தேன்மொழியாள் என்கிற தேவதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 9,477 
 

நடுசாமம். என் மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளில் நான் இப்படியொரு மனநிலையில் இருந்ததில்லை. எனக்கும் ஐம்பதை நெருங்கியிருந்தது. புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை. ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் என் மனைவி தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது கள்ள கபடமற்ற முகம். நான் என் மனைவிக்கு துரோகம் செய்யவில்லை. ஆனாலும் என்னுடய மனம் மட்டும் இப்பவும் பதற்றத்திலே இருந்தது. காற்றாடி சுத்தின வேகத்தில் என் மனைவி தேன்மொழியாளின் நெற்றிப்பொட்டு வகிரில், ஒற்றை வெள்ளை முடி மட்டும் காற்றில் பறந்தது. என்னுடையப் பார்வை அந்த வெண்முடி மேலே இருந்தது. எப்போது அந்த வெண்முடி நெற்றி வகிரில் படியும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெண்முடி என்னை முறைத்துப் பார்த்தது. கண்களை உருட்டி கோபக்கணைகளைத் தொடுத்தது. சில நேரம் சிணுங்கியது, அழுதது, வெறித்தது, அநாதையாய் உணர்ந்தது. எனக்கு எவ்வாறு அந்த வெண்முடியை சமாளிப்பது என்று தெரியவில்லை. எந்த பதிலைக் கூறினால் அவ்வெண்முடி சாந்தமாகும் என்று யூகிப்பதற்கு கூட முடியவில்லை. அந்த ஒற்றை வெண்முடி இன்னும் அடங்காமல் நீள் வாக்கிலேயே ஆடிக்கொண்டிருந்தது. என்னை ஆட்டிக்கொண்டிருந்தது.

இன்று மாலை நான் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட் சென்றிருந்தேன். பொருட்களை எல்லாம் வாங்கியபின் பில் கொடுத்துவிட்டு திரும்புகையில்தான் அந்த முகத்தைப் பார்த்தேன். இருபது வயதுடைய சின்னப்பெண் அவள். அதே முகம்தான். மனம் திக்கென்று நின்றுவிடும் போல் உணர்வு. இது எப்படி சாத்தியம். பல வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே முகம். அதே சிரிப்பு. அதே வயது. என்னுள் என்ன நடக்கிறது. ஒருவேளை எனக்கு மட்டும் அப்படித் தெரிகிறதா என்ன? என் நாடி நரம்புகளிலும் இரத்த நாளங்களிலும் ஊடுருவிச்சென்ற அந்தப்பெண் இங்கு எப்படி? இவ்வளவு காலத்திற்குப் பின் கடவுள் எதற்காக என் கண்ணில் காட்ட வேண்டும். அதுவும் அதே வயதில்! ஒருவேளை பிரம்மையாக இருக்குமோ என்று கூட தோன்றியது.

அப்போதுதான் பக்கத்தில் இருக்கும் அச்சிறுபெண்ணின் கையைப் பிடித்தப்படி நின்று கொண்டிருந்த என்னவளைக் கண்டேன். அப்போது பார்த்ததற்கு கொஞ்சம் மாறித்தான் இருக்கிறாள். உடம்பு போட்டுவிட்டது. முகம் உப்பி பூசினார் போன்று இருந்தது. அவளுக்கும் வயசாகியிருந்தது. அவளும் என்னைக் கண்டாள். அந்தச் சின்னப்பெண் மகளாகவோ இல்லை பேத்தியாகவோ கூட இருக்கலாம். ஆனால் என்னவளின் சிறுவயது தோற்றத்தினைப் அப்படியே பெற்றிருந்தாள். என் கண்கள் அவளைப் பார்ப்பதை நிறுத்தவே இல்லை. அவளும் என்னை அடையாளம் கண்டிருக்க வேண்டும். அதனால்தான் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். எங்கள் இருவரின் கண்களும் இந்த உலகத்தை நிறுத்தி மெய் மறந்து நின்றுகொண்டிருந்தோம். அந்த கண்கள் என்னை சுட்டெரித்துவிடும் போல் இருந்தது. என்னை ஏமாற்றிய கயவனே! உன்னை என் இரு கைகளால் கொல்லாமல் விடமாட்டேன் என்றிருந்தது. ஆனாலும் இப்போதும் உன்னை நேசிக்கிறேன். என்னால் உன்னை மறக்க முடியவில்லை என்பது போல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நான் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன்.

“அம்மா… அம்மா… எங்கமா பாத்திட்டு இருக்க…” என்றாள் மகள். எந்தவிதமான பதிலும் அவளிடம் இல்லை. மீண்டும் அவளின் உடம்பைக் குலுக்கி, “அம்மா… அம்மா.. யாரது அந்த அங்கிள்?” என்றாள் மகள். என்னவள் மௌனமே பதிலாகத் தந்தாள். கடையில் இருந்து அந்தச் சாலை முடியும் வரை என்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டேச் சென்றாள். அவளும் பேசவில்லை. நானும் பேச முற்படவில்லை.

என்ன வெண்முடி என்னால் பன்ன முடியும்? என் அழகான வெண்முடியே உனக்கு துரோகம் இழைக்க நான் விரும்பவில்லை. ஆனாலும் நீ ( மனைவி ) வந்த பிறகு அவளை முற்றிலும் மறந்து போயிருந்தேன். இன்று அவளைச் சந்தித்தப் பிறகு என் மனம் நடுக்கம் அடைகிறது. நான் யாருக்கு துரோகம் இழைத்திருக்கிறேன்! யாருக்கு உண்மையாக நடந்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் நான் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். காற்றில் இன்னும் அசைந்து கொண்டிருந்தது அந்த வெண்முடி. அது படுக்கிற வரை எனக்கு நிம்மதி இல்லை. இதற்கு நான் பதில் கூறியே ஆகவேண்டும்.

அப்பா ஒயர்மேன். அப்போஅப்போ ஊர்ஊராக மாறிக்கொண்டே இருப்பார். அன்று அம்மாவிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆயிடுச்சி, அதனால நாங்க முன்னால போறோம். நீ இந்த வாரம் கடைசியில வந்திருடா என்று விலாசத்தை சொன்னார்கள். நான் அம்மா சொன்னதை குறித்துக்கொண்டேன். என்னாடா இதுவேற அப்பப்ப என்று சலிப்பாய் இருந்தது.

வாரக் கடைசியில அந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்தேன். பேருந்த விட்டு கீழ இறங்கினதும்தான் தெரிந்தது, ஒரே காடு. அந்த காட்டுக்குள்ள ஒரு வண்டி ரோடு மட்டும்தான். எனக்கு பக்கென்றது. என்னா பன்றதுன்னு ஒன்னுமே புரியல. அப்போ ஒரு பெண் அந்த பக்கமா சைக்கிள்ள போய்ட்டு இருந்தா. பாக்கிறதுக்கு அழகா தெரிந்தா. மனசு அந்த பொண்ணுகிட்ட பேசினா நல்லா இருக்கும்முன்னு தோனிச்சு. அப்ப அங்க முதியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

“என்னங்க பெரியவரே ஊருக்குள்ள எப்படி போறது” என்றேன். அவர் கொஞ்சம் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, பின்னால திரும்பி “ஏலே சுபா… சுபா….” என்றார்.

“என்னங்க தாத்தா” என்றாள் அப்பெண். நான் அவளுடைய பெயர் சுபா என்று தெரிந்துகொண்டேன்.

“இந்த தம்பி ஊருக்குள்ள போகனுமாம். கொஞ்சம் வழிகாட்டிடுமா” என்றார். அப்பெண் என்னை பார்த்தாள். சிறிது நேரம் கழித்து, “நான் போறேன், பின்னாலே வா” என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் சைக்கிளை மிதிக்க ஆரமித்தாள். நான் அவளுக்கு பின்னாலயே நடக்க ஆரமித்தேன். அவளுடைய சைக்கிள் மிதிக்கு என்னால தாக்குப் பிடிக்க முடியல. அப்பெண்ணை நான் தவற விட்டுட்டேன். கிடைச்ச ஒரு வாய்ப்பும் பறிபோயிடுச்சே என்று என்னையே நொந்துகொண்டேன். கொஞ்ச தூரம் அந்த சாலையிலே நடந்து சென்றேன். அவள் அங்கு நின்று கொண்டிருந்தாள்.

“என்னங்க…. என்ன இவ்வளவு மெதுவா வாரிங்க… எப்ப வீடுப்போய் சேர்றது” என்றாள்.

“ஏங்க நீங்க சைக்கிள்ள வேகமா போறதுக்கும் நான் நடந்து வரதுக்கும் வித்தியாசம் இருக்குள்ள… அதான்! என்றேன்.

ஏதோ புரிந்தவளாய், “சரி சைக்கிள் கேரியர்ல வந்து உட்கார்” என்றாள்.

நானும் கேரியரில் உட்கார்ந்தேன். உட்கார்ந்தவுடன், “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. அப்படி ஒரு வாசம் அப்பெண்ணிடமிருந்து…! எனக்காகவே இவள் பிறந்தவள். கடந்த பிறவில் இவள்தான் என்னுடைய மனைவி. என்னுடைய காதல் தேவதை என்றெல்லாம் மனம் நினைத்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் ஏதோ அவள் என்னிடம் பேசியது போல் தோன்றியது. ஆனால் எனக்குதான் ஒன்றுமே கேட்கவேயில்லை. அதற்குள் நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது போல,

“என்னங்க இங்கையே கீழ இறங்கிக்கோங்க… இதுக்கு மேல ஊருக்குள்ள உங்கள சைக்கிள்ள உட்காரவச்சி கூட்டிட்டுப் போனா… அது தப்பாயிடும். அதனால இந்த வழியாவே போங்க… ஊருக்குள்ள போயிடலாம்” என்று சொன்னாள். நான் அவள் அழகினைப் பருகிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் மாலை அங்கு இருக்கக்கூடிய டவுன்ஷிப்புக்கு சென்றுவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி நின்றுகொண்டிருந்தேன். அந்தப்பெண் சரியாக அதே நேரத்தில் வந்தாள். நான் பார்த்து சிரித்தேன். அவளும் சிரித்தாள். கொஞ்ச தூரம் சென்றவள், பின்னால் என்னை திரும்பிப் பார்த்து

“என்னங்க வாங்க… சைக்கிள்ள வந்து ஏரிக்கோங்க. நான் ஊருக்குள்ள போய் விட்டிடுரேன்” என்றாள். சைக்கிள்ள உட்கார்ந்தவுடன் “தேங்ஸ்” என்ற வார்த்தை மட்டும் என்னிடமிருந்து வந்தது.

எங்க போய்ட்டு வாரிங்க, என்ற கேள்வியில் ஆரமித்து என் ஜாதகத்தையே தெரிந்து கொண்டாள். சும்மா லொட லொடன்னு பேசிட்டே இருந்தாள். எனக்கு கொஞ்சம் அறுவையாக இருந்தாலும் அவளுடன் இருப்பது, பேசுவது என சுகமாகத்தான் இருந்தது. மீண்டும் அதே இடத்தில் என்னை இறக்கி விட்டாள். நேற்று சொன்ன அதே பதிலைத்தான் இன்றும் சொன்னாள். சிரிப்பாய் ரசித்துக்கொண்டேன்.

அடுத்தநாள் மாலை பேருந்து நிறுத்தம். தினமும் நாங்கள் சந்தித்து பேசிக்கொள்வோம் என்று நான் கொஞசம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. இன்று என்னுடன் சகஜமாகப் பேசினாள். அவள் பேசுவதே கொஞ்சிப் பேசுவதாக தோன்றியது.

“என்னங்க நானே பேசிட்டு இருக்கேன். நீங்க ஏதாவது சொல்லுங்க” என்று என்னை கேட்டாள்.

“உங்க பேரு என்ன?”

“சுபநித்யராஜேஸ்வரி”

“சுபா.. நித்யா.. ராஜேஸ்வரி…. என்னங்க நான் எப்படிங்க கூப்பிடுறது”

“உங்களுக்கு எப்படி கூப்பிடனும்ன்னு தோனுதுா அப்பிடியே கூப்பிடுங்க”

“சுபா… உங்க கல்லூரி வாழ்க்கை பத்தி சொல்லுங்க” என்றேன். முதன்முதலில் அவளை சுபா என்று சொன்னதில் இனிப்பு சாப்பிட்டது போன்ற உணர்வு எனக்கு.

“நான் ரொம்பெல்லாம் படிக்க மாட்டேன். சுமாராத்தான் படிப்பேன். பிரண்ஸோட நல்லா ஊர் சுத்துவேன். கொஞ்சமா சாப்பிடுவேன். நல்லா பேசுவேன்” என்றாள்.

“அதான் தெரியுதே” என்றேன் மெதுவாக..

“என்ன சொன்னிங்க” என்றாள்.

“நீ நல்லா பேசுற… அது அழகாயிருக்கு ” என்றேன்.

“அப்படியா! ஆனா எங்க பாட்டிதான் எப்பவும் என்னை வாயாடி! வாயாடி! வாயாடி! ம்பாங்க”

“உன்னையே வாயாடின்னு சொல்லுறாங்களா! அந்த கிழவிய போட்டு தள்ளிடலாமா?”

“ஐயோ ! வேண்டாம்பா… நல்ல கிழவி”

“சரி எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா? கேட்டா ஏதாவது தப்பா எடுத்துகுவாளோன்னு எனக்கே ஒரு பயம்தான். இருந்தாலும் கேட்டேன். அவளின் சம்மதம் பெற்றவுடன்,

“இல்ல… காலையில அடிக்கிற பவுடர் இன்னும் முகத்துல களையாம அப்படியே இருக்குதே எப்படி?”

“எனக்கு எப்பவுமே என்னை அழகு படுத்திகிறது ரொம்ப பிடிக்கும். அப்பஅப்ப முகம் கழுவி பவுடர் போட்டுக்குவேன். அதனால பேக்குல எப்பவும் மேக்கப் திங்ஸ் வச்சிட்டே இருப்பேன்”

“ம்ம்ம்… நீ பெரிய ஆள்தான்” அத்துடன் அன்றைய பொழுது முடிந்தது.

அடுத்த நாள், அவளோடு சிறு வகுப்பில் படித்த பெண் ஒருத்தியை சந்தித்தோம்.

“ஹாய் நித்யா எப்படியிருக்க? பாத்து ரொம்பநாளாச்சு?” என்றாள்.

முகம் திருப்பியவளாய் அப்பெண்ணிடம் பேசாமல் சென்றுகொண்டிருந்தாள். நான் ஒன்றும் புரியாமல் சுபாவையே பார்த்துக்கொண்டு அவள் பின்னாடியே ஓடினேன்.

“என்னடி நான் பேசிட்டே இருக்கேன். நீ மாட்டுக்கும் போய்ட்டே இருக்கே…”என்றாள் அப்பெண்.

“எய பேரு என்னாடி.. நீ என்னாடி கூப்பிடுற… எய பேரு நித்யாவா.. என்னோட பேரு சுருக்கிக் கூப்பிடுற உரிமைய உனக்கு யாரு கொடுத்தது. எங்க வீட்டுலயே எம்பேற முழுசாத்தான் கூப்பிடுவாங்க. இல்லன்னா சாமியாட்டம் ஆடிடுவேன். அந்த உரிமை எம் புருஷனுக்கு மட்டுதான் உண்டு” என்று படபடவென்று பட்டாசாய் வெடித்தாள். அப்பதான் எனக்கு அது தட்டியது. நான் அவளை சுபான்னு கூப்பிட்டா ஒன்னுமே சொல்லுறது இல்லையே என்று தோணிச்சு. என் மேல அவளுக்கு ஏதோ ஒன்னு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். மௌனமாய் மனதில் புன்னகைத்துக் கொண்டேன்.

“சாரிப்பா… இனிமேல் சுபநித்யராஜேஸ்வரின்னே கூப்பிடுறேன்” என்றாள். சில வாரங்கள் அப்படியே சென்றன. எங்களுக்குள் இருக்கிற நட்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி உரிமையோடு பேசவும், கோபப்படவும், ஒன்னா சந்தோசத்தை அனுபவிக்கவும் செஞ்சோம். அன்றைக்கு அதேபோல சைக்கிள்ள தள்ளிகிட்டே பேசிட்டு வந்துட்டிருந்தோம்.

“இன்னிக்கு எங்க காலேஜ்ல நடந்த ஒரு ஜோக்க உங்ககிட்ட சொல்லலாமா?” என்றாள்.

“எனக்கும் அவள பேச வச்சி கேட்கிறது ரொம்பவும் பிடிச்சிருந்தது. அதனால ம்ம்ம்… என்றேன்.

“பொண்ணுகளுக்கு முன்னால இருக்கிறது, பசுமாட்டுக்கு பின்னால இருக்கிறது அது என்ன?“ என்று சிரிச்சுக்கிட்டே கேட்டாள். எனக்கு சுருக்கென்று கோபம் தலைக்கேறியது. அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அரைந்தேன்.

“என்னா வயசாச்சி உனக்கு, என்னா பேச்சுப் பேசுற… உனக்கு வாய்க்கொழுப்பு அதிகம். ஒன்னும் தெரியாத மாதிரி இருந்திட்டு என்னா பேச்சு பேசுற… ஒன்னும் தெரியாத பாப்பாவாம் போட்டுகிட்டாளாம் தாப்பாவாம்- சும்மா சொன்னாங்க”

அவள் கன்னத்தில் கை வைத்தபடி கண்களில் நீர் தாரைதாரையாக வந்து கொண்டிருந்தது. அழுகை விம்மலாக மாறியிருந்தது. அவள் சைக்கிளை தள்ளிக்கொண்டு நடக்க ஆரமித்தாள். நானும் பின்னாலயே நடந்தேன். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் மனசு வலித்தது. நான் யார் அவளை அடிப்பதற்கு? அவள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் என்று பல யோசனைகள் தூக்கம் கலைந்து துக்கத்தில் மூழ்கியிருந்தேன். அடுத்து வருகின்ற ஒரு வாரமும் அவளுக்காகக் காத்திருந்து காந்திருந்ததுதான் மிச்சம். அவள் வரவே இல்லை. ஒரு வேளை கல்லூரி விடுமுறையாக இருக்குமோ! இல்லை, உடம்பு சரியில்லாம இருக்குமா… இல்லன்னா வேற எதாவது பிரச்சனை ஆகியிருக்குமா என்று மனசு பலவாறாக யோசிக்க ஆரமித்தது. அன்னிக்கும் சுபாவுக்காக காத்திருந்தேன். அவள் வருவதாக தெரியவில்லை. அந்த காட்டுப்பகுதியில் நடக்க ஆரமித்தேன். தூரத்தில் யாரோ சைக்கிளில் நிற்பதாக தெரிந்தது. உற்று கவனித்தேன். ஆமாம்! சுபாதான். எனக்கு கோபம். அதனால் அவளிடம் பேசாமல் தாண்டிச் சென்றேன்.

“ம்ம்ம்…. நில்லுங்க… உங்ககிட்ட பேசனும்” அவள் அழுதாள். அழுகைக்கு காரணம் கேட்டேன்.

“நான் உன்னை அடிச்சதுக்காக அழுவுறயா? அப்படின்னா சாரி..சாரி…சாரி…”

“நான் ஒன்னும் அதுக்காக அழுவுல.. நீங்க என்னப் பாத்து அப்படி ஒரு வார்த்தைய சொல்லிட்டிங்களே… நான் என்ன அப்படியா?” என்று தேம்பினாள். கண்டிப்பாக அன்று அவளை என்ன வார்த்தை சொல்லி திட்டினேன் என்று நிச்சயமாக எனக்கு நினைவு இல்லை. “நீயே சொல்லு” என்றேன்.

“ஒன்னு தெரியாத பாப்பாவாம்…” என்று இழுத்தாள்.

“என்னை மன்னிச்சிரு. ஆமாம்! நான் உன்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது. சாரி… சாரி… சுபா.”

“காலேஜ்ல பிரண்ஸ்ஸல்லாம் சொல்லிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க. அதுல தப்பு எதுவும் இருக்காதுன்னு நினைச்சுதான் உங்ககிட்ட சொல்லிட்டேன். அப்புறம் பிரண்ஸ்கிட்ட அதபத்தி கேட்டபோதுதான் என்னை திட்டிடாளுவ.. அத போய் ஆம்பிளைகிட்ட சொல்லுவாங்களான்னு. அப்பதான் எனக்கு புரிஞ்சது. அதுக்கு women-cow ‘W’ தான் விடை” என்று சொன்னாள். விடையை நினைத்து எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒரு கேள்விக்கு எப்படியெல்லாம் விடை கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன். சிறுது நேர உரையாடலுக்குப்பின் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.

“நாளைக்கு உனக்கு பிறந்தநாள். நான் உன்கிட்ட முக்கியமான விசயம் ஒன்னு சொல்லனும். அது நம்ப வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமானது. அதுமட்டுமல்லாமல் உனக்காக சிறப்பு பரிசும் வச்சிருக்கேன்” என்றாள் சுபா. எனக்கு பொறந்தநாள்ன்னு அப்போதுதான் ஞாபகம் வந்தது. சுத்தமா மறந்து போச்சு.

“என்ன சொல்லுவ…. என்ன பரிசு… இப்பவே சொல்லேன்!” என்றேன். சுபா, என்கிட்ட முகத்தை கொண்டு வந்தாள். அவளுடைய ஆட்காட்டி விரலோடு நடுவிரலையும் கட்டை விரலையும் சேர்த்து என் மூக்கை ஆழத்திப் பிடித்து ஒரு திருகு திருகினாள்.

“காத்திரு… நான் நாளைக்கு சொல்லுறேன் பக்கி…” என்றாள்.

மிருதுவான கைகள் முதன்முதலில் என்னுடைய மூக்கைப் பிடித்து ஆட்டுகிறது. என்ன ஒரு சுகம். மிதப்பது போல் உணர்வு. அவளின் கைகளில் இருந்து வந்த வாசம் என்னை கிரங்கடித்தது. அப்படியே கண் மூடி நின்றிருந்தேன். கொஞ்ச தூரம் சென்ற அவள் கூப்பிட்ட பிறகே திரும்பிப்பார்த்தேன். கையசைத்தாள். அவள் அந்த தெருவை கடக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன். நாளைய கனவோடு வீட்டிற்குச் சென்றேன். வீட்டின் முன் டெம்போ வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அம்மாதான் சொன்னாங்க,

“அப்பாவுக்கு கும்பகோணத்துல டிரான்ஸ்பர் கிடைச்சிருச்சு. நாளைக்கே அங்க இருக்கனும்” ன்னு, நான் பதறினேன். எவ்வளவு கெஞ்சியும் என்னால் அங்கே இருக்க முடியவில்லை. சுபாவின் நினைவுகளோடு அந்த ஊர் எல்லையை கடந்தேன்.

வெண்முடி என்னைப் பார்த்து சிரித்தது. மனசுல இருக்கிறதெல்லாம் கொட்டியாச்சு. மனசும் நிம்மதியாச்சு. திருமணமான இத்தனை வருடங்களில் என் கருவைச் சுமந்தவள். என் உடலோடு உடலாக இருந்தவள். எனக்கொன்று ஆனால் முதலில் துடித்துப்போனவள். எனக்காக அழுபவள். பார்த்து பார்த்து கவனிப்பவள். என் மனைவி தேன்மொழியாள். அவளைத் தவிர இந்த உலகத்தில் யாரும் என்னை சிறப்பாகப் பாத்துக்கொள்ள முடியாது என்று எண்ணுகிறேன். என் உதடுகளை குவித்து மனைவியின் நெற்றி வகிரில் முத்தமிட்டேன். என் முத்த அனலில் வெந்து சாம்பலானது அந்த வெண்முடி. இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாள் தேன்மொழியாள் என்கிற என் காதல் தேவதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *