பொறுப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 4,439 
 
 

என்னங்க..ஞாயித்து கிழமை காஞ்சிபுரம் போயிட்டு வரலாங்க..

இல்லமா..அன்னைக்கு நானும் எங்க குரூப் மெம்பர்ஸும் மெரினா பீச்ச சுத்தம் செய்ய போறோம். நிறைய வி.ஐ.பி எல்லாம் வர்றாங்க..

ப்ளீஸ்’ங்க..இப்படி பொறுப்பில்லாம பேசறீங்களே..

இங்க பாரு சுசி, நீ தான் கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாம பேசற..ரொம்ப கஷ்டப்பட்டு பெர்மிஷன் வாங்கி இருக்கோம். அங்க வந்து பாரு, எவ்ளோ பேரு இன்டெரெஸ்ட்டா கலந்துக்குறாங்கன்னு..

உங்ககிட்ட பேச முடியாது. நீங்க பீச்சுக்கே போங்க, நானும் ப்ரவீனும் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்துடறோம்.

“ரொம்ப தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு அலுவலகம் கிளம்ப பைக்கை ஸ்டார்ட் செய்தான் ரகு. தொண்டை கமறியது, லேசாக இருமி உமிழ்நீரை ஓரமாக துப்பி விட்டு கிளம்பினான்.

அன்று மாலை, நண்பர்களுடன் ஞாயிறு ப்ரோக்ராமை விவாதித்து கொண்டு இருந்தான். “ப்ரண்ட்ஸ்..கவனமா கேளுங்க..பீச்சுல இருக்குற பப்ளிக் பார்க்கிங் ஏரியா பூரா கிளீன் பண்றோம். ஞாபகம் வச்சுக்கோங்க, மொத்தம் மூணு வகையா கழிவுகளை பிரிக்கணும். மக்கும் குப்பை , மக்கா குப்பை அப்புறம் மிருக கழிவுகள் எல்லாத்தையும் தனித்தனியா பிரிச்சு, அது அதுக்கான தொட்டில சேகரிக்கணும். எல்லாருக்கும் ஓகேவா..” என்றான் ரகு.

“ஏய் ரகு..இந்த மனித கழிவுகளை என்ன செய்ய..” கிண்டலாக கேட்ட நண்பனை முறைத்து பார்த்தான்.

ஐயோ சீ..த்தூ தரையில் துப்பினார்கள் சிலர்.

மீட்டிங் முடிந்து ரகுவும் நண்பர்களும் டீ குடித்து கொண்டிருந்தார்கள். “டேய் ரகு, டீ சப்புன்னு இருக்கு..” என்றான் ஒரு நண்பன்.

“நம்ம கிட்ட இருக்குற பட்ஜெட் அவ்ளோ தான்..புடிக்கலைன்னா துப்பிட்டு போ.. ஆனா டீ கப்ப மட்டும் கரெக்ட்டா குப்பை கூடையில் போடு” என்று சிரித்து கொண்டே கூறினான் ரகு.

அனைத்து திட்டமிடலும் முடிந்து வீட்டிற்கு வந்தான், வீடு பூட்டியிருந்தது. “கோவிச்சிக்கிட்டு இன்னைக்கே ஊருக்கு போயிட்டாளா?” யோசித்து கொண்டே பக்கத்து வீட்டில் விசாரித்தான். சுசி, பிரவீனை அழைத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு போயிருக்கிறாள் என்றார்கள்.

ஹாஸ்பிட்டலுக்கு சென்றான், சுசி பிரவீனை மடியில் வைத்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

என்னாச்சு சுசி?

தெரியலைங்க..காலையில லேசா ஜுரம் இருந்தது. சாயந்தரம் ஜுரம் அதிகமாகிடுச்சு, வாந்தி வேற எடுத்திட்டான். அதான் டாக்டர்’கிட்ட காட்டலாம்னு கூட்டிகிட்டு வந்தேன்.

“என்னம்மா..ஒரு மூணு வயசு பையனை பொறுப்பா பாத்துக்க முடியலைன்னா எப்படி..” என்றவனை முறைத்து பார்த்தாள் சுசி.

ஏதோ சொல்ல வாய் திறந்தவளை அட்டெண்டர் அழைத்தார். “நீங்க இப்ப போய் டாக்டரை பாருங்க..”

டாக்டர், பிரவீனை பரிசோதித்து விட்டு கேட்டார், ஏதாவது தரையில் கிடந்த தின்பண்டத்தை சாப்பிட்டானா?

“தெரியல டாக்டர்..” என்றாள் சுசி.

ஒண்ணும் பிரச்சினையில்லை.. டெம்ப்ரேச்சர் நார்மலா தான் இருக்கு. ஏதோ சின்னதா அலர்ஜி ஆகியிருக்கு அவ்ளோதான். நான் எழுதி தர மாத்திரையும் டானிக்கும் மூணு வேளை குடுங்க, சரி ஆயிடும். “நத்திங் டு ஒர்ரி” என்றார்.

மருந்து சீட்டை வாங்கி கொண்டு கிளம்பும் போது டாக்டர் சொன்னார், “குழந்தையை மண்ணுல எல்லாம் விளையாட விடாதீங்க..இங்க நிறைய பேர் தரையில தான் எச்சில் துப்பறாங்க..பொறுப்பில்லாத இடியட்ஸ்..” என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *