அம்மா அறிந்த பாத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 6,939 
 

வயித்த வலிக்கி என்று கைகளைத் தாங்கி மடங்கி உட்காருகிறாள், தோட்டிச்சி சோனையம்மாவின் பேத்தி, வயசுக்கு வந்திருப்பாளா இருக்கும் என்ற என் அம்மா கரிசனையில் விசாரித்ததில் பதினோரு வயதே என்றாள்.

காலையில இருந்து ஒன்னும் தின்னாம கிடக்கா முட்டாச்சிறுக்கி! என் கூட வந்தா இங்க கொடுக்கிற பழையதுல, ஏதாவது பலகாரம் கிடைக்காதான்னு தான் என்கூடவே ஒட்டிட்டு இருக்கா… எம்மா நேத்து வச்ச இட்லி தோச ஏதாவது இருந்தா கொடும்மா இவளுக்கு.. கொஞ்சம் பூசனம் பிடித்திருந்தாலும் பரவாயில்ல என்றாள்… காலையில பள்ளிக்கூடம் கிளம்பும் போது பொங்கல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த என் தம்பி முழுத் தட்டையும் அவளுக்கு தூக்கி நீட்டினான். அவள் தயங்கிக்கொண்டே கதவோரம் நின்றாள். சோனையம்மாவும் அவள் போலவே என் அம்மா முகத்தையும், தம்பியின் தட்டில் இருந்த பொங்கலையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். பேத்திக்கும் சோனையம்மாளுக்கும் பெரிதாக ஒரு வித்யாசம் இருந்த மாதிரி தெரியலை. அவ பேத்திக்கு இட்லி மாதிரி இவளுக்கு என்னவோ?

அம்மா, இரு நான் கொண்டு வர்ரேன் என்று உள்ளே போய் கொஞ்சம் பொங்கலும், நேற்றைக்கு மிச்சமாகிப்போன இட்லியும் கொண்டு வந்து அவள் வைத்திருந்த ஒரு பழைய அலுமினியப் பாத்திரத்தில் பட்டு விடாமல் போட்டாள். சோனையம்மாவின் பேத்தி பொங்கலை விட்டு நேற்றைய இட்லியை எடுத்துக் கொண்டாள். இட்லினா தான் அழையுறா தாயி! பொங்கலை நானே எடுத்துக்குறேன் என்றவள். எதிர் வீட்டில் கொடுத்த பழைய சாதமும், கத்திரிக்காய் புளிக்குழம்பும் இருந்த இடத்திலேயே, பொங்கலையும் கொட்டினாள். எல்லாம் ஒன்றாகக் கலந்து ஒரு புதுவிதமான வாசனையுடன் இருந்தது, எல்லாவற்றையும் ஏந்தி நின்றது பசி என்ற அந்த சொட்டையான அலுமினிய பாத்திரம்.

சோனையம்மாவின் பேத்தி போலவே நாங்க காம்பவுண்டு வீட்ட விட்டு காலி பண்ணிட்டு சொந்த வீட்டுக்கு வந்த போது அங்கு அம்மி கொத்த வந்தவள் இருந்தாள். சோனையம்மாவின் பேத்தி தான் என்று அம்மாவுக்கு சந்தேகம், ஏன்டீ! நீ சோனையம்மா பேத்தி வசந்தா தானே, அவ பேரு வசந்தான்னு அப்ப தான் எனக்குத் தெரிஞ்சது. அவளின் அம்மா, அவ்வா போல என் அம்மாவை அம்மாவென்றோ, தாயி என்றோ அழைக்கவில்லை. ஆமாக்கா! நீங்க குமாரியக்கா தானேன்னு அவளும் வாய் நிறைய பல்லாய் கேட்டாள். இதான் பெரியண்ணனா, என்று என்னைப் பார்த்தும் சிரித்தாள். என்னடீ! அம்மிக் கொத்த கிளம்பிட்ட! உங்க அவ்வா, அம்மா பாத்த வேலைய பாத்தா, ஒரு இடத்தில இருந்து வேலை பார்க்கலாம், கொஞ்சம் காசு கிடைக்கும். வயித்து நோவு இல்லாம வேளாவேளைக்கு சாப்பாடும் கிடைக்கும், அத விட்டுட்டு இப்படி வேகாத வெயில்ல பிள்ளையையும் தூக்கிட்டு என்று கேட்க. யக்கா! எங்க அவ்வாவும், ஆத்தாவும் பீ அள்ளுனது போதும்னு தான்க்கா நான் இந்த வேலை செஞ்சுட்டு இருக்கேன். அது கூட இப்போ கொஞ்ச நாளாதான். இல்லேன்னா வீட்ல தான் இருப்பேன்.

அவள் புருஷன்காரன் கார்ப்பரேஷனில் எண்ணம்மாரா வேலை பாக்குறானாம், இந்த பிள்ள பிறந்த ஒரு வருஷம் கூட ஆகலை, சரியா கொஞ்சினது கூட கிடையாது, கார்ப்பரேஷன் ஆபிஸில் தண்ணி வைக்கிற ஒரு முண்டச்சியோட சேந்துக்கிட்டு, வீட்டுக்கே வர்றது இல்லை. ஆறேழு மாசமாச்சு, அதான் எங்க ரெண்டு பேருக்காவது கஞ்சிக்கு ஆகுமேன்னு இத பண்ணிக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாள்லயே தாமரை போடுறது, யானை போடுறது, பெரிய கோலமா போடுறது கத்துக்கிட்டேன். ரெண்டு மூனு தடவை சுத்தியல கொண்டு கையில போட்டுக்கிட்டேன். இப்போ நல்லா பழகிப்போச்சு, சைக்கிள் கத்துக்குற போது விழுகிற மாதிரிதான் என்னக்கா! நான் சொல்றது சரிதானேன்னு பதிலுக்கு காத்திருக்காமல். முதுகு மூட்டையில் தொங்கிய பிள்ளையை லாவகமாக இறக்கினாள். அது ஏதோ பேசிக்கிட்டு கைய நீட்டிக்கிட்டே வீட்டின் முன் உள்ள கேட்டைப் பிடிச்சுட்டு ஆட்டிக்கிட்டு இருந்தது. டேய்! அங்கெலாம போகக் கூடாது! இங்க வா! என்று கையப்பிடித்து இழுத்தாள், அது அழுது கொண்டே தரையில் விழுந்தது.

அம்மா இருவருக்கும் சேர்த்து உள்ளே இருந்து சாப்பாடு கொண்டு வந்தாள். அன்று செய்த சோற்றையும், கத்திரிக்கா, மொச்சக்கொட்ட, எலும்பு போட்டு வச்ச குழம்பையும் கொண்டு வந்து அவள் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டாள். என்னக்கா வாசமே ஜம்முன்னு இருக்கு, கறிக்குழம்பாக்கா! அம்மி கொத்திட்டு சாப்பாடு வாங்கிக்கிறேனே என்றாள். அம்மா, பரவாயில்லை அம்மிக் கொத்த இன்னொரு நாள் வா, என் வீட்டுக்காரரு வர்ற நேரமாச்சு என்றாள். கையில் இருந்த இரண்டு ரூபாயும் கொடுத்து, பிள்ளையை தொடாமல் கொஞ்சி அனுப்பி வைத்தாள். கஷ்டப் படுறா பாவம், அந்த குழந்த என்ன லட்சனமா இருக்குல்ல, இந்த பிள்ளய விட்டுட்டு போயிட்டானே அவங்க அப்பன். அவளுக்கு அம்மிக்கொத்தாமல், காசு கொடுத்தது ஏன் என்று கேட்ட போது, அம்மிக் கொத்த அவ வீட்டுக்குள்ள வரனும்டா அதான் அப்பா வரப் போறார்னு சொல்லி தட்டி கழிச்சுட்டேன் என்றாள். எனக்கு அம்மா மேல் கோபம் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *