சுருதி பேதங்கள்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 5,331 
 

காலை 8.00 மணிக்கே கைபேசியில் அழைப்பு.

சோபாவில் உட்காhர்ந்து தினசரி விரித்துப் படித்துக்கொண்டிருந்த கோபால் அதை எதிரிலுள்ள டீபாயில் வைத்து விட்டு ஒலித்த கைபேசியை எடுத்துப் பார்த்தார்.

அருமைக்கண்ணு.!

ஆத்மார்த்தமான நண்பர். நான்கு வருட வயது வித்தியாசமிருந்தாலும் சிறுவயதிலிருந்தே ஒரே ஊர். பக்கத்துப் பக்கத்துத் தெரு. பள்ளிக்கூட படிப்புவரை ஒரே பள்ளிக்கூடம். ஒரே கம்பெனியில் வேலை. இன்னும் சொல்லப் போனால் இவருக்கு அருமைக்கண்ணுவினால்தான் வேலை.

அவர் பட்டம் முடித்த உடனேயே திருச்சியில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். விடுப்பு நாட்களில் வீட்டிற்கு வந்து நண்பனைப் பார்த்துப் பேசி பழகினார்.
கோபால் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து ஒரு பட்டத்தையும் முடித்து வேலைக்கு அலைந்தபோதுதான் அருமைக்கண்ணு தன் நண்பன் கஷ்டப்படக் கூடாது என்கிற எண்ணத்தில் இவரை தன் கம்பெனி முதலாளியிடம் அழைத்துப் போய் சிபாரிசு செய்து அவருடன் வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.

அதன் பிறகு இவர்கள் வேலை நிமித்தம் கிராமத்திலிருந்து நகரத்திற்குக் குடி பெயர்ந்து… அங்கு முன்னே பின்னே என்று ஒரு கிலோ மீட்டர் இடைவெளி தூரத்தில் இரண்டு புதுநகர்களில் ஆளுக்கொரு மனைவாங்கி, வீடு கட்டி, திருமணம் முடித்து மனைவி, மக்கள், பேரப் பிள்ளைகள் என்று வாழ்க்கை சுபம். தற்போது அவர்கள் வேலையிலிருந்தும் ஓய்வு. இருந்தாலும் இன்றைக்கும் இவர்கள் பழசு மாறாமல் அடிக்கடி சந்திப்பு.

இவர் அழைப்பை அணைத்து கைபேசியை எடுத்து காதில் வைத்தார்.

” கோபால்.! ” அவர் அழைத்தார்.

” சொல்லு அருமைக்கண்ணு..! ” – இவர்.

” வீட்டுல இருக்கியா…? ”

” ஆமாம்.”

” வேலையாய் இருக்கியா…? ”

” இல்லே. ”

” இன்னைக்கு உனக்கு வேற…ஏதாவது முக்கிய வேலை இருக்கா..? ”

” இல்லே. ஏன்…? ”

” நாம கொஞ்சம் பேசனும். நீ என் வீட்டுக்கு வரனும். ”

” எப்போ வரணும்..? ”

” காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பொறுமையாய் வா. நானும் என் மனைவியும் காத்திருக்கோம். ”

” பத்து மணிக்கு வரவா..? ”

” வா. ” துண்டித்தார்.

கைபேசியை வைத்த கோபாலுக்கு ‘ ஏன் இப்படி திடீர் அழைப்பு…? ‘ மனசு விழித்தது.

மனைவியும் தானும் காத்திருக்கிறேன் என்றால்… என்ன பிரச்சனை. ?
அவள் சர்க்கரை வியாதிக்காரி. அருமைக்கண்ணுவோ பக்கவாதத்திலிருந்து மீண்டு மாத்திரை மருந்துகளால் கொஞ்சம் நடமாட்டம் உள்ளவர். உதவிக்கு எவருமில்லாமல் சமைத்து, உண்டு, உறங்கி ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் வாழ்பவர்கள். இவர்களுக்குள் என்ன பிரச்சனை இருக்க முடியும்….?

ஒரு வேளை மகன்கள்…? நினைவு அவருக்குள் அடுத்தக் கட்டத்திற்குத் தாவியது.

மூத்தவன் ஆகாஷ் பத்து வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில்….வேலை, குடியேற்றம். திருமணம் முடித்து…மனைவி, ஒரு மகன், மகள் குழந்தைகளுடன் வாழ்க்கை. அவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடும்பத்தோடு ஓரிரு மாதங்கள் பெற்றவர்கள் வீட்டிற்கு வருவார்கள். இவர்கள் பேரன் பேத்திகளோடு கொஞ்சுவார்கள். மற்ற காலங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வாட்சப் வீடியோ, கைபேசி, தொலைபேசிகளில் கண்டு, கேட்டு, உரையாடல்.! என்ன பிரச்சனை இருக்க முடியும்…?

மனசு அடுத்தவன் மேல் தாவியது.

இளையவன் பாலாஜி அண்ணனுக்கு இளைத்தவன் இல்லை. சென்னையில் அந்நிய நாட்டு தகவல் தொழில் நுட்ப கம்பெனி ஒன்றில் மேற்பார்வையாளர் வேலை. ஒன்றரை லட்சத்திற்கு மேல் சம்பளம். அது மட்டுமில்லாமல் மனைவியும் அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியை. லட்சத்தைத் தாண்டிய சம்பளம். ஒரு மகன், சென்னையில் பத்தடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீடு, சொகுசு கார் என்று வசதி. சனி, ஞாயிறு விடுப்புகளில் மாதம் ஒரு முறை காரில் குடும்பத்தோடு பெற்றவர்கள் வீட்டிற்கு வருவார்கள். அளவலாவுவார்கள், செல்வார்கள். அவர்களாலும் தொல்லை, தொந்தரவு இருக்க வாய்ப்பு இல்லை.

இப்படி எவராலும் எவ்வித தட்டுத் தடங்கல், தொல்லையும் இல்லாமல் இருக்கையில் வீட்டிற்கு வரச்சொல்லி பேசும் அளவிற்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்…? – சுழன்றது.
கோபால் சட்டென்று நினைவுகளுக்கு முடிச்சுப் போட்டு காலாகலாத்தில் காலை சிற்றுண்டி முடித்தார்.

மனைவியிடம் சொல்லி விட்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

பத்து நிமிடப் பயணத்தில் அருமைக்கண்ணு வீடு.

இவரை எதிர்பார்த்து வாசலில் அமர்ந்திருந்த அவர்… கோபால் வண்டியை நிறுத்தவும்…..

” வா…” அழைத்தார்.

அந்த அழைப்பில் வழக்கம் போல் இருக்கும் துள்ளல், துடிப்பு இல்லை. முகத்தில் சோகமும் குரலில் வருத்தமும் குடி இருந்ததைக் கோபால் கவனித்தார்.

வண்டியை சரியாய் நிறுத்தி விட்டு படியேறினார்.

” உள்ளே வா.” நண்பன் அருகில் வர அருமைக்கண்ணு எழுந்து…திறந்திருந்த வாசல் வழியே உள்ளே சென்றார்.

இவரும் தொடர்ந்தார்.

” வாங்க… ” கூடத்து சோபாவில் அமர்ந்திருந்த அவர் மனைவி மீனாட்சி மரியாதை நிமித்தம் வரவேற்றார், எழ அசைந்தார். முகத்தில் களை இல்லை.

” இருக்கட்டும் ! ” கோபால் சொல்ல… சரியானாள்.

நண்பர்;கள் இருவரும் அவளருகில் சோபாவில் அமர்ந்தனர்.

ஓரிரு நிமிடங்கள் வரை தம்பதிகளிடமிருந்து எந்த பேச்சும் வரவில்லை.

” என்ன பிரச்சனை…? ” கோபாலே கேட்டு அங்கிருந்த மௌனத்தை உடைத்தார்.

” ஒன்னும் பிரச்சனை இல்லே. சின்னவன் குடும்பத்தோட கனடா பறந்துட்டான்.” அருமைக்கண்ணுவிடமிருந்து மெல்ல வார்த்தைகள் வெளி வந்தது.

” என்ன சுற்றுப்பயணமா..? ” இவர் ஏறிட்டார்.

” இல்லே. ”

” அப்புறம்….? ”

” நிரந்தரத் தங்கல் ! ” என்றார்.

” புரியலை..?!….” குழப்பமாகப் பார்த்தார்.

” வேலை.. குடியிருப்புன்னு குடும்பத்தோட அங்கே குடியேறிட்டான்.”

” சந்தோசம். நல்ல விசயம்தானே…?! ”

” நல்ல விசயம்தான் ஆனா… எங்களுக்குப் பிடிக்கலை…!! ” அருமைக்கண்ணு வலியாய்ச் சொல்லி மனைவியைப் பார்த்தார்.

அவளுக்குத் தாள முடியவில்லைப் போல.

கண்களில் குபுக்கென்று கண்ணீர். சட்டென்று தலை குனிந்தாள். தரையைப் பார்த்தாள்.

” அப்படியா….? ” கோபால் மெல்ல வாயைப் பிளந்தார்.

” பெரியவன் ஆகாஷ் போனான்னா… அதுக்குக் காரணம் இருக்கு. அவன் படிப்புக்கு இங்கே சரியான வேலை அமையலை. அமைந்தாலும் வேலைக்குத் தகுந்த கூலி இல்லே. அதனால் அயல்நாட்டுக்குப் போகனும்ன்னு ஆசைப்பட்டான். படிப்புக்குத் தகுந்த வேலை, ஊதியம் ஆஸ்திரேலியாவில் கிடைச்சுது. போனான், அங்கேயேக் குடி, குடித்தனம் ஆனான். பிரச்சனை இல்லே. ஆனா….இ..இவன்…!” அருமைக்கண்ணு இழுத்து நிறுத்தினார்.

கோபால் எதுவும் பேசாமல் நண்பர் முகத்தைப் பார்த்தார்.

” பாலாஜி அப்படிப் போகனும்ன்னு அவசியமில்லே. ” சொல்லி அருமைக்கண்ணு தரையைய் பார்த்தார்.

‘ ஏன்…? ‘ – கோபால் கேட்கவில்லை. காரண காரியம் அவர் வாயாலேயே வரட்டுமென்று நண்பர் மேல் படிந்த பார்வையை எடுக்காமலிருந்தார்.

” ……இவன் படிச்ச படிப்பிற்கு இங்கே நல்ல வேலை. மாதம் ஒன்னே முக்கால் லட்சம் சம்பளம். மனைவியும் வீட்டுக்காரி இல்லாமல் அரசாங்க ஊழியை., பேராசிரியை. லட்சம் தாண்டி சம்பளம். ஆசைக்கு ஒரு மகனைப் பெத்து சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு, கார்ன்னு வசதி வாழ்க்கை. இவன் கனடா போகனும்…? ” சொல்லி அருமைக்கண்ணு அருகிலிருந்த நண்பனை ஏறிட்டார்.

” ஏன் போகனும்…. ? ” கோபாலும் அவரைத் திருப்பிக் கேட்டார்.

” அங்கே இதைவிட அவனுக்கும் அவளுக்கும் சம்பளம் அதிகம். குடி இருக்க சொந்தமா ஒரு வீடும் இலவசம். கிளம்பிட்டாங்க. ” விசயத்தைச் சொல்லி நிறுத்தினார்.

” அருமையான வாய்ப்பு. கிளம்புனதுல தப்பே இல்லே.!” கோபால் தன் சந்தோசம், மகிழ்ச்சியை வெளிப்படையாகவே தன் முகம், குரல்களில் வெளிப்படுத்தினார்.

” தேவைக்கு அதிகமா பணத்துக்கு மேல பணம் சம்பாதிச்சு என்ன பிரயோசனம் கோபால்..!? ” அருமைக்கண்ணு சடக்கென்று கேட்டு நண்பர் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பதில் சொல்ல முடியாத அதிரடிக் கேள்வி.! – கோபால் திக்குமுக்காடினார்.

” இதுக்குக் காரணம் பணம் மட்டுமில்லே. வெளிநாட்டு மோகம்.” அவரே அடுத்தும் பேசினார்.

” ……………………. ”

” அண்ணன் ஆஸ்திரேலியாவுல இருக்கான்னா…தானும் அவனுக்கு நிகராய் வெளிநாட்டுல இருக்கனும். தன் குடும்பம் உற்றார் உறவினர், சுற்றம், நண்பர்கள் எல்லாரும் வாயைப்பிளக்கிறாப்போல…கெத்தாய் இந்தியா வரணும். அவர்கள் மத்தியில் மதிப்பாய் இருக்கனும் என்கிற பேராசை. ” என்றார்.

” இது ஒன்னும் தப்பான ஆசை இல்லே. எல்லார்க்குள்ளும் இருக்கும் சராசரி ஆசைதானே….அருமைக்கண்ணு..!..? ” கோபால் மெல்ல வாயை விட்டார்.

” தப்பு அங்கே இல்லே இங்கே இருக்கு.” அருமைக்கண்ணு தன்னையும் தன் மனைவியையும் கை காட்டினார்.

” புரியலை..?!…”

” இப்படி வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் யாரும் பெத்தவங்களை நினைச்சுப் பார்க்கிறதில்லே. பணத்தைத் தூக்கிப் போட்டா வாழ்ந்துடுவாங்க என்கிற கணிப்பு. முதியோர் இல்லத்துல சேர்த்துவிட்டா யாருக்கும் பிரச்சனை இல்லே. செத்துப் போனதும் சேதி வந்தா போய் தூக்கிப் போட்டு வந்துடலாம்ன்னு நெனைப்பு. ”

” சரிதானே அருமைக்கண்ணு. ”

” தப்பு கோபால் ! வயசான காலத்துல பெத்தவங்களை அன்பு, பண்பாய் அரவணைச்சு பராமரிச்சு கரை சேர்க்கிறது புள்ளைங்க கடமை. அதை விட்டுட்டு அவர்களைத் தனியாத் தவிக்கவிட்டு தான்தோன்றித்தனமா போறது எந்தவிதத்துல நியாயம்…? ”

கோபாலுக்கு அவர்களின் வலிக்கான காரணம் புரிந்தது.

” பெத்தவங்களைக் கடைசிவரை காப்பாத்தி கரை சேர்க்கிறது புள்ளைங்க கடமைன்னு நாம நினைக்கிறது தப்பு அருமைக்கண்ணு…! ” சொன்னார்.

அவர் இவரை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்.

” கிராமமாகட்டும், நகரமாகட்டும். படிச்சதாகட்டும் படிக்காத புள்ளைகளாகட்டும்…. நூத்துல பத்தைத் தவிர எந்த புள்ளை பெத்தவங்களைக் கடைசிவரை காப்பாத்தி கரை சேர்த்திருக்கு. ? ஆம்பளைப் புள்ளைங்களுக்கு மீசை மொளைச்சாலே… அப்பன் ஆத்தாள் எதிரி. பொட்டைப் புள்ளைங்க வயசு வந்தாலே பெரிய மனுசியாகிடுறாங்க. தாலி கழுத்துல ஏறினா… தாய் தகப்பன்களுக்குப்; புத்திமதி சொல்ற அளவுக்கு வயசாளியாகிடுறாங்க. கிராமத்துல…. வயசான பெத்தவங்க ஒரு குடிசையில பொங்கித் தின்பாங்க. குடும்பமானப் புள்ளை பக்கத்துல குடிசைப் போட்டு பொங்கி தின்கும். நகரத்துல… பெத்தவங்க அனாதை ஆசிரம், முதியோர் இல்லம். இப்படித்தானே போய்க்கிட்டிருக்கு. ”

” கோபால் ! புள்ளைங்க பெத்தவங்களைக் கவனிக்க வேணாம், பராமரிக்க வேணாம். ஆணோ பெண்ணோ எதிரியாய் இருந்தாலும், பாசமாய் இருந்தாலும் தாய் நாட்டுல எந்த மூலையிலிருந்தாலும் தனக்கு ஒன்னுன்னா அடுத்த நிமிசம் ஓடி வந்துடுவாங்க. நாளைஞ்சு மணி நேரத்துல நம் முன்னோ சடலத்தின் முன்னோ வந்து காப்பாத்திடுவாங்க, நாறாம தூக்கி எறிஞ்சுடுவாங்க என்கிற பாதுகாப்பு உணர்ச்சி, தெம்பு, தைரியம் பெத்தவங்களுக்கு இதுல இல்லியே…இதுக்கு என்ன சொல்ல…? ”

‘ நியாயம் ! ‘ கோபாலுக்குப் பட்டது.

அருமைக்கண்ணு தொடர்ந்தார்.

” இந்த வெளிநாட்டு விசயத்துல…. பெத்த தாய் தகப்பனுக்கு ஒன்னுன்னா புள்ளைங்க சடக்குன்னு வரமாட்டாங்க. செத்தாலும் உடனே வர முடியாது. நாள் கணக்காகும். அதுங்க வரும் நாட்கள்வரை பொணம் ஐஸ்பெட்டியில வீங்கி, விரைச்சி, இருக்கனும். பெத்தக் கடமைக்கு வந்து பார்த்து நாறிப் போறதுக்குள்ள அவசர அவசரமா தூக்கி எறினும்.

அதுக்கு அப்புறம்… திதி, திவசம்…எல்லாம் ரொம்ப உருக்கமா, முறையா செய்வாங்க. இதனால ஆத்மா சாந்தி அடையும் என்பதெல்லாம் சும்மா பம்மாத்து. அதெல்லாம் மன திருப்தி என்கிற பேர்ல அடுத்தவன் தின்னுட்டுப் போறதுக்கு வழி. இதுங்களைச் சரியாய்ச் செய்தா அது சாந்தி அடையும்ன்னு நம்பலாம். ஆனா நடக்காது. யார் ஆத்மா பார்த்திருக்கா. அது சாந்தியடைஞ்சதை யார் கண்டிருக்கா. இதெல்லாம் வழி வழியாய் வரும் கண் கட்டி வித்தை. அப்படியே இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம் சரின்னா உசுரோடு இருக்கும்போது உதறி தள்ளிட்டு அது போனபிறகு ஆரத்தி எடுத்தா எந்த உசுர் ஏத்துக்கும் கோபால் ? ” கேட்டார்.

என்ன சொல்ல..? – எதுவும் பேசாமல் ஒருசில நிமிடங்கள்வரை நண்பரை அமைதியாய்ப் பார்த்த கோபால், ” அருமை ! நீ இந்த விசயத்தையெல்லாம் பையன்கிட்டேயே நேரடியாய்ப் பேசி விலாவாரியாய்ச் சொல்லி தடுத்திருக்கலாமே…? ” சொன்னார்.

” அதையும் நான் சரியாய் செய்தேன் கோபால். நாளைக்கு… ‘ நான் தப்பு செய்தா நீ தட்டிக் கேட்கக் கூடாதா ? ‘ என்கிற கேள்வி அவனிடமிருந்து வரும் என்பதற்காக…..’ இப்படி ஒரு வாய்ப்பு இருக்கு. முயற்சி பண்றேன் !’ னு அவன் ஆரம்பத்துல சொன்ன போதே…’ உனக்கு வேலை, பணம் காசு, வசதி வாய்ப்பெல்லாம் இங்கே திருப்தியாய் இருக்கும்போது வெளிநாட்டு வாழ்க்கை ஏன் வீண், தேவை இல்லே. கஷ்டம் பாலாஜி ! ‘ – சொன்னேன். ‘ அப்பா..! எனக்குத் தேவை ! ‘ ன்னு ஒரே வார்த்தையில முடிச்சிக்கிட்டான். இன்னும் காரண காரியத்தை அழுத்திச் சொல்லி எடுத்துச் சொன்னா… ‘ உங்க சுயநலத்துக்காக என் வாழ்க்கையை மட்டுமில்லாம என் வாரிசு, தலைமுறை வாழ்க்கையும் கெடும். எனக்குப் பிறகு என் பிள்ளை அங்கே என்னைவிட இன்னும் சிறப்பா வாழ்வான். நீங்க வாழ்ந்தாச்சு. நாங்க வாழனும் விடுங்க. சொல்வான். ‘ இதெல்லாம் அழுத்திச் சொல்ல கூடாது கோபால். பெத்தவங்க கோடு போட்டா… புள்ளைங்க ரோடு போடனும். இதெல்லாம் புள்ளைங்களுக்குத் தானாத் தெரியனும்.” கமறி நிறுத்தினார்.

” ஆளை அனுப்பி விட்டு இப்போ வீண் வருத்தம் எதுக்கு..? விடுங்க அருமை.” – ஆளைச் சமாதானப் படுத்தும் விதமாக சொன்னார் கோபால்.

” விட்டாச்சு. அந்த விசயத்தை முடிச்சாச்சு. ஆனாலும்…இப்படி பெத்தவங்களை நினைக்காம நிர்க்கதியாய் விட்டு வெளிநாட்டு மோகத்துல பறக்குறப் புள்ளைங்க முகத்துல கரியைப் பூசறாப்போல ஏதாவது செய்யனும்ன்னு நெனப்பு. உள்ளுக்குள்ள ஒரு உறுத்தலாவே இருக்கு. என்ன செய்ய..?” கேட்டார்.

” என்ன செய்ய…? ” இவரும் அவரை திருப்பிக் கேட்டுப் பார்த்தார்;.

” இது சம்பந்தமா நாங்க ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். ”

” என்ன முடிவு..? ”

” நாங்க செத்தா எங்க பொணத்துக்கு புள்ளைங்க கொள்ளிபோடக் கூடாது ! ”

” என்ன சொல்றீங்க.. அருமை….? ” கோபால் துணுக்குற்று அவரை அதிர்ச்சியாய்ப் பார்த்தார்.

” ஆமாம். இதுதான் முடிவு. அந்த காரியத்தை நீயோ உன் புள்ளைங்களோதான் எங்களுக்குச் செய்யனும்…! ”

” அருமைக்கண்ணு..! ” திடுக்கிட்டார்.

” உசுரோட இருக்கும்போது வயசான பெத்தவங்களுக்கு….. கிட்ட இருந்து நல்லது கெட்டது செய்யாத புள்ளைங்க…நாறிப்போன பொணத்துக்குக் கொள்ளி போட ஏன் கடனேன்னு வரணும்..? கூடாது ! அதனால…. ஆத்மார்த்தமா அடிக்கடி வந்து நலம் விசாரிச்சு நல்லது கெட்டது செய்யிற நீயோ உன் புள்ளைங்களோ செய்ஞ்சிடுங்க. ” குரல் தெளிவாக வந்தது.

” ……………………… ”

” ஆமாம் கோபால் அண்ணா. நாங்க நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தோம். நாங்க ஒன்னா சேர்ந்து சாகப் போறதில்லே. எங்கள்ல யார் எப்படி செத்தாலும் சாவை முறையாய் புள்ளைங்களுக்குத் தெரியப்படுத்திட்டு அவனுங்க வர்றதுக்குள்ளே எடுத்து காரியம் பண்ணிடுங்க. ” மீனாட்சி சொன்னாள்.

” அப்புறம்…. சொத்து பத்து விசயத்துல சிக்கல், தடங்கல் வேணாம் கோபால். எங்களுக்குப் பிற்பாடு இந்த வீடு, வங்கியில் இருக்கும் பணமெல்லாம் சட்டப்படி அவர்களுக்குச் சேரட்டும். இது அவர்களுக்குத் தேவையோ தேவை இல்லையோ… பெத்தக் கடனுக்கு நாங்க போடுற கடைசி பிச்சையாய் இருக்கட்டும்.! இப்போ பேசின நம்ம பேச்சு வார்த்தைகளை நாங்க விலாவாரியாய், தெளிவாய் உயிலாவே எழுதி வைச்சிடுறோம். நீயோ உன் பிள்ளைகளோ எங்களுக்கு இந்த காரியங்களைச் செய்திடுங்க. ” சொன்னார்.

‘ பெற்றவர்களை நினைக்காமல்…வெளிநாட்டு மோகத்தில் பறக்கும் பிள்ளைகளுக்கு எப்படி ஒரு தண்டனை ! ‘ கோபாலுக்குத் தெரிய…

” சரி ” தலையசைத்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *