கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 661 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்பாடா, ஊர் எவ்வளவு மாறிப்போய்விட்டது!

என் நினைவிலிருந்து அந்தப் பழைய அமைப்பு இன்னும் அழிந்து போகவில்லை. அது அப்படியே மனசோடு ஓட்டிப் போய் நிலைத்து நிற்கிறது. இப்போதிருக்கும் அந்தச் சந்திப்பின் அமைப்போடு, என் மனசில் இருக்கும் பழைய சந்திப்பை ஒப்பிட்டுப் பார்க்க முடிய வில்லை; முடியவே இல்லை.

சதா அவித்த நெல்மணிகளைப் போட்டுக் கொறித்துக்கொண்டு தூங்கி வழிந்தபடி சாய்ந்திருப்பேனே, அந்த அரிசிக் கடைத் தூண்! இலேசாக வயிறு கடிக்கும் போதெல்லாம் ஐந்து சதம் கொடுத்து, இரண்டு வாய்ப்பனும் ஒரு தேத்தண்ணீரும் சாப்பிடுவேனே, அந்தப் புகை பிடித்தகிறாதிக் கடை! அவை எதையுமே காணோம்!

ஓட்டு மடம் சந்தி-இப்போது அதை அப்படிக் கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது! புதுமையாக அவ்விடத்தில் ஓடு போட்டிருக்கும் நிலையா இருக்கிறது ஓரே மாற்றம்!

‘பொன்னம்மாள்! -இப்படி ஒருத்தியின் பெயரைக்கூறிவிட்டால் ‘ஓட்டு மடம் பொன்னம்மாள்’ என்ற ஞாபகம் உடனே வந்து விடாதா என்ன?

சமீப காலம் வரை இப்படி ஒரு பெயர் இருந்திருப்பதாக என்னால் துணிந்து கூற முடியவில்லை.

அந்தப் பெயர் கொண்டவள் இருந்த இடத்தில், ஒரு புல் படர்ந்த மண் மேடு மட்டும் இருக்கிறது.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணப் பட்டணத்திலிருந்து ஐந்து சதம் கொடுத்துவிட்டு ‘காரைத்தீவு’ பஸ்ஸில் ஏறினால், அந்த ஐந்து சதத்தின் எல்லைக்கோடு ஓட்டுமடம் சந்திப்புதான்.

அது ஒரு நாற்சந்தி. திசைக் குறிகளில் அணுவும் விலகாமல், கிழக்கு மேற்கு, வடக்குத் தெற்கான குறுக்கு வீதிகளின் சந்திப்புதான் அது.

சந்திப்பிலிருந்து நேராக மேற்கு வீதியால் சற்றுத் தூரம் போனால், வலப்புறமாக ஒரு குளம் வருகிறது. அதிலிருந்து நேராகப் பார்த்தால், பாம்பு போல நெளிந்து போகும் வீதியையும், அகன்ற வயற்பரப்பையும், சற்றுத் தொலைவில் கடற் பரப்பையும், அதற்கும் அப்பால் முடிதாங்கிய இரு கீற்றுக் கோடுகளையும் காணலாம். அந்தக் கீற்றுக் கோடுகளை ‘இரட்டைப் பனை’ என்பார்கள்.

குளத்தையும் தாண்டி ஐம்பது யார் வீதிதூரம் போய்ப் பாருங்கள். அங்கே முதிர்ந்த நான்கைந்து பூவரசு மரங்களால் சூழப்பெற்ற ஒரு துண்டு மண்மேட்டைப் பார்ப்பீர்கள். இப்போது பச்சைப் பசேலென்று புல் படர்ந்து, அந்த மேட்டு நிலத்தை மூடி வைத்திருக்கிறது.

அந்தத் துண்டு நிலத்தின் மேற்கெல்லையோடு ஒரு வேப்ப மரத்தையும் பார்ப்பீர்கள்.

அதுதான் பொன்னம்மாளின் வீடு; ஒட்டுமடம் பொன்னம்மாள் வாழ்ந்தாளே அந்த இடம்!

பொன்னம்மாளைப் பற்றி இப்படியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்ட எனக்கு, அந்த வீட்டைப்பற்றிய எல்லாம் தெரியுமா என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி.

‘தெரியுமாவா? நான் தானே அந்த வீட்டின் ஜீவனை சில வருடங்கள் பிடித்து வைத்துக் கொண்டிருந்தவன்’ என்று சொல்லிக் கொள்கிறேனே, போதாதா?

எனக்கு இப்போது வயதாகிவிட்டது. நான் கிழவனாகிவிட்டேன். வயசு எழுபத்தைந்துக்கு மேலாகிறதே!

அட, சின்னதிலிருந்து நோஞ்சியாகிவிட்ட நான் வேடிக்கை வேடிக்கையாக இத்தனை ஆண்டு, காலம் வாழ்ந்துவிட்டேன். என்னை ‘எலும்பு மாமா’ என்று பழிப்பவர்களில் பெரும்பாலோர் செத்துப் போய்ச் சாம்பலாகி மண்ணாகிவிட்டார்கள். நான் இன்னுந்தான் வாழ்கிறேன்.

ஒவ்வொரு மனித உருவத்தின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பொற் காலம் வந்து போகிறது என்று கூறுகிறார்கள். அப்படியானால் எனக்கும் ஒரு பொற்காலம் வந்து போயிருக்க வேண்டுமே! சில வேளை இனிக்கூட… சை! இனியாவது பொற்காலமாவது? இன்றைக்கோ நாளைக்கோ என்றிருக்கும் எலும்புக் கூட்டுக்குப் பொற்காலமாம்; பொற்காலம்! அப்படியென்றால், அந்தப் பொற்காலம்… ஆமாம் நான் கிராப்பு வெட்டிக் கொண்டேனே அந்தக் காலம்…?

***

அப்போது எனக்குக் குடுமி!

ஊரில் எனது குடுமிக்குப் பெருமதிப்பு!

என் குடுமி அளவில், அங்குப் பெண்களுக்குமேகிடையாது. தலையை முழுகவைத்து உலர்த்தி, குடுமி போட்டுக் கொள்வேனாகில்தலையின் பாதி அளவுக்குக் குடுமி இருக்கும். ஆனால் மயிர் மட்டும் வெண் செம்படை; அது என் உடம்பின் நோஞ்சலால் ஏற்பட்டதல்ல. பிறந்த காலத்திலிருந்து இதே நிறந்தான்!

பதினாறு வயதில் எனக்கு ஜன்னி கண்டிருந்தது அதிலிருந்து நான் மீண்டு விட்டேன். ஏற்கனவே நராங்கலாகியிருந்த என் உடலை, ஜன்னியும் ஒரு கைப்பார்த்து விட்டது. தான் நிரந்தரமான நராங்கலாகி விட்டேன். அத்துடன் –

அம்மா எனக்கு ஒருத்தியைக் கட்டி வைத்தாள். நராங்கலடித்துப் போன உடலுக்குக் கல்யாணந்தான்சரியான மருந்து என்பது கிராமத்து நம்பிக்கை. புதுப்புனலில் திளைத்து நிமிர்ந்தால் உடலில் தெம்பு வந்து விடுமாம்!

ஆறே ஆறுமாதம் ஆவதற்கிடையில் எனது மனைவி என்னை விட்டுப்போய்விட்டாள். போய்விட்டாள் என்று சொல்வதைவிட, வேறொருத்தனுடன் ஓடிப் போய்விட்டாள் என்றுதான் சொல் வோமே! தவிர அதனால் என்ன வெட்கம்! என்னில் பிரமாதமான ஒரு குறைபாடு. அதையும்தான் ஒப்புக் கொள்வோமே! மனைவிதான் பகிரங்கமாக அதைக் காட்டிக் கொடுத்துவிட்டாளே!

நான் நோஞ்சி. என்னிடம் இருப்பது வெறும் எலும்புக்கூடு மட்டுமே! இந்த எலும்புக் கூட்டை மஞ்சளான ஒரு தோல் மூடி இருக்கிறது.

ஆண்மையெல்லாம் என்னிடமிருந்து ஓடிப்போய் விட்டது. ஆனால் ஆண்கள் மட்டும் என்னை விட்டு விட்டுப் போய்விடவில்லை. பைத்தியக்காரத்தனமான ஆண்கள்!

என் அம்மாவுக்குப் பாரமாக நான் இருந்தேன். கடைசியில் என் சுமை பொறுக்க மாட்டாது அம்மாவும் போய்விட்டாள். எனக்கு இனி யாரிருக்கிறார்கள்? யாருமே இல்லை.

நோஞ்சியான எனக்கு வேலை எதுவுமில்லை. வெறுமனே ஊரைச் சுற்றிவிட்டு, என் தாய் விட்டுச் சென்ற குடிசைக்குள் சுருண்டுப் போய்ப் படுத்துக்கொண்டு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவேன். ஆனை எண்ணம் குதிரை எண்ணம்! இவைகளையும்விட மேலான எண்ணங்கள் எத்தனையோ; எத்தனையோ!

தனிமையிலே நான் அவஸ்தைப்பட்டேன். என் தனிமையைப் போக்க என்று வந்தவளே ஓடிவிட்ட பின்பு, என்னை நன்கு புரிந்து கொண்டு என் தனிமையைப் போக்க யார் ஒருத்தி வரப்போகிறாள்!

நான் மேலும் மேலும் நோஞ்சியாகி வந்தேன். அது எனக்கே நன்கு புரிந்தது.

கிராமத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவனை ஊருக்கெல்லாம் நன்கு தெரியும். துரையன் என்று பெயர். எங்களைப் போன்று அவனுக்கும் வயசு நாற்பதைத் தொட்டுக் கொண்டுதான்நின்றது. நான் பிறப்பதற்கு இரண்டு மாதங்கள் முந்திப் பிறந்தவன் என்று அம்மா சொல்லியிருந்தாள். அவனின் குணம், நடை பாவனை எல்லாம் ஒரு மாதிரி. ஊரின் பெண்கள் வட்டாரத்தில் அவன் ராஜா. கிராமத்தில் இங்கிலீஸ் படித்தவன் அவன்தான். நாகரீகமென்றதும் அவன்தான்; கிராப்பு வெட்டிக் கொண்டவனும் அவன்தான்.

சொந்தமாக வேறு ஒன்றுமில்லாவிட்டாலும், சேட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு, பென்னம் பெரிய மோட்டார் சைக்கிளில் ‘டாம்டோம்’ என்று வெடிக்க வைத்து அவன் ஓடி வரும் ஓட்டம் கண்கொள்ளாக் காட்சி.

என்னை அவன் எப்போதுமே கேலி செய்வான். “இந்தா, பட்டணத்திலே ஒரு வீட்டில், நிரந்தரமானதாய் ஒரு வேலையிருக்கு, வாறியா சேத்திடுறன்’ என்றான் ஒருநாள். நான் முதலில், கேலியாகவே கருதினேன். பின்பு அவன் வற்புறுத்தவே இணங்கிவிட்டேன்.

அன்று இருட்டிய போது, அவன் தனது வண்டியில் ஏறும்படி எனக்குப் பணித்தான். நான் பயந்து நடுங்கினேன். குளிர் ஜுரம் வந்து விடுமோ என்றிருந்தது. அவனின் வயிற்றோடு கைகளை வளைத்துக் கொண்டு எத்தனை மணிவேளைதான் இருந்தேனோ!

இரவோடிரவாக அந்த வீட்டிற்கு நாங்கள் வந்துவிட்டோம். வீட்டு வேலைக்காகப் போகிறேன் என்றதும் நான் ஒருமாட மாளிகையைத் தான் கற்பனை பண்ணினேன். ஆனால் வந்திருப்பதோ ஒரு சாதாரண தகரத்தாலான குடிசை! சரி வந்துவிட்டேன்; கௌரவமாக வீடு என்று தான் கூறுவோமே! மண்ணெண்ணெய்ப் பந்தம் போல ஒரு பேணி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விறாந்தையில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்குப்பொக்குவாய் – அவள் கிழவி; அவள்தான் வீட்டு எஜமானியோ என்ற கேள்வி எனக்கு, கால்களை நீட்டி, வலப்புறமாக ஒரு சிறு உரலை வைத்து ‘லொக்லொக்’ கென்று வெற்றிலைத் துவைத்துக்கொண்டிருந்தவள், பொக்குவாய்க் கிழிந்து வரவேற்றாள், வெள்ளை உடுத்தி முட்டாக்குப் போட்டிருந்தாள். பார்ப்பதற்கு முஸ்லீம் பெண் போல இருத்தாள்.

சற்றுவேளைக்குப் பின்பு உள்ளே இருந்து வேறொருத்தி வந்தாள். நெடிய உடல், சிவப்பு நிறம், வட்டக்கண்கள், சுருக்கக் கழுத்து, நடுவயசுதான் இருக்கும்.

முழுக வைத்து உலர விட்டிருந்த கூந்தலை அப்படியே விட்டிருந்தாள். அது அவளின் முதுகோடுதழுவிவந்து, இடைதாண்டி, பின்னத்துச் சதை மேடுகளைத் தொட்டு வளைத்து நின்றது.

நடுவாக வகிடு எடுக்கப்பட்ட அவள் தலையிலே குங்குமம் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. புயங்களிலே பொங்கி நிற்கும் நீலநிறச் சட்டை அணிந்து, ஊதா நிறத்தில் சேலையும் உடுத்திக்கொண்டு ஒயிலாக நடந்துவந்தாள் அவள்.

துரை, என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தினான். எனக்கு மனசுக்குக் கூச்சமாக இருந்தது.

உள்ளேயிருந்து தாம்பூலத் தட்டை எடுத்துக்கொண்டு ஒரு சின்னப் பெண் வந்தாள். வயசுக்கு மிஞ்சிக்கொண்டு அவள் உறுப்புகள் வளர்ந் திருப்பது போல எனக்குப்பட்டது. மொத்தத்தில் மலர்ந்து பரிணமிக்கப் போகும் அழகான மலரொன்றில் இதழ் வெடித்த மொட்டாக அவள் இருந்தாள்’ என்றே சொல்லி விடுவோம்! ஆனால் ஒரே ஒரு குறைபாடு. அவளின் மயிர் செம்புழுதி நிறத்தில் இருந்தது. அது எனது தலை முடியைப் போல. அவள், அந்த செம்பட்டைக் கூந்தலுக்குக் கரிய முடிமயிரை இணைத்து முடிந்து கொண்டிருப்பது பார்ப்பதற்கு அருவருப்பாய் இருந்தது.

இரவு கரைந்து கொண்டு போயிற்று. வீட்டில் எங்குமே சந்தடியில்லை. கிழவியும் தூங்கிப் போய்விட்டாள். விறாந்தையின் விளங்கும் அணைத்துப் போய்விட்டது. விறாந்தையின் தென் புறத்தோடு, வெறும் பலகைத் துண்டுகளால் செய்யப்பட்டிருந்த ஒரு அறைக்குள் நான் படுத்திருந்தேன். எனது தலைப்புறத்தில் ஒரு பெட்டிமேல் புகைக்கோடே இல்லாத கட்டியாக மெழுகுத் திரி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. எனக்குப் பக்கத்து அறைக் கதவுக்குள்ளே அந்தச் சின்னப் பெண் இருந்து நிலத்தைச் சுரண்டி விட்டுக்கொண்டு தலை கவிழ்ந்திருந்தாள்.

அவள் பரிதாபமான ஜீவனாக எனக்குப்பட்டாள், அவளின் செம்பட்டை மயிரோடு கூட்டுச் சேர்ந்து நின்ற கரிய முடிமயிர், அவள் மடியில் விழுந்து கிடந்தது. ஆகவும் நான்கைந்து அங்குலத்தில் மட்டும் வளர்ந்திருந்த செம்பட்டை மயிர்த் தளிர்கள் அவள் கழுத்தை மட்டும் தொட்டு நின்றன.

சற்று வேளைக்குப் பின்பு கதவு மெதுவாக நகர்த்தப்பட்டது.

அந்த நடுவயதுப் பெண் உள்ளே வந்தாள். சின்னப்பெண் எழுந்து வெளியே போய்விட்டாள். அவள் மடியி லிருந்த முடிமயிர் நிலப்புழுதியில் புரண்டுக் கிடந்தது.

மெழுகுத் திரியின் ஒளி செத்துப்போய்விட – நான் புதிதான ஒரு அனுபவத்தில் சிக்கித் திணறினேன். என்னால் முடியவில்லை. நான் மனைவியை ஓடவிட்டவன்; நோஞ்சி; நபுஞ்சகம்!

அந்தப் பெண் வெடுக்கென்று எழுந்து வெளியே போய்விட்டாள். சற்று வேளைக்குப்பின் ஏளனமாய்ச் சிரிப்பொலிகள் எங்கோ கேட்டன.

நான் எங்கே வந்திருக்கிறேன்? என்ன வேலைக்காகக்கொண்டுவரப் பட்டிருக்கிறேன்?

இதெல்லாம் என்ன கேள்விகள்? இதுவரையிலுமா புரியவில்லை? நான் மிகவும் வெட்கப்பட்டேன்!

எனக்குராஜ மரியாதை! இதற்குமுன், என் வாழ்க்கையில் யாருமே இப்படி எனக்குக் கௌரவம் அளித்ததில்லை.

‘தம்பி, தம்பி’ என்று பொக்குவாய் நிறைந்து போக அழைப்பாள் கிழவி செல்லம்மாள்.

“இந்தா பாருங்கோ’ என்று அன்பையெல்லாம் தேன் குழைத்துத் தருவாள் நடுவயதுச் சின்னம்மாள்.

‘மாமா, மாமா’ என்று சதா நச்சரித்துக் கொண்டிருப்பாள், அந்தப் பெண் பொன்னம்மாள்.

கிழவி செல்லம்மாளுக்கு, நடுவயதுப்பெண் சின்னம்மாள் வளர்ப்புப் பெண். சின்னப் பெண் பொன்னம்மாள், அந்த இருவருக்குமோ வளர்ப்புப்பெண்.

பொன்னம்மாள் தமிழ்ப்பெண்ணே அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கு வாடிக்கை வைத்துக் கொண்டிருந்த ஒரு சிங்கள முதலாளி, சிங்களக் கிராமம் ஒன்றிலிருந்து எடுத்து வந்து வேலைக்காகக் கொடுத்து விட்டுப் போனாராம். மழுங்க வழிக்கப்பட்ட மொட்டைச்சியாக அவள் வந்தாளாம். தனக்குயாருமே இல்லையென்று அவள் என்னிடம் வேதனையோடு பல தடவைகள் சொன்னாள்.

முதலில் நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். எல்லோ ருக்குமே ஆரம்ப நாட்களில் இப்படித்தான் இருக்கும். பின்பு தொழில், வாழ்வோடு ஒட்டிப்போய், ‘சரி நடப்பது நடக்கட்டும்’ என்ற மாதிரி ஆகிவிடும்.

என் மனதில் இருந்த நமைச்சல் உணர்ச்சி மாறி. நான் அத் தொழி லோடு ஒன்றிப் போய்விட்டேன்.

நாகரீகமாக இருக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு வந்தது. உடலும் சற்று உரத்து வருவதுபோல இருந்தது.

சின்னப்பெண் பொன்னம்மாள் என் தலைமுடியைப் பார்த்துப் பார்த்து ஏங்குவாள். தனது தலைக்கு, எனது முடி மிகவும் பொருத்தம் என்ற கருத்தில் நாவில் ஜலம் ஊறக் கூறுவாள்.

ஒருநாள் நான் என் தலைமுடியை கொய்து அவளிடம் கொடுத்து விட்டு, நாகரீக மனிதனாக மாறிவிட்டேன்.

பொன்னம்மாள் கண்ணாடியை எடுத்து வந்து எனக்கு முன்னால் பிடித்து வேடிக்கைக் காட்டுவாள்; நான் வெட்கப்படுவேன்.

எனது ஆசைகளையும் மிஞ்சிக்கொண்டு காலம் ஓடி, ஓடிப்போய் விட்டது.

சின்னப்பெண் பொன்னம்மாள், பொன்னம்மாளாகவே ஆகி விட்டாள்.

‘ஓட்டுமடம் பொன்னம்மாள்’ என்ற பெயரை இப்போது அவள் பிரகடனப்படுத்தி வந்தாள். முற்றுந்துறந்த ஒருவர், பொன்னம் மாளுக்கு முன் ஒரு தடவை வந்து போனால்தான் அவர் முழுமை கொண்டு முனிவராக முடியும்.

‘பொன்னம்மாளின் கண்வீச்சு, உடல்வீச்சு, வாய்வீச்சு இத்தனைக்கும் தாக்குப் பிடிக்கக்கூடிய ஒருவன் மனிதனே அல்ல’ இப்படி எனக்கு ஒரு எண்ணம்.

என்னிடம் எத்தனையோ மனிதர்கள் தொடர்பு வைத்தக் கொண் டார்கள். என்னை அவர்களுக்கெல்லாம் கட்டாயம் வேண்டும்.

வாரத்துக்கு வாரம் வாடிக்கையாக ஒருத்தன்! ஊர் தேசம் பார்க்க வந்து, ஒரே ஒரு தடவை முகம் காட்டிவிட்டுப் பிரியா விடைபெறும் வேறொருத்தன்.

சர்வ சதா என்னையே நச்சரித்துச் சுற்றித் திரியும் தொந்தி உருவம். அரும்பி வரும் மீசைக்குக் கரி பூசிக்கொண்டு, மிடுக்கு நடையில் வரும் மைனர்த் தம்பி.

முட்டாக்குடன் வந்து போகும் குல்லாக்கள்; பூணூல்கள்; காக்கிச் சட்டைகள்…

இப்படி எத்தனையோ மனிதத் தினுசுகளை நான் சந்திக்கிறேன். இவர்களைவிட மனிதப் பிரதிநிதிகளாக, பொதுவான கணிப்பில் யார் இருக்கிறார்கள்?

ஊர் நல்லது; மனிதர்கள் நல்லவர்கள். ஆனாலும் பொன்னம்மாளுக் காக வயது வேற்றுமை இன்றி எல்லோருமே ஏங்கிச் சாகிறார்கள்.

வீட்டின் முதல்வி-பொக்குவாய் முட்டாக்குக் கிழவி செத்துவிட்டாள். குடும்பத்தின் பொறுப்பான நிர்வாகி செத்துப்போய்விட்டால், அந்த நிர்வாகம் வேறொருவரிடம் கை மாறுவதற்கிடையில் எத்தனையோ மாற்றங்களை அந்த நிர்வாகம் பெற்றுவிடும். ஆனால் அங்கு மட்டும் அப்படி ஒன்றும் பிரமாதமாக மாறிவிடவில்லை. சின்னம்மாள். கிழவியின் இடத்தைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள் சின்னம்மாளுக்கு உடல் நிலை இப்போது சரிப்படுவது மில்லை. நோய் நொடிகள்! கட்டுப்படியாக வேலைகள் ஏற்பட்டால் ஒத்தாசைக்கு வருவாள். அவ்வளவுதான்!

பொன்னம்மாளின் பெயர் பிரசித்தமாக, ஆக, மோதும் கிராக்கி களுக்கு, மாதா மாதம் வெளியூரிலிருந்து புதுமுகங்களைத் தேடிப் பிடித்து, எப்படியோ சமாளித்துக் கொள்வதில் கிழவியைவிட, சின்னம்மாள் சமர்த்து! நீண்ட நாட்கள் ஈடுகொடுக்க முடியாமல் ஓடிவிடுபவர்கள் மேல் சின்னம்மாள் திட்டித் தீர்ப்பாள்; காறி உமிழ்வாள்.

சின்னம்மாளுக்குப் பொன்னம்மாள் ராசாத்திபோல, பொன்னம்மாள் மட்டும் இல்லாவிட்டால் அவர் சருகாய்ப் பறந்துவிட வேண்டியதுதான்!

உணவு, உடை எனக்கு நிரந்தரம். இதுபோல உருப்படிக் கணக்கின் படி கமிஷனும் உண்டு.

வீட்டு விறாந்தையின் வாசலுக்கு நடுவே, கால்களை நீட்டிக் கொண்டு சின்னம்மாள் இருப்பாள். அவளுக்கு வலதும் இடதுமாக இரண்டு குந்துகள் உண்டு. ஏதாவது தொழில் நடந்துவிட்டால், வலப் புறக் குந்தில் இருபத்தைந்து சத நாணயமும், இடப்புறக் குந்தில் பத்துச் சத நாணயமும் இருக்கும். வலப்புறந்தான் எனக்கு. இடப்புறத்தான் பொன்னம்மாளுக்கு, பொன்னம்மாளோ நானோ, ஆசைப்பட்ட பண்டம் சாப்பிடுவதற்காக அதைப் பிரயோகித்துக் கொள்ளலாம்.

பத்துச் சதத்தை விட்டேறிந்தால், குத்தகைக்காரக் காத்தானின் தவறணையில் இரண்டு அளவு கள்ளுக் கிடைக்கும், ‘ரேஸ்ட்’ கடை அண்ணாச்சியிடம் ஐந்து சதத்தை விட்டெறிந்தால், வாய்க்கு ருசியான ஆட்டுரத்த வறுவல் கிடைக்கும். அப்புறம் என்ன? இதைவிடவுமா சுகம் வேண்டும்! ஹாயாய் வாழ்க்கை நடத்தினேன்.

அவசரகால நிலையைச் சரி செய்வதற்காகத் தெரிவிக்கப்படும் “எக்ஸ்ரா’க்களுக்கு, உடனுக்குடன் மொத்தமாகக் கணக்குத் தீர்த்து விடுவாள் சின்னம்மாள்.

அவளிடம் தொழிலென்றால் தொழில்தான்! விடிகாலையில், அவர்கள் கணக்குத் தீர்க்கப்படும் போது, நாக்கில் நீர் வழிய, சுயமரியாதையை விட்டு நான் ‘எக்ஸ்ரா’க்களைப் பார்ப்பேன். ‘நீ என்ன பண்ணினாய், உனக்குக் கூலி தர?’ என்று வெட்கத்தை விட்டே அவர்கள் கூறுவார்கள். சின்னம்மாளிடம் நான் கேட்கவே முடியாது. அவர்களினால் அவளுக்குக் கிடைப்பதோ கமிஷன்தான். அதிலும் எனக்கு ஒரு கமிஷன் என்றால் –

மொத்தமாகப் பார்த்தால் பொன்னம்மாளினால் தானே எனக்கு இலாபம்.

***

கடந்து போன மகாயுத்த காலத்தைப் பிரத்திபட்சமாக நான் காணா விட்டாலும், அதன் எதிரொலிப்புக்கள் நம்மால் பார்க்கப்பட்டவைகளே!

முதன் முதலில் பட்டாளக்காரர்களைக் கண்டால் பயம் வருகிறது. நான்கு நாட்கள் அடுத்துக் கொண்டு வந்தால் அது ஓடிவிடுகிறது. ஊரெல்லாம் பட்டாளக்காரர்கள் பவனி வருகிறார்கள். குழந்தைகூட பார்க்கிறார்கள். சிரிக்கிறார்கள்; பேசுகிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றிப் பெண்கள் வட்டாரத்தில் பெரும் பீதி!

எமது வீதியில் பட்டாள வாகனங்கள் இரைந்தோடிப் பறந்து போகும். பொன்னம்மாள் பயந்து நடுங்கிப் போவாள். நல்ல காலம்! அந்தப் பட்டாளக்காரர்களின் செவிகளில் பொன்னம்மாள் புகழ்பட வில்லை!

பொன்னம்மாளுக்கு ஜுரம்வந்தது. அத்தோடு முகமெல்லாலம் இளைத்துவிட்டது.

அவளுக்குப் பயம் வந்துவிட்டதாகக் கற்பனை பண்ணி வேப்பிலை வேக்காடு வைத்து, முகரக்கொடுத்துப் பார்வை பார்த்தாள், சின்னம்மாள் நோய் குறையவில்லை.

திருஷ்டி பட்டுவிட்டதாகக் கூறி, பொன்னம்மாளைப் பிறந்த மேனியுடன் நிறுத்தி, மிளகாயை உடைத்து, தலையைச் சுற்றித் தட்டிக் கழித்து, துப்பி, குளத்தில் மிளகாயை வீசினாள் அவள். அதற்கும் நோய் தீரவில்லை .

கொத்திப்பேய்க் குறைபாடு என்று, கொத்திப் பேய்க்கு மடை பரப்பிக் கழித்து, நூலும் கட்டிப் பார்த்தாய்விட்டது. இதுவரை நோயின் வாடையே பிடியாத பொன்னம்மாளுக்கு இப்போது மட்டும் பெருநோய் பற்றிப் பிடித்துவிட்டது. வீட்டின் வாடிக்கைத் திருட்டு வைத்தியர், ஞானமுத்தர் கூட பார்த்துத் தீர்த்துவிட்டார். அவருக்குமே பிடிபடாத நோய்!

ஞானமுத்தர் வைத்தியம் பார்க்கும் நோய் வேறு! இதற்கு முன், அந்த வீட்டில் பல தடவை அவர் அந்தநோய்க்காக வந்துபோய் இருக்கிறார். பச்சிலை உருண்டைகளாகக் கொடுப்பார். ஒருநாள் விட்டு மறுநாள் எல்லாமே தீர்ந்து போய்விடும்.

பொன்னம்மாள் உடலாலும் உள்ளத்தாலும் தேய்ந்து கொண்டு வந்தாள்.

அழகான அவளின் இமை வட்டங்கள் கருகிச் சுருங்கி வந்தன. செவ்விதழ்களின் இரு கோணங்களிலும் பருக்கள் படர்ந்து, நித்திய வடுக்களாக மாறி வந்தன.

உடலெங்கும் திட்டுத் திட்டாகத் தடிப்புகள்.

நிர்மலமான நீலவானத்தின் அடிப்புறத்தே கருமேகப்புருவங்கள் விளிம்பு கட்டி நிற்பது போல உடலெங்கும் குறுகிய இரண்டு மாத காலத்திற்கிடையில் பொன்னம்மாள் உருமாறி விட்டாள். உப்பிட்ட பாண்டம் போல அந்த உடலில் தேஜஸ் உதிர்ந்து போய்விட்டது.

‘லொக்கு லொக்’ கென்று இருமவும் தொடங்கிவிட்டாள், பொன்னம்மாள்.

ஆரம்பத்தில் கண்ணின் மணி போலப் பொன்னம்மாளைப் பார்த்த சின்னம்மாளுக்கு இப்போது கசப்பு வந்துவிட்டது. காரணமில்லாமல் அவள் சீறி விழுந்தாள். இருந்தும் பொன்னம்மாள் தொழிலுக்காகத் தாக்குப் பிடிக்கிறாள்.

பொன்னம்மாளுக்காக நான் அனுதாபப்பட்டேன். இதைத் தவிர என்னால் என்னதான் செய்யமுடியும்? என்னிடம் மோதும் கிராக்கி களுக்கெல்லாம் சாக்குப் போக்குச் சொன்னேன். பயல்கள் என்னுடனேயே நின்றுவிடும் பண்பைப் படித்தா வைத்திருக்கிறார்கள்! நான் ஏதோ தன்னைக் காலைவாரி விடுவதாகச் சின்னம்மாள் என்மீது சீறிப் பாய்ந்தாள்.

யாழ்ப்பாணக் குடா நாட்டில் அப்போது பேரும் புகழும் உடையது மானிப்பாய் ஆஸ்பத்திரிதான். அந்நாளில் அங்கே ‘யேமிஸ் ஐயர்’ என்று பெயர்பெற்ற வெள்ளைக்கார டாக்டர் இருந்தார். பொன்னம்மாளை, நான் அவரிடம் அழைத்துச் சென்றேன்.

மிகவும் அனுதாபத்துடன் அந்த மனிதர் பொன்னம்மாளைப் பார்த்து விட்டு, எதை எதையெல்லாமோ சொன்னார்.

‘மாமா, இந்த வருத்தம் பொல்லாதது, நான் இனிக்கன நாள் இருக்க மாட்டன்.’

அங்கிருந்து திரும்பும்போது பொன்னம்மாள் நாத் தழ தழக்க இதைக் கூறினாள். நான் விம்மிவிட்டேன்.

அதைத் தொடர்ந்து, தொழிலில் வீழ்ச்சி வந்துவிட்டது. அந்த வீட்டின் படலையைத் திறந்த நான்கைந்து பேர், அந்த வாரத்தில் படுக்கையில் வீழ்ந்துவிட்டதாக ஊரில் வதந்தி.

என்னில் நம்பிக்கையை இழந்துவிட்ட சின்னம்மாளே படலைக்கு வந்து முகங்காட்டிக் கிராக்கிப் பிடிக்க முற்பட்டுவிட்டாள். அத்தனை தூரத்திற்குத் தொழிலில் வீழ்ச்சி அன்றாடம் வாழ்வுக்கே போதாத நிலை!

எனக்குத் தெரியாமலே என் கால்கள் என்னை ஓட்டு மடம் சந்திக்கு இழுத்து வந்து நிறுத்திவிடும். அது எனக்குப் பழக்கப்பட்ட பழக்க மல்லவா?

எத்தனையோ பேர்கள் வந்து போவார்கள். ‘என்ன மாமா ஏதாவது புதிசாக – ‘ இப்படி ஒருவன் கேட்டால் என்னால் பேசமுடிவதில்லை. புதிதாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டுப் பின்பு நான்தானே மாட்டிக் கொள்ள வேண்டும்!

‘ஏன் மாமா, பொன்னம்மாளுக்குச் சீக்குத் தீந்து போச்சா?’ இப்படிக் கேட்கும் முட்டாளுக்கு எப்படிப் பதில் பேச? வாடிக்கைக்காரர்களை ஏமாற்ற முடியாது. புதிய கிராக்கிகளையே பிடிக்க வேண்டியிருந்தது. அதற்கும் மனசு கேட்பதில்லை.பாவம் பொன்னம்மாள்!

வீட்டின் மேற்குப்புற வேலியோடு ஒரு கடவைப் பாதை இருக் கிறது. அந்தக் கடவையில் நின்று பார்த்தால் பச்சைப் பசலென்று நீண்ட விளைநிலப் பரப்பும், அதை அடுத்துச் சற்றுத் தொலைவில் கடற் பரப்பும் தெரியும். கண்களைச் சற்று உயர்த்தி வீசினால், சிறு கடற் பரப்பில் எல்லைக்கு அப்பால், இரண்டு இடங்களில் துண்டுத் துண்டாக தாளங்காடும், அவைகளோடு சேர்ந்து கொண்டு முடிதாங்கிய கீற்றுக் கோடுகளாக நிற்கும் இரண்டு பனைகளும் தெரியும்; எல்லோருக்குமே அந்த இரட்டைப் பனையடியைத் தெரியும்; எத்தனையோ இராக்கால் தேவர்கள், தேவிகள் அங்கே போகிறார்கள்; வருகிறார்கள்.

மாலை வேளையின் அடிவான ஜோதிச் செக்கரைக் காணவும், பூமியை முத்தமிடக் குனிந்து வரும் தொடுவானத்தில் ரம்மியத்தை ரசிக்கவும் மென்காற்றின் ஆலிங்கனத்திற்கு ஆசைப்பட்டும் சாய்மனைக் கட்டிலை அந்தக் கடவைக்கு நேரே இழுத்துப் போட்டுக்கொண்டு பொன்னம்மாள் படுத்திருப்பாள்.

இருட்டிக்கொண்டு வரும்போது நான் உள்ளே வந்தேன். நீண்ட நாட்களுக்குப் பின்பு பொன்னம்மாள் அந்தக் கடவையில், வேப்பமரத்தின் கீழ் படுத்திருந்தாள். கடலின் எல்லையோடு நகர்ந்து செல்லும் தோணிகளின் பாய்மரக் கீற்றுக் கோடுகளில் மனதை லயிக்க விட்டபடி அவள் கிடந்தாள்.

சற்று வேளைக்கு முன்புதான் அவள் அழுது ஓய்ந்து போயிருக்க வேண்டும். கண்கள் உப்பிப் போயிருந்தன.

‘பொன்னம்மா!’ எனது அழைப்பைக்கேட்டதும் அவள் திடுக்குற்றுக் கொண்டு எதையோ மறைக்க முயன்றதை நான் கவனித்துவிட்டேன்.

‘பொன்னம்மா!என்ன, அழுதாய் போலிருக்கு?”

அவள் பேசவில்லை . ‘என்ன தங்கச்சி, அதை எனக்குச் சொல்லு?”

எனது வேண்டுகோளுக்கு அவள் செவிசாய்த்ததைப் போல விம்மினாள்.

ஒரு தந்தையின் பரிவோடு நான் அவள் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன்.

வீட்டில், சின்னம்மாள் இல்லையென்பது நன்கு தெரியும். காலையில் நான் வெளியே போகும் போது, யாரோ ஒரு புதியவளை அழைத்து வருவதற்காக, அவள் வெளியூருக்கு போகும் ஏற்பாடு இருந்தது.

‘மாமா… மாமா, சின்னம்மா என்னைத் திட்டிப்போட்டா….. திட்டிப்போட்டா மாமா….

மேலே பேச முடியாமல் பொன்னம்மாள் விம்மினாள். பகல் ஏதோ ஆனைப் புரளி நடந்திருப்பதாக ஊகித்துக்கொண்டேன் ‘அதுக்கென்ன பிள்ளை! அம்மா தானே பேசினா…’ என்று சமாளிக்க முயன்றேன்.

‘நீ என்னடி எனக்குப் உழைச்சு தந்திட்டாய் ? நீ துலைஞ்சாத்தானடி இந்த வீடு உருப்படும் அறுதலி, செத்துப் போகலாமே கடவுளே!’ இப்படி அம்மா திட்டிட்டா மாமா. நான்… நான்…’

பொன்னம்மாளின் இந்த வார்த்தைகளின் தாக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. சின்னம்மாளின் நாவுக்கூடாக இந்த வார்த்தைகள் வெடித்து வந்தபோது பொன்னம்மாள் எப்படித்தான் தாங்கிக் கொண்டாளோ! இரவு வந்தது. பொன்னம்மாள் படுக்கைக்குப்போய்விட்டாள். வீட்டு விறாந்தையில் குப்பி விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. வீதியிலே இரைந்துவந்த மோட்டார் வாகனமொன்று படலைக்கு நேரே நிற்பது போல இருந்தது வீதியிலே சாப்பாத்துகள் உரசும் ஓசைகள் கேட்டன.

படலை இடிக்கப்பட்டது. மனதுக்குள் எரிந்து புகைந்து கொண்டு போர்வைக்குள் சுருண்டு போய்க்கிடந்தேன்.

‘என்னை யாரோ உலுப்பி அசைத்தார்கள். அது பொன்னம்மாள் தான். எழுந்து போய்ப் படலையைத் திறக்கும்படி அவள் பணித்தாள்.

*பொன்னம்மா, வேண்டாம் பொன்னம்மா!’ பரிதாபமாக அவளை வேண்டினேன்.

அவள் கேட்கவில்லை; நச்சரித்தாள். நான் படலையைத் திறந்தேன்.

என் முன்னே நான்கு பட்டாளக்காரர்கள் நின்றார்கள். என் உடம்பு நடுங்கியது. ஒருவன் மட்டும் உள்ளே வந்தான். நான்கைந்து நீல நோட்டுக்களை என்னிடம் நீட்டினான்.

கொச்சையான தமிழில் அவன் பேசினான். “இங்கே இண்டைக்கு ஆள் இல்லை’ என்று பலமாகக் கூறினேன்.

அவன் மேலும் மேலும் என்னை நச்சரித்தான்.

“மாமா!’

உள்ளேயிருந்து பொன்னம்மாளின் அழைப்புக்குரல் வந்தது.

அவனை அப்படியே விட்டுவிட்டு நான் போனேன். ‘என்ன மாமா, யாரது?’ ‘பட்டாளக்காரங்கள், பொன்னம்மா.’ சற்றுவேளை அவள் பேசவில்லை.

அந்தப் பட்டாளக்காரனால் என்கையில் திணிக்கப்பட்ட நோட்டுக்கள் விளக்கொளியில் தெரிந்தன. பொன்னம்மாளின் கண்கள் அதையே சுற்றிச் சுழன்றன.

‘மாமா. அம்மா சாப்பாட்டுக்கே இல்லையெண்டு திட்டினா. நீ வந்ததை விடப்பாக்கிறாயா!’

பொன்னம்மாள் மிகவும் அழுத்தத் திருத்தமாக இதைக் கூறினாள். ‘பொன்னம்மா!’ என் வாய் குளறியது. “மாமா, போ! போய்…’

பொன்னம்மாளின் கட்டளைக்குப் பணிந்து வெளியே வந்தேன். என் நெஞ்சிலே பாறாங்கல் வைத்தது போன்றிருந்தது.

என்னிடம் தனியாக ஒரு பத்து ரூபாய் நோட்டை அந்தப் பட்டாளக் காரன் நீட்டினான். வெளியே போய் சிகரெட் வாங்கி வரும்படி பணித்தான்.

நான் தயங்கித் தயங்கி நின்றேன். என்னை வைத்துக்கொண்டு அந்த வண்டி ஊரெல்லாம் சுற்றியது. பென்னம் பெரிய ஒரு கடைக்குமுன் நிறுத்திவிட்டு, அவன் உள்ளே அழைத்துச் சென்றான். உண்பதற்கும் குடிப்பதற்கும் எதை எதை யெல்லாமோ வாங்கித் தந்தான்.

மனம் உவட்டியது. ஆனாலும் நான் உண்டேன் குடித்தேன். பின்புதான் வாகனுக்குள் ஏறியதாக, எங்கோ ஓடிச் சென்றதாக, எதிலோ படுக்கவைக்கப்பட்டதாக ஞாபகம் நான் கண்களைத் திறந்த போது உலகம் வெளிச்சமாக இருந்தது. நன்றாக விடிந்து வெகு நேரமாகி விட்ட து.

விறாந்தையில் நான் கிடந்தேன். கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்திருக்க முயற்சித்தேன். உடம்பு அசதியாக இருந்தது.

‘பொன்னம்மா!’

என் அழைப்புக்குரல் வெறுமனே மடிந்து போயிற்று. மறுபடியும் அழைத்தேன்; அதுவும் அப்படியே! மெதுவாக எழுந்து சென்று பொன்னாம்மாளின் அறைக் கதவைத் தட்டினேன். கதவு தானாகவே திறந்து கொண்டது. பொன்னம்மாள் நீட்டி நிமிர்ந்து கிடந்தாள். ஏக்கத்துடன் அவளை அணுகினேன். கண்கள் செருகிப்போய், கடைவாயில் நுரை வழிந்து… ‘பொன்னம்மா!’ நான் கத்தினேன். அவள் பேசவில்லை . அவளின் உடையைச் சரிப்படுத்திவிட்டு வெளியே ஓடினேன். ஞானமுத்துப் பரியாரிடம் ஓடினேன்.

பரியாரி ஞானமுத்தரோடு நான் திரும்பி வரும்போது அந்த அறைக்குள் கிடந்தது பொன்னம்மாளல்ல; வெறும் கட்டை!

அழுதேன், கதறினேன், துடித்தேன் என்று ஒப்புக்காகச் சொல் வானேன்? அடக்கமாகக் கண்ணிர் விட்டேன்.

வீட்டதிகாரி சின்னம்மாளும் ஊரிலில்லை. சம்பிரதாயப்படி பொன்னம்மாளை – அந்தக் கட்டையை எரிக்கப் பணம் வேண்டி யிருந்தது.

பொன்னம்மாளின் தலைமாட்டில், புழுதி நிறமான தலைமுடி சுருங்கிக் கிடந்தது. நான்கு கரன்சி’ நோட்டுக்கள் இருந்தன. அதற்கும் அடுத்து ஒரு தகரக் குவளை கிடந்தது.

அந்தக் குவளைக்குள் இருந்தவை அத்தனையும் பத்துச் சத நாணயங்கள்!

எனக்கு ஒத்தாசை செய்யும் நோக்கத்தோடு, ஞானமுத்துப் பரியாரியார் அதை எடுத்து நிலத்தில் கொட்டி எண்ணினார். ரூபா ஐம்பது வரையில் தேறியது.

ரூபாஐம்பது! ஐநூறு பத்து சத நாணயங்கள்! “சின்னம்மா, ஏ சண்டாளி! “நீ என்னடி எனக்கு உழைச்சுத் தந்தாய்?” என்று கேட்டியேடி, பொன்னம்மாள் புள்ளி விவரம் வைச்சிட்டுப் போயிருக்கிறாளடி!’

இப்படி மனதுள் திட்டிக்கொண்டேன். எண்ணிக்கை ஐநூறு; அதற்குமேல் நாலு! பொன்னம்மாளின் கட்டை எரிக்கப்பட்டதன் பின் நான் ஊரை விட்டே கிளம்பிவிட்டேன்.

பட்டாளக்காரர்கள் தந்துவிட்டுப் போன கரன்சி நோட்டுக்களில் மூன்று என் கைச் செலவுக்கு இருந்தன.

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *