ஊரில் ஒரு மாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 5,422 
 

துபாயிலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேருவேன் என்ற கோபியின் வார்த்தையில் ஆனந்த பரவசமடைந்தார்கள் அவனது மனைவியும் குழந்தைகளும் உறவினர்களும். மதியம் ஒரு மணிக்கு கோபியின் மனைவியும் குழந்தைகளும் அவனது அப்பா, தம்பி, மச்சான் என ஒரு கூட்டமே மார்த்தாண்டத்திலிருந்து வாடகைக்கு கார் பிடித்து மதியம் மூன்று மணிக்கே விமான நிலையம் வந்து காத்திருந்தனர். மணி ஐந்தாகியும் விமானம் வந்தபாடில்லை.

’’அம்மா அப்பா எப்பம்மா வருவாரு!’’ என்ற அவளது மூத்த மகனின் கேள்விக்கு ‘’இப்ப வந்துடுவாரு!’’ என்று பதில் சொல்லி சலித்து போயிருந்தாள் கோபியின் மனைவி சுசீலா. வழக்கமாக மாலை நான்கு மணிக்கு வரவேண்டிய விமானம் காலதாமதப்பட்டு ஒரு வழியாக ஆறு மணிக்கு வந்து சேர்ந்தது. தூங்கிபோயிருந்த மகளை தோளில் போட்டுக்கொண்டு வரவேற்பறையில் காத்திருந்த தனது மனைவி குழந்தைகளையும் உறவுக்காரர்களையும் தூரத்தில் பார்த்ததும் சந்தோஷத்தில் கை அசைத்தான் கோபி.

“ செல்வி இங்க பாரு, அப்பா வந்துட்டாரு!” தோளில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக உலுக்கி எழுப்பினாள் சுசீலா. குழந்தை பேய் முழி முழித்தது. கோபி ஆர்வத்துடன் குழந்தையை தூக்க, தூக்க கலக்கத்திலிருந்த குழந்தை வீல்லென்று கத்தி விமான நிலையத்தையே ஒரு வழி பண்ணியது.

’’ ஆளு மனசிலாயிருக்காது!’’ என்றாள் சுசீலா. செல்வி பிறந்து மூன்று மாதங்கள் ஆன போது கோபி துபாய் சென்றவன் திரும்ப இப்பொழுது தான் தனது குழந்தையை முதல் தடவையாக பார்க்கிறான். கோபி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு விமானத்தில் பணிப்பெண்கள் கொடுத்த சாக்லெட்களை எடுத்து இருவருக்கும் தந்தான்

’’ யாத்திரையெல்லாம் சொகமா இருந்துதா?’’ என்ற சுசீலாவின் கேள்விக்கு ‘ஆமா’ என்று பதிலளித்துவிட்டு விமான நிலையத்தைவிட்டு வெளியேறினான். அவன் கொண்டு வந்த சூட்கேஸ்களை ஆளுக்கொருவராக தூக்கி டாக்சியின் டிக்கியிலும் டாப்பிலும் வைத்து கட்டிவிட்டு மார்த்தாண்டம் நோக்கி டாக்சி நகர ஆரம்பித்தது.

விமான பயணத்தின் போது இலவசமாக கிடைத்த டீ, காபி சாக்லெட் ஆகியவற்றை ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தான் கோபி. ‘’ அப்படியா!’’ என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்தான் அவனது தம்பி சாமிநாதன்.

‘’ எனக்கும் ஒருநாள் பிளைன்ல ஏறணும், அண்ணன் மனசு வெச்சு ஒரு விசா அனுப்பி தரணும்!’’

’’ நீ பாஸ்போர்ட் கூட இன்னும் எடுக்கல, பிறகெப்படி விசா அனுப்ப முடியும்!’’ அவனது பதிலில் வாயடைத்தான் அவனது தம்பி.

‘’ பிளைன்ல குடிக்கியதுக்கு விஸ்கி எல்லாம் தருவினுமோ?’’ கோபியின் தந்தை ஆர்வமாய் கேட்டார்.

‘’ ம், ஓசுல கிட்டியதில்லா!’’

‘’ அப்பம் ஐயா குடிச்சு காணும், என்னத்துக்கு அத குடிக்கணும், அத குடிக்கேலெங்கி நேரம் வெளுக்காதோ!” சுசீலாவின் கேள்விக்கு வாய்விட்டு சிரித்தான் கோபி. வழி நெடுகிலும் பேச்சும் சிரிப்புமாக வீடு வந்து சேர்ந்தார்கள்.

இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு மெல்ல சூட்கேசை திறந்தான் கோபி. மொத்த பொருட்களையும் யாருக்கெல்லாம் தரவேண்டுமென்று பிரித்து சுசீலாவிடம் கொடுக்க சூட்கேஸ் காலியானது. மூன்று வருட இடைவெளியில் ஊருக்கு வந்த கோபிக்கு தனது மனைவியிடம் ஆசையாய் நாலு வார்த்தை பேச ஆர்வம் முட்டிக்கொண்டு வந்தது ஆனால் உறவுக்காரர்கள் தேவையற்ற பேச்சுகள் பேசி நேரத்தை நகர்த்திக்கொண்டிருந்தனர். ஒருவழியாக அறைக்கதவு சாத்தப்பட்டபோது மணி இரண்டு ஆகியிருந்தது. சுசீலா பேசிக்கொண்டிருந்த போதே கொட்டாவி விட்டு பேச்சு தடைபட்டது. தூக்கம் அவளை ஆட்கொள்ள அப்படியே தூங்கிப்போனாள்.

மூன்று நாட்கள் நகர்ந்தபோது உறவுக்காரர்களின் கூட்டம் குறைந்திருந்தது.

‘’ ஒரு டார்ச்லைட் கேட்டப்ப தரல்ல நீ!’’ என்றும் ’’பேரனுக்கு ஒரு ஹீரோ பென்னு தந்தியா என்றும் சில உறவுக்காரர்கள் வசவு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு புறப்பட்டு போனார்கள்.. வீட்டில் வேக வைத்த புட்டு பயறு பப்படத்தை ஒன்றாய் கலந்து கையால் உருண்டை பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த போது கோபியின் பால்ய கால நண்பர்கள் வந்தார்கள்

” கோபி ஆளு மாறீட்ட! முன்ன கண்டதுக்கு இப்போ கொஞ்சம் பருத்தில்லா இருக்கிய!’’ அவனது நண்பர்களில் ஒருவன் சொன்னபோது கோபியின் உதட்டோரம் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது.

‘’ நம்ம சாஸ்தான் கோவில்ல திருவிழா வருது, ஒருநாள் திருவிழா செலவு உன்னோடது, புதுசா தாலிக்கயிறுகள்ன்னு நாடகம் எழுதி வெச்சிருக்கோம், மொத்த செலவு ஏழாயிரம் ஆகும், நீதான் அன்பளிப்பு பண்ணணும்!’’ நண்பனின் வார்த்தைகளைக்கேட்டு வசமாய் மாட்டிவிட்டோம் என்பதை உணர்ந்தான் கோபி. அறைக்குச்சென்று ஆயிரம் ருபாய் பணத்தை எடுத்து வந்து நண்பர்களிடம் தந்தான்.

‘’ இத என் அன்பளிப்பா வெய்யுங்க மொத்த நாடகச் செலவ என்னால ஏத்துக்க முடியாது. என்றான் கோபி.

‘’ சே, உன்ன நம்பி நோட்டீஸ் வேற அடிச்சாச்சு, நாடகத்துல உனக்கும் ஒரு வில்லன் ரோல் உண்டு, நீ பாரின் போய் வந்ததுக்கு ஒரு மதிப்பு வேண்டாமா?’’நண்பர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் தடுமாறி ஒருவழியாக ஐந்தாயிரம் ருபாய் தருவது என்று சம்மதித்தான்.

’’ இதெங்கிலும் கிட்டிச்சே!’’ என்ற சந்தோஷத்துடன் நகர்ந்தார்கள் அவனது நண்பர்கள்.

‘’ பொண்ணு கெட்டி ரெண்டு குழந்தைகளுக்கு அப்பனும் ஆயாச்சு, இனியும் நாடகம் நடிக்கப் போகணுமா? கண்ட பொண்ணுங்க கூட நின்னு என்னத்துக்கு நாடகம் நடிக்கணும்!’’ சமையலறையில் நின்று கொண்டு புலம்ப ஆரம்பித்தாள் சுசீலா.

அன்றிரவு ஒன்பது மணிக்கு நாடக ரிகர்சலுக்கு சென்றான் கோபி.

“ பதினெட்டாவது சீன்ல உங்களுக்கு ஒரு கிளப் டேன்ஸ் உண்டு, நம்ம நாடகத்துக்கு அனுராணி தான் வருவா, கோபி நீயும் அவகூட சேர்ந்து ஆடணும் கேட்டியா!’’ அந்த நாடகத்தின் இயக்குநர் மணிமாறன் சொன்னபோது கோபிக்கு அது நெருடலாக இருந்தது.

தன் மனைவி சிசீலாவும் நாடகம் பார்க்க வருவாள். நடிகைகளுடன் சேர்ந்து நின்று வசனம் பேசுவதே அவளுக்கு பிடிக்காது இதில் அனுராணியோடு சேர்ந்து ஆட்டம் போட்டால் மேடைக்கு ஏறி வந்து அனுராணியின் கன்னத்தில் பளாரென்று அறைந்து தனது கையைப்பிடித்து இழுத்துச்சென்றாலும் செல்வாள் என்ற பயம் அவனை பயமுறுத்தியது.

ஏழு நாட்கள் கழிந்து நாடக தினம் வந்தது. கோபி மேக்கப் போட்டுக்கொண்டு மூடியிருந்த திரைச்சீலையின் ஓட்டை வழியாக மேடையின் முன் அமர்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்தான். இரண்டாவது வரிசையில் சிசீலாவும் குழந்தைகளும் அமர்ந்திருந்தனர்.

குறிப்பிட்ட அந்த பதினெட்டாவது சீனில் பொன்மேனி உருகுதே என்ற பாடலுக்கு ஒருவித மோக கிறக்கத்துடன் ஆடிக்கொண்டிருந்தாள் அனுராணி. மதுக்கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தான் கோபி. அனுராணி அவனை சுற்றி சுற்றி வந்து உரசுவது போல் ஆடி உசுப்பேற்றி விட்டாள். கோபி தன்னிலை மறந்து அவளுடன் ஆடத்தொடங்கினான். ஆடி முடியும்வரை ஒருவித பதட்டம் அவனிடம் ஒட்டியிருந்தது. நல்லவேளை சுசீலா மேடைக்கு ஏறிவந்து மானத்தை வாங்கவில்லை.

ஊருக்கு வந்து பதினைந்து தினங்கள் கழிந்திருந்தது கையிலிருந்த பணம் முழுவதும் காலியாகி கழுத்தில் கிடந்த செயினை அடகு வைத்து வீட்டுச்செலவுக்கு பணம் தந்தான். துபாயில் அரபியின் வீட்டில் சமையல்காரனாக மூன்று வருடங்கள் வேலை பார்த்தது போதும் இனி ஊரில் ஏதாவது வேலை தேடிக்கொள்ளலாம் என்று நினைத்து வந்தவன் ஊரில் பிரபல ஹோட்டல்களிலெல்லாம் சென்று தனக்கொரு வேலை கிடைக்குமா என்றும் துபாயில் அரபியின் வீட்டில் நன்றாக சமைப்பேன் என்று சொல்லி வேலை கேட்டும் யாரும் அவனுக்கு வேலை தருவதாக இல்லை.

‘’ பேருக்குத்தான் பாரின்காரன் பொண்டாட்டி, இப்போ பிச்சக்காரி மாதிரி நூறுக்கும் இருநூறுக்கும் அடுத்தவங்கள தெண்டணும்!’’ செலவுக்கு காசு கிடைக்காத கோபத்தில் சுசீலா வசவு வார்த்தைகளை எந்த வித கூச்சவுமின்றி அவன் காதுபடவே சொன்னாள்.

அவளின் முகமாற்றம் பொறுக்க முடியாமல் மீண்டும் துபாய்க்கு செல்வது என தீர்மானித்து அரபியோடு தொடர்பு கொண்டபோது இரண்டே வாரத்தில் விமான டிக்கெட்டும் விசாவும் வந்து சேர்ந்தது. அன்று காலை ஏழு மணிக்கு துபாய் செல்ல வீட்டை விட்டு புறப்படத்தயாரானான். துபாயிலிருந்து வரும்பொழுது அழைத்து வர வந்த உறவினர்கள் யாரும் போகும் போது இல்லை. விமான நிலையம் வரைச்செல்ல டாக்சியும் இல்லை. ஒற்றை சூட்கேசை கையில் தூக்கியபடி குழந்தைகளின் கன்னத்தில் முத்தம் வைத்து மனைவியின் கையை அன்பாய் பற்றி, முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளே அடக்கி வைத்தான்.

சுசீலாவும் குழந்தைகளும் சிறிது தூரம் வரை வந்து அவன் போவதையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

‘’ போன உடனே வீட்டுச்செலவுக்கு பணம் அனுப்பி வைக்கணும்!’’ என்ற சுசீலாவின் குரல் பின்னால் வந்து அவன் காதில் விழுந்தது.

வழிநெடுகிலும் அரபியை நினைத்தபடியே நடந்தான் கோபி. சமையலில் உப்பு குறைந்தாலோ காரம் கூடினாலே அவன் முகத்தில் எறிந்துவிட்டு மீண்டும் சமைக்கச் சொல்லும் கொடூரக்கார அரபியிடமிருந்து தப்பித்து வந்து மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக ஊரில் வாழலாம் என்று நினைத்து வந்தவனுக்கு ஊரில் பணம் இருந்தால்தான் மனைவியும் மதிப்பாள் இல்லையென்றால் அவளின் இளக்கார பார்வைக்கு பலியாக வேண்டும், இதைவிட கொடூரக்கார அரபியிடம் மீண்டும் வேலைக்குச் செல்வது என்ற அவனது தீர்மானம் நல்லதென்றே பட, திருவனந்தபுரம் சுப்பர் பாஸ்ட்டில் ஏறி அமர்ந்தான். ஊரில் நின்ற ஒரு மாத நிகழ்வுகள் அடுத்த மூன்று வருடங்கள் வரை அசை போட அவனோடு பயணமானது.

– மே 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *