கடிதத்தில் ஒரு கதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,213 
 

ஒரு நடிகரின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை இது. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன!

அன்புள்ள சீதாவுக்கு,

உன் பிரியமுள்ள தாய் மாமா பழனிக்குமார் எழுதும் 33-வது கடிதம்.

இது உன்னோட 33-வது நினைவு நாள்! ஒவ்வொரு வருஷமும் உன் நினைவு நாளன்னிக்கு உனக்குக் கடிதம் எழுதுவேன். அந்த மாதிரி இன்னிக்கும் எழுதியிருக்கேன்.

நீ அக்கினிப் பிரவேசம் பண்ணி இது 33-வது வருஷம். அதோ பார், உன் படத்துக்குக் கீழே என் மனைவி சரஸ்வதி படையல் போட்டிருக்கா. அதுல, என் கல்யாணத்துக்காக உனக்கு நான் வாங்கிக் கொடுத்த பட்டுப் பாவாடை, சட்டை, தாவணியை வழக்கம் போல வெச்சிருக்கா.

இன்னமும் அது நேத்து வாங்கினது மாதிரி அப்படியே புத்தம் புதுசா இருக்கு. ஏன் இருக்காது? என் கல்யாணத் தன்னிக்கு மட்டும் ஒரே ஒரு தடவை அதைக் கட்டிக்கிட்டே, அவ்வளவுதான். அதுக்கப்புறம்தான் அநியாயமாப் போயிட்டியே!

சீதா! இப்பவும் சொல்றேன். அறியாப் பருவத்திலேயே அப்பாவை இழந்த என்னை, தன் கண்ணுக்குள்ளே பொத்திவெச்சுக் காப்பாத்தி ஆளாக்கிவிட்ட, என் உயிருக்கு உயிரான

எங்கம்மா மேல ஆணையா சொல்றேன்… உன்னை என் கூடப் பிறக்காத தங்கச்சி மாதிரிதான் நினைச்சேனே தவிர, உன்னைக் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்தப்போற மனைவியா ஒரு நாளும், ஒரு நிமிஷமும் நினைச்சதில்லேம்மா!

நிறைய கனவுகளோட ஊர்லேர்ந்து புறப்பட்டு, சென்னை வந்த எனக்கு சினிமாவில் நிறைய வாய்ப்பு வந்தது. புகழோடு போதுமான பொருளும் கிடைச்சுது. வாடகைக்கு இருந்த வீட்டையே சொந்தமா விலைக்கு வாங்கினேன்.

வீட்டுல விளக்கு இருந்தது. அந்த விளக்கை ஏத்துறதுக்கு அம்மா மட்டும்தான் இருந்தாங்க. ஆனா, ஆறு மணி ஆனதும் முகத்தைக் கழுவிக்கிட்டு, பவுடர் பூசி, துளி குங்குமத்தை நெத்தியிலே இட்டு, ஒரு முழம் மல்லிகைப் பூவைக் கூந்தல்ல வெச்சுகிட்டு, நல்ல விளக்குல நல்லெண்ணெயை ஊத்தித் திரியை நெருடிவிட்டு, அதை எரியவெச்சு, ஊதுவத்தி கொளுத்தி எங்க அப்பா படத்துல பொருத்திக் கை குவிச்சுக் கும்பிடறதுக்கு ஒரு மகாலட்சுமி, என் மனைவிங்கிற பேர்ல அதுவரைக்கும் எங்க வீட்டுக்கு வரலேங்கிற ஒரே ஒரு குறையோட வாழ்ந்துட்டுஇருந்தேன்.

அப்பதான் நீ என் வீட்டுக்குள்ள அடி எடுத்துவெச்சே. மனைவியா இல்லே; மனைவி முறையுள்ள ஒரு தங்கச்சியா!

உங்கப்பா, அம்மா எதுக்காக ஒன்னை எங்கிட்டே அனுப்பினாங்களோ? எங்கம்மா எதுக்காக அதை அனுமதிச்சு, உன்னை என் வீட்டுல வெச்சுக்கிட்டாங்களோ? அதுக்குள்ளே புகுந்து புறப்பட நான் விரும்பலே.

நான் கட்டிக்க வேண்டிய முறைப் பொண்ணு நீ. என்னைக் கைப்பிடிச்சு, என் கையால தாலி வாங்கிக்க சகல உரிமையும் உள்ள பொண்ணுதான் நீ. அதுல எந்தச் சந்தேகமும் இல்லே. ஆனா, தங்கச்சி கழுத்துல தாலி கட்டுறது மாதிரி ஆயிடும்கிற அந்த எண்ணத்தை மட்டும் என் மனசுலேர்ந்து எடுத்தெறிய என்னால முடியலேம்மா!

உன்கிட்டே இருந்த சிறந்த குணம் என்ன தெரியுமா? ஒரு நாள், ஒரு தடவைகூட, தப்பித்தவறி, ‘மாமா! என்னைக் கட்டிக்கிறீங்களா?’ன்னு நீ என்கிட்ட கேட்டதே இல்லே. நானும், ‘சீதா! நான் உன்னைத்தான் கட்டிக் குவேன்’னு சொன்னதில்லே. ஆனா, எங்கம்மா மனசுல மட்டும் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோ ஷமா, சௌகரியமா வாழணுங்கிற எண்ணம் இருந்தது.

உன் மனசுலேயும் அப்படி ஒரு எண்ணம் இருந்தது ஜாடை மாடையா எனக்கும் தெரியும். ஆனா, அதைப் பொருட்படுத்தாம சகஜமா பழகினேன்.

ஒரு அன்பான மனைவி, தன் கணவனுக்குச் செய்கிற அன்றாடப் பணிவிடைகளை எல்லாம் நீ எனக்குச் செய்தே. விடியக்காலை என்னை எழுப்பிவிடுறதுலேர்ந்து, வெந்நீர் கலந்து குளிக்கவைக்கிறது, கள்ளங்கபடமில்லாம எனக்கு முதுகு தேச்சுவிடுறது, என் துணிமணிகளை எடுத்துக் குடுக்குறது, என்னை டிபன் சாப்பிடவெச்சு ஷ¨ட்டிங்குக்கு அனுப்புறதுன்னு அத்தனை வேலைகளையும் நாள் தவறாம செய்துட்டிருந்தே. மொத்தத்துல, மனைவிங்கிற அந்தஸ்து இல்லாமலே, ஒரு மனைவியோட கடமைகள் அத்தனையும் எனக்கு நீ செய்தே… தாம்பத்ய உறவுங்கிற ஒரு தவறைத் தவிர!

அப்படி இப்படின்னு முப்பது வயசை நெருங்கிட்டேன். அதுவரைக்கும் நான் உன்னைத் தாரமா இல்லே, தங்கச்சியாதான் பார்க்கிறேன், பழகுறேன், நினைக்கிறேன்கிற உண்மையை அம்மா உறுதிப்படுத்திக்கிட்டாங்க. அப்புறம் தன் மனசை மாத்திக்கிட்டு, எனக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க.

எங்கெங்கிருந்தோ எத்தனையோ போட்டோக்கள் வந்தன. அதுல ஒரு பொண்ணு போட்டோ என் மனசுக்குப் பிடிச்சிருந்தது. அவ பேரு சரஸ்வதி. என் வீட்டுக்கு விளக்கேத்த வந்த லட்சுமி.

இந்த விவரமெல்லாம் உனக்கும் தெரியும். இதுக்கப்புறம்தான் நீ, நான், எங்கம்மா, உங்கப்பா, அம்மா எல்லாருமே ஒரு தப்பு பண்ணினோம். அது என்னன்னா, என் கல்யாணத்துக்கு முந்தியே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து உன்னைக் கட்டிக் கொடுத்து, சீரும் சிறப்புமா புருஷன் வீட்டுக்கு அனுப்பிவெச்சிருக்கணும். அல்லது, ‘இன்னொரு பொண்ணு இந்த வீட்டுக்கு வரப்போறா. அதனால நீ உங்க அப்பா, அம்மாவோட போயிடு’ன்னு எங்கம்மா சொல்லி இருக்கணும். சொல்லலே. அல்லது, உங்கப்பா அம்மாவாவது, ‘நீ இனிமே அங்கே இருக்கிறது அவ்வளவு நல்லதில்லேம்மா. பேசாம நம்ம வீட்டுக்கே வந்துடு’ன்னு சொல்லியிருக்கலாம். அவங்களும் சொல்லலே.

அட! நீயாவது சொல்லி இருக்கலாமில்லே அம்மணி… ‘மாமா! எங்கனவு கலைஞ்சிருச்சு. இந்த வீட்டு முத்தத்துல நான் புள்ளி வெச்சுப் போட்டிருந்த கோலம் அழிஞ்சிருச்சு. ஒங்களை எழுப்பிவிட்டு, குளிக்க வெச்சு, துணி எடுத்துக் குடுத்து, டிபன் சாப்பிட வெச்சு, ஷ¨ட்டிங்குக்கு அனுப்புறதுக்கு இன்னொரு பொண்ணு வரப்போகுது. நான் போயிட்டு வரேன் மாமா! எம் புருசனோட இங்கே மறுபடியும் வருவேன்’னு சொல்லிட்டு நீ ரயில் ஏறி இருக்கணும். சொல்லலே; செய்யலே!

ஒரு சின்ன, சிக்கலான இங்கிதம். இது எந்த மண்டையிலேயுமே எட்டலே. நீ எப்பவும் போல இங்கேயே இருந்து, என் கல்யாணத்தையும் பார்த்தே. பார்த்து சந்தோஷப்பட்டியோ, சஞ்சலப்பட்டியோ எனக்குத் தெரியாது.

அதுக்கப்புறமாவது உனக்குக் கல்யாணம் முடிச்சு உன்னை அனுப்பிவெச்சிருக்கணும் நாங்க. நீ கேக்காமலே நாங்களா செஞ்சிருக்கணும். செய்யலே. அதுதான் போகட்டும். என் புதுப் பெண்டாட்டியாவது ஒரு வார்த்தை எங்கிட்டே சொல்லி இருக்கலாம்… ‘இதோ பாருங்க, உங்க அக்கா பொண்ணு இங்கே இருக்கிறது எனக்கு என்னமோ போல இருக்கு. தயவுசெஞ்சு அதை அவங்க வீட்டுக்கு அனுப்பிவெச்சுடுங்க’ன்னு. அவளும் சொல்லலே. ஏன்னா, அவ பண்புள்ளவ. இங்கிதம் தெரிஞ்சவ.

இப்படி ஒரு பொண்ணுக்காகத்தானே இத்தனை வருஷமா நான் கல்யாணம் பண்ணிக்காம காத்திருந்தேன். இல்லேன்னா என்னிக்கோ, எவளையாவது ஒருத்தியைப் புடிச்சுக் கொண்டாந்து எங்கம்மா முன்னால நிறுத்தி, ‘அம்மா! இவதான் உன் மருமகப்பொண்ணு. ஆசீர்வதி!’ன்னு சொல்லி, அவங்க கால்ல விழுந்திருப்பேனே. ஆனா, நான் அப்படிச் செய்யலே. செய்ய விரும்பலே. எந்தாலியைக் கட்டிக்கிறதுக்கு எவளாவது ஒருத்தி எங்கேயாவது பொறந்திருப்பா. அவ வந்தா வரட்டும், வரலேன்னா போகட்டும்னு பதவிசா இருந்துட்டேன்.

வர வேண்டிய நாள்ல, வர வேண்டிய மகாலட்சுமி என் வீட்டுக்கு வந்தா. ஆனா, சந்தோஷமா பூவும் பொட்டுமா புருஷனோடு போக வேண்டிய நீ, பொணமாப் போவேன்னு முந்தியே எனக்குத் தெரிஞ்சிருந்துதுன்னா, எப்பாடுபட்டாவது உன் கல்யாணத்தை முடிச்சு அனுப்பிவெச்சிருப்பேன். இல்லேன்னா, எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு சொல்லி, வைராக்கியமா இருந்திருப்பேன்.

தினமும் விடிகாலைல எனக்கு முந்தியே எழுந்திரிச்சு, ஜில்லுனு பச்சைத் தண்ணியிலே குளிரக் குளிரக் குளிச்சுப் பழக்கப்பட்ட நீ, அன்னிக்கு ஏம்மா தீயிலே குளிச்சே? அப்படி என்னம்மா அவசியம் வந்துச்சு? கெரஸினை ஊத்தி, நெருப்புவெச்சுக் கொளுத்திக்கிட்டுச் சாகிறதுக்காகவா நீ எங்க வீட்டுக்கு வந்தே? அநியாயம் சீதா, ரொம்ப அநியாயம்!

சீதா, உனக்குத் தெரியுமா… என் பெரிய பிள்ளை சந்திரன் இப்போ பெரிய நடிகனாகிட்டான். குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்துவெச்சு லட்சாதிபதியா இருந்த என்னை கோடீஸ்வரனாக்கிட்டான். அவன் என்னைப் போல, காலத்துக்காகவோ, சாதிசனத்துக்காகவோ காத்திருக்கலே. அவனுக்குப் பிரியமான பெண்ணை அவனே தேர்ந்தெடுத்துக்கிட்டு, எங்ககிட்டே வந்து சொன்னான். அவன் விரும்பின பெண்ணையே அவனுக்குக் கட்டிவெச்சோம். சின்ன வயசுல அவன் ஆசைப்பட்ட பொருளைஎல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்துட்டு, பெரியவனானதும், வாழ்நாள் பூராவும் அவனோடு இருக்க வேண்டிய மனைவிங்கிற வாழ்க்கைத் துணைவியை அங்கீகரிக்க மறுக்கிறது அப்பா, அம்மாவுக்கு அழகில்லை. எல்லாம் சுபமா நடந்திடுச்சு. நல்லாருக்கட்டும்.

அண்ணனைத் தொடர்ந்து, தம்பி மூர்த்தியும் நடிக்கத் தொடங்கியிருக்கான். இதெல்லாம் நான் எதிர்பாராதது. நம்மளை மீறி ஏதோ ஒண்ணு இருக்குல்லியா… அது இயக்கிவைக்குது.

வாழ்க்கையில எனக்குக் குறைன்னு எதுவும் இல்லே… குடும்பத்துல நீ இல்லியேங்குற ஒண்ணைத் தவிர! நீ உயிரோட இருந்து ரெண்டு, மூணு குழந்தைங்களைப் பெத்தெடுத்து, என் வீட்டுக்கு வந்திருந்தேன்னா, உனக்கு நான் முறைமாமன் ஆனது மாதிரி உன் குழந்தைகளுக்கும் தாய்மாமன் ஆகியிருப்பேன். எப்படின்னா, நீ என் கூடப் பிறக்காத தங்கச்சி இல்லியா?

அவ்வளவுதான்… எழுத்தைக் கண்ணீர் மறைக்குது. மத்ததையெல்லாம் அடுத்த வருஷ நினைவு நாள்ல எழுதுறேன்.

இப்படிக்கு,

உன் தாய் மாமன் என்கிற, பாசமுள்ள அண்ணன் சிவசாமி என்கிற பழனிக்குமார்.

– 14th நவம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *