கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2022
பார்வையிட்டோர்: 3,946 
 

காமாட்சி காப்பி போட்டுக் கொண்டு இருந்தாள்,என்னம்மா இவ்வளவு நேரம் காப்பி போடுவதற்கு,எனக்கு வேலைக்கு போவதற்கு லேட் ஆகிறது என்றாள் சுபத்திரா,அவளுக்கு வேலைக்கு போகும் அவசரம்,காமாட்சிக்கு காப்பி போடும் அவசரம்,நீ இப்படி சமைத்து விட்டு பாத்திரங்களை போட்டு வைத்தால் நான் எங்கு வைத்து காப்பி போடுவது என்றாள் பதிலுக்கு,சரி சரி காப்பியை போட்டுத் தா,நான் உடுத்தப் போகிறேன் என்றாள் சுபத்திரா எனக்கு அப்படியே காலை சாப்பாட்டையும் பகல் சாப்பாட்டையும் கட்டி எடுத்து வைத்து விடு என்று கூறி விட்டு அறைக்குள் புகுந்துக் கொண்டாள் அவள்,அவசரமாக இரண்டு தோசைகளை வார்த்து எடுத்து வைத்தாள் காமாட்சி,எப்படியும் உடுத்தி மேக்கப் போட்டு வெளியில்வருவதற்கு அறை மணித்தியாலமாவது ஆகும் அதற்கிடையில் சாப்பாட்டை கட்டி மேசை மீது வைத்துவிட்டு தண்ணி போத்தலில் தண்ணியை பிடித்து வைத்தவள் குடையையும் சேர்த்து எடுத்து வைத்தாள் காமாட்சி,சுபத்திரா வேலைக்கு போவதும் போதும் வீட்டில் பன்னும் ஆர்பாட்டமும் போதும்,ஆனால் காமாட்சி எதுவும் சொல்ல மாட்டாள் செல்ல மகள் ஆச்சே,காலையில் எழும்பும் சுபத்திரா அவசரமாக பகல் உணவை மட்டும் சமைத்து வைத்து விடுவதுடன் அவள் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாக நினைப்பு,அதன் பின் மிகுதி வேலைகளை செய்து வைக்க வேலைக்காரி மாதிரி அம்மா காமாட்சி இருக்கும் போது என்ன கவலை சுபத்திராவிற்கு

காமாட்சியின் ஒரே மகள் சுபத்திரா,திருமணம் செய்தப் பின்பும் அம்மா வீட்டில் தஞ்சம் மாமியார் வீட்டில் இவள் அதிகாரம் எடுப்படவில்லை,அப்பா தாமோதரப்பிள்ளை இறந்தவுடன் அம்மா தனியாக இருப்பதாக கூறிவிட்டு அம்மாவுடன் வந்து இருந்துக் கொண்டாள் சுபத்திரா,திருமணம் செய்து இரண்டு வருடங்களாகி விட்டது இன்னும் குழந்தைகள் இல்லை,முதல் கணவனோடு சேர்ந்து இருக்கனுமே,மாதம் ஒரு முறை எட்டிப் பார்க்கும் கணவன் மதன்,மனைவி தாய் வீட்டில் இருப்பது அவ்வளவாகப் பிடிக்கவில்லை அவனுக்கு,அம்மாவை இங்கு வந்து இருக்கச் சொல்லு,இல்லை என்றால் அவர்கள் துணைக்கு வேலையாள் பார்த்து வைப்போம்,நாங்களும் அடிக்கடி போய் பார்த்துக் கொள்வோம் என்றதுக்கு சுபத்திரா ஒத்துக் கொள்ளவில்லை,எப்படியும் அவர்கள் வீட்டை விட்டு வந்து விட வேண்டும் என்று இருந்தவள்,இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டாள்,காமாட்சியும் மகள் வந்து இருப்பதை தடுக்கவில்லை,இந்த கோபம் இருவர் மீதும் மதனுக்கு அதனால் மாமியார் வீட்டுக்கு மாதம் ஒரு முறை வருவதே பெரிய விடயமாக இருந்தது

காமாட்சியும் மகளை கட்டி கொடுத்தப் பிறகு தன் வசதிக்காக சுபத்திராவை எதிர் பார்த்திருக்க கூடாது,மாப்பிள்ளையை இங்கு வந்து இருக்கச் சொல்லு என்று சர்வசாதாரணமாக கூறுவாள் காமாட்சி,எந்த மருமகன்களும் அதை விரும்புவது இல்லையே மதன் மட்டும் எப்படி இதற்கு சம்பதிப்பான்,அதனால் பல பிரச்சினைகள் வீட்டில்,மதன் வீட்டுக்கு போக கூடாது என்று நினைக்கும் சுபத்திரா,மகளை தன்னோடு வைத்துக்கனும் என்று நினைக்கும் காமாட்சி,நான் அங்கு வந்து இருக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மதன் பிறகு எப்படி குழந்தை குட்டி என்று எதிர் பார்ப்பது,மாதம் ஒரு முறை வரும் மதனுக்கும் சுபத்திராவிற்கும் வாக்கு வாதம் தான்,இடையில் மூக்கை நுலைக்கும் காமாட்சி கட்டி கொடுத்தப் பிறகும் மகள் குடும்ப விடயத்தில் தலையிடுவது அநாகரீகம் என்பதை கூட யோசிக்காமல் மகளுக்கு பரிந்துப் பேசுவதாக நினைத்து கொண்டு சிறிய சண்டையை பெரிதாகி விடுவாள் அவள்,மதன் போனப் பிறகு அம்மாவிடம் உன்னால் தான் அவர் கோபித்துக் கொண்டு போய்விட்டார் என்று பழியை காமாட்சி மீது போடுவாள் சுபத்திரா,அப்படி இருந்தும் மதன் வரும் ஒவ்வொரு முறையும் காமாட்சி நமக்கு என்ன அவர்கள் குடும்பமாட்சி என்று இருக்க மாட்டாள் ஏதாவது வாய் இல்லாமல் கூறிவிட்டு மகளிடமும் வாங்கி கட்டிக் கொள்வாள்,சிலர் அப்படி தான் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்,பிள்ளைகளை கட்டி கொடுத்தப் பிறகு அவர்களிடம் இருந்து நமக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அளவிற்கு அதிகமாக அவர்கள் விடயத்தில் நாங்கள் தலையிடக் கூடாது,கணவன் மனைவி இன்று அடித்துக் கொள்வர்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள் இது தான் நடைமுறை,காமாட்சிக்கு இது கூடவா புரியாது

சுபத்திராவிற்கு நன்றாகவே தெரியும் தன் மீது பிழை என்றாலும் அம்மா தனக்கு சாதகமாக தான் கதைப்பார்கள் என்று,அந்த தைரியத்தில் தானே மதன் குடும்பத்தை குறை கூறிக் கொண்டு இங்கு வந்து உட்கார்ந்து இருக்காள் சுபத்திராவும்,போதா குறைக்கு காமாட்சியும் மகளுடன் சேர்ந்துக் கொண்டு வாழப் போன வீட்டை குறையாக கதைப்பாள்,மகளுக்கு புத்திமதி கூறி திருத்த வேண்டிய தாய்,அதை மறந்து போனது தான் ஆச்சிரியம்,சுபத்திராவும் வேலைக்குப் போக வேண்டும் என்பதால் மட்டுமே காலையில் எழுந்து சமைக்கின்றாள்,இல்லை என்றால் அதையும் காமாட்சி தான் செய்ய வேண்டும்,சனி ஞாயிறு என்றால் காமாட்சி எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும், தன் மகளிடம் ஆயிரம் குறைகள் இருக்கு,அது எதுவும் காமாட்சி கண்ணுக்கு படுவது இல்லை,மதன் குடும்பத்தில் மதன் தங்கைகளிடம் மட்டும் குறை கண்டு பிடிப்பாள்,அவர்களும் வேலைக்கு போகிறவர்கள் தான் சுபத்திரா அளவிற்கு இல்லை,காலையில் எழுந்து சமைத்து அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்தப் பின்பு வேலைக்கு போகிறவர்கள்,சுபத்திரா வீட்டு வேலைகளுக்கு பயந்துக் கொண்டு வேலைக்கு ஓடுகிறவள்,பிறகு எப்படி ஒத்துப் போகும் எந்த நாளும் அவர்கள் சமைத்து வைக்க இவள் மகாராணிப் போல் சாப்பாட்டைக் கட்டிக் கொண்டுப் போனால் யார்தான் அமைதியாக இருப்பார்கள்,மதனுக்கு காலையில் காப்பி கூட மதன் அம்மா தான் போடுவார்கள்,அதற்கும் நேரம் இருக்காது சுபத்திராவிற்கு,பாத்ரூம் போய் நுழைந்தாள் என்றால் அவள் வெளியில் வருவதற்குள் பாதி வேலைகள் முடிந்து விடும் உடுத்தி மேக்கப் போட மிகுதி வேலைகளையும் முடித்து விடுவார்கள் மதன் அம்மாவும் தங்கைகளும்

சுபத்திராவின் போக்கு அவர்களுக்குப் பிடிக்கவில்லை ஏதாவது சொல்வார்கள் வேலை செய்து கொடுக்கா விட்டாலும் சுபத்திராவும் எதிர்த்துப் பேசுவாள்,நாங்கள் தனிக் குடித்தனம் போகிறோம் என்பாள்,நான் வேலை செய்வதற்கு வேளையாட்கள் வைத்துக் கொள்வேன் என்பாள்,இவளிடம் கதைத்து நேரத்தை வீணாக்குவதை விட அமைதியாக இருந்துக் கொள்வது நமக்கு நல்லது என்று நினைத்து சுபத்திராவுடம் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்கள் அவர்கள்,அதுவும் சுபத்திராவிற்கு பிடிக்கவில்லை,உங்கள் குடும்பம் என்னை மதிக்கவே மாட்டேங்குது என்று மதனிடம் குறை கூறுவாள்,அவளின் குணத்தை நன்கு அறிந்து வைத்திருக்கும் மதன் அவளுக்கு சார்பாக பேச மாட்டான்,அவன் குடும்பத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்,தனிக் குடித்தனம் போகும் எண்ணமும் அவனுக்கு இல்லை,அதனால் தான் மதன் மீது இவ்வளவு கோபம் சுபத்திராவிற்கு,காமாட்சியும் அதற்கு ஏற்ற வகையில் தூபம் போடுவாள்,நல்ல அம்மாவும் பிள்ளையும்,மகள் தன்னை வேலைகாரியை போல் நடத்துவது அவளுக்கு தெரியவில்லை வீட்டின் அனைத்து வேலைகளையும் காமாட்சி தான் செய்ய வேண்டும்,சமையல் செய்வதாக சமையல் அறையில் உள்ள அனைத்து பொருட்களையும் இழுத்துப் போட்டு சமையல் அறையை தலைகீழாக மாற்றி விடுவாள் சுபத்திரா,இத்தனைக்கும் இரண்டு பேருக்கு சமையல் செய்வதற்கு அவள் வேலைக்குப் போனப் பிறகு பாத்திரங்களை கழுவி அடுக்கி வைக்கும் முதல் கொண்டு துவைத்து துணிகளை காயவைத்து மடித்து வைக்கும் வரை செய்து வைப்பாள் காமாட்சி,மகள் வேலை முடிந்து வரும் போது காப்பி போட்டு வைக்கனும் வந்து காப்பியை குடித்து முடித்தவுடன் கட்டிலில் சாயும் சுபத்திரா தூங்கி எழும்ப வேண்டும் இல்லை என்றால் காமாட்சியிடம் எரிந்து விழுவாள்

அவசரமாக எதுவும் கேட்க வேண்டும் என்றாலும் அருமை மகள் தூங்கி எழும்பும் மட்டும் காத்துக் கொண்டிருப்பாள் காமாட்சி,இவளுக்கு தான் வேறு வேலை இல்லை,கணவன் வீட்டில் இதுவெல்லாம் சரி படவில்லை,தாய் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள் சுபத்திரா காமாட்சிக்கு இன்னும் புரியவில்லை மகள் வேலைகாரியை விட கேவலமாக நடத்துவது கட்டி கொடுத்தப் பிறகு எந்த இடைவெளியும் இல்லாமல் அதிகளவு உரிமை கொண்டாடினால் இந்த மாதிரி கஷ்டங்களையெல்லாம் அனுபவைத்தே ஆக வேண்டும் இதுவெல்லாம் எப்போது புரிந்துக் கொண்டு காமாட்சி சுபத்திராவிடம் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்கின்றாளோ அன்று தான் அவர்களின் குடும்பம் உருப்படும் அது மட்டும் காமாட்சி சம்பளம் இல்லாத வேலைக்காரி மாதிரி மகளுக்கு கட்டுப் பட்டு இருக்க வேண்டும் சுபத்திராவும் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும் கட்டிப் போனப் பிறகு தாய் வீட்டில் அதுகளவு உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ன தான் பிறந்து வளர்ந்த இடம் என்றாலும் கட்டியப் பிறகு ஒரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அப்போது தான் உறவுகள் நீடித்து நிலைத்திருக்கும்.நாட்கள் ஓடியது சுபத்திரா கர்ப்பம் ஆனாள் காமாட்சிக்கு மகள் தாய்மையடைந்தது அளவு கடந்த ஆனந்தம்,எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்,சுபத்திராவிற்கு அது வசதியாகவே இருந்தது,வேலைக்கு போகும் போது காமாட்சி சமையல் செய்து கட்டி அனுப்பி விடுவாள் சாதாரண வாந்தி தலைசுற்றல் என்றாலும் அன்று வேலைக்கு போகாமல் படுத்து கிடப்பாள் சுபத்திரா,நேரத்திற்கு சாப்பாடு அது இல்லாம் பழம்,பழச்சாறு என்று பார்த்து பார்த்து கொடுத்து மகளை நன்றாகவே கவனித்துக் கொண்டாள் காமாட்சி,மதன் வீட்டுக்கு சுபத்திரா போவதாக இல்லை மதன் பிடிவாதத்தை விட்டு விட்டு தற்போது எல்லாம் மாமியார் வீட்டில் வந்து தங்கிவிடுவான்

காமாட்சிக்கு வேலை அதிகம் தான் மதனுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் கொஞ்சம் பன்னி கொடுத்து விடு அம்மா என்று சுபத்திரா கூறும் போது காமாட்சிக்கு மறுப்பு சொல்ல முடியாது சரியென்று பன்னி போடுவாள்,இருவருக்கும் வேலை செய்தே சில நேரம் அலுத்துப் போய்விடும் அப்பாடா என்று வந்து உட்காரும் காமாட்சியிடம்,ஏதாவது வேலை சொல்வாள் சுபத்திரா,மதனுக்கு அது பிடிக்காது,நீ போய் செய்,இப்படியே ஒரு வேலையும் செய்யாமல் இருந்தால் பிரவச நேரம் சிரம்மபடுவ என்பான் அவன்,நான் வேலைக்கு போறேன் தானே என்பாள் சுபத்திரா,அங்கே ஓடி ஆடியா வேலை செய்ற,போய் உட்கார்ந்தால் அந்த இடத்தை விட்டு நகராத வேலை தானே பிறகு ஏன் அத்தையிடம் வேலை செய்ய சொல்ற என்பான் மதன்,பரவாயில்லை தம்பி நான் எடுத்துக் கொடுக்கிறேன் என்று காமாட்சி எழுந்து போய் எடுத்துக் கொண்டு வந்து தந்து விட்டு மறுப்படியும் உட்காருவாள்,இப்படியே மகளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்தது தான் மிச்சம் என்று வாய் மட்டும் வரும் வார்த்தையை அடக்கி கொள்வான்

நமக்கு ஏன் வேண்டாத வேலை நல்லதிற்கு காலம் இல்லை என்று நினைத்து விட்டு அமைதியாக இருப்பான் மதன்,எனக்கென்று எதுவும் சிரம்ம பட்டு செய்யாதீங்கள் அத்தை நான் எதுவும் சாப்பிடுவேன் என்பதை அடிக்கடி நினைவுப் படுத்தி விடுவான் மதன்,அவனுக்கு காமாட்சி எந்த நேரமும் வேலை செய்வது பிடிக்காது,சுபத்திரா எந்த வேலையும் செய்யாமல் அம்மாவிடம் வேலை வாங்குவது நன்றாகவே அவனுக்கு தெரியும்,வாய்திறந்து எதுவும் சொல்ல முடியாது கட்டியப் பிறகும் மகளை தன்னோடு வைத்திருக்கும் காமாட்சியின் மீது தான் கோபம் வரும் மதனுக்கு,புகுந்த வீட்டில் விட்டிருந்தால் ஏதோ பயந்து கொஞ்சம் வேலையை சரி செய்து இருப்பாள் சுபத்திரா,தற்போது அநியாயத்திற்கு வேலை எதுவும் செய்யாமல் இருக்காள் சுக பிரசவம் ஆகாது என்று மதன் நினைத்துக் கொள்வான்,குனிந்து நிமிர்ந்து வேலை செய்பவர்களுக்கே சில நேரம் சுக பிரவசம் ஆகுவது இல்லை,சுபத்திராவிடம் மதன் அதை சொன்னால் கோபம் வரும் அவளுக்கு,எனக்கு வேலை செய்ய முடியவில்லை நான் என்ன வேண்டும் என்றா உட்கார்ந்து இருக்கேன் என்று சிடுசிடுப்பாள்,ஆமாம் நீ மட்டும் தான் அதிசியமாக பிள்ளை பெக்க போற,கட்டிய நாளில் இருந்தே சோம்பேறி தான்,பிறகு எப்படி இப்ப மட்டும் வேலை செய்யப் போற,உனக்கு ஏத்த அம்மா,நான் வாய் திறந்து இதையெல்லாம் சொன்னால் அம்மாவும் பிள்ளையும் என்னிடம் சண்டைக்கு வருவாங்கள்,எனக்கு ஏன் வீண் வம்பு என்று மனதில் நினைத்து கொண்டு அமைதியாக இருப்பான் மதன்,உடல் எடை அதிகளவு கூடி இருக்கு என்று செக்கப் போகும் போது டாக்டர் சுபத்திராவிடம் சொல்வார்கள்,எந்த நாளும் நடை பயிற்சி செய்வது நல்லது என்பார்கள்,சரியென்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு வரும் சுபத்திரா,அதை அத்தோடு மறந்து விடுவாள்,மதன் அதை சொன்னால் எனக்கு எங்கு நேரம் இருக்கு என்பாள் அவள், நீ தான் ஐந்து மணிக்கெல்லாம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து விடுவ அதன் பிறகு கொஞ்சம் நடக்கலாம் தானே என்பான் அவன்,எனக்கு அலைச்சல் கஷ்டமாக இருக்கு என்று ஏதாவது காரணம் கூறுவாள் அவள்,அதற்கு மேல் உன் விருப்பம் என்று அவன் அமைதியாகி விடுவான்

காமாட்சி நன்றாக சாப்பிட வேண்டும் என்று சுபத்திராவை அதிகளவு சாப்பிட சொல்வதும் மதனுக்கு பிடிக்காது தான்,தாயும் பிள்ளையும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகளவு சாப்பிடுவதில் எந்த அர்தமும் இல்லை,சத்தான உணவுகளை சிறிதளவு சாப்பிட்டாலே போதும்,கீரை காய்கறிகள் பழவகை பால் அளவாக எடுத்துக் கொண்டால் போதும்,சாதத்தை அள்ளி போட்டு வயிறு முட்ட சாப்பிட வேண்டும் என்பது இல்லை இதனால் உடல் எடை தான் அதிகரிக்கும்,பிறந்த குழந்தைக்கு தாய்பால் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தில் அதிகளவு சாப்பாட்டை திணித்து குழந்தை பிறந்தப் பிறகும் உடல் எடையை குறைத்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் பாதி பெண்கள் காமாட்சியிடம் சொல்ல முடியுமா?மகளை சாப்பிட வேண்டாம் என்கிறார் மாப்பிள்ளை என்று ஊர் மக்களையே கூட்டிவிடுவாள் அவள்,மதன் அம்மா சுபத்திராவை பார்க்க அடிக்கடி வருவார்கள் உடம்பை பார்த்துக்க என்பதோடு முடித்துக் கொள்வார்கள்,அதை மீறி எதுவும் சொல்ல மாட்டார்கள்,மதனுக்கும் அது தான் சரியென்று படும்,மதன் இரண்டு கிழமைக்கு ஒரு தடவை சுபத்திரா வீட்டுக்கு வருவான் இரண்டு நாட்கள் இருப்பான் பிறகு போய்விடுவான்,அவளுக்கு ஏழு மாதம் ஆனப் பிறகு தொடர்ந்து சுபத்திரா வீட்டில் தங்க ஆரம்பித்தான் ஆண் துணை இல்லாத வீடு,ஏதும் அவசரம் என்றால் யாரும் இல்லை என்பதால் மட்டும் தங்கினான்,சுபத்திராவின் அதிகமான எடை,அவளுக்கு கால்கள் வீங்கி நடக்க முடியாமல் கொஞ்சம் சிரம்மபட்டாள்,சுபத்திரா இரவில் வெந்நீரில் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் வைத்து இருப்பாள், மதன் ஏதாவது தைலம் தேய்த்து விடுவான்,நாட்கள் ஓடியது டாக்டர் சொன்ன திகதியில் சுபத்திராவை மருத்துவ மனையில் சேர்த்து விடுவோம் என்றான் மதன் காமாட்சி வேண்டாம் மாப்பிள்ளை வருத்தம் வந்தப் பிறகு போனால் போதும் என்றாள்,இல்லை அத்தை இந்த விடயத்தில் விளையாட முடியாது அவர்கள் சொன்ன திகதியில் மருத்துமனையில் சேர்த்து விடுவது தான் நல்லது என்று அவன் பிடிவாதத்தில் மருத்துவ மனையில் சுபத்திராவை அட்மிட் ஆக்கிவிட்டான் அன்று இரவு அவளுக்கு வருத்தம் வந்து விட்டது குழந்தையின் தலை திரும்பவில்லை என்பதால் சிசேரியன் பன்னி குழந்தையை எடுத்து விட்டார்கள் அழகான ஆண் குழந்தை

மதன் காமாட்சிக்கு அளவில்லாத ஆனந்தம்,சுபத்திரா மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய கட்டாயம் அதன் பிறகு வீட்டுக்கு வந்து படுத்தவள் ஐந்து ஆறு நாட்கள் எழுந்து கூட நடக்க முடியவில்லை மதன் பெற்றோர்கள் வந்து பேரக்குழந்தையை பார்த்து விட்டு மகன் ஏதாவது நினைத்துக் கொள்வான் என்பதற்காக ஒரு நாள் மட்டும் சுபத்திரா வீட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் புறப்பட்டு சென்று விட்டார்கள்,அதற்கும் உங்கள் வீட்டு ஆட்களுக்கு என்ன அவசரம் உடனே கிளம்பி விட்டார்கள் என்றாள் சுபத்திரா,வீட்டில் யாரும் இல்லை அதனால் போய் விட்டார்கள் என்றான் மதன்,எனக்கு தான் தலையெழுத்து,இங்கு வந்து உட்கார்ந்து இருக்கேன்,அவர்களுக்கு என்ன வந்தது,போய் விட்டார்கள் என்று மனதில் ஓடியது,காமாட்சி தனியாக வேலை செய்வதற்கு அவதிப் பட்டாள்,மதனுக்கு சகிக்கவில்லை உடனே ஒரு வேலையாளுக்கு ஏற்பாடு செய்து விட்டான்,நாட்கள் ஓடியது குழந்தை ரக்‌ஷனுக்கு ஒரு மாதம் முடிந்துவிட்டது,மதன் மெதுவாக சுபத்திராவிடம் சொன்னான் தற்போது நம் வீட்டில் யாரும் இல்லை,அம்மா அப்பா மட்டும் தான் இருக்கார்கள் அங்கு போய் விடுவோம் என்றான்,நாங்கள் போய்விட்டாள் அம்மா தனியாக இருப்பார்கள் என்றாள் சுபத்திரா,தற்போது வேலைக்கு வரும் வள்ளி தொடர்ந்து இங்கு இருப்பதற்கு ஏற்பாடு செய்து விடுவோம் என்றான் மதன் அது முடியாது யாரு சம்பளம் கொடுப்பது வள்ளிக்கு இவர்கள் ஒரு ஆளுக்காக சம்பளம் கொடுத்து வைத்திருப்பது அநியாயம் அப்பாவின் பென்ஷன் காசில் தான் அம்மா சாப்பிடுறார்கள் வள்ளிக்கு சம்பளம் கொடுத்து வைத்திருப்பது தேவையில்லாத வேலை

அம்மாவிற்கு பிறகு இந்த வீடு எனக்கு தான் பேசாமல் இங்கு இருந்து விடுவோம் என்றாள் சுபத்திரா,அது அப்போது பார்த்துக் கொள்வோம் தற்போது நம் வீட்டுக்கு போய் விடுவோம் என்றான் மதன்,நீங்கள் போவதென்றால் போங்கள்,என்னை கூப்பிடாதீங்கள் என்றாள் சுபத்திரா,இது என்ன பேச்சி ரக்‌ஷன் எனக்கும் பிள்ளை தான் அவனை விட்டுவிட்டு நான் மட்டும் தனியாக இருக்க முடியாதே நீ பிடிவாதம் பிடிக்காமல் என்னுடன் வா என்றான் மதன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை சுபத்திரா,மதனுக்கு இக்கட்டான நிலமை,அம்மா அப்பா வயதானவர்கள் ஒரே மகன் அவர்களை தனியாக விடவும் முடியாது,ரக்‌ஷனை பிரிந்து இருக்கவும் முடியாது,காமாட்சியை தனியாக விடவும் முடியாது,ஒரே குழப்பத்தோடு மதன் அவர்கள் வீட்டுக்கு போனான்,அவனை கண்டதும் பெற்றோர்களுக்கு அளவில்லாத சந்தோஷம் எப்போது ரக்‌ஷனை தூக்கி கொண்டு இங்கு வருவதற்கு இருக்கீங்கள் என்றார்கள்,மதன் அமைதியாக இருந்தான்,அதன் பிறகு அவர்கள் எதுவும் சொல்லவில்லை,மதனாகவே சொன்னான் சுபத்திரா அவளுடைய அம்மாவை தனியாக விட்டு விட்டு வருவதற்கு யோசிக்கிறாள் என்றான்,அது இல்லையடா காரணம்,அவளுக்கு தனியாக வேலை செய்து சமாளிக்க முடியாது இங்கு வந்தால்,அவ அம்மாவையே வேலைகாரியைப் போல் நடத்துகிறாள்,காமாட்சிக்கு அது தெரியவில்லை,பாவம் அவர்கள் அம்மா மீது பாசம் எல்லாம் இல்லை நன்றாக பயன் படுத்திக் கொள்கிறாள் அது தான் உண்மை,நாங்கள் ஏதாவது சொன்னால் உனக்கும் கோபம் வரும் என்றார்கள் மதன் பெற்றோர்கள்,எனக்கும் அது தெரியும்,என்ன முடிவு எடுப்பது என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது என்று பெருமூச்சி விட்டான் மதன்

சரி நீ ஒன்றும் யோசிக்காதே,சுபத்திரா விடுகின்ற பிழை,கட்டியப் பிறகும் அம்மா வீட்டில் இருக்க யோசித்து இருக்க கூடாது,தற்போது அதை கதைத்து வேலையில்லை,நீ முன்பு மாதிரி அங்கும்,இங்கும் மாறி மாறி இருந்துக் கொள் என்றார்கள்,எனக்கு அது சரியென்று படவில்லை என்றான் மதன்,என்னடா செய்வது கட்டியப் பிறகு சுபத்திரா முறைப்படி இங்கு தான் இருந்திருக்க வேண்டும்,அதை விட்டு விட்டு அவளின் குடும்பம் தான் முக்கியம் என்று போய் ஒட்டிக் கொண்டவளை என்ன செய்வது,காமாட்சியும் எதிர்ப்பு கூறவில்லை உறவுகளுக்கிடையே பாசமும் வேண்டும்,கொஞ்சம் இடைவெளியும் வேண்டும் அதை சரியாக புரிந்துக் கொண்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றார் மதன் அம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *