கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 11,747 
 
 

மார்கழி வந்து இரு தினங்களே கழிந்திருந்தன. காலை ஆறு மணி. எங்கிருந்தோ வந்த வண்டுகள் என் ஜன்னலில் முட்டிக் கொண்டிருந்தன. சில சமயம் இடித்து கீழே விழுவதுபோல் விழும்போது போர் விமானங்களாய் திடும்மென வெளிக் கிளம்பின. என்னிடமிருந்து எது வேண்டுமெனத் தெரியவில்லை. ஜன்னல் வழி தெரிந்த உயரமான யூக்கலிப்டஸ் மரத்தின் இலைகளில் காலை சிவப்புப் படரத் தொடங்கியது. இந்த மாத ஸ்பெஷலாக அடித்த காற்றில், மரங்கள் சிலிர்த்து எழுந்து மீண்டும் தங்கள் கனவின் சொகுசில் புகுந்து கொண்டன.

அறுபத்து ஐந்து வயதெல்லாம் ஒரு வயதா என பிறர் சொல்லிக் கேட்கும்போது ஆசுவாசப்படும் மனது, இந்த காப்பகத்தினுள் வருபோரைப் பார்த்தால் தொய்ந்துதான் போகிறது. நான் தங்கியிருக்கும் வீடு மூன்று மாடி உலகம். இந்த வீட்டின் பின்பக்கத்தில் முன்னொரு காலத்தில் சாலை இருந்திருக்கவேண்டும். முன்வாசல் சாலை கட்டிடம் கட்டத்தெரியாதவர்கள் கட்டியது போல் இந்த வீட்டின் அகலமில்லாத ஒருபக்கத்தில் நிற்கிறது. பின்வாசல் பக்கம் மாடியில் என் அறையின் ஜன்னல் உள்ளது. .என்னைப் போன்ற வயதானோர் கண்ணுக்குத் தெரியும்வரை மலிந்த தோட்டம். அதன் தென்னைகளிலிருந்து காற்று சற்று தாராளமாகவே என் அறைக்குள் வீசும். ரயிலைப் பார்க்க வரும் சிறுவர்கள், மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற உதவுவார்கள். அப்படியொன்றும் கேவலமான இடமில்லை. எங்களுக்கெல்லாம் வசதியான சொந்தங்களுண்டு. தனித்தனியே சமைத்துக்கொள்ள அறைக்கு பக்கத்திலேயே இடமுண்டு. அறைக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி, நல்ல உயரமான வெள்ளை மெத்தைக்கள்,அதன் பக்கத்தில் என் சில உடுப்புகளை மடித்து வைக்க இடம், உலாத்த காற்றோட்டமான பால்கனி என இந்த வயதில் நாங்கள் நினைக்க முடியாத சவுகரியங்கள் என எங்களை இங்கு அனுப்பிய சொந்தங்கள் கூறியவை.

இன்று இந்த காப்பகத்தில் எனக்கு கடைசி நாள். பிரியாவிடை கொடுக்கக் கூட்டமிருந்தும், தற்காலிக வேலையாட்கள் போல் வந்துசெல்லும் கூட்டமே அதிகமென அவர்களுக்கும் தெரிந்ததால் , ஒன்றும் சலசலப்பு இருக்காது. ரயில் வண்டியைப் போல் வருவதும் போவதுமாய் இருப்பார்கள்.

ஏதோ சத்தம் கேட்டு எழ எத்தனிக்க, என் அறைக்கு வெளியே இரு குருவிகள் வாயில் தேங்காய் நாரோடு நுழைந்து கொண்டிருந்தது. அறைக்கு வெளியே இருந்த உத்திரம் சுவற்றோடு இணையும் இரும்பு கம்பிகளுக்குப் பின்னே யாருக்கும் தெரியாமல் கூடு கட்டிக்கொண்டிருந்தது. அதிலிருந்து விழுந்த சில வைக்கோல், நார்களால் தான் இந்த குருவிகளுக்குள் களேபரம். இங்கு வந்த எட்டு மாதங்களில் எனக்கு அவற்றைப் புரிந்துகொள்ள நேரம் இருந்ததுபோல், அவர்களுக்கில்லை.காப்பகத்தின் தலைவருக்கும் தெரியாமல்,மிக ஆர்ப்பாட்டமாக அந்த கூட்டைக் கட்டிக்கொண்டிருந்தன.இதைப் பார்ப்பதில் சுகமாய் நேரம் கரையும். அவை கூட்டைக் கட்டும் செய்நேர்த்தி மிக அழகாயிருக்கும்.

தூக்கம் கலைந்துவிட்டது. இனி வருவது சிரமமென, சமையல் அறைக்குள் நுழைந்தால் – அங்கே அடுப்பினருகே கழுவப்படாத தேனீர்க்கோப்பை, அதன் பக்கத்தில் கரண்டியினால் நன்றாக நசுக்கப்பட்ட இரு தேனீர் பைகள் சிதறிக் கிடந்தன. அறையிலிருந்த ஒரே மேஜையில் கலைந்திருந்த அன்றைய நாளிதழ். இவையனைத்தும் தயா வந்துபோனதற்கான அடையாளங்கள்.தயா,என் ஒரே மகன்.வருடங்களைப் போல நிதானமாக அதேசமயம் நிதர்சனமாக சிறுவயதிலிருந்து தயா என்னை விட்டு விலகத்தொடங்கியிருந்தது இப்போது நினைத்துப் பார்த்தாலும் வலித்தது. பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டு தவிக்கும் துகள் போல் நிமிண்டிக்கொண்டேயிருக்கத் தோணும் உறவு. நான் நன்றாகவே தூங்கியிருக்க வேண்டும். வேகவேகமாய் வாசல்பக்கம் பால்கனிக்குச் சென்று பார்த்தேன். கார் இல்லை. வாசல் இரும்பு கதவருகே பக்கத்து கடைச் சிறுவன் புளியங்கொட்டைகளை பிய்த்துக்கொண்டிருந்தான்.

‘இந்த பக்கம் ஏதாவது கார் போச்சாப்பா’

‘இல்லை. நான் எதுவும் பாக்கலியே’

சரிதான். வழக்கமான அவசரத்தில் பார்க்க வந்து, சம்பிரதாய வழமைகளை தாயிடம் காட்டுவதும் இவள் கணவனிடமே கற்றுக்கொண்டிருப்பான். காப்பகத்தின் தலைவர் கொடுத்த துண்டு சீட்டில் – ‘அவசர வேலை. நாளை காலை வருகிறேன்’ – வினய் என எழுதியிருந்தான். தயா என்ற பெயர் பிடிக்காமல் வினய் என அவன் இஷ்டப்படி மாற்றிக்கொண்டான். ஆனால் தயாவாகவே என் நெஞ்சில் நிலைத்துவிட்டான்.அவன் தந்தையின் வியாபாரத்தை செய்நன்றியுடன் நடத்திக்கொண்டிருக்கிறான். அவன் பிறந்த சில மாதங்களிலேயே அவன் தந்தை வியாபார நிமித்தமாக மாதத்தில் பாதி நாட்கள் வெளியே தங்கிவிடுவார். தயா பிறந்தபிற்பாடு தனக்கென கொடுக்கப்பட்ட நேரம் குறைவு என்பதுபோல் கடுமையாக உழைக்கத் தொடங்கினார்.அது இவன் ஐந்து வயதில் இரு நிறுவனங்கள் இருபது நாட்கள் எனத் தொடங்கி, பத்து வயதில் எப்போதுமே வியாபாரம் மட்டுமே என்ற நிலை உருவானது.

முதல் சில வருடங்கள் உடம்பால் மிகவும் அவதிப்பட்டான். காய்ச்சல் அடிக்கும்போதெல்லாம் என்னைக் கட்டி அணைத்தபடி தூங்கிப்போவான். அவன் சீரான உடம்பு நிலைக்கு வரவே இரு வருடங்களானது. பெண்கள் வயதுக்கு வருவதை இயற்கை அறிவிப்பதுபோல், ஆண்களின் எதிர்ப்பு சுபாவம் மாறுதலுக்கான அறிகுறி போலும். தேடலை நம்பிக்கையென அர்த்தமாக்கிகொள்ளும் மடமையை இன்றுவரை தொடர்கிறேன். பத்து வயதிலிருந்தே அந்த நம்பிக்கையை கைவிட்டிருக்கவேண்டும். அதற்கு பிறகே எனக்கு மன உளைச்சல் தொடங்கியது. அவன் தந்தையிலிருந்து பிரதியெடுக்கப்பட்டவன் போல அவன் காரியங்களில் சுய உணர்வு, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காதது அதிகரிக்கத் தொடங்க , எனக்கு மிக அதிர்ச்சியான சமயங்கள் பல நேர்ந்தன.

ஒரு நாள் எங்கள் வீட்டில் வளர்ந்த ஒரு பூனை குட்டி போட்டது. சாம்பல் நிறத்தில் அடர்த்தியான மயிற்களுடன் மினுமினுப்பாய் இருந்தது அந்த பஞ்சுமிட்டாய்.

`பூனை குட்டியைப் பார்த்தியா? இவ்வளவு சின்னது கடகடவென வளர்ந்து சீக்கிரமே அங்குமிங்கும் ஒடி விளையாடும் , தெரியுமா? ஆச்சர்யமாக இல்லை?` என பூனையிடன் பேசுவதுபோல் தயாவின் ஆர்வத்தை என் பக்கம் திருப்ப முயற்சி செய்துகொண்டிருந்தேன்.

ஏதோ தப்பாக நடக்க போவது எனத் தெரியாமல் முகத்தைப் பார்க்க, கடுகடுவென அவன் சிவந்து கொண்டிருந்தான். நான் கூறியதா, அல்லது என் கையிலிருந்த பூனைக்குட்டியா எனத் தெரியவில்லை, திடுமென கருத்த மேகம்போல் இருந்த தன் கண்களை சிமிட்டாது என் முகத்தைப் பார்த்த படி என் கையிலிருந்த பூனைக்குட்டியை பிடுங்கி தரையில் எறிந்தான். என் கைகளிலிருந்து நழுவி, நடுவிலிருந்த என் தொடையில் மோதி, அது விழுந்த பாதையை நான் பார்த்துக்கொண்டிருக்க , கனமில்லாத அந்த பஞ்சுக்குட்டி தரையில் கவிழ்ந்தது. மிக சுகமான கனவு கலைந்து திடீரென ஆவேசமாக எழுந்ததுபோல் உளுக்கப்பட்டேன். சட்டென அறுந்த தொப்புள்கொடியென எங்கள் உறவின் கடைசி நாண் பிரிந்தது. ஏதாவது சொல்லவேண்டும் போல் இருந்தாலும், வாயை மூட முடியாமல் அதிர்ச்சியில் தாடைகள் பிடித்துக்கொண்டன. நான் தயாவை நிமிர்ந்து பார்த்தேன். அவன் ஓடவில்லை, பயப்படவுமில்லை. மாவு மூட்டைகளை தூக்கி வைத்ததுபோல், இரு கைகளைத் அலட்சியமாக தட்டியபடி நிதானமாக நடந்துகொண்டிருந்தான்.

கண்ணை மூடிக்கொண்டு நடந்தால், வைத்தது வைத்த இடத்தில் இருக்க வேண்டுமென என் அம்மா என்னை வளர்த்திருந்தாள். கிட்டதட்ட அதை அப்படியே பின்பற்றி வளர்ந்திருக்கிறேன். சில விஷயங்களின் செயல் நேர்த்தி, வகைப் படுத்தி வைக்கப்பட்ட புத்தக அலமாரி போல – அதன் அழகுணர்ச்சியே தனிதான். அந்த சம்பவத்திற்குப் பிறகு, தயா மீது சில அடிப்படைத் திருத்தங்களைக் கொண்டு வர முயற்சித்தேன். இதில் நான் கற்றுக்கொண்டவையே அதிகம். தயாவின் அப்பாவைப் போல அவனுள் அதிகாரத்தை நிலை நிறுத்துவதில் இருந்த முனைப்பு, சில அறஒழுக்கங்களைத் தளர்த்தியிருந்தது எனப் புரிந்துகொண்டேன். ஒரே பிள்ளை என்பதால் தான் இப்படி, ஒரு தம்பியோ தங்கையோ பிறந்தால் சரியாகிவிடுமென என் அம்மா பிரச்சனையை திசை திருப்பினாள். இரண்டாம் குழந்தை திட்டத்தை தயாவின் அப்பாவிடம் தெரிவிக்கவில்லை- நான் எடுத்த முடிவு சரியா என இன்றும் தெரியவில்லை.

சில சுய கட்டுப்பாடுகளை அவனுள் விதிக்க முயன்று தோற்கத் தொடங்கினேன். நன்கு காய்ச்சிய இரும்பு கம்பி போல், முதலில் வளைய ஆரம்பித்து, திரும்ப தன் பழைய நடத்தைகளில் இறுகிக்கொண்டுவிடுவான். ஒரு அறையிலிருந்து மற்றோர் அறைக்கு போகும்போது விளக்கு, மின்விசிறியை அணைக்கவேண்டும் எனக் கூறுவேன். சில நாட்களில் பழக்கமாய் மாறும் என நினைத்தேன். நடக்கவில்லை. எனக்காக செய்யத் தொடங்கி , ஒரு கட்டத்தில் அதையும் நிறுத்திவிட்டு தான் பெரியவனானதை அறிவித்தான். மற்ற பிள்ளைகளுடன் விளையாடும் போது பகிர்ந்து இயைந்து விளையாடுமாறு சொல்லிக்கொடுத்தேன். தேய்ந்துபோன சொற்குவியலாய் மாறிய என் குரல் மட்டுமே என்னிடமிருந்து கிளம்பியது. கேட்கத்தான் ஆளில்லை. இதைப் போன்ற சின்ன விஷயங்களிலிருந்து எல்லாமே இப்படித்தான். என்னுள் இதன் அடிச்சுவடுகளைத் தேடத் தொடங்கினேன். எங்கு தவறு நிகழ்ந்திருக்க முடியும்?

என்னுடன் பிறந்தவர்களும் பெண்களே. எனக்கு சிறுவர்களின் விளையாட்டில் இருந்த முரட்டுத்தனம் புதிராக ஆரம்பித்து, இன்றும் குழப்பமாகவே இருக்கிறது. ஏன் இவ்வளவு வித்தியாசங்கள்? இந்த இனத்தையே புரிந்துகொள்ள முடியாதவளாய் இருக்கிறேன்.

தனியாவர்த்தனம் செய்வதில் தான் சிறுவர்களுக்கு என்ன ஆனந்தம்? ஒரு மாதத்திற்கொரு முறை வந்தாலும் அவன் தந்தையுடன் விளையாடுவது, சாப்பிடுவது என நெருக்கமாக சகலமும் செய்தான். சுய ஒழுக்கத்தில் தொடங்கி பல விஷயங்களில் இருவரும் ஈருடல் ஓருயிர் போலத்தான். தந்தை பிம்பங்கள் அளிக்கும் உத்திரவாதத்தை எந்த ஆணாலும் தாண்ட முடியாதென்றே தோன்றுகிறது.திடீரென குதிரையில் வந்து இளவரசியையும் அவள் காலடி மண்ணையும் சேர்த்து வாரிச் சென்றுவிடும் காதலன் போல தயாவின் அப்பா தோன்றினார்.

தாய்-பிள்ளை பிரிவு சடாரென நடப்பதில்லை. அதற்கென சில விதிகள் உண்டு. பிள்ளைகள் வளர்ந்து பிரிவது ஒரு செய்தியா என வெளியில் பிறர் எண்ணக்கூடும். ஆனால், தன் மகன் ஓர் ஆண் என சாட்சியுடன் கேட்டு பரவசப்படும் தாய்க்கு, தன் சுயத்தை ஊட்டி வளர்த்து தன்னிடமிருந்து பிரித்தெடுக்கப்படும் நேரத்தில் அதே அளவில் வலியையும் உணர்வாள். நேற்று வரை என் கண்ணாடி பிம்பமாய் நினைத்துக்கொண்டிருந்த உருவம், இன்று என் கண்முன்னே மீண்டும் மீண்டும் அழிந்து உண்டாவது மிகப் பெரிய வலி.

ஆனால், இந்த உலகின் அதி உன்னத அதிசயம் தெரியுமா? மாற்றங்கள் தாய் என்றால் , நம் மனம் ஒரு குட்டி. எட்டடி, பதினாறடி தாண்டும் பரவசங்கள் அபிரிதமாய் அதற்குண்டு.

தன் உழைப்பால் பல ஆயிரம் மக்களுக்கு வேலை கொடுக்க முடிகிறது எனவும், சுய ஒழுக்க சீலர்களால் என்ன முடியுமென அடிக்கடி தயாவின் தந்தை கேட்பார். இரண்டுமிருக்கும் நபர்களும் இங்குண்டு எனச் சொல்லத் தோன்றும். ஆனால் இவற்றை மாற்றிவிட முடியுமென நம்பிய என் அகங்காரத்தை கிடப்பில் போட்டேன். மெல்ல மெல்ல இந்த இருவர்கள் அளித்த பிம்பத்தால் உலகில் நேர்த்தியான பர்ஃபெக்‌ஷனிஷ்டுகளின் தேவை குறைந்துவிட்டது என்னும் பிம்பத்தை நான் நம்பத் தொடங்கிவிட்டேன். இவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

இப்போது என் மகன் இந்த ஊரிலேயே மிகப் பெரிய நிறுவனங்களுக்கு சொந்தக்காரன். தயாவின் தந்தை இறந்தபிறகு, அவன் வேலை விஷயமாக வீட்டிற்கு வெளியே மாதக்கணக்காக இருப்பதால் எனக்கு இந்த வசதியான காப்பகம்.

இன்று என்னை அழைத்துச் செல்ல வரப்போகிறான்.கீழேயிருந்து குரல். என்னைத் தேடி யாரோ வந்திருக்கிறார்களாம். தயாவாக இருக்கும்.

இவை எல்லாவற்றையும் மூழ்கடிப்பதுபோல் வெளியே மழை தன் அதிகாரத்தை தொடங்கியிருந்தது.

– சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது (06/30/2009).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *