அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர் பெயர் சேத். மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறி கொண்ட பேராசைக்காரர் அவர். ஆனால், கடினமாக உழைத்து தான் பொருள் ஈட்டுவார்.
அவருக்கு ஒரு பேரன் பிறந்தான். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ரொம்ப வருத்தப்பட்டார் அவர். ‘சேர்த்துவைத்த சொத்தெல்லாம் செலவாகிவிடும் போலிருக்கிறதே…’ என்று எண்ணிய அவர், தான் வெளியூர்போய் குடும்பத்தின் புது‘செலவு ஐட்ட’த்துக்காக பணம் சம்பாதித்து வருவதாகப் புறப்பட்டார். அப்போது மருமகள் பயணத்தின்போது சாப்பிட சப்பாத்திகளும் தண்ணீரும் கொடுத்தாள்.
காட்டுவழியாகப் போனால் தூரம் குறைவு என்பதால் நடந்தே புறப்பட்டார் சேத்.காட்டில் ரொம்ப நேரம் நடந்ததும் களைப்பும் பசியும் உண்டானது. சப்பாத்தியைப் பிட்டு வாயில் போட்டார். ‘த்தூ’ என்று துப்பிவிட்டார். அதில் அளவுக்கு அதிகமான வெண்ணெயும் சர்க்கரையும் சேர்க்கப்பட்டிருந்தன. வெறுப்போடு சப்பாத்திகளைத் தூக்கிப் போட்டார். தண்ணீரையாவது குடிப்போம் என்று நினைத்தவருக்கு மீண்டும் அதிர்ச்சி. தண்ணீரிலும் ஏகப்பட்ட சர்க்கரை கலக்கப்பட்டிருந்தது. ‘என்மேல் மருமகளுக்கு என்ன பகை? இப்படிப் பண்ணிவிட்டாளே…’என்று சபித்தபடியே சர்க்கரைத் தண்ணீரை மரத்தின் கீழ் இருந்த ஓட்டையில் கொட்டினார். அப்போது அந்த ஓட்டையில் இருந்து பெரிய நாகப்பாம்பு ஒன்று சரசரவென்று வெளியே வந்தது. உடனே தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார் சேத். சிறிது தூரம் போய்த் திரும்பிப் பார்த்தார். பாம்பு துரத்திவந்துகொண்டு இருந்தது. கல் தடுக்கிக் கீழே விழுந்தார் சேத். அடுத்த விநாடி சேத் மீது ஏறியது அந்தப் பாம்பு.
‘அவ்வளவுதான், கதை முடிந்தது’ என்று கண்ணை இறுக மூடிக்கொண்டார் சேத். ‘‘எழுந்திரு’’ என்று ஒரு குரல் கேட்டது. கண்ணைத் திறந்தார் சேத். எதிரே ஓர் இளைஞன் நின்றுகொண்டு இருந்தான். ‘‘நான் பாம்புகளின் இளவரசன். தாகத்தால் சாகும் நிலையில் இருந்தேன். சர்க்கரைத் தண்ணீர் ஊற்றி என் உயிரைக் காப்பாற்றினாய். உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்றான் இளைஞன்.
‘‘எனக்குப் பணம்தான் முக்கியம்’’ என்றார் சேத்.
‘‘சரி, நிறையப் பணம் தருகிறேன்’’ என்று இளைஞன் சொல்லி முடிப்பதற்குள் சேத், ‘‘நான் இலவசமாகப் பணம் வாங்குவதில்லை’’ என்று சொன்னார்.
‘‘வரம்கொடுக்காவிட்டால்நான்உனக்குக் கடன்பட்டவன் ஆகிவிடுவேன். நீ வரம் கேட்டுத்தான் ஆகவேண்டும்.’’
‘‘அப்படியானால், என் குடும்பத்தாரிடம் கேட்கலாம்’’ என்றார் சேத். இருவரும் சேத்தின் வீட்டுக்கு வந்தனர். நடந்ததை மனைவி, மருமகளிடமும் சொன்னார். ‘‘நான் என்ன வரம் கேட்பது?’’
‘‘இன்னும் ஏகப்பட்ட பணம் வேண்டும் என்று கேட்பதுதானே…’’ என்றாள் சேத்தின் மனைவி.
‘‘முடியாது’’ என்றார் சேத். அப்போது சேத்தின் மருமகள், ‘‘என் சொத்துக்கெல்லாம் நான் எஜமானன் ஆகவேண்டும்’ என்ற வரத்தைக் கேளுங்கள்’’ என்றாள். ‘‘அட! வித்தியாசமான வரமாக இருக்கிறதே… நான் இதுவரைஇப்படிப்பட்டவரத்தையாருக்குமே கொடுத்ததில்லை’’ என்றான் நாக இளவரசன்.
‘‘இப்போது என் சொத்துக்குநான் எஜமானன் இல்லையா?’’ என்றார் சேத்.
‘‘இல்லை. உன் சொத்துதான் உனக்கு எஜமானன். அந்த சொத்தால் உனக்கோ உன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கோ எந்தப் பலனும் இல்லை. சேர்த்துவைத்த பணமெல்லாம் பெட்டிக்குள் வீணே தூங்குகிறது. அந்த முதலாளியைக் காப்பாற்றும் காவலாளியாக நீ ஊழியம் செய்துகொண்டிருக்கிறாய். எனவே உனக்கு அந்த வரத்தையே தருகிறேன்’’ என்ற இளைஞன் அங்கிருந்து மறைந்தான்.
அடுத்து வந்த நாட்களில் சேத் ஆளே மாறிப் போனார். ‘‘வீட்டில் இருப்பவர்கள் நியாயமாக விரும்பியதை எல்லாம் அனுபவிக்கலாம்’’ என்றார். சேத் குடும்பத்தார் மகிழ்ந்துபோனார்கள்.
ஏராளமாக அடுக்கிக் கிடந்த தானிய மூட்டைகளைப் பார்த்து, ‘‘இவை ஏன் இப்படி வீணாகக் கிடந்து மக்குகின்றன? எடுத்துச்சென்று ஏழைகளுக்குக் கொடுங்கள்’’ என்றார்.ஊர் மக்கள் எல்லாரும் சேத்தை மனமார வாழ்த்தினார்கள். தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு எல்லாம் சேத் குடும்பத்தாரையே சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்தார்கள்.
இப்போதுதன்சொத்துகளுக்குஎஜமானன் ஆகிவிட்டார் சேத்.
– வெளியான தேதி: 16 ஜூலை 2006