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. பழைய நினைவுகள் பேரருவியாய்… என்னை சுற்றி கொட்டிக் கொண்டே இருக்க.. வெற்றிடம் உடைத்து விட்டு கண்களை பிடுங்கி எறிந்து விடலாம் போல தோன்றியது. சாம்பல் நிறத்தில் இன்னும் பனி சூழ அந்த வீதி கட்டடங்கள் ஆங்காங்கே சிதிலம் அடைந்தது போல தான் காணப் பட்டது. யாரிடமாவது கேட்க வேண்டும்.

என்ன ஆச்சு… எங்கே இங்கிருந்த மக்களெல்லாம். இவனை எப்படி சாக விட்டீர்கள்… காப்பாத்தியிருக்கலாமே. டெங்குக்கு சாகலாமா 2017 மனிதர்கள். என்ன செய்கிறது டெக்னாலஜி. என்ன செய்கிறது வல்லரசு. என்ன செய்கிறது சமுதாயம். என்ன செய்கிறது ஊரும் உறவும்….

திக்கென்று நான் அதிர்ந்தேன்.

பேசிக்கொண்டிருக்கும் சாரதியின் குரல் ஒலியின்றி போனது. காது அடைத்து விட்ட மௌனம். தலை வெடித்து விடும் நுட்பத்தில் அந்த வீதி மேலும் கீழும் அசைந்தது.

என்னை தள்ளிக் கொண்டு ஒரு பதின் பருவத்து சிறுவன் சுவற்றுக்குள் இருந்து எட்டிக் குதித்த சித்திரத்தைப் போல ஓடினான். என்ன என்ன என்று யோசிப்பதற்குள் சித்திரம் கலைக்கும் சிற்பத்தை போல அதே பதின் பருவத்து நிற பெண்ணொருத்தி முகமூடியோடு அவனை சிரித்துக் கொண்டே துரத்தினாள். முன்னால் ஓடிக் கொண்டிருந்த சிறுவனும் முகமூடி அணிந்திருந்தான்.

ஒரு கணம் தலை சுற்ற உணர்ந்தேன். மறுகணம் தலை சுற்றி உணர்ந்தேன். அவன் ஓடும் இடமெல்லாம் பனியை விலக்கி காலத்தை நிரப்பியபடியே இருந்தது. நதியின் நாணலை காற்றில் அடைத்த வரம் அப்படியே கலைவதாகப் பட்டது. பட்டென்று உலகம் சுற்றுவது நின்ற நொடியை பட்டென்று உடைத்து பூமிக்குள் இருந்து பிறந்த ஓவியத்தின் சாயலை அவர்கள் கொண்டிருந்தார்கள். நிறமற்ற சப்தங்கள் அங்கே கொதித்து நிறைந்தன. பட்டென்று கதவை மோதி உடைத்தது போல அவர்களிருவரும் வீதியின் வளைவில் நுழைந்து காணாமல் போக.. வனமோஹினி பேசுவது இப்போது கேட்டது.

“டேய் மாயா எப்போ வந்த… எப்பிடி இருக்க…. கல்யாணம் கட்டிகிட்டயா.. குழந்தைங்க இருக்கா….. என்ன பாக்கற……செத்தவன் செத்தவன்தான்.. இனி அழுது என்ன ஆக போகுது… கொசு கடிச்சா சாவு வரும்னு இப்போதான் தெரியுது… கலியுகமடா…… இது. எல்லாத்தையும் ஜோக்கா எடுத்துக்கனும்…. ஏன்னா நாம எல்லாருமே ஜோக்கர்ங்க தான். நீயும் அவனும்… ஒரு நாள் நைட்டு கோடாங்கிக்காரன பேய் வேஷம் போட்டு விரட்டுனீங்களே.. அதெலாம் செம ஜோக்குல்ல….. கோடாங்கிகாரன் மேல இருந்த மரியாதையே அதோட போச்சுடா மகனே……”

“யாரு மாயாவா……! டேய்… மாயவா ….. என்ன…..டா தாடி மீசையெல்லாம்…..” என்றபடியே என்னருகே வந்து என்னை சுற்றி சுற்றி பார்த்தது யார்…..? மனம் நினைவைக் கிளறிக் கொண்டிருக்க……”என்ன மாயா……… அடையாளம் தெரியலையா….? நான் தான் யமுனா… அட எனக்கு சினிமா டிக்கெட் எல்லாம் எடுத்து குடுப்பியே……. பூவே உனக்காக படம் கூட ஒண்ணா பாலமுருகன்ல எட்டு வாட்டி பார்த்தமே… அட கடவுளே இப்டியா மறக்கறது…?!!!!”

“அட எத்தன வருஷம் ஆச்சு… இன்னுமா அதெல்லாம் நாபகம் இருக்கும்…. அவன் மின்மினியையே மறந்தவன்…. உன்னையெல்லாம் நினைப்பு வெச்சுக்குவானா…..” என்றான் சிந்தன்.

“மாயா என்னையாது நினைப்பிருக்கா…..? நாந்தான் யூமா…. என்னையெல்லாம் மறந்தேனு சொன்ன, மூக்குலயே குத்துவேன்… உனக்கும் மின்மினிக்கும் லவ்வே என் வீட்லதான் வந்துச்சு.. இப்போ நியாபகம் இருக்கா…?”

“அதெப்படி மறப்பான்…உலகத்துல யாரு யாரை வேணாலும் மறக்கலாம்.. ஆனால் காதலிச்சவள காதலிச்சவன் எப்படி மறப்பான்……? அதும் மின்மினி என்ன போற போக்குலயா காதலிச்சா.. உயிர குடுத்து இல்ல காதலிச்சா… அப்பப்பா…. ரத்தத்தல லெட்டர் எழுதினதெல்லாம் மறக்க முடியுமா… மழை வந்தா குடை எடுத்துக்கிட்டு அவுங்க பாட்டி தேடறதுக்கு முன்னால “எங்க ஏன் மயிலு……….எங்க ஏன் மயிலு”னு தேடிக்கு ஓடுவாளே… ரெண்டு வயசு அவனை விட மூத்தவதான்… அதனாலதான் தம்பிய பாத்துக்கற மாதிரி பார்த்துக்கிட்டா…….அவுங்க பாட்டிக்கு தண்ணி எடுத்து குடுக்கறதும்.. கறிக்குழம்பு செஞ்சா மறைச்சு எடுத்துக்கிட்டு வந்து குடுக்கறதும்.. அதும் இந்த பையனுக்கு அடிக்கடி தலைவலி வேற வருமில்ல…….ஒரு நாள் பாக்கறேன்… நைட் 1 மணிக்கு மேல இருக்கும்.. மாயன் சீராயி வீட்டு திண்ணையில தூங்கிட்டு இருக்கான்..அவ அந்த நேரத்துக்கு அங்க வந்து பயந்து பயந்து தைலம் தேய்ச்சு விட்டுட்டு இருக்கா…எனக்கே கண்ணு கலங்கி போச்சு… இதுங்க ரெண்டும் இவ்ளோ ஒத்துமையா அன்பா பாசமா இருக்குதுங்களே… கடவுளே காலம் முழுக்க இதுகளை பிரிச்சிடாதன்னு வேண்டிகிட்டே தொழிலுக்கு போனேன்…”என்றாள் நாயகி.

எனக்கு எல்லாமே ஒரு கணம் கண்முன்னால் வந்து விட்டு போனது… நான் மெல்ல கண்களை கடந்து காற்றினில் மிதந்து பார்வையை சற்று தள்ளி இருந்த வீ ட்டு வாசலில் விட்டேன்… ஒரு பெண் எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“மின்மினியா அது….!?” மனம் தேட தேட….

யூமா ஏதோ ஆரம்பித்தாள்.

“இந்த மாயவன்…. அப்பவே தனியா தெரிவான்ல… அவனும் இந்தா செத்துக் கிடக்கறவனும்… ஜோடி போட்டுக்கிட்டு பண்ணுன அலப்பரையெல்லாம் அப்டியே வந்துட்டு வந்துட்டு போகுது…. மூளைக்குள்ள. மாயா…….உன் பிரெண்ட நீதான் சாக விட்டுட்ட…”

“நா………னா…………………..?”

“ஆமா…………….. உன் பிரெண்டையும் சாக விட்டுட்ட… உன் காதலியையும் கை விட்டுட்ட… நீ சந்தர்ப்பவாதிடா… இத்தனை நாள் கழிச்சு இப்போ எதுக்கு வந்த… ?” யூமா பேசிக் கொண்டே இருந்தாள்.

“அவனை எதுக்கு இப்போ திட்ற…. அவன் செய்யாத தப்புக்கு இந்த ஊரே அவன விரட்டி விட்டுச்சுல்ல… அப்போ எங்க போன பூமா…….? அப்போ நீயும் வாய மூடிக்கிட்டுதான வேடிக்கை பார்த்த…” என்றாள் யமுனா.

“நான்தான் என்ன செய்யறதுன்னு தெரியாம வேடிக்கை பார்த்தேன். ஆனா மின்மினி எப்டி தவிச்சு போனா… பைத்தியம் பிடிச்ச மாதிரி……………வீதில இப்டி நடக்கறதும்.. அப்டி நடக்கறதும்.. அங்க ஓடறதும்.. இங்க ஓடறதும்…..புள்ள தவியா தவிச்சாளே. அன்னைக்கு மழை வேற… இந்தா செத்தவனும் அப்டித்தான்… மறைஞ்சு மறைஞ்சு…….”போகாத……இருடா……. பாத்துக்கலா”ம்னு சந்து பொந்தெல்லாம் ஒளிஞ்சு ஒளிஞ்சு ஜாடை காட்னானே…….இவன் போனதுக்கப்புறம் மின்மினி யாரோடயும் பேசாம கிறுக்கி மாதிரி சுத்திட்டு இருந்தாளே… இவனுக்கு உண்மையான அன்பு இருந்திருந்தா எப்படியாவது அப்பவே திரும்ப வந்திருப்பான்ல… அட ஒரு அஞ்சு வருஷம் கழிச்சாவது வந்திருக்கலாம்ல…”

“போலீஸ்ல அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போற மாதிரிதானே இவுங்க அப்பா கூப்ட்டு போனாரு… என்னமோ ஊர் உலகத்துல யாரும் செய்யாத தப்ப இவன் செஞ்சுட்டா மாதிரி…..சரி விடு.. நண்பன் சாவுக்கு வந்திருக்கான்… சாக வெச்சிறாத… மாயா நீ போ மாயா.. போய் உன் பிரெண்ட பாரு.. இவ கிடக்கறா…” என்ற யமுனா கண்களில் பாதரசம் சொட்டியது.

“போ.. போ… உனக்கு உயிர்க்கு உயிரா பழகின மின்மினியையே தெரியல… ஒரு பக்கமா காதலிச்ச என்னவா தெரிய போகுது” என்று முனங்கிய யூமா.. எங்கேயோ பார்ப்பது போல என்னையே பார்த்தாள்.

“அயோ இது வேறயா….”- நானும் முணங்கிக் கொண்டே எங்கேயோ பார்ப்பது போல மின்மினியையே பார்த்தேன். மின்மினி என்னை கண்டு கொள்ளவே இல்லை..

அயோ இது என்ன கொடுமை… எனக்கு அவள் இட்ட முத்தங்கள்.. அவள் கொடுத்த கடிதங்கள்.. அவள் ஊட்டிய சோற்றுக் கவளங்கள்……அவள் கட்டிக் கொண்ட வீதி சந்துகள்….. அவள் கோர்த்த விரல்கள்……பின்னிரவில் ஒரே போர்வைக்குள் சுருண்டு கொண்ட சீராயி திண்ணை….எல்லாமே நினைவுக்கு வந்தன.

வாய் வரை வந்த “ஏன் ஊர்ல யாருமே இல்ல.. நீங்க மட்டும் இருக்கீங்க..” என்ற வார்த்தைகள் மடை மாறி தடம் மாறி…. என்னை மின்மினியை விட்டு நகராமல் செய்தது. எப்படி சென்று பேசுவது. ஒன்றா இரண்டா.. 20 வருடங்கள்… அவளோ கண்டும் காணாமல் இருக்கிறாள். சாவுக்கு வந்து விட்டு காதல் பேசிக் கொண்டிருப்பது நியாயமே இல்லை. சற்று உற்று பார்த்து விட்டு நான் அவளை பிணம் போல கடந்தேன். துக்கம் உடல் அடைத்தது.

நண்பனின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தேன்.

“என்ன உடல் நடுங்குகிறதா…” என்று உள்ளிருந்து குரல் வந்தது. திடுக்கென்று உடல் நடுங்க… மெல்ல தலையாட்டினேன்.

“வேறு எங்கோ வந்து விட்டது போல இருக்கிறதா…?… மாயா.. வா.. உனக்காகத்தான் காத்திருக்கிறேன். ஏன் இவ்ளோ தாமதம்…. ஏன் இத்தனை காலமாக வரவே இல்ல.. என் மீது என்னடா கோபம்… உனக்கு….”

குரல் வந்த திசை நோக்கி சென்றேன். அந்த வீடு இருட்டாக இருந்தது. உள்ளே யாருமே இல்லை. அவன் மட்டும்தான் படுத்திருந்தான். பிறகு யார் பேசியது……”பிரமையா.. காதுக்குள் கேட்கும் ஒலி பிதற்றலா ?” என்று யோசிக்க யோசிக்க… மீண்டும்.. குரல்…..”வாடா.. உட்கார்…” என்றது.

திக்கென்றது நிஜம் தான். பேசியது சாணக்கியன்தான். அவனை உற்று பார்த்தேன். உடல் நீண்டு படுத்திருந்தான். வெள்ளை துணி கொண்டு அவனை மூடி இருந்தார்கள். பிணத்தை சுற்றி சம்பிரதாயத்துக்கு கூட யாருமே இல்லை. தனித்திருந்தான். அவன் வாய் மட்டும் அசைந்தது. திறந்திருந்த கண்கள் என்னையே பார்த்தன. அந்த அறை வெம்மையும் குளிரும் கொண்ட வினோத வெளியின் வாடையை கொண்டிருந்தது. மிதப்பது போன்ற நீல நிறம் அலை அலையாய் நெளிந்து கொண்டிருந்தது. நான் அழுதேன். சுவர் முட்டிய என் அழுகைகள் என்னையே முட்டின. கொஞ்சம் பயமாக கூட இருந்தது. என்ன நடக்கிறது என்று என்னால் யூகிக்க கூட முடியவில்லை.

“வாழ்க்கை ரெம்ப கஷ்டன்டா…”

அவன் பேச்சு என்னை ஊமையாக்கியது. விரிந்த கண்களை அவன் மீது படர விட்டேன்.

“பயப்படாத மாயா நான்தான் பேசறேன்… உன் பிரெண்டுடா……”

சற்று நிதானத்துக்கு வந்தேன். அவன் ஏதோ பேசுகிறான். காதை கூர் தீட்டினேன். கண்களை அவன் மீது மொத்தமாய் கொட்டினேன்.

“நினைச்ச மாதிரி எதுமே இல்ல. துரோகம்……வஞ்சம்……லஞ்சம்…….பொய்…….குற்றம்……..ஏமாத்து வேலை…….பேராசை…. பணத்தாசை….மாடி வீடு கட்டு……கேட்டு போட்ட வாசல் கட்டு……..அக்காக்கு அத குடு……..தங்கச்சிக்கு இத குடு…….லோனை போட்டு காரு வாங்கு…… அந்த காட்டை வாங்கு……..இந்த காட்டை வாங்கு…….அந்த கார்டு……..இந்த கார்டு…….ஓட்டுக்கு காசு…….மணல் திருட்டு… …….அடிதடி…. போலீஸ் கேசு…. போட்டி பொறாமைன்னு……. எதுமே சரி இல்லடா. பாரு.. நம்ம நீலநதில தண்ணி போயி பத்து வருஷம் ஆச்சுடா… வெறும் சாக்கடைதான் ஓடுது. கேள்வி கேட்டா…….ஆள வெச்சு அடிக்கிறது.. கொலை பண்றனு மிரட்டறது. அய்யய்யயோ…. முடிலடா சாமி…இதுல சாதி சண்டை…. சாமி சண்டை…. தண்ணி சண்டை…சாராய சண்டைனு…. நாசமாகிடுச்சு என் வாழ்க்கை…. என்னால ஒரு நல்ல அரசியல்வாதியா இருக்க முடியல….எல்லாரும் சொல்றாங்களேன்னு வார்டு கவுன்சிலரா நின்னேன்…. தோக்கடிச்சிட்டாங்க….கருமம் காமராஜரையே தோக்கடிச்ச கூட்டம்தான…கடைசியா பாரு கொசு கடிச்சு நான் செத்துட்டேன்டா……. நினைக்கும் போதே கேவலமா இருக்கு… சாவுக்கு ஒரு மரியாதை வேண்டாமா……கொசுவை அழிக்கணும்னு மனு கொடுத்தேன். ஒருத்தனும் கண்டுக்கல…… சுகாதாரம் இல்ல… சுத்தம் இல்ல…ஏன்னா இங்க உண்மையே இல்லடா…. பணம் பணம்னு அலையறானுங்க அரசியல்வாதிங்க… முதல் பலியே நான் தான்…. மாயா……நான்தான்”

திடும்மென பயங்கரமாக அழுதான்… தேம்பி தேம்பி ஒரு சிறு பிள்ளையை போல அழுதான். அவனை சமாதானப் படுத்த முயன்றேன். நகராத எல்லாமும் என்னை சுற்றி இருப்பது போன்று இனம் புரியாத கட்டமைப்பை கொண்டிருந்தேன்.

“இதெல்லாம் விட்டுட்டு கொஞ்சம் நாள் சுதந்திரமா வாழணும்னு நினைச்சேன்டா…..என்னல்லாம் கனவு கண்டோம்…… கப்பல் ஓட்டி பாக்கணும்…ஒரு நாள் சிங்கப்பூர் போகணும்…ஒரு டேன்ஸ் குரூப் ஆரம்பிச்சு பிரபு தேவாவுக்கு போட்டியா நிக்கணும்…. காதலிக்கறவங்கள எல்லாம் சேர்த்து வைக்கணும்… அந்த கரும்பு காட்டுக்குள்ள நீயும் நானும்… எத்தன சனிக்கிழமைல நிலா பாத்துட்டு கதை பேசிருப்போம்…. நீல நதிக்கரைல மிதந்து வர்ற அனாதை பிணங்களை எத்தனை நாள் எடுத்து பொதைச்சிருப்போம். வானத்தை தொட்ரலான்னு எத்தன நாள் தொடுவானத்தை பார்த்து ஓடிட்டே இருந்திருப்போம்… அதெல்லாம் ஒரு காலம், இல்லடா….. மாயா…. எல்லாம் போச்சு…….மரணம் என்னும் தூது வந்தது…. அது டெங்கு என்னும் வடிவில் வந்தது…. உலகைத்தானே நான் நேசித்தது…. உண்மை உடைந்து ஏன் வாசித்தது…”

சிவாஜியை போல உடல் அசைத்துக் கொண்டே பாடினான். அவனுக்கு சிவாஜியை போல நடிப்பது மிகவும் பிடிக்கும். நான் ரஜினியைப் போல.. அதை ஆமோதித்தேன்.

நாங்கள் பேசிக்கா நாடக நடிகர்கள். கத்தை கதையாக பாட்டு புக் வைத்துக் கொண்டு ஞாயிறு மாலைகளில் பாட்டு கச்சேரி செய்வதும் அதன் மூலம் கை தட்டல் பெறுவதும் சுகமோ சுகம். சுதந்திர சுகம்.

“மின்மினி பாவன்டா… அவ உன்னையேதான் நினைச்சிட்டு இருக்கா…நீ வருவ வருவன்னு கல்யாணம் பண்ணிக்கவே இல்லைடா…”

எனக்குள் நூறு இதயம் உடைந்து சிதறியது. சாணக்கியன் அருகே அப்படியே சரிந்து அமர்ந்தேன்.

“கல்யாணம் பண்ணிக்கலயா…. அடிப் பாவி…. இப்படியா வாழ்க்கையை ஏமாத்திக்கறது….” என்று காற்றினில் அசையாமல் வெற்றிடம் அசைத்துக் கொண்டு கதறினேன்… இருடா… இப்போ வர்றேன்” என்று சொல்லி வெளியே ஓடி வந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆங்காங்கே சிலர் என்னோடு பேசியவர்கள் போக இன்னும் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். மரணம் பழக்கமானது போன்ற முகம் மற்றும் உடல் பாவனை. நான் அவர்களை விலக்கிக் கொண்டு மின்மினி அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வேகமாய் ஓடினேன்.

உடைந்து அழுதேன். மண்டியிட்டு கதறினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.

“என்னை மன்னிச்சிடுமா… நான் துரோகி… இப்டி உன்ன கை விட்டுட்டேனே” என்று கெஞ்சி கத்தினேன்……கதறினேன்…..

மின்மினி காது கேட்காதவள் போல.. கண்கள் தெரியாதவள் போல அமர்ந்து எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை பைத்தியம் ஆகி விட்டாளோ…? கண்றாவி கடவுளே……” என்று முணங்கிக் கொண்டே உடல் அசைத்து சற்றும் முற்றும் பார்க்க… அந்த கூட்டமே என்னை சுற்றி நின்று வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தது. நான் சற்று நடுங்கியபடியே சிறு படபடப்போடு அவர்களை அர்த்தத்தோடு பார்த்தேன்.

“மாயா.. என்னாச்சு உனக்கு… யார்கிட்ட பேசிட்டு இருக்க….?! அங்க வெறும் சுவர் தான இருக்கு….”என்றார்கள்.

ஒரு கணம்…. தூக்கி வாரி போட்டது. காற்று மிக வேகமாக அந்த வீதிக்குள் சுழன்று கொண்டு வந்தது. மின்மினியை பார்த்து கையை நீட்டி “மின்மி………னிகிட்ட…”என்று வாய்க்குள்ளேயே முனங்கினேன்.

அவர்கள் மெல்ல அந்த வெறும் சுவற்றை எட்டி பார்த்து பார்த்தார்கள். அங்கே யாரும் இல்லை என்பதை உறுதி செய்யும் உடல் மொழியில் என்னை ஆழமாக பார்த்தார்கள்.

“மின்மினி எப்டி இங்க இருப்பா… அவதான் உயிரோட இருக்காளே….” என்றான் மெல்லிய குரலில் ஓட்ட காதன் சிற்பி. எல்லாரும் ஸ்லோ மோஷனில் ஆமோதித்தார்கள். இன்னும் நெருங்கி வட்டமிட்டிருந்தார்கள்.

அந்த வீதிக்குள் திடும்மென ஒரு புள்ளியில் இருந்து பயங்கர சிரிப்பு சத்தத்தோடு தோன்றிய முகமூடி அணிந்த அந்த சிறுமி முகமூடியை கழற்றினாள்…..

அது சிறுவயது மின்மினி.

நான் இன்னும் கூர்ந்து கவனித்தேன். பின்னாலிருந்து கழற்ற முற்பட்டு என்னை பார்த்துக் கொண்டே……” ம்ஹும்…” என்பது போல தலையாட்டிக் கொண்டு மீண்டும் ஓடத் துவங்கினான் அந்த முகமூடி சிறுவன். வீதி முழுக்க சாம்பல் நிறம் இன்னும் அழுத்தமாகியது.

ஏதோ புரிந்தது போல உணர்ந்தேன். மூளை படபடத்துக் கொண்டே கணக்கிடத் துவங்கியது. இந்த ரெண்டு முகமூடில ஒன்னு அவள்னா இன்னொன்னு நான்தானே. ஏதோ அவ செத்துட்டான்னு சொல்ற மாதிரி அவ உயிரோட இருக்கான்னு சொல்றாங்க. என்ன அர்த்தம்…….? என் உலகம் தலை கீழாக சுழலத் தொடங்கியதை உணர்ந்த கணத்தில் என் கண்களுக்கு கூட்டம் தாண்டி தெரிந்த திண்ணையில் அமர்ந்திருந்த மொட்டச்சி பாட்டி தெரிந்தாள். சட்டென புரிபட துவங்கியது. என் நரம்புகளில் மீட்டிய சப்தங்கள் நீல நதியை உருட்டியது. கூழாங்கற்கள் பொடி படும் யுத்தங்கள் நன்றாகவே கேட்டது. ஆம் நான் அந்த ஊரில் இருந்த போதே 20 வருடங்களுக்கு முன்பே செத்துப் போனவள் மொட்டச்சி பாட்டி…..

எனக்கு இப்போது எல்லாம் புரிந்தது. ஏன் ஊரில் கொஞ்ச பேர் மட்டும் இருக்கிறார்கள் என்று…தெளிவாகவே புரிந்தது. எப்படி செத்தவன் என்னோடு பேசுகிறான் என்பதும் புரிந்தது.

இவர்கள் அனைவருமே செத்தவர்கள்…இப்போது என் கண்களுக்கு தெரிபவர்கள் எல்லாருமே இந்த 20 வருடங்களில் இறந்து போனவர்கள். காலம் அதன் போக்கில் கடந்து கொண்டிருந்தது. இது இறந்தவர்களின் உலகம். இறந்தவர்களின் ஊர்.

மின்மினி யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அப்படி என்றால் அவள் உயிரோடு இருக்கிறாள். சரி என் கண்களுக்கு எப்படி தெரிந்தாள். யோசித்துக் கொண்டே வேகமாய் மின்மினியை பார்த்தேன். மெல்ல மெல்ல அவள் மறைந்து கொண்டிருந்தாள்.

குழப்பத்தோடு மீண்டும் யோசித்தேன்….

சரி… நான் எப்படி இவர்கள் கண்களுக்கு தெரிகிறேன்…

அப்டினா……!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *