கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 28, 2024
பார்வையிட்டோர்: 1,659 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில் இக்கதைகள் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

I

அரசரும் அறிஞரும்

ஒரு காலத்தில் ஓர் அரசர் தாம் மேற்கொள்ளும் தொழில் இடையூறின்றி வெற்றி யுடன் முடிய ஓர் உபாயத்தை அறிய முயன்றார். அதற்காக அவர், “எந்தக் காலத்தில் ஒரு தொழிலை ஆரம்பித்தால், பலன் ஏற்படும்? எத்தகைய மக்கள் நட்புக்குரியவர்கள்? ஒருவன் செய்ய வேண்டிய முக்கியத் தொழில் யாது? இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடை அளிப்பவர்களுக்குச் சிறந்த பரிசு அளிக்கப்படும்,” என்று பறையறைவித்தார்.

இந்த விளம்பரத்தைக் கேட்டதும் கற்றார் பலர் அரசரை அணுகி, தமக்குத் தோன்றிய விடைகளைக் கூறினர். அவர்கள் கூறிய விடைகள் பல தரப்பட்டனவாயிருந்தன.

முதல் கேள்விக்கு, “ இன்ன தொழிலை, இன்ன ஆண்டு, இன்ன மாதம், இன்ன தேதியன்று செய்யவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து, அதற்கேற்ப ஒரு கால அட்டவணையைத் தயார் செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தொழிலை, குறிப்பிட்ட காலத்தில் தவறாது செய்துவரின், பலன் உண்டாகும்,” என்று சிலர் பதிலளித்தனர்.

“இம்மாதிரி முன் கூட்டியே காலத்தை நிர்ணயிப்பது இயலாத செயல். அரசர் கேளிக்கைகளில் ஈடுபடாமல் எல்லா வேலைகளையும் அவ்வப்பொழுது மிகுந்த கவனத்துடன் செய்து வருதலே தகுந்த முறை,” என்று வேறு சிலர் கூறினர்.

மற்றும் சிலர், “அரசர் எவ்வளவு திறமையுடையவராயிருந்தாலும், அவர் ஒருவரே இதைத் தீர்மானிக்க இயலாது. அறிஞர் குழு ஒன்றை நிறுவி, அந்தக் குழுவின் ஆலோசனைப்படி நடப்பதுதான் சரி,” என்று ஆலோசனை கூறினர்.

வேறு சிலர், “குழுத் தீர்மானிக்கும்வரை காத்திருப்பதானால், பல முக்கியச் செயல்கள் செய்யப்படாமலே நின்றுவிடும். இன்ன செயலை இன்ன காலத்தில் செய்தால் இன்ன பலன் ஏற்படுமென்பதை முன் கூட்டியே அறிவிக்கக் கூடியவர்கள் சோதிடர்களே. அவர்களைக் கலந்து ஆலோசித்துத் தொழில் புரியத் தகுந்த காலத்தை அறிந்துகொள்வது தான் நலம்,” என்று இயம்பினர்.

“பழகுவதற்குத் தகுந்தவர்கள் மந்திரிகளே,” என்றார் சிலர். “குருக்களே” என்று வேறு சிலரும், “போர் வீரர்களே” என்று மற்றும் சிலரும், “வைத்தியர்களே” என்று இன்னும் சிலரும் இரண்டாவது கேள்விக்குப் பதில் கூறினர்.

மூன்றாவது கேள்விக்கு விடை அளிக்கையில், “விஞ்ஞான ஆராய்ச்சியே சிறந்த தொழில்,” என்றனர் சிலர். “போரில் வெற்றி மாலை சூடுவதே வாழ்க்கையில் ஒருவன் ஆற்றக்கூடிய சிறந்த தொழில்,” என்பது வேறு சிலர் கருத்தாயிருந்தது. “மதப்பற்றுக் கொண்டு கடவுளைத் தொழுவதே மிக முக்கியமான செயல்,” என்று அறிஞர் அறைந்தனர்.

இந்த விடைகளெல்லாம் அரசருக்குத் திருத்தியை உண்டாக்கவில்லை. அவர் தம் மிடம் வந்த அறிஞர்களைத் தகுந்தபடி உபசரித்து அனுப்பிவிட்டார்.

II

அரசரும் முனிவரும்

நகருக்கு அண்மையிலிருந்த காட்டில் ஒரு துறவியார் வசித்து வந்தார். அவர் அறிவிற்சிறந்தவர். அவரது புகழ் எங்கும் பரவியிருந்தது. அவரது உதவியை நாடினால் தமது எண்ணம் நிறைவேறும் என்று அரசர் எண்ணி , அந்தத் துறவியார் இருக்கும் காட்டிற்குச் சென்றார். அந்தத் துறவியார் எளியவர்களை மட்டுமே வரவேற்று அவர்களிடம் அளவளாவுவார் என்பதை அறிந்த அரசர், தம் மெய்காப்பாளரையும் குதிரையையும் ஓரிடத்தில் நிறுத்தினார். அரசருக்குரிய ஆடைகளைக் களைந்துவிட்டு, எளிய உடை அணிந்து, துறவியாரை அணுகினார். துறவி யார் அச்சமயத்தில் தம் குடிசைக்கு முன்னுள்ள நிலத்தை மண்வெட்டியால் கொத்திப் பண்படுத்திக்கொண்டிருந்தார். அரசர் துறவியாரை வணங்கி நின்றார். துறவியார் புன் முறுவலுடன் அரசரை வரவேற்றுவிட்டு, நிலத்தைப் பண்படுத்தும் தொழிலைத் தொடர்ந்து செய்தார்.

அரசர், “முனி புங்கவரே, நான் உங்களிடம் ஓர் ஆலோசனை கேட்க வந்திருக் கிறேன். ஒருவன் எடுத்த காரியம் பலனளிக்க வேண்டுமானால், அதை ஆரம்பிக்கத் தகுந்த தருணம் எது? எம்மக்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்? மனிதன் ஆற்றவேண்டிய முக்கியத் தொழில் யாது? இவற்றிற்கு விடை அளித்தருளுமாறு உங்களை இறைஞ்சுகிறேன்,” என்றார். துறவியாரோ, அரசருக்கு ஒன்றும் கூறாது தமது தொழிலிலேயே ஈடுபட்டிருந்தார். அவரது உடல் மெலிந்திருந்தது. உடலில் வலுவுமில்லை. அவர் சிறிது நேரம் பூமியைக் கொத்துவதும், பிறகு நின்று களைப்புடன் பெருமூச்சு விடுவதும், மறுபடியும் வேலையைத் தொடங்குவதுமாயிருந்தார்.

இதைக் கண்ட அரசர், “பெரியீர், நீங்கள் சற்று இளைப்பாறுங்கள். நான் உங்களுக்காகச் சிறிது நேரம் கொத்துகின்றேன்,” என்றார். துறவியார் வேந்தரிடம் மண்வெட்டியைக் கொடுத்துவிட்டு இளைப்பாறினார். அரசர் பூமியைக் கொத்திக்கொண்டே யிருந்தார். சிறிது நேரமானதும் அரசர் துறவியாரைத் தாம் கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்குமாறு வேண்டினார். ஆனால், துறவியார் அப்பொழுதும் ஒன்றும் கூறவில்லை; “நீங்கள் களைத்துவிட்டீர்கள். சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்” என்று மண் வெட்டியை வாங்க அரசர்முன் கையை நீட்டினார். ஆனால், அரசர் மண்வெட்டியை அவரிடம் கொடாமல், தாமே வேலையைத் தொடர்ந்து செய்தார். சிறிது நேரம் ஆனதும் அரசர், “நான் கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்காமல் இருக்கிறீர்களே! சூரியன் மறைந்துவிட்டது. நான் ஊருக்குத் திரும்பிப் போக நேரமாகிவிட்டதே!” என்றார்.

துறவியார் அரசரிடமிருந்த மண் வெட்டியைப் பெற்றுக்கொண்டு, “அதோ பாரும்! ஒருவன் நம்மை நோக்கி ஓடி வருகின்றான். அவன் யார் என்பதைக் கவனிப்போம்,” என்றார்.

III

குத்துப்பட்டவனுக்கு உதவி

அரசர் திரும்பிப் பார்த்தார். தாடியை உடைய ஒருவன் தன் அடிவயிற்றைக் கை களால் இறுக அழுத்திக்கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான். அவன் வயிற்றிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அவன் அவர்களிடம் வந்ததும் மயங்கிக் கீழே விழுந்துவிட்டான். அரசர் அவனுடைய உடைகளை நீக்கினார். வயிற்றில் ஒரு பெரிய குத்துக் காயமிருந்தது. அரசர் காயத்தை நன்றாகக் கழுவித் தமது துணியாலும் துறவி யாரின் துணியாலும் காயத்தின் மேல் அழுத்திக் கட்டினார். எனினும், இரத்தம் வடிவது நிற்கவில்லை. அரசர் பின்னும் சில துணிகளாற்கட்டி இரத்தப் போக்கை நிறுத்தினார்; அவன் பருகுவதற்குக் குளிர்ந்த நீரைக் கொடுத்தார்; துறவியார் துணையுடன் காயம் பட்ட அம்மனிதனைக் குடிசையின் உள்ளே எடுத்துச் சென்றார்; வசதியான படுக்கையை அமைத்து அவனைப் படுக்கச் செய்தார். குத்துப்பட்டவனுக்கு வலி சிறிது தணிந்தது. அவன் கண்களை மூடி உறங்கினான். அரசர் நடந்து வந்ததாலும் பகல் முழுவதும் செய்த வேலையாலும் மிகவும் அலுப்படைந்தார். அவர் வாயிலின் அருகிலேயே படுத்து, அயர்ந்து தூங்கிவிட்டார்.

IV

பகைவனுடன் சமாதானம்

அரசர் காலையில் விழித்து எழுந்ததும் தாடி மனிதன் தம்மை உற்று நோக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். தாம் எங்கேயிருக்கிறார் என்பதும் அந்தத் தாடி மனிதன் யார் என்பதும் சற்று நேரம் சென்ற பின்னரே அரசர் நினைவிற்கு வந்தன. அரசர், தன்னைக் கவனிப்பதைக் கண்ட தாடி மனிதன், “அரசரே, என்னை மன்னிக்க வேண்டும்!” என்று தாழ்ந்த குரலில் வேண்டிக் கொண்டான்.

“உம்மை எனக்குத் தெரியவில்லையே! நீர் யார்? உம்மை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்?” என்று அரசர் கேட்டார்.

“நீங்கள் என்னை அறியாவிட்டாலும், நான் உங்களை நன்கு அறிவேன். நான் உங்கள் பகைவன். நீங்கள் என் சகோதரன் சொத்தைப் பறித்துக்கொண்டு அவன் உயிரையும் போக்கினீர்கள். அதற்குப் பழி வாங்க நான் விரும்பினேன். நீங்கள் இன்று துறவி யாரைக் காணத் தனியே சென்றது எனக்குத் தெரியும். நீங்கள் திரும்புகையில் உங்களைக் கொல்ல எண்ணி நான் மறைந்திருந்தேன். ஆனால், சூரியன் மறைந்த பிறகும் நீங்கள் திரும்பி வரவில்லை. எப்படியும் உங்களைக் கண்டுபிடித்துக் கொல்ல உறுதி கொண்டு மறைவிடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். அப்பொழுது உங்கள் மெய்காப்பாளர் என்னைக் கண்டு இன்னானென அறிந்து கொண்டனர். என்னை ஒருவர் கத்தியாற் குத்தினார். நான் அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்தேன். நீங்கள் எனக்குச் சிகிச்சை செய்திராவிட்டால் நான் இறந்திருப்பேன். உங்களைக் கொல்ல எண்ணிய எனக்கு நீங்கள் வேண்டிய பணிவிடைகளைப் புரிந்து என்னைக் காப்பாற்றினீர்கள். நான் செய்த பிழையை நீங்கள் மன்னித்து அருள வேண்டுகிறேன்! நான் உயிருடன் இருப்பேனானால், உங்களுக்கு என் ஆயுள் முழுவதும் உண்மையாக உழைக்கத் தீர்மானித்திருக்கிறேன். என்னை உங்கள் அடிமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். நான் மட்டுமன்றி, என் மக்களும் உங்களுக்கு உண்மையாகத் தொண்டு புரிவார்கள்,” என்று சொன்னான்.

இவ்வளவு எளிதில் பகைவனுடன் சமாதானப்பட்டதோடு அல்லாமல் அவனுடைய நட்பையும் பெற்றது பற்றி அரசர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

அரசர், “நான் உம்மை மன்னித்து விட்டேன். என் வைத்தியர்களைக் கொண்டு உமக்குத் தகுந்த சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கின்றேன். நீர் இழந்த சொத்தையும் உமக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்,” என்று சொன்னார்.

V

துறவியாரின் அறிவுரை

அவனிடம் விடை பெற்ற பின் அரசர் துறவியாரைக் காணச் சென்றார். முன் நாள் பண்படுத்திய பாத்திகளில் துறவியார் விதைகளைத் தூவிக்கொண்டிருப்பதைக் கண்டார்; “பெரியவரே, இறுதியாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். என் வினாக்களுக்கு விடை கூறி உதவி செய்ய மாட்டீர்களா?” என்றார்.

“உம்முடைய வினாக்களுக்கு இதற்கு முன்பே விடையளித்தாகிவிட்டதே!” என்றார் துறவியார்.

“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லையே! நீங்கள் எப்பொழுது, என்ன விடையளித்தீர்கள்? தயவு செய்து கூறுங்கள்,” என்று அரசர் துறவியாரை வியப்புடன் கேட்டார்.

“நீங்கள் எனது பலவீனத்தைக் கண்டு இரங்கி, எனக்காக நிலத்தைக் கொத்தி உதவி செய்தீர்கள் அல்லவா? அப்படிச் செய்யாமல் நீங்கள் உடனே ஊருக்குத் திரும்பிச் சென்றிருந்தால், உங்களை அந்தப் பகைவன் கொன்றிருப்பான். என்னுடன் இங்குத் தங்காமற் போய்விட்டதற்கு நீங்கள் பின்பு வருத்தப்பட்டிருப்பீர்கள். ஆகையால், நீங்கள் நிலத்தைக் கொத்திப் பண்படுத்திய நேரமே சரியான காலமாகும். நானே உங்களுக்கு மிக முக்கியமான மனிதன். எனக்கு உதவி புரிந்ததே நீங்கள் செய்த மிகச் சிறந்த செயலாகும். அடுத்தாற்போலக் குத்துப்பட்ட அந்த மனிதன் உங்களிடம் ஓடி வந்த பொழுது நீங்கள் சிகிச்சை செய்த சமயமே தகுந்த காலமாகும். நீங்கள் அந்தச் சமயத்தில் அவனுடைய காயத்தைக் கழுவிக் கட்டாமலிருந்தால், அந்தப் பகைவன் சமாதானம் செய்து கொள்ளாமலே இறந்திருப்பான். நீங்களும் அந்த அரிய சந்தர்ப்பத்தை இழந்திருப்பீர்கள். அவனே உங்களுக்கு வேண்டியவன்; உற்ற துணைவன். அவனுக்கு உதவி செய்ததே அரிய தொழிலாகும்.

“ஆகையால் அரசரே, நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: ஒரு செயலைச் செய்வதற்குச் சரியான காலம் ஒரே ஒரு சமயந்தான். அதாவது, உடனே அச்செயலைச் செய்துவிட வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நேரிடும் என்பது நமக்குத் தெரியாது. ஒரு காரியத்தைத் தள்ளிவைப்போமானால், நாம் அந்தக் காரியத்தைச் செய்ய இயலாமலே போய்விடும். உம்முடன் யார் இருக்கிறாரோ அவரே உமக்கு முக்கியமானவர். பின்பு நீர் கவனித்தற்குரியவர் ஒருவர் கிடைப்பாரென்பது உறுதியில்லை. உம்முடன் இருப்பவருக்கு நன்மை புரிதலே நீர் செய்யத் தகுந்த முக்கியமான தொழிலாகும். பிறருக்கு நன்மை புரிவதே வாழ்க்கையின் பயனுமாகும்,” என்று. துறவியார் அரசருக்கு அறிவுரை கூறினார்.

– டால்ஸ்டாய் சிறுகதைகள் (ஆறாம் வகுப்புக்குரியது), முதற் பதிப்பு: நவம்பர் 1960, எம்.எஸ்.சுப்பிரமணியம் பிரசுரம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *