‘சதைப் பற்றற்ற’ காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 4,775 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சரிதான் ஸார், அதெல்லாம் வெறும் கதை, காதல் மனதில் இருப்பது என்பதெல்லாம் சுத்தப்புளுகு. சரீர ஸ்பரிசம் இல்லாமல் காதல் என்று யாராவது சொன்னால் அவன் அயோக்கியன். அல்லது-‘ என்றார் ஹெல்த் இன்ஸ்பெக்டர்.

‘அவ்வளவு ஓங்கி அடித்துவிடாதீர்கள். உமது கட்சி பவத்த கட்சி என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். டால்ஸ்டாய் என்ற மகான் கூட உங்கள் பக்கமாகத்தான் பேசுகிறார். ரொம்பப் பச்சையாகக் கூடச் சொல்லிவிட்டார். ஆனால் நமது மனநிலையையும் உணர்ச்சியையும் வைத்தே உலகம் பூராவையும் தராதரமின்றி அளந்து விடுவது சரியன்று. சரீர சம்பந்தமில்லாத காதலும் இருக்க முடியும் இருந்திருக்கிறது’ என்று ஓவர்சியர் சொன்னார்.

‘இருக்க முடியும் என்பதை நான் ஒப்புக்கொள்ளவே முடியாது. இருந்திருக்கிறது என்று நீங்கள் சொன்னாள், முடியாமைதான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்’.

‘எனக்கும் கொஞ்சம் அறிவிருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் பேச வேண்டும்’.

‘ஸார். ஸார் உங்களுக்கு அறிவில்லையென்று யார் சொன்னது ? ரொம்ப கோபித்துக் கொள்ளுகிறீர்களே?

‘கோபமே இல்லை. ‘இருந்திருக்கிறது’ என்று நான் சொன்னால் வேறு காரணங்கள் இல்லாமல், நாம் தர்க்கிக்கிற முறையிலேயே தான் இருந்திருக்கிறது என்று நான் என் மனதில் திருப்தியடைந்து தானே சொல்லுவேன்? அதை நீங்கள் கவனிக்க வேண்டாமா?’

இரவு எட்டுமணி. ஹெல்த் இன்ஸ்பெக்டர், லோகல் பண்டு ஓவர்சியர், தாலூகா ஆபீஸ் ஹெட்கிளர்க், எல்லோருமாக ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுதுதான் அந்தப்பேச்சு வந்தது.

அன்றைய பத்திரிகையில் ஒரு விசேஷமான செய்தி வந்திருந்தது. சென்னையில் இரு காதலர்கள் தங்கள் இஷ்டப்படி கலியாணம் ஆகாது என்று தெரிந்ததும் விஷம் உண்டு மாண்டார்கள். அதைப் பற்றிப் பேசிய பேச்சிலிருந்து தர்கம் கிளம்பி வளர்ந்து கொண்டே போயிற்று. கடைசி யாகக் காதல் தத்துவத்தைப் பற்றியே பேச்சு திரும்பிவிட்டது.

மூன்று சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் இலக்கியகர்த்தர்களுக்கும் மனோதத்துவ சாஸ்திரிகளுக்கும் மட்டும் உரிமையான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதென்றால் அது விசேஷம்தானே?

நானும் அவர்களுக்கிடையே ஒரு சிறு தாலுகா குமாஸ்தாவாக உட்கார்ந்து கொண்டு அவர்கள் பேசினதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். சர்க்கார் தஸ்தாவேஜிகளை வருஷக்கணக்காகப் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப் போயிருந்ததும்கூட அவர்கள் காதலைப் பற்றி அலசி அலசிப் பேசினது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கலாசாலையி லிருந்து வெளியேறி வேலைக்கு வந்த சமயம். என் மனம் இன்னும் உணர்ச்சியற்றுப் போகவில்லை. சம்பாஷணை அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது.

‘எப்படி ஸார் இருக்க முடியும்?’ என்று ஹெல்த் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

‘ஏன் இருக்க முடியாது என்று நான் கேட்கிறேன். பிடிவாதத்திற்கு எங்காவது தர்கத்தில் முடிவுண்டா?’ என்று ஓவர்ஸியர் கொஞ்சம் குத்தலாகப் பேசினார்.

‘பிடிவாதம் இல்லை மனித ஸ்வபாவத்திற்குப் பொருந்தாததான ஒரு விஷயத்தை நீங்கள் ‘உண்டு’ என்று சொன்னால், அது பிடிவாதமா, நான் சொல்லுவது பிடிவாதமா?’

‘மனித ஸ்வபாவத்திற்குப் பொருந்தாதது என்று யார் நிர்த்தாரணம் செய்திருக்கிறார்கள்?’

‘மனோத்தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியாளர்கள்!”

‘அவர்கள் பொதுவாக நிர்ணயிக்கிறார்கள். நீங்கள் சொல்லுவது போல வைத்துக்கொண்டாலும். அதற்கு மாறுபாடான விசேஷ பிரகிருதிகள் இல்லையா என்ன?’

‘அவர்களைப் பற்றிப் பேச்சில்லை. அவர்களுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்?’

‘இந்த சம்பந்தம்தான்-அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியான கலையில் இருக்கும் லட்சிய பிரகிருதிகள்’.

‘கலையெள்ள நபும்ஸகவாதமா?’

‘ஆண்மை வாதமுமல்ல. வாழ்க்கையின் உள்தை அம்சங்களைச் சித்திரிப்பது’.

‘உங்களுடைய ‘சதையுணர்ச்சி யற்ற காதல் அந்த ரகத்தைச் சேர்ந்ததே ஆமாம், பின் ஏன் அந்தக் காதலுக்கு ஆணும் பெண்ணும் வேண்டியிருக்கிறது?’

சதை என்ற சேற்றில் முழுக அல்ல; அதற்கு மேலே போய் தாமரை யைப் போலத் தலையெடுத்து நிற்க. இரவும் பகலும் போலவும், துக்கமும் சுகமும் போலவும் வேற்றுமை கொண்டிருக்கும் ஸ்த்ரீ புருஷ ஸ்வபாவங்களை ஒன்றாக்க! அவை ஒன்றாக உடல்கள் சேரவேண்டிய அவசியமில்லை’,

‘என்ன என்ன?’

‘இரண்டு வகைப் புஷ்பங்களிலிருந்து கிளம்பும் இருவிதமான வாசனைகள் எப்படிக் காற்றில் கலந்து ஒன்றாகின்றனவோ அப்படி இரண்டு உள்ளங்களும் உணர்ச்சியில் கலக்கின்றன. அந்த சங்கமத்தால் இரு உள்ளங்களும் கலப்புணர்ச்சிகள் பெறுகின்றன பிரயாகையில் கங்கை ஜலத்தை யமுனையும் யமுனை ஜலத்தை கங்கையும் பெறுவது போல’

‘அதெல்லாம் வெறும் கவிதைபோல இருக்கிறது. நடைமுதல் உண்மைக்குப் பொருத்தமல்ல’.

‘அப்படிச் சொல்லப்போனால் நடை முதல் உண்மை கூட உண்மை யல்ல; உண்மை அதற்கும் கீழானது’.

‘எப்படி?’

‘எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆடவருக்குச் சதையுணர்ச்சி ஏற்படுகிறது என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை. நீங்கள் நடை முதல் உண்மை என்று கூறுவது தாயிடமும், சகோதரியிடமும், பிறர் மனைவியிடமும் அவ்வுணர்ச்சி ஏற்படக்கூடாது என்று மனிதன் ஏற்படுத்தியிருக்கும் கட்டுப்பாடு-ஏற்பாடு; அதற்கு மேற்படியாக லட்சிய உலகமும் ஒரு ஏற்பாடு-நடை முதல் உண்மைக்கு மேற்போன நடைபெற வேண்டிய உண்மை. எதற்காகச் சொல்லுகிறேன்! காதலியிடம் மட்டும்தான் சதையுணர்ச்சி ஏற்படவேண்டும் என்று நீங்கள் சொல்லுவது ஸ்வபாவமல்ல. அது இயற்கையல்ல. விலங்கு பட்சி கனிடமும் சில அநாகரிகமான புராதன ஜாதியினரிடமும் நாம் காண்பது போல எல்லாப் பெண்களையும் மனிதன் கொள்ளக்கூடாது. மனைவி யென்றும் காதலியென்றும் ஒருவளை வரித்தல் வேண்டுமென்றும் ஏற்பட்டிருப்பது கலை. அவ்வகைப் பெண்ணின் சேர்கைதான் இன்பம் என்பதும் அதன் கோட்பாடுதான்.

‘அப்புறம்?’

‘அதற்கு மேற்போன கோட்பாடும் உண்டு; காதலுக்கு உடற்சேர்கை கூடத் தேவையில்லை. மனச்சேர்கை போதும் என்பது தான் அது. புனித உள்ளங்களுக்கு அதே பெருத்த கலவியின்பந்தரும். ஆண்டாள் அப்பேற்பட்ட இன்பம் பெற்றுதானே இளகி இளகிப் பாடினாள் தன் பேரின்பக் கலவியைப் பற்றி’

‘அது வெறி, பித்து, ஸ்வபாவமல்ல’

‘எது வெறி, எது ஸ்வபாவம்! ஸ்வபாவம் என்பதால் ஒன்று உயர்வா? வெறியென்று ஒன்றைத் தாழ்த்திக் கூற நமக்கு என்ன அதிகாரம்?’

‘விபரீதமான வெறி!

‘வெறி நிலையிலிருப்பவர்களுக்கு ஸ்வபாவம் என்று நாம் கருதுவது விபரிதமாகத் தோன்றாதா?’

‘அவர்கள் ஒரு சிலர் தானே? பெருவாரியான மனித சமூகத்தில் தென்படுவது தானே ஸ்வபாவம்’

‘அதை நான் முன்பே சொன்னேனே நீங்கள ஸ்வபாவம் என்பதே ஒருவிதியின் கீழ் ஏற்பட்டது தானே?’

‘நீங்கள் மனித சுபாவத்தையே ஒரு செயற்கை என்கிறீர்களா?’

‘சந்தேகமில்லாமல் மனித சுபாவம் யுகம் யுகமாக சமூகக் கட்டால் கட்டப்பட்டது. மிருக சுபாவம் தான் மனிதனுக்கு இயற்கையானது’

‘நீர் என்னென்னமோ சொல்லுகிறீர். அதையெல்லாம் நான் ஒப்புக் கொள்ளத் தயார் இல்லை. அதிருக்கட்டும், நீர் என்ன சொல்லுகிறீர் இப்பொழுது?’

‘காதலுக்கு சதைப்பற்று முக்கியமல்ல. சொல்லப்போனால் அருகாமை கூட அதற்குத் தேவையில்லை. அதனால்தான் பிரிவாற்றாமையில் காதல் வளர்கிறது. ‘விரகே பிரேம ரா சீபவதி’ என்று காளிதாஸன் கூடச் சொல்லுகிறார்’.

‘பின் ஏன் இந்தக் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்?’

‘தங்கள் மன ஒற்றுமைக்கிடையே பிறர் வரக் கூடாதென்றுதான்!’

‘நீர் சொல்லுவது எனக்கு அர்த்தமாகவில்லை, நீர் புதிர் போடுகிறீர்’.

புதிர் ஒன்றுமில்லை. பச்சையாகவா சொல்லவேண்டும்? இவர் களுக்குள் கலியாணம் ஆகிவிட்டால் அவளுக்கு வேறு புருஷன் கட்டாயம் வந்து சேருவான் அல்லவா? அப்பொழுது மன ஒற்றுமை குலைத்து போகும்’

‘நீர் பேசுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே’.

‘ஒன்றும் முரண்இல்லை. நீங்களாக நினைத்துக்கொள்ளுகிறீர்கள். சதைப்பற்றால் மட்டும் காதல் ஏற்படுவதில்லை என்றேன், அவ்வளவு தான்’.

‘சரி, சரி வேலை கிடக்கிறது தலைக்குமேல். நாளைக்கு ஆபீஸ் இன்ஸ்பெக்ஷன். இதென்ன இழவு தர்க்கம் வேண்டியிருக்கிறது’.

‘இழவு தர்க்கத்தின் ஸ்வாரஸ்யத்தில் சாப்பிட்ட கை கூட உலர்ந்து போய்விட்டதே’

‘கூட்டமில்லாத ஹோட்டலாக இருப்பதால் பிழைத்தோம்’.

காதல் பேச்சு முடிந்து. கச்சேரிப் பேச்சு ஆரம்பமாயிற்று, நான் எழுந்திருந்து வெளியே வந்துவிட்டேன்.

– பாரத்தேவி, 30-07-1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *