கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 2,992 
 

வாழ்க்கையில் தனக்கு பிடித்த ஒரு துறையில் உழைத்து முன்னேறி சாதனையாளராக வரவேண்டும் என்கிற ஆர்வமுடையவள் வாசுகி!

வீட்டில் அவளுடன் அவளுடைய தாய் காஞ்சனா மட்டும் தான். அப்பாவுக்கு ராணுவத்தில் வேலை.

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வீட்டில் இருக்கப்பிடிக்காமல் குறைந்த சம்பளத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள்.

அங்கு வேலை பார்ப்பவர்கள் போலியாக நடந்து கொண்ட விதம் வாசுகிக்கு பிடிக்கவில்லை. அந்த நிறுவன உரிமையாளருடைய மகன் அடிக்கடி தன் அறைக்கு வந்து கிண்டலாகப் பேசுவது பிடிக்காததால் ஒரே மாதத்தில் அந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு வந்து விட்டாள்.

ஒரு நாள் சென்னையிலிருந்து கோவைக்கு வியாபார விசயமாக வாசுகியின் ஒன்று விட்ட மாமா இவர்கள் வீட்டில் வந்து தங்கினார். அப்போது தனக்குத்தெரிந்த ஓர் இடத்தில் வசதியான ஒரு வரன் இருப்பதாகவும், வாசுகிக்கு மிகவும் பொருத்தமான இடமெனவும் கூற, அம்மா “சரி பார்க்கலாம்” என்ற போது வாசுகி மறுத்தாள்.

“திருமணத்தால் உனது லட்சியங்கள் சிதைந்து போகாது” என கூறி தாய், வாசுகியை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தாள்.

சாதகப்பொருத்தங்களும் சாதகமாக இருந்ததால் பெண் பார்க்கும் படலம் போன்ற சில சடங்குகள் நடந்து முடிந்தன. ராணுவத்தில் வேலையிலிருந்த அப்பா வரவழைக்கப்பட்டார். திருமணமும் முடிந்து பெற்றோரிடமிருந்து விடைபெற்று கணவனுடன் மகிழ்ச்சியாக கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலேறினாள் வாசுகி.

இருவரும் மனமொத்த தம்பதியாய் இன்பமாய் வாழ்ந்த சமயத்தில் ஓர் இன்லேண்ட் லெட்டர் வந்து வாசுகியின் இதயத்தை இடியாய் தாக்கியது.

அதில் ‘அன்பே வாசுகி என்று ஆரம்பிப்பது எனக்குப்பிடிக்காததால் அழகே வாசுகி… நீ என்னை மறந்திருந்தாலும் நான் உன்னை அவ்வளவு சுலபமாக மறந்திட மாட்டேன். நான் உன்னோட அழகை விரும்பியது நாம் படித்த கல்லூரியின் ஒவ்வொரு தூசியும் அறியுமே…

நான் அடிக்கடி ஒன்றைச்சொல்வேனே… அதை மறந்து விட்டாயா…? நான் நம்ம கல்லூரி பழத்தோட்டத்து அணில். நான் எச்சில் படுத்தாமல் பழங்களை இது வரைக்கும் மார்க்கட் வரைக்கும் போக அனுமதித்ததே இல்லை. உன்னைத்தவிர… நான் உன் கையைப்பிடித்த போது என் முகத்தில் தைரியமாக காரி உமிழ்ந்து எச்சில் படுத்தினாயே… அந்தக்கடனை வட்டியும் முதலுமாக உன்னை நேரில் சந்தித்து கொடுக்க விரும்புகிறேன். நான் இப்போது உன் ஆசை கணவன் வேலை பார்க்கும் கம்பெனியில் தான் வேலை பார்க்கிறேன். அடுத்த மாதம் அவர் கம்பெனி விசயமாக கல்கத்தா செல்லப்போகிறார். அந்த சமயத்தில் உன்னை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

இப்படிக்கு, உன் நினைவிலேயே வாழும் உபத்திரன்’ என கடிதம் எழுதப்பட்டிருந்தது.

கடிதத்தை படித்து முடிக்கையில் வாசுகிக்கு உடம்பெல்லாம் வியர்த்து மனதில் இனம்புரியாத பயம் குடி புகுந்தது.

இந்தக்கடிதம் கணவர் கையில் கிடைத்திருந்தால்… அவனை கொன்று விட வேண்டும் என்பாரே… உடனே கிழித்து தீ வைத்து கொழுத்தி விட்டாள்.

கடிதத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுவதுமாக விடுபடுவதற்குள் கம்பெனியிலிருந்து மகிழ்ச்சியாக வந்த கணவன் வாசவன் ஓர் இன்ப அதிர்ச்சி தரும் செய்தியை வாசுகியிடம் சொன்னான்.

“நானும் என் நண்பனும் சேர்ந்து எக்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பிக்கப்போகிறோம். அதற்கு வாசுகி தான் ஆல் இன் ஆல்” என்று சொன்ன கணவனை அப்படியே கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்தாள்.

கம்பெனி திறப்பு விழா அன்று நண்பர்கள், உறவினர்கள் என பலர் வந்து சிறப்பித்தனர். அப்போது கம்பெனியின் பங்குதாரரும், கணவனின் நண்பருமான ஒருவரை தன் கணவர் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார்.

“இவர் பெயர் உபத்திரன். உங்க கோவைக்காரர். ரொம்ப நல்ல நண்பர். இவரோட ஐடியா படிதான் இந்தக்கம்பெனியே ஆரம்பிச்சிருக்கோம்” என அறிமுகப்படுத்தியதை வாசுகியால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் முகத்தைப்பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ‘இந்த அயோக்யனையா தொழில் கூட்டாளியாக சேர்த்துள்ளார்..‌? இல்லை… இவன் திட்டம் போட்டே தான் என் வாழ்வில் குறுக்கிடுகிறான்’. குழப்பத்துடன் தலை வலிப்பதாகக்கூறி விட்டு காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டாள் வாசுகி.

“ச்சே… உனக்காகவே ஆரம்பிச்ச கம்பெனி இது. முதல் நாளே முகத்தை தொங்கப்போட்டுகிட்டு வீட்டுக்கு வந்துட்டியே…? எனக்கு ரொம்ப அவமானமாப்போச்சு. உபத்திரனை அறிமுகப்படுத்திய போது உன் முகம் அஷ்ட கோணலாச்சே…ஏன் வாசுகி…?”

“ஏனோ தெரியலைங்க… எனக்கு அந்த ஆளோட முகத்தைப்பார்க்கவே பிடிக்கலை‌. கழுகுப்பார்வை பார்க்கிறான்.”

“உன் பார்வைல தான் கோளாறு. அவன் எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லாவே தெரியும். கல்லூரில வேணும்னா ஏடா கூடமா அவன் உன் கிட்ட நடக்க முயற்ச்சி பண்ணியிருக்கலாம். ஆனா இப்ப தலைகீழா மாறிட்டான்.” என்று சொன்ன கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வாசுகி.

“உபத்திரன் என் காலேஜ்மேட்ங்கிறது உங்களுக்கு எப்படித்தெரியும்?”

“எங்க கம்பெனில சேர்ந்த முதல் நாளே நான் என்னோட பர்ஸ்ல உன்னோட போட்டோவை வைத்திருக்கிறத பார்த்த உடனே எல்லாத்தையும் சொல்லிட்டான். சார் வாசுகி ரொம்ப நல்ல பொண்ணு. மற்ற பொண்ணுங்களை விட வித்தியாசமானவங்க. சாதிக்க விருப்பம் உள்ளவங்கன்னு சொன்னான்.”

“அவனா அப்படி சொன்னான்…? அப்ப அந்த லெட்டர்….ர்….ர்…?” உதட்டைக்கடித்து மேலும் வார்த்தை வெளிப்படுவதைத்தடுத்தாள்.

“எந்த லெட்டர் வாசுகி…?”

“அது….வந்து..‌‌.”

“ஓ… அந்த இன்லேண்ட் லெட்டரா…? அதை நான்தான் எழுதினேன்”

“நீங்களா…?”

“ஆமா.உனக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்து, அப்புறம் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னுதான். என்னோட கையெழுத்து கூட உனக்கு தெரியாம போனது ஆச்சர்யம் தான்.”

“அப்ப உபத்திரன் இப்ப மாறிட்டானா…?”

“அதோ அவனே வர்றான் பாரு தன் அழகு மனைவியுடன்…” என்று கணவன் கூறியதைக்கேட்டு வாசற்பக்கம் தன் பார்வையைச்செலுத்தினாள் வாசுகி.

அப்போது உபத்திரனுடன் அவன் மனைவியாக வருபவளைப்பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தாள் வாசுகி. அவனால் பலர் முன்னிலையில் கல்லூரியில் மானபங்கப்படுத்தப்பட்ட மதுமிதா அவன் மனைவியாக…..!

“என்ன வாசுகி…? என்னை இங்கே பார்த்ததே உனக்கு அதிர்ச்சியா இருந்திருக்கும். அதோட மதுவை என்னோட பார்த்தது அதை விட அதிர்ச்சியா இருக்கில்ல..‌? கெட்டவன் எப்பவுமே கெட்டவனாவே இருக்க மாட்டான். அப்ப புரியாத வயசு. திமிர் நிறையவே இருந்தது. நான் நிறையவே தப்பு பண்ணிட்டேன். அப்புறம் போகப்போகத்தான் அனுபவம் மூலமா நாம தப்பு பண்ணறோம்னு உணர்ந்து திருந்திட்டேன். என்னால ரொம்பவே பாதிக்கப்பட்ட மதுவையே கல்யாணம் பண்ணிகிட்டேன்.”

“…………………..”

“உனக்கும் பல விதத்துல நான் தொந்தரவா இருந்திருக்கேன். ஆனா அந்த வயசுலயே காதல்ல விழாம லட்சியத்துலயே குறிக்கோளா இருந்து கோல்டுமெடல் வாங்கின பாரு, அதோட அருமைய என்னால அப்புறமாத்தான் உணர முடிஞ்சுது. அதனால தான் நானும் உன் கணவனும் கம்பெனி ஆரம்பிச்சு உன்கிட்ட ஒப்படைச்சிருக்கோம். உன்னால கம்பெனிய உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடியும்னு நாங்க நம்பறோம்‌”

“…………………..”

“ப்ளீஸ் வாசுகி. பழச மனசுல வச்சுக்காம பொறுப்பை ஏத்துக்க” என்று வாசுகியின் கைகளைப்பிடித்தவாறு உபத்திரன் கெஞ்சும் தொணியில் கேட்டுக்கொண்டான்!

அன்று கல்லூரியில் அவன் தன் கைகளைத்தொட்ட போது உடம்பில் கம்பளிப்புழு ஊர்வது போலிருந்தது. ஆனால் இன்று அவன் தன் கைகளைத்தொடும்போது உள்ளத்தில் சகோதர உணர்வு தோன்றியதை வாசுகியால் உணர்ந்து கொள்ள முடிந்தது!

‘கம்பெனியின் தலைமைப்பொறுப்பேற்க சம்மதம்’ என வாசுகி சொன்னதும் கணவன் வாசவன் உள்பட அங்கிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்!

(9.1.1998 மாலை முரசு இதழில் ‘பரிசு கதை’ பகுதியில் வெளியான எனது சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *