கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,053 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விசுவவங்கத்தார் கொழும்புக்குப் போனார். அவர் கொழும்புக்குப் புதியவரல்ல. எண்பத்தி மூன்றாம் ஆண்டு வரையுள்ள இருபத்தைந்து ஆண்டுகள் கொழும் பிலே வாழ்ந்தவர். பிந்திய காலப்பகுதியில் அவர் ஒரு அரசாங்கத் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் என்ற உயர் பதவி வகித்தார்.

ஆனால் எல்லார்க்கும் பெய்த மழையாய்க் கொழும் பிலே தமிழர்களுக்கு அடி விழுந்தபோது அவரது நான்கு புத்திரர்களும் எப்படியோ ஒப்பிண்விசாவில் அகதிகளாக வெளிநாடு சென்று விட்டனர். விசுவலிங்கத்தார் தம் ஒரே மகளோடு தமது ஜனாதிபதியான யாழ்ப்பாணம் சென்றார்.

கொழும்பிலே உள்ளது உடையது எல்லாம் போய் விட்டாலும் வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் அனுப்பின பணத்தில் தன் தாயதிக்காணியில் வீடுகட்டிக் கொன்டார். கோயில் குளம் என்று திரிந்தும், தன்னைப் போலொத்த ஓய்வூதியகாரரோடு அரசியல் பேசியும் அவர் பொழுது இன்பமாகவே போய்க் கொண்டிருந்தது. மகளுக்கு மாப்பிள்ளை தேடவேண்டிய ஒரே கவலைதான் என்றாலும் அதற்கு நான்கு அண்ணன்மார் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் அடிக்கடி நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சுக்களும் ஷெல் தாக்குதலும் உணவுப் பொருள் பற்றாக் குறையும் மின்சாரமின்மையும் அவரை மீண்டும் கொழும்புக்குப் போக வைத்தன. மகளையும் அழைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாகத்தான் கொழும்பு சென்றார்.

சில மாதங்கள் உறவினர் வீடுகளிலும் லொட்ஜுகளி லும் தங்கியவர் தனக்கென ஒரு பிளாட்டை தேடிக் கொண்டார். ‘லிப்ற்’றேயில்லாத அந்த நான்கு மாடிக் கட்டிடத்தின் மூன்றாம் – மாடியில் அவரது பிளாட். முன்னால் அந்த மாடியில் இருப்பவர்கள் அத்தனை பேருக்குமே நடைபாதையாக விளங்கும் ‘கொரிடோர்’, அதற்குப் பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட தடுப்புச் சுவர். நீளமான அந்த அறையின் முன்பக்கம் பலகைகளாற் தடுக்கப்பட்டு ஒரு ‘சிற்றிங்றூம்’. அதற்குப் பின்னால் படுக்கையறை, அதற்கும் பின்னால் சமைய, லறையும், பாத்றூமும், சிற்றிங்றூமிலிருந்து பாத்றூம் வரை செல்ல நீண்ட ஆனால் குறுகலான சாலை.

தந்தைக்கும் மகளுக்கும் அந்த பிளாட் போதுமானது தான்! முன்பக்க சிற்றிங்றூமிலே சோபாக்கள், சாய்வு நாற்காலி, வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, டெக்…படுக்கையறையில் இரண்டு கட்டில்கள்.

பின்னாலுள்ள சமையலறையில் காஷ் குக்கர், குளிர் சாதனப் பெட்டி, சமையலறைக்காள உபகரணங்கள். அதற்கும் பின்னால் பாத்றூம். ஷவரில் எப்போதுமே தண்ணீர் வரும்.

ஆனால் எழுபதைத் தாண்டிவிட்ட விஸ்வலிங்கத்தா ரால் படிகளில் ஏறி இறங்கிக் கீழே வர முடியவில்லை . மூன்றாம் பாடிக் கொரிடோரின் இந்த அந்தத்திலிருந்து அந்த அந்தம் வரை நடை. பல தடவைகள் நடந்து அலுப்பு ஏற்பட்டால் கொரிடோரின் ஓரமாக வந்து யன்னலைப் பிடித்துக் கொண்டு கீழே (காரோடும், பஸ்ஸோடும், கானலோடும்) கொழும்புத் தெருக்களைப் பார்ப்பார். அதில் அலுப்புத் தட்டினால் தூரத்தே உயர்ந்து தோன்றும் சிலிங்கோ கட்டிடத்தையும் தென் பக்கமாகத் தோன்றும் புனித லூசியா கோயிற் கோபுரத் தையும் பார்ப்பார். அப்படியும் அலுப்பு ஏற்பட்டால் சாய்கதிரையிற் சாய்ந்து கொண்டு பத்திரிகை படிப்பார்; படித்து முடித்தால் சாய்கதிரையிலேயே அறிதுயில்! பின்னர் உணவு, நித்திரை இவைகள் தான் விசுவலிங்கத் தாரது நாளாந்த வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்!

பக்கத்துப் போர்ஷனிலிருந்த புறோக்கரிடம் ரெலி போன் இருந்தது. அவர் ரெலிபோனை உபயோகிப்பதற்கு விசுவலிங்கத்தாருக்குப் பூரண அனுமதி தந்திருந்தார். அழைப்பு வரும் போதெல்லாம் வெளிநாட்டிலுள்ள தன் பிள்ளைகளோடு பேசுவதும் எப்போதாவது சனி ஞாயிறு களில் தன்னைச் சந்திக்க வரும் தன் பழைய காரியாலய தண்பர்களோடு பேசுவதும் தான் அலுத்துப்போன தினசரி வாழ்க்கையின் இன்பமான பொழுதுகள்.

கனடாவிலிருந்து அவரது மூத்த மகன் பேசும்போது ஒருநாள் சொன்னான். ‘அப்பா பத்மாவுக்கு கனடாவி லேயே மாப்பிள்ளை ஒழுங்கு பண்ணி விட்டேன். அவள் படத்தைக் காட்டிச் சம்மதமும் பெற்றாயற்று, விரைவில் அவளை ‘ஸ்பொன்சர்’ பண்ணிக் கனடாவிற்கு அழைத்து இங்கேயே திருமணத்தையும் நடத்துவேன்’,

விசுவலிங்கத்தார் மகிழ்ந்து போனார். என்றாலும் ஒரே துணையாக இருக்கும் மகளையும் பிரிவதா?…

காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் கொழும் பிலே ஆசிரியராகப் பணிபுரியும் பத்மநாதன் அவரைத் தேடிக்கொண்டு வந்தான்.

பத்மநாதன் அவர் ஊரைச் சேர்ந்தவன். தூரத்து உற வினன். வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் வெளிநாடு போகத்தான் அவனுக்கும் ஆசை.

ஆமாம்; இந்த இனப்பிரச்சினையில் மூண்ட போர் எத்தனையோ பேரின் வாழ்க்கையை எப்படி எப்படியெல் லாமோ மாற்றியிருக்கிறது. பள்ளிப் படிப்பை முடிக்காத வர்கள் கூட அகதிகளாக வெளிநாடு சென்று லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிறார்கள், இங்கு படித்த இளைஞர் களும் வெளிநாடு போக வக்கற்றதால் வாழ்க்கையையே வக்கரித்துக் கொண்டு நெஞ்சில் வேதனையோடும், விரக்தியோடும் வாழ்கிறார்கள்! அவர்களின் வேதனத் தால் வெளிநாட்டுப் பணத்தோடு போட்டி போட முடிய வில்லை !

அன்றிலிருந்து பத்மநாதன் ஒவ்வொரு சனிக்கிழமை யும் வந்தான் பின் ஞாயிற்றுக்கிழமைகளிலும், வாரநாட் களிற் சாயந்தரங்களிலும் வந்தான். அவனோடு பேசிக் கொண்டிருப்பதில் விசுவலிங்கத்தாரும் இன்பம் கண்டார்! பத்மாவுக்கும் அவன் பேச்சுத்துணை இன்பத்தைக் கொடுத்தது.

ஒரு சனிக்கிழமை வந்தவன் படச்சுருள் ஒன்றை நீட்டி “‘பொண்டாட்டி சொன்னாக் கேட்கணும்’ என்ற புதிய படம் வெளியாயிருக்கிறது. டெக்கில போட்டுப் பார்க்கலாம் என்று வாடகைக்கு எடுத்திற்று வந்தன்” என்றான்.

“நல்லதாப் போச்சு. எனக்கும் பொழுது போகல்ல. படம் போட்டுப் பார்ப்போம்” என்றாள் பத்மா.

லிருந்து அந்த அந்தம் வரைக்கும் நடந்து களைத்த விசுவலிங்கத்தார் களைத்துப் போய் சாய்கதிரையில் துயின்று கொண்டிருந்தார். அவரைக் குழப்பாமல் எப்படிப் படம் போடுவதென்று பத்மநாதன் யோசித்தான்.

சாய்கதிரையிற் துயில்வதுபோலக கிடந்த விசுவலிங் கத்தார் சற்று அசைந்து கொடுத்து “என்ர நெஞ்சுக்க வலிக்குது மகள்” என்று முனகினார்.

பத்மா பயந்து போனாள். தன் தந்தையாருக்கு என்னவோ ஏதோ என்று பதறினாள். இந்த அத்துவானத் திலே இவர் வந்ததும் நல்லதாய்ப் போயிற்று என்று எண்ணிக் கொண்டே, சமையலறைக்குள் சென்று ஹீற்றரில் நீர் சுட வைத்தாள். பத்மநாதன் விசுவ லிங்கத்தாரின் நெஞ்சை இதமாக வருடிக் கொண்டிருந்தான்.

சமையலறைக்குள் இருந்து பத்மா கோப்பியோடு வநீ தாள். பத்மநாதன் அவரைத் தூக்கி நிறுத்திக் கோப்பி யைக் குடிக்க செய்தான். பத்மாவிடம் திரும்பி “பயப் படாதே பத்மா! எதற்கும் அப்பாவைக் கொஸ்பிற்றலுக் குக் கொண்டு போவது நல்லது” என்று கொண்டே பக் கத்துப் போஷன்களிற் குடியிருப்பவர்களின் துணையோடு விசுவலிங்கத்தாரை ஏறத்தாழத் தூக்கிக் கொண்டு கீழே வந்து ரக்ஸியில் வைத்திய சாலைக்குக் கொண்டு போனான்.

தந்தையைக் கீழே இறக்கி வரும்போதும் ரக்ஸியில் ஏற்றும் போதும் பத்மாவைத் தீண்டுமின்பத்தை அவன் அனுபவித்தான்.

பிரசித்தி பெற்ற பிரத்தியேக வைத்திய சாலையில் விசுவலிங்கத்தார் சேர்க்கப்பட்டார். வைத்தியம் நடந்து கொண்டுருந்தது பத்மநாதன், பத்மாவிடம் கேட. டு கொழும்பிலுள்ள உறவினர்களின் விலாசங்களையும் வெளிநாடுகளிலுள்ள அவளின் சகோதரர்களது விலாசங்களையும் பெற்றுக் கொண்டான்.

வெளியே சென்றவன் கொழும்பிலுள்ள உறவினர் களுக்கெல்லாம் போன் செய்தான். கனடாவிலும், இங்கி லந்திலும் பிரான்சிலுமிருந்த பத்மாவின் சகோதரர் களோடும் தொலைத் தொடர்பு கொண்டான்.

அப்படியாகத் தெரிவித்து விட்டு விடியற்காலை வைத்தியசாலையை அடைந்தபோது பத்மாவின் அழுது வீங்கிய கன்னங்களின் மேலே கண்கள் கலங்கிச் சிவந்திருந் தன. படுக்கையிலே கிடந்த விசுவலிங்கத்தார் ஓடிக் களைத்த பந்தயக் குதிரைபோல வேகமாக-வேகமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். கண்கள் பஞ்சடைந் திருந்தன. வாக்குத் தப்பிவிட்டது.

அவசர அவசரமாக வந்து பரிசோதித்தார் வைத் தியர். ஏதும் பேசாமலே அவர் திரும்பிச் செல்கையில் விசுவலிங்கத்தாரின் ஆவி பிரிந்து விட்டது! பத்மா தலை யிலடித்துக் கொண்டு பென்னம் பெருஞ் சத்தமாய் ஓவென்றழுதாள்.

அவளை அணைத்துக் கொண்டே “பத்மா அழாதே.. இது நம்மூரல்ல. கொழும்பு. இங்கு அழுவதற்குக்கூட நம்மால் முடியாது. இந்த நேரத்தில நீ அழவே கூடாது. உன் தந்தையாரின் இறுதிக் கிரியைகளை நடத்த நீ தைரியமாக இருக்கவேண்டும்” எள்று கூறி அவளைத் தேற்றினான்.

தேற்றியவன் துரித கதியில் மேற்கொண்டு அலுவல் களைப் பார்த்தான். விசுவலிங்கத்தாரின் பூதவுடல் ‘எம்பாம்’ பண்ணப்பட்டு மலர்ச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆறு மணி மாலைச் செய்தியில் *சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்தவரும், குண பூசணியின் அருமைக் கணவரும், முன்னாட் கொழும்புக் கல்வித்திணைக்களப் பிரதம கணக்காளரும் ஆன விசுவ லிங்கம் அவர்கள் இன்று கொழும்பிற் காலமானார். அன்னார் ஞானலிங்கம், காலஞ் சென்ற பரமலிங்கம் ஆகி யோரது இளைய சகோதரரும் சுந்தரலிங்கம் கனடா; தல்லலிங்கம் கனடா, நாகலிங்கம் லண்டன், ஞானலிங்கம் பிரான்ஸ், பத்மராணி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவர். பூதவுடல் ஜெயரத்ன பாளரில் வைக்கப் பட்டுள்ளது. ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்” என்று இலங்கை வானொலி அறிவித்தது.

அந்த அறிவித்தல் தொடர்ந்து அன்று மதியமும், மாலையும் ஒலிபரப்பப்பட்டது.

பத்மா தன் தந்தையாரின் சடலத்தருகே சோகமே உருவாக இருந்தாள் ஊராக இருந்தால் அல்லும் அய லும், இனமூம் சனமும் வந்து குழுமிவிடும். அழுசையும் ஒப்பாரியும் ஊரையே நிறைக்கும். பறைமேளம் கொட்டும். இழவுச் செய்தி சொல்லக் கோவியப் பிள்ளை கிராமம் கிராமமாப் போயிருப்பான். முற்றத்து மாமரத் தின் கீழேபாடை கட்டிக்கொண்டிருப்பார்கள். பறையன், நாவிதன், வண்ணான் என்ற குடிமக்களுக்குக் கொடுக்கச் சில்லறையாக மாற்றிய தூக்குப்பையைச் சுமந்து கொண்டே பெரியப்பா வளைய வந்துகொண்டிருப்பார் என்று அவள் எண்ணினாளோ, அல்லது வெளிநாடு களிலிருக்கும் தன் நான்கு சகோதர்களையும் நினைத் தரளோ, அல்லது அவளால் எதையுமே நினைக்க முடியவில்லையோ! அவள் கல்லாக இருந்தாள்.

துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களுக்கு கொழும்பு அவசரம்!

பத்மநாதன் தான் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந் தான்!

செவ்வாய்க்கிழமையும் வந்து விட்டது. வெளி நாட்டில் இருக்கும் பிள்ளைகளிடமிருந்து செய்திகள் கிடை.. த்தன. அவர்கள் வரமுடியாதாம். இங்கு வந்தால் மீண்டும் அங்கே போக முடியாதாம்.

இச்செய்தியை பத்மநாதன் சொன்னபோது பத்மா தலையிலடித்துக் கொண்டு மீண்டும் கதறினாள்.

பத்மநாதன் உரிமையோடு அவளை அதட்டி அடக்கி னான். அடக்கி விட்டு வெளியே சென்றவன் ரக்ஸியில் ஐயரோடு வந்தான்.

அன்று மதியம் இலங்கை வானொலி செய்திக்குப் பின்னர் ‘சங்கத்தானை சாவகச்சேரியைச் சேர்ந்த விசுவலிங்கம் அவர்களது ஈமக்கிரியைகள் கொழும்பு ஜயரத்னபாளரில் நடைபெற்றுப் பூதவுடல் இன்று பிற்பகல் நான்கு மணிக்கு கணத்தை மயானத்திற் தகனம் செய்யப்படும்’ என்று சுருக்கமாக அறிவித்தது.

ஈமக்கிரியைகளுக்கான பொருட்களை ரக்ஸியிலேயே கொண்டு வந்தான் பத்மநாதன். இது ‘ரெடிமேற்’ யுகமல்லவா?

கிரியைகள் நடந்த பின்னர் பூதவுடல் மோட்டாரில் கணத்தைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே பிடிசாம்ப ரானது!

அன்றிரவு தன் மூத்த சகோதரனுடன் கனடாவுக்குத் தொலைபேசியிற் தொடர்பு கொண்ட பத்மா ஆக்ரோசத் தோடு சொன்னாள்.

“அண்ணா ! நீங்கள் எனக்குப் பேசிய கல்யாணத்தை உடனடியாக நிறுத்துங்கள். நான் வெளியூர் வர விரும்பவில்லை. நான் இங்கே நம்மூர்ப் பத்மநாதனை மணம் முடிக்கத் தீர்மானித்து விட்டேன். என் வேர்கள் இங்கேதான் ஊன்றியிருக்கின்றன.’

சொன்னதும் டக்கென்று போனை வைத்து விட்டாள்.

– கச்சிலம்பற்றை பாடசாலை மலர் 93

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *