தேவதையின் பார்வை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2013
பார்வையிட்டோர்: 11,485 
 

ஒருநாள் மாலைப்பொழுது…

மயக்கும் மாலைப்பொழுது இல்லை. இலேசான வெயிலின் சூட்டுடன் பயணம். ஜன்னல் ஓர இருக்கையும் கிடைக்கவில்லை. அதனாலும் பயணம் பிடிக்கவில்லை. ஆனாலும் போயாக வேண்டிய கட்டாயம். போகிறேன். மனதில் இலேசான வருத்தம். சொல்ல முடியாத சோகம்… எதனால் சோகம் என யோசித்தேன். காரணம் பிடிபடவில்லை! இனம் புரியாத ஒரு சோகம்! எண்ணற்ற எண்ணங்கள் என்னுள் அமிழ்ந்திருக்கின்றன. ஆனால், எந்த நினைவையும் இப்போது தட்டி எழுப்ப வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். நினைவுகள் எப்போதும் ஏக்கத்தையே சென்றடையும். அதனால்தான் எதையும் யோசிக்காமல் இருக்கிறேன் பேருந்தில்.

இவ்வாறு அமர்ந்திருக்கையில், என்னை யாரோ உற்று நோக்குவது போன்ற ஓர் உணர்வு. நம்மை யார் கவனிக்கப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டே தற்செயலாக இடப்புறம் தலையைத் திருப்பியபோது கிடைத்தது தேவதையின் தரிசனம்!… எனக்கு நேர் இடப்புறத்தில் ஓர் இருக்கை முன்பு இருந்து அவள் பார்த்த பார்வை ஆயிரம் வார்த்தைகள் பேசியது என்னிடம்! விழிகளில் அவ்வளவு ஒளி! அவ்வளவு குளிர்ச்சி! அவ்வளவு கருணை! இனம் புரியாத சினேகம்! பார்த்த மூன்று நொடிகளிலேயே கண்சிமிட்டிச் சிரித்தாள்.

எனக்கு மற்ற அனைத்தும் மறைந்து அவள் கண்கள் மட்டுமே தெரிந்தன. என்னுடைய இனம் புரியாத சோகம் எல்லாம் தடம் தெரியாமல் போனது அவளுடைய ஒற்றைப் பார்வையில். அந்தச் சிறிய கண்களில் நிரம்பி வழிந்தது மகிழ்ச்சி. நானும் அவ்வாறே இருக்க நினைத்து அவளுடன் நட்பு வைத்துக்கொள்ள முடிவு செய்தேன். எப்படி நட்பை ஏற்படுத்திக் கொள்ள?… எனக்குத் தேவதைகளின் மொழி தெரியாதே!…

சரி, சைகை மொழியில் பேசலாம் என்றால்… தேவதையோ தன் கைகளை இறுக்கமாக மூடியிருக்கிறாள். என்ன செய்வது?… தேவதைக்கு எப்படிப் புரிய வைப்பது என் தவிப்பை?!!… இப்படியே ஐந்து நிமிடப் பேருந்துப் பயணம் எங்கள் விழிவழி உரையாடலில் இனிமையாய்க் கரைந்தது.

தேவதையுடனான உரையாடல் என்னைச் சோகத்திலிருந்து மீட்டது. மனதில் மகிழ்ச்சி நிரம்ப வைத்தது. ஆஹா… இது போதும் எனக்கு!

அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன். நண்பனின் அழைப்பு. தேவதையை விடுத்து அவனிடம் பேசினேன். பேசி முடித்த பின் தேவதை இருப்பிடம் நோக்கினேன். அவள் அழகாகத் துயில் கொண்டிருந்தாள்… அவள் அம்மாவின் தோள் சாய்ந்து! அந்தக் குட்டித் தேவதை கண்மூடியிருப்பதும் அழகுதான்!

எனது நிறுத்தம் வந்தது. தேவதையின் நினைவுகளுடன் நான் இறங்கிக் கொண்டேன். பேருந்து தொடர்ந்து மிதந்தது குட்டித் தேவதையுடன் அழகாக!…

நன்றி: நிலாச்சாரல்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *