கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 3, 2023
பார்வையிட்டோர்: 7,865 
 

அத்தியாயம்-3-4 | அத்தியாயம்-5-6 | அத்தியாயம்-7-8

அத்தியாயம்-5

அனிதாவின் அந்தரங்கமான மெலிதான பவுடர் வாசனை கணேஷின்மேல் பரவி யிருந்தது. அவளைத் தூக்குவது எவ்வளவு சுலபமாக இருந்தது. எவ்வளவு சம்மதமான கனம்… 

‘என்ன சொன்னாய் மோனிக்கா?’

‘இங்கேயே அவள் மயக்கம் தெளியும்வரை இருக்கப் போகிறாயா இல்லை, புறப்பட்டு விடுவாயா?’ 

‘புறப்படுகிறேன்.’

‘நீ இப்போது யார் கட்சி?’

‘இரண்டு பேருமே இப்போது ஒரே கட்சியில் இருக்கிறீர்கள். அது உன் அப்பாவை வெறுக்கும் கட்சி.’ 

‘அனிதா என்னைப் பற்றி என்ன கேட்டாள்?’ 

‘மோனி என்னைப் பற்றி என்ன கேட்டாள் என்று கேட்டாள். நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடித்துச் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றேன். நான் அந்த உயிலை அப்புறம் பார்க்கிறேன்.’

‘இரு. இப்போதே காட்டச் சொல்கிறேன். பாஸ்கர்’

‘இல்லை மோனிக்கா. நான் கோர்ட்டுக்குப் போக வேண்டும். நிச்சயம் வருகிறேன்.’ 

‘பார்த்தாயா, உன் அபிப்பிராயமும் மாறி விட்டது’

‘எனக்கு ஒரு அபிப்பிராயமும் இதுவரை ஏற்படவில்லை.’

‘நான் கொண்டுவிடுகிறேன்.’

ரில் அவள் சாலையில் கவனத்துடன் பேசினாள். ‘கணேஷ், உன் உதவி எனக்குத் தேவையாக இருக்கிறது. நான்தான் உன்னை முதலில் வந்து கேட்டேன். இதை மறக்காதே.’

‘அனிதா மறக்காதே’ என்று எழுதிவிட்டுச் செத்துப்போன ராஜாவின் ஞாபகம் வந்தது கணேஷுக்கு.’

‘மோனிக்கா, நீ உமர் கய்யாம் படித்திருக்கிறாயா?’

‘இல்லை.’

‘அனிதா படித்திருக்கிறாள்.’

‘டோன்ட் டெல் மி. அவள் உன்னுடன் இத்தனை நேரம் உமர் கய்யாமா பேசினாள்?’

‘அவள் தன்னைப்பற்றிச் சில விவரங்கள் சொன்னாள். உன் அப்பாவை மணந்ததற்குக் காரணம் சொன்னாள்.’

‘என்ன காரணமாம்? ப்யூர் லவ்?’

‘இந்த மாதிரி சினிக்கலாகப் பேசுபவர்களுக்கு எதுவும் சொல்லிப் பிரயோஜனமில்லை’.

‘எனக்கு அனிதாவின் சுய சரித்திரம் தேவை இல்லை. அவள் மிக கவர்ச்சிகரமான பெண். ஒப்புக்கொள்கிறேன். துக்கம் வெட்கம் அறியாது என்கிற சாக்கில் தன் உடம்பை அதிகம் காண்பிக்கிறாள். உங்கள் கண்கள் அப்படியே அவளை விழுங்குகின்றன. அவள் ஒரு…..’

அந்த வார்த்தையில் கணேஷ் அதிர்ந்துபோனான். அதுவும் ஒரு பெண் உபயோகிக்கிறாள்! கணேஷ் சொன்னான்: ‘லுக். அவளைப்பற்றி நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள். என் சொந்த அபிப்பிராயத்தின்படி நீ அவளைப்பற்றி நினைப்பதில் பெரும் பகுதி தப்பு. வெறுப்பின் காரணமாக உன் தராதரம் கலைந்திருக்கிறது. அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் இந்த மாதிரி வார்த்தைகளை இனி உபயோகிக்காதே. நியாயமில்லை. நாகரிகமில்லை’.

‘உன்னை அவள் நன்றாக மயக்கியிருக்கிறாள். நீயும் எல்லோரையும் போல் அவள் வலையில் விழுந்துவிட்டாய்.’

‘காரை நிறுத்து. நான் இறங்கிக்கொள்கிறேன்’.

‘கம் ஆன் லவர் பாய். இதற்கெல்லாம் கோபித்துக் கொள்கிறாயே!”

‘நிறுத்தப் போகிறாயா இல்லையா?’

‘நிறுத்த மாட்டேன்’.

கணேஷ் இக்னிஷனை அணைத்து சாவியைப் பிடுங்கினான். இன்ஜின் அணைந்து கார் நின்றது. கதவைத் திறந்து இறங்கிக் கொண்டான். சாவியை உள்ளே எறிந்தான். நடந்தான்.

அவள் அவனுடனேயே மெதுவாகக் கார் ஒட்டினாள். ‘கணேஷ் ஸாரி!’ என்றாள்.

‘முதலில் உன் ஸாரியைச் சரிப்படுத்திக்கொள். டாக்ஸி!’

கணேஷ் அன்றிரவு டைரியில் எழுதினான்.

மோனிக்கா 22 (மன வயது 14) அனிதா 28, எவ்வளவு மா-! இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு சுய சரித்திரங்கள்! பெரியவர் எப்படி இருந்தார்? அந்த இன்ஸ்பெக்டரைச் சந்திக்க வேண்டும். எங்கோ ஒரு தப்பு அந்தக் குடும்பத்தில் அந்தச் சூழ்நிலையில் இருக்கிறது. யாரிடம்? எங்கே? பட்சி சொல்கிறது. தப்பு இருக்கிறது.

அவன் மேலே எழுத யோசித்துக்கொண்டிருந்தபோது அவனது டெலிபோன் மணியடித்தது. ஒரு வாக்கியத்தை எழுதி அடித்து விட்டு எடுத்தான். ‘கணேஷ்!’ என்றான்.

‘கணேஷ்! கணேஷ்! அனிதா பேசுகிறேன். உடனே வாருங்கள். ப்ளீஸ்! ப்ளீஸ்!’ அவள் குரலில் அவ்வளவு பயம் தொனிந்தது.

‘என்ன ஆயிற்று மிஸஸ் ஷர்மா?’

‘என்னைக் கொல்ல யாரோ முயற்சிக்கிறார்கள்’ என்றாள் அனிதா.

கணேஷ் அந்த வீட்டை அடைந்தபோது போர்ட்டிகோவின் அருகிலேயே அனிதா ஒரு ஸ்டூலின்மேல் உட்கார்ந்திருந்தாள். அவள் மிகவும் கலங்கியிருந்தாள்.

‘என்ன ஆயிற்று அனிதா?’

பக்கத்தில் வெள்ளை நாய் குரைத்துக் கொண்டிருந்தது. மற்றவர்கள் ஒருவருமில்லை. மோனிக்கா சினிமாவுக்குப் போயிருக்கிறாள். பாஸ்கர் வீட்டுக்குப் போய்விட்டான். வாசலில் இருந்த சௌகீதாரும் இல்லை என்று தெரிந்துகொண்டான்.

அனிதாவின் கழுத்தில் சிவப்பாக இருந்தது. ரத்தமில்லை. ஆனால் விரல் அழுத்திய அடையாளம், அவளால் சரியாகப் பேச முடியவில்லை. ‘நான் உள்ளே… அந்த வீட்டுக்கு உள்ளே போக மாட்டேன். கணேஷ், என்னை வெளியே அழைத்துச் செல்லுங்கள். நான் ஏதாவது ஹோட்டலில் தங்கிக்கொள்கிறேன். நான் வீட்டுக்கு உள்ளே போகமாட்டேன்’
.
‘என்ன ஆயிற்று? சொல்லுங்களேன்.’

அவள் இரைந்தாள். அவள் பேச்சு சீராக இல்லை. வீட்டில் ஒரு வரும் இல்லை. மீனாட்சியையும் அனுப்பிவிட்டேன். படித்துக் கொண்டிக்கிறேன். ஜன்னல் திறக்கிறது. காற்று என்று தாமதமாகவே திரும்பினேன். அது…அது. அவன் அவன்…நிற்கிறான்!’

‘யார்?’

‘யாரோ, நேராக என்னை நோக்கி வருகிறான். நான் அப்படியே செயலற்றுப்போய் கொஞ்சம்தான் தாமதித்து விட்டேன். உடனே ஓட முடியவில்லை. அதற்குள் அவன் என்னை நோக்கி ஓடிவந்து அப்படியே என் தோளில் கை வைத்து அழுத்தினான். நான் அவனைத் தள்ளினேன். கடித்தேன்.’

அவள் சற்று நேரம் பேசாதிருந்தாள். அவள் கைகளில் வளையல் உடைந்து கீறின காயங்கள் தென்பட்டன. பிறகு தொடர்ந்தாள்.

‘நான் ஒரு அசுரப்பிரயத்தனமாக நழுவ முயன்றேன். என் உடை கிழிந்தது. என்னை மாடிப்படியில் துரத்தினான். ‘உதவி… உதவி!’ என்று கத்தினேன். படிகளில் உருண்டேன். படிகளில் கீழே கிடந்தேன். அவன் அவன்… அவன் படியிறங்கி வரவில்லை. நான் அப்படியே சற்று மயக்கமாகக் கிடந்து சற்று நேரத்தில் விழித்தேன். என் நிலை புரிந்ததும் உடனே உனக்கு டெலிபோன் செய்கிறேன். வெளியே வந்து இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்.’

‘அனிதா, அவன் முகத்தை நீங்கள் பார்த்தீர்களா?’

‘சரியாகப் பார்க்க முடியவில்லை. என் பிரமையும் காரணமாக இருக்கலாம். அவன் கோவிந்தை ஞாபகப்படுத்தினான்.’

‘கோவிந்த்?’

‘என் பிரமையும் காரணமாக இருக்கலாம். கணேஷ், எனக்கு இந்த வீடு வேண்டாம். இந்தச் சொத்து வேண்டாம். நிம்மதி வேண்டும்’.

‘நீங்கள் தனியாக இருப்பது தப்பு. இனி தனியாக இருக்கக் கூடாது. உங்கள் கைக்கீறல்களுக்கு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். வாருங்கள். உள்ளே போகலாம்’.

அவள் மறுத்தாள்.

‘மற்றொரு விஷயம் அனிதா. அவன் உங்களைக் கொல்ல வந்தானா அல்லது உங்களை…’ என்றான்.

‘தெரியவில்லை’ அவள் முதுகு தெரிந்தது. முதுகில் அவள் ரவிக்கை கிழிந்திருந்தது.

‘வாருங்கள், அங்கு போகலாம்’.

‘எங்கே?’

‘உங்கள் அறைக்கு.’

‘நான் வரவில்லை.’

‘சரி, நான் போகிறேன்’ என்று மேலே சென்றான்.

அவள் கூப்பிட்டாள். ‘நானும் வருகிறேன். எனக்குக் கீழே தனியாக இருக்கப் பயமாக இருக்கிறது’.

மேலே ஒரு ஸ்டூல் உருண்டோடியது. ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்திருந்தது. ஒரு முத்துமாலை சிதறி இருந்தது.

விளக்குகளையும் போட்டான். தேடினான். திறந்திருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். திரைகளை விலக்கிப் பார்த்தான்.

வெளியே இருட்டாக இருந்தது. தூரத்தில் பாலம் விமான நிலையத்தில் இறங்கும் முஸ்தீபாக ஒரு விமானத்தின் வால் விளக்கு பளிச் பளிச் என்று சிவப்பு காட்டியது. இறக்கை நுனியில் இருந்த பச்சை விளக்கு, வயிற்றில் இருந்த விளக்குக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தது.

இருள். வந்தவன் யார்? திரும்பினான். அனிதா தன் கைக் காயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘மருந்து அலமாரி எங்கே இருக்கிறது?’ என்றான்.

அவள் காட்டினாள். அதை அடைந்து பஞ்சை எடுத்தான், ஸாவ்லான் எடுத்தான்.

அவளை உட்காரவைத்து, பஞ்சை மருந்தில் நனைத்து அந்தக் கீறல்களைச் சுத்தம் செய்தான். எவ்வளவு பரிதாபத்துக்குரியவள் இவள்!

அவள் தலை குனிந்திருந்தது. மிகவும் பிரயத்தனத்துடன் அழுகையை அடக்கிக்கொண்டிருக்கிறாள். ஒரு உபசார வார்த்தையில் மடைதிறந்தாற்போல் அழுது விடுவாள், ஜாக்கிரதை. கணேஷ் பேசவில்லை.

‘நீங்கள் நிச்சயம் அது கோவிந்தாக இருக்க முடியும் என நம்புகிறீர்களா?’

‘இல்லை, எனக்கு என்னவோ அப்படித் தோன்றியது. அவ்வளவுதான். என் பயத்தில் பதற்றத்தில் எனக்குச் சரியாக ஒன்றுமே தெரியவில்லை.’

‘உங்களை ஏன் அவன் விட்டுவிட்டான்?’

‘என் நாய் கன்னா பின்னா என்று குரைத்தது காரணமாக இருக்கலாம்.’

கணேஷ் மறுபடி ஜன்னலருகில் சென்றான். எதிரே இருட்டில் சலசலக்கிறதே அது என்ன? அல்லது யார்? அல்லது அது என் மனப் பிரமையா? இப்போது என்ன செய்வது?

‘மோனிக்கா எப்போது வருவாள்?’

‘என்னிடம் சொல்லவில்லை. எனக்குத் தெரியாது’.

‘நீங்கள் சில தினங்களுக்காவது அந்த மீனாட்சியை அருகில் வைத்துக்கொள்வது நல்லது.’

‘இல்லை, நான் இந்த வீட்டை விட்டுவிட்டுப் போகிறேன். இன்றே இப்போதே’.

‘இப்போது நீங்கள் செல்வதற்கு ஒரு இடமும் கிடையாது. மோனிக்கா வரும்வரை நான் இருக்கிறேன். சாப்பிட்டீர்களா?’

‘இல்லை, நீங்கள்?’

‘நான் சாப்பிட்டுவிட்டேன்’.

‘எனக்குப் பசியில்லை’.

பயப்பட்டிருக்கிறாள்.

‘உட்காருங்கள்’ என்றாள்.

உட்கார்ந்தான். ‘நீங்கள் உடை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றான்.

‘அந்த அறைக்குப் போக எனக்குப் பயம்’.

அவன் பதில் சொல்லவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அதில் கேள்வி பதில் விளக்கம் எல்லாம் இருந்தது.

‘கணேஷ், அந்தக் கதவைச் சாத்துங்கள்’ என்றாள்.

ஜன்னல் கதவை மூடினான்.

‘அதில்லை, அறைக் கதவு’.

‘கணேஷ், அந்த விளக்குகளை அணையுங்கள். எல்லா விளக்குகளையும்.’

உடன்பட்டான்.

மோனிக்கா வந்தபோது கணேஷ் ஹாலில் உட்கார்ந்து ஒரு பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான். இரவுதான். அதே இரவு தான்.

‘ஸர்ப்ரைஸ்! வாட் ப்ரிங்ஸ் யூ ஹியர்?’

‘உனக்காக எத்தனை நேரம் காத்திருப்பது? என்ன சினிமா?’

‘ஸம் ஸில்லி மூவி. அதிருக்கட்டும். நீ என்னைத் தேடிக் கொண்டா வந்தாய்?’

‘ஆம்’.

மோனிக்கா, ‘அனிதா எங்கே?’ என்றாள்.

‘நான் பார்க்கவில்லை. நான் வந்தபோது இங்கு உட்கார்ந்திருந்தாள். உன்னைக் கேட்டேன். வெளியே போயிருக்கிறாள், உட்கார்’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள். அவளுக்கு உடம்பு சரியில்லையா?’

‘யார் கண்டார்கள்? என் மேல் கோபமெல்லாம் போய்விட்டதா?’

‘உன்மேல் எனக்குக் கோபமில்லை.’

‘அதுதான் காரிலிருந்து இறங்கி ஓடினாயா?’

கணேஷுக்குப் பதில் சொல்லும் சிரத்தை இல்லை. அவனிடம் ஒருவித குற்ற உணர்ச்சியும் இருந்தது. சற்றுமுன் நடந்ததை நினைத்துப்பார்க்கும்போது சந்தோஷத்தின் ஓரத்தில் அந்தக் குற்றம் ஜரிகையிட்டது.

அனிதா எப்படிப்பட்டவள்? பயப்பட்டவள். என்னை நாடும் கொடி. எவ்வளவு அழகான கொடி! என்னை எதற்காக நாடினாள்? எவ்வளவு இயல்பாக ஒரு மலர் மலர்வதுபோல் விரிந்தது அந்த அனுபவம்! அனிதா, உன்னை என் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன். உன்னைக் கரம் பற்றுகிறேன். உன்னை நான் மணக்கப் போகிறேன். அனிதா என்னை நீ மணப்பாயா?

‘கணேஷ்! கணேஷ்!

‘எஸ், மோனிக்கா.’

‘நீ சாப்பிட்டாகி விட்டதா?’

‘ஆம்.’

‘அப்படி என்றால் வா, நேரு பார்க்வரை போகலாம்.’

‘எதற்கு?’

‘தனியாகப் பேசுவதற்கு.’

கணேஷ் தனிமையை விரும்பவில்லை. தனிமைக்கு அவன் பயந்தான். மோனிக்காவிடம் பொய் சொல்கிறேன். மோனிக்கா விடம் தப்பிக்க விரும்புகிறேன். எப்படித் தப்பிக்கப் போகிறேன்? அந்த ரகசியம் மார்பில் ஓடுகிறது. அனிதா மேலே இருக்கிறாள், தனியாக. அவளைத் தனியாக விடக்கூடாது… ‘மோனி, நான் ஒன்று கேட்பேன். தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டாயே?’

‘சொல்.’

‘இரவு வெகு நேரமாகிவிட்டது. நான் இரவு இங்கேயே படுத்திருந்துவிட்டுப் போகிறேன். இதோ, இந்த சோபாவிலேயே. ஒரு புத்தகம் கொடு. எனக்கென்னவோ உன் மாதிரிப் பெண் இந்த வீட்டில் தனியாக இருப்பதில் அபாயம் இருக்கிறது என்று படுகிறது. அதுவும் உன் அப்பா இறந்துபோன வினோதச் சூழ்நிலையில், நீ என் க்ளையண்ட் என்கிற ரீதியில் உன் பத்திரமும் எனக்கு முக்கியம். அதனால்தான் உன்னைத் தேடி வந்தேன். நீ இம்மாதிரி தனியாகச் சுற்றுவது சில நாட்களுக்கு நல்லதல்ல. நான் சொல்வதைச் சில நாட்களுக்காவது கேட்கவேண்டும். கேட்டு அதன்படி நடக்கவேண்டும். வித்தியாசமாக எண்ணிக் கொள்ளாதே’.

எவ்வளவு பொய்கள்!

மோனிக்கா, ‘கணேஷ், நீ நிஜமாகவே ஒரு ஜெம்’ என்றாள். ‘இரு, உனக்கு ஒரு படுக்கை கொண்டுவந்து தருகிறேன். நீ இருக்கும் வரை இரு. எனக்குக் கவலை கிடையாது. ஆயிரம் அனிதாவைச் சமாளிப்பேன்.

என்னால் ஒரு அனிதாவைச் சமாளிக்க முடியவில்லையே.

புத்தகங்கள் கொண்டுவந்தாள். படுக்கை கொண்டுவந்தாள். ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீர் கொண்டுவந்தாள். பாத்ரூமுக்கு வழி சொன்னாள். ஏதாவது வேண்டுமென்றால் கேட்கச் சொன்னாள். அவன் வந்தனம் சொன்னான். அவள் ஆவலுடன் பேச விரும்பினாள். கணேஷ் தூக்கத்தைக் காட்டினான். அவள் என்ன என்னவோ பேசி விட்டு ஒரு வழியாக அவனை விட்டாள்.

அனிதாவுக்கு இதெல்லாம் கேட்டிருக்குமா?

கணேஷ் படிக்க முயன்றான். விளக்கை அணைத்தான். படுத்தான்.

மோனிக்கா தன் அறையில் பல் தேய்ப்பது கேட்டது. பாடுவது கேட்டது. பாட்டை நிறுத்துவது கேட்டது. நடப்பது, நிற்பது, ஜன்னலைத் திறப்பது… தயங்குவது, யோசிப்பது, தைரியம் பெறுவது, ‘கணேஷ்!’ என்று கூப்பிடுவது.

கணேஷ் பதில் சொல்லாமல் கண்ணை மூடிக்கொண்டிருந்தான். ஏனென்றால் அவள் கூப்பிட்ட விதம் சற்று அபாயம் கலந்திருந்தது. அவனுக்கு அபாயம்!

இரவு ஏன் விழித்தான்? அதைப்பற்றி அவன் பிற்பாடு யோசித்ததில் கடவுள்தான் அவனை எழுப்பியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

எழுந்தவுடன் அவன் உடம்பு முழுவதும் பரபரத்தது. மிக அருகே ஒருவன் நின்றுகொண்டிருந்தான். இருட்டில் அவனைத் தெரிய வில்லை. அவன் நல்ல உயரமாக இருந்தான்.

கணேஷ் தன் மூச்சை அடக்கிக்கொண்டான். அவன் நிதானமாக கணேஷை அணுகி நிதானமாக வலது கையைத் தூக்கி…

என்ன வைத்திருந்தான் கையில்? ஒரே போடு…

கணேஷ் உருண்டு தப்பித்துவிட்டான். உடனே அவன் கால்களைப் பற்றி இழுத்தான். இருவரும் இருளில் தரையில் விரித்திருந்த கம்பளத்தில் மௌனமாக உருண்டார்கள். குத்து மதிப்பான சண்டை. அவன் மூச்சு கேட்டது. கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் கணேஷ் விட்ட குத்து ஒழுங்காக அவன்மேல் பட்டு கணேஷின் முட்டி மிக வலித்தது. அவன் தப்பியோடப் பார்த்தான். கணேஷ் அதற்குள் அவனை மிதித்தான். மெல்ல அருகில் அவன் தென்பட, கணேஷ் ஸ்விட்சை நோக்கி உடனே ஓட, அவன் தடுத்து அவனை வீழ்த்தினான். வீழ்த்தி பூட்ஸ் காலால் அவனை உதைத்தான். கணேஷ் அடுத்த உதையில் அவன் பூட்ஸைப் பற்றிக்கொண்டு ஆக்ரோஷமாகத் திரும்பினான். அவனுக்கு வலித்திருக்க வேண்டும். ஆனால் கத்தவில்லை. ஒரு கடைசி முயற்சியாக அந்த ஆயுதத்தை மறுபடி கீழ்நோக்கி அடித்தான். பட்டது நாற்காலியில். கணேஷ் விலகிவிட்டான். அவன் யார்? அவன் யார்? விளக்கைப் போடவேண்டும். கணேஷ் ஓடிப்போய் விளக்கைப் போட்டபோது அவன் இல்லை. கீழே ஒற்றை பூட்ஸ் கிடந்தது.

மிகவும் மௌனமாக இருந்தது. அவன் சட்டையில் ரத்தக்கறை தெரிந்தது. தன் முகத்தைத் தடவி அடிபட்ட இடத்தைத் தேடினான். அவர்கள் இருவரும் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தூக்கம் கலையவில்லை. ஏர்கண்டிஷனருக்காக அடைத்திருந்த அந்தப் படுக்கை அறைகளில் சப்தம் கேட்டிருக்காது.

நான் என்ன காவலாளி?

அனிதாவைப் பற்றி மிகவும் கவலைப்பட்டான். மெதுவாக மாடி ஏறிச்சென்று மெதுவாக அந்த அறையைத் தட்டினான். ‘அனிதா! என்று கூப்பிட்டான்.

மூன்றாம் தரம் தட்டியதும், ‘யார் அது?’ என்று பயம் கலந்த கேள்வி வந்தது.

‘கணேஷ்! என்றான்.

சற்று நேரத்தில் கதவு திறந்தது. அனிதா நைட் கவுனில் இருந்தாள்.

‘அனிதா, உங்களுக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லையே?’

‘ஒன்றுமில்லை. நான் எல்லாக் கதவுகளையும் உள்ளே மூடிக்… மை காட்! நெற்றியில் என்ன ரத்தம்?’

‘என்னை ஒருவன் தாக்க முயன்றான். நாங்கள் சண்டையிட்டோம். பெரும்பாலும் அவன் ரத்தம்!’

அனிதா ஒரு விளக்கைப் போட்டு, ‘அந்தக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றாள்.

நெற்றியில் அவன் எதிர்பார்த்ததை விடப் பெரிதாகக் காயம் பட்டிருந்தது.

அனிதா மருந்து கொண்டுவந்தாள். அவனை உட்கார வைத்து அந்தக் காயத்தைச் சுத்தப்படுத்திக் கட்டினாள். ‘கணேஷ், ஆர் யூ ஆல்ரைட்?’

‘அனிதா, தாங்க்ஸ்!’ என்று அப்படியே தலையைப் பின்புறம் சாய்த்து அவளைப் பார்த்தான். அவள் மெல்லிய கவுனின் ஊடே அவள் மார்பு தெரிந்தது. அவன் முகத்தை மறைத்தது.

‘மன்னிக்கவும். உங்களைக் காப்பாற்றுதவற்கு பதில் உங்க ளிடமே சிகிச்சை பெறுகிறேன். ஆனால்…’

‘இந்தச் சிகிச்சைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சண்டை யிடலாம்’

அனிதா, ‘ஐம் ஸாரி! சரியான அடி!’ என்றாள்.

கணேஷ் மறுபடி கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். சற்றுப் பெரிதாகவே கட்டிட்டிருந்தாள்.

‘தூக்க மாத்திரை வேண்டுமா?”

‘வேண்டாம். நான் காவல் காக்கவேண்டியவன். ஞாபகம் இல்லையா?’

‘இன்று காவல் போதும்’ என்றாள்.

‘இல்லை, நான் இன்று விழித்திருக்க வேண்டும். எனக்கு தூக்கம் இனி வராது’.

‘அப்படியானால் இங்கேயே இருங்கள், எனக்குத் துணையாக.’

‘இருக்கிறேன் அனிதா உங்களுக்கு… உனக்குத் துணையாக. எப்போதும் துணையாக. எப்போதும்.’

அவன் நிமிர்ந்து அவளைப் பற்றித் திருப்பினான்.

அத்தியாயம்-6

‘ம்ஹும்’ என்றார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ். ‘கோவிந்த் இன்னுமா அகப்படவில்லை?’ என்ற கணேஷின் கேள்விக்கு.

‘நீங்கள் லாயர்?’

‘ஆம், அந்தக் குடும்பத்தின் லாயர்.’

‘அவர்கள் அந்தக் கோவிந்த் என்பவனைப் பற்றிக் கொடுத்த வர்ணனை போதாது. நடுத்தர உயரம். கோதுமை நிறம். காக்கிச் சட்டை – இதெல்லாம் என்ன வர்ணனை?’

‘போட்டோ?’

‘போட்டோவுக்காக மிகவும் முயன்றேன். கிடைக்கவில்லை.’

‘நெற்றியில் என்ன காயம்?’

‘இடித்துக்கொண்டுவிட்டேன்.’

‘எங்கே?’

கணேஷ் பதில் சொல்லவில்லை.

‘அந்த கோவிந்த் எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொண்டீர்களா?’

‘அந்த விவரமும் கொஞ்சம்தான் கிடைத்தது. மற்ற வேலைக்காரர்கள் போலீசுடன் பேசவே பயப்படுகிறார்கள். தங்களை அந்தக் கொலையுடன் சம்பந்தப்படுத்திவிடுவார் களோ என்கிற அச்சம். அதில் சந்தேகமில்லை என்று எல்லோரும் நம்புகிறார்கள். அவன் அவருடன் போயிருக்கிறான். அவரிடமிருந்த பணம் காணோம். அவர் கொலையுண்டிருக்கிறார். அவனைக் காணோம்… ஆனால்…’

‘ஆனால்?’

‘அந்த கேஸில் சில விஷயங்கள் உறுத்துகின்றன. சிகரெட் பிடிப்பீர்களா?’

‘தாங்க்ஸ்.’

10.15-லிருந்து 10.16 வரை சிகரெட் பற்றவைக்கும் சம்பிரதாயத்தில் கலைந்தது.

‘சொல்லுங்கள்’ என்றான் கணேஷ்.

‘முதலில் உங்கள் இன்ட்ரெஸ்ட் இதில் என்ன?’

‘அந்தக் குடும்பத்தின் லாயர் என்கிற முறையில் போலீசுக்கு முடிந்தவரை உதவுவது.’

‘உங்களுக்கு ஏதாவது புதிதாகத் தகவல்கள் தெரியுமா மிஸ்டர் கணேஷ்’

‘உங்கள் விசாரணை எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பதைப் பொருத்தது’.

ராஜேஷ் சாம்பலைத் தட்டினார்.

‘அதிகமில்லை, கோவிந்தனின் வர்ணனை உள்ள ஒருவன் அகப்பட்டான். அது அவனில்லை என்று தெரிந்தது. மேலும் இந்த மாதிரி திடுக்கிடும் கொலை செய்பவன் ஒருவித பாட்டர்னில் செய்வான். சில தினங்கள் தலைமறைவாக இருப்பான். தன் சொந்த ஊருக்குச் செல்வான். ஒரு நகரத்தில் மறைவான். திருடிய பணத்தைச் செலவழிக்க அவன் தன் மட்டத்துக்கு வரும்போது தான் அவன் அகப்பட வாய்ப்பு இருக்கிறது. கன்னாபின்னா என்று சம்பந்தமில்லாமல் வாங்கித் தீர்ப்பான். அதிகப் பணம் அகப்பட்டால் அதைச் செலவழிக்கவும் ஒரு வேண்டுமே?’

‘அந்தக் கேஸில் சில விஷயங்கள் உறுத்துகின்றன என்கிறீர்களே?’ என்றான் கணேஷ்

‘ஆம், முதலில் ஒரு முழு நாள். ஷர்மாவும் கோவிந்தும் புறப்பட்டுச் சென்றது புதன். பாடி கிடைத்தது வெள்ளி மாலை. டாக்டர்கள் கணக்கிட்டபடி அவர் இறந்தது வெள்ளி காலை அல்லது வியாழன் சாயந்திரம். ஒரு முழு தினம் நடுவில் உதைக்கிறது. இன்னொன்று, ஷர்மா உடல் கிடந்த ரிட்ஜ் ரோடுக்கும் அவர் தன் வீட்டிலிருந்து ஹிஸ்ஸார் போகும் பாதைக்கும் சம்பந்தமும் இல்லை. இரண்டாவது, ஷர்மாவின் உடலில் நாங்கள் பார்த்த சாட்டையடிக் காயங்கள். சாதாரணத் திருட்டாக இருந்தால் சாட்டையடி எதற்கு?’

‘சாட்டை அடியா?”

‘ஆம், உடம்பு முழுவதும், ஆனால் நாங்கள் விசாரித்தவரையில் அந்த வேலைக்காரன் கோவிந்த் நல்லவன். அடக்கமானவன். குடும்பத்துடன் இருபது வருஷமாக இருப்பவன்.’

‘அப்படியானால் அந்த கோவிந்தைத் தேடுவதை விட்டு விடுங்கள். இந்தக் கொலையில் விடை, ஷர்மாவின் அந்தரங்க வாழ்க்கையில் இருக்கலாமல்லவா? அதைத் துருவுங்கள்.’

‘அவர் பிஸினஸ் வாழ்க்கையில் அவருக்கு எதிரிகள் இருப்பதாகத் தென்படவில்லை. அவர் எவரையும் ஏமாற்றவில்லை. கடும் உழைப்பால் சம்பாதித்திருக்கிறார். அவர் குடும்ப வாழ்க்கை இங்கும் பொதுவாக நேராகத்தான் இருக்கிறது. இளவயதிலேயே மனைவியை இழந்திருக்கிறார். பிறகு மறு மணம். அதுவும் அழகான இளம் பெண்ணுடன்… சரி, நீங்கள் வந்தது?’

‘ஷர்மாவின் உயிலில் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது. எனக்கு ஒரு டெத் சர்டிபிகேட் வேண்டும். அதற்காகத்தான் வந்தேன்… சவுக்கடி என்றா சொன்னீர்கள்?’

‘ஆம். தழும்புகள், வீறல்கள், ஏன்?’

‘யாரோ தண்டனை கொடுத்திருக்கிறார்கள் ஷர்மாவுக்கு…’

‘ஏன்?’

சற்று யோசித்துவிட்டு கணேஷ் சொன்னான். ‘நன்றி இன்ஸ்பெக்டர்! எனக்கு ஏதாவது யோசனை தெரிந்தால் நிச்சயம் உங்களுக்குச் சொல்கிறேன்.’

‘எனக்கு அந்த கோவிந்தனின் புகைப்படம் எப்படியாவது வேண்டும்’.

‘முயற்சிக்கிறேன், வருகிறேன்.’

கணேஷ் அனிதாவுக்கு போன் செய்த போது பாஸ்கர் டெலிபோனில் வந்தான். அனிதா தூங்குவதாகச் சொன்னான். பாஸ்கர் டெலிபோனை வைக்குமுன், ‘ஒரு நிமிஷம் மிஸ்டர் பாஸ்கர்’ என்றான் கணேஷ்.

‘எஸ்.’

‘நேற்று இரவு நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?’

‘வீட்டில் இருந்தேன் ஏன்?’

‘நான் உங்களை வந்து பார்க்கலாமா? கொஞ்சம் பேசவேண்டும்.’

‘இன்று நான் சற்று பிஸி. நாளை வைத்துக் கொள்ளலாமே?’

‘சரி, நான் நாளை வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு உடனே அந்த வீட்டுக்கே கிளம்பினான் கணேஷ். காரை மிக வேகமாக ஓட்டினான். தூள் பறந்தான். பதினைந்து நிமிஷத்தில் வஸந்த் விஹார் வீட்டை அடைந்தான். சப்தமிடாமல் நடந்தான். உள்ளே நுழைந்தான்.

பாஸ்கர் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ‘நாளை வருகிறேன் என்றல்லவா சொன்னீர்கள்?’

‘இன்றே வந்துவிட்டேன்… ஏன் நொண்டுகிறீர்கள் பாஸ்கர்? காலில் என்ன?’

‘பஸ் ஏறும்போது ஸ்லிப் ஆகிவிட்டது. சுளுக்கு’.

‘பார்த்து ஏறவேண்டாம்?”

‘ஹலோ லவர் பாய்!’ மோனிக்கா மினி ஸ்கர்ட் அணிந்திருந்தாள். மெலிதான கட்டம் கட்டமான ஷர்ட் அணிந்திருந்தாள். தலை மயிரைக் கொஞ்சம் கவனித்திருந்தாள்.

படிகளில் ஒயிலாக இறங்கி வந்தாள். கணேஷ் படிகளை நெருங்கினான். தோள்களின் மேல் கைவைத்து அவனைப் பிடித்துக் கொண்டு கடைசிப் படிகளைக் குதித்தாள். அவள் மினி ஸ்கர்ட் ஒரு தடவை உயர்ந்தது. அவள் தொடைகளில் மின்னலடித்தது.

‘கணேஷ், நீ ட்விஸ்ட் ஆடுவாயா?’

‘ம்ஹும்’.

‘ஜெர்க்? ஷேக்? மின்க்கி?’

‘எனக்குத் தெரிந்ததெல்லாம் கைச்சண்டை, ஜுடோ, கராத்தே’ என்றான் கணேஷ் பாஸ்கரைப் பார்த்துக்கொண்டே.

‘நெற்றியில் என்ன காயம்?’

‘நேற்று ஒரு ஆளுடன் சண்டை போட்டுப் பழகினேன்’.

‘சண்டை’

‘ஆம்!’

‘யூ மீன் ஃபிஸ்டிகஃப்ஸ், ஹாலிவுட் படங்கள் போல’.

‘எக்ஸாக்ட்லி’

‘எதற்கு?’

‘சும்மா! வெறும் தேகப்பயிற்சிக்காக!’

‘நீ வினோதமான ஆசாமி! என் உயில் விஷயம் என்ன ஆச்சு?’

‘கவனித்துக் கொண்டிருக்கிறேன். அனிதா எங்கே?’

‘குளிக்கிறாள். சற்று நேரம் காத்திருந்தால் உடை உடுத்திக் கொண்டு வந்துவிடுவாள்’.

‘ஹலோ மிஸ்டர் கணேஷ்!’

மேலே பார்த்தான்.

‘வந்துவிட்டாள்’ என்றாள் மோனிக்கா.

மோனிக்கா, பாஸ்கர், அந்த வீடு, அந்தக் கொலை, அந்த கோவிந்த் எல்லாம் முக்கியமில்லாமல் போய்விட்டது!

அனிதா முதல் தடவையாக தன்னைச் சற்று அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கணேஷின் பார்வையும் அவள் பார்வையும் சந்தித்துக்கொண்டன. அந்தப் பகிர்ந்த ரகசியத்தில் சந்தோஷம் கொண்டன.

அனிதா அப்போதுதான் குளித்திருந்தாள் என்பது அவளது மலர் போன்ற புதுமையும் மென்மையும் நீர்த்திவலைகளும் தெரிந்த முகத்தில் புலப்பட்டது.

‘அனிதா, எப்படி இருக்கிறீர்கள்?’ என்றான் கணேஷ்.

‘கொஞ்சம் பரவாயில்லை. ‘

‘உனக்கு என்ன அனிதா?’ இது மோனிக்கா.

‘நேற்று யாரோ ஒரு அன்னியன் என்னைக் கொல்ல முற்பட்டான். லாயர் கணேஷ் வரவில்லை என்றால் பயத்திலேயே இறந்திருப்பேன்!’

‘என்ன!’ என்றாள் மோனி. அவள் சண்டைக்குத் தயாராகிறாள் என்பது அந்த வார்த்தையை அவள் உச்சரித்த தோரணையில் இருந்து தெரிந்தது. ‘கணேஷ்! என்னிடம் நீ இதை ஏன் சொல்ல வில்லை? என்னிடம் நீ என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்?’

‘உன் நல்லதுக்குத்தான்’ கணேஷ் அசட்டுத்தனமாகச் சிரித்தான்.

‘யூ ரேட்! யூ பாஸ்டர்ட்! யூ டபிள் கிராஸிங் ஸ்டிங்கிங் ஸ்டுபிட்!’ மோனிக்கா அமெரிக்க பாணியில் சரளமாகத் திட்டிவிட்டு அவன்மேல் ஒரு கண்ணாடி ஜாடியைப் பொறுக்கி எறிந்துவிட்டு விருட்டென்று வெளியே சென்றாள். போகும்போது, ‘நான் உன்னை டிஸ்மிஸ் செய்து விட்டேன். உனக்கும் எனக்கும் சம்பந்தம் ஏதும் கிடையாது. வி ஆர் க்விட்ஸ்!’ என்றாள்.

கணேஷ் அனிதாவைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்தாள்.

‘மேலே வாருங்கள்’ என்றாள் அவள்.

அவளுடன் அவன் சென்றான். உட்காரச் சொன்னாள். ‘மோனிக்கா ஏன் கோபித்துக்கொண்டாள்?’

‘நான் வந்தது அவளுக்காகத்தான் என்று அவள் எண்ணுமாறு நேற்று பொய் சொல்லியிருந்தேன். இன்று நீ குட்டை உடைத்து விட்டாய்!’

‘கணேஷ், எதற்குப் பொய் சொல்லவேண்டும் நீங்கள்? எதற்காக என்னுடன் இருக்கப் பயப்படவேண்டும்?’

‘அனிதா, நான் உன்னை இந்தக் கணமே மணக்க விரும்புகிறேன்’ என்றான் கணேஷ் திடீரென்று.

‘நான் மற்றொரு திருமணத்துக்கு இன்னும் தயாரில்லை. கணேஷ்! நான் முதலில் என் செல்வத்தை எல்லாம் துறக்க வேண்டும். நான் ஏழையாக வேண்டும்… எனக்கு மன நிம்மதி வேண்டும். அதிருக்கட்டும். நீங்கள் ஏன் பாஸ்கரைச் சந்தேகிக்கிறீர்கள்?’

கணேஷ் உட்கார்ந்தான். ‘நான் பாஸ்கரை சந்தேகிக்கிறேன் என்று ஏன் நினைக்கிறீர்கள்?’

‘நீங்கள் பாஸ்கரைக் கேட்ட கேள்விகள் எனக்குக் காதில் விழுந்தன.’

‘அனிதா, உங்கள் கணவர் இறந்த முறையில் ஒரு மர்மம் இருக்கிறது. உங்கள் நலனிலும் பாதுகாப்பிலும் எனக்கு அக்கறை உண்டு. உங்கள் கணவர் இறந்த பத்து நாட்களுக்குள் உங்களையும் தாக்க முயற்சிக்கிறார்கள். உங்கள் கணவனைக் கொன்றவன் வேலைக்காரன் கோவிந்த் என்று வைத்துக் கொள்வோம். பணத்துக்காக அவரைக் கொன்றான் என்றால், உங்களையும் என்னையும் கொல்ல முயற்சிக்கக் காரணம்? மேலும்…’ கணேஷ் தயங்கினான். சொல்லலாமா வேண்டாமா என்று.

‘மேலும்?’

‘உங்கள் கணவர் இறந்த விதம் அவ்வளவு சிம்பிளானதல்ல.’

‘ஏன்?’

‘அவர் உடம்பில் சாட்டையடிக் காயங்கள் இருந்தனவாம்.’

‘காட்! யார் சொன்னார்கள்!’

‘இன்ஸ்பெக்டர் ராஜேஷ்’.

‘அவர் என்னிடம் இதைச் சொல்லவில்லையே! சவுக்கடியா!’

‘நீங்கள் உங்கள் கணவரின் உடலைப் பார்த்தீர்களே? கவனிக்க வில்லையா?’

‘ஷர்ட் அணிந்திருந்ததால் முகத்தைப் பார்த்தேன். நான் அவரை அதிக நேரம் பார்க்க விரும்பவில்லை’.

‘புரிகிறது’.

‘கணேஷ், என்னை யார் கொல்ல விரும்புகிறார்கள்?’

‘நீங்கள் இறந்துவிட்டால் லாபமடையக் கூடியவர் யார்?’

‘ஓ! நோ! மோனிக்கா ஒருத்திதான்!’

‘என்று… உயில் சொல்கிறது. ஆனால் மோனிக்கா இல்லை அது. இஃப் ஐ நோ மோனிக்கா!’

‘எனக்கும் அவளைத் தெரியும். நிச்சயம் அவளில்லை.’

‘பின் யார்?’

‘கண்டுபிடித்துச் சொல்கிறேன். நான் கொஞ்சம் சோம்பேறி. ஆனால் எனக்கு ஒரு பிரச்னையில் சுவாரஸ்யம் ஏற்பட்டுவிட்டது என்றால் பதில் தெரியும்வரை அதை விடமாட்டேன். இதில் எனக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டுவிட்டது. நான் நேற்று அடிபட்டு இறந்திருப்பேன். என் சகேள்விக்கு ரியான பதில் சொல்லுங்கள். இந்த பாஸ்கர்… இவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’

‘மிகவும் திறமை உள்ளவன்; ஆனால் கோழை. சற்றுப் பயந்தவன். கொலைக்கும் அவனுக்கும் சம்பந்தமே இருக்க முடியாது’

‘கோவிந்த்?’

‘அவன் அவருடனேயே இருந்தான்.ஒரு விதமான மெய்க் காப்பாளன் மாதிரி. அவனை நான் அதிகம் கவனித்ததில்லை. இன்னும் உங்கள் ஸிஸ்டில் யார் யார் இருக்கிறார்கள்?’

‘வேறு சிலர் – பெயரில்லாதவர்கள், பெயர் உள்ளவர்கள்…’

‘நான் அதில் இருக்கிறேனா?’

கணேஷ் புன்னகைத்தான். ‘அனிதா, என்ன இது, உங்களை நான் சந்தேகப்படுவேனா? உங்களுக்காகத்தான் உங்கள் பத்திரத்துக்காகத்தான் நான் இவ்வளவு பாடுபடுகிறேன்.’

கணேஷ் கீழே இறங்கியபோது பாஸ்கர் நின்று கொண்டிருந்தான். ‘பாஸ்கர், நான் உங்களை நேராக ஒரு கேள்வி கேட்கிறேன். நேராகப் பதில் சொல்லவேண்டும்’.

பாஸ்கர் மௌனமாக இருந்தான்.

‘நேற்று என்னைத் தாக்க முயற்சித்தது நீங்கள்தானே?’

‘இல்லை. நீ ஒரு மிக மோசமான அமெச்சூர். நீ நிறைய விஷயங்களைக் கற்பனை செய்துகொள்கிறாய்?’

‘நேற்று இரவு நீ எங்கிருந்தாய்?’

‘எங்கள் கிளப்பில் சீட்டாடிக்கொண்டிருந்தேன். எட்டு பேர் பத்து பேர் சாட்சிகள் இருக்கிறார்கள். ஆனால் நீ யார் என்னைக் கேட்க? உனக்கு நான் எந்த விதத்திலும் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் அல்ல.’

‘பாஸ்கர், ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். என் பெயர் கணேஷ். கணேஷை அடித்துவிட்டுத் திரும்பப்பெறாமல் இதுவரை எவரும் தப்பித்ததில்லை.’

‘என் பெயர் பாஸ்கர். என்னை முட்டாள்தனமாகச் சந்தேகிப்பவர்கள் கடைசியில் துக்கமடைவார்கள்’.

‘அனிதாவை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்’.

‘நீதான் இருக்கிறாயே. பிஸ்கட் போட்டால் உடனே ஓடிவந்து கவ்வித் தின்ன!’

அவன் அந்த வாக்கியத்தை முடிப்பதற்குமுன் பாஸ்கர் தாடையில் அடிபட்டான். அவன் கண்ணாடி எகிறி விழுந்தது.

பாஸ்கர் தன் தாடையைத் தடவிக்கொண்டான். வாயில் ஒற்றி ரத்தம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டான். அப்புறம் கீழே கம்பளத்தில் கிடந்த கண்ணாடியை எடுத்துத் துடைத்துப் போட்டுக்கொண்டான். கணேஷ் இரண்டு கைகளையும் கராத்தே பாணியில் வைத்துக்கொண்டு எதிர்ச் சண்டையைத் தொடங்கக் காத்திருந்தான்.

பாஸ்கர் சொன்னான்: ‘நான் உன்னுடன் சண்டையிட மாட்டேன். நான் ஞாபகம் வைத்துக்கொள்வேன். எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். போ, மோனிக்கா காத்திருக்கிறாள்! அவளையும் போய்க் கெடு! போ!’

கணேஷ் மறுபடி பாய்ந்தபோது அவன் ஒதுங்கிக்கொண்டான். கணேஷ் கீழே விழாமல் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்து பாஸ்கரை நோக்கி நிதானமாக நடந்தான். பாஸ்கர் சிரித்தான். ‘உண்மை! உண்மை கசக்கிறது’.

‘ரத்தம் புளிக்கப் போகிறது உனக்கு!’

‘எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஈஸி லாயர், ஈஸி! இந்த வீட்டு பர்னிச்சர் எல்லாம் நீ கனவில்கூட வாங்க முடியாத செல்வங்கள்!’

கணேஷ் அவன்மேல் பாய்ந்தான். அவன் கழுத்தைப் பிடித்தான்.

‘கணேஷ்!’ அனிதாவின் குரல்!

கணேஷ் நிறுத்திவிட்டான்.

‘மிஸஸ் ஷர்மா, உங்கள் லாயர் நம் வீட்டுக்கு நிறையச் சேதம் விளைவிக்கிறான்’ என்றான் பாஸ்கர், தன் உடைகளைத் தட்டிக்கொண்டு.

‘என்ன சண்டை இது பாஸ்கர்!’

‘நான் ஒரு விரலைக்கூட உயர்த்தவில்லை மிஸஸ் ஷர்மா!’

‘உங்கள் செக்ரட்டரி என்னிடம் உதைபட்டுச் சாகப்போகிறான்.’

‘என்ன சொன்னான்?’

‘சில உண்மைகளை!’ என்றான் பாஸ்கர்.

‘மறந்துவிடுங்கள், அனிதா! ‘

‘கணேஷ், இந்த வீட்டில் சென்ற தினங்களில் நடந்துள்ள ரகளைகள் போதாதா?’

‘அனிதா, இந்த செக்ரட்டரிக்குப் பேசத் தெரியவில்லை. இவனிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள். அவ்வளவுதான் சொல்வேன்.’

‘என் வாக்கியங்களும் அதுவே மிஸஸ் ஷர்மா.’

‘நீ வெளியில் வா!’ என்றான் கணேஷ். திடீரென்று தான் ஏன் சின்னப் பையன் போல் நடந்துகொள்கிறேன் என யோசித்தான். பாஸ்கர் சொன்னது ஒரு விதத்தில் உண்மையாக இருப்பதாலோ? உண்மை ஏன் உறுத்துகிறது? அதில் குற்றம் இருக்கிறது. அதில் குற்றம் இருக்கிறது! ஏனோ அனிதாவிடமிருந்து விலக நினைத்தான். ‘நான் மறுபடி மாலை உங்களைச் சந்திக்கிறேன், அனிதா!”

‘இன்று மாலை நான் வெளியே செல்லவேண்டி இருக்கும்.’

எங்கே என்று கேட்க விழைந்த ஆசையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் கணேஷ்.

‘சரி, நாளை சந்திக்கலாம்’ என்றான்.

பாஸ்கர் அறையில் இல்லை.

– தொடரும்…

– அனிதா – இளம் மனைவி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1974, குமுதம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *