தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,268 
 

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்தான். பணம் சேர்ந்தது. அதனால் பண ஆசை அதிகரித்தது! ஆனால் மனநிம்மதி போய்விட்டது.

ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர் எண்ணம் பளிச்சிட்டது! சன்யாசியாகி விடவேண்டும்… அப்போதுதான் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான்.

தகுதிமறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான்.

அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது.

வியாபாரி, அந்த குருவை வணங்கி, “”சாமி, நான் அடிப்படையில் ஒரு வியாபாரி. பணம் சேர்த்தேன். பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. இதோ, நான் சேர்த்த பணமூட்டை. இதைப் பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்..!” என்று பணிவாகக் கேட்டான்.

அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓட ஆரம்பித்தான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார்.

அவருடைய வேகத்தைக் கவனித்த வியாபாரி, “”அய்யோ, என் பணமூட்டை..!” என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான்.

குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் தனது இருப்பிடத்துக்கே வந்து சேர்ந்தார். பணமூட்டையை முன்பிருந்த அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார்.

நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு துரத்திய வியாபாரியும் அங்கு வந்து சேர்ந்தான். தனது பணமூட்டை பழைய இடத்திலேயே இருப்பதைப் பார்த்து குழம்பிப் போனான்.

குரு அவனைப் பார்த்து, “”மகனே… இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா..!” என்று சாந்தமாக உபதேசம் செய்தார்.

வியாபாரி பணமூட்டையுடன் ஊர் திரும்பினான்.

– கலைப்பித்தன், கடலூர். (ஆகஸ்ட் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *