கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 2,341 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இன்னும் விடியாத கறை படிந்த கூரிருளைக் கலக்கிக் கொண்டு எழுந்த பறையொலி செவிகளில் வந்து விழுந்தபோது. சிவலையன் மனைவிக்கு நெஞ்சம் அதிர்கிறது.

‘ஆரோ பாழ்படுவான் போய்விட்டான், இண்டைக்கும் எங்கடை குடல் சுறுளப் போகுது’

மனம் பொறுக்காது வாய் விட்டுப் புறுபுறுத்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தவள், குடிசைத் தாழ்வாரத்தில் படுத்து உறங்கும் அவனைப் பார்க்கிறாள்.

சிவலையன் அங்கில்லை: அவன் எழுந்து வெளியே போய்விட்டான்.

‘அவருக்குப் பெரிய உத்தியோகம்…’ என்று நெஞ்சம் பொருமி, அவளைச் சூழ்ந்து குறண்டிக் கிடக்கும் அவள் பெற்றெடுத்த எட்டுப் பரட்டைகளையும் பார்த்துக் கண் கலங்குகின்றாள்.

வரப்போகின்ற இன்றைய இரவு அவள் நினைவுக்கு வந்து… உடல் பதைபதைத்து துடியாகத் துடிக்கிறது.

‘எத்தினை அடியள்? எத்தினை உதையள்? எவளவு காலத்துக் கெண்டு நான் படுறது! இண்டைக்கும் ஆரோ… நரகத்துக்குப் போவான், ஏன் செத்தானோ! இந்தப் பிள்ளையளும் நானும் படுகிற ஆறணியம். நாச்சிமாராத்தை உனக்கும் கண்ணவிஞ்சு போச்சோ!’

அவள் நெஞ்சம் நினைந்து நினைந்து நோகிறது.

பகற் பொழுது மெல்ல மெல்லப் பதுங்கிப் பதுங்கி அச்சத்துடனும் ஏக்கத்துடனும் நகர்ந்து போய்விட, இரவு எட்டு மணியாயிற்று. சிவலையன் இன்னும் தன் குடிசைக்குத் திரும்ப வில்லை.

பகலெல்லாம் பிள்ளைகள் அவளைப் போட்டுப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தார்கள்.

‘அம்மா பசிக்குது, பசிக்குது, பசிக்குதெணை’

‘கொஞ்சம் பொறுங்கோணே என்ரை குஞ்சுகளெல்லே. ஐயா இப்ப வந்திடுவர், வந்தோடனை சோறு காச்சித் தருவன்’

அவன் இன்று வெறுங்கை யோடுதான் வருவான் என்பதைத் தெரிந்து கொண்டும், மன மறியப் பிள்ளைகளுக்குப் பொய் சொன்னாள்.

அவளுடைய சமாதான வார்த்தைகளால் அவர்களுடைய வயிறு நிரம்பவா போகின்றது? அவர்களுக்குப் பசிக்களைப்பு. அழுதழுது சுருண்டு படுத்தவர் கள் எப்படியோ உறங்கிப்போய் விட்டார்கள்.

அவள் உயிரைக் கையில் பிடித்தவண்ணம் செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு விழி பிதுங்கிக் கண்ணீர் வடித்துக் கிடக்கிறாள்.

குடிசைக்குள்ளே ஒரு மூலையில் ஏற்றி வைத்த குப்பிவிளக்கு ‘பக்கு பக்’கென்று அடித்து இறுதி மூச்சை விட்டுச் செத்துக் கிடக்கிறது.

மேற்குப் புறத்திலிருந்து வழமையாக எழும் அவனுடைய குரலின் அசுமாத்தத்தை இன்னும் காணவில்லை.

நாய்கள் குரைக்கும்; அதனைத் தொடர்ந்து அந்தக் கிராமமே கிடுகிடுக்கப் பாட்டொலி எழும்.

‘ஆரடி கள்ளி நீ அர்த்த ராத்திரியில் புகுந்து…’

ஆதியிலும் புலையனல்ல சாதி யிலும்புலையனல்ல..’ என்ற அடிகள் ஒழுங்கின்றி வாய்க்கு வந்தவாறு இருளைக் கிழித்துக் கொண்டு கம்பீரமாக எழுந்து வானத்தைப் போய் மோதும். அதன் முடிவில் ……’எடியேய் தெய்வி, என்னடி கண்டறியாத நித்திரையோடி உனக்கு?’ என்று உலுப்பிக் கொண்டு, அச்சத்தினால் உறங்காமல் கிடந்து பதுங்கும் அவளை இழுத்துப் போட்டு அடிப்பான்.

‘எடியே… நான் ஆர் தெரியுமோ? உத்தியோகத்தனடி. கவுண்மேந்து உத்தியோகத்தன். உங்கினை உள்ள தரவளியளெண்டு நினைச்சுப்போட்டாய்!’

அவள் ‘குய்யோ முறையோ’ என்று குழறுவாள். அயலில் குடி இருக்கின்றவர்கள் எவரும் அந்தக் குரல் கேட்டு ஓடிவருவதில்லை. ‘உத்தியோகத்தன் இப்பதான் கந்தோராலை வந்திருக்கிறார்’ என்று சிரித்துக் கொண்டு திரும்பிப் படுத்து விடுவார்கள்.

அவன் ஆதாளிபோட்டுத் துள்ளிக் குதித்தவண்ணம் தன் வெறி அடங்கும்வரை அவளுக்குப் போட்டு அடித்து ஓய்ந்த பின்னர் விழுந்து படுத்துவிடுவான்.

அவனுடைய உத்தியோகத்துக்காக அன்று கிடைத்த சம்ப ளம் பத்து ரூபா. கள்ளோ சாராயமாகவோ மாறி அவன் வயிற்றில் அடைக்கலம் புகுந்திருக்கும்.

அவள் வயிறும், பிள்ளைகள் வயிறும் ‘வாய்வு’ நிறைந்து உருண்டு புரளும்.

அவர்கள் வயிறு என்றுமே முழுப் பட்டினியை மறந்ததில்லை. என்றாவது கால் அரை என்று வயிறுகளுக்கு வந்ததுண்டு. அத் விகிதாசார மறப்புத்தான் அந்த தகைய மறப்புக்கூட அந்த வயிறு களுக்கு வரக்கூடாது என்பதற் காகத்தான், சிவலையனுக்கு இந்த உத்தியோகப் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறார்கள்.

இந்தப் பதவி அவனுக்கின்று கிடைத்திருப்பதே ஒரு பெரிய கதை.


அந்தக் கிராமம் வடமராட்சிப் பகுதியிலுள் மிகப் பரந்த பெரியதொரு கிராமம். யாழ்ப்பாணத்துச் சாதிகள் பல அந்தக் கிராமத்துக்குள்ளே தமக்குத் தமக்கென்றிருக்கும் பகுதிகளுக்குள் கன்னை பிரிந்து குடியிருக்கின்றன. அந்தக் கன்னைகளுக்கென சாதிக்கொரு சனசமூக நிலையம்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் சிவலையன் பகுதியைச் சேர்ந்த இனைஞர்கள் ஒருநாள் மாலை தங்கள் சனசமூக நிலையத் தில் கூடி இருந்தார்கள். அன்று அவர்களுடைய மாதாந்தக் கூட் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் உலக நடப்புகள் பற்றி தமக்குள்ளே பேசிக் கொண்டிருந்த சமயம் அந்த நிலையத்தின் செயலாளராக இருக்கும் இளைஞன் சொன்னான்.

‘எவ்வளவு கொடுமைகளெல்லாம் சாதியின் பெயரால் யாழ்ப்பாணத்து மண்ணிலே நடக்குது. நாங்கள் கைகட்டிக் கொண்டு பார்த்திருக்கிறம்’

‘இதென்ன புதிசே. காலங் காலமாகத்தானே நடக்குது’

‘இப்ப வரவரக் கூர்மைப் படுகுது. இதை உணராமல் சாதிக் கொடுமை ஒழிஞ்சு கொண்டு போகுதெண்டு வெறும் பேய்க்கதை கதைக்கிற வெள்ளை வேட்டிக்காரர் எங்களுக்குள்ளேயும் இருக்கினம்: நயினார்மாரிலேயும் இருக்கினம்’

‘எங்கே ஒழியுது? மந்துவிலிலே தென்னை மரத்திலே ஏறி இருந்தவனை மரத்தோடை தறிச்சு விழுத்திப்போட்டு, அந் தக் கோடாலியாலே வெட்டிக் கொண்டாங்கள், எழுதுமட்டுவாளிலே கொலை செய்தான்கள். வீடுகளுக்கு நெருப்பு வைச்சான்கள், பள்ளிக்கூடத்துக்குப் போன பிள்ளையளின்ரை புத்தகங்களைப் பறிச்சு றோட்டிலே போட்டு நெருப்பு வைச்சான்கள். ஏன், உந்த உடுப்பிட்டியில என்ன எங்கடை நடந்தது? சாதியை நிருவாணமாக அங்கை ஸ்ரேசனுக்குக் கொண்டு போனான்களே..

‘இதுகளுக்கு நாங்கள் என்ன செய்யலாம்?’

‘இந்தக் கொடுமைகளை எதிர்த்து நாங்களும் சேர்ந்து நிண்டு போராட வேணும்’

‘உட்சுவர் தீத்தித்தான் புறச் சுவர் தீத்தவேணும். முதல் எங்கடை கிராமத்திலே என்ன செய்வம்’

‘முதல் வேலையாக இதை ஆரம்பிப்பம். இப்ப கட்டை குத்தி சுமந்து கொண்டு போற வேலை செய்யாவிட்டாலும், வண்டிலிலே ஏத்திக் கொண்டுபோய் பிரேதம் சுடுகிற வேலையைச் செய்யினம். அதை நிப்பாட்ட வேணும்’

‘ஆர், நாலுமூண்டு கிழடு கட்டையள்தானே செய்யிதுகள். அதுகளும் போக, காலப்போக்கிலே……’

‘உது பிழை. அதுகள் போக, ஆரோ பின்னாலே தொடரத் தான் போறான். இது காலத்தாலே சாகாது!”

‘கட்டாயம் செய்ய வேணும்.எங்கடை ஆள் எம்.பி. ஆகி பாராளுமன்றத்துக்கும் போய் விட்டார். நாங்கள் இப்பவும் கட்டை குத்தி ஏத்துறதும், பிரேதம் சுடுகிறதும் சரியில்லை’

பொழுது போக்காக ஆரம்பித்த உரையாடலை மிக உறுதியான ஒரு தீர்மானமாகக் கொண்டு வந்தான் அந்த நிலையச் செயலாளரான இளைஞன்.

மறுதினம் தங்கள் சாதியைச் சேர்ந்த பிரேதம் சுடப்போகும் முதியவர்களைக் கண்டு பேசினார்கள்.

‘தம்பியவை இதாலே பெரிய கரைச்சல் வரும். அவையள் சும்மா விடாயினம். நாங்கள் இன்னும் எத்தினை காலத்துக்கு இருக்கப் போறம். எங்களுக்குப் பிறகு இல்லாமல் போகும்’ என்றார்கள் அந்த முதியவர்கள்:

‘வாற கரைச்சலுகள் வரட்டுக்கும் பாப்பம்! இப்ப உடனே இதை நிப்பாட்டத்தான் வேணும்’ என்றார்கள் இளைஞர்கள்.

‘எல்லாக் குடிமக்களு போறாங்கள், நாங்கள் எங்கடை தொண்டைக் கைவிட்டால்…?’

‘நாங்கள் முதல் இந்த அடிமை வேலையைக் கைவிடுவம். பிறகு அவையளையும் விடச் செய்வம். அவையும் கைவிடுவினம்’.

‘நாங்கள் எல்லாச் சாதியும் எவளவு ஒற்றுமையாக இருக்கிறம் இந்த ஊரிலே. நீங்கள் சண்டையைக் கிளப்பப் போறியள் தம்பியவை!’

‘நாங்கள் ஒற்றுமையாக இல்லை, அடிமை குடிமையாக அடங்கி ஒடுங்கி இருக்கின்றம். ஒற்றுமையாக இருக்கிறதெண்டால் எங்கடை சாதியும் அவையளைப் – போல சமத்துவமாக. இருக்க வேணும். உங்களுக்கென்ன சம்பளமே தருகினம்?’

‘இதென்ன தம்பியவை யின்ர கதை. நாங்கள் எல்லாச் சாதியின்ரை பிரேதமும் சுடப் போறதே!’

‘அதுதான் சொல்லுறம். ஒரு சாதியின்ரை பிரேதமும் சுடப் போகக் கூடாது. போகவும் விடமாட்டம்’

இளைஞர்களின் கண்டிப்பான வற்புறுத்தலுக்கு அடங்கி முதியவர்கள் பிரேதம் சுடுவதற்கு இனிமேல் போவதில்லை என்று தீர்மானித்த சமயத்தில், பெரிய உடையாவளவு சிதம்பரப்பிள்ளை யற்ரை தாய் தங்கமணி நாச்சியார் காலமானார்.

சிதம்பரப்பிள்ளையர் கட்டை குத்தி ஏற்றிக் கொண்டுபோய் பிரேதம் சுடுகின்றவர்களுக்குக் காலையிலேயே ஆளனுப்பினார்.

இளைஞர்கள் மிக விழிப்பா கச் செயற்பட்டார்கள். குடிமைத் தொண்டு செய்வதற்கு மட்டுமல்ல, செத்த வீட்டுக்குப் போவதற்கும் முதியவர்களை விடாது தடுத்துவிட்டனர்.

கட்டை குற்றிகள் ‘ரக்டரில்’ சுடலைக்கு ஏற்றி இறக்கப்பட்டன.

சமூகச் சீர்சிறப்புக்களுடன் தங்கமணி நாச்சியாரின் பிரேதம் சுடலைக்கு வந்து கட்டையிலும் ஏறிவிட்டது. இனிமேல் சுடலையிலே நிண்டு பிரேதத்தைச் சுடுகிறது ஆர்?’ என்ற கேள்வி உறுத்தியபோது, ஆண்ட பரம்பரையினரின் உள்ளம் கொதித்தது.

‘எழிய சாதியள். அவன்களுக்கு இப்ப திமிர். பாப்பம், பாப்பம். இப்பென்ன செய்யிறது!’

‘அப்ப, பறையடிச்சுக் கொண்டு வந்த பொடியனைக் கேட்பம்’

‘மோனை… கறுத்தான் இஞ்சைவா. மாணிக்கனுக்கும் மயிலனுக்கும் ஏதே சுகமில்லையாம். அவன்கள் வரல்லை. நீங்கள் நிண்டு இந்தப் பிரேதத்தைச் சுட்டுப்போட்டுப் போங்கோவன். பிரேதம் சுடுகிறது முந்தி உங்கடை வேலைதானே!’

‘நம்மாணை ஏலாது. இந்த வெய்யிலிலே மேளம் கொண்டு அடிச்சுக் வந்ததிலே நல்லாக் களைச்சுப் போனம். எங்களுக்கு உதிப்ப சுடுகிறது எப்படியெண்டும் தெரியாது. அரிச்சந்திர மகாராசா சுடவெளிக்கிட்டாப் போலே நாங்கள் கைவிட்டிட்டம்’.

‘தம்பி கிட்டிணர், இஞ்சை வா தம்பி. இண்டைக்கு அவையள் வரையில்லை, போகட்டும். இண்டையிற் காரியம் முடியட்டும், அவன்களைப் பாப்பம். இது நீங்கள் தூக்கிக் கொண்டு வந்த பிரேதம். நீங்களும் நாங்களும் வேறையே. நாங்களும் நிக்கிறம். நீங்களும் நில்லுங்கோ இதைச் சுட்டுப்போட்டுப் போவம்’

‘நாங்களும் நீங்களும் வேறையே’ என்ற வார்த்தைகளில் கிட்டிணனும் அவனைச் சேர்ந்தவர்களும் குளிர்ந்து போனார்கள். அந்தக் குளிர்ச்சியில் திளைத்துப்போன அவர்களிடம் பிரேதத்தைச் சுடுகிற பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மெல்ல நழுவிப் போய்விட்டார்கள்.

தங்கமணி நாச்சியாரின் சடலம் சாம்பலாகாமல் எரிந்து போய்விடவில்லை. அந்தத் தீ அணைந்து போய்விட்டபோதும், சிதம்பரப்பிள்ளையரின் உள்ளம் பற்றி எரிந்து கொண்டுதான் இருந்தது.

‘இந்தப் பயல்களை இந்தக் காலத்திலே மோட்டுத்தனமாக நேருக்கு நேரே எதிர்க்கக்கூடாது. நான் இங்கிலீசுக்காறனிட்டை படிச்சவன்; உத்தியோகம் பார்த் தவன். இவன்களே என்னை மிஞ்சுகிறது! குடிமைத்தொழில் செய்விக்கிறனோ, இல்லையோ பாப்பம்!’ என்று கறுவிக்கொண்டு பலமாகச் சிந்தித்தவர். அவரைச் கூட்டி சேர்ந்த சிலரையும் ஆலோசித்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

அந்த முடிவின் பெறுபேறாக மறுநாள் அந்தக் கிராமத்தின் பிரதான இடங்களில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவ ராகிய அவருடைய கைச்சாத்து டன் ஓர் அறிவித்தல் ஒட்டப் பட்டது.

ஆலங்குளம் சுடலைக் காவற் காரனுக்கான பதவி வெற்றிடம் விண்ணப்பம் கோருதல்.

இதுவரை காலமும் இல்லாத புதுமையான ஒரு பதவி. புதுமையான விண்ணப்பம் கோருதல்.

இந்த அறிவித்தலைக் கண்டு எவராவது விண்ணப்பிப்பார்களென்று சிதம்பரப்பிள்ளையர் எதிர்பார்த்திருக்கவில்லை. தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமானவன் யாரென்றுதான் இரண்டொரு தினங்கள் சிந்தித்தார்.

இறுதியில் சிவலையனுடைய நினைவு வந்தது. அவன் ஆத்திரம் அந்தரத்துக்கு அவரிடந்தான் வந்து, ஐஞ்சு பத்துக் கைமாற்றாக வாங்கும் வழக்கமுள்ளவன். அவனுக்கு நல்ல திடகாத்திரமான உடல். தன்னுடைய பகுதியாரை எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலுள்ளவன்.

ஒருதினம் ஆள் அனுப்பி அவனைக் கூப்பிட்டார்.

‘சிவலை… ஊருக்குள்ளே ஒட்டியிருக்கிற அறிவித்தலை நீ பாக்கவில்லையே?’

‘என்ன அறிவித்தலாக்கும்?’

‘உத்தியோக அறிவித்தல். சுடலைக்குக் காவல்காரன் தேவை யாம். அரசாங்கம் எங்கடை சங் கத்துக்குச் சம்பளம் அனுப்பும். நாங்கள் அதைக் குடுப்பம்’

‘எந்தநாளும் போய்க் காவல் இருக்க வேணுமே நயினார்?’

‘இதென்ன கதை? வெறும் சுடலைக்கு ஏன் காவல்? பிரேதம் வாறநேரம் அதிலே போய் நிண்டு பாக்கிறதைப் பாத்தால் போதும். மற்ற நாட்களிலே தன்ரை தொழிலைச் செய்யலாம். தன்ரை தொழிலும் தொழிலாச்சு; அரசாங்கச் சம்பளமும் ஒருபக்கத் தாலே வரும். இஞ்சை கன விண்ணப்பங்கள் எனக்கு வந்திருக்குது. நீ கஷ்டப்படுகிறனி உனக்கும் கூப்பிட்டு ஒரு சொல்லுச் சொல்ல வேணுமெண்டு தான் கூப்பிட்டனான்’

‘அப்ப என்ரை பேரையும் பதியுங்கோவன் நயினார்!’

‘சரி…சரி… இந்தா விண்ணப்பம். இதிலே ஒரு இதிலே ஒரு கையெழுத்து வை. எட… நீ கையெழுத்துப் போடமாட்டியே! இந்தா பெருவிரலிலே மை பூசி இதிலே கை அடையாளம் வை’ என்று கூறி, அவனிடம் காய் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டு, குறித்த ஒரு தினத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு அவனை வருமாறு சொல்லி அனுப்பினார்.

அந்தத் தினத்தில் சிவலையன் கிராம அபிவிருத்திச் சங்க நிலையத்துக்குப் போனான். சிதம்பரப் பிள்ளையரும் அவரைச் சார்ந்த இன்னும் நான்கு பேர்களும் அங்கு கூடி இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அந்தப் பகுதியின் பெரிய தலைகள்.

‘வா சிவலை வா. ஒவ்வொரு ஒவ்வொருத்தராக வந்து போய் விட்டினம், கடைசியாக உன்னைத்தான் காத்திருக்கிறம். உங்கடை மயிலன், மாணிக்கன், பொன்னன் வந்துவிட்டுப் போய் விட்டார்கள். நாங்கள் அவை இவை எண்டு பாக்கேலாது. தகுதியான ஆளுக்குத்தான் குடுக்க வேணும்’

‘எங்களுக்கு நீ தான் சரியான ஆளாகப் படுகுது. சும்மாவே, அரசாங்கச் சம்பளத்தைக் கண்ணை மூடிக்கொண்டு குடுக்கலாமே!’

‘இந்த உத்தியோகத்துக்குப் பென்சன் இல்லை’

‘பென்சன் இல்லையெண்டால் நயினார்’.

‘பென்சன்தான் இல்லை. பிறவுடன்பண் எண்டு ஒரு காசிருக்கு. உனக்கு அறுபத்தைஞ்சு வயதானதும் அந்தக் காசு கிடைக்கும். மொத்தமாக ஒரு பதினையாயிரம் வரும், சரிதானே’

‘சரியாக்கும்’.

‘உங்கடை பகுதிப் பொடியள் ஏதும் பொறாமையிலே கதைப்பாங்கள். உன்னையும் குழப்பிவிடப் பாப்பாங்கள்’

‘அவை என்னை மயிர் புடுங்கேலாது’

‘அதுதானே …… நீ இதிலே கை அடையாளம் வைச்சுவிட்டுப் போ’

திரும்பி பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நடந்தான். சிவலையன்.


தெய்வானைக்கு இந்த உத்தியோகத்தில் அவ்வளவாக நம்பிக் கையில்லை. அவர்களுடைய இளைஞர்கள் பலர் சிவலையனையும் அவளையும் கண்டு, அவன் ஏமாற் றப்படுவதைப் பலதடவைகள் எடுத்துச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் வார்த்தைகளை எல்லாம் சிவலையன் நம்பவில்லை.

சுடலைக்குப் பிரேதம் வருகிறது என்றால் சிவலையன் தன் உத்தியோகத்தைக் கவனிக்கத் தயாராக நிற்பான். கட்டை குற்றிகளை ஒழுங்கா அடுக்கி வைத்து, கொள்ளி வைத்துவிட்டு வந்தவர்கள் திரும்பச் சென்ற பின்னர், மூடிக்கொண்டு அவர்கள் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகும் ஒரு குடம் கள்ளையு ம் குடித்து, பிணத்தையும் சுட்டு முடிப்பான்.அன்றைய கூலி பத்து ரூபாவை சிதம்பரப்பிள்ளையர் பிரேதத்துக்கு உரியவர்களிடம் இரகசியமாக வாங்கி அவன் கையில் கொடுத்துவிட்டுப் போவார். மறுநாள் காலையில் அவர் வீட் டுக்குச் சென்று அவர் காட்டுகின்ற இடத்தில் அவன் கை அடையாளம் இடவேண்டும்.

ஒருநாள் உயர்சாதி அல்லாதவர் பகுதியிலிருந்து பிரேதம் சிவலையன் ஒன்று வந்தபோது தன் உத்தியோகப் பதவியை வகிப்பதற்குத் தயாராக நின்ருன்.

அதனை அவதானித்த சிதம் பரப்பிள்ளையர், கண்ணால் சாடை காட்டி அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டார். அன்று மாலை கொண்டு அவரைத் தேடிக் கொண்டு அவன் போன சமயம், அவர் அவனைப் பார்த்துக் கூறினார்:

‘சீவலை… நீ பாக்கிறது உத்தியோகந்தான். எண்டாலும் கண்டவன் நின்டவன்ரை பிரேதம் எரியையிக்கே நீ அதிலை நிக்கிறது உனக்கு மதிப்பில்லை’

அதன் பிறகு உயர் சாதிப் பகுதியிலிருந்து பிரேதம் வந்தால் மாத்திரம் அவன் சுடலைக்குப் போவான். அவனுக்கென்ன உத்தியோகம்! பதினையாயிரம் கிடைத்தால் போதும்.

இன்று இன்னும் அவன் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. காலையில் அவன் எழுந்து போனது கூட அவளுக்குத் தெரியாது. அவனுடைய நிந்தாட்சணைகளுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டு கிடந்த அவள், இப்போது அவனைக் காணவில்லையே என்று ஏங்கித் துடிக்க ஆரம்பித்து விட்டாள்.

‘பாவம். வெறி கொஞ்சங் இந்த கூடினால்தான் அட்டா துட்டியள் எல்லாம். எப்போதும் போலே கூலித் தொழிலுக்குப் போய்வந்தால், ஒரு போத்தில் கள்ளுக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சக் காசை என்ரை கையிலே தந்துவிடும். பிள்ளைகள் பட்டினி கிடக்கிறதெண்டால் தாங்கமாட்டுது. இந்த உத்தியோகத்துக்குப் போய் அவன்கள் வாத்துவிடுகிற கள்ளைக் குடிச்சு தெண்டா…’ என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிற சமயம் ‘தெய்வானை, தெய்வானை’ என்ற இதமான மெலிந்த குரல் எழுகிறது.

அவளுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. பரபரப்போடு எழுந்து நெருப்புப் பெட்டியைக் கையில் எடுத்து விளக்கைத் திரும்பவும் ஏற்றுகிறாள்.

சிவலையன் அரையில் கட்டி வேட்டியை ஈர அவிழ்த்து அவள் கையிலே கொடுத்துக் கொண்டு, ‘அந்தச் சாரத்தை எடுத்துத்தா’ என்கிறான்.

அவன் உடுப்பு மாற்றி முடிப்பதற்கு முன் திரும்பவும் விளக்கு அணைந்து விட்டது.

‘பிள்ளையள் ஏதும் திண்டுதுகளே?’

‘இல்லை’

‘உதிலே ஒருக்கால் போட்டு வாறன். நீ அடுப்பை மூட்டு’

வலையன் சிதம்பரப்பிள்ளையர் வீட்டுக்கு விரைவாக நடந்து வந்து, அவர் வீட்டுப் படலையில் நின்று உள்ளே பார்த்து மெல்ல.

‘ஐயா..ஐயா…’

‘ஆரது..’ அதிகாரமான குரல் உள்ளே இருந்து எழுகிறது.

‘அது நான் நயினார்’.

‘நீதான் நயினார், ஆரெண்டு சொல்லு’ உள்ளே இருந்து வருகின்ற குரலில் சினம் சற்றுத் தடிக்கின்றது.

‘அது நான். சிவலையனாக்கும்’

‘அட நீயே! வா… வா… என்ன சங்கதி இந்த நேரத்திலே?’

சிவலைன் படலையைத் திறந்து கொண்டு முற்றத்துக்கு வருகிறான்.

‘ஐயாவை இண்டைக்குச் சுடலைப் பக்கம் காணயில்லை?’

‘ஆர் நானோ, அவன் வீட்டு முத்தம் மிதிப்பனே! செத்த வீட்டுக்கும் வருவனே! அவன்ரை வாழ்வும் வேண்டாம் தாழ்வும் வேண்டாம். அவன்கள் உன்னையும் இண்டைக்குக் கவனிக்கயில்லைப் போலே கிடக்குது. அதுதான் நீ இண்டைக்குக் குறாவிப்போய் நிக்கிறாய். இல்லை யெண்டால்…அது போகட்டும், நீ ஏன் இப்ப வந்தனி?’

‘என்ரை சம்பளம்?’

‘என்ன சம்பளம்?’

‘இண்டைக்குரிய சுடலைக் காவல் சம்பளம்?’

‘அது அவன்களெல்லோ தர வேணும். அவன் வீட்டுப் பிணத்தைச் சுட்டுப்போட்டு என்னட்டை வந்து காசுக்கு நிக்கிறாய்!’

அவர் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த பகைமைச் சினத்தினால் எதைப் பேசுகின்றேன் என்பதனை உணராமல் வாய்க்கு வந்தவாறு பொரிந்து தள்ளினார்.

அந்த வார்த்தைகள் அவன் செவியில் விழுந்து சிந்தையில் உறைத்தபோது அவன் திகைத்தான். சில கணங்கள் உறைந்து போய் மரமாக நின்றவன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையுமே புரிந்து கொண்டான்.

‘என்னை ஏமாத்திப் போட்டான்கள். பிறவுடண் பண்டு எண்டு சொன்னான்கள். பதினையாயிரம் எண்டான்கள். உத்தியோகம் எண்டான்கள். எல்லாம் சுத்தப் பொய்’

அவன் தனக்குள்ளே ஒரு முடிவுக்கு வந்தவனாக, ‘சரி நான் வாறன்’ என்று வெளியே போவதற்குத் திரும்பினான்.

திடீரென்று அவனுடைய மாற்றத்தை அவதானித்தபோது தான், சிதம்பரப்பிள்ளையார் தான் செய்த தவறை உணர்ந்தார்.

‘என்ன சிவலையன் பேசாமல் போறாய்?’

‘இனிமேல் என்ன கதை?’

‘என்ன ஒரு மாதிரிக் கதைக்கிறாய்?’

என்ன மாதிரித் தெரியுது? இவளவு காலமாக என்னை ஏமாத்தினது போதும், இனி மேலும் நான் ஏமாறமட்டன்’

‘என்னடா கனக்கக் கதைக்கிறாய்’.

‘ஓய்.. கொஞ்சம் அளந்து பேசும்’

‘என்னடா சொன்னனி’ என்று துள்ளி எழும்பினார் சிதம்பரப்பிள்ளையர்.

அவருடைய குரல் கேட்டு உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் முற்றத்துக்கு ஓடிவந்தனர். சிதம்பரப்பிள்ளையர் வீட்டுக்குப் பின்புறமாக ஓடிச் சென்று உலக்கை ஒன்றைக் கையிலே தூக்கிக் கொண்டு அவனை நோக்கிப் பாய்ந்து வந்தார்.

‘எவனாவது கிட்ட நெருங்கினால் குடல் எடுத்துப் போடுவன். எங்களிலே வண்டில்விடுகிறியள்; ஏமாத்துறியள். நான் இவ்வளவு காலமும் உங்களாலே தனியன். இனிமேல் தனிச்சவனில்லை. எங்கடை பொடியளோடை சேர்ந்து சேர்ந்து நிக்க போறன். மயிரைப் புடுங்குகில் புடுங்கிப் பாருங்கடா’ என்று சவால் விட்டுக் கொண்டு நெஞ்சு நிமிர்த்திய வண்ணம் அவன் வெளியே நடந்தான்.

– ஆகஸ்ட் 1982

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *