காதல் – 21ம் நூற்றாண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 11,732 
 

பெங்களூர் விமான நிலையம். சென்னை செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏதோ சின்ன கோளாறு இருப்பதால், அதை சரி செய்து அதற்குப் பிறகுதான் விமானம் கிளம்ப முடியும். அதற்கு இன்னும் 2 மணி நேரமாவது ஆகும் என அறிவிப்பு வந்தது.

எப்படி நேரத்தைக் கடத்துவது என்று யோசித்தான் கணேஷ். அதற்குள் பசி வயிற்றைக் குடைய ஆரம்பித்ததால் ஏதாவது நொறுக்குத்தீணி வாங்கி சாப்பிடலாம் என்று நினைத்து அங்கே இருந்த மெக்டோனால்ட்ஸுக்குள் நுழைந்தான்.

ஒரு சிக்கன் பர்கர் வாங்கி, வாசலுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் உட்கார்ந்தான். பசி ருசி அறியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போல் ருசி பசி அறியாது என்பதும் உண்மை. அந்த சிக்கன் பர்கர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் மேலும் இரண்டு சிக்கன் பர்கர் வாங்கினான்.

இரண்டாவது சிக்கன் பர்கரை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். அப்போது அங்கு வந்திருந்த ஒரு பெண், கணேஷைப் பார்த்ததும் அவனை நோக்கி நடந்து வந்து. “ஹாய் கணேஷ்” என்றாள்.

ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது யாரது தன்னை பெயர் சொல்லி கூப்பிடுவது என்று தன் தலையை நிமிர்த்திப் பார்த்தான் கணேஷ். அவள் முகத்தைப் பார்த்ததும் மலர்ந்தது இவனது முகம்.

“ஹே, ஹாய் ஸ்வேதா, வாட் எ சர்ப்ரைஸ்”. உற்சாகமானான் கணேஷ்.

“யெஸ், உண்மையிலேயே சர்ப்ரைஸ்தான் கணேஷ். எதிர்பார்க்கவே இல்லை உன்னை இங்க பார்க்கப்போறேன்னு”

“ஹும், அப்பறம் என்ன விஷயம் இங்க வந்திருக்கே? எப்படி இருக்கே ஸ்வேதா?”

“நான் சூப்பரா இருக்கேன். நீ எப்படி இருக்கே?”

“நீ சூப்பரா இருக்கறதாலதான் அப்போ உன்கிட்ட நான் என் லவ்வை சொன்னேன். இல்லன்னா லவ் பண்ணியிருப்பேனா?” கண்ணடித்தான் கணேஷ்.

“ஆனா நீ சுமாரா இருந்தாலும் பரவாயில்லை, போனா போகுதுன்னு நான் உன்னை அப்போ லவ் பண்ணேனே. அதான் உனக்கும் எனக்கும் வித்தியாசம்”. ஸ்வேதாவும் கண்ணடித்தாள்

“அடிப்பாவி, பொசுக்குன்னு பொய் சொல்லறே? இன்னும் நீ மாறவே இல்ல ஸ்வேதா. அதே மாதிரி தான் இருக்கே”

“ஆமா, என்னவோ பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்துட்டு, அதுக்கு அப்பறம் இன்னிக்குதான் பார்க்கிற மாதிரி சொல்றே? போன மாசம் தானே சந்திச்சோம்”

“ஒரு மாசம்தான் ஆச்சா நாம மீட் பண்ணி? சரி சொல்லு. என்ன விஷயம்? என்ன இந்தப் பக்கம்?”

“சென்னை போகணும், அந்த ஃப்லைட்டுக்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன். நீ என்ன இங்க?”

“நானும் அந்த ஃப்லைட்டுக்குத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்”

“ஓ, அப்படியா? குட். அப்பறம் லைஃப் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு? நம்ம ஃப்ரெண்ட்ஸ் தயா, ரம்யா எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க. தயாவும், ரம்யாவும் ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ணிட்டிருந்தாங்க, இப்போ அவங்களுக்கு சென்னையில கல்யாணம். அதான் லேட்டஸ்ட் நியூஸ்”

“வாவ், கிரேட் நியூஸ். ஒரு வழியா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே, தட்ஸ் கிரேட்”

“யெஸ், சரி ஏன் நின்னுட்டே பேச்சிட்டிருக்கே. உக்காரு” கணேஷ் பக்கத்தில் உட்கார்ந்தாள் ஸ்வேதா.

மேஜையில் சிக்கன் பர்கர் இருப்பதைப் பார்த்த ஸ்வேதா, “என்ன கணேஷ், இன்னும் சிக்கன் பர்கர் சாப்பிடறதை விடலையா நீ?” என்று கேட்டாள்.

அதற்கு கணேஷ், “இல்லை. ஏன் விடணும்? எவ்ளோ நல்லா இருக்கு தெரியுமா?” என்றான்.

“அது எல்லாம் சரி. நீ எப்போ சிக்கன் சாப்பிட ஆரம்பிச்சேன்னு ஞாபகம் இருக்கா உனக்கு?”

இரண்டு வருடங்களுக்கு முன், கணேஷும் ஸ்வேதாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சமயம். கணேஷ் அசைவம் சாப்பிடுவதில்லை. சிறு வயதிலிருந்தே அப்படியே வளர்க்கப்பட்டதால் அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.

கணேஷ் தன் காதலை ஸ்வேதாவிடம் சொல்ல, அவளும் அதை ஏற்றதனால், நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக அவர்களுடன் மெக்டோனால்ட்ஸுக்கு சென்றான். அன்று எதேச்சையாக இவன் கைகளில் சிக்கன் பர்கர் வந்துவிட அது அசைவம் என்று தெரியாமல் இவனும் ரசித்து ருசித்து சாப்பிட்டான். அன்று ஆரம்பித்த பழக்கம்தான் இது. இதைத்தான் சொல்கிறாள் ஸ்வேதா.

“யெஸ், ஞாபகம் இருக்கு. மறக்க முடியுமா அந்த நாளை. எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள் அது. சரி அதைவிடு, நீ என்ன விஷயமா சென்னை போயிட்டிருக்கே?”

“நான் போன மாசம் வேற ஒரு கம்பெனில ஜாயின் பண்ணேன் இல்ல. அந்த கம்பெனியோட சென்னை ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதை நான்தான் செய்யணும். அதான் சென்னை போயிட்டிருக்கேன்”

“ஓ, அவ்ளோ பெரிய ஆளாயிட்டியா நீ?” என்று கணேஷ் சொல்லும்போது அவனுடைய செல் ஃபோனில் திவ்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரு நிமிடம் என்பது போல் ஸ்வேதாவிடம் சைகை காட்டிவிட்டு, தன் செல் ஃபோனில் பேசத் தொடங்கினான்.

அந்த நேரத்தில் ஸ்வேதாவை நோக்கி வந்தான் அஸ்வின். அவனைப் பார்த்தவுடன் ஸ்வேதாவின் முகம் மலர்ந்தது. பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.

கணேஷ், தன் செல் ஃபோனில் பேசி முடித்தவுடன், ஸ்வேதா, “கணேஷ், இவன்தான் அஸ்வின். என் பாய்ஃப்ரெண்ட். இவனோடதான் நான் சென்னை போறேன்” என்று அஸ்வினை அறிமுகப்படுத்தினாள். இருவரும் கை குலுக்கி யதார்த்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கணேஷுக்கு திவ்யாவிடம் இருந்து மறுபடியும் அழைப்பு வந்தது.

“சரி ஸ்வேதா, அஸ்வின். தப்பா எடுத்துக்காதீங்க. என் கேர்ள்ஃப்ரெண்ட் திவ்யா திரும்ப திரும்ப கால் பண்றா. கொஞ்சம் பர்சனலான விஷயம். ஸோ..” என்று இழுத்தான் கணேஷ்.

அதற்கு ஸ்வேதாவும், அஸ்வினும், “நோ ப்ராப்ளம் கணேஷ். அப்பறம் பார்க்கலாம். சீ யூ” என்று சொல்லி அங்கிருந்து கிளம்ப கணேஷ் தன் செல் ஃபோனை எடுத்து திவ்யாவுடன் பேசத்தொடங்கினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *