தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 19,855 
 

பாலனும் பானுவும் அண்ணன் தங்கையர். பாலன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பானு ஏழாவது படிக்கிறாள். அப்பா முத்தையாவுக்குச் சொந்தமாக ஒரு தோட்டம் இருந்தது. அதில் பயிர்த்தொழில் செய்து வந்தார். அம்மா வீட்டுப் பணிகளைக் கவனித்துக் கொண்டாள்.

அண்ணன் தங்கை இருவருக்கும் பள்ளிக்கூட நேரம் போகச் சில பொறுப்புகளையும் கொடுத்திருந்தனர் பெற்றோர்.

மன்னிப்புபாலன் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட வாத்துகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பானு, வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வது, கடைக்குச் சென்று வருவது போன்ற சிறிய வேலைகளைச் செய்து வந்தாள்.

ஒருநாள் பகலில் இருவரும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டுப் போக்கில் பாலன் எறிந்த கல், வாத்து ஒன்றின் மீது பட்டு அது இறந்துவிட்டது. அப்பாவுக்குத் தெரிந்தால் அடிவிழும் என்று அஞ்சிய பாலன், தோட்டத்தில் ஒரு குழியைத் தோண்டி அதில் இறந்த வாத்தைப் போட்டுப் புதைத்துவிட்டான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பானு. அவளிடம், “அப்பாவிடம் சொல்லிவிடாதே பானு… உனக்காக நான் உன் வேலைகளில் எதைச் செய்யச் சொன்னாலும் செய்து தருகிறேன்’ என்று கெஞ்சினான் பாலன். பானுவும் இதற்குச் சம்மதித்தாள்.

நாட்கள் நகர்ந்தன. வாத்து, வாத்து என்று சொல்லியே அவளது வேலைகளையெல்லாம் பாலனின் தலையில் கட்டிவந்தாள் பானு. அவளோ, எந்த வேலையையும் செய்யாமல் பாட்டுப் பாடிக்கொண்டு பொழுதை வீணாகக் கழித்தாள்.

பாலன் யோசிக்க ஆரம்பித்தான். அப்பாவுக்குத் தெரிந்துவிடுமே என்ற பயத்தில்தானே நான் இவ்வாறு கஷ்டப்படுகிறேன். அப்பாவிடமே வாத்தைக் கொன்றுபோட்டதைச் சொல்லி மன்னிப்புக் கேட்டால் என்ன? என்று எண்ணினான்.

ஒருநாள் மாலை… அப்பா முத்தையா வீட்டிலிருந்தார். பாலன், அப்பா அருகில் சென்று தயக்கத்துடன், “அப்பா, அன்றைக்கு ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தபோது, நான் எறிந்த கல் பட்டு நம்முடைய வாத்து ஒன்று இறந்து போயிடுச்சி. அதை உங்களுக்குத் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் புதைத்துவிட்டேன். நான் செய்தது தப்பு என்று இப்போது உணர்கிறேன்… என்னை மன்னிச்சுடுங்கப்பா…’ என்று கெஞ்சினான்.

அப்பா, அவனை அணைத்துக் கொண்டு, “இதை நீ அன்றைக்கே என்னிடம் சொல்லியிருக்கலாமே! பரவாயில்லை… இனிமே இதுபோலத் தவறுகளைச் செய்ய நேரிட்டால் பெரியவர்களிடம் உடனே சொல்லி மன்னிப்பு கேட்டுவிடு… அதுதான் நல்லது… இப்போது நீ போய் கவலையில்லாமல் விளையாடு… நீ தவறை உணர்ந்தததே பெரிய காரியம்’ என்றார்.

அதன் பிறகு தோட்டத்துக்கு விளையாட வந்த பாலனைப் பார்த்து, “கடைக்குப் போய் சர்க்கரை வாங்கிக் கொண்டு வா…’ என்று அதிகாரம் பண்ணினாள் பானு.

“கடைக்கா, நீயே போய் வாங்கி வா…’ என்றான் பாலன்.

“அண்ணே…. வாத்து…..’ என்று இழுத்தாள் பானு.

“என்னது வாத்தா… அதெல்லாம் நேத்து…’ என்று கூறிச் சிரித்தான் பாலன்.

– செ.சத்தியசீலன், கிழவன் ஏரி. (மார்ச் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *