கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 7,159 
 

விடியாத காலையைப்போல பொழுது மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியனின் சிரித்த முகத்தைக்கூட இன்னும் காணக்கிடைக்கவில்லை. மேகம் கறுத்து மூடிக்கொண்டது.

மண்வெட்டியைத் தோளில் வைத்துப் பிடித்தவாறு தோட்டத்தை நோக்கி அவர் நடந்தார்., வெள்ளனத்துடனே கொத்தத் தொடங்கிவிட்டால் வெய்யிலுக்கு முதல் நியாயமான அளவு கொத்தி முடித்துவிடலாம்.

வானம் மப்புக் கட்டியிருப்பதும் ஒரு வழிக்கு நல்லது. வெய்யில் இல்லாவிட்டால் இன்று முழுவதும் நின்று தரையைக் கொத்தி முடித்துவிடலாம். ஒருவேளை மழை வந்து வேலையைக் குழப்பிவிடுமோ..?

அண்ணாந்து மேகத்தைப் பார்த்தார்..

உம்மென்று முகம் வாடிக் கறுத்துப்போயிருக்கும் மேகம்தான். ஆனாலும் இது மழையைக் கொண்டுவரும் என்று சொல்லமுடியாது., ‘எப்பனெண்டாலும் காத்து வீசக் காணன்!”

காலையில் உடலைத் தழுவுவது போல வீசி வரும் இளம் குளிர்காற்று இன்று இல்லை. மரங்கள் எல்லாம் துக்கம் அனு~;டிப்பவைபோல மௌனம் சாதித்துக்கொண்டு நின்றன. ஒரு ஆட்டம் அசைவு இல்லை.

தோட்டத்தில் இறங்கி மண்வெட்டியை வைத்துவிட்டு தலைப்பா வைச் சுற்றிக் கட்டினார். கொடுக்கை இழுத்துச் செருகினார். இன்றைய காலநிலையைப் பற்றித் தான் கணித்தது சரியாயிருக்குமோ என உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் மேலே வானத்தை அண்ணாந்து பார்த்தார்.

பறவைகள் எங்கோ தொலைவு நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. ஒரு கூட்டம் கிளிகள் ஏதோ சொல்லிக்கொண்டு அவசர, அவசரமாகப் பறந்தன. காகங்கள், சின்னஞ்சிறு குருவிகள் எல்லாம் மரங்களை விட்டுப் பறந்து சென்றன.

மனசு மெல்லக் கலக்கமுற்றது. ஏனோ?| என எண்ணிக்கொண்டே அவர் தனது கொத்து வேலையைத் தொடங்கினார்.

தொலைவிலிருந்து ஒரு இரைச்சல்.. அண்மித்துக் காதை அடைத்துக்கொண்டு வந்தது. தோட்ட வேலியோரமாகயுள்ள குடிசையின் முற்றத்தில் மண் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையொன்று அண்ணாந்து பார்த்துவிட்டு வீரிட்டுக் குளறிக்கொண்டு வீட்டுக்குள்ளே ஓடியது.

‘என்ன இது?”

மண்வெட்டியை வைத்துவிட்டு மேலே பார்த்தார்..

பிளேன்!|

உடல் ஒருமுறை நடுங்கியது. தலைக்கு மேலாகப் பிளேன் வந்தபொழுது நெஞ்சு உறைவது போலிருந்தது.

நேராகப் போறானோ.. வட்டம் போடுறானோ..| எனக் கண்களைக் கூசிக்கொண்டு பார்த்தார்.

இரண்டு விமானங்கள் இப்ப இரண்டு மூன்று நாட்களாக இந்த இடத்தை வட்டமிட்டுச் செல்கின்றன.. என்ன அனியாயத்துக்கோ..?

இப்படித்தான் கொஞ்ச நாட்களுக்கு முன்னரும் நடந்தது. முதலில் சில நாட்கள் இரு விமானங்கள் வந்து வட்டமிட்டுச் சென்றன. பிறகு, திடுதிப்பென்று வந்து குண்டுகளைப் பொழிந்து தள்ளின.

அதுக்குத்தான்.. இப்பவும் அடுக்கெடுக்கிறாங்களோ?

பிளேன் ஒரு பெரிய வட்டமெடுத்து, பின்னர் வட்டத்தைக் குறுக்கிக்கொண்டு வந்தது. ஷகுறி பாக்கிறானோ?| இலக்கைப் பார்த்தால் இங்கினேக்கைதான் எங்கையோ போடப்போறான் போலை கிடக்குது!

கொத்து வேலையையும் கைவிட்டு வீட்டுக்குப் போய் விடலாமோ என நினைத்தார்.. அதுகளும் பயப்பிடப் போகுதுகள்!

விமானம் வருகிற ஓசையைக் கேட்டதும் வீட்டுக்குள் இருந்து குதூகலம் பொங்க முற்றத்துக்கு ஓடிவந்து, கையசைத்து மகிழும் நாட்கள் நினைவில் வந்தது. அது அவரது சின்னஞ்சிறு வயதில்!

அப்பொழுது பலாலி விமான நிலையத்துக்கு ஒரு பயணிகள் விமானம் வந்துபோகும். விமானம் ஆகாயத்தில் மிதந்து வருவதைக் கண்டு ஆனந்தத்தில் அவர் பிரமித்துப் போயிருக்கிறார். எப்படி? அது எப்படி? இப்படி ஐம்மென்று| வருகிறது? இந்தப் பெரிய உருப்படி காற்றிலே எப்படி மிதக்கிறது? நம்பவே முடியவில்லை?

மந்திர வித்தைபோல அது காற்றிலே மிதந்து வருவதைப் பார்க்கும்பொழுது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! பறவைகளைப்போலச் சிறகுகளை அடித்துக்கொள்ளாமல்.. தரையிறங்குகின்றது. பிறகு விர்ரென மேலெழுந்து மேகத்தையும் ஊடறுத்துக்கொண்டு போகிறது!

விமானம் வந்து குண்டு போடும் என அப்பொழுது கனவுகூடக் கண்டதில்லை.

இன்னொரு விமானம் எதிர்த் திசையிலிருந்து வந்து வட்டமிட்டது. வலு உன்னிப்பாகக் கவனித்தார்..

பொம்பர்தான்!

நினைத்தது சரி.. போடத்தான் போறாங்கள்..

தறையை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினார்..

வீட்டுக்குப் போயிடுவம்!..

என்ன அழிவு செய்யப் போறாங்களோ?

விமானத்திலிருந்து குண்டு வீசத் தொடங்கினால் அது எங்கே விழும் என்று சொல்ல முடியாது. எல்லா இடங்களிலும் விழும். இந்தச் சின்னச் சின்னக் குடிசைகளெல்லாம் பற்றி எரியும். பெரிய வீடுகளும் இடிந்து விழும். மரங்கள் முறியும். தலையிலேகூட விழும். இந்தச் சனங்களெல்லாம் எங்கே ஓடி ஒதுங்குவார்கள்?

இளைஞனாயிருந்தபொழுது காளிங்கன் தியேட்டரில் பார்த்த இங்கிலீஸ்| படக்காட்சி ஒன்று அவருக்கு நினைவில் வந்தது. சண்டைப் படம். இரண்டு நாடுகளுக்கிடையே யுத்தம் நடக்கிறது. விமானங்கள் அகோர இரைச்சலுடன் அசுர வேகத்துடன் வந்து குண்டுகளை வீசுகின்றன. கட்டிடங்கள், மண் மலை எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. மலைச்சாரல் கிராமத்தில் வசிக்கும் மக்களின் குடிமனைகள் மீது எதிரி நாட்டு விமானங்கள் வந்து குண்டுகளை வீசுகின்றன. அந்த அப்பாவி மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளையும், வளர்ப்பு மிருகங்களையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறார்கள். அவர்கள் ஓட, ஓட அந்த விமானங்கள் மிகப் பதிய வந்து குண்டுகளை வீசித் தள்ளுகின்றன. உயிருக்காக அவர்கள் விழுந்து படுக்கிறார்கள். வெடித்துச் சிதறும் குண்டுத்துகள்கள் பட்டு இறந்து விழுகிறார்கள்.

அடிக்கடி இது மனதிற் தோன்றிக் கவலைப்படுத்தினாலும் இப்படி ஒருபோதும் உண்மையாக நடக்காது.. இது ஒரு கதைதானே எனத் தன்னைத் தேற்றிக்கொள்வார்.

டும், டுடும்..

அவர் ஓடத் தொடங்கினார். குடல் தெறிக்க ஓடினார். இளைத்தது. இந்த வயதில் அவர் இப்படி ஓடியது கிடையாது. இயலாமல்.. முயன்று வேகமாக ஓடினார். வீட்டுக்குப் போய்விட வேண்டும். கூப்பிடு தொலைவிலேதான் வீடு இருக்கிறது. ஆனாலும் அது வெகு தூரம்போல இன்னும் அண்மிக்காமலே இருந்தது. எதற்காக ஓடுகிறேன் என்று தெரியாமலே அவர் ஓடினார். உயிருக்காகப் பயந்து ஓடுகிறாரா என்றும் தெரியவில்லை. அல்லது மனைவி, பிள்ளைகளின் பாதுகாப்பை நினைத்துக்கொண்டு ஓடுகிறாரா என்றும் தெரியவில்லை. இரண்டுமில்லாமல் ஷசாகிற நேரத்திலை எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து சாவம்| என்ற எண்ணத்தில் ஓடுகிறாரா என்றும் தெரியவில்லை.

போனமுறை பிளேன் குண்டு வீசியபொழுது மனைவி சொன்னாள், ‘எல்லோரும் ஒரேயிடத்திலை இருப்பம்! சாகிறதெண்டாலும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிடலாம். ஓராள் செத்து ஓராள் இருந்தால்த்தான் கவலை.”

ஓடிவந்து வீட்டுப் படலையைத் தள்ளித் திறந்தார்.

-டும், டுடும்.. –

பூமி வெடித்துப் பிளப்பது போன்ற சத்தம் காதைச் செவிடாக்கும்போலிருந்தது. வீடு அதிரும் நில நடுக்கம்.

படலைக்கும் வீட்டுக்குமாக ஓடி ஓடி அந்தரித்துக் கொண்டு நின்ற மனைவி அவரைக் கண்டதும் ‘எங்கையப்பா துலைஞ்சனீங்கள்? இந்த அநியாயத்துக்கை?” எனக் குளறினாள்.

மனைவியையும் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி வந்தார்.

வா! உள்ளுக்கை.

வந்த வீச்சில் வீட்டுக்குள் சா~;டாங்கமாக விழுந்தார்.

படுங்கோ!.. எல்லோரும் படுங்கோ!

அவருக்கு ஆறு பிள்ளைகள். மூத்தவனுக்கு பத்தொன்பது வயது நடக்கும்பொழுது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆமிக்காரர் வந்து பிடித்துக்கொண்டு போனவர்கள்.. போனதுதான்.. இன்னும் இன்ன இடமென்றில்லை.

இரண்டாவது மகனுக்குப் பதினைந்து வயசு. அவனோடு சேர்ந்து மற்றப் பிள்ளைகளும் முற்றத்தில் அங்குமிங்குமாக ஓடி.. ஓடி.. குண்டு வீசும் விமானங்களை அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தா! வாறான், வாறான்!?|

வட்டம் போடுறான்!|

பதியிறான்.. பதியிறான்!|

அடிக்கப் போறான்!|

அடிச்சிட்டான்!|

-டும்.. டுடும்.. –

அவர் அண்ணாந்து பார்த்தார். குண்டு வீசிய விமானம் விர்ரென மேலெழுந்து பறந்தது.. அடுத்த வட்டம் போட்டு வந்தது.

எல்லாரும்.. உள்ளுக்கை வாருங்கோ! உதிலை நிண்டு அவங்களுக்கு ஆள்காட்டிக் கொண்டு நிற்காமல்| என அவர் பிள்ளைகளைப் பார்த்துக் கத்தினார்.

இல்லை அப்பா.. பிளேன் குண்டு போடையிக்கை வீட்டுக்கை நிக்கிறதுதான் கூடாது. அவன் வீடுகளுக்குப் பார்த்துத்தான் அடிப்பான். வெளியிலை வந்து நிலத்திலை குப்புறப் படுக்கிறதுதான் ஓரளவு பாதுகாப்பு.

விமானங்களின் அகோர இரைச்சலும், குண்டு வீசுவதற்காகத் தாழ வரும் அசுர வேகமும் நடுங்க வைக்கிறது. இந்த விசித்திரத்தில் வெளியே வரச் சொல்கிறான் மகன் எனச் சினமேற்பட்டது. அல்லது பிள்ளைகளின் துணிச்சலைப் பார்த்துப் பெருமைப்படுவதா?

இப்பொழுதே இவ்வளவு கூத்துக்கள் நடக்கின்றன. இனி என்னென்ன அக்கிரமங்கள் நடந்தேறுமோ? கொண்டுபோய் அழிக்கப்பட்ட மூத்த மகனின் பிஞ்சு முகம் நினைவில் வந்து மனதை வருத்துகிறது. அதுபோலத்தான் மற்றச் சிறுசுகளின் வாழ்க்கையும் பலியாகிவிடுமோ?

இந்த உலக வாழ்க்கை அவருக்கு அர்த்தமற்றது போலவும், தேவையில்லாத மாதிரியும் இருந்தது. உடலை உருக்கி உழைப்பது, சாப்பிடுவது எல்லாம் வீண் என்று தோன்றியது. இப்பொழுதே ஒரு குண்டு விழுந்து எல்லோரையும் அழித்து விடட்டும்.

-டும்.. டுடும்.. –

வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களெல்லாம் முகம் குப்புற விழுந்து உடைந்தன. மிக அண்மையில் குண்டு விழுந்திருக்கிறது.

அவரது மனைவி வீட்டுக்கு வெளியே ஓடி வந்தாள். பிள்ளைகளைப் பிடித்து இழுத்தாள். பிறகு வீட்டுக்குள் கடைக்குட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். பிறகு வெளியே வந்து ஷவாங்கோ.. வாங்கோ.. உங்களுக்கு வாங்கோ| எனக் கத்தினாள்.

-டும்.. டுடும்..

கடவுளே., கடவுளே.. என ஓலமிட்டு அலறினாள். ஷஐயோ இதென்ன அநியாயம் இதைக் கேட்க ஆளில்லையா!

-டும்.. டும்.. டும்.. –

வந்திட்டாங்கள்!| எனத் துள்ளிக்குதித்தான் மகன்.

வெளியே வந்து பார்த்தார். வானத்தில் மூன்று விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. அதற்கும் முன்னால் எதற்கும் அசையாத தடியனாசாமிகள் மாதிரி நெஞ்சுரத்துடன் வானுயர நிமிர்ந்து அணிவகுத்து நிற்கும் பனை மரங்கள்!

விமானங்களின் குண்டு வெடிச்சத்தமும்.. பனங்கூடல்களிலிருந்து வெடித்துச் சீறும் சன்னங்களும்..!

இனிப் பயப்பிடத் தேவையில்லை.. தட்டிக் கேட்க ஆளில்லாட்டி தம்பி சண்டப் பிரசண்டனாம்!| என்றாள் தங்கச்சி.

விமானங்கள் மூன்றும் அதிவேகத்தில் மேலெழுந்தன. உயரே வானில் வட்டமிட்டன. அங்கிருந்து தாழ வர முயன்றபொழுது கீழே பனங்கூடல்களுள்ளிருந்து அதிர்ந்தெழும் வெடியோசை.

‘எனக்கு சப்பென்று போச்சு!” என்றான் அவரது மகன்.

‘ஏன்?” என்பது போலப் பார்த்தார்.

‘ஒண்டையெண்டாலும் விழுத்தாமல் விட்டிட்டாங்களே!”

இண்டைக்குத் தோட்டத்துக்குப் போகாதையுங்கோ.. திரும்பியும் வருவாங்களோ தெரியாது..| என மனைவி அவரிடம் சொன்னாள்.

மனைவி சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அவர் இன்றைக்குத் தோட்டத்திற்குச் செல்வதில்லை என்றுதான் முடிவு கட்டியிருந்தார். இன்றைக்கு வேலை செய்ய முடியாது. மனம் சலிச்சுப்போன மாதிரி இருந்தது. விரக்தியும் வெறுப்பும் மேலோங்கி வந்தது. இப்படி எத்தனை நாளைக்குப் பட்டுப் பட்டுக்கொண்டே இருப்பது? வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து பயிர்களை ஆளாக்கினால் குண்டு விழுந்து அழித்துவிடுகிறது. பச்சை முளைகளைப் போன்ற சின்னஞ் சிறுசுகள் வளர்வதற்கு முன்னரே கொண்டு போய் விடுகிறார்கள்..

அவருக்கு மூளை குழம்புவது போலிருந்தது. வெளியேறி நடந்தார். குண்டு விழுந்த இடங்களைப் பார்த்துக்கொண்டு வரலாம்..

பெரும்புயல் வந்து அழித்துவிட்டுப் போனதுபோல் மரம் செடிகள், வீடு வாசல்களெல்லாம் சிதைந்துபோயிருந்தன. இந்த அனர்த்தங்களைப் பார்க்க வந்த மக்கள் வீடுகளில் எரியும் நெருப்பை அணைத்திருந்தார்கள்.

அந்தப் பகுதியில் இருந்த அருணாசலத்தின் வீட்டைப் பார்க்கலாமென்ற உந்துதலில் முதலிலே அங்கு சென்றார்.

அட! பாவமே!

அருணாசலம் ஒரு சாதாரண கிளார்க்காக வேலை பார்ப்பவர். இத் தொழிலிலிருந்துகொண்டே ஒரு வீடு கட்டுவதற்காக அருணாசலம் பட்ட பாடுகள் அவருக்குத் தெரியும். ஐந்து பிள்ளைகள்.. மூத்த இரண்டும் வயது வந்த பெண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளை நினைவிற் கொண்டே ஷஒரு வீடாவது கட்டிப்போட வேணும்| என அடிக்கடி சொல்லிக் கவலைப்படுவார்.

இந்தத் தள்ளாத வயதிலும் மேலதிக நேர வேலை செய்து ஷபாங் லோன்| எடுத்து அண்மையில்தான் அவ் வீட்டைக் கட்டி முடித்திருந்தார். ஷமூத்தவளுக்கு வயசு முப்பத்தைஞ்சாகுது.. இனி இந்த வீட்டைக் காட்டியாவது ஒரு கலியாணத்தை ஒப்பேத்திடலாம்| என அருணாசலம் சொன்னது நேற்றுப்போலிருக்கிறது. ஆனால் காட்டுவதற்கு இப்பொழுது அந்த வீடு இல்லை. கூரை தரையில் கிடக்கிறது. வீடு கட்டுவதற்குப் பட்ட கடன் தலைமேல் கிடக்கிறது.

அருணாசலத்தின் மனைவி அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பேச்சு மூச்சற்றுப் பிரமை பிடித்ததுபோல வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். வந்து போகிறவர்கள் என்ன கேட்டாலும் அவளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

அருணாசலத்திற்கு என்ன ஆறுதல் சொல்லலாமென அவருக்குத் தெரியவில்லை.

‘எப்படி நீங்கள் தப்பினனீங்கள்?”

‘கடவுள் செயல்தான்! பிளேன் குண்டு போடத் தொடங்கினதும் எல்லாரையும் கூட்டிக் கொண்டோடிப் போய் கிணற்றடியிலை.. பாத்றூமுக்குள்ளை நிண்டிட்டன். அடுத்த நிமி~மே குண்டு விழுந்து வீடு பொலு பொலுவெண்டு கொட்டிண்ணுது!”

அருணாசலத்தைப் பார்க்க அவருக்குப் பிரமிப்பாக இருந்தது. இவ்வளவு நடந்த பிறகும், அவர் தாங்கள் எல்லோரும் உயிர் தப்பியதற்காக எவ்வளவு ஆறுதலடைகிறார். உயிர் எவ்வளவு அரியது!.. உயிர் இருந்தால் எதையும் செய்யலாம்.

அவருக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் சொல்லவேண்டும் போன்றிருந்தது. ‘கவலைப்பட்டு என்ன செய்யிறது.. பாரன்! ஏறோப்பிளேனைக் கண்டு பிடிச்சவனும் மனிசன்!.. அது எவ்வளவு அற்புதமான விசயம்!.. ஆனால் அழிவு செய்யிற குண்டுகளைக் கண்டுபிடிச்சவனும் மனிசன்!.. இதிலையிருந்து என்ன விளங்குது? ஆக்கமும் அழிவும் தவிர்க்க முடியாமல் மனிசனோடு சேர்ந்து நிற்கும்..’

வெடிக்கும் வேட்டுப்போல, ஒரு குரல் கேட்டது. ஷஏறோப்பிளேனையும், குண்டுகளையும் கண்டுபிடிச்ச மனுசன்தான் குண்டு போடுகிற பிளேனை விழுத்திறதுக்கும் ஒரு கருவியை கண்டு பிடிச்சிருக்கிறான்!| – தனது மகனையொத்த பதினாலு பதினைந்து வயசு மதிக்கத்தக்க அருணாகலத்தின் மகன்!

இனி எந்த அழிவுகளையும் பார்த்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லையென எண்ணிக்கொண்டு நடக்கத் தொடங்கினார்.. தோட்டத்துக்குப் போகவேண்டும்.

நிமிர்ந்து பார்த்தபொழுது கருமேகங்கள் விலகுவது தெரிந்தது. பறவைகள் பாடிவந்தன. மரஞ்செடிகள் ஆடின.

செத்துப்போன ஒரு விமானத்தின் எலும்புக்கூடுபோல, ஒரு டி. வி. அன்டனா உடைந்துபோன வீட்டின் மேல் காட்சியளித்துக்கொண்டிருந்தது.

உரமேறிய கால்களை தரையிலூன்றி அணிவகுத்து நின்ற பனை மரங்களிற்கூட, ஒன்றிரண்டு குண்டு வீச்சில் மடிந்து வீழ்ந்திருந்தன. ஆனால் பக்கத்திலேயே கடுந்தரையை கற்பாறைகளின் அழுத்தத்தை உடைத்து எழுந்து செழித்து வளரும் பனை வடலிகள்!

(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது. – 1986)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *