சென்னைப் பெண்ணும் செல்லமுத்துவும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 8,769 
 

எண்ணை வழிந்த முகமும், எடுப்பில்லாத உடையும், வழித்து சீவிய முடியும், கள்ளம் கபடமில்லாத பார்வையுமாய், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சில மாதங்களே ஆன செல்லமுத்து வாழ்வில் இப்படி ஒரு ஏகாந்தம் அடிக்கும் என அவனும் எதிர்பார்க்கவில்லை !!!

அவனுடன் வேலை செய்வோருக்கோ, ‘இவனுக்கே வா !!! மச்சக்காரன் தான்’ என்று உள்ளுக்குள் புலம்பல் எண்ணம்.

சொல்லாமலேயே புரிந்திருக்குமே … ஆம், அவனது வாழ்வில் தென்றலாய் வீச ஆரம்பித்தாள் ரேணுகா.

நடை, உடை, பாவனை அனைத்திலும் அச்சுவார்த்த சென்னை பெண். எதிராஜில் புரண்ட நுனி நாக்கு ஆங்கிலம். ‘அப்படி அவ நடந்து வந்தாலே, அந்த ஏரியாவே ஒரு கணம் நினைவிழக்கும்’. இது அந்த அலுவலகத்தில் சொல்லப்படாத தாரக மந்திரம்.

‘அவனவன் அப்ளிகேஷன் போட்டு ஆண்டாண்டு காலமா காத்திகிட்டு இருக்கான், தோடா … நேத்திக்கு வந்த செல்லம், அநியாயத்துக்கு செல்லத்த தட்டிட்டுப் போயிடுச்சே’ என்ற பேச்சு செல்லமுத்து இல்லாத போது அவன் குழுவினர் ஆற்றும் தலையாய தலைப்பு.

நுங்கம்பாக்கம் பாம்குரோவ் எதிரில் அந்த சிறு கணினி அலுவலகம். ஒரு செல்போன் அடிச்சாலே அத்தனை பேருக்கும் கேட்கும். அப்படியிருக்க, தினம் ரேணுகாவும் செல்லமுத்துவும் ஒன்றாகப் போவதும், வருவதும் அநேகத்துக்கு எரிமலை ஆக்கியிருந்தது அனைவரையும்.

எல்லோருடைய வயிற்றெரிச்சலை மேலும் அதிகரிக்கும் வண்ணம் சமீபகாலமாக, செல்லமுத்துவுக்கு தனது வண்டியில் லிஃப்ட் தர ஆரம்பித்திருந்தாள் ரேணுகா.

‘முத்து பட்டணத்துக்குப் போறே, பாத்து நடந்துக்க. முழிச்சிருக்கும் போதே ஆள ஏமாத்திட்டு போயிருவாங்க. சாக்கிரதையா இருந்துக்க‌ !!!’ பாட்டி, தாய், தந்தை என பட்டாளமே சொல்லி அனுப்பினாலும் …

“மச்சான், சென்னைக்குப் போறீக. அங்க எல்லாரையும் ஈஸியா நம்பிராதீக. முக்கியமா பொண்ணுங்கள. ஆங் … என்னைய மறந்திர மாட்டீகளே !!! என்னைக்கு இருந்தாலும் நான் தான் உங்க பொஞ்சாதி, ஆமா … சொல்லிப்புட்டேன்.” மரகதத்தின் குரல் கேட்க, ‘இவ ஒருத்தி …’

‘ஏன் எல்லோரும் இப்படி சொல்றாங்க ? சென்னைக்காரங்க என்றாலே மோசமானவங்கனு. ரேணுகா ஒரு உதாரணம் போதுமே. நம்ம மேல என்ன ஒரு பாசமா இருக்கா. இந்த பசங்க தான் மோசமா இருக்கானுங்க. ஆண்டவா ஏதாவது குழப்பத்த உண்டு பண்ணி எங்களப் பிரிக்காம இருக்கணுமே’ என எண்ண‌ அலைக‌ளில் மித‌ந்திருந்தான்.

“செல்ல‌ம் … இன்னும் ஆபீஸ்ல‌ இருக்காப்ல‌ ! ஏன் ? இன்னிக்கு ரொமான்டிக் லிஃப்ட் கிடைக்க‌லையா” கேட்டுக் கொண்டே வ‌ட்ட‌மிட்ட‌ன‌ர் அவ‌ன‌து குழு உறுப்பின‌ர்க‌ள்.

முர‌ட்டுத் த‌ன‌மாக‌ இருந்த‌ ம‌கேஷ் அங்கிருந்த சுழலும் நாற்காலி ஒன்றை இழுத்து, முதுகைச் சாய்த்து அம‌ரும் இட‌த்தில், மார்பை சாய்த்து அம‌ர்ந்து, “டேய் விட்டிருடா, ப்ளீஸ் இங்க‌ பாரு அவ‌ன‌வ‌னும் ரொட்டித்துண்டுக்கு அலைய‌ற‌ …. வேணாம், இதுக்கு மேல‌ ஒன்னும் சொல்ற‌துக்கில்ல‌” என்று நிறுத்தினான்.

“அவ‌ள‌ போய் கேளுங்க‌. நானா அவ‌ பின்னால‌ அலைய‌றேன்” என்றான் செல்ல‌முத்து.

“தோடா… ராம‌ராஜ‌ன் க‌ல‌ர்ல‌ ட்ரெஸ்ஸு போட்டா, உட‌னே ஹீரோனு நினைப்பா ?” வெறுப்பின் உச்சியில் இருந்தான் ம‌கேஷ்.

“அவ‌ளே கூப்பிட்டாலும், நீ முடியாதுனு சொல்ல‌ வேண்டிய‌து தானே பாஸூ” என்று வ‌ம்பிழுத்தான் சுரேஷ்.

ப‌டாரென‌ க‌ண்ணாடிக் க‌த‌வைத் திற‌ந்து உள்ளே வந்த ரேணுகா, “ஹேய் என்ன‌து … ராகிங் இங்கயும் ஆர‌ம்பிச்சிட்டீங்க‌ளா. வாய் பேசாத ஆள் கிடைச்சிட்டா போதுமே. உங்க வீரத்த எல்லாம் இப்படித்தான காட்டுவீங்க‌” என‌க் க‌டிந்து கொண்டாள்.

‘மானத்த வாங்கிட்டானே மக்கா’ என அங்கிருந்து நகர்ந்தனர் மகேஷ் குழுவினர்.

‘என்ன ஒரு தைரியம். எப்படி எல்லார் முன்னாடியும் வீராப்பா நின்னு பேசறா. மரகதமும் இருக்காளே … ஒரு கடைக்குப் போயி ஏதாவது வாங்கிட்டு வான்னா கூட ரொம்ப யோசிப்பாளே பேசறதுக்கு’

“பசங்க ரொம்ப டீஸ் பண்ணிட்டாங்கனு எல்லாம் ஃபீல் பண்ணாத. இன்னிக்கு நடக்கறத நாளைக்கு மறந்திருவாங்க. டேக் இட் ஈ.ஸி.” என்ற ரேணுகாவின் குரலில் மீண்டும் நினைவுக்கு வந்தான்.

‘எவ்வளவு அக்கறையா பேசறா, நம்ம மேல ஒரு இது இல்லாம இதெல்லாம் ஏன் பண்ணனும், இன்னிக்கு சொல்லிட வேண்டியது தான்’. ரொம்ப நாட்களாகவே யோசித்து வைத்திருந்ததை இன்று சொல்லிவிட முடிவு செய்தான் செல்லமுத்து.

“மறந்தே போயிட்டேன். முக்கியமா எதுக்கு திரும்பி வந்தேன்னா, இன்னிக்கு ஒரு இடத்துக்குப் போறோம். அங்க உனக்கு ஒரு சர்ப்ப்ரைஸ் காத்திருக்கு. சரி சரி கிளம்பு நேரம் ஆச்சு” என அவசரப்படுத்தினாள் ரேணுகா.

மனம் ஜிவ்வென்று ஐஸாகி நடுக்க ஆரம்பித்தது. ‘நம்ம எங்கடா சொல்லலாம்னு பார்த்தால், இவளே இடமெல்லாம் செலக்ட் செய்து வைத்திருக்கிறாளே. ம்ம்ம்ம் செம வேகம். சென்னைப் பொண்ணுங்க சென்னை பொண்ணுங்க தான்’. மனதுள் மகிழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தான்.

நுங்கம்பாக்கம் பீஸா ஹட். “ஹேய் அர்விந்த். இவன் தான் செல்லா, மை பெஸ்ட் ஃப்ரெண்ட் இன் ஆஃபீஸ்” … “செல்லா, திஸ் இஸ் அர்விந்த், மை ஃபியான்சி” என அறிமுகம் செய்து வைத்தாள்.

அவர்கள் இருவரின் ஐஸ்க்ரீம் உறுக, செல்லமுத்துவின் ஐஸ்க்ரீம் அவனது மனம் போலவே இறுக ஆரம்பித்திருந்தது.

“என்னோட அத்தை பையன் தான். டெல்லில பிறந்து வளர்ந்து அங்கேயே செட்டில் ஆனவங்க. எனக்காக இவன் மட்டும் கிளம்பிவந்திட்டான் இங்க. நேத்து தான் வந்தான் … உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் நேத்தே சொல்லலை”

இதெல்லாம் செல்லமுத்துவின் காதுகளில் விழுந்தாலும், பட்டினத்துக்காரங்க மோசமானவங்க என்று அவனும் அர்த்தம் கொள்ள ஆரம்பித்திருந்தான் !!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *