அன்பு தம்பி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 9,686 
 

சிவராமன் தன்னுடைய அலுவலகப் பணியில் மூழ்கியிருந்தபோது அவனுடைய கைப்பேசியில் அழைப்பு வந்தது. “ஹலோ யாரு” என்றான். “அன்பு தம்பி இருக்காங்களா” என்றது அந்த முனையில் ஒரு அம்மாவின் தளர்ந்த குரல். அன்பு தம்பி என்றவுடன் அவனுக்கு சட்டென்று சிரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு “அது போல் யாரும் இல்லீங்க. ராங் நம்பர்” என்று கைப்பேசியை அனைத்தான்.

சில நாட்கள் கழித்து அதே அம்மாவின் அழைப்பு மீண்டும். யாரும் இல்லை என்று வைத்தான். அதே மாதத்திற்குள் இரண்டு மூன்று தடவை அதே அழைப்பு மீண்டும் மீண்டும் வந்தது. அவனால் கடிந்து கொள்ள முடியாமல் இல்லை என்று மறுமொழி மட்டும் கொடுத்தான். யார் அந்த அன்பு? எதற்கு அந்த அம்மாள் அன்புவைத் தேடுகிறாள்? என்ற ஆர்வம் அவனக்குள் இருந்தது. இருந்தாலும் எதையாவது கேட்டு வைத்து அதனால் ஏதேனும் பிரச்சனை வந்து விட்டால். எனவே அமைதியாக இருந்துவிட்டன்.

ஆனால் அவனால் அதை அப்படியே விட்டுவிட மனமில்லை. உடனே தனது நண்பனின் உதவியோடு, தனக்கு முன் அவனுடைய கைப்பேசி எண்ணை யார் வைத்து இருந்தார்கள் என்ற தகவலை சேகரிக்க முடிவு செய்தான். ஒரு வழியாக அந்த எண் இதற்கு முன் அன்பு என்ற பெயரில் இருந்தது தெரியவந்தது. எப்படியோ அந்த எண்ணுக்குண்டான முகவரியும் கிடைத்தது.

கிடைத்த முகவரியைத் தேடி கண்டுபிடித்துவிட்டான். அது ஒரு மேன்சன். யார் யாரையோ விசாரித்து கடைசியாக அன்புவைத் தெரிந்தவர் ஒருவரை கண்டுபிடித்துவிட்டான். அவர் அன்பு இருந்த அறைக்கு பக்கத்துக்கு அறையில் இருந்தவர். சிவராமனை உள்ளே அழைத்து உட்காரவைத்தார். அன்புவைப்பற்றி அவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல்கள் அவனைக் கலங்க வைத்துவிட்டது.

அன்புவும் அவனது நண்பன் கண்ணனும் ஒரு அறையை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அன்பு-விற்கு நல்ல சம்பளம் உள்ள வேலை. அவனுக்கென்று யாரும் இல்லை. கண்ணனுக்கு சுமாரான சம்பளம். ஆகவே கண்ணனுக்கு நிறைய உதவிகள் செய்து அவனை அன்பு தன்னுடனே வைத்திருந்தான். அவ்வப்போது கண்ணன் தன் அம்மாவைப் பார்ப்பதற்கு ஊர் செல்லும்போதெல்லாம் பணம் கொடுத்தனுப்புவான். அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளச் சொல்வான்.

திடீரென்று ஒரு நாள் கண்ணன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி இறந்தும் விட்டான். தனக்கிருந்த ஒரு சொந்தமும் இல்லாமல் போனது அன்பு-வை மிகவும் வாட்டியது. அனைத்து காரியங்களும் முடிந்தவுடன் கண்ணனுடைய அம்மா லட்சுமி அம்மாளை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தான். அதற்கு அவரும் “இந்த கட்ட உசிரு இருக்குற வரைக்கும் இந்த ஊருல இருந்துட்டு போறேன் தம்பி. நீங்க சுகமா இருக்கனும்” என வாழ்த்தினாள். அன்பு, லட்சுமி அம்மாளையும் அவருடைய வீட்டையும் பார்த்து மிகவும் வேதனைக்குள்ளானான்.

அந்த அம்மாவிற்கு தான் மாதம் இரண்டாயிரம் ருபாய் மணி ஆர்டர் அனுப்புவதற்கு ஒரு வழியாக சம்மதிக்க வைத்தான். வேறு ஏதேனும் தேவை என்றாலும் தன்னை அழைக்கும்படி தன்னுடைய கைப்பேசி எண்ணை அந்த அம்மாளுக்கு எழுதிக் கொடுத்தான். எதிரிலிருந்த கடையில் இருந்தவரிடம் லட்சுமி அம்மா-விற்கு போன் செய்வதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டான். அன்றிலிருந்து தவறாது மணி ஆர்டர் செய்தான். அவ்வப்போது போன் செய்து லட்சுமி அம்மா-விடம் பேசுவான்.

அன்பு-வின் பக்கத்துக்கு அறைக்காரர் சற்றே பேசுவதை நிறுத்தி ஒரு பெருமூச்சு விட்டார். என்ன என்றான்? சிவராமன். அவர் “என்னத்தை சொல்ல. நல்லா இருந்த அன்பு சில மாதங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் இறந்துட்டான். ரொம்ப நல்ல பையன். யார் வம்புக்கும் போக மாட்டான். யார் எந்த உதவி கேட்டாலும் தயங்காம பண்ணுவான். என்ன செய்யறது. விதி” என்று முடித்தார். அப்போ அந்த லட்சுமி அம்மா? என்று இழுத்தான். “தெரியல” என்றார் அவர். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான் சிவராமன்.

சிவராமனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அழுது தீர்த்து விட்டான். ஒரு தெளிவு பிறந்தது அவனுக்கு. முதலில் லட்சுமி அம்மாளிடம் இருந்து வந்த அழைப்பை எடுத்து அதிலிருந்த எண்ணுக்கு ஃபோன் செய்தான். கடைக்காரர் எடுத்தார். யார் வேணும்? என்றார். சிவராமன் “லட்சுமி அம்மாவை கொஞ்சம் கூப்பிட முடியுமா” என்றான். அவர் “நீங்க யாரு?” என்றார். “அன்பு தம்பி-னு சொல்லுங்க” என்றான். கொஞ்சம் லைனுல இருங்க, நான் அவங்கள வர சொல்றேன்” என்றார். அவன் அமைதியாக இருந்தான்.

சிறுது நேரம் கழித்து “அன்பு தம்பிங்களா” என்றார் லட்சுமி அம்மா. இந்த முறை அவனுக்கு சிரிப்பு வரவில்லை. மாறாக ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். “ஆமாம்மா. எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு”. என்றான். “அப்பாடி இப்பதான் எனக்கு நிம்மதி ஆச்சு தம்பி. என்னாச்சோ ஏதாச்சோ –னு நெனச்சேன்”. ”சுகமா இருக்கீங்களா. ஏன் உங்க குரலு ஒரு மாதிரி இருக்கு” என்றார் அம்மா. சிவராமன் சுதாரித்து “ஒரு வாரமா தொண்ட சரியில்ல. அதான்”.

“நான் என் வேல விஷயமா கொஞ்சம் வெளியூர் போயிட்டேன். கொஞ்ச மாசமா நான் உங்களுக்கு பணம் அனுப்பல. எப்படி சமாளிச்சீங்க. ரொம்ப கஷ்டபட்டீங்களா” என்றான். அதற்கு அந்த அம்மாள் தெளிவாக “ இந்த கட்டைக்கு ஒன்னும் ஆகல. அதுவும் இந்த ஒடம்புக்கு கஞ்சி இருந்தா போதும். அதுவும் உன்ன போல நல்லவங்க இங்க இருக்கறதால எனக்கு ஒன்னும் பெரிசா பிரச்சனை எதுவும் இல்ல. அப்படியே இல்லனாலும் போய் சேரவேண்டியதுதான். இதுல வருத்தபட என்ன இருக்கு” என்று சொல்லிவிட்டு சிறிது இடைவெளி விட்டார்.

“அன்பு தம்பி இருக்கீங்களா” என்றார் லட்சுமி அம்மாள். “ஆமாம் என்றான் சிவராமன். அம்மா தொடர்ந்தார் “ கொஞ்ச மாசமா மணி ஆர்டர் வரலை-னு தெரிஞ்சவுடன் அக்கம் பக்கம் இருக்கிறவங்க என்னை கேலி செஞ்சாங்க தம்பி. இன்னுமா அந்த பையனை நம்பற-னு. சும்மா எவனாவது பணம் அனுப்புவானா. உன் பையன் கிட்ட இருந்து அந்த அன்பு பையன் எதாவது பணம் வாங்கியிருப்பான். அததான் கொஞ்சம் கொஞ்சமா மணி ஆர்டர் அனுப்பிருக்கான். இப்ப காணாம போயிட்டான்-னு சொன்னாங்க.”

“ஒரு ஆள பார்க்கும்போதும் சரி பேசும்போதும் சரி அவர் எப்படிப்பட்டவர்னு எனக்கு தெரியும். உங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நம்ம ஜனங்களுக்கு அடுத்தவன புறம் பேசறது வாடிக்கையா போச்சு. நான் ஃபோன் செஞ்சது கூட பணத்துக்கு இல்ல தம்பி. உங்களுக்கு என்ன ஆச்சு-னு கவலையா இருந்துச்சு. மனசு கேக்கல தம்பி. அதான் ஃபோன் பண்ணிட்டே இருந்தேன். தப்பா எடுத்துக்காதீங்க” என்றார்.

சிவராமனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தான் வாழும் இந்த வசதியான வாழ்க்கையில் தான் உண்மையா நடந்து கொள்வது பெரிதல்ல. அந்த லட்சுமி அம்மா அவ்வளவு வறுமையிலும் உண்மையா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.

உடனே சிவராமன் “நான் இருக்கிற வரைக்கும் நீங்க கவலைப்படாதீங்கம்மா. நான் பார்த்துக்கிறேன் உங்கள. யார் கேட்டாலும் சொல்லுங்க என் பையன் அன்பு இருக்கான்னு”. இந்த மாசத்துல இருந்து உங்களுக்கு தவறாம மணி ஆர்டர் வரும். எதுவா இருந்தாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க” என்று முடித்தான்.

முடித்தவுடன் வழிந்த கண்ணீரைத் துடைத்தான் அன்பு தம்பி ஆகிய சிவராமன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *