நவராத்திரிப் பரிசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 2,087 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நவராத்திரிக்குப் பத்துத் தினங்களுக்கு முன்னிருந்தே என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள். அவள் தொந்தரவு பொறுக்க முடியாததாய் இருந்தது. ‘இந்தப் பெண்ணோடு போய் ஏன் சிநேகம் வைத்துக் கொண்டோம்?’ என்றும் சில சமயம் நான் நினைத்ததுண்டு. கௌரி எதிரகத்துப் பெண்; பத்து வயதிருக்கும். முப்பது ரூபாய் சம்பளத்தில் ஏழு ஜீவன்கள் பிழைக்கவேண்டும். மகாலட்சுமி – கௌரியின் தாயார் – இந்தக் காலத்து ஸ்திரீகளின் கோஷ்டியில் சேராதவள். ஊரில் எத்தனை ‘பாஷன்’ தலை விரித்து ஆடட்டும்; அந்த அம்மாளின் கொசாம் புடைவையும், தலை முடிச்சும், நெற்றியில் மதுரைக் குங்குமமும் சிறிதாவது மாறுதல் அடைய வேண்டுமே! கௌரி நல்ல சிவப்பு; தந்தம் மாதிரி உடம்பு; தலை நிறைய மயிர். பொதுவாக லட்சணமாக இருப்பாள். குணம் சௌஜன்யமானது. நவராத்திரி வருகிறதென்றால் அவளுக்கு மிகக் குதூகலம். அவர்கள் வீட்டிலும் கொலு வைப்பார்கள். மகாலட்சுமிக்கு அவள் பிறந்தகத்தில் வாங்கிக்கொடுத்த பொம்மைகள் வர்ணம் போயும் உடைந்தும் இருந்தன. ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தபோது, “நவராத்திரி வருகிறதே, ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லையா?” என்றேன்.

“என்ன செய்கிறது? பொம்மைகளெல்லாம்மூளியாகக் கிடக்கின்றன. பொறுக்கி எடுத்தால் இருபது பொம்மை கூடத் தேறாதுபோல் இருக்கே” என்றாள் மகாலட்சுமி.

“அதற்காகக் கொலுவைக்காமல் இருப்பதா? இருப்பதைக்கொண்டு குறைக்காமல் செய்யவேண்டியதுதான். பராசக்தி பூஜையாயிற்றே!’

“கௌரி சதா தொந்தரவு செய்கிறாள்.’இந்த வருஷம் புதுப் பொம்மை வாங்கம்மா பழசு வச்சா நான் யாராத்துக்கும் போய்க் கூப்பிடமாட்டேன்’ என்று மூன்று நாளாக ரகளை. நான் என்ன பண்ண அம்மா?. தங்கமான குழந்தையை அடையக் கொடுத்துவைத்தும் தரித்திரமாய் இருக்கிறேன்” என்று கவலைப்பட்டாள் மகாலட்சுமி.

கௌரி எங்கோ போயிருந்தவள் ஓடிவந்தாள்.வந்தவள் என்னைக் கவனிக்காமல், ‘கோபியாத்துக் கூடத்திலே குளம் மாதிரிச் சின்னதா வெட்டறா.’என்னத்துக்கடி?’ என்று பங்கஜத்தைக் கேட்டா, ‘அதுலே ஜலம் விட்டு மீன் மாதிரி பொம்மை இருக்கு பார், அதைவிட்டா மிதக்கும். சுத்திச் செடிபோட்டால் குளத்தங்கரை மாதிரி இருக்குமடி’ என்றாள். நம்மாத்திலே ஒண்ணும் இல்லையாம்மா? என்றாள். அதற்கு மகாலட்சுமி பதில் சொல்லாமல், “உன் பின்னால் யார் வந்திருக்கா பார்” என்றதும் என்னைப் பார்த்துவிட்டு, “நீங்கள் கொலு வைக்கப்போறதில்லையா மாமி?” என்றாள் கௌரி.

“இன்னும் இருக்கிறதே; இப்பொழுதுமுதல் என்ன அவசரம்?” என்றேன்.

“போன வருஷம் உங்காத்துப் பொம்மையிலே அந்த மகிஷாசுரமர்த்தனி ஒண்ணுதான் எனக்குப் பிடிச்சிது. அது இருக்கா மாமி?” என்றாள்.

“இல்லாமல் என்ன? இருக்கிறது.”

“இந்த வருஷங்கூடப் போன வருஷம் மாதிரி தினம் ஒரு அலங்காரம் பண்ணுவேளோ?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“செய்கிறது” என்றேன் நான்.

“அந்த மாதிரிப் பொம்மை இந்த ஊரில் யாராத்துலேயும் இல்லை” என்று அவள் தானே சொல்லிக்கொண்டாள்.

நாங்கள் இந்த ஊருக்கு வந்து இரண்டு வருஷத்துக்கு மேல் ஆகிறது. போன நவராத்திரியின்போது ஊருக்கு நான் புதிது. எதிரகத்துக் கௌரியைத்தான் தெரியும். கொலு வைத்தேனே ஒழிய அவள் தான் ஊரழைக்கப் அவள்தான் போவாள். என்னிடம் இருந்த பொம்மையில் மகிஷாசுரமர்த்தனி ஒன்றுதான் பெரியது. சுமார் மூன்று அடி உயரம் இருக்கும்; சர்வலக்ஷணமும் பொருந்தியிருக்கும்.

தினம் ஓர் அலங்காரம் செய்யும்போது கௌரி என் பக்கத்திலேயே இருப்பாள்.

“மாமி, இந்தப் பொம்மை எங்கே வாங்கினேள்?”

“நான் வாங்கவில்லை அம்மா. என் தாயார் இறந்து போவதற்குமுன் வாங்கிக் கொடுத்தாள். அவள் ஞாபகப் பொருள் இது” என்றேன்.

“இந்த மாதிரிப் பொம்மை கிடைக்காதா மாமி?”

“என் கண்ணில் அகப்படவில்லை. இது வாங்கி எட்டு வருஷம் ஆகிவிட்டது” என்றேன்.

கௌரி நாள் தவறாமல் அந்தப் பொம்மையை ஒரு மணி நேரமாவது நின்று பார்க்காமல் இருக்கமாட்டாள். மஹிஷாசுரமர்த்தனி அவள் மனத்தைக் கவர்ந்துவிட்டாளோ என்னவோ?


நவராத்திரிக்கு முதல் நாள்.

பொம்மைப் பெட்டியைக் கிளறிக்கொண்டிருந்தேன். கௌரி என்னோடு அலைந்துகொண்டிருந்தாள். அவளகத்துப் பொம்மைகளிடம் மதிப்பு இல்லை அவளுக்கு.

“மாமி, மாமி, இந்த நாயைப் பார்த்தேளோ? உங்காத்துக் ‘குண்டு’ மாதிரியே இருக்கே. ஐயையோ! அந்தச் சிப்பாயைப் பாருங்களேன்” என்று குதித்துக் கொண்டிருந்தாள். நான் மஹிஷாசுர மஹிஷாசுர மர்த்தனியை வெளியில் எடுத்ததுதான் தாமதம். கையிலிருந்த அத்தனை பொம்மைகளையும் வைத்துவிட்டு என்னிடம் ஓடிவந்துவிட்டாள்.

“நாளைக்கு என்ன மாதிரி அலங்காரம் பண்ணப் போறேள்?” என்று கேட்டாள்.

“நீதான் சொல்லேன்.”

“அந்த வெள்ளைப் புடைவையைக் கட்டி ஸரஸ்வதி அலங்காரம் பண்ணலாமே.”

“ஸரஸ்வதிபூஜை அன்றுதானே அப்படிச் செய்ய வேண்டும்? இன்று சயன அலங்காரம் செய்யலாம்” என்றேன் நான்.

“ஹும். சரி” என்று ஆமோதித்தாள் கௌரி. அன்று பூராவும் மஹிஷாசுரமர்த்தனியை இடுப்பிலே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தாள்.

“அடி அம்மா! அவளிடம் இப்படி அந்தப் பொம்மையைக் கொடுத்திருக்கையே. நாளும் கிழமையுமா உடைச்சு வைக்கப் போறாளே!” என்று எச்சரித்தாள் மகாலட்சுமி.

“நான் ஒண்ணும் உடைக்கமாட்டேன் போ” என்று அம்மாவை விழித்துப்பார்த்தாள் கௌரி.

மறுநாள் அவளிடமிருந்து அந்தப் பொம்மையை வாங்கப்பட்டபாடு தெய்வமறிந்து போயிற்று அவளுக்கே கொடுத்துவிடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். பொம்மை ஒன்றும் பிரமாதமில்லை ஆனால் இறந்த என் அன்னையின் பரிசானதால் அதைக் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை.

முதல் நாள் கொலு முடிந்ததும் கௌரி என்னிடம் வந்து, “மாமி, நான் ஒன்று கேட்கிறேன் தருவேளோ?” என்றாள்.

“என்ன வேணும் சொல்லு?”

“மஹிஷாசுரமர்த்தனி மாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுங்களேன். இதைக் கேட்கலை நான். வேறே சின்னதா இருந்தாலும் தேவலை” என்றாள்.

“உனக்கு அந்தப் பொம்மை வாங்கித்தரவேண்டும் என்று போன வருஷமே கடையெல்லாம் தேடிப் பார்த்தேன் கடைக்காரனைக் கேட்டால், ‘ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி வரும்; இப்பொழுது இல்லையே’ என்று சொல்லிவிட்டான். உனக்கு வேறே ஏதாவது நல்லதாக வாங்கித் தரேன்.”

அதற்கு அவள் அவள் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

கௌரிக்கு என்னிடம் மிகுந்த விசுவாசம். பொம்மைக்கு அலங்காரம் செய்வதறகுப் பகல் ஒரு மணியில் இருந்தே தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

“என்ன மாமி, பேசாமல் இருக்கேளே. நாழி ஆகலையம்? சாவியைக் கொடுங்கோ. எல்லாவற்றையும் எடுத்து வெளியில் வைக்கிறேன்” என்று நச்சரிப்பாள்.

அவள் தொந்தரவு பொறுக்காமல் சாவியைக் கொடுத்துவிடுவேன். அதை வாங்கிக்கொண்டாவது பேசாமல் இருப்பாளா?

“நீங்களும் வாங்கோ மாமி” என்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கூடத்துக்குப் போவாள்.

“இது என்னடி தொந்தரவு?” என்று நான் கடிந்து கொண்டால் கூட – பாவம் அவளுக்குக் கோபமே வருவதில்லை.

“இப்படி நம்மிடம் ஆசையாக இருக்கிறதே இந்தப் பெண். அந்தப் பொம்மையைக் கொடுத்துவிடுவோமே” என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அம்மாவின் நினைவு வந்தால் அந்த எண்ணம் மறைந்து போகும். ‘நல்ல தாக வேறு வாங்கித் தந்தால் போகிறது’ என்று நினைப்பேன். மறுநாள் அவளுக்காக இரண்டு பொம்மைகள் வாங்கிக் கொடுத்தேன். முதலில் வாங்கிக்கொண்டு போனவள் சிறிது நேரத்திற்கெல்லாம் அவைகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, “எனக்கு வேண்டாம் மாமி; அம்மா வையறா” என்றாள்.

மகாலட்சுமி அந்த மாதிரி மனுஷி இல்லை. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

நான் மாலையில் மகாலட்சுமியைப் பார்த்ததும், “என்ன மாமி! கெளரியை வைதீர்களாமே. நான் அவ்வளவு செய்யக்கூடாதா அவளுக்கு?” என்றேன்.

“இதென்னடி வெட்கக் கேடு!” என்று ஆச்சரியப்பட்டாள் மாமி.

“நான் ஒண்ணும் சொல்லலையே. பொம்மையைக் கொண்டுவந்தவள் திரும்பவும் எடுத்துக்கொண்டு போய் விட்டாள்.”

“கெளரி! பொய் சொல்ல எத்தனை நாளாகப் பழக்கம் ?” என்றேன் நான்.

கௌரி பேசாமல் கண்ணில் நீர் துளும்பப் போய் விட்டாள்.


அன்று ஸரஸ்வதி பூஜை. கௌரிக்குத் தெரியாமல் பொம்மைகளைக் கொண்டு போய் அவள் அம்மாவிடம் கொடுத்தேன். இரண்டு நாட்களாய் அவள் என் வீட்டுப் பக்கமே வரவில்லை. காரணம் தெரிந்ததுதானே! கௌரியின் கோபம் தணியவேண்டுமானால் மகிஷாசுரமர்த்தனி அவள் வீட்டுக்குப் போகவேண்டும்!

“கௌரி, இன்று ஸரஸ்வதி வேஷம் போட்டிருக்கேன்; நீ வரமாட்டயா?” என்று கூப்பிட்டேன்.

“நான் வரலை மாமி” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

நான் மனத்திற்குள் சிரித்துக்கொண்டேன்.

“இந்தக் குழந்தைகள், தாங்கள் கோரும் வஸ்து கிடைக்காவிட்டால் என்ன ரகளை பண்ணுகிறதுகள்! அடே அப்பா ! கௌரியின் கோபந்தான் என்ன? பிரமாதமாக இருக்கிறதே” என்றேன், மகாலட்சுமியைப் பார்த்து.

“அவள் கிடக்கிறாள். வராமல் போகிறாளா என்ன?” என்றாள் மகாலட்சுமி.

விளக்கு ஏற்றினதும் கௌரி தன் ஆவலை அடக்க முடியாததனாலோ என்னவோ ஓடி வந்து தூரத்தில் நின்று பொம்மையைப் பார்த்துவிட்டு ஓடிப் போய்விட்டாள்.

“கௌரி, கௌரி!” என்று இரண்டு தரம் கூப்பிட்டேன். அவள் வாசற்படி இறங்கியதும் என்னைத் திரும்பிப் பார்த்த பார்வை என் மனத்தைக் கலக்கிவிட்டது.

“சீ என்ன காரியம் செய்துவிட்டோம்? அப்படி என்ன பிரமாதம் இது? பொம்மையைக் கொடுத்துவிட்டால்தான் என்ன?” …ஆனால் அம்மாவின் ஞாபகம் மறைந்துவிடுமே” என்று ஒரு வழியும் தோன்றாமல் திகைத்தேன்.

நவராத்திரி கழித்து மூன்று நாள் வரையில் கௌரி எங்கள் வீட்டுப்பக்கமே வரவில்லை. வீட்டில் அனைவரும், “கௌரி ஊரில் இல்லையா என்ன?” என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

“போய்ப் பார்த்துவிட்டு வருவோம்” என்று கௌரியின் வீட்டுக்குப் போனேன். கூடத்தில் படுத்துக்கொண்டிருந்தாள்.

“கௌரிக்கு என்ன உடம்பு?” என்று கேட்டேன். “ஜுரம்” என்றாள் மகாலட்சுமி.

கௌரி கண்ணைத் திறந்து பார்த்துவிட்டுக் கண்ணை முடிக்கொண்டாள்.

“கௌரி ! உடம்புக்கு என்னம்மா?” என்றேன். “ஜுரம் மாமி” என்றாள் கௌரி.

“ஸரஸ்வதி பூஜையன்று ராத்திரிப் படுத்தவள்தான்” என்றாள் மகாலட்சுமி.

என் மனத்தை என்னவோ செய்தது.

“ஒருவேளை அந்தப் பொம்மை அவளை இப்படிச் செய்துவிட்டதோ?” அன்று அவள் என்னைப் பார்த்த பார்வை மறுபடியும் என் கண் எதிரில் தோன்றி மறைந்தது. அங்கிருந்து வீட்டுக்குப் போனதும் பொம்மையைப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியில் வைத்தபிறகுதான் என் மனம் நிம்மதியடைந்தது.

மறுநாள் காலை கௌரியிடம் பொம்மையைக் கொடுத்தேன். அவள் ஆவலோடு, “ஏது மாமி, எனக்காக வாங்கினேளா?” என்றாள்.

“இல்லை; என் பொம்மைதான்.”

“உனக்கு வேண்டாமாடி அம்மா? இந்த அசடு கேட்கிறதென்று கொடுத்துவிட்டு நிக்கறயே” என்றாள் மகாலட்சுமி.

“பரவாயில்லை; அவள் தான் வைத்துக்கொள்ளட்டும்” என்றேன் நான்.

“இது எனக்கு நவராத்திரிப் ‘பிரைஸ்’ இல்லையா மாமி” என்றாள் கௌரி.

“ஆமாம் நவராத்திரிப் பரிசுதான்” என்றேன்.

கௌரி என்னைச் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

இந்த வருஷம் மஹிஷாசுரமர்த்தனிக்கு அலங்காரம் பண்ணக் கௌரியின் வீட்டுக்குப் போகாமல் இருக்க முடியவில்லை.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *