கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 7,921 
 
 

“கன்னத்திலே என்னம்மா காயம்? `தொப்பு’ விழுந்துட்டீங்களா?”

(ஒரு தலைமுறைக்கு அப்பாலிருந்து அவளுடைய குரலே கேட்டது போலிருந்தது. `அப்பா ஏம்மா தினமும் நம்ப வீட்டுக்கு வர்றதில்லே?’)

கலங்கிப் போனவளாக, “ஆமாண்டா ராஜா! விழுந்துட்டேன்!” என்றாள்.

பொய்! பெற்ற மகனிடமே!

அம்மா பொய் சொல்லிவிட்டாள், அப்பாவுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டாள் என்றுதானே அவர்களுடைய உறவையே முறித்துக் கொண்டாள்!

ஆனால், ஒரு பெண் தானே தன் கணவனை வரிக்கும்போது, தன்னையும் அறியாது, தன் தந்தையின் குணாதிசயங்களை உள்ளவனையே தேர்ந்தெடுக்கிறாள் என்ற மனோதத்துவ நியதி தேவகிக்குப் புரிந்துபோனபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

தேவகி ஐந்தாம் படிவத்தில் படிக்கும்போதுதான் அச்சம்பவம் நடந்தது.

“ஒங்கப்பா பேர் சதாசிவமா? எங்கப்பா பேரும் அதான்!”

அன்றுதான் பள்ளியில் சேர்ந்திருந்த அந்த பதினேழு வயதுப்பெண் அத்துடன் நிறுத்தியிருந்தால், தேவகி அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டாள்.

ஆனால், சதாசிவம் என்ற அந்த நபர் உத்தியோகம் பார்க்கும் இடத்தையும், அவர் வகிக்கும் பெரிய பதவியையும் அவள் பெருமையாகச் சொல்லிக் கொண்டபோது, தேவகியின் நெஞ்சு உலர, வாய் அடைத்தே போயிற்று.

இது உண்மையாக இருக்க முடியாது. கூடாது!

வாரத்தில் பாதி நாட்கள் அப்பா வீட்டுக்கு வராமல் இருப்பதன் ரகசியம் இதுதானா? அம்மாவுக்கு இது தெரியாமலா இருக்கும்!

அப்பா என்னவோ, ராமபிரானின் மறுபிறப்பு என்று அவள் எண்ணிப் பூரிக்கும் அளவுக்கு அவரை எப்பவும் சிலாகித்துப் பேசி, எப்படி அவளை ஏமாற்றி வந்திருக்கிறாள்!

வெட்கம் கெட்டுப்போய், அப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஓடிப்போய் வரவேற்று, தடபுடலாக உபசாரம் வேறு!

சே! எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்!

அன்றுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தமற்றுப் போய்விட்டது போலிருந்தது.

பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்குச் செல்ல மனம் இசையாது, வாசகசாலையில் தங்கி, ஒரே பக்கத்தை வெறித்துவிட்டு, சுயபரிதாபம் மேலோங்கிய நிலையில் வீடு திரும்பினாள்.

அப்பா வீட்டிலிருந்தார் அன்று.

“ஹை! தேவகிக்குட்டி! வா! வா!” என்று ஆர்ப்பரித்தார்.

அவர் குரலைக் கேளாதவளாக, அவர் அங்கிருப்பதையே கவனியாதவள்போல் நேராக அவள் உள்ளே நடந்தபோது, கேள்விக்குறியாக மேலே எழுந்தது சதாசிவத்தின் அடர்ந்த புருவம்.

“இன்னிக்கு ஏன் லேட்டாயிடுச்சு? அப்பா இன்னும் சாப்பிடாம, ஒனக்காகக் காத்திட்டு இருக்காரு, பாரு!” என்ற அம்மாவை அழுகையுடன் முறைத்தாள்.

“அவரே சாப்பிடட்டும். இல்லாட்டி, வேற வீட்டுக்குப் போகச் சொல்லுங்க! அங்கே ஒண்ணு இல்லே, நாலு பிள்ளைங்க போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க!” என்று ஆவேசமாகக் கத்திவிட்டு, ஒடிப்போய் தனது அறைக்குள் நுழைந்து, கதவை அறைந்து சாத்தினாள்.

“என்ன ஆச்சு ஒன் பொண்ணுக்கு?” என்றவரிடம், ஆள்காட்டி விரலால் வேறு திசையைச் சுட்டி, எதையோ உணர்த்தினாள் அம்மா.

சதாசிவம் கையை வீசினார், அலட்சியமாக. ஐம்பது வயதாகியும், கம்பீரம் குறையாத வாட்டசாட்டமான உடலமைப்பு. வாழ்வில் எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத, சுகத்தை மட்டுமே நாடும் குணம்.

“என்னிக்கோ ஒருநாள் தெரிய வேண்டியதுதானே! இது என்ன, ஒலகத்திலே நடக்காத அதிசயமா?”

உள்ளே விசும்பிக் கொண்டிருந்த தேவகிக்கு அவருடைய குரல் நன்றாகவே கேட்டது.

“உன்னைமாதிரிதானே உன் மகளும் இருப்பா! நினைவிருக்கா, கனகா?” ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்ட மாதிரி சிரித்தார். “மொதமொதல்ல இந்த விஷயம் தெரிஞ்சப்போ, `அது எப்படி நீங்க கல்யாணம் ஆனவர் என்கிறதை மறைச்சு, என்னை சுத்திச் சுத்தி வந்து மயக்கிக் கட்டிக்கிட்டீங்க?’ன்னு ஆர்ப்பாட்டம் பண்ணினியே!”

`இதற்கு என்ன இப்படி ஒரு அட்டகாசச் சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது!’ தேவகியின் கொதிப்பு மேலெழுந்தது.

தான் செய்தது நியாயம்தான், மகள்தான் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறாள் என்பதுபோல் அல்லவா பேசுகிறார்!

“நீ எதுக்கு அழறே, கனகு?” அப்பா சமாதானத்தில் இறங்கியிருந்தார். “தானே விட்டுப் பிடிச்சா, வழிக்கு வர்றா!”

`வழிக்கு வந்து விடுவேனாமே! இருக்கட்டும்! எல்லாப் பெண்களுமே ஏமாந்தவங்க இல்லேன்னு காட்டறேன்!”

அன்றிரவே தேவகி வீட்டைவிட்டு ஓடிப்போனாள். அவளை அயலூரிலிருந்த தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தி, அப்பா மாதிரியே பேசி மயக்கியவன் ஒருவனை மணந்துகொண்டாள். அவன் அவ்வளவு கருணை காட்டியது அவளுடைய சம்பளத்தை அடித்துப் பிடுங்கிக்கொள்ளத்தான் என்பது புரிந்தபோது, இரு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள் தேவகி.

மகன் பெரியவன் ஆனதும், `அப்பா செஞ்ச கொடுமையை மறைச்சு, ரொம்ப நல்லவருன்னு பொய் சொல்லி, என்னை நம்ப வைச்சீங்களேம்மா!’ என்று கேட்க எத்தனை காலமாகும்!

அப்போது என்னை வெறுத்து ஓடிவிடுவானோ?

மகளும் தனக்குள்ளேயே ஒடுங்கிப்போய், எப்போதும் நகத்தைக் கடித்துக்கொண்டு இருப்பது இருக்கிறாளே! பெரியவளானதும், தன்னைப்போலவே உதவாக்கரை எவனையாவது மணந்து..!

நினைக்கவே பயமாக இருந்தது. தான் பெற்ற பிள்ளைகளின் நலனுக்காக அவள் செய்ய வேண்டியிருந்தது இனி ஒன்றுதான் இருந்தது.

இந்த வீட்டைவிட்டு எங்கேயாவது தொலையவேண்டும்.

அம்மாவிடம்? தன் வாழ்க்கையையே சமாளிக்கத் தெரியாது, எது வந்தாலும் ஏற்கும் அம்மாவிடம் போவது உசிதமாகாது.

அப்போது வேறு ஒன்றும் புலப்பட்டது. `அம்மா என்னிடமே பொய் சொல்லி விட்டாள்!’ என்று குழந்தைத்தனமாக கோபித்துக் கொண்டிருந்தோமே இத்தனை காலமாக! பாவம், வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கவே இருக்கின்றன; அதை இப்போதே சொல்லி, பிஞ்சு மனதில் கசப்பை விதைப்பானேன் என்ற நல்லெண்ணத்தோடுதான் அப்பாவைப்பற்றிய உண்மையை மறைத்திருக்கிறாள்!

பின் எங்கேதான் போவது என்று யோசித்தபோது, சமீபத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. தன்னைப்போல் கட்டியவனிடம் வதை படுகின்ற பெண்களுக்காக ஒரு ஆதரவு மையம் இருக்கிறதென்று போட்டிருந்தார்கள். அங்கு போனால், அவள் வாழ்க்கையை எப்படி சீர்படுத்திக் கொடுக்க முடியும் என்று வழி காட்டுவார்கள்.

நம்பிக்கை துளிர்விட, “டாடா போகலாம், வாங்க!” என்று குழந்தைகளை அழைத்தாள் தேவிகா.

(நயனம், 4-7-93)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *