புரிந்துணர்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 612 
 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வன்னிப் பிராந்தியத்தின் ஒரு மூலையில் அமைந்திருந்தது எங்கும் அடர்ந்த குமணைக் கானகம்.

பென்னம் பெரிய மரங்கள் முதல் சிறிய மரங்கள் வரை எங்கும் அடர்ந்து வளர்ந்து கிடந்ததனால், அக் காட்டில் கொடிய மிருகங்களான சிங்கம், புலி, கரடி, போன்றவைகளும் பெரிய மிருகமான யானையும் சிறிய மிருகங்களான மான், முயல், பன்றி, மரை போன்றனவும் நகர்வனவான எறும்பு, கறையான் போன்ற ஜந்துக்களும் வசித்து வந்தன.

இவை அனைத்தும் ஒற்றுமையுடன் வாழ்க்கை நடாத்திக் கொண்டிருந்தன.

காலஞ் செல்லச் செல்ல ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த மிருகங்களுக்கிடையே நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி மனப்பான்மை வளர ஆரம்பித்தது.

இதனால் மிருகங்களுக்கிடையே ஒற்றுமையின்மை தோன்றி சின்ன மிருகங்களைப் பெரிய மிருகங்கள் கேலி பண்ணுவதும் வலிமை குன்றிய மிருகங்களை வலிமைமிக்க மிருகங்கள் அடிமையாட்சி நடாத்தவும் தொடங்கின.

அந்த வேளையில் ஒரு நாள் கோடை வெயிலில் உணவு தேடியலைந்த காட்டு யானையொன்று களைப்பாறுவதற்காக குடை போல வளர்ந்து நிழல் பரப்பி நின்ற ஆலமரத்தின் கீழே வந்து நின்றது.

அப்போது அதன் கண்கள் தற்செயலாக அந்த மரத்தின் கீழால் ஊர்ந்து கொண்டிருந்த சில எறும்புகளின் மீது பதிந்தன.

அந்தச் சின்னஞ் சிறிய எறும்புகளைக் கண்ட காட்டு யானைக்குத் தன்னையறியாமலேயே சிரிப்பு வந்து விட்டது.

ஏளனச் சிரிப்பொன்றை “ஆ…ஆ…” என வாய்விட்டுத் சத்தமிட்டவாறே சின்னஞ் சிறிய எறும்புகளைப் பார்த்து “எறும்புகளே! எறும்புகளே! எங்கே பயணம்?” என்று கேட்டது.

அதற்கு எறும்புகள் “யானை அண்ணா! யானை அண்ணா ! நாங்கள் உணவு மூடைகள் சுமந்து செல்கின்றோம்” என்றன.

உணவு மூடைகள் சுமந்து செல்கின்றோம் என்ற வார்த்தைகளைக் கேட்டதுதான் தாமதம், “ஆ….மூடையா சுமக்கிறீர்கள்! உங்களுடைய பருமனில் நீங்கள் மூடையா சுமக்கிறீர்கள்” என்று நகைப்பாகச் சொன்னது காட்டுயானை.

உருவத்தில் பெரிய காட்டுயானையின் கேலி வார்த்தைக்கு எதிர்த்துக் கதைக்கப் பயந்த எறும்புகள் எதிர் வார்த்தைகள் ஒன்றுமே பேசாமல் மௌனமாகத் தலை குனிந்து நின்றன.

எறும்புகள் தலை குனிந்து நின்றதும் காட்டு யானைக்கு மேலும் மமதை வரவே, எறும்புகளைப்பார்த்து “மூடை சுமக்கும் எறும்புகளே! என்னுடன் உங்களால் போட்டி போட முடியுமா?” என்று ஏளனத்துடன் கேட்டது.

அவ்வாத்தைக்கும் எதுவுமே பேசாமல் எறும்புகள் அப்படியே தலை குனிந்து நின்றன.

காட்டுயானை கதைக்கக் கதைக்க எறும்புகள் குனிந்து கொண்டே நின்றதனால் மேலும் கோபம் அதிகரித்தது.

“அற்ப எறும்புப் பயல்களே! நான் தொடர்ந்து கதைத்துக் கொண்டேயிருக்கின்றேன். நீங்கள் பேசாமல் இருக்கின்றீர்கள். உங்களுக்கு எவ்வளவு மமதை இருக்க வேண்டும். நான் யார் தெரியுமா? காட்டின் பலசாலி. உருவத்தில் பெரியவன். வீரத்தில் வலியவன். அப்படியிருக்க நீங்கள் என்னை ஏளனம் செய்யப்பார்க்கிறீர்கள். அப்படித்தானே! நான் நினைத்தால் உங்களை ஒரு கணத்தில் அழித்து ஒழித்து விடுவேன்” என்று வீராவேசமாய்க் கத்தியது.

அவ்வார்த்தையைக் கேட்ட எறும்புகள் நடுநடுங்கிப் போயின. சில கணங்கள் தடுமாறிப் பின் மெதுவாகத் தலையை நிமிர்த்தி “யானை அண்ணா, நாங்கள் அப்படியொன்றும் ஏளனம் செய்யவில்லை” என்றன.

அதற்குக் காட்டுயானை, “ஆ..என்னை எதிர்த்துக் கதைக்குமளவிற்கு உங்களுக்குத் தைரியம் வந்து விட்டதா?” என்று கூறிச் சினந்தது.

“யானை அண்ணா, நீங்கள் நினைக்கும் அளவிற்கு நாங்கள் ஒன்றும் நினைக்கவில்லை. நீங்கள் பெரியவர் அதனால்தான் நீங்கள் கதைக்கும் போது எந்தவொரு எதிர் வார்த்தையும் கதைக்காமல் மௌனமாகத் தலை குனிந்து நின்றோம். அப்படி நாங்கள் செய்தது பிழையென்றால் எங்களைப் பெரிய மனது கொண்டு மன்னித்து விடுங்கள்” என்றன கோரசாக.

எறும்புகளின் கோரசொலி காட்டுயானைக்கு மேலும் கோபத்தைக் கூட்டிற்று.

“அற்ப பயல்களே! செய்வதையும் செய்து விட்டு மன்னிப்பா கேட்கிறீர்கள். மன்னிப்பு என்பது எனது வாழ்க்கையிலேயே கிடையாது. இன்னும் உங்களை உயிருடன் விட்டு வைத்தால் எனது குலத்திற்கே அவமானம். நான் இன்று போய் மீண்டும் சில தினங்களில் வந்து உங்கள் எல்லோரையும் கொன்று உங்கள் இனத்தையே அழித்து விடுவேன்” என்று கூறிக்கொண்டு வேகமாகக் காட்டினுள் மறைந்து சென்றது.

ஆனால், எறும்புகளோ அவ்வார்த்தை பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் வழமை போலவே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

சில நாட்கள் கழிந்தன. மாரி காலமும் வந்தது.

மாரி மழை ‘சோ’ என்ற இரைச்சலுடன் பல நாட்களாகக் கொட்டோ கொட்டெனக் கொட்டிக் கொண்டிருந்தது.

அப்பொழுது காட்டுயானைக்கு எறும்புகளுக்கு விதித்த காலக்கேடு நினைவுக்கு வந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது எறும்புகளின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றது.

கொட்டும் மழையில் நனைந்து சென்றதனாலும் பல நாட்கள் பட்டினி கிடந்ததினாலும் காட்டுயானைக்கு ஒருவித நடுக்கம் பிடிக்கவே, அதே ஆல மரத்தின் கிழே போய் நின்றது.

சுற்றும் முற்றும் எறும்புகளைப் பார்த்தது. அங்கே ஆலமரத்தின் கீழே எறும்புகள் அமைந்திருந்த புற்றுக்குள்ளிருந்து கொட்டும் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கொழுத்துப் பருத்த எறும்புகளைக் கண்டது.

இதைக் கண்ட காட்டுயானைக்கு எறும்புகளைக் கொல்ல வந்த எண்ணமே மறைந்து போனது.

மெதுவாக எறும்புப் புற்றை நோக்கி நடந்தது.

காட்டுயானை தங்களை நோக்கி வருவதைக் கண்ட எறும்புகள் நடுநடுங்கியபடி “யானை அண்ணா, எங்களைக் கொல்லாதீர்கள்” என்று கூச்சலிட்டன.

அதற்குக் காட்டுயானை “எறும்புத் தம்பிகளே நான் உங்களைக் கொல்ல வரவில்லை. நாங்கள் எல்லாம் மழையில் நனைந்து பட்டினியால் வாடி மெலிந்து போயிருக்க நீங்கள் மட்டும் கொழுத்துப் பருத்து நனையாமல் இருக்கிறீர்களே அதன் மர்மம் என்ன?” என்று கேட்டது. –

அவ்வார்த்தைகளைக் கேட்ட எறும்புகளுக்கு மகிழ்ச்சி பிறந்தது. “யானை அண்ணா, நாங்கள் எல்லோரும் ஒரே இனம் என்ற வகையில் கூட்டாகச் சுறுசுறுப்பாகச் செயற்படுகின்றோம். இதன் பயனாக எங்களுடைய மூலப்பொருட்களைக் கொண்டே வீடு கட்டியுள்ளோம். உணவு சேமித்து வைத்துள்ளோம். அதனால் மழை காலத்தில் நனையாமல் இருந்து கொண்டு சேமித்த உணவைச் சாப்பிடுகிறோம். அவ்வளவுதான் இதில் எந்தவித மர்மமும் கிடையாது” என்றன.

“அப்படியா! நன்றி” என்று சொன்னபடி நடந்தது யானை.

மழையும் நின்றது.

உடனே காட்டுயானை காட்டிலுள்ள எல்லா மிருகங்களையும் அழைத்து ஒரு கூட்டம் கூட்டியது. அதில் எறும்புகளின் ஒற்றுமை பற்றி எடுத்துக் கூறியது.

அதை எல்லா மிருகங்களும் ஏற்றுக் கொண்டன. அதன் பின்பு அந்தக் காட்டில் வறுமையில்லை. பட்டினியில்லை – வீடில்லாப் பிரச்சினையில்லை. எல்லா மிருகங்களும் சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்தன.

– நரியின் தந்திரம், முதற் பதிப்பு: அக்டோபர் 2000, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *