விட்ட குறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 6,391 
 

“யோவ், பெரிசு! ஊட்ல சொல்லினு வண்ட்டியா?” லாரி டிரைவரின் கட்டைக்குரலோ, விடாமல் ஒலித்த ஹார்ன் ஒலியோ கணேசனின் காதில் விழவில்லை.

பத்து வயதிலிருந்தே எந்த வசவோ, சத்தமோ கேட்காதது அவரது அதிர்ஷ்டம்தான்.

`போனதுதான் போனாளே! போறச்சே இந்த செவிட்டு முண்டத்தையும் அழைச்சுண்டு போயிருக்கப்படாதோ? இதை என் தலையில கட்டிட்டு..!’

அப்போதெல்லாம் மாமா திட்டுகிறார் என்று மட்டும் புரியும். பயந்தவராக, இன்னும் அதிகமாக உழைப்பார் அந்தக் குடும்பத்துக்காக.

அந்த ரயில் விபத்தில் தானும் போயிருக்கலாம், தன்னை மட்டும் இப்படி அனாதையாக விட்டுப் போய்விட்டார்களே பெற்றோர் என்ற வருத்தம் அவர் மனதில் மேலெழும்.

`அதனால் என்ன, அடுத்த ஜன்மாவிலே அன்பா இருக்கற குடும்பத்திலே பிறந்தாப் போச்சு!’ என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்வார், அடிக்கடி.

`காது கேக்காம என்னடா படிச்சு கிழிக்கப்போறே? பேசாம, சமையல்லே கூடமாட எனக்கு ஒத்தாசையா இரு,’ என்று மாமா அவனது படிப்பை அரைகுறையாக நிறுத்தியபோது, அழுகைதான் வந்தது.

பெற்றோர்மீது ஆத்திரம் வந்தது.

அதனால் குற்ற உணர்வும் மிகுந்தது. `அவா என்ன செய்வா, பாவம்! அல்பாயுசில போகணும்னு விதி!’ என்று வயதுக்கு மீறிய அறிவுடன் யோசனை போகும்.

இருபது வயதில் சுயமாகச் சம்பாதிக்க ஆரம்பித்தார். முதல் சம்பளம் வந்ததும், மாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியபோது, `பேஷ்! இனிமே கல்யாணம்தான்!’ என்றார் மாமா, வெற்றிலைக்காவி ஏறிய பற்களையெல்லாம் காட்டியபடி. அவனால் ஏற்பட்ட சுமை குறையப்போகும் மகிழ்ச்சி அவருக்கு.

`எனக்கென ஒரு குடும்பம்!’

கணேசனுக்கு வெகு காலத்திற்குப் பிறகு மகிழ்ச்சி துளிர்விட்டது. `என் குழந்தைகளையாவது நிறையப் படிக்க வைக்கணும்!’

ஆனால், முதல் பிரசவத்திலேயே மனைவி இறந்துபோனாள். மகனை உயர் படிப்பு படிக்க வைக்க கணேசன் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது.

பெரிய உத்தியோகம் கிடைத்து, அவன் டவுனுக்குப் புறப்பட்டபோது, கணேசன் கெஞ்சினார்: “ஆச்சு! நானும் நாப்பது, அம்பது வருஷமா கரண்டி பிடிச்சு, அடுப்படியிலே வேகறேன். ஒன்கூடவே வந்துடறேனே, பாச்சு!”

பாஸ்கர் முகத்தைச் சுளித்தான்.

எப்போதும் முருகக்கடவுளைப்போல வெற்றுடம்பு, அரசியல்வாதியைப்போல் தோளில் ஒரு வெள்ளைத் துண்டு. இதுதான் அப்பா. அவரைப் பெருமையாக நாலு பேரிடம் காட்டிக்கொள்ள முடியுமா?

“டவுனிலே தண்ணிப் பஞ்சம்! ஒங்க ஆசாரத்துக்கு அதெல்லாம் சரிப்படாதுப்பா. ஒங்களால வேலை செய்ய முடியலே. அவ்வளவுதானே? நான் மாசாமாசம் பணம் அனுப்பறேன்,” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினான்.

அது ஆயிற்று நான்கு வருடங்கள்.

`உன்னைப் பார்க்க வருகிறேன்,’ என்று முன்கூட்டியே அறிவித்தால் அவன் எங்கே தடுத்துவிடுவானோ என்று திடீரென்று புறப்பட்டு வந்தவர் பயமும் மகிழ்ச்சியுமாக தெருவைக் கடக்கும்போதுதான் லாரி டிரைவரின் கட்டைக்குரலும், ஹார்ன் ஒலியும் கேட்டன — பலருக்கும்.

ஆனால், கணேசனுக்கு மட்டும் கேட்காதது அவர் செய்த புண்ணியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தலத்திலேயே உயிர் பிரிந்திருக்குமா?

காலன் கெடு வைத்த நாளுக்கு முன்னரே ஒருவருக்குத் துர்மரணம் சம்பவித்தால், தனது முடிவைச் சற்றும் எதிர்பாராத நிலையில், தனது நிலை புரியாது, அவரது ஆவி அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்குமாம். கணேசனுக்கோ அந்த உடலைவிட்டு நீங்கியது நிம்மதியாகத்தான் இருந்தது. பழுத்த இலை மரத்திலிருந்து வீழ்வதுபோல சர்வசாதாரணமாக உணர்ந்தார்.

அவருடைய ஆவி சுதந்திரமாக இயங்கத் தொடங்கியது. அன்பே இல்லாத எல்லாரையும் பிரிந்துபோவதும் நல்லதற்குத்தான், இனி அடுத்த பிறவியிலாவது தன்னைக் கொண்டாடும் குடும்பத்தில் பிறக்கலாம் என்று பூரிப்படைந்தது.

அந்தரத்தில், `வாங்கோ!’ என்று இரு கரங்களையும் விரித்து அழைத்த உருவம் அவர் தாலிகட்டிய மனைவியா! அவளை அடையாளம் புரிந்துகொள்ளவே சிறிது நேரம் பிடித்தது. அதுதான் முழுதாக ஒரு வருடம்கூட அவளுடன் வாழவில்லையே, பின் எப்படி நினைவிருக்கும்!

அவளுடன் போகவேண்டாம், மீண்டும் நிர்க்கதியாக விட்டுப் போய்விடுவாள் என்று தோன்ற, விரைந்தது.

உடனே திரும்பப் பிறந்துவிட வேண்டும் என்ற நப்பாசை பிறந்தது அதற்கு. பூவுலகத்தில் யாராவது சிலராவது நல்லவர்களாக இருக்கமாட்டார்களா!

சூல்கொண்ட பெண்களைத் தேட ஆரம்பித்தது.

நிறைமாதக் கர்ப்பிணி ஒருத்தி தென்பட்டாள். `சனியன்! சும்மா இரு! சும்மா நொய் நொய்னுக்கிட்டு!’ என்று இடுப்பிலிருந்த குழந்தையை வைதபடி இருந்தாள்.

ஐயோ, இவள் வேண்டாம். எதிலிருந்தோ தப்பித்து எதற்குள்ளேயோ விழுவதுபோல்!

அத்துடன், ஐந்து மாதக் கருவிற்குள்தான் ஆன்மா புகுமாமே! இவள் வயிற்றில், பாவம், எந்தப் பாவ ஆத்மா அடைந்து கிடக்கிறதோ என்று பரிதாபப்பட்டதாக, அங்கிருந்து விரைந்தது ஆவி.

அடுத்தவள், `ஊரில ஒலகத்தில எவன் எவனுக்கோ சாவு வருதே! இந்தப் பாவி மனுசனுக்கு வரக்கூடாதா!’ என்று பிரலாபித்துக்கொண்டிருந்தாள். அவள் உடலெல்லாம் ரத்தக்காயம். குடித்துவிட்டு, வாசலில் தாறுமாறாகப் படுத்துக்கிடந்த அவளது கணவனைத்தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது.

`ஊகும். இதுவும் சரிப்படாது!’

அந்த வீட்டைப் பார்த்ததுமே, தானிருக்கப் போகும் இடம் இதுதான் என்ற மகிழ்வான உணர்வு எழுந்தது.

சிறிய வீடுதான். ஒரேமாதிரி மூன்று வீடுகள் ஒட்டியபடி இருந்தன. வாசலில் இருந்த புல்தரையில் ஒரு காலை நீட்டியபடி உட்கார்ந்து, கீரையை ஆய்ந்தபடி மெல்லிய குரலில் பாடிக்கொண்டிருந்தாள் அழகான பெண்மணி ஒருத்தி.

அம்மா!

அவள் பக்கத்தில், வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே இரு சிறுமிகள் பூப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள், சிரித்தபடி.

தன் தேடல் வீண் போகவில்லை என்ற உணர்வில் ஆவிக்குச் சிலிர்த்தது. அன்பான, மகிழ்ச்சியான குடும்பம்! இதைவிட வேறென்ன வேண்டும்!

அதிகம் யோசியாமல், அவள் வயிற்றில் நுழைந்தது கணேசனது ஆவியில் ஏழில் ஒரு பங்கு. (மிச்சமிருக்கும் பகுதிகளில் ஒன்று, அதிர்ஷ்டம் இருந்தால், என்றாவது அவரது வாழ்க்கையில் எதிர்ப்படக்கூடும் — `SOUL MATE!’ என்ற குதூகலத்தை ஏற்படுத்த).

`அம்மா!’ என்று வயிற்றைப் பிடித்தபடி, நெளிந்தாள் கௌரி.

“என்னம்மா? என்னம்மா?” என்று பதறியபடி இரு பெண்களும் ஓடி வந்தார்கள்.

“தம்பிப்பாப்பா உதைக்கறான்!”

“ஹை!” என்றபடி அவளருகே ஓடிவந்தார்கள் பெண்கள். “நான் தொட்டுப் பாக்கறேம்மா!”

“போடி! நான்தான் பெரியவ! நான்தான் மொதல்லே தொட்டுப் பாப்பேன்!”

“அம்மா! தம்பிப் பாப்பாவுக்கு என்ன பேரு?”

“நீங்கதான் வைங்களேன்!” அம்மா லேசாகச் சிரித்தாள்.

“பாப்பா?” நான்கு வயதுப் பெண் கேட்டாள்.

“சீ! அது பொண்ணு பேரு. எனக்கு தங்கை வேண்டாம். ஒன்னைமாதிரி சண்டை போடும்,” என்று மூக்கைச் சுளித்தாள் பெரியவள். “பாபுதான் சரியான பேரு. இல்லேம்மா?”

அம்மா முறுவலித்தபடி, தன் பெண்களின் கன்னத்தைத் தடவினாள்.

அந்தக் கணமே கணேசன் தன் முந்தின ஜன்ம வாசனையை மறந்தார். பாபுவாகிப்போனார்.

“உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தைகூட இருக்குமா!” அதிசயப்பட்டாள் பாபுவின் பாட்டி. “நான் சொல்றதைக் கேட்டுட்டு, ரெண்டு வயசிலேயே இவ்வளவு ஸ்பஷ்டமா மந்திரமெல்லாம் சொல்றதே! போன ஜென்மத்திலே கோயில் சாஸ்திரிகளாத்தான் இருந்திருக்கணும்!”

கௌரிக்குப் பெருமை தாங்கவில்லை. அருமை மகனைத் தூக்கி முத்தமிட்டாள். அவனை ஒரு கையால் அணைத்தபடி, ஒரு சாக்லேட்டை அலமாரியிலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.

“அன்னிக்குப் பாருங்கோம்மா,” என்று மாமியாருக்குக் கதை சொல்ல ஆரம்பித்தாள்: “யாரோ இதுகளைக் கேட்டா, `தம்பி எப்படி இருக்கான்?’ அப்படின்னு. `அவன்தான் BEST! என்கிறதுகள். கொஞ்சமானும் பொறாமை இருக்கணுமே!”

பாபு அம்மாவின் பிடியிலிருந்து திமிறினான், அருமை அக்காக்களுடன் விளையாட.

“நான் போறேன்!”

“அசத்து! போறேன்னு சொல்றது பாரு!” சற்றுமுன் பாராட்டிய பாட்டி வைதாள். “போயிட்டு வரேன்னு சொல்லுடா!”

அதை அவன் கேட்டதாகத் தெரியவில்லை. வாசலுக்கு ஓடினான்.

“பாபு! அந்தப் பந்தை எடுத்துப் போடு! குட் பாய்!”

தன்னையும் மதித்து ஒரு வேலை சொல்கிறார்களே என்று குதித்தபடி, திறந்திருந்த வாயில் கதவின் வழியாக ஓடிய சிறுவனை வேகமாக வந்த கார் கவனிக்கவில்லை.

இரண்டே ஆண்டுகள்! அன்பும், கவனிப்பும் அபரிமிதமாகக் கிடைத்த மகிழ்ச்சியுடன் அந்த ஆவி உடலைவிட்டுப் பிரிந்தது.

“நீ எதுக்கு இப்போ அழறே? அவனோட கர்மா பூர்த்தி ஆயிடுத்துன்னு நெனச்சுக்கோ!” மாமியார் தேற்றினாள், கௌரியை. “போன ஜன்மத்திலே அவனோட காலம் முடியறதுக்குள்ளே உசிரு போயிருக்கும். குறையா விட்ட ரெண்டு வருஷத்தை நம்பாத்திலே கழிக்கணும்னு அவன் தலையிலே எழுதியிருக்கு”.

யார் கூறிய ஆறுதலும் கௌரியின் காதுகளில் விழவில்லை. “போறேன்னு சொல்லிட்டுப் போனியே, பாபு! ஒனக்கு மொதல்லேயே தெரிஞ்சுடுத்தாடா, கண்ணு?” என்று கதறியபடி இருந்தாள்.

அவளருகே சுற்றிக்கொண்டிருந்த ஆவி, `ஒன்கிட்டேதானேம்மா இருக்கேன்!’ என்றது அவளுக்குக் கேட்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *