திரைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 8,039 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பஸ் சீக்கிரம் வந்துவிடக்கூடாதே என்ற தவிப்போடு அவன் அவளை அடிக்கடி ஓரக்கண்ணால் கவனித்தவாறு நின்று கொண்டிருந்தான். நேருக்கு நேராக அவளை நோக்க அவனுக்கு விருப்பமில்லை. அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்காருவது, பிறகு அமைதியிழந்தது போன்று எழுந்து நிற்பது, பின்னர் அச்சாலையின் வழியே செல்லும் கார்களின் பின்னேயே கண்களை ஓட்டியவாறு அவளை சாடையாகப் பார்ப்பது என்று அவன் அல்லாடிக் கொண்டிருந்தான்.

ஏறக்குறைய ஒரு வாரமாக இந்த நாடகம் நடந்து வருகிறது. அவனுடைய வேலை நேரத்தில் ஏற்பட்ட சிறிய மாற்றம் காரணமாக அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரமும் மாறியது. ஒரு வாரத்திற்கு முன்பு வாடிக்கையாகத் தவமிருக்கும் அந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸிற்காக அவன் காத்து நின்றபோது அவளும் அங்கிருந்தாள்.

அவளைப் பார்க்க வேண்டும் என்ற குறுகுறுப்பு மனதில் எழுந்த போதும் ஒரு சில விநாடிகள் அவளைப் பார்த்து விடுவதால் என்ன கிடைத்துவிடப்போகிறது என்று மனக்கடிவாளம் அவனைப் பிடித்து நிறுத்தியது. அவன் பார்ப்பதால் அவள் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை. அவன் ஆன்மாதானே அழுக்குப் படியப் போகிறது.

ஒரு கைக்குழந்தையை வக்கரிப்போடு பார்ப்பதற்கும் யாரோ ஒரே பெண்ணை விவஸ்தை இல்லாமல் நோட்டம் போடுவதற்கும் என்ன வித்தியாசம்? எனவே மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவன் பார்க்காமல் இருந்து விட்டான்.

ஆனால் அங்கிருந்த சிலரில் அவளும் இருந்தாள் என்பதையோ தான் ஏறிய பஸ்சிலேயே அவளும் ஏறினாள் என்பதையோ அவன் உணரத் தவறவில்லை. பஸ்சில் ஏதோ எண்ணத்தில் அவன் மூழ்கியிருந்தபோது அவள் வழியில் எங்கேயோ இறங்கிவிட்டாள் என்பதை பிறகு தான் அறிந்தான்.

அப்போது எல்லாமே வெறிச்சோடிப் போனது போல் இருந்தது. மீண்டும் அவளைப்பார்க்க முடியுமா என்று ஏக்கமாக இருந்தது. ‘சீ, என்னபித்துக்குளித்தனம்’ என்று உதறிக் கொண்டான்.

மறுநாள், வேலை முடிந்து புறப்படும் சமயம் அலுவலக நண்பன் வந்து “எனக்காக அரை மணி நேரம் இருக்கிறாயா சேர்ந்து போகலாம். ஒரு முக்கியமான இடத்துக்குப் போக வேண்டியிருக்கிறது” என்று கேட்டான்.

வழக்கமாக அவன் இப்படிக் கேட்பது உண்டு. இவனும் இருந்து விடுவான். ஆனால் இப்போது ‘சரி’ என்று சொல்லப்போனவன் அவளை நினைத்துக் கொண்டான். இன்றும் அவள் வருகிறாளா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டதால் நண்பனை தட்டிக் கழித்துவிட்டு பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தான். அங்கு அவள் நின்று கொண்டிருந்தாள்.

பஸ் நிறுத்தத்தின் வலக் கோடியில் அவள் நின்றிருந்ததால் மிக நல்ல பிள்ளை போல அவளைக் கடந்து இடது கோடியில் போய் நின்று கொண்டான்.

இப்போது கடந்து போகிற கார்களின் எண்ணைப் பார்ப்பது போல் திரும்பி சாடையாய் அவளைப் பார்க்க வேண்டியதில்லை. பஸ் வரும் வழிமேல் விழி வைத்து இருப்பது போல் அவளைப் பார்க்கலாம் என்பதில் அவனுக்கு நிம்மதி. ஆனாலும் அவன் அவளை நேருக்கு நேர் பார்க்கவில்லை.

தன்னைக் கண்டு பயந்து ஒடுங்கிப் போயிருப்பவனை அடிப்பது தன்னந்தனியாய் நிற்கும் ஒரு பெண்ணை அவள் மனதால் குன்றிப் போகுமாறு கண்களை மேயவிட்டு மனப்புண்ணை சொறிந்துவிட்டுக் கொள்வது – இரண்டுக்கும் அவனைப் பொறுத்தவரை வேறுபாடு இல்லை. எனவே, அவன் அவளைப் பார்க்கவில்லை.

ஆனாலும் அவன் அவளை கவனித்துக் கொண்டிருந்தான். சாலையில் போவோர் வருவோர் முடி நரைத்த ஆணாய் இருந்தாலும் அவளைக் கடக்கிற வரைக்கும் அவளையே பார்த்தவாறு நடந்து கொண்டு இருந்ததையும் அவள் சங்கடத்தோடு நெளிந்ததையும் அவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு எரிச்சல் வந்தபோது பஸ் முக்கி முனகிக் கொண்டு வந்து நின்றது. அவனும் அவளும் ஏறிக்கொண்டதும் அலுத்துக் கொண்டு புறப்பட்டது.

வழியில் அவன் இறங்கிய இடத்தை மனதில் குறித்துக் கொண்டான். திரும்பிப் பார்க்க ஆசை துருதுருத்தபோதும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

பஸ் அவளை விட்டுவிட்டு அவனை மட்டும் தனியே சுமந்து கொண்டு கொஞ்ச தூரம் போன பிறகு மனசு கேளாமல் திரும்பிப் பார்த்தான். பலதலைகள் தெரிந்தன.

இப்படியே ஒரு வாரமும் போய் விட்டது. அவன் மாலையில் வேலை முடிந்ததும் சரியான நேரத்திற்கு பஸ் நிறுத்தத்துக்கு வந்துவிடுவான். அவள் வலக்கோடியில் நின்றால் அவன் இடக்கோடிக்குப் போய் விடுவான். அவள் இடக்கோடியில் நின்றால் வலக்கோடிக்குப் போய் விடுவான். இதைத்தவிர வேறு ஒரு மாற்றமும் இருக்காது.

ஒரு மாதமும் ஆகியது. இன்னமும் அதே கதைதான். ஆனால் அவன் நினைவில் அவள் ஊறிப்போயிருந்தாள். ஒருநாள் கனவில் கூட தெளிவில்லாமல் வந்தாள்.

தன்னையே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய பிரதாப நிலைக்கு அவன் வந்து விட்டான்.

அவளை நேருக்கு நேர் பார்க்காவிட்டாலும் பேசாவிட்டாலும் ஏன் – அங்கு அவன் சரியான நேரத்துக்கு வந்துவிடுகிறான். அலுவலகம் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகளை அவனுக்குப் பிடிக்கவில்லை.

பஸ் எவ்வளவு தாமதமாக வந்தாலும் ஏன் சனியன் இப்படி சீக்கிரமாக வந்து தொலைகிறது’ என்று நினைத்துக் கொள்கிறான். முன்பெல்லாம் ஊர்ந்து செல்வதாகத் தோன்றும் அதே பஸ் தலைபோகிற அவசரத்தில் ஓடுகிறதே, எதிலாவது மோதினால் என்னாவது என்று நினைப்பைத் தோற்றுவிக்கிறது.

இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்? அவன் அவளைக் காதலிக்கிறானா? காதல் அவனுக்கு அப்படி ஒன்றும் புதிதானது அல்ல. சில தோல்விகளையும் சில சமாதானங்களையும் சந்தித்து இருக்கிறான்.

பெண் வாடை பட்டுவிட்டதாலேயே கிறக்கம் அடையும் அளவுக்கு பொறுப்போ சுயகௌரவமோ இல்லாதவனும் அல்ல.

தன் இதய நார்களை ரணமாக அறுத்து அலசிப்பார்த்துக்கொண்டான்.

அவன் பலங்களுக்கு இடையே ஒரு பலகீனமும் இருக்கிறது. மனிதன் சமூகப் பிராணி என்பதன் கூறுதான் அது. ஆன்மாவுக்குத் தோழமை வேண்டியிருக்கிறது. செருப்பு பழகப்பழக தேய்ந்து விடுவதைப் போல மனிதர்களும் தேய்ந்து சலிப்பைத் தருகிறார்கள். மனிதப் பிராணி மீண்டும் மீண்டும் தன்னந்தனியாய் ‘ராபின்சன் குருசோக்களாக’ ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணனும் தம்பியும் மனைவியும் பிள்ளைகளும் நண்பர்களும் ஒரு மனிதனின் ஆன்மாவைப் பற்றியே கவலைப்படுவதில்லை. உறவு வலைக்குள்ளே வந்துவிட்டவர்கள் தர்மசத்திரத்தில் சேர்ந்து நசியும் அநாதைகளாகி விடுகிறார்கள்.

சண்டைகளுக்கான சமரசங்கள் நியாய அநியாயங்களில் இல்லை. ஆன்மாவிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

எது எதிலோ வீராதி வீரர்களாய் இருப்பவர்கள் ஆன்மாவைப் பகிர்ந்து கொள்வதில் கோழைகளாய் இருக்கிறார்கள்.

எனவே மனிதன் ஒரு சமூகப் பிராணியாய் எப்போதும் துணை தேடிக் கொண்டிருக்கிறான். அவனை மதிக்க, பாராட்ட , விட்டுக் கொடுக்க, யோசனை கேட்க, அவனுக்காகக் காத்திருக்க ஒரு ‘ஜானியர் தேவைப்படுகிறது.

இப்போது தனது நிலையும் இதுதான் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவன் அவளுக்கேற்ற ஒரு ‘ஜூனியராக இருக்க முடியும் என்று தெரிந்து விட்டதால் அவளை விட்டுவிட அவன் தயாராக இல்லை.

ஒருவேளை அவனும் அவளும் நல்ல நண்பர்களாக இருந்து, பிறகு அண்ணன் தங்கையாக உறவைப் பலப்படுத்திக் கொள்ளலாம். அல்லது அந்த நட்புறவே காதலாக மாறி கணவன் மனைவி பந்தமாய் நிலைப்பட்டு விடலாம்.

ஒரு வழியாக ஆத்ம பரிசோதனை முடிந்ததும் அவனுக்குத் திருப்தியாய் இருந்தது. ஆனால் கொஞ்ச நாள் ஆக ஆக அவளோடு அறிமுகம் ஏற்படுமானால் அது காதலாக மட்டுமே உருவெடுக்கும் என்ற நினைவே அவனுள் வலுப்பட்டு வந்தது.

சரி, இனி எப்படி அவளுடன் பேசுவது? இப்போது எல்லாம் பஸ் நிறுத்தத்தில் அவன் இந்தச் சிந்தனையிலேயே ஆழ்ந்தான். அவளை சாடைமாடையாகக் கவனித்துக் கொண்டே இப்படி யோசித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகப் போயிற்று. சில சமயங்களில் அது பகல் கனவைப் போன்ற கற்பனையாய்க் கூட நீண்டது.

பஸ்சில் கூட்டமாக இருக்க வேண்டும். உட்கார ஒரே ஓர் இடம் தான் இருக்க வேண்டும். அவன் உட்கார வாய்ப்பு இருந்து கூட இத்தனை நாள் பஸ் நிறுத்தப் பழக்கத்தை கருத்தில் கொண்டு அந்த இடத்தை அவன் அவளுக்கு வழங்குவான். அவள் நன்றி சொல்லுவாள். பேச்சு தொடரும். அல்லது டிக்கெட்டுக்குச் சில்லறை இல்லாமல் தடுமாறுவாள். அவன் கொடுத்து உதவுவான். அல்லது என்றாவது ஒரு நாள் அந்த பஸ் மிகக் கூட்டமாக வரும். ஒரே ஓர் ஆள்தான் ஏறலாம் என்று கண்டக்டர் சொல்லுவார். முதலில் தொற்றிக் கொள்ளப் போன அவன் அவளை ஏறிக் கொள்ளச் சொல்லி நின்றுவிடுவான். அவளும் இருந்து விடுவாள்.

இப்படி எல்லாம் பஸ் வரும்வரை நினைத்துக் கொண்டிருப்பான். ஆனால் ஒருமுறை கூட அவன் நினைத்த மாதிரி நடக்கவில்லை .

பிறகு மாற்று வழியை யோசித்தான்.

அவள் இறங்கும் இடத்தில் இறங்கி அவளைப் பின் தொடர்ந்து வீட்டை அறிந்து பிறகு விவரங்களைத் தெரிந்து கொள்வது என்று அவன் சிந்தனை நீண்டது.

தன்னைப் போன்ற ஓர் ‘இண்டலக்சுவல்’ ஒரு பெண்ணின் பின்னே “நாயைப்போல்’ திரிவது எவ்வளவு கேவலம் என்று எண்ணிப் பார்த்து அந்த யோசனையை விட்டுவிட்டான்.

பிறகு நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிட்டான். ஆனால் வாடிக்கையை மட்டும் விட்டுவிடவில்லை. ‘மணி அடித்ததும் ஓடிவிடுகிறான்’ என்று அலுவலகத்தில் அவன் காதுபடவே முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

அவன் பஸ் நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருக்கும் போது கார் வைத்திருக்கும் நண்பர்கள் ஓரிருமுறை காரை நிறுத்தி ஏறிக் கொள்ளச் சொன்னார்கள்.

முன்பெல்லாம் இருபது காசு பஸ்சுக்குக் கொடுக்காமல் மிச்சப்படுத்தலாமே என்று ஏறிக்கொண்டு விடுவான்.

இப்போது அவனால் அப்படி செய்ய முடியவில்லை. ஒரு மௌன ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள அவன் விரும்பவில்லை.

முடிவு தெரியும் வரை காத்திருக்க நினைத்தான். இப்போதெல்லாம் நண்பர்கள் அவனுக்காக காரை நிறுத்துவதில்லை.

தனக்கு மட்டும் ஒரு கார் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நினைப்பு தட்டத் தொடங்கியது அவனுக்கு.

பலருடைய வெளிப்பார்வைக்கும் அவளை ஆளாகவிடாமல் காரிலேயே அவன் அழைத்துச் சென்று விடமாட்டானா?

ஆனால், அறிமுகமே இல்லாத அவனுடைய காரில் அவள் எப்படி ஏறுவாள் என்பதை மட்டும் அந்த ‘இண்டலக்சுவல்’ எண்ணிப் பார்க்க மிகச் சௌகரியமாக மறந்து விட்டான்.

ஒரு கார் வாங்குவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் அதைச் சம்பாதிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டுப் பார்த்து அலுத்துக் கொண்டான்.

நாட்கள் மாற்றமின்றி மாறிக் கொண்டிருந்தன. அவனுக்கும் அவளுக்கும் இடையே எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஆனாலும் அவன் ஒரு வாய்ப்பு வரும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் மீது அவனுக்கு பிடிப்பு அதிகரித்து வந்தபோது ஒரு நாள் –

வழக்கம் போல அவன் அவளை சாடைமாடையாய் கவனிப்பதற்காக வாகனங்களின் பின்னே தலையை ஓடவிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கார் வந்து அங்கு நின்றது.

தன் நண்பன்தானோ என்று அவன் சுதாரிப்பதற்குள் காரை ஓட்டி வந்தவன் இடப்பக்கமாக வளைந்து நோக்கி அவளை பூதம் போல் பாதுகாத்து வந்ததுபோல் அவன் காத்து வந்த அவளை அழைத்தான்.

சாதாரணப் பெண்ணாய் அவன் பார்வையில் படர்ந்து ஓர் இலட்சியமாய் அவனுள் வளர்ந்த அவள் பசுபோல் நடந்து காரில் ஏறிக் கொண்டாள்.

காரின் கதவைச் சாத்தப் போனவள் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் அவன் கண்களைச் சந்தித்தாள். அவனுக்கு பொறி தட்டியது.

பட்டென்று சாத்திய கதவின் ஒலி ஓர் எழுதாத ஒப்பந்தம் முறிந்த சத்தம் போல் இருந்தது.

கார் போய் விட்டது.

இப்போது எல்லாம் இவன் ஏன் இப்படி வேலை நேரம் முடிந்தும் அலுவலகமே பழியாய்க் கிடக்கிறான் என்று சக ஊழியர்கள் அவனைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

– ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1984, மழைச்சாரல், பேராக்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *